Jul 31, 2015

கேள்வியும் பதிலும்

பெண்களுக்கு சம உரிமை என்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
                                                                                                       அனிதா
சில நாட்களுக்கு முன்பாக மனைவியின் அலுவலகத்தில் Team outing செல்வதற்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி சனிக்கிழமை ஒரு பண்ணைவீட்டில் இருந்துவிட்டு பிறகு அன்றைய மாலையில் வீடு திரும்புவார்கள்.  அவர்களது டீமில் நான்கைந்து பெண்கள் உண்டு. திருமணமாகாத பெண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சினையில்லை. வருவதாகச் சொல்லிவிட்டார்கள். திருமணமான பெண்களுக்கு அப்படி உடனடியாக ஒத்துக் கொள்வது என்பது அவ்வளவு சுலபமில்லை அல்லவா? மற்ற பெண்களைப் பற்றித் தெரியவில்லை. மனைவி என்னிடம் சொன்னவுடன் ‘நீ போய்ட்டா பையன் வருத்தப்படுவானே...ஒரு நாள் என்றாலும் கூட பரவால்ல...ஒரு ராத்திரி ஒரு பகல்ன்னு..கண்டிப்பா போகணுமா?’ என்று ஏதேதோ சொல்லி மறுக்கச் செய்துவிட்டேன். மனைவியும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

அடுத்த ஓரிரண்டு வாரங்களில் எங்கள் அலுவலகத்தில் அதே மாதிரி ஏற்பாடு செய்தார்கள். 

வீட்டில் அனுமதி கேட்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை. சரி என்று சொல்லிவிட்டு மனைவியிடம் ‘அடுத்த வாரம் டீம் அவுட்டிங் போறோம்’ என்று தகவலாக மட்டும் சொன்னேன். எப்பொழுதுமே எனக்குள் ஒரு முரட்டு ஆண் ஒளிந்து கொண்டிருக்கிறான். அவன் அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டேயிருக்கிறான் என்பதுதான் உண்மை. 

எதைப் பற்றியும் பேசுவதற்கு முன்பாக நமக்கென்று ஒரு யோக்கிதை வேண்டுமல்லவா? முதலில் என்னைத் திருத்திக் கொள்கிறேன். 

                                                               ***

குழந்தைகளுக்கான கதை சொல்லும் வழிமுறைகள் என்று ஒரு முறை நீங்கள் எழுதியிருந்த ஞாபகம். அந்த வழிமுறைகளை முயன்று பார்த்தேன். ஆனால் எனக்கு கற்பனை போதவில்லை என்று தோன்றுகிறது. வேறு ஐடியா ஏதாவது தர முடியுமா?                                                                                                                                                                                                          சரவணன்

இப்போதைக்கு எளிமையான ஐடியா.

கடந்த சில நாட்களாக குழந்தைகள் எழுத்தாளர் விழியன் குழந்தைகளுக்கான கதைகளை வாட்ஸப் வழியாக நூற்றுக்கணக்கான பெற்றோர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். குரூப்பில் போட்டு தாளிப்பதெல்லாம் இல்லை. நம்முடைய எண்ணைக் கொடுத்துவிட்டால் ஒவ்வொரு எண்ணுக்கும் தனித்தனியாகத்தான் கதை வருகிறது என்பதால் உமாநாத்தைத்(விழியனின் இயற்பெயர் உமாநாத்) தவிர நம்முடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. கடந்த பதினைந்து நாட்களாக அவருடைய கதையை நேரம் கிடைக்கும் போது படித்து வைத்துக் கொள்கிறேன். அதிகபட்சம் பத்து நிமிடங்கள்தான் தேவைப்படுகிறது. வீட்டுக்குச் சென்றவுடன் கொஞ்சம் சொந்தச் சரக்கைச் சேர்த்து பையனுக்குச் சொல்லிவிடுகிறேன்.

உமாநாத்தின் எண் 9094009092. வாட்ஸப்பில் ஒரு செய்தியை அனுப்பி வையுங்கள். இன்றிலிருந்து கதை அனுப்பத் தொடங்கிவிடுவார்.

                                                                     ***

வாழ்க்கையின் பலவீனமான தருணங்கள் என்று எதைச் சொல்லலாம்?
                                                                                                                  நவீன்

மயூரிக்கு ஒன்பது வயதாகிறது. பக்கத்து வீட்டுக் குழந்தை. நேற்று விளையாடிக் கொண்டிருந்தவள் தீடிரென்று மயங்கி விழுந்துவிட்டாள். பக்கத்திலிருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் இன்னொரு மருத்துவமனைக்குச் செல்லச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டாவது மருத்துவமனையில் வசதிகள் போதவில்லை என்று நாராயண ஹிருதயாலயாவுக்கு எடுத்துச் செல்லச் சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாகிவிட்டது. மருத்துவமனையை அடையும் போது குழந்தையின் உடலில் எந்த அசைவுமில்லை. இன்று காலை வரைக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறாள். இருதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் என அத்தனையும் சீராக இருக்கிறது. ஆனால் மூளை மட்டும் முழுமையாக செயலிழந்துவிட்டதாம். இருபத்து நான்கு மணி நேரம் கழித்துத்தான் எதையும் சொல்ல முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். குழந்தைகளைத் தாக்கும் இப்படியான திடீர் நோய்மைத் தாக்குதல்களைக் கேள்விப்படும் போது உடைந்து போய்விடுவதாக உணர்கிறேன். 

இன்றைக்கு மயூரிக்கு வந்த பிரச்சினை நாளை யாருக்கு வேண்டுமானாலும் வரக் கூடும். இந்த ஒரு பய உணர்வைச் சுமந்து கொண்டிருப்பதுதான் பலவீனமான மனநிலையை உண்டாக்குகிறது.