Jul 13, 2015

எழுத்து

“காரணம்? காரணமே வேண்டாம். ஓடுகிற காரணம் ஒன்றே போதும். துரத்துவதற்கு. வாழ்க்கையின் தத்துவமே இதுதான் என்று புரிந்துகொள்ள நான் வக்கற்றுப் போனால் தப்பு யார் மேல்?”

லா.ச.ராவின் வரிகளில் மிகப் பிடித்த வரிகள் இவை. பிராயச்சித்தம் நாவலின் வரிகள் இவை. நாவலோடு சேர்த்து வாசிக்கும் போது என்ன அர்த்தம் வேண்டுமானாலும் வரட்டும். தனியாக வாசிக்கும் போது அது தரக் கூடிய அர்த்தம் ஒன்றுதான். வாழ்க்கையில் துணிந்து நின்றால் மற்றவர்கள் துரத்த யோசிப்பார்கள். மற்றவர்கள் மட்டுமில்லை-விதியும்தான். அதுவே ஓடுகிறான் என்று தெரிந்துவிட்டால் அவ்வளவுதான். நாய் நரி கூட துரத்த ஆரம்பித்துவிடும். 

அதுதானே உண்மை? 

நேற்று பெங்களூரில் இரண்டாம் ஞாயிறு கூட்டத்துக்கு லா.ச.ராவின் மகன் சப்தரிஷி வந்திருந்தார். அவர் ஓசூரில்தான் இருக்கிறார். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறன்று சில எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துக் கொண்டு அந்தக் கதைளைப் பற்றி பேசிக் கொண்டிருப்போம். நேற்று லா.ச.ராவின் கதைகளைப் பற்றி பேசுவதாக முடிவு செய்திருந்தோம். கவிஞர் ரமேஷ் கல்யாணிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘சப்தரிஷியை அழைக்கலாமா?’ என்றார். அவரே அழைத்து வந்துவிடுவதாகவும் சொல்லியிருந்தார். நல்லதாகப் போயிற்று.

சப்தரிஷியை தொலைபேசியில் அழைத்த போது ‘எங்கப்பா எனக்கு மூச்சு...ஒன்றரை மணி நேரம் பேசுவேன்’ என்றார்.

‘நீங்களே மூன்று மணி நேரமும் பேசிவிடுங்கள்’ என்றதற்கு ஒத்துக் கொண்டார்.


லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் - இதுதான் சுருக்கமாக லா.ச.ரா. 1916 ஆம் ஆண்டில் பிறந்த லா.ச.ரா தன்னுடைய பதினேழாவது வயதில் முதல் கதையை எழுதினார். அதன் பிறகு கிட்டத்தட்ட எழுபத்தைந்து ஆண்டுகள் எழுதியிருக்கிறார்- ஆனால் மிகக் குறைவாக. 

ஆறு புதினங்களும் ஆறு கட்டுரைத் தொகுப்புகளும் வெளி வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட இருநூறு சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவருடைய சிந்தா நதி - சுய வரலாற்று நினைவுகளின் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. அந்த விருது விழாவில் பேசும் போது ‘லா.ச.ராவுக்கு இந்த அவார்ட் லேட்டா கிடைச்சுதுன்னு சொல்லுறாங்க...லேட் லா.ச.ராவுக்கு கிடைக்காமல் லா.ச.ராவுக்கு லேட்டாகக் கிடைத்தவரைக்கும் சந்தோஷம்’ என்று பேசியிருக்கிறார்.

நேற்றைய பெங்களூர் கூட்டம் பத்தரை மணிக்கு ஆரம்பித்தது. வழக்கம் போலவே இருபது பேர் கலந்து கொண்ட கூட்டம். மதியம் ஒன்றரை மணி வரைக்கும் சப்தரிஷியேதான் பேசிக் கொண்டிருந்தார். அவ்வப்போது யாராவது ஒன்றிரண்டு கேள்விகளைக் கேட்டதோடு சரி. இன்னமும் பேசியிருப்பார். ஆனால் மதியத்துக்கு மேல் அரங்கைத் தமிழ்ச்சங்கத்துக்காரர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதால் முடிக்க வேண்டியதாயிற்று.

(க.சீ.சிவக்குமார், சப்தரிஷி மற்றும் லா.ச.ராவின் வாசகர்)

‘எழுத்தாளனைப் பற்றித் தெரிந்து கொள்ளாவிட்டால் என்ன? அவனுடைய எழுத்தை மட்டும் வாசித்தால் போதாதா?’ என்று யாராவது கேட்கும் போது குழப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால் லா.ச.ரா மாதிரியானவர்களின் வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதே கூட அதிசுவாரசியமானதுதான் என்று சப்தரிஷி பேசி முடித்த பிறகு நினைக்கத் தோன்றியது. கூட்டத்துக்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். லா.ச.ராவின் வாசகர் மட்டுமில்லை- பக்தரும் கூட. ஹோட்டலில் சர்வராக வேலையைத் தொடங்கியவர். பிறகு சொந்தமாக ஒரு ஹோட்டலும் நடத்தியிருக்கிறார். ஆனால் தொடர்ந்து நடத்த முடியாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு குடும்பத்தோடு பெங்களூர் வந்துவிட்டார். இது தொண்ணூறுகளில் நடந்திருக்கிறது.

அதற்கு முன்பாகவே லா.ச.ராவிடம் மிகுந்த அன்புடன் இருந்தவர் அவர். குடி மாறும் சமயத்தில் லா.ச.ராவைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. தனது குடும்பச் சிரமங்களையெல்லாம் சொல்லிவிட்டு ஒரு வெற்றுத்தாளையும் பேனாவையும் கொடுத்து எதையாவது எழுதித் தரச் சொல்லியிருக்கிறார். அப்பொழுது லா.ச.ரா எழுதிக் கொடுத்த வாழ்த்தின் காரணமாகவே தான் இப்பொழுது நல்ல நிலைமைக்கு வந்திருப்பதாக நம்பும் பக்தர் அவர். அந்த வாழ்த்தை லேமினேட் செய்து எடுத்து வந்திருந்தார். வீடு முழுக்கவும் லா.ச.ராவின் வரிகளை அச்செடுத்து சுவர்களில் ஒட்டி வைத்திருக்கிறாராம். அவரால் அதிகம் பேச முடியவில்லை. கேட்கும் திறனும் முதுமையின் காரணமாகக் குறைந்திருக்கிறது. ‘இந்தக் கூட்டத்துக்கு ஏன் வந்தேன்னா......லா.ச.ரா பத்தி பேசுற உங்க அத்தனை பேர்கிட்டவும் லா.ச.ராவைப் பார்க்கிறேன்..நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்’ என்றார். நெகிழ்ந்து போய்விட்டேன். ஒரு எழுத்தாளனை இந்த அளவுக்கு சிலாகிக்கும் மனிதரை இப்பொழுதுதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். இனியும் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

எழுத்துக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளியை மிகக் குறைவாக வைத்திருந்தவர் லா.ச.ரா என்றார்கள். அப்படியான குறைந்த இடைவெளிதான் இந்தப் பெரியவரை அவரோடு இவ்வளவு நெருக்கமாக்கியிருக்கிறது.

‘நீ வேணும்ன்னா என்னை ராம்ன்னு கூப்பிட்டுக்க’ என்று தன் மனைவியிடம் திருமணம் முடிந்த முதல் நாள் சொல்லியிருக்கிறார் லா.ச.ரா. ‘அவர் வீட்டில் எப்படி?’ என்று கேட்டதற்கு சப்தரிஷி இந்த பதிலைச் சொன்னார். கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மனிதர் தன் மனைவிக்குக் கொடுத்த சுதந்திரம் இது. 

‘நாங்க அம்மாவோடதான் சினிமாவுக்கு போவோம். அப்பா வீட்டில் சமையல் செய்துவிட்டு எங்களுக்காக காத்திருப்பார்’. 

‘அவர் நல்ல எழுத்தாளர் என்பதைவிடவும் எங்களுக்கு நல்ல அப்பாவாக இருந்தார்’ 

‘எதை எழுத வேண்டும் என்றெல்லாம் அவர் மெனக்கெடவில்லை. தன்னைச் சுற்றிலுமிருந்துதான் எடுத்துக் கொண்டார்’ 

‘பதினாறு வயசு இருக்கும்..எங்கப்பாகிட்ட போய் ‘அப்பா எனக்கு கோவில்ல செக்ஸ் உணர்ச்சி அதிகமா இருக்கு’ன்னு சொன்னேன்...அதுக்கு ‘அங்கதாண்டா பொம்மனாட்டிங்க குளிச்சுண்டு வருவா..இந்த வயசுல அப்படித்தான் இருக்கும்..இன்னும் ரெண்டு வருஷம் போனா சரியாகிடும்’ என்றார்.

‘ஒரு நாள் தோட்டியின் மகன் நாவல் படித்துக் கொண்டிருந்தார். படிக்கும் போதே தேம்பிக் கொண்டிருந்தவர் கடைசி பக்கங்களைப் படிக்க முடியாமல் மூடி வைத்துவிட்டார்....அவன் நாம உணரனமுன்னுதானே எழுதறான்...உணர்ந்து படிக்கணும்...தாண்டிட்டா என்ன அர்த்தம்?’

இதெல்லாம் சப்தரிஷி நேற்று பேசியவற்றிலிருந்து சில வரிகள். லா.ச.ரா என்ற மிக இயல்பான மனிதரையும், எழுத்தாளரையும்  புரிந்து கொள்ள முடிந்த கூட்டம் என்று இதைச் சொல்ல முடியும்.

2016 ஆம் ஆண்டு லா.ச.ராவின் நூற்றாண்டு தொடங்கவிருக்கிறது. 1916 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்து 2007 ஆம் ஆண்டு அதே அக்டோபர் 30 ஆம் தேதி மறைந்தார். அவரது எழுத்துக்களை முழுமையாக வாசிக்கும் நிகழ்வாக அக்டோபர் மாதம் இரண்டாம் ஞாயிறன்று பெங்களூரில் லா.ச.ரா படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடலை நிகழ்த்தலாம் என்று முடிவு செய்திருக்கிறோம். ஒரு முன்னோடி எழுத்தாளருக்கு நம்மால் செய்ய முடிந்த சிறு மரியாதையாக அது இருக்கும்.

6 எதிர் சப்தங்கள்:

Unknown said...

நான் லா.ச.ரா கதைகளைத் தவிர மற்ற நான்கு கதைகளையும் படித்து விட்டு தான் கூட்டத்திருக்கு வந்தேன். ஆனால் இடையில் "தோட்டியின் மகன்" படித்திருந்தேன். அந்த நாவலின் தாக்கம் தான் இப்பொழுது வரை வேறு எதையும் படிக்க முடியாமல் யோசிக்க வைத்திருக்கிறது. சப்தரிஷி குறிப்பிட்டிருந்தது போல் அதன் கடைசி பத்துப் பக்கங்களைப் படிக்க எனக்கு 2 நாட்கள் ஆயிற்று. ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்பதை எந்த இடத்திலும் உணர முடியாத அளவிற்கு அதன் நடையும், களமும் அமைந்திருந்ததே இந்த தாக்கத்திற்கு கூடுதல் காரணம். நான் படித்த முதல் மொழிபெயர்ப்பு நாவல் இது. இந்த நாவலையும் வரும் மாதங்களில் ஏதேனும் ஒரு நாளில் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து.
மற்றபடி, நேற்று நடந்த கூட்டத்தில், 50 வருடங்களுக்கு மேலாக கூடவே பயணித்த ஒருவரின் பார்வையில் ஒரு எழுத்தாளை கண்டுகொண்டது புதுமையாகவும், சிறப்பாகவும் இருந்தது. இனி அந்த எழுத்தாளரின் எழுத்துக்கள் அன்னியமாக இருக்காது. நன்கு பழகிய ஒருவரின் வாழ்க்கையை கூடவே இருந்து பார்க்கும் தன்மை வந்துவிடும். இந்த சந்திப்பை ஏற்ப்படுத்தித் தந்த உங்களுக்கும், கவிஞர் ரமேஷ் கல்யாண் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

சேக்காளி said...

இவற்றை youtube போன்றவற்றில் கண்டு கேட்க முடியுமா?.இல்லையென்றால் அதற்கு ஏற்பாடு செய்தால் என்ன?

முனைவர் அ.கோவிந்தராஜூ said...

நன்றி மணிகண்டன்
லா ச ரா வின் நாவல்களை மறுவாசிப்பு செய்யத் தூண்டுவதாய் உன் பதிவு
அமைந்துள்ளது.

Vinoth Subramanian said...

Nice.

Anonymous said...

Hi...it was a great feeling to read the article......bravo....

RAMESHKALYAN said...

வந்திருந்த பெரியவர் திரு.ஏ.கே.பாலு. அவருக்கு ஒரு சுவார்சியமான பழக்கம். நண்பர்கள் முதல் பழைய பேப்பர் கடை வரை சென்று நல்ல புத்தகங்களை சேகரித்து தேர்ந்து ப்லாஸ்டிக் அட்டையிட்டு பக்கங்கள் இடையே ஜவ்வது தடவி மடிந்த மூலைகளை நீவி வெட்டி மெருகூட்டி வைத்திருப்பார். முகக் குறைந்த விலைக்கு தரவும் செய்வார். ஆனால் மிகப்பெருமளவும் அன்பளிப்பாக கொடுப்பார். என் கதையை எங்கோ படித்துவிட்டு எனக்கு புத்தகங்களை பரிசாக அனுப்பி ஆச்சரியப்படுத்தினார். பிறகு லா.ரா.ச வுடன் அவர் வீட்டிற்கு சென்றது மறக்க முடியாத அனுபவம். நிசப்தம் கூட்டம் முடிந்து கிளம்பும்போது ஒரு பையைக் கொடுத்தார். கீதாரி ..கதாயுதங்கள் என இரண்டு நாவல்கள் !