Jul 1, 2015

விதி மேல நம்பிக்கை இருக்கா தம்பி?

தஞ்சாவூர்க்காரர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. பெங்களூரில் தனது மகன் வீட்டில் இருக்கிறார். வயது முதிர்ந்தவர். தனது பேரனை அழைத்துக் கொண்டு வாக்கிங் வரும் போதும் போகும் போதும் பழக்கம். நம் வயதையொத்த ஆட்களுடன் பேசுவதைவிடவும் வயது முதிர்ந்தவர்களுடன் பேசுவதில் சுவாரசியம் அதிகம். சில ஆஃப் த ரெக்கார்ட் தகவல்களைச் சொல்வார்கள். இவர் சற்று மிடுக்குடன் இருந்ததால் பேசத் தயங்கினேன். எப்படியோ நடுவில் இருந்த தயக்கங்கள் உடைந்து சில வாரங்களாக பேசிக் கொண்டிருக்கிறோம். கபிஸ்தலம் பக்கத்தில் தோட்டங்காடுகள் இருந்தனவாம். இப்பொழுது எதுவும் இல்லை. விற்றுவிட்டு வந்து பையனுக்கு இடம் வாங்கி வீடு கட்டிவிட்டார்கள். ஒரு முறை அவரது வீட்டு வாசலில் மகனை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் அரைக்கால் ட்ரவுசர் போட்டிருந்தார். லுங்கியை மடித்துக் கட்டியிருந்தேன் என்பதாலோ என்னவோ என்னிடம் முகம் கொடுத்து பேசவில்லை. அதன் பிறகு வீட்டுப் பக்கம் செல்வதில்லை. அவ்வப்போது பெரியவரை சாலைகளில் சந்திக்கும் போது பேசிக் கொள்கிறோம்.

விதி பற்றி நிறையப் பேசுவார். எல்லாம் விதிப்படிதான் நடக்கின்றன என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர். 

‘உங்களுக்கு விதி மேல நம்பிக்கை இருக்கா தம்பி?’ என்று அவர் கேட்ட போது ‘ஆமாம்’ என்றேன். 

சமீபத்தில் சென்னையில் மெட்ரோ கட்டுமான விபத்தில் கிரிதரன் என்பவர் இறந்த போது அப்படித்தான் தோன்றியது. இவர் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டமெல்லாம் எதுவுமில்லை. இருந்தாலும் அணிந்திருக்கிறார். மேலேயிருந்து விழுந்த இரும்புக் கம்பி இவர் தலை மீது விழுந்து ஹெல்மெட் உடைந்து ஆளைக் கொன்றிருக்கிறது. இரும்புக் கம்பி ஒரு வினாடி தாமதித்து விழுந்திருக்கலாம் அல்லது ஒரு வினாடி முன்னதாக விழுந்திருக்கலாம். மிகச் சரியாக இவர் மீதே விழ வேண்டுமா? கம்பி அந்த நேரத்திலேயே விழட்டும். இவராவது சில வினாடிகள் தாமதித்து வீட்டிலிருந்து கிளம்பியிருக்கலாம் அல்லது சில வினாடிகள் முன்பாகவே கிளம்பியிருக்கலாம். ஏன் நடக்கவில்லை? அதுவும் போகட்டும். இப்பொழுது நடந்த விபத்து பத்து மாதங்களுக்கு முன்பாக நடந்திருந்தால் திருமணத்திற்கு முன்பாகவே இறந்திருப்பார். அவரது நிறைமாத மனைவி துடித்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஒருவேளை ஒரு மாதம் தாமதமாக விபத்து நடந்திருந்தால் தனது குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு இறந்திருப்பார். எதுவுமே நடக்கவில்லை. பக்காவான திட்டமிடலுடன் விதி விளையாடியிருக்கிறது. எது எப்பொழுது நடக்க வேண்டுமோ அது அப்பொழுது நடந்தே தீரும் என்று நினைத்துக் கொண்டேன்.

கிரிதரன் விபத்து நடந்த அதே சமயத்தில் இன்னொரு விபத்து பற்றிய செய்தி வந்திருந்தது. அமெரிக்காவில் நடந்த விபத்து அது. இறந்து போனவர் எங்கள் அம்மாவின் கிராமத்தைச் சார்ந்தவர். புவனேஸ்வரி. மகளும் மருமகனும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். பார்ப்பதற்காகச் சென்றிருக்கிறார். மகளது வீட்டிலிருந்து கிளம்பி மூன்று பேரும் காரில் சென்று கொண்டிருந்த போது எதிரில் படுவேகமாக வந்த கார் மோதி மூன்று பேரும் இறந்து போனார்கள். எங்கள் அம்மாவுக்கு வெகு வருத்தம். விபத்துக்கான காரணம்தான் வெகு ஆச்சரியம். எதிரில் வந்தவன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டிருக்கிறான். தற்கொலை. குண்டு பாய்ந்தவுடன் அவனது வண்டியின் வேகம் அதிபயங்கரமாக அதிகரித்திருக்கிறது. எதிரில் வந்த இவர்களின் கார் மீது அடித்து நொறுக்கியதில் சுக்கு நூறாகியிருக்கிறார்கள். சுட்டுக் கொண்டவனின் கார் இவர்கள் மீதுதான் மோத வேண்டுமா? எதைக் காரணமாகச் சொல்வது.

விதி மீதான நம்பிக்கையை இவையெல்லாம்தான் தொடர்ந்து வலுவூட்டியபடியே இருக்கின்றன. 

‘எல்லாமே விதிப்படிதான் நடக்கின்றன என்றால் ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும்? எல்லாம் அதனதன் போக்கில் நடக்கட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதானே’ என்று பெரியவர் எதிர்கேள்வி கேட்டார்.

இப்படி எடக்குமடக்காக கேள்வி கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை. 

‘விதி என்பதை அந்த அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேடியதில்லை’ என்ற போது விளக்கமாகச் சொல்லச் சொன்னார்.

‘வெள்ளத்தில் விழுகிறவன் இதோடு விதி முடிந்தது என்று விட்டுவிட்டால் கதை முடிந்துவிடும். அதனால் முடிந்தவரை முயற்சித்துப் பார்த்துவிட வேண்டும். விதியும் அப்படித்தான். நம்முடைய வேலையையும் முயற்சிகளையும் தொடர்ந்து கொண்டேயிருப்போம். ஆசைகளையும் இலக்குகளையும் நோக்கி நகர்ந்து கொண்டேயிருப்போம். முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது விதிப்படி நடக்கும்’ - இந்த அர்த்தத்தில்தான் புரிந்து கொள்கிறேன் என்றேன்.

நான் என்ன நினைக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அப்படிக் கேட்டிருக்கக் கூடும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியவரின் மனைவியும் அவரது மகனும் கோவிலுக்குச் சென்று திரும்பி வந்திருக்கிறார்கள். விதி விளையாடியிருக்கிறது. எதிரில் வந்த லாரிச் சக்கரத்தில் தடுமாறி விழுந்திருக்கிறார்கள். எல்லாம் முடிந்துவிட்டது. மகனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் இருக்கிறது. மருமகளையும் பேரக் குழந்தையையும் அவரது பெற்றவர்கள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பெரியவர் தனிக்கட்டையாகிவிட்டார். அடுத்த சில மாதங்களில் பெரியவரின் மருமகளைத்தான் இந்த அரைக்கால் ட்ரவுசர் பெங்களூர்க்காரர் திருமணம் செய்திருக்கிறார். அவருடைய கதையும் துக்ககரமானதுதான். சிறு வயதிலேயே அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள். மற்றவர்களின் உதவியுடன் படித்து முடித்து நல்லபடியாக இருக்கிறார். விதவை மறுமணம் செய்ய வேண்டும் என விரும்பியவர் இந்தப் பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். மறுமணம் செய்து கொண்ட பிறகு பெரியவரையும் தன்னோடு அழைத்து வந்துவிட்டார். தனது மகனின் குழந்தையை அழைத்துக் கொண்டுதான் பெரியவர் நடைபயிற்சி செய்கிறார்.

யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. சம்பந்தமேயில்லாத மனிதர்கள் எப்படியெல்லாம் சேர்ந்திருக்கிறார்கள்? இதையெல்லாம் சொல்லிவிட்டு ‘நமக்கு என்ன நடக்கணுமோ அது நடந்தே தீரும்’ என்றார். தலையை ஆட்டிக் கொண்டேன். அரைக்கால் ட்ரவுசர்காரர் முகம் கொடுத்துப் பேசவில்லை என்பதற்காக தவறுதலாக நினைத்திருக்க வேண்டியதில்லை என்று தோன்றியது. வாய் நிறையப் பற்களைக் காட்டிவிட்டு உள்ளத்தில் கள்ளத்தனத்தோடு இருப்பவர்களை விடவும் இப்படி சிரிக்காமல் பெரிய மனதோடு இருப்பவர்கள் எவ்வளவோ தேவலாம்.