Jul 15, 2015

திருவிழா

தமிழகத்தின் பல ஊர்களில் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சென்னை, மதுரை, ஈரோடு, நெய்வேலி போன்ற பெரிய புத்தகச் சந்தைகளுக்கிடையில் ஓசூர் போன்ற ஊர்களிலும் தொடர்ந்து நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள். கோபிச்செட்டிபாளையத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதன் பிறகு தொடரவில்லை. புத்தகக் கண்காட்சியைப் பொறுத்தவரையிலும் தொடர்ச்சி அவசியம். ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட மாதத்தில் இந்த ஊரில் கண்காட்சி நடைபெறும் என்பது பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கும் தெரிய வேண்டும். உள்ளூர் வாசிகளுக்கும் தெரிய வேண்டும். முதல் சில ஆண்டுகள் விற்பனை மந்தமாக இருந்தாலும் போகப் போக விற்பனை சூடு பிடிக்கும். ஆனால் அப்பொழுது விட்டுவிட்டார்கள்.

இந்த வருடத்திலிருந்து மீண்டும் கோபியில் புத்தகக் கண்காட்சியை ஆரம்பிக்கிறார்கள். ஜூலை 17 ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறுகிறது. அமைப்பாளர்களிடம் பேசிய போது இனி வருடா வருடம் தொடர்ந்து செய்வோம் என்றார்கள். நானும் அப்படித்தான் ஆசைப்படுகிறேன். புத்தகக் கண்காட்சி என்பது வெறும் விற்பனை சார்ந்த நிகழ்வு மட்டுமில்லை- அதுவொரு பண்பாடு. வாசிக்கும் பழக்கத்தில் சிறு பொறியைத் தூவிவிடும் நல்ல காரியம் அது. அதை ஒவ்வொரு ஊரிலும் செய்வது நல்லதுதானே? 

இலக்கியம்தான் விற்க வேண்டும் செவ்வியல் படைப்புகள்தான் கவனம் பெற வேண்டும் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. மிகச் சாதாரணமான புத்தகம் கவனம் பெற்றால் கூட போதும். வாசிப்பு அப்படித்தான் தொடங்குகிறது. அற்பமான புத்தகம் என்று மேதாவிகள் கருதும் புத்தகத்திலிருந்துதான் சாமானிய மனிதன் வாசிப்பைத் தொடங்குகிறான். அந்தவிதத்தில் ஒருவனை வாசிக்கத் தூண்டும் ஒவ்வொரு எழுத்துமே மிக முக்கியமானது. வாசகனை தன்னை நோக்கி வரச் செய்யும் ஒவ்வொரு புத்தகமும் அவசியமானது. வாசகனின் அறிவு மேம்படத் தொடங்கும் போது அவனது தேடல்கள் விரிவடைகின்றன. அதன் பிறகு வேறு யாரும் வழிகாட்ட வேண்டியதில்லை. தனக்கான இலக்கை நோக்கி அவனே நகர்ந்து கொள்வான். ஆனால் இங்கு பெரும்பாலான மனிதர்களிடம் வாசிக்கும் பழக்கமே ஆரம்பமாவதில்லை என்பதுதானே சிக்கல்? கல்விக் கூடங்களும் இது குறித்து சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. அவர்களின் நோக்கம் மதிப்பெண்ணுக்குரிய படிப்பாக இருக்கிறதே தவிர வாசிப்பாக இருப்பதில்லை.

எளிய மனிதனிடம் வாசிப்பு பழக்கத்தை உருவாக்கும் முக்கியமான செயல்பாடாக புத்தகக் கண்காட்சிகள் அமைகின்றன என்று நம்பலாம். அத்தனை பேரிடமும் தாக்கத்தை உருவாக்காவிட்டாலும் ஓரளவேனும் சலனத்தை உருவாக்குகின்றன என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். கோபியில் புத்தகக் கண்காட்சி என்ற தகவல் வந்த சமயத்தில் திருமதி. மஞ்சு முப்பத்தெட்டாயிரம் ரூபாயை அனுப்பி வைத்திருந்தார். அவர் அமெரிக்க வாழ் இந்தியர். ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்களுக்குள் ஒரு சீட்டு நடத்துகிறார்கள். முதிர் தொகையை பெற்றுக் கொள்பவர் தமிழ்நாட்டில் ஏதேனும் கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்குக் கொடுத்துவிடலாம். இந்த முறை மஞ்சுவுக்கு பணம் கிடைத்திருக்கிறது. அவர் அதை நிசப்தம் பணிகளுக்காக கொடுத்திருக்கிறார். மஞ்சு பணம் அனுப்பியது தெரிந்தவுடன் புத்தகக் கண்காட்சியில் சில பள்ளிகளுக்கு பயனுள்ள வகையில் கொடுக்கலாம் என்று தோன்றியது. அந்த அடிப்படையில் ஏழு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பின் வரும் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

அன்பிற்கினிய தலைமையாசிரியர் அவர்களுக்கு,

புத்தகத்தை விட சிறந்த நண்பன் வேறு எதுவுமில்லை என்பார்கள். புத்தகங்களுடன் நட்பு கொள்வதற்கு பள்ளியை விடவும் மிகச் சிறந்த இடம் வேறு இல்லை என்றும் சொல்லலாம். 

பொதுவாக தமிழகத்தின் கிராமப்புற மாணவர்களுக்கு புத்தகங்களுடன் பரிச்சயம் நிகழ்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாக இருக்கின்றன. அதற்கு பல காரணங்களைச் சொன்னாலும் பள்ளிகளில் தேவையான புத்தகங்கள் இருப்பதில்லை என்பதே முக்கியமான காரணம் என்று சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறோம்.

நிசப்தம் அறக்கட்டளை பள்ளி மற்றும் மருத்துவம் சார்ந்த உதவிகளை மிகச் சிறிய அளவில் செய்து வருகிறது. பல்வேறு வாசகர்களால் வழங்கப்படும் நிதி இத்தகைய காரியங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. அந்த வகையில்தான் தங்கள் பள்ளிக்கும் சிறு பங்களிப்பைச் செய்ய விரும்புகிறோம். பள்ளிக் கல்வித் துறை வழியாகவும் உள்ளூர் நண்பர்களின் வழியாகவும் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சிறப்பாகச் செயல்படும் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்த போது தங்களின் பள்ளியும் அவற்றில் ஒன்றாக இருந்தது. அந்த வகையிலேயே உங்களுக்கு இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய்க்கான வெட்டுச்சீட்டுகள் (கூப்பன்) வழங்கப்படும். இவை நூறு ரூபாய், ஐம்பது ரூபாய் மற்றும் இருபத்தைந்து ரூபாய் மதிப்புடையவை. இந்த வெட்டுச் சீட்டுக்களை புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாட்களில் அரங்கில் உள்ள கடைகளில் கொடுத்து தங்களுக்குத் தேவையான புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி கொள்ளலாம். கடைக்காரர்களிடமிருந்து இந்த கூப்பன்களை பெற்றுக் கொண்டு அதற்குரிய பணத்தை அமைப்பாளர்கள் கொடுத்துவிடுவார்கள். வாங்கும் புத்தகங்களைக் கொண்டு சிறு நூலகத்தை தங்கள் பள்ளி அமைத்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். இப்படி அமைக்கப்படும் நூலகங்களை எதிர்காலத்தில் மேம்படுத்த எங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய முயற்சிக்கிறோம்.

இந்தத் திட்டத்திற்கான முதற்காரணமே கிராமப்புற பள்ளி மாணவர்களும் புத்தகக் கண்காட்சியை பார்வையிட வேண்டும் என்பதும் அவர்களே தாங்க விரும்பும் புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். மாணவர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வந்து செல்வதில் சிரமங்கள் இருக்கின்றன என்பதால் அதை உணர்ந்து ஒவ்வொரு பள்ளிக்கும் ஆயிரம் ரூபாய் தனியாக வழங்கப்பட்டுவிடும். அந்தத் தொகையை மாணவர்களின் போக்குவரத்து செலவிற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சனிக்கிழமையன்று(18-ஜுலை-2015) புத்தகக் கண்காட்சியில் நடைபெறும் நிகழ்வில் நீங்கள் அல்லது உங்கள் பள்ளி சார்பில் யாராவது ஒருவர் வந்து புத்தகங்களை வாங்குவதற்கான வெட்டுச்சீட்டுக்கள் மற்றும் ஆயிரம் ரூபாயைப் பெற்றுக் கொள்ளவும். கண்காட்சி நடைபெறும் நாட்களில் - உங்களுக்குத் தோதான பிறிதொரு நாளில் மாணவர்களை அழைத்து வந்து ஐந்தாயிரம் ரூபாய்க்கான புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். 

வேறு ஏதேனும் கேள்விகளும் சந்தேகமும் இருப்பின் நிகழ்வின் போது தெளிவு படுத்திக் கொள்ளலாம்.

இன்னமும் நிறைய பள்ளிகளுக்குச் செய்யும் விருப்பமிருக்கிறது. ஆனால் இப்போதைக்கு ஏழு பள்ளிகளை மட்டும்தான் தேர்ந்தெடுக்க முடிந்தது. எங்களின் இந்த சிறு உதவியை மனமுவந்து ஏற்றுக் கொள்ளவும்.

மிக்க அன்புடன்....