தலைப்பை பார்த்துவிட்டு சினிமா விமர்சனம் என்று வாசிக்கத் துவங்கினால் கம்பெனி பொறுப்பாகாது என்கிற பின்குறிப்பை முன்குறிப்பாக சொல்லிவிட்டுத்தான் எழுதவே ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் கும்மிவிடுவார்கள்.
ஹைதராபாத் சென்றிருந்த சமயம். முதல் சில மாதங்கள் தனியாகத்தான் தங்கியிருந்தேன். ஊரும் தெரியாது. மொழியும் புரியாது. குருட்டுத் தைரியம்தான். சுற்றிச் சுற்றி தெலுங்கிலேயே பேசினார்கள். பேருந்துகளில் யாராவது தமிழ் பேசுவார்களா என்று வாயையே பார்த்துக் கொண்டிருப்பேன். ‘ஏவண்டி...எக்கட வெல்துனாரு’தான். தமிழில் பேசச் சொல்லி சண்டைக்கு போகவா முடியும்? நான் இருந்த ஏரியா அப்படி. கோட்டி. கோட்டி கூட இல்லை. அங்கிருந்து ஒரு பேருந்து பிடித்து நான்கைந்து நிறுத்தங்கள் தாண்டி இறங்க வேண்டும். சுந்தரத் தெலுங்கர்கள் என்று சொல்ல முடியாது. விசாகப்பட்டினம், விஜயவாடாதான் சுந்தரத் தெலுங்கு. ஹைதராபாத்தில் நிஜாம் தெலுங்கு. தெலுங்கிலும் கூட கபாப் சிக்கன் வாசம் அடிக்கும்.
அந்தச் சமயத்தில் மொபைல் ஒன்று வைத்திருந்தேன். வெறும் ‘மிஸ்டு காலுக்கு’ மட்டும் பயன்படுத்தப்பட்ட அதிசய வஸ்து அது. அந்த ஃபோனிலிருந்து நான் யாரையுமே அழைத்துப் பேசியதாக ஞாபகமில்லை. மற்றவர்கள் அழைத்தால் பேசிக் கொள்வதுண்டு. என்னை யார் அழைத்துப் பேசுவார்கள்? மிஞ்சிப் போனால் வீட்டிலிருந்து அழைப்பார்கள். அதனால் பெரும்பாலும் தனிமைதான். யாரிடமும் அதிகம் பேசாத தனிமை.
அலுவலகத்திலும் அப்படித்தான். அதுவொரு தொழிற்சாலை. தொழிலாளர்களுக்குத் தமிழ் தெரியாது. எனக்கு தெலுங்கும் இந்தியும் தெரியாது. அங்குமிங்கும் சுற்றிவிட்டு வந்து அறையில் அமர்ந்து கொள்வேன். இணையம் இருந்தது. அப்பொழுது சில தோழிகளும் இருந்தார்கள். தோழிகள் என்றால் தோழிகள் மட்டும்தான். சாட்டிங் தோழிகள். நேரில் கூட பார்த்ததில்லை என்று சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும். அப்படியான ஒருத்தியிடம் ‘உனக்கு பிடித்த ஃபேவரைட் ஹீரோ யாரு?’ என்று கேட்ட போது பிரபாஸ் என்றாள். அப்படியொரு பெயரை முதன் முதலாகக் கேள்விப்படுகிறேன். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே என்னுடைய நிழற்படங்களை எல்லாம் அனுப்பி வைத்திருந்தேன். அதையெல்லாம் பார்த்துவிட்டும் பிரபாஸ் என்று அவள் சொல்கிறாள் என்று அதிர்ச்சியாகத்தானே இருக்கும்? ‘ஒருவேளை நம்மைவிடவும் அழகாக இருப்பானோ?’ என்ற வயிற்றெரிச்சலில் இணையத்தில் தேடத் தொடங்கியிருந்தேன். உடனடியாக எதிரிகள் பட்டியலில் அவனைச் சேர்த்துக் கொண்டேன். அதன் பிறகு ஒரு படத்தில் ஷ்ரேயா கீழே விழப் போக அதை- ஸாரி ஷ்ரேயாவை- பிரபாஸ் தாங்கிப் பிடிக்க என்று பிரசித்தி பெற்ற பாடல்காட்சிகளையெல்லாம் பல நூறு முறை பார்த்து நொந்து கொண்டிருந்ததுதான் மிச்சம். அந்தச் சமயத்தில் எனக்குத் திருமணமும் ஆகியிருக்கவில்லை என்பது இவ்விடத்தில் மிக முக்கியமான உப குறிப்பு.
இந்தத் தெலுங்கு நடிகர்களே இப்படித்தான். நமக்கு பிடிக்கும் நடிகைகளை வரிசயாக தங்கள் படங்களில் நடிக்க வைத்துவிடுவார்கள். நம்மைப் பொறாமைப்பட வைப்பதில் அவ்வளவு சமர்த்தர்கள். எந்த நடிகரை வேண்டுமானாலும் நம் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த பிரபாஸூம் அப்படித்தான். அனுஷ்கா, நயன் தாரா, இலியானா, ஷ்ரேயா என்று எல்லோருடனும் நடித்துவிட்டார்.
அந்தப் பெண்ணிடம் ‘உனக்கு ஏன் அவனைப் பிடிக்கும்?’ என்று கேட்ட போது ‘அவன் செம ஹாட்’ என்றாள். இதுக்கு மேல் என்ன செய்ய முடியும்? உடற்பயிற்சி செய்து எட்டு பேக் வைப்பதெல்லாம் எனக்கு சாத்தியப்படாத காரியம். தினமும் அரை மணி நேரம் அடுப்பு மீது வேண்டுமானால் அமரலாம். சூடு ஏறக் கூடும். வேறு எந்த வழியும் இல்லை. அதன் பிறகு அவளோடு பேசுவதைக் குறைத்துக் கொண்டேன். அவளோடு பேசி நேரத்தை வீணடிப்பதற்கு பதிலாக வேறு ஒரு பெண்ணிடம் பேசினாலாவது ஏதாவது பிரயோஜனம் இருக்கக் கூடும் என்ற நப்பாசைதான்.
அந்தப் பிரபாஸ் பிரியை இப்பொழுது ஒரு தெலுங்குக்காரனைக் கட்டிக் கொண்டு செட்டில் ஆகிவிட்டாள். அதுதானே நடக்கும்? எல்லோருக்கும் பிரபாஸ்ஸூம், அஜீத்தும், காஜல் அகர்வாலும், மீனாவுமே கிடைப்பார்களா? பிரபாஸூக்கு பதிலாக திருப்பதிக்காரன். அஜீத்துக்கு பதிலாக கோயமுத்தூர்க்காரன். மீனாவுக்கு பதிலாக சுகன்யா. அப்படியானால் காஜல் அகர்வாலுக்கு பதிலாக யார் என்றெல்லாம் கேள்வி கேட்காமல் அடுத்த வரியைப் படியுங்கள்.
அந்தப் பெண்ணின் வீட்டில் வீட்டில் பயங்கர சண்டை. ‘போயும் போயும் ஆந்திராக்காரனைத்தான் கட்டுவியா? கட்டுனா வெட்டுவேன்’ என்று அவளது அப்பா சொல்லியிருந்தார். இந்த மாதிரி சமயங்களில் பெண்களிடம் நட்பாகவே இருக்கக் கூடாது. மீறி இருந்தால் நம்மை அண்ணன் ஆக்கிவிடுவார்கள். நான் அண்ணனாகியிருந்தேன்.
அந்தப் பெண்ணின் வீட்டில் வீட்டில் பயங்கர சண்டை. ‘போயும் போயும் ஆந்திராக்காரனைத்தான் கட்டுவியா? கட்டுனா வெட்டுவேன்’ என்று அவளது அப்பா சொல்லியிருந்தார். இந்த மாதிரி சமயங்களில் பெண்களிடம் நட்பாகவே இருக்கக் கூடாது. மீறி இருந்தால் நம்மை அண்ணன் ஆக்கிவிடுவார்கள். நான் அண்ணனாகியிருந்தேன்.
‘எனக்கு நல்ல ஃப்ரெண்டா இருந்த...இனியும் உன்னைத்தான் நம்புறேன்...அண்ணனா இருந்து கல்யாணம் செஞ்சு வை’ என்றாள். இதையே பத்து பேரிடமாவது சொல்லியிருப்பாள் போலிருக்கிறது. திருத்தணியில் நடந்த தாலி கட்டும் வைபவத்தில் பத்து பையன்கள் அவளது சார்பில் வந்திருந்தார்கள். அத்தனை பேரும் என்னைப் போலவே பிதுக் பிதுக் என்று முழித்துக் கொண்டிருந்தார்கள். அந்த பிதுக்கான்களிடம் அறிமுகப் படுத்திக் கொள்வதைப் போன்ற சங்கடம் வேறு எதுவுமில்லை. ‘ஐ ஆம் ஹெர் சைல்ட்ஹூட் ப்ரெண்ட்’ என்று கூசாமல் புளுகி கை கொடுத்து விட்டு முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டேன். அவர்கள் அதைவிடப் பெரிய புருடாக்களாக விட்டுவிட்டு இன்னொரு பக்கம் திரும்பிக் கொண்டார்கள்.
அவளருகில் சென்று ‘கங்க்ராட்ஸ்’ என்ற போது ‘என் கண்ணு இவ்வளவு நேரமா உன்னையே தேடிட்டு இருந்துச்சு தெரியுமா?’ என்ற அவள் சொன்ன போது இன்னொரு பிதுக்கான் என்னைப் பார்த்து அப்படி முறைத்தான். அவனிடம் என்ன சொன்னாள் என்பது திருத்தணி ஆண்டவனுக்குத்தான் தெரியும். ஆனால் இந்தத் திருமணத்துக்கு ஐடியா கொடுத்தது நான் தான். அப்பொழுது என்னுடைய கிரிமினல் மூளை பெருகி இரண்டு காதுகள் வழியாகவும் வழிந்து கொண்டிருந்தது.
‘சரிங்கப்பா...நான் கல்யாணம் பண்ணிக்கல...அமெரிக்கா போறேன்..நிறைய சம்பாதிச்சு கொண்டு வந்து உங்களுக்குத் தர்றேன்’ என்று சொல்லச் சொல்லியிருந்தேன். அவள் ஐடி நிறுவனமொன்றில் பணி புரிந்து கொண்டிருந்தாள். அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளை அந்த நிறுவனமே செய்து தருவதாகச் சொல்லியிருந்தது. அப்பனிடம் இம்மிபிசகாமல் சொல்லியிருந்தாள். அவர்களும் நம்பிவிட்டார்கள் போலிருக்கிறது. இவர்கள் திருத்தணியில் தாலியைக் கட்டிவிட்டு அமெரிக்காவுக்கு பெட்டியைக் கட்டிவிட்டார்கள். ‘பொண்ணு பணம் அனுப்புவா’ என்று வாயைத் திறந்து காத்திருந்த அப்பன் விட்ட சாபத்தில் நாற்பது சதவீதமாவது எனக்கு வந்து சேர்ந்திருக்கும்.
இப்பொழுது அவளோடு பேசுவதில்லை. ஆனால் பிரபாஸ் பற்றி யாராவது பேசினால் அவள் ஞாபகம் வந்துவிடுகிறது. எங்கள் அலுவலகத்தில் தெலுங்கர்கள்தான் அதிகம். ஒரு வாரமாக இந்தப் படத்தைப் பற்றியே பினாத்திக் கொண்டிருக்கிறார்கள். ‘தமிழிலிலும் வருது...நீ பார்க்கலயா?’ ‘குடும்பத்தோட பார்க்கணும்’ என்று ஏதாவது அடித்துவிடுகிறார்கள். ‘பாகுபலின்னா என்ன அர்த்தம்?’ என்று கேட்டு யாரிடமிருந்தும் பதில் வராமல் இணையத்தில் தேடி எடுத்துக் கொண்டேன்.
நேற்று கூட ஒருவன் கேட்டான். ‘நாளைக்கு டிக்கெட் இருக்கு..வர்றியா’ என்று.
‘இங்க பாரு...ஊரு பூராவும் போஸ்டர் ஒட்டியிருக்கான்... போஸ்டரில் அனுஷ்கா படமும் இல்லை. தமன்னா படமும் இல்லை. அவங்க ரெண்டு பேருக்குமே முக்கியத்துவம் இல்லாத படத்தை நான் போய் பார்க்கணும்ன்னு அவசியமில்லை....நீ வேணும்ன்னா போய்த் தொலை’ என்று முகத்தில் அறைந்த மாதிரி சொல்லிவிட்டேன்.
வேறு என்ன சொல்வது?
7 எதிர் சப்தங்கள்:
முதல் நால் முதல் காட்சி 1000ருபாவாம் சார் டிக்கட் இங்க.
’போங்கடா ஒருவாரம் கலிச்சு பார்த்தாலும் அதே படம்தான்’. 100ருபால பார்த்திடலாம்னு விட்டுட்டேன்.
பல படங்கள் first day first show பார்த்த அணுபவம் இருக்கு.
இந்தப் படம் release முண்பே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை தூண்டி இருந்தாலும்
அவ்வல்வு நால் பொருத்துகிட்டோம் ஜெஸ்ட் ஒரு இரண்டு நால் பொருத்திருக்க முடியாதாணு விட்டுட்டேன்.
காத்திருப்பதும் ஒரு சுகம்தானே:-)
ஹாஹா! நகைச்சுவை மிளிர்கின்றது பதிவில் அதே சமயம் தகவலும் இருக்கிறது! இதுதான் உங்க வெற்றியின் ரகசியம்.
//காஜல் அகர்வாலுக்கு பதிலாக யார்?//
சொல்லிரவா?
//ஹைதராபாத் சென்றிருந்த சமயம். முதல் சில மாதங்கள் தனியாகத்தான் தங்கியிருந்தேன். ஊரும் தெரியாது. மொழியும் புரியாது//
டவுட்டு
அப்ப ஹைதராபாத் னு எப்படி தெரிந்தது?
‘இங்க பாரு...ஊரு பூராவும் போஸ்டர் ஒட்டியிருக்கான்... போஸ்டரில் அனுஷ்கா படமும் இல்லை. தமன்னா படமும் இல்லை. அவங்க ரெண்டு பேருக்குமே முக்கியத்துவம் இல்லாத படத்தை நான் போய் பார்க்கணும்ன்னு அவசியமில்லை....நீ வேணும்ன்னா போய்த் தொலை’
I expected that you would say this! Hahaha! Had a great laugh after a quite long time.
vimarchanam entru ninaithu than padika vanthen.. azhagana nagaisuvaiyana eluthu nadai..
//தலைப்பை பார்த்துவிட்டு சினிமா விமர்சனம் என்று வாசிக்கத் துவங்கினால் கம்பெனி பொறுப்பாகாது என்கிற பின்குறிப்பை முன்குறிப்பாக சொல்லிவிட்டுத்தான் எழுதவே ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் கும்மிவிடுவார்கள்.// enakku title patha udane ithu thiraivimarsanam illanu theriyumey, theriyumey, theriyumey... But very comical.
Post a Comment