Jul 31, 2015

கேள்வியும் பதிலும்

பெண்களுக்கு சம உரிமை என்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
                                                                                                       அனிதா
சில நாட்களுக்கு முன்பாக மனைவியின் அலுவலகத்தில் Team outing செல்வதற்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி சனிக்கிழமை ஒரு பண்ணைவீட்டில் இருந்துவிட்டு பிறகு அன்றைய மாலையில் வீடு திரும்புவார்கள்.  அவர்களது டீமில் நான்கைந்து பெண்கள் உண்டு. திருமணமாகாத பெண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சினையில்லை. வருவதாகச் சொல்லிவிட்டார்கள். திருமணமான பெண்களுக்கு அப்படி உடனடியாக ஒத்துக் கொள்வது என்பது அவ்வளவு சுலபமில்லை அல்லவா? மற்ற பெண்களைப் பற்றித் தெரியவில்லை. மனைவி என்னிடம் சொன்னவுடன் ‘நீ போய்ட்டா பையன் வருத்தப்படுவானே...ஒரு நாள் என்றாலும் கூட பரவால்ல...ஒரு ராத்திரி ஒரு பகல்ன்னு..கண்டிப்பா போகணுமா?’ என்று ஏதேதோ சொல்லி மறுக்கச் செய்துவிட்டேன். மனைவியும் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

அடுத்த ஓரிரண்டு வாரங்களில் எங்கள் அலுவலகத்தில் அதே மாதிரி ஏற்பாடு செய்தார்கள். 

வீட்டில் அனுமதி கேட்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கவேயில்லை. சரி என்று சொல்லிவிட்டு மனைவியிடம் ‘அடுத்த வாரம் டீம் அவுட்டிங் போறோம்’ என்று தகவலாக மட்டும் சொன்னேன். எப்பொழுதுமே எனக்குள் ஒரு முரட்டு ஆண் ஒளிந்து கொண்டிருக்கிறான். அவன் அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டேயிருக்கிறான் என்பதுதான் உண்மை. 

எதைப் பற்றியும் பேசுவதற்கு முன்பாக நமக்கென்று ஒரு யோக்கிதை வேண்டுமல்லவா? முதலில் என்னைத் திருத்திக் கொள்கிறேன். 

                                                               ***

குழந்தைகளுக்கான கதை சொல்லும் வழிமுறைகள் என்று ஒரு முறை நீங்கள் எழுதியிருந்த ஞாபகம். அந்த வழிமுறைகளை முயன்று பார்த்தேன். ஆனால் எனக்கு கற்பனை போதவில்லை என்று தோன்றுகிறது. வேறு ஐடியா ஏதாவது தர முடியுமா?                                                                                                                                                                                                          சரவணன்

இப்போதைக்கு எளிமையான ஐடியா.

கடந்த சில நாட்களாக குழந்தைகள் எழுத்தாளர் விழியன் குழந்தைகளுக்கான கதைகளை வாட்ஸப் வழியாக நூற்றுக்கணக்கான பெற்றோர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார். குரூப்பில் போட்டு தாளிப்பதெல்லாம் இல்லை. நம்முடைய எண்ணைக் கொடுத்துவிட்டால் ஒவ்வொரு எண்ணுக்கும் தனித்தனியாகத்தான் கதை வருகிறது என்பதால் உமாநாத்தைத்(விழியனின் இயற்பெயர் உமாநாத்) தவிர நம்முடைய எண் மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. கடந்த பதினைந்து நாட்களாக அவருடைய கதையை நேரம் கிடைக்கும் போது படித்து வைத்துக் கொள்கிறேன். அதிகபட்சம் பத்து நிமிடங்கள்தான் தேவைப்படுகிறது. வீட்டுக்குச் சென்றவுடன் கொஞ்சம் சொந்தச் சரக்கைச் சேர்த்து பையனுக்குச் சொல்லிவிடுகிறேன்.

உமாநாத்தின் எண் 9094009092. வாட்ஸப்பில் ஒரு செய்தியை அனுப்பி வையுங்கள். இன்றிலிருந்து கதை அனுப்பத் தொடங்கிவிடுவார்.

                                                                     ***

வாழ்க்கையின் பலவீனமான தருணங்கள் என்று எதைச் சொல்லலாம்?
                                                                                                                  நவீன்

மயூரிக்கு ஒன்பது வயதாகிறது. பக்கத்து வீட்டுக் குழந்தை. நேற்று விளையாடிக் கொண்டிருந்தவள் தீடிரென்று மயங்கி விழுந்துவிட்டாள். பக்கத்திலிருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் இன்னொரு மருத்துவமனைக்குச் செல்லச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டாவது மருத்துவமனையில் வசதிகள் போதவில்லை என்று நாராயண ஹிருதயாலயாவுக்கு எடுத்துச் செல்லச் சொல்லியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாகிவிட்டது. மருத்துவமனையை அடையும் போது குழந்தையின் உடலில் எந்த அசைவுமில்லை. இன்று காலை வரைக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறாள். இருதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் என அத்தனையும் சீராக இருக்கிறது. ஆனால் மூளை மட்டும் முழுமையாக செயலிழந்துவிட்டதாம். இருபத்து நான்கு மணி நேரம் கழித்துத்தான் எதையும் சொல்ல முடியும் என்று சொல்லியிருக்கிறார்கள். குழந்தைகளைத் தாக்கும் இப்படியான திடீர் நோய்மைத் தாக்குதல்களைக் கேள்விப்படும் போது உடைந்து போய்விடுவதாக உணர்கிறேன். 

இன்றைக்கு மயூரிக்கு வந்த பிரச்சினை நாளை யாருக்கு வேண்டுமானாலும் வரக் கூடும். இந்த ஒரு பய உணர்வைச் சுமந்து கொண்டிருப்பதுதான் பலவீனமான மனநிலையை உண்டாக்குகிறது.

எல்லி

கதை சொன்னால் நேர்கோட்டில் சொல்ல வேண்டும் அதுவும் ஒவ்வொரு காட்சிக்கும் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்றெல்லாம் சிலர் சொல்லியதைக் கேட்டதுண்டு. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. துண்டிக்கப்பட்ட காட்சிகளை கோர்த்துக் கோர்த்து ஒரு கதையை மிகச் சிறப்பாகச் சொல்லிவிட முடியும் என்பதை சில இயக்குநர்கள் நிரூபித்துவிடுகிறார்கள். அதற்கான உதாரணமாக எல்லி(Heli)ஐ சொல்லலாம். 

2013 ஆம் ஆண்டில் வெளியான மெக்ஸிகன் படம்.

எல்லி இளைஞன். மெக்ஸிகோ நாட்டில் ஓர் ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் பணி புரிகிறான். மனைவி குழந்தையோடு ஒரு ஓட்டை வீட்டில் குடியிருக்கிறான். இவர்களுடன் எல்லியின் தந்தையும் தங்கையும் தங்கியிருக்கிறார்கள். மேடு பள்ளமில்லாமல் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. எல்லியின் தங்கை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் இளம்பெண். கிட்டத்தட்ட பால்யம் மாறாத பருவம். அவளுக்கு பதினேழு வயதுப் பையனுடன் காதல் மலர்கிறது. அவன் ராணுவத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவன். அவ்வப்போது எல்லியின் தங்கை எஸ்டெல்லாவிடம் எல்லை மீற முயற்சிக்கிறான். ஆனால் அவள் பயத்தில் ஒத்துழைப்பதில்லை. ‘உன்னைப் பிடிக்கும்...ஆனால் கர்ப்பமாகிடுவனோன்னு பயமா இருக்கு’ என்கிறாள். அப்பொழுது அவளிடம் ஒரு குட்டி நாய் இருக்கிறது.

‘இப்போதைக்கு இந்த நாய்க்குட்டியே போதுமா?’ என்கிறான்.

காதல் இப்படி போய்க் கொண்டிருக்கும் ஒரு சமயத்தில் ‘என்னை கல்யாணம் செஞ்சுக்குவியா?’ என்று காதலன் கேட்க இவள் சம்மதித்துவிடுகிறாள். பணம் வேண்டுமல்லவா? அதற்காக ஒரு பழைய வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் போதைப் பொருளைத் திருடி எடுத்து வந்து எல்லியின் வீட்டு மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் பதுக்கி வைக்கிறான். அதை விற்று பணம் சேர்த்து எஸ்டெல்லாவை அழைத்துச் சென்று விடுவதாகச் சொல்கிறான். அது இரண்டு பெரிய பொட்டலங்கள். எல்லியின் மனைவி குளித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் பொட்டலங்கள் தொட்டியின் நீர்ப்பாதையை அடைத்துக் கொள்ள குழாயில் நீர் வருவதில்லை. எல்லி தொட்டியைத் துழாவும் போது கையில் பொட்டலங்கள் சிக்குகின்றன.

மெக்ஸிகோவில் அவ்வப்போது கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள், திருட்டுப் பொருட்கள் போன்றவற்றை ஓரிடத்தில் குவித்து இராணுவம் எரிக்கிறது. அப்படியொரு சமயத்தில் இரண்டு பொட்டங்லங்களை ராணுவ அதிகாரி ஒருவர் அபேஸ் செய்து அந்த பழைய வீட்டில் ஒளித்து வைத்திருக்கிறார். அதைத்தான் இவன் அமுக்கி எடுத்து வந்து தண்ணீர் தொட்டியில் போட்டு வைக்கிறான். மெக்ஸிகோவில் போதைப் பொருள் வைத்திருப்பதாகத் தெரிந்தால் கதையை முடித்துவிடுவார்கள் என்பதால் அவசர அவசரமாக எல்லி அவற்றை எடுத்துச் சென்று ஒரு கிணற்றில் கரைத்துவிடுகிறான். கடுப்பு தீராமல் வீட்டிற்கு திரும்ப வந்து எஸ்டெல்லாவை பூட்டி வைக்கிறான். இனி பிரச்சினை எதுவும் இருக்காது என நினைக்கிறான். ஆனால் மோப்பம் பிடித்து வந்து கதவை உடைக்கிறார்கள். கதவை உடைப்பவர்கள் ராணுவ உடையில்தான் இருக்கிறார்கள். எல்லியின் அப்பா தனது நாட்டுத் துப்பாக்கியை எடுக்க எத்தனிக்கும் போது அவரைச் சுட்டு பிணத்தை சாலையில் வீசி விட்டு எல்லியையும் எஸ்டெல்லாவையும் இழுத்துச் செல்கிறார்கள். 

எல்லி அவர்களிடம் தனக்குத் தெரிந்த விவரங்களைச் சொல்லி விடுகிறான். வந்து பிடித்தவர்கள் ராணுவம் இல்லை. உடை மட்டும்தான் ராணுவ உடை. எஸ்டெல்லாவின் காதலன் குறித்த விவரம் தெரிந்த பிறகு அவனை மட்டும் விடுவார்களா? எல்லியையும் எஸ்டெல்லாவின் காதலனையும் ஒரு வீட்டில் கட்டிப் போட்டு ரணகளமாக்குகிறார்கள். ரணகளம் என்றால் ஆடைகளை நீக்கிவிட்டு கைகளை மேல் நோக்கிக் கட்டி வைத்து ஆணுறுப்பின் மீது சாராயத்தை ஊற்றி நெருப்பை பற்ற வைப்பது வரை. இப்படியான சித்ரவதைகளுக்குப் பிறகு எல்லியைத் தப்பிக்கவிடுகிறார்கள். ஆனால் எஸ்டெல்லாவின் காதலனைக் கொன்றுவிடுகிறார்கள். 

எல்லி திரும்ப வந்த பிறகு அவனுடைய மனம் சஞ்சலத்திலேயே இருக்கிறது. வேலையில் கவனம் செயலுத்த முடிவதில்லை. ஆரம்பத்தில் விசாரணை அதிகாரிகளிடம் முழுமையான தகவல்களைக் கொடுக்காமல் மறைக்கிறான். மனைவியுடன் சண்டை பிடிக்கிறான். முன்பிருந்ததைக் காட்டிலும் நிறைய மாறிவிடுகிறான். இவனது செயல்பாட்டில் திருப்தியில்லாமல் வேலையை விட்டும் நீக்கிவிடுகிறார்கள். குழப்பமான சூழலில் விசாரணை அதிகாரிகளிடம் தங்களைக் கடத்திச் சென்றவர்கள் எங்கே ஒளித்து வைத்திருந்தார்கள் என்பதைச் சொல்லிவிடுவதாக அழைக்கிறான். ‘இத்தனை நாள் ஏம்ப்பா சொல்லல?’ என்று அவர்கள் கேட்கும் போது ‘சொன்னால் தங்கச்சியைக் கண்டுபிடிச்சு தந்துடுவீங்க என்கிற ஆசைதான்’ என்கிறான். ‘அந்தக் கேஸை மூடியாச்சு...இனி மறுபடி திறக்கணும்’ என்கிறார்கள். அதன் பிறகு திடீரென்று எஸ்டெல்லாவே திரும்ப வந்துவிடுகிறாள். ஆனால் யாரிடமும் பேசுவதில்லை. அவளுக்கு கருக்கலைப்பு நடந்திருக்கிறது. எல்லி மெல்லத் தன் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப முயற்சிக்கிறான். ஆனால் எஸ்டெல்லா மட்டும் அந்த அதிர்ச்சியிலேயே இருக்கிறாள். 

சமீபத்தில் பார்த்த நல்ல படங்களில் ஒன்று Heli. 

முதல் பத்தியில் குறிப்பிட்டது போல படத்தில் பெரும்பாலானவை துண்டிக்கப்பட்ட காட்சிகள். ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை போலத் தெரிகிறது. ஆனால் ஒரு இழை மாதிரியான தொடர்புதான் கதையை நகர்த்துகிறது. உதாரணமாக ஒரு காட்சியில் எல்லி தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கிரேன் இயக்கத்தில் தவறு செய்துவிடுகிறான். சூப்பர்வைசர் வந்து கத்திவிட்டுப் போகிறான். அவன் என்ன கத்துகிறான் என்று பார்வையாளர்களுக்கு புரிவதில்லை. எல்லியின் கவனம் சிதறிக் கொண்டிருக்கிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மற்றொரு சமயம் தூரத்தில் நிற்கும் சூப்பர்வைசரை எல்லி உற்று நோக்குகிறான். அப்பொழுது எல்லிக்கும் அவனுக்கும் உறவு சரியில்லை என்று புரிகிறது. இன்னொரு காட்சியில் தன் மனைவியிடம் தனது வேலையைப் பறித்துவிட்டார்கள் என்று சொல்கிறான். இப்படித்தான் படம் முழுமையாகவே கத்தரிக்கப்பட்ட காட்சிகளால் நிரம்பியிருக்கிறது. இதை விவரிக்கும் போது அவ்வளவு சுவாரசியத்தையும் எழுத்தில் கொண்டு வர முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் படமாகப் பார்க்கும் போது இந்தத் துண்டுச் சித்திரங்கள் உருவாக்கும் கிளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும்.

இன்னொரு முக்கியமான விஷயம் பின்னணி இசை. இசை என்று சொல்ல முடியாது. சப்தங்கள். படம் முழுக்கவும் லைவ் சவுண்ட்தான். பாத்திரங்கள் நடப்பதும் பேசுவதும் ஓடுவதும் படமாக்கத்தின் போது நேரடியாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதுவும் பல காட்சிகளில் வித்தியாசப்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக ஒரு காட்சியைச் சொல்ல முடியும். எஸ்டெல்லாவை எங்கே வைத்திருந்தார்கள் என்று எல்லி கேட்கும் போது அவள் பதில் எதுவும் சொல்வதில்லை. மற்றொரு காட்சியில் அவள் ஒரு ரூட் மேப் வரைந்து கொண்டிருக்கிறாள். அதுதான் அவள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த இடம் என்பதை படம் பார்க்கிறவர்கள் புரிந்து கொள்ள முடியும். அதைத் தூக்கிக் கொண்டு எல்லி ஓடுகிறான். அவள் அடைக்கப்பட்டிருந்த வீட்டுக்குள் நுழையும் போது ஒருவன் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் ஜன்னல் வழியாகத் தப்பி ஓடுகிறான். எல்லி துரத்துகிறான். காமிரா வீட்டுக்குள்ளேயே இருக்கிறது. நமக்கு டிவி ஓடும் சப்தம்தான் கேட்கிறது. ஆனால் திரையில் எல்லி அவனைக் கொலை செய்து கொண்டிருக்கிறான். இப்படி காட்சிக்கு முற்றும் சம்பந்தமில்லாத ஆனால் தொடர்புடைய இசையை ஓட விடுவது என படம் முழுக்கவுமே கேமிராவுக்கும் பின்னணி இசைக்குமான வித்தியாசமான பந்தத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

வழமையான காட்சிப்படுத்துதல், இசையாக்கம் என்பனவற்றிலிருந்து முழுமையாக விலகிய படம் Heli. திரைப்பட ஆர்வலர்கள் கற்றுக் கொள்வதற்கும் பிரியர்கள் உற்சாகமடைவதற்கும் ஏகப்பட்ட வஸ்துக்களை தனக்குள் உள்ளடக்கியிருக்கிறது.

ஆன்லைனில் கிடைக்கிறது. இணைப்பை கொடுத்தால் ‘திருட்டு டிவிடி சைட்டை இப்படி வெளிப்படையாகக் கொடுக்கலாமா?’ என்று யாராவது வந்து திட்டிவிட்டுப் போகிறார்கள். அதனால் Heli Solarmovies என்று கூகிளில் தேடுங்கள். நான் அப்படித்தான் பார்த்தேன். 

Jul 30, 2015

கலைவாணிக்குத்தான் வெளிச்சம்

இருபது வருடங்களுக்கு முன்பாக வரைக்கும் கூட ஒவ்வொரு ஊரிலும் மிகச் சிறந்த பள்ளிகளின் பட்டியலில் அரசு உதவி பெறும் பள்ளிகள்(Aided school) இருந்தன. ஊருக்கு ஒரு பள்ளி என்பது இது மிகையானதாகத் தெரிந்தால் ஒரு மாவட்டத்துக்கு இரண்டு பள்ளிகளாவது இருந்தன என்று சொல்லலாமா? இது குறைந்தபட்ச எண்ணிக்கை. பரவாயில்லை. இருக்கட்டும். அப்படியான உதவி பெறும் பள்ளிகள்தான் மெல்ல மெல்லச் சீரழிந்தன அல்லது சீரழிக்கப்பட்டன. 

பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் படிப்படியாகக் குறைந்தது. மாவட்ட அளவிலான தகுதிப் பட்டியலிலிருந்து இந்தப் பள்ளிகள் காணாமல் போயின. பள்ளிகளின் நல்ல பெயர் சிதையத் தொடங்கியது. பல்லாண்டு காலமாக கோலோச்சி வந்த உதவி பெறும் பள்ளிகளின் இடத்தை தனியார் பள்ளிகள் ஆக்கிரமிக்கத் தொடங்கின. ‘ஒரேயொரு வருடம் ஸ்டேட் ரேங்க் வாங்கிட்டா போதும். பத்து வருஷத்துக்கு வியாபாரம் பழுக்கும்’ என்று தனியார் பள்ளிகள் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களைத் தேடிச் சென்று ‘எல்லாம் இலவசம்’ என்று கொக்கி போடுகின்றன. படிக்கும் திறன் வாய்ந்த மாணவர்களை அழைத்து வந்து தட்டி உருவேற்றி நல்ல மதிப்பெண்களை வாங்க வைத்து வீதிக்கு வீதி ப்ளெக்ஸ் பேனர் கட்டுகிறார்கள். ‘பார்த்தீங்களா எங்கள் பராக்கிரமத்தை’ என்று அறை கூவுகிறார்கள். அடுத்த வருடத்திலிருந்து அந்தத் தனியார் பள்ளியில் சேர்க்கைக்கு கூட்டம் அலை மோதத் தொடங்குகிறது. தொழில் யுக்தி அது. Business Strategy. 

மாணவர்களைத் தனியார் பள்ளிகள் வளைத்துக் கொள்ள உதவி பெறும் பள்ளிகள் காற்று வாங்கத் தொடங்கின. படிப்பே மண்டையில் ஏறாத மிச்சம் மீதி இருக்கும் மாணவர்களை வைத்துக் கொண்டு போராடுகிறார்கள். இதுதான் கடந்த பதினைந்து அல்லது இருபது வருடங்களாக நடந்து வருகிறது. அரசாங்கத்தாலும் கல்வித் துறையாலும் இந்தச் சீரழிவு கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேயில்லை. அவர்கள் ஒரு கண்ணில் சுண்ணாம்பையும் இன்னொரு கண்ணில் வெண்ணையையும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனியார் பள்ளிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு அரசுப் பள்ளிகளுக்குத்தான் ஏகப்பட்ட விதிகளை விதிக்கிறார்கள். சமீபத்தில் பதினோராம் வகுப்பு மாணவியை சந்திக்க நேர்ந்தது. தனியார் பள்ளி மாணவி. பள்ளி தொடங்கி இரண்டு மாதம் ஆகிறது. பதினோராம் வகுப்பு புத்தகமே வழங்கப்படவில்லை என்றாள். எடுத்தவுடனேயே பனிரெண்டாம் வகுப்புப் பாடம்தான். கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் பதினோராம் வகுப்பு பாடத்திட்டத்தில்தான் அடிப்படையான விஷயங்கள் இருக்கும். இவர்கள் அதையெல்லாம் சொல்லித் தருவதேயில்லை. அடுத்த இரண்டு வருடங்களுக்கு பனிரெண்டாம் வகுப்பு பாடங்களை மட்டும் நெட்டுரு போட வைக்கிறார்கள். புரியவில்லை என்பதெல்லாம் அவர்களுக்கு பொருட்டே இல்லை. உள்ளே ஏற்றிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். ஏற்றிக் கொண்டதை தேர்வுகளில் அப்படியே வாந்தியெடுக்கிறார்கள். வெளியுலகில் ‘எங்கள் பள்ளிதான் பெஸ்ட்’ என்று அறிவிக்கிறார்கள். 

இவர்களுடன் எப்படி அரசுப் பள்ளிகள் மதிப்பெண்களில் போட்டியிட முடியும்? கல்வித்துறை அதிகாரிகளுக்கு இதுவெல்லாம் தெரியாதா? தெரியும். கண்டுகொள்வதில்லை. தனியார் கல்வி முதலாளிகளால் மிகச் சரியாக கப்பம் கட்டப்படுகின்றன என்பதுதான் காரணம்.

தனியார் பள்ளிகளை நோக்கிச் செல்லும் மாணவர்களை ஈர்ப்பதற்கு சரியான வழிமுறைகள் உருவாக்கப்படவில்லை. அனைத்து பள்ளிகளிலும் சமன்படுத்தப்பட்ட கல்விமுறையை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை- சமன்படுத்தப்பட்ட கல்விமுறை என்பது விளையாட்டு, நூலகம், சமூகப்பணி உள்ளிட்டவற்றை பாடத் திட்டங்களோடு இணைப்பது மட்டுமில்லை குறிப்பாக எந்த வருடப் பாடத்தையும் தவிர்க்காமல் முறையாக படித்து பாடங்களின் அடிப்படை தெரிந்த மாணவர்களை உருவாக்கும் திட்டம். இவை தனியார், அரசுப்பள்ளி என்கிற பாகுபாடில்லாமல் அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்கப் பட வேண்டும். நாற்பது வயதில் ஒருவ எப்படிச் செயல்படுவான் என்பது அவனுடை பதினைந்தாவது வயதில் முடிவு செய்யப்படுகிறது. அதுதான் ஆளுமை உருவாக்கம். அந்த ஆளுமை உருவாக்கம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட வேண்டும். எங்கே செயல்படுத்துகிறார்கள்? வெறும் மதிப்பெண் வாங்க வைப்பது மட்டும் பள்ளிகளின் கடமையாகிவிட்டது.

இப்படி அனைத்துப் பள்ளிகளிலும் பொதுவான கற்பித்தல் முறையை அமுல்படுத்துவது எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு அவசியம் ஆசிரியர் மாணவர்களின் விகிதாச்சாரம். 

ஒரு பக்கம் தனியார் பள்ளிகள் பணம் கொழித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் அரசுப் பள்ளிகள் ஆசிரியர்களின் பற்றாக்குறையால் திணறிக் கொண்டிருக்கின்றன. அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்ற சூழல் நிலவும் அதே சமயம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியான ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகுந்து கிடக்கிறது. உதவி பெறும் பள்ளிகளில் ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்தார்கள். இப்பொழுது அந்த எண்ணிக்கை சுருங்கிவிட்டது. இருந்த போதிலும் முன்பு எவ்வளவு ஆசிரியர்கள் இருந்தார்களோ அதே எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் வெட்டியாக பெஞ்ச்சைத் தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பெரும்பாலும் இடமாறுதல் செய்யப்படுவதில்லை. ஆசிரியர்களின் எண்ணிக்கை உபரியாக இருக்குமிடத்திலிருந்து பற்றாக்குறை நிலவும் பள்ளிகளுக்கு மாற்றுவதுதானே சரியாக இருக்கும்? அதைச் செய்வதற்கு சுணக்கத்தைக் காட்டுகிறார்கள். அரசாங்கம் மற்ற துறைகளில் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். ஆனால் பள்ளிக் கல்வித் துறையில் மிகச் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். எங்கேயிருக்கிறார்கள்?

சமீபத்தில் கல்லை வீசிப் பார்க்கலாம் என்ற கட்டுரையில் எழுதியது போல தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவல் இது. உதாரணமாக ராமநாதபுரம் மாவட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்துல்கலாமை உருவாக்கிய மாவட்டம். இந்த மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 256 ஆசிரியர்கள் உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக இருக்கிறார்கள். இது தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மட்டும். மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளைக் கணக்கு எடுத்தால் எண்ணிக்கை இன்னமும் அதிகமாக இருக்கும். இந்த உபரி ஆசிரியர்களான 256 பேருக்கு வழங்கப்படும் ஒரு மாதச் சம்பளம் நாற்பத்தேழு லட்சம் ரூபாய். ஒரேயொரு மாவட்டத்தில் வேலையில்லாத வெட்டி ஆசிரியர்களுக்கு சம்பளமாகக் கொடுக்கப்படும் தொகை மட்டும் மாதம் ஐம்பது லட்சம். தலை சுற்றத்தானே செய்யும்? எனில் தமிழகத்தின் முப்பத்தியிரண்டு மாவட்டங்களிலும் உபரியாக இருக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைக் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். சராசரியாக மாவட்டத்துக்கு ஐம்பது லட்சம் என்றாலும் கூட கிட்டத்தட்ட பதினைந்து கோடி ரூபாய். மாதம் பதினைந்து கோடி என்றால் வருடத்திற்கு? ஒரு பக்கம் ஆசிரியர்களே இல்லை என்று ஏகப்பட்ட பள்ளிகள் பஞ்சப்பாட்டு பாடிக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கான கோடிகளை வெட்டி ஆசிரியர்களுக்கு கொட்டிக் கொண்டிருக்கிறது இந்த அரசாங்கம். இதைப்பற்றியெல்லாம் அரசாங்க மட்டத்தில் ஏதேனும் விவாதமாவது நடக்கிறதா என்று தெரியவில்லை. 

சும்மா தோண்டிப்பார்க்கலாம் என்று நினைத்தாலே பூதங்கள் எழுகின்றன. தோண்டத் தொடங்கினால் இன்னமும் என்னென்ன வருமோ!

கலைவாணிக்குத்தான் தெரியும்.

Jul 29, 2015

சாரு + கொம்ப மகாராஜாக்கள்

பெரும்பாலான எழுத்தாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் எதிர்வினையே புரியக் கூடாது. தங்களைக் கொம்ப மகாராஜாக்களாக நினைத்துக் கொண்டு கருத்தை உதிர்ப்பார்கள். அதை விவாதிப்பதற்கான மனநிலை எதுவும் அவர்களிடம் இருக்காது என்று கற்பூரம் அடித்துக் கூட சத்தியம் செய்யலாம். ‘இங்க எனக்குத் தெரியாத விஷயமே இல்ல..நான் கருத்து சொல்லுறேன்...கேட்டுக்க.....அவ்வளவுதான்’ என்ற நினைப்பில் திரிகிற அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது. மனோவியல் சார்ந்த பிரச்சினை. தங்களை எல்லாக்காலத்திலும் அறிவுஜீவியாகவும் பொது ஜன மனநிலையிலிருந்து துண்டிக்கப்பட்ட விசித்திர ஜந்துக்களாகவும் காட்டிக் கொள்கிற மனோவியாதி அது. ஒரு விஷயம், இரண்டு விஷயம் என்றால் பரவாயில்லை- கிட்டத்தட்ட நம்மைச் சுற்றி நிகழும் எல்லாவற்றிலுமே அப்படித்தான் செயல்படுவார்கள். வலிந்து திணிக்கப்பட்ட மாற்றுக் கருத்தை முன்வைக்க பிரயத்தனப்பட்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவார்கள்.

இணையத்தில் என்ன பிரச்சினை என்றால் இந்த அவஸ்தைகளை நம்மால் தவிர்க்கவே முடியாது. சாரு நிவேதிதா டாக்டர் அப்துல்கலாம் மீது சாணத்தை வீசியடிக்க திணறிக் கொண்டிருக்கும் போது நம் மீது சாணத்தின் துளி படாமல் தப்பிக்கவே முடியாது. ‘அந்த மனுஷன் எழுதின ஒரு கட்டுரையை படிச்சாச்சா...அதோட சரி...இனிமே அந்தப் பக்கமே போகக் கூடாது’ என்று நம் கடுப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போது யாராவது அந்த இணைப்பை எடுத்துப் போட்டு ‘இந்த லோலாயத்தைப் பாருங்க’ என்று எழுதியிருப்பார்கள். சாருவைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? சுவாரஸியமாக எழுதக் கூடிய மனிதர் அல்லவா?. அப்படி என்னதான் எழுதியிருப்பார் என்று நமக்கு கை பரபரக்கும். க்ளிக் செய்து தொலைத்துவிடுவோம். பிறகு அதையெல்லாம் படித்து ரத்தக் கொதிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

சாமானிய மனிதனுக்கும் இந்தக் கொம்ப மகாராஜாவுக்குமான வித்தியாசம் ஒன்றிருக்கிறது. 

எந்தவொரு பிரச்சினை என்றாலும் கொம்பமகாராஜாக்கள் தாங்கள்தான் குரலை உயர்த்த வேண்டும் என்பார்கள். அதுவும் வித்தியாசமான தொனியில். உயர்த்திவிட்டு போகட்டும். அவர்களுக்கு அதுதான் பிழைப்பு. நீங்களும் நானும் சொல்லும் அதே கருத்தையே சாருவும் இன்னபிற அறிவுஜீவிகளும் சொன்னால் நாளைக்கு அவர்களை யார் சீந்துவார்கள். அதனால் வித்தியாசமாகக் கூவித்தான் தீர வேண்டும். ஆனால் முதல் கூவலில் ‘இங்க பார்றா வித்தியாசமா கூவுறாண்டா’ என்று சிலர் திரும்பிப் பார்க்கும் போது திருப்தியடையமாட்டார்கள். ‘இன்னோருக்கா கூவலாம்’ என்று மீண்டும் முயற்சிப்பார்கள். சென்ற முறை திரும்பிப் பார்த்தவன் இந்த முறை குனிந்து கற்களை எடுப்பான். ‘இதைத்தானய்யா எதிர்பார்த்தேன்’ என்று இன்னொரு முறை கூவுவார்கள். கல்லை எடுத்தவன் அமைதியாக இருப்பானா? வீசுவான். இது மிக முக்கியமான கட்டம். உதட்டில் அல்லது நெற்றியில் அடிபடும். ரத்தம் கசிகிறதோ இல்லையோ- இந்த கொம்ப மகாராஜாக்கள் ஊளையிடுவார்கள். ‘இங்கு கருத்துச் சுதந்திரமே இல்லையா?’என்று கதறுவார்கள். இப்பொழுது நூறு பேர் கவனிப்பார்கள். அவ்வளவுதான். காரியம் முடிந்தது. ஆசுவாசமடைந்துவிடுவார்கள். ஒரு முறை கல்லால் அடித்தவன் ‘இவன் எப்பவுமே இப்படித்தான்...திருத்த முடியாது’ என்று போயிருப்பான். இந்த கொம்ப மகாராஜாக்கள் அடுத்து எவன் சாவான், எவன் கல்லைத் தூக்குவான் என்று எதிர்பார்க்கத் தொடங்கியிருப்பார்கள்.

கிடைக்கிற வாய்ப்புகளில் எல்லாம் ஸ்கோர் செய்ய முயற்சிக்கிற Attention seeking என்று நாம் இதைச் சொல்வோம். ‘இல்லை இல்லை மொத்த சமூகமும் மொன்னையாகத் திரியும் போது நான் மட்டும்தான் சலனத்தை உருவாக்குகிறேன்’ என்று அவர்கள் சொல்வார்கள்.

கிழித்தார்கள்.

சாரு நிவேதிதா அளக்கும் கதையின் படி பார்த்தால் தமிழ்நாட்டில் அவர் காலத்தில் ஒரு பெரும்புரட்சியே நடந்திருக்க வேண்டும். மொத்த சமுதாயமும் தலைகீழாக மாறியிருக்க வேண்டும். எதைச் சாதித்திருக்கிறார்? இவரைப் போன்றவர்களால் இந்தச் சமூகத்தில் துளி சலனத்தைக் கூட உருவாக்க முடியாது. வெறும் மனப்பிராந்தி. தன்னால்தான் இந்த உலகமே சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதான வெற்றுப் பாவனை. தனது காலம் முழுக்கவும் இப்படியே தொண்டைத்தண்ணீர் வறண்டு போகுமளவுக்கு கத்தி கத்தி ரெமி மார்ட்டினுக்கும் காஸ்ட்லி ஜட்டிக்கும் ஏற்பாடு செய்து கொள்வதைத் தவிர வேறு எந்த ஆணியையும் பிடுங்கிச் சேர்க்கமாட்டார்கள்.

ஒரு போராளி அல்லது சமூக சிந்தனையாளன் ஒரு விஷயத்தை பேசினால் அதையே திரும்பத் திரும்ப பேசியும் சிந்தித்தும் கொண்டிருப்பான். சாரு போன்ற புரட்டுப் புரட்சியாளர்கள் தன் வாழ்நாளில் எந்த ஒரு கொள்கையைப் பின்பற்றி ஆழமாகவும் அழுத்தமாகவும் தொடர்ந்து விவாதங்களை உருவாக்கியிருக்கிறார்கள்? ஆட்டோ பிக்‌ஷன் என்பார் சீலே என்பார் அயல் சினிமா என்பார் திடீரென்று இந்த சமூகம் நாசமாகப் போகட்டும் என்பார். இங்கே நடப்பது வெறும் கழைக் கூத்து.

இத்தனை நாள் முடங்கிக் கிடந்த தனது தளத்துக்கு ஒரு விளம்பரம் தேவைப்படுகிறது. மீண்டும் ஆட்களைத் திரட்டுவதற்கு அப்துல்கலாம் சிக்கியிருக்கிறார். அப்துல்கலாமின் தாய் மொழிக் கொள்கை என்ன என்பதைக் குறித்து இணையத்தில் தேடினால் கூட பேச்சுக்கள் கிடைகின்றன. அவர் மத அடையாளம் பற்றி பெரிய பிரக்ஞையற்றிருந்தது குறித்தான கட்டுரைகளும் தகவல்களும் கிடைக்கின்றன. அவற்றை விரிவாக விவாதிக்கலாம். ஆனால் அதற்கான சமயம் இதுவன்று.

சமூக சிந்தனையாளர்கள் என்ற பெயரில் இந்தச் சமூகம் தலை சிலுப்பிகளாலும் வாய்ச் சொல் வீரர்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. 

‘உனக்குத் தெரிந்ததை நீ சொல்; எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்’ என்கிற மனநிலைதான் வளர்ந்து பெருகிக் கொண்டிருக்கிறது. இந்தக் கொம்பமகராஜாக்கள் அலட்சியமாகப் பார்க்கும் கூட்டு மனசாட்சி, வெகுஜன மனநிலை என்பதெல்லாம் கடந்த இருபதாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போன்ற தட்டயானதாக இல்லை. மிகச் சிக்கல் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாத நுணுக்கங்களால் நிரம்பியிருக்கிறது.  பொதுமக்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரியாக சிந்திப்பதில்லை. அவனவனுக்கு அவனவன் கருத்து முக்கியம். ‘எனக்கு எழுதத் தெரியும்’ என்கிற நினைப்பில் முரட்டுத்தனமாக உனது கருத்தை முன் வைத்தால் அவனுக்குத் தெரிந்த எழுத்து வடிவத்தில் அவன் கருத்தை முன்வைப்பான். அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இவன் பேசுவதைக் கேட்டு அவனோ அவன் பேசுவதைக் கேட்டு நானோ தவறுகளைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை. அதற்கு யாரும் இங்கு தயாராகவும் இல்லை. இந்த சூழல்தான் கொம்பமகாராஜாக்களுக்கு அதீதமான பதற்றத்தை உருவாக்குகிறது. முக்கி முக்கி நாம் எழுதும் விஷயத்தைவிட ஒன்றரை வரியில் நேற்று வந்த ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பொடியன்கள் மொத்த கவனத்தையும் திருப்பிவிடுகிறார்கள் என்று பதறுகிறார்கள்.  நம்மை இந்த சமூகம் மறந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். அதற்காக அண்டர்வேரோடு இறங்கி அட்டைக் கத்தியைச் சுழற்றுகிறார்கள். 

இணையத்தின் மிக அதிகமாகக் கொட்டிக் கிடப்பது என்னவென்று கேட்டால் pornography என்பதுதான் பலருடைய பதிலாக இருக்கும். ஆனால் அது உண்மையில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர், ப்லாக் என்று நாம் எழுதிக் குவிக்கிற தனிமனித கருத்துக்கள்தான் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. எதிர்காலத்தில் டெராபைட்டுகளாகவும், பெட்டாபைட்டுகளாகவும், எக்ஸாபைட்டுகளாகவும், ஜெட்டாபைட்டுகளாவும், யொட்டாபைட்டுகளாவும் நிரம்பப் போகின்ற இந்தக் கருத்துக் குவியல்களுக்குள் தங்கள் மொன்னையாக குரல் நசுங்கிப் போய்விடக் கூடாது என்கிற பயத்தில்தான் ‘இந்தச் சமூகம் மொன்னை’ என்று கதறுகிறார்கள். மற்றவர்களை விட தங்களின் சிந்தனை வித்தியாசமானது மேம்பட்டது என்றெல்லாம் சிரமப்பட்டு நம்புகிறார்கள். அதையே நாமும் நம்ப வேண்டும் என்று எதிர்பார்த்து கல்லடி வாங்குகிறார்கள்.

இந்தச் சமூகத்தில் பிரச்சினைகள் இருக்கலாம்- ஆனால் சமூகத்திற்கென சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் தங்களைச் சமூகத்தைச் செதுக்க வந்த சிற்பிகளாக நினைத்துக் கொள்ளும் உங்களிடம்தான் அதைவிட சிக்கலானதும் தீர்க்கவே முடியாத பிரச்சினைகளும் நிரம்பிக் கிடக்கின்றன. 

துணிமணியைக் காணோம்

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் நாள் முழுக்கவும் ஒரே ஆசிரியர்தான் இருப்பார். அத்தனை பாடங்களையும் அவரேதான் நடத்துவார். வாய் வலிக்கும் போதெல்லாம் ‘படிங்கடா’ என்று சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்து கொள்வார். புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு இஷ்டத்துக்கு அரட்டை அடிக்கலாம். சத்தம் அளவு மீறும் போது மேசையை ஒரு தட்டு தட்டுவார். எருமை மேல் மழை விழுந்தது போல ஒரு வினாடி அமைதியாகிவிட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து பேச்சைத் தொடங்கலாம். இப்படி ஒற்றை ஆசிரியர் என்பதில் பெரிய சகாயம் இருந்தது. ஒவ்வொரு நாளுக்குமான வீட்டுப்பாடங்களையும் அவரேதான் கொடுப்பார் என்பதால் ஒரு நாளைக்கு ஒரு வீட்டுப்பாடம்தான் இருக்கும். பெரிய பிரச்சினையில்லை. காலையில் எழுந்து கூட கிறுக்கித் தள்ளிவிட்டு பள்ளிக்குச் சென்றுவிடலாம்.

‘டேய் ஆறாங்கிளாஸ் போனா நாமெல்லாம் பெஞ்ச் மேல உட்காரலாம் தெரியுமா.....கீழ உக்காந்து ட்ரவுசரைத் தேய்க்க வேண்டியதில்லை’ என்று சொல்லி உசுப்பேற்றியிருந்தார்கள். உற்சாகமாக இருந்தது. ஆறாம் வகுப்பில் சேர்ந்து பெஞ்ச்களில் அமர்ந்தோம். எங்களுக்கு முன்பாக படித்திருந்த அண்ணன்கள் தங்களுக்குப் பிடித்தமான பெயர்களையெல்லாம் காம்பஸ் வைத்து பொறித்துவிட்டு போயிருந்தார்கள். பொன்னெழுத்துக்கள். முதல் ஒரு வாரம் வாத்தியார்களும் நன்றாகத்தான் இருந்தார்கள். ‘உங்கப்பன் பேரு என்ன? எந்த ஊரு?’ போன்ற சம்பிரதாயமான கேள்வி பதில்களோடு நிறுத்திக் கொண்டார்கள். பள்ளியில் பெரிய மைதானம் இருந்ததால் இடைவெளி கிடைத்த போதெல்லாம் விளையாடச் சென்று சட்டையை அழுக்காக்கிக் கொண்டிருந்தோம்.

எல்லோருக்கும் எல்லா சந்தோஷமும் நிரந்தரம் இல்லை அல்லவா? இரண்டாவது வாரத்திலிருந்து ஆரம்பித்தார்கள் பாருங்கள். கொடுமை. 

சமூக அறிவியலுக்கு சிலம்புச் செல்வி டீச்சர், கணக்குக்கு ராமசாமி வாத்தியார், தமிழுக்கு கண்ணம்மா டீச்சர், அறிவியலுக்கு வெங்கடாசலம் வாத்தியார் என்று ஆளாளுக்கு பிழிந்தெடுக்கத் தொடங்கினார்கள். வகுப்பறையோடு நிறுத்தினார்களா? வீட்டுப்பாடம் வேறு கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒரே நாளில் ஐந்து பாடங்களுக்கு வீட்டுப்பாடம். எழுதாமல் வந்துவிட்டால் அவ்வளவுதான். ஆளாளுக்கு ஒரு டெக்னிக். சிலம்புச்செல்வி டீச்சர் அடிவயிற்றைப் பிடித்துக் கிள்ளினால் பாதம் தன்னால் மேலே எழும்பும். கதறினாலும் விடமாட்டார். கண்ணம்மா டீச்சர் இன்னொரு வகையறா. அவருக்கு அப்படியொரு மூங்கில்தடி எப்படி கிடைத்ததோ தெரியாது- நெகுநெகுவென்று சீவி வைத்திருப்பார். தினமும் சாப்பாட்டு போசியை எடுத்து வருகிறாரோ இல்லையோ- தடியை எடுத்து வந்துவிடுவார். கையை நீட்டச் சொல்லி விளாசுதான். அவர் அப்படியென்றால் வெங்கடாசலம் வாத்தியார் வகுப்புக்கு வரும் போதே பச்சை விளார் ஒன்றை முறித்துக் கொண்டு வருவார். திரும்ப நிற்கச் சொல்லி ட்ரவுசர் மீதே விழும். நாள் முழுக்கவும் நிம்மதியாக அமரக் கூட முடியாது. ஒரு பக்கமாகத் தூக்கியபடியே அமர்ந்திருக்க வேண்டும். இப்படி ஒன்றரைக்கிடையாக அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு சிரிக்கும் யோக்கியசிகாமணி மாணவர்களின் கிண்டலுக்கு வேறு ஆளாக வேண்டும். 

மற்றவர்களோடு ஒப்பிட்டால் ராமசாமி வாத்தியாரிடம் மட்டும் ஏய்க்கலாம். விட்டுவிடுவார். விட்டுவிடுவார் என்றால் ஒரு நாள் சரி பார்ப்பார் இன்னொரு நாள் கண்டுகொள்ள மாட்டார். நம்முடைய நேரம் கெட்டுக் கிடந்தால் சோலி சுத்தம். தனது கைக்கடிகாரத்தை கழற்றி ஒரு மாணவனிடம் கொடுத்துவிட்டு வேட்டியை மடித்துக் கட்டி கபடி ஆடுவார். அப்படியொரு கபடி ஆட்டத்திலிருந்து தப்பிப்பதற்காக பையன் ஒருவன் சுவர் மீது ஏறி எட்டிக் குதித்துக் காலை முறித்துக் கொண்டதிலிருந்து அவருடைய வேகத்துக்கு கொஞ்சம் தடை விழுந்தது என்றாலும் அவ்வப்போது ஆடி விட்டுத்தான் ஓய்வார்.

‘இந்தக் கருமாந்திரம் புடிச்ச ஆறாம் வகுப்பு டி பிரிவில் படிக்கவே கூடாது’ என்று வெகு சீக்கிரத்திலேயே முடிவு செய்து கொண்டேன். ஒரு நாளைக்கு ஒருவரிடமாவது அடி வாங்கித் தொலைய வேண்டியிருக்கிறது. ‘இவர்களிடமெல்லாம் அடி வாங்க வேண்டும் என்பதற்காகவா வெட்டியில் புள்ள பெத்து மணிகண்டன்னு பேரு வெச்சீங்க’ என்று அம்மாவிடம் கேட்டால் அவர் ருத்ர தாண்டவம் ஆடுகிறார். என்னதான் செய்வது?  எப்படியாவது தப்பித்தாக வேண்டும். ஆனால் வீட்டில் இருப்பவர்கள் விடுவார்களா? ‘கை வலிக்குது கால் வலிக்குது’ என்று எதைச் சொன்னாலும் ‘ஸ்கூலுக்கு போய்ட்டு சாயந்திரம் வா..சரியா போய்டும்’ என்று துரத்தியடிக்கிறார்கள். திணறிக் கொண்டிருந்த சமயத்தில்தான் ‘அக்குளுக்குள் வெங்காயத்தை வைத்துக் கொண்டு படுத்தால் காய்ச்சல் வந்துவிடும்’ என்று ஒரு உளறுவாயன் சொன்னதை நம்பி வைத்துக் கொண்டு படுத்திருந்தேன். ராத்திரியில் தூங்கும் போது ட்ரவுசரே கழண்டு கிடக்கும். வெங்காயம் வைத்த இடத்திலேயே இருக்குமா? காலையில் படுக்கை முழுவதும் வெங்காயம் இறைந்து கிடப்பதைப் பார்த்த அப்பாவிடம் மொக்கு அடியாக வாங்கியதுதான் மிச்சம். அடி வாங்கினாலும் பரவாயில்லை. துளி காய்ச்சலாவது வந்திருக்க வேண்டுமல்லவா? ம்ஹூம். காய்ச்சலும் வரவில்லை. காக்காவும் வரவில்லை. (கா நெடில்தான்)

ஆறாம் வகுப்பில் வெள்ளியங்கிரி என்றொரு நண்பன் கிடைத்தான். என்னைவிட அவன் செமத்தியாக அடி வாங்குவான் என்பதால் எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். அவனிடம்தான் புலம்புவேன். நிறைய சூட்சுமங்களைச் சொல்லித் தருவான். ‘சிலம்புச் செல்வி கிள்ளுறப்போ வயித்தை இறுக்கி புடிச்சுக்குவேன்..அவளுக்கு தோலே சிக்காது..கிகிகி’ என்று இளிப்பான். அவன் பேச்சை நம்பி நானும் வயிற்றை எக்கினால் ‘ஓஹோ...வயித்தை உள்ள இழுத்துக்குவீங்களோ’ என்று இரண்டு விரலுக்கு பதிலாக ஐந்து விரலையும் வைத்துக் கிள்ளுவார் அந்த டீச்சர். ‘நாளைக்கு தலையில நல்லா எண்ணைய அப்பிட்டு வந்துடு...கண்ணம்மா அடிக்கிறதுக்கு முன்னாடி உள்ளங்கையில பூசிக்க..துளி கூட வலிக்காது’ என்று அவன் சொன்னதை நம்பி காது வரைக்கும் எண்ணெய் வழிய வந்து வகுப்பறையில் அமர்ந்திருப்பேன். தார் பூசினால் கூட அர்த்தமிருக்கிறது. எண்ணெய் பூசினால் வலிக்காமல் இருக்குமா? 

இப்படியாக தர்ம அடி வாங்கி வாங்கி இனிமேல் இவன் பேச்சைக் கேட்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்த போதுதான் ஒரு நல்ல திட்டத்தைச் சொன்னான். ‘இனிமே நாம ஸ்கூலுக்கே போக வேண்டாம்..சோத்துப் போசியைத் தூக்கிட்டு வாய்க்கா மேட்டுக்கு போய்டலாம்’ என்றான். அப்பொழுதெல்லாம் பள்ளியிலிருந்து வீட்டுக்கு கடிதங்கள் எதுவும் அனுப்பமாட்டார்கள். அதனால் அவன் சொன்னது நல்ல ஐடியாவாகத் தெரிந்தது. அடியிலிருந்து தப்பித்துவிடலாம். எங்கள் பள்ளிக்குள் நுழைந்து பிறகு வெளியேறுவது என்பது சாத்தியமில்லை. மணி அடித்தவுடன் கேட்டை மூடிவிடுவார்கள். அதனால் பள்ளிக்கு வருவது போல சீருடையில் கிளம்பி வீட்டில் இருப்பவர்களை ஏய்த்துவிட்டு வாய்க்காலுக்கு சென்றுவிடலாம் என்பதாக முடிவு செய்து கொண்டோம். 

முதல் நாள் வெகு சந்தோஷமாக இருந்தது. துணியைக் கழற்றி வைத்துவிட்டு மதியம் வரைக்கும் தண்ணீருக்குள் ஆடினோம். துணியோடு ஆடினால் ஈரம் காய்ந்தாலும் கண்டுபிடித்துவிடுவார்கள் என்பது முதற்காரணம். துண்டு அல்லது மாற்றுத் துணியெல்லாம் எடுத்து வந்தால் வீட்டில் சந்தேகம் வந்துவிடும். அதனால்தான் இந்த ஏற்பாடு. சுகவாசிகளாகத் திரிந்தோம். பசி வந்தவுடன் கொண்டு வந்திருந்த சாப்பாட்டை விழுங்கிவிட்டு மீண்டும் வாய்க்காலுக்குள் இறங்கினோம். இரண்டாவது மூன்றாவது நாட்களில் மதிய உணவுக்குப் பிறகு மரத்தடித் தூக்கம் என்று வழக்கத்தை மாற்றிக் கொண்டோம். இப்படித்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் வெள்ளியங்கிரி சொதப்பிவிட்டான். அந்தப் பக்கம் சில பெண்கள் வெள்ளாடு மேய்த்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் ஆறாவது படிக்கும் பொடியன்கள் என்பதால் துணி இல்லாமல் தண்ணீருக்குள் குதித்துக் கொண்டிருப்பதை பெரிதாக அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் வெள்ளியங்கிரி இதை அட்வாண்டேஜாக எடுத்துக் கொண்டு அந்தப் பக்கம் காற்றாடத் திரியத் தொடங்கியதும் ஆடு மேய்க்க வந்த ஒரு பெண்மணி ‘போய் ட்ரவுசரைப் போட்டுட்டு வா’ என்று சொல்லவும் ‘உங்கப்பன் ஊட்டு வாய்க்காலா? வேணும்ன்னா கண்ணை மூடிக்க’ என்று சொல்லிவிட்டான். அவனுக்கு வாய்க்கொழுப்பு ஜாஸ்தி. இதைச் சொல்லிவிட்டு வந்து சிரித்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண்மணி அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை என்பதால் சாதாரணமாக இருந்துவிட்டோம். ஆனால் கடுப்பான அவள் யாரிடமோ போட்டுக் கொடுத்துவிட்டாள் போலிருக்கிறது. மதிய வாக்கில் ஒருத்தன் - ஆஜானுபாகுவாக- இன்னமும் அவன் உருவம் ஞாபகத்தில் இருக்கிறது. ‘எவன் டா அம்மணமா சுத்துறது?’ என்று முரட்டு வாக்கில் வருகிறான். அவன் கத்திக் கொண்டு வருவது தெரிந்தவுடன் ஒரே ஓட்டம்தான். புத்தகப்பை, சாப்பாட்டுப் பை என எதையும் கவனிக்கவில்லை. ஆடையில்லாமல் இருக்கிறோம் என்பது கூட மறந்து போனது. மற்றதெல்லாமா ஞாபகம் வரும்? கருவேல மரங்களுக்குள் புகுந்து புகுந்து ஓடுகிறான். அவனைப் பின் தொடர்ந்து நானும் ஓடுகிறேன். 

‘டேய் கண்டபக்கம் முள்ளு குத்துதுடா’ என்று சொல்லிக் கொண்டே நான் ஓட ‘அவன்கிட்ட சிக்கினா அறுத்து மீனுக்கு வீசிடுவான்...கையை வெச்சு மறைச்சுட்டு ஓடியாடா’ என்று அவன் பதிலுக்குக் கத்திக் கொண்டே ஓடுகிறான். மீனுக்கு உணவிடுவதைவிட முள் கீறல்களைத் தாங்கிக் கொள்ளலாம் என்பதால் வெறித்தனமாக ஓடி முரடனின் கண் பார்வையிலிருந்து தப்பினோம். அதுவும் ஒரு முட்புதர்தான். உள்ளுக்குள் அமர்ந்திருந்த போது பயமாகவும் இருந்தது சிரிப்பாகவும் இருந்தது. ஆசுவாசப்படுத்திக் கொண்ட பிறகுதான் புத்தகப்பை எல்லாம் ஞாபகம் வந்தது. அவன் தூக்கிச் சென்றிருப்பான் என்று பயந்தபடிதான் திரும்ப ஓடினோம். வீட்டிலும் பள்ளியிலும் பதில் சொல்லி மாளாது என்பதுதான் பதற்றத்துக்கு காரணம். நல்லவேளையாக அவன் கண்களில் படாதபடிக்கு மரத்தடியின் கீழாக அவையெல்லாம் இருந்தன. எனது துணிமணிகளை புத்தகப்பையோடு சேர்த்து வைத்திருந்தேன். தப்பித்துவிட்டது. வெள்ளியங்கிரிதான் பாவம். கழற்றி மடித்து வாய்க்கால் ஓரமாகவே வைத்திருந்தான். அந்த ஆஜானுபாகுவான பார்ட்டி தூக்கிச் சென்றிருந்தான். எனக்கு அளவு கடந்த சந்தோஷம். முகத்தை கஷ்டப்பட்டு சோகமாக மாற்றிக் கொண்டு ‘இப்போ என்னடா பண்ணுறது?’ என்றேன். தலையில் வெடிகுண்டு விழுந்தவனைப் போல எதை எதையோ யோசிக்கத் தொடங்கியிருந்தான்.

Jul 28, 2015

அப்துல்கலாம்

அப்துல்கலாம் இறந்த பிறகு அவரைப் புகழ்ந்தும் பாராட்டியும் திரும்பிய பக்கமெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருமே பாராட்டுகிறார்கள் என்று சொல்ல முடியாது. விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன. படு மோசமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படுகின்றன. அவரை தேசியவாதிகளின் போலி முகம் என்றும் அவரைப் பயன்படுத்தி பார்ப்பனீய ஆதிக்க சக்திகள் இந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டன என்றெல்லாம் எழுதுகிறார்கள்.

ஏசுகிறவர்கள் எல்லாக் காலத்திலும் இருப்பார்கள். எல்லோரையும்தான் ஏசுவார்கள். 

இனம், மொழி, மதம் போன்ற வேறுபாடுகள் நிறைந்த இந்தியா போன்ற பெருந்தேசத்தில் டாக்டர். அப்துல்கலாம் மாதிரியான மகத்தான மனிதர்களின் வருகை மிக அவசியமானது மட்டுமில்லை- இன்றியமையாததும் கூட. 'இந்த உலகம் மோசமானது, வாழ்வதற்கே தகுதியில்லாதது, இங்கு எந்தத் தலைவனும் யோக்கியனில்லை' என்பது போன்ற அவநம்பிக்கைகள் சூழ்ந்திருந்த சமயத்தில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படித்துக் கொண்டிருந்த லட்சக்கணக்கான மாணவர்களுக்குள் பாஸிடிவ் எனெர்ஜியை விதைத்தவர் அப்துல்கலாம். தனது எளிய குடும்பப் பின்னணியைச் சுட்டிக் காட்டி அடுத்த தலைமுறைக்கான விதையைத் தூவியவர் அவர். தான் செல்லுகிற இடங்களிலெல்லாம் இந்த தேசத்தால் சாதிக்க முடியும் என்று அதற்கு நீங்கள் தோள் கொடுக்க வேண்டும் என்றும் இளம் சமுதாயத்திற்கு திரும்பத் திரும்ப நினைவூட்டியவர் கலாம். தன்னை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்ளச் சொன்னதோடு மட்டுமில்லாமல் அதற்கு ஏற்றபடி வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். 

சுதந்திரப் போராட்ட காலத்தில் பிராந்திய வேறுபாடுகளை மறந்து பெரும்பாலான மக்கள் காந்தியடிகள் என்ற ஒரு புள்ளியை நோக்கி நகர்ந்தார்கள் என்றால் கி.பி.2000த்தின் காலகட்டத்தில் இந்த தேச மக்கள் அப்துல்கலாமை நோக்கி குவிந்தார்கள் என்றால் மிகையில்லை. ஆனால் பதறிய சில அரசியல்வாதிகள் குவிதலை உடைத்துவிட பெரும் பிரயத்தனப்பட்டு வெற்றியடைந்தார்கள் என்பதை வரலாறு பதிவு செய்யக் கூடும். ஆனால் அதற்காகவெல்லாம் அவர் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் பறந்து கொண்டேதான் இருந்தார். தொடர்ந்து அடுத்த தலைமுறையிடம் பேசிக் கொண்டேதான் இருந்தார்.

கலாமின் இந்திய வல்லரசுக் கனவும் அவரது அறிவியல் காதலும் இந்தியாவோடு ஒட்டிக் கொள்ள விரும்பாத சிலருக்கு உவப்பானதாக இல்லாதிருக்கலாம். ஆனால் அதை விமர்சிக்கக் கூடிய நேரம் இதுவன்று. தனது எழுபதாவது வயது வரைக்கும் அவர் மக்கள் மன்றத்தில் அறிமுகமே ஆகியிருக்கவில்லை. அடுத்த பதினந்து வருடங்களில் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் நிறைந்திருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். எப்படி சாத்தியமானது? அவர் இருந்த பதவியின் காரணமாக மக்கள் விரும்புகிறார்கள் என்று சொல்வீர்களா? அப்படியென்றால் பிரதீபா பாட்டிலைத்தான் நாம் கொண்டாட வேண்டியிருக்கும். கலாம் குடியரசுத் தலைவராக இல்லாமலிருந்திருந்தாலும் கூட இதே செல்வாக்கோடுதான் இறந்திருப்பார் என்பதுதான் நிதர்சனம். இவ்வளவு செல்வாக்கை அப்துல்கலாம் பெறுவதற்கான காரணம் மிக எளிமையானது. அவர் நேர்மையானவராக இருந்தார். one of the rarest quality in these days!

அப்துல்கலாமின் கருத்துக்களில் நமக்கு முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் தனக்குத் தோன்றியதை தனது மனசாட்சிக்கு ஒப்ப மிக நேர்மையாக முன் வைத்தார். இங்கு எத்தனை தலைவர்கள் தங்களின் சொல்லுக்கும் செயலுக்கும் கருத்துக்கும் உண்மையாக இருக்கிறார்கள்? அப்துல்கலாம் இருந்தார் என்று உறுதியாகச் சொல்ல முடியும். அந்த நேர்மைதான் அவரை மக்கள் இதயங்களை வென்றெடுத்தவராக மாற்றியிருக்கிறது. அவர் நினைத்திருந்தால் கடைசி காலம் வரைக்கும் ஓய்வு என்ற பெயரில் காலை நீட்டிக் கொண்டு படுத்திருக்க முடியும். அவர் அதைச் செய்யவில்லை. எண்பத்து மூன்று வயதிலும் கூட கல்லூரியில் உரை நிகழ்த்துவதற்காகத்தான் சென்றிருக்கிறார். இந்த பயணங்களினாலும் மேடைகளில் அவர் நிகழ்த்திக் கொண்டிருந்த உரைகளினாலும் அவருக்குத் தனிப்பட்ட எந்தப் பலனுமில்லை. இருந்தாலும் அவரது அயராத இந்த உழைப்பைத்தான் இப்பொழுது மக்கள் கொண்டாடுகிறார்கள்.

சொத்து சேர்த்தாரில்லை; தன் குடும்பம் பிள்ளை பெண்டு என்று மேடேற்றினாரில்லை; அண்ணன் தம்பி அக்கா தங்கை என்று கூட்டம் சேர்த்துக் கொண்டாடினாரில்லை- அவர் மீண்டும் மீண்டும் பதவி சுகம் தேடத் தெரியாத மனிதராக இருந்திருக்கலாம். அரசியல் சாணக்கியத்தனமில்லாத தலைவராக இருந்திருக்கலாம். ஆனால் அவரது நேர்மைக்காவும் இந்த தேசம் குறித்தான அவரது கனவுகளுக்காகவும் இளைஞர்களிடமும் குழந்தைகளிடமும் அவர் ஏற்படுத்திய உத்வேகத்திற்காகவும் காலம் அவரை மறக்கடிக்காமல் வைத்திருக்கும்.

கலாமிடமிருந்து குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டுமானால் அவரது நேர்மையையும் உழைப்பையும் நம்பிக்கையையும் எளிமையையும் மாறாத புன்னகையையும் சொல்லித் தரலாம். எதிர்மறை எண்ணங்களைத் துளைத்து மேலெழும்பும் வெளிச்சம் என அவரைக் காட்டலாம். அதுதான் இன்றைய காலகட்டத்தின் அவசியம். அதைத்தான் டாக்டர் கலாம் விட்டுச் சென்றிருக்கிறார்.

தனக்கு முழுமையாக ஒத்துவரும் கருத்தியல்வாதம் கொண்ட மனிதர்களின் இறப்புக்கு மட்டும்தான் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நினைத்தால் அவரவர் மறைவுக்கு அவரவர் மட்டும்தான் அஞ்சலி செலுத்த வேண்டியிருக்கும். Emotional Fools என்று யாரோ சொல்லிவிட்டு போகட்டும். ஆனால் அதைப் பற்றிய கவலை இல்லை. கலாம் இளைஞர்களை நோக்கி பேசத் தொடங்கிய போது நான் வாழ்க்கையை தேடத் தொடங்கியிருந்தேன். அவரது பேச்சும் எழுத்தும் நோக்கமும் என்னவிதமான மாறுதல்களை எனக்குள் உருவாக்கின என்று யோசித்துப் பார்க்கிறேன். என்னைப் போலவே லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளிலும் கற்பனைகளிலும் டாக்டர் அப்துல்கலாம் ஊற்றிவிட்டுச் சென்றிருக்கும் வண்ணக்கலவை மின்னிக் கொண்டிருக்கக் கூடும். அவர்களின் சார்பாக அப்துல்கலாமை நினைத்துக் கொள்கிறேன். இந்த தேசத்தின் அடுத்த தலைமுறையின் கண்களில் வெளிச்சத்தை வரவழைத்தவர் என்ற முறையில் கலாம் அவர்களுக்கு மனப்பூர்வமான அஞ்சலி. 

பிஞ்சு

தியாஸ்ரீக்கு நான்கு வயதாகிறது. அப்பா ஆட்டோ ஓட்டுநர். ஆறு மாதத்திலேயே அவளுக்கு ரத்தச் சோகை இருப்பதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். உடலில் சிவப்பணு உற்பத்தியாவதில்லை. எலும்பு மஜ்ஜயை மாற்றி வைப்பதுதான் வழி. நோயின் பெயர் தாலசீமியா. முப்பது லட்சம் ரூபாய் வரைக்கும் செலவாகும். ஆட்டோ ஓட்டுநருக்கு இது பெரிய தொகைதான். ஆனாலும் அலையத் தொடங்கியிருக்கிறார். ரத்த பந்தத்திலேயே வழங்குநர்(Donor) இருந்துவிட்டால் செலவு குறைவாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் யாருடைய மஜ்ஜையும் ஒத்து வரவில்லை. இன்னொரு குழந்தை பிறக்கும் வரை காத்திருக்கிறார்கள். அந்த குழந்தையின் மஜ்ஜை ஒத்து வருவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவரக்ள் சொல்லியிருந்தார்களாம். அந்தக் குழந்தை பிறந்த பிறகு சோதனை செய்து பார்த்துவிட்டார்கள். அதுவும் ஒத்து வரவில்லை என்பதால் முப்பது லட்சம் புரட்டியே தீர வேண்டிய சூழல் அமைந்துவிட்டது.

போகுமிடங்களுக்கெல்லாம் குழந்தையையும் அழைத்துக் கொண்டே செல்கிறார்கள்.


சனிக்கிழமையன்று(ஜூலை 25, 2015) அழைத்திருந்தார்கள். அதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே தியாஸ்ரீயின் மருத்துவ ஆவணங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். அவர்கள் அழைத்திருந்த சமயத்தில் நான் கோபியில் இருப்பதாகச் சொன்னவுடன் கிளம்பி வருவதாகச் சொன்னார்கள். ஆவணங்களை அரசு மருத்துவர் சிவசங்கரிடம் காட்டியிருந்தேன். அவர் ஆவணங்களை சரி பார்த்திருந்தார். குழந்தையின் சார்பில் யாராவது ஒருவர்தான் வருவார் என்றும் அவர்களிடம் காசோலையை ஒப்படைத்துவிடலாம் என்றும் நினைத்திருந்தேன். ‘புத்தகக் கண்காட்சியில்தான் சாயந்திரம் வரைக்கும் இருப்பேன். இங்க வாங்க...இங்க இருந்து வீட்டுக்கு போய்விடலாம்’ என்று சொல்லி வைத்திருந்தேன். காசோலைப் புத்தகம் வீட்டில் இருந்தது. ஆனால் குழந்தையையும் சேர்த்து அழைத்து வந்திருந்தார்கள்.

இந்தக் குழந்தைக்குதான் இருபது நாட்களுக்கு ஒரு முறை ரத்தம் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் எப்படியும் மூன்றிலிருந்து ஐந்தாயிரம் வரை செலவு பிடிக்கிறது என்றார்கள். குழந்தை ஆரோக்கியமாகத்தான் தெரிகிறது. புத்தகக் கண்காட்சிக்கு மருத்துவர் சிவசங்கரும் வந்திருந்தார். ‘இரத்த சிவப்பணுக்கள் இயற்கையாகவே உருவாவதில்லை என்பதால் இரத்தம் செலுத்த வேண்டும் என்பதைத் தவிர இப்போதைக்கு வேறு எந்தச் சிக்கலும் இருக்காது’ என்று சிவசங்கர் சொன்னார். அப்படி செலுத்தாமல் விட்டுவிட்டால் குழந்தை மயங்கி விழத் தொடங்குவாளாம். அதைத்தான் அவளது பெற்றோரும் சொல்லியிருந்தார்கள்.

அறுவை சிகிச்சையின் செலவுகளுக்காக இதுவரைக்கும் இருபது லட்ச ரூபாய் சேர்த்துவிட்டார்கள். அத்தனையும் நன்கொடைதான். ‘நாங்கள் இவ்வளவு தொகை சேர்த்ததே ஆச்சரியம்தான்’ என்றார்கள். அப்பல்லோவில் மருத்துவர் ரேவதி ராஜ்தான் சிகிச்சையளிக்கிறார். அவரிடம் இருபது லட்சத்தை நெருங்கிவிட்ட தகவலைச் சொல்லியிருக்கிறார். ‘இருபதைத் தொட்டவுடன் மருத்துவமனையில் அனுமதித்துவிடுங்கள். அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளைத் தொடங்கிவிடலாம்’ என்று மருத்துவர் சொல்லியிருக்கிறார். அந்த இறுதிக்கட்ட நடவடிக்கையாகத்தான் கோபிக்கு வந்திருந்தார்கள்.

அவர்கள் வந்து சேர்ந்த போது மேடையில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசிக் கொண்டிருந்தார். குழந்தையை அழைத்து வருவார்கள் என்று எதிர்பாத்திருக்கவில்லை என்பதால் ‘குழந்தையை எதுக்காக அலைக்கழிக்கறீங்க?’ என்றதற்கு அவர்களிடம் பதில் இல்லை. ‘குழந்தையைப் பார்த்தாத்தான் நம்புறாங்க’ என்றார்கள். வருத்தமாக இருந்தது. புத்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர் திரு.குமணனிடம் வீடு வரைக்கும் சென்று வருவதாகச் சொன்ன போது காரணம் கேட்டார். சொன்னேன். ‘அடிகளார் கிட்ட கொடுத்து கொடுக்கச் சொல்லுறதுல உங்களுக்கு சங்கடமா?’ என்றார். இதில் எனக்கு என்ன சங்கடம் இருக்கிறது. ‘அதெல்லாம் ஒண்ணுமில்லங்கண்ணா’ என்றேன். குழந்தைகளின் பெற்றவர்களும் அதை எதிர்பார்த்தார்கள். அடிகளார் பேசி முடிப்பதற்குள்ளாக வீட்டிலிருந்து காசோலையை எடுத்து வந்திருந்தேன். அவர் பேசி முடித்தவுடன் மேடையில் அறிவித்தார்கள்.

குழந்தையும் அவளது பெற்றோரும் மேடை ஏறினார்கள். அடிகளார் தனது துண்டு நுனியில் முடிந்து வைத்திருந்த திருநீறைக் குழந்தைக்கு பூசிவிட்டு பழம் ஒன்றைக் கொடுத்து ஆசிர்வதித்தார். அப்பல்லோ மருத்துவமனையின் பெயரில் ரூபாய் ஐம்பதாயிரத்துக்கான காசோலையை எழுதி வைத்திருந்தேன். அது அடிகளார் அவர்களால் குழந்தையின் கைகளில் வழங்கப்பட்டது.

காசோலை வழங்கிய நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர்கள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.  தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதெல்லாம் அந்தக் குழந்தைக்கு தெரியவில்லை. பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க குழந்தை மிக இயல்பாக விளையாடிக் கொண்டிருந்தது. தனது கனவுகளையும் கற்பனைகளையும் அது தூக்கிச் சுமந்தபடி அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஆனால் மொத்த வலியையும் வேதனையையும் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு கடத்திக் கொண்டிருந்தாள். 

கொஞ்ச நேரம் பேசிவிட்டுக் கிளம்பினார்கள்.

பிஞ்சுக் குழந்தைகளுக்கு வரக் கூடிய நோய்மைதான் மிகுந்த பீதியூட்டுவதாக இருக்கிறது. அவர்கள் சென்ற பிறகும் மனம் இனம்புரியாத பதற்றத்திலேயே இருந்தது. தனது உயிர் அரிக்கப்படுவது தெரியாமலேயே விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குழந்தைக்கு பணம் கொடுப்பதைவிடவும் அடுத்தவர்களின் ஆசியும் பிரார்த்தனையும்தான் அவசியம் எனத் தோன்றியது. அது அவளை காப்பாற்றிவிடும் என்னும் நம்பிக்கையிருக்கிறது.

Jul 27, 2015

திருட்டு

சனிக்கிழமையன்று ஊருக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வந்திருந்தார். புத்தகக் கண்காட்சி நடக்கும் அதே வளாகத்தில் திருக்குறள் பேரவை சார்பில் அவரது உரை நிகழ்வதாக இருந்தது. அடிகளார் வருவதற்கு முன்பாகவே ஒரு பள்ளியிலிருந்து மாணவர்களை அழைத்து வந்திருந்தார்கள். முன்பொரு காலத்தில் நன்றாக இருந்த பள்ளி அது. இப்பொழுது தலைமையாசிரியர்கள் மாறி மாறி யாரும் உருப்படியாக்கிய மாதிரி தெரியவில்லை. பழைய பெருங்காய டப்பா என்று கூடச் சொல்ல முடியாது. அதில் குறைந்தபட்சம் வாசமாவது வந்து கொண்டிருக்கும். இந்தப் பள்ளியைப் பொறுத்தவரை இப்பொழுது அதுவுமில்லை.

‘நல்லா படிக்கிற பசங்க எல்லாம் ப்ரைவேட் ஸ்கூலுக்கு போயிடுறாங்க’ என்று சாக்கு சொல்கிறார்கள். ‘உங்க பள்ளிக்கூடம் நல்லா இருந்தா அவங்க ஏன் ப்ரைவேட் ஸ்கூலுக்கு போறாங்க’ என்று கேட்கலாம்தான். 

தொலையட்டும்.

வரிசையில் நன்றிருந்த பையன்கள் புத்தகக் கண்காட்சியின் வளாகத்திற்குள்ளும் வரிசைக்கிரமமாகவே சென்றார்கள். இருபத்தைந்து கடைகள்தான். உள்ளே சென்றவர்கள் அரை மணி நேரத்தில் வரிசையாகவே வெளியே வந்தார்கள். அவர்கள் வெளியேறிய அடுத்த சில நிமிடங்களில் ஒரு புத்தகக் கடைக்காரரும் பின்னாலேயே ஓடி வந்தார். அவ்வளவு பதற்றம் அவர் முகத்தில். என்னவோ ஆகிவிட்டது போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த போதே நிற்காமல் மூச்சிரைக்க ஓடியவர் பள்ளியின் பொறுப்பாளரை நெருங்கி கிட்டத்தட்ட அழத் தொடங்கியிருந்தார்.

‘சார் ஒரு பொட்டி நிறைய புஸ்தகங்களை வெச்சிருந்தேன். இப்போ ஒரு புஸ்தகத்தையும் காணோம்’

அந்தப் பொறுப்பாளருக்கு வாயெல்லாம் பற்கள். ‘அப்படியா?’

‘ஆமா சார்...எங்க ஆளுங்க பில்லே போடலை...நான் கேஷூவலா பொட்டியைப் பார்த்தேன்..உள்ள ஒண்ணுமே இல்ல’

‘பசங்க தூக்கிட்டாங்கன்னு சொல்லுறீங்களா?’

‘வேற யாருமே உள்ள வரல..அப்படியே வந்திருந்தாலும் ஒண்ணு ரெண்டு காணாம போகும்...ஆனா இப்படி பொட்டியே காணாம போகாது’

‘நம்ம பசங்க அப்படியெல்லாம் திருட மாட்டாங்களே’ என்று பள்ளி பொறுப்பாளர் வாயிலேயே சான்றிதழ் எழுதினார்.

‘சார்...நாங்களே அரைக்காசும் ஒரு காசுமாக வியாபாரம் பண்ணிட்டு இருக்கோம்....கொஞ்சம் கோ-ஆபரேட் செய்யுங்க’

பள்ளியின் பொறுப்பாளர் மறுக்கவில்லை. மாணவர்களை வரிசையில் நிறுத்தினார்கள். திருடர்களை வரிசையாக நிறுத்தினால் ‘சிக்கிக் கொள்வோமோ என்னவோ’ என்கிற பயம் துளியாவது இருக்கும். ஆனால் இந்த மாணவர்கள் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை. பில் இல்லாத புத்தகங்களை எல்லாம் திரும்ப வாங்கினார்கள். பையன்கள் சிரித்துக் கொண்டே திரும்பத் தந்தார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு கூட திருடிச் சிக்கினால் ஆசிரியர்கள் தோலை உரித்துவிடுவார்கள். ஆனால் எந்தச் சலனமும் இல்லாமல் இந்த நிகழ்வு நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட நான்கைந்தாயிரம் ரூபாய்க்கான புத்தகங்களை அந்தப் பையன்கள் அடித்திருந்தார்கள். 

மிகச் சிறிய புத்தகக் கண்காட்சி அது. ஒரே நாளில் நான்காயிரம் ரூபாய் திருட்டு என்பது அந்தக் கடைக்காரருக்கு மிகப்பெரிய இழப்பாக மாறியிருக்கக் கூடும். அவருடை நேரம் நன்றாக இருந்திருக்கிறது. பிடித்துவிட்டார்கள். ஒரு பையன் தெனாவெட்டாக ‘சார் இது காசு கொடுத்துத்தான் வாங்கினேன்’ என்றான். அவனிடம் வேறு புத்தகம் எதுவுமில்லை. கடைக்காரர் புத்தகத்தை கையில் வாங்கிக் கொண்டு ‘பில் எங்கப்பா?’ என்றார்.

‘அங்கேயே வீசிட்டேன்’

சற்று குழம்பிய கடைக்காரர் ‘சரி..இந்தப் புத்தகத்துக்கு எவ்வளவு கொடுத்த?’ என்றார்.

‘நூறு ரூபாய்’

கடைக்காரர் பள்ளியின் பொறுப்பாளரிடம் திரும்பி ‘புத்தக விலை நூற்றியருபது ரூபாய்...இவன் நூறு ரூபாய் கொடுத்தேன் என்கிறான்...கப்ஸா அடிக்கிறான் சார்’ என்றார்.

பொறுப்பாளருக்கும் தர்ம சங்கடம்தான். புத்தகத்தை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டார். இப்படியாக திருட்டை மீட்கும் வைபவம் நடந்து முடிந்தது. திருடப்பட்டிருந்த புத்தகங்களில் பெரும்பாலானவை சினிமா சம்பந்தப்பட்டவை. சினிமா என்பதற்காகத் திருடினார்களா அல்லது அவைதான் திருடுவதற்கு தோதாக இருந்தது என்பதால் திருடினார்களா என்று தெரியவில்லை. ஆனால் திருட்டு நடந்திருந்தது. மாணவர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டதையும் அவர்களிடமிருந்து புத்தகங்கள் திரும்பப் பெறப்பட்டதையும் அந்த வளாகத்தில் இருந்தவர்கள் நிறையப் பேர்கள் பார்த்தார்கள். ஆனால் எந்தக் கூச்சமுமில்லாமல் அந்த மாணவர்கள் எப்பொழுதும் போல சிரித்தும் கும்மாளமிட்டபடியும் இருந்தார்கள்.

ஆசிரியர்கள் கண்டிக்கவில்லை. இப்பொழுதுதான் எந்த ஆசிரியரும் கண்டிப்பதில்லையே!

படிப்பு ஒரு பக்கமிருக்கட்டும். ஆனால் இளம் வயதில் ஒழுக்கம் என்பது அவசியமில்லையா? இளம்பிராயத்தில் எவ்வளவு ஒழுக்கத்தை புகட்ட முடியுமோ அவ்வளவு ஒழுக்கத்தை புகட்டிவிட வேண்டும். வயது கூடக் கூட லெளகீக வாழ்வின் நெருக்கடிகள், பொருளாதாரச் சிக்கல்கள் போன்றவைகளின் காரணமாக ஒழுக்கம் நெகிந்து போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அது இயல்பானதும் கூட. ஆனால் ஒவ்வொரு ஒழுக்க மீறலின் போதும் துளியாவது குற்றவுணர்ச்சி அரிக்கக் கூடும் என்பதால் நம்முடைய எல்லை மீறல்ல்கள் ஓரளவு சுயகட்டுப்பாட்டோடு இருக்கும். அதற்காகத்தான் பள்ளிப்பருவத்தின் ஒழுக்க விதிகள் மிக முக்கியமானவை. அதனால்தான் மாணவர்கள் கட்டுப்பாட்டோடு வளர வேண்டும் என்பார்கள். 

இப்பொழுது நிலைமை அப்படியா இருக்கிறது? 

எந்தவிதமான ஒழுக்க உணர்வுமில்லாமல் இளம் சமுதாயத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறோம். திருட்டும், வன்முறையும், முரட்டுத்தனமும், பித்தலாட்டமும் நிரம்பிய சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அரசு பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்- மாணவர்களை மிரட்டக் கூடாது, அடிக்கக் கூடாது என்றெல்லாம் ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன என்றால் தனியார் பள்ளிகளில் வேறு விதமான ஒழுக்க மீறல்கள் நிகழ்கின்றன. அரசுப் பள்ளிகள் சனிக்கிழமையன்று அல்லது அரசு விடுமுறை தினங்களின் போது வகுப்புகளை நடத்தினால் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து மெமோ அனுப்பப்படும். ஆனால் தனியார் பள்ளிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வகுப்பு நடத்துவார்கள். ஞாயிறன்று மாணவர்கள் சீருடையோடு சாலைகளில் நடமாடினால் யாராவது கேள்வி கேட்கிறார்கள் என்று வண்ண உடையில் வரச் சொல்கிறார்கள். எதற்காக இந்தத் திருட்டுத் தனத்தைச் செய்கிறோம் என்று மாணவர்களுக்கும் தெரியும். அப்புறம் எப்படி அவர்களிடம் ஒழுக்கம் வளரும்? மதிப்பெண்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மனநிலை உருவாக்கப்படுகிறது. வளரும் போது இந்த விதிமீறல் வேறொரு வடிவம் பெற்று ‘நம் செளகரியத்துக்காக எந்த வரைமுறைகளையும் மீறலாம்’ என்கிறார்கள்.

ஒழுக்கம் என்றால் இராணுவ ஒழுங்கோடு இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மாணவர்களிடையே குறைந்தபட்ச நேர்மை, குறைந்தபட்ச அறவுணர்ச்சி, சக மனிதன் மீதான குறைந்த பட்ச மரியாதை, குறைந்தபட்ச உண்மை என்பனவாவது ஊட்டப்பட வேண்டும். ஆனால் இந்த உலகம் போட்டிகளால் நிரம்பியது என்ற சாக்குப் போக்கைச் சொல்லிச் சொல்லியே எல்லாவிதமான ஒழுக்க மற்றும் விதிமீறல்களைச் செய்வதற்கு நாமும் எத்தனிக்கிறோம் நம் குழந்தைகளையும் அனுமதிக்கிறோம். இவற்றை நாம் வேண்டுமென்றே செய்வதில்லை. நம்மையுமறியாமல்தான் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதன் பின்விளைவுகளை நாம் ஏற்கனவே உணரத் தொடங்கிவிட்டதைத்தான் இத்தகைய பிஞ்சுத் திருட்டுக்களும் அதைப் பற்றிய எந்த பதைபதைப்புமில்லாத சூழலும் காட்டுகின்றன.

மருத்துவர்கள்

மருத்துவர்களின் மகத்துவத்தை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. அதுவும் சமூக ஊடகங்களின் பெருக்கத்திற்கு பிறகு அவர்களின் மீது ஏதாவதொரு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டிருக்கிறோம். காசு பறிக்கிறார்கள் என்பதோ மருத்துவர்கள் எந்திரத்தைப் போல மாறிவிட்டார்கள் என்பதோ நம்முடைய முக்கியமான குற்றச்சாட்டாக மாறியிருக்கிறது. இருபது வருடங்களுக்குப் முன்பு வரைக்கும் கூட பொதுவெளி விவாதங்களில் பெரும்பான்மையைப் பற்றித்தான் பேசுவார்கள். பத்து நல்லவர்களுக்கிடையில் ஒரு தீயவன் இருந்தால் தீயவனைத் தவிர்த்துவிட்டு நல்லவர்களைப் பற்றி பேசுவதை கவனித்திருக்கிறேன். இப்பொழுது உல்டா. ஆயிரம் நல்லவர்களுக்கிடையில் ஒரேயொரு தீயவன் இருந்தால் அவனைப் பற்றித்தான் புரட்டியடிப்போம். மற்றவர்களைக் கண்டு கொள்ளமாட்டோம். குறைகளைப் பிரதானப்படுத்தும் Social Media era!

மருத்துவர்களிலும் அப்படித்தான். விதிவிலக்குகளை மட்டுமே பிரதானப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. நெருங்கிய உறவொன்று மருத்துவமனையின் ஐசியூவுக்குள் கிடக்க வெளியில் காத்திருக்க வேண்டிய அந்தத் தருணத்தில் உணர முடியும்-  மருத்துவர்களின் மகத்துவத்தை. அதைப் போன்ற வேதனை நிறைந்த நேரம் என்று வேறு எதையும் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. மருத்துவத் துறை எவ்வளவோ வளர்ச்சியடைந்துவிட்டது. இருந்தாலும் மருத்துவமனைக்குள் நம்முடைய பதற்றங்கள் தணிவதேயில்லை. அவர்கள் கை வைப்பது ரத்தமும் சதையுமான நம்முடைய உறவல்லவா? விபத்து, காய்ச்சல் என்பதெல்லாம் இருக்கட்டும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் போது காத்திருப்பவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? அதுவே இருதய மாற்று அறுவை சிகிச்சை என்றால்? கரணம் தப்பினால் மரணம். 

முப்பது வருடங்களுக்கு முன்பாக போலந்து நாட்டில் இருதய அறுவை சிகிச்சைக்கு அவ்வளவு சீக்கிரம் அனுமதி கிடைக்காது. போலந்து நாட்டில் மட்டுமில்லை உலகம் முழுக்கவுமே அப்படித்தான். இருதய மாற்று அறுவை சிகிச்சையெதுவும் வெற்றிகரமாக நிரூபிக்கப்படாத சமயம் அது. அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்தி வருவதோடு சரி. இந்தச் சூழலில் ரெலிகா என்றொரு மருத்துவர் துணிந்து சில இருதய அறுவை சிகிச்சைகளைச் செய்தார். முதல் சில அறுவை சிகிச்சைகள் தோல்விதான். இருதய சிகிச்சையில் தோல்வி என்றால்? பரலோக பதவிதான். நோயாளிகள் இறந்து போகிறார்கள். ஆனால் தொடர் முயற்சியில் வெற்றியடைகிறார். இடையில் அவர் சந்தித்த எதிர்ப்புகளும் தடைகளும் வெளியில் தெரியாதவை. சிரமப்பட்டுத்தான் தடைகளை உடைத்திருக்கிறார். அந்த ரெலிகாவின் கதையை அடிப்படையாகக் கொண்டு போலிஷ் மொழிப் படம் ஒன்று வந்திருக்கிறது. Bogowie. 

எண்பதுகளில் நடக்கும் கதை. நடிகர்களின் கிராப்பிலிருந்து பயன்படுத்தும் கார் வரைக்கும் அந்தக் காலகட்டத்திற்கு ஏற்பத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ரெலிகாவாக நடித்திருப்பவர் அட்டகாசப்படுத்தியிருக்கிறார் என்று தயங்காமல் சொல்லலாம். நெடுநெடுவென்று உயரம். தலையைச் சாய்த்தபடி நடப்பதும், சிரத்தையேயில்லாமல் சிகரெட் பிடிப்பதும், படு இயல்பாக நோயாளியின் நெஞ்சைக் கிழிப்பதுமாக ஒரு ஐரோப்பிய மருத்துவரைக் கண் முன்னால் நடமாடச் செய்கிறார். 

ஆரம்பத்தில் ரெலிகா ஒரு மருத்துவமனையில் வேலை செய்கிறார். அது போலந்து தலைநகரம் வார்ஸாவில் இருக்கிறது. ஆனால் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் எந்த முடிவையும் துணிந்து எடுப்பதில்லை. எல்லாவற்றிலும் ஒரு தயக்கமும் பயமும் அவருக்கிருக்கிறது. ரெலிகா அவருக்கு அப்படியே எதிர்பதமாக இருக்கிறார். எல்லாவற்றிலும் துணிந்து அடிக்கிறார். சடாரென்று நோயாளியின் இருதயத்தை மாற்றி வைக்க வேண்டும் என கேட்கிறார். அதிர்ச்சியடையும் தலைமை மருத்துவர் ‘நான் இருக்கிற வரைக்கும் அனுமதிக்க மாட்டேன்’ என்கிறார். ரெலிகாவுக்கு பயங்கரக் கடுப்பு. இந்தச் சமயத்தில் வார்ஸாவிலிருந்து சற்று தள்ளியிருக்கும் ஒரு நகரத்தில் இருதய சிகிச்சைக்கான மருத்துவமனை தயாராகிக் கொண்டிருக்கிறது. ‘தலைமை மருத்துவராகச் செல்ல உங்களுக்கு விருப்பமா?’ என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லும் மனைவியை முறைத்துவிட்டு அந்த ஊருக்குச் செல்வதற்கான சம்மதத்தைத் தெரிவிக்கிறார். அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது- அது ஒரு வசதியுமில்லாத மருத்துவமனை என்று. அப்பொழுதுதான் கட்டிட வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் சோப்பலாங்கித்தனமாக படு மெதுவாக வேலை நடக்கிறது. அதற்குள் ரெலிகாவுடன் வேலை செய்வதற்காக புது ஆட்கள் ஒவ்வொருவராக வந்து சேர்கிறார்கள். அனுபவமில்லாத மருத்துவ அணி தயாராகிவிட்டது. ஆனால் மருத்துவமனையைக் கட்டி முடிப்பதற்கான நிதி ஆதாரம்தான் இல்லை. ரெலிகா அலைந்து திரிந்து பணத்தை தயார் செய்கிறார். 

பணம் தயாரான பிறகு தன்னுடைய அணியை வைத்தே மருத்துவமனையைத் தயார் செய்கிறார். ஆண் மருத்துவர்கள் டைல்ஸ் ஒட்டுகிறார்கள். செவிலியர்கள் கண்ணாடிகளைக் கழுவி சுத்தம் செய்கிறார்கள். மருத்துவமனை தயாராகிறது. அடுத்தது நோயாளிகளுக்கு தேவையான இருதயத்தை வழங்கக் கூடிய மூளைச்சாவடைந்த நன்கொடையாளர்களைப் தேடுவதும், அவர்களின் உறவினர்களிடம் அனுமதி வாங்குவது என்று இன்னொரு அலைச்சல். இதெல்லாம் ஒத்து வந்த பிறகு அறுவை சிகிச்சை. தொடர்ந்து ஒன்றிரண்டு தோல்விகளும் அதன் பிறகான வெற்றியும் ரெலிகாவை உலகின் மருத்துவ வரலாற்றில் அழிக்கவியலாத இடம் பெறச் செய்கின்றன. இதற்கிடையில் அவர் சந்திக்கும் விசாரணைக் கமிஷன்களும் எதிர்கொள்ளும் விமர்சனங்களுமாக படம் நகர்கிறது. 

2014 ஆம் ஆண்டில் வெளி வந்த படம் இது. இரண்டரை மணி நேரப் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பில்லாமல்தான் பார்க்கத் துவங்கியிருந்தேன். ஆனால் சிலிர்க்கச் செய்துவிட்டார்கள். படத்தில் செண்டிமெண்ட் உண்டு; நகைச்சுவை உண்டு ஆனால் எதுவுமே துருத்திக் கொண்டு நிற்பதில்லை. இருதயம் செயலிழந்து இறந்து போகும் சிறுமியும் அவளுடைய கடைசி உரையாடலும் நெகிழச் செய்கின்றன என்றால் பைக் விபத்தில் மூளைச் சாவை அடையும் இளைஞனின் அம்மாவும் அப்பாவும் கண்ணீர் கசிய வைக்கிறார்கள்.

புதிய மருத்துவமனையின் முதல் அறுவை சிகிச்சையை நடத்தித் தருவதற்கு தனது பழைய தலைமை மருத்துவரை ரெலிகா அழைக்கிறார். ‘இந்த மாதிரி சிம்பிளான ஆபரேஷனை செய்யறதுக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதீங்க..இந்த ஆபரேஷனையெல்லாம் பேஷண்ட்டே கூட செஞ்சுக்கலாம்..அவ்வளவு ஈஸி’ என்று நெஞ்சில் கத்தியை வைக்கிறார். மின்சாரம் போய்விடுகிறது. black humour காட்சி அது. ‘இதயத்தை மாத்தினா என் புருஷன் என்னை மறந்துடுவானா?’ என்று கேட்கும் பெண்ணுக்கும் படத்தில் இடம் உண்டு. அவசரத் தேவைக்காக பன்றியின் இருதயத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று ரெலிகா சொல்ல பன்றியோடு போராடும் உதவி மருத்துவர்களும் படத்தில் உண்டு. அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் இதயத்தை எடுத்துவிட்டு புதிய இதயத்தை வைக்கும் இடைப்பட்ட நேரத்தில் ‘இப்போ இவன் heartless' என்று சிரிப்பே வராத ஆனால் அர்த்தம் பொதிந்த ஜோக்கை ரெலிகா உதிர்க்கிறார். இப்படி படம் முழுக்கவுமே சுவாரசியங்களை நிறைத்து வைத்திருக்கிறார்கள். 

இதை ஒரு தனிமனிதனின் வாழ்க்கை சார்ந்த படம் என்று சொல்லிவிட முடியாது. ஒரு மருத்துவ வரலாறின் படம். அதை இவ்வளவு சுவாரசியமாகவும் பார்வையாளனைப் பிணைக்கும்படியும் படமாக்கியிருப்பது பெரிய விஷயம். மருத்துவம் சார்ந்த உலகத் திரைப்படங்களில் இந்தப் படத்துக்கு நிச்சயமான இடம் உண்டு. திரைக்கதையும் இசையும் நடிப்பும் கலந்து கட்டி ஒரு அற்புதமான அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். 

படத்தின் பெயருக்கு கடவுள் என்று அர்த்தமாம். மிகச் சரியாக வைத்திருக்கிறார்கள்.

Jul 24, 2015

தூக்கு தண்டனை

யாகூப் மேமனை இன்னும் ஏழு நாட்களில் தூக்கில் போடப் போகிறார்கள். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன்பாக மும்பையில் இருநூறுக்கும் அதிகமான அப்பாவிகள் குண்டு வைத்துக் கொல்லப்பட்டதில் இவனுக்கு பங்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில்தான் ஒரு கொலைக் குற்றவாளிக்கு இவ்வளவு நாட்கள் ஆயுள் இருக்கும். தாஜா தாஜா என்று இழுத்துக் கொண்டிருப்பார்கள். சிறைச்சாலையில் உணவு, காவலர்கள் சம்பளம் என்று ஒரு குற்றவாளிக்கென்று வருடத்திற்கு எவ்வளவு செய்கிறார்கள்? அந்தச் சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் என்று பாகுபாடில்லாமல் ரத்தச் சிதறல்கள் ஆனார்கள். இவனைப் போன்ற அயோக்கியர்களை இவ்வளவு நாட்கள் விட்டு வைத்ததே தவறு. இந்நேரம் கதையை முடித்திருக்க வேண்டும்- இப்படியெல்லாம் ரத்தம் கொதிப்பது இயல்பானதுதான். 

ஒரு பக்கம் இப்படி ரத்தம் கொதித்தால் இன்னொரு பக்கம் தங்கள் பங்குக்கு சிக்ஸர் அடிக்க மட்டையத் தூக்கிக் கொண்டு சிலர் இறங்குகிறார்கள். யாகூப் மேமன் இசுலாமியர் என்பதற்காகத்தான் இந்திய அரசு தூக்கில் போட இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்று ஓவாஸி மாதிரியான மதவாதிகள் கிளப்பிவிடுவார்கள். ஹைதராபாத் போன்ற ஊர்களில் பச்சைக் கொடியைத் தூக்கிக் கொண்டு ஆமாம் என்று ஒரு கூட்டம் கத்தும். சாக்‌ஷி மகராஜ் போன்ற இன்னொரு பிரிவு மதவாதிகள் ‘யோவ் ஓவாஸி...நீ பாகிஸ்தானுக்கு போய்யா’ என்பார்கள். இரண்டு பிரிவினருமே ஆபத்தானவர்கள்தான். தங்களுக்கான ஊடக கவனத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் சொந்த சமுதாயத்தில் செல்வாக்கை வளர்த்துக் கொள்வதற்காகவும் அடிப்படைவாதம் பேசுகிறவர்கள்.

மரண தண்டனை அவசியமானதா? அதை ஏன் நீக்கிவிடக் கூடாது என்கிற விவாதம் உலக அளவில் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நூறு நாடுகள் முழுமையாக மரண தண்டனையை ஒழித்துவிட்டன. ஆனால் உலகுக்கு அகிம்சையை போதித்ததாகச் சொல்லிக் கொள்ளும் இந்தத் தேசம் இன்னமும் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறது. உலக சமுதாயத்திற்கு நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தவர்கள் என்று மார் தட்டுகிறோம். ஆனால் இன்னொரு மனிதனை சட்டத்தின் பெயரால் கொலை செய்கிறோம். 

‘இப்படியே பேசிட்டு இருந்தா ஏறி மிதிச்சுட்டு போய்ட்டே இருப்பாங்க’ என்பார்கள். ஆமாம். தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தால் ஏறி மிதிக்கத்தான் செய்வார்கள். தடவிக் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் சட்டங்களை இன்னமும் வலுவானதாக ஆக்க முடியும். மரண தண்டனை இல்லாமலே கூட கடும் தண்டனைகளைக் கொடுக்க முடியும். தாவூத் இப்ராஹிமும், டைகர் மேமனும் எந்தக் காலத்திலும் தண்டிக்கப்படவே மாட்டார்கள். ஆனால் யாகூப் மேமன் மட்டும் தூக்கில் தொங்குவான். இந்த வழக்கை மட்டும் சொல்லவில்லை. இங்கு எல்லா வழக்குகளுமே அப்படித்தான். ஒரு குற்றச் செயலைச் செய்த பெருங் கும்பலிலிருந்து ஒருவனை மட்டும் பிடித்து அவனது கதையை முடித்தால் வழக்கு முடிந்தது மாதிரிதான். இருநூறு பேர்கள் கொலை செய்யப்பட்ட மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குறைந்தபட்சம் இருநூறு பேர்களுடைய பங்களிப்பு இருந்திருக்கக் கூடும். அரசியல்வாதிகளிலிருந்து மதவாதிகள் தொழிலதிபர்கள் வரை எத்தனையோ பேர்கள் செயல்பட்டிருப்பார்கள். அவர்கள் அத்தனை பேரும் சட்டத்தின் இண்டு இடுக்குகளில் ஒளிந்தபடி இவன் தூக்கில் தொங்குவதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு வழக்கை நடத்தி முடிக்க இருபத்தைந்து ஆண்டுகள் என்பதே மோசமான நடைமுறையாக இல்லையா? அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட சட்டங்களில் பெரிய மாறுதல்கள் எதுவும் இல்லாமல் அந்தச் சட்டங்களின் அடிப்படையில் இப்பொழுதும் வழக்குகளை நடத்தி வருடக்கணக்கில் இழுத்து வாய்தாக்களாக வாங்கித் தள்ளி கடைசியில் ஒற்றை மனிதனுக்கு தண்டனை அளிப்பதோடு நம்முடைய குற்ற வழக்கு விசாரணைகளுக்கு முடிவுரைகள் எழுதப்படுகின்றன. இந்த பழுதுபட்ட நடைமுறைகள், மந்தமான நீதித்துறைச் செயல்பாடுகள், வழக்கு விசாரணைச் சுணக்கங்கள் போன்றவற்றில் எல்லாம் மாறுதல்களைக் கொண்டு வருவதைவிட்டுவிட்டு ‘இதோ குற்றவாளியைக் கொல்லப் போகிறோம்’ என்று உணர்ச்சியைத் தூண்டுகிறார்கள். காவி அல்லது பச்சைக் கண்ணாடியை அணிந்தபடி நாமும் கோஷம் எழுப்புகிறோம். 

இத்தகைய சமயங்களில் யாகூப் மேமனைத் தூக்கில் போடக் கூடாது என்றால் ஒரு கூட்டம் சண்டைக்கு வரும். தூக்கில் போட வேண்டும் என்றால் இன்னொரு கூட்டம் சண்டைக்கு வரும். ஆனால் நடுநிலைமை என்பதெல்லாம் இத்தகைய விஷயங்களில் சாத்தியமே இல்லை. ஒன்று இந்தப் பக்கம் நிற்க வேண்டும் அல்லது அந்தப் பக்கம். ‘நீ எந்தப் பக்கம்?’ என்றால் மரண தண்டனையை முழுமையாக ஒழிப்போம் என்கிற பக்கத்தில் நிற்பேன். யாகூப் மேமன் என்றில்லை வேறு யாராக இருந்தாலும் கூட இதே நிலைப்பாடுதான். மனிதனை இன்னொரு மனிதன் கொல்வது காட்டுமிராண்டித்தனம். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் கொல்வதற்கு யார் அதிகாரத்தைக் கொடுத்தது என்று கேட்டால் ‘அவன் மட்டும் கொல்லவில்லையா? இருநூறு பேரைக் கொன்றானே?’ என்பார்கள். அப்படியானால் அவனும் நாமும் ஒன்றுதானே? அவன் தீவிரவாதி. அவன் எதைச் செய்தானோ அதையே அவனுக்குத் திருப்பிச் செய்துவிட்டு நம்மை எப்படி civilized சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியும்?

தண்டனைகள் கடுமையாக்கப்பட்ட சமூகத்தில் குற்றங்கள் குறையும் என்பதில் நம்பிக்கையில்லை. ‘தவறு செய்தால் சிக்கிக் கொள்வோம்’ என்ற பயம் நிலவுகிற சமூகத்தில்தான் குற்றச் செயல்கள் குறைவாக இருக்கும். அதிகாரம் இருப்பவனும் பணம் படைத்தவனும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கும் போது ஒருவனைத் தூக்கில் போடுவதால் மற்றவர்கள் பயந்து விடப் போவதில்லை. சினிமாக்காரன் என்றால் சிறுநீர் கழிப்பதற்குக் கூட பரோலில் வரலாம் என்ற லட்சணத்தில் மரணதண்டனை இந்த தேசத்தில் பயத்தை உருவாக்கிவிடப் போவதில்லை. எவனாக இருந்தாலும்- அவன் அரசியல்வாதி, சினிமாக்காரன், பணக்காரன் - அவனுடைய குற்றத்துக்கான தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்கிற சூழலை உறுதி செய்யாமல் வேறு எதைச் செய்தும் பலன் இல்லை.

அப்சல் குருவைத் தூக்கிலிட்ட பிறகு துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு எந்தத் தீவிரவாதியும் எல்லையைக் கடக்கவில்லை என்று சொல்ல முடியுமா? அப்படித்தான் இந்தத் தூக்கும் இருக்கும். இந்த தேசத்திற்கு எதிரான அத்தனை சதிச்செயல்களும் குற்றச் செயல்பாடுகளும் பெரும்புள்ளிகளின் அருளாசிகளுடன் அரங்கேறிக் கொண்டேதான் இருக்கும். தங்களின் அதிகாரப் பசிக்காகவும் ஆட்சி அதிகாரத்தின் மீதான தாகத்திற்கும் குண்டு வெடிப்பாளர்களையும் துப்பாக்கி ஏந்தியவர்களையும் தயார் செய்தபடியேதான் இருப்பார்கள். முதலில் அங்கே செக் வைக்கப்பட வேண்டும். ஒரு குற்றச் செயலின் மொத்த வலையமையவும் சுக்கு நூறாக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை ஆராய்வதும் செயல்படுத்துவதும்தான் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். 

யாகூப் மேமனும், அப்சல் குருவும் ஏவப்பட்ட தூசிகள். இவர்களைத் தூக்கிலிட்டுவிட்டு இந்த நாட்டில் தீவிரவாதத்தையும் பயங்கரவாதிகளையும் ஒழித்துவிடலாம் என்றால் அதைவிட நகைச்சுவை வேறு இருக்க முடியாது. இவனைத் தூக்கில் போட்டுக் கொள்ளட்டும். எதிர்க்கவெல்லாம் இல்லை. ஆனால் இந்தத் தூக்கு தண்டனை இந்த தேசத்தில் இறுதியான தூக்கு தண்டனையாக இருக்கட்டும். அவ்வளவுதான்.

ஜூலை மாதம்

ஒவ்வொரு மாதமும் இருபத்தைந்தாம் தேதி வாக்கில் நிசப்தம் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கு விவரங்கள் பொதுவில் வைக்கப்பட்டுவிட வேண்டும் என்ற முடிவின் அடிப்படையில் ஜூலை’2015 மாத வரவு செலவுக் கணக்கு இது. கொடுக்கப்பட்ட தொகை:

வரிசை எண் 5 - சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அஞ்சுகம் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு தேவையான நோட்டுப் புத்தகங்களை தமிழ்நாடு திருவள்ளுவர் கழகம் வழங்குகிறது. இந்த வருடம் பள்ளிக் குழந்தைகளுக்கான பாட ஏடுககள் நிசப்தம் அறக்கட்டளை வழியாக வழங்கப்பட்டன. தரமான ஏடுகளாக இருக்க வேண்டும் என்பதற்காக டிஸ்கவரி புக் பேலஸ் திரு.வேடியப்பன் சிட்டால் காகித நிறுவனத்தில் தொடர்பு கொண்டு ஏடுகளை மொத்தமாக வாங்கினார். கிட்டதட்ட ஐநூறு ஏடுகள் வழங்கப்பட்டன. அதற்காக சிட்டாடல் காகித நிறுவனத்திற்கு வழங்கிய காசோலை ரூ. 13,240.

வரிசை எண் 12: நோட்டுப் புத்தங்கள் வாங்கிக் கொண்ட குழந்தைகளில் மிகவும் வறுமை நிலையிலிருந்த குழந்தைகள் ஐந்து பேர்களுக்கு இந்த வருடத்திற்கான பள்ளிச் சீருடைகளும் வழங்கப்பட்டன. எந்த துணிக்கடையும் காசோலையை வாங்கிக் கொள்ள தயாராக இல்லாததால் ரூ.2500க்கான காசோலை தமிழ்நாடு திருவள்ளுவர் கழகத்தின் பெயரில் வழங்கப்பட்டது. சீருடைகளும் மேற்சொன்ன நிகழ்விலேயே வழங்கப்பட்டன.

வரிசை எண் 23: நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். குழந்தை கிருஷ்ணாவின் பராமரிப்புக்காக ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ரூ.2000 ரூபாய்.

வரிசை எண் 42: திருமதி. லட்சுமிக்கு கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வயது. நடுத்தரக் குடும்பம். கணவன் மற்றும் இரண்டு மகன்களுடன் வெளியூருக்குச் சென்று திரும்பும் போது விபத்து நிகழ்ந்தது. நான்கு பேருக்குமே நல்ல அடி. கணவர் கொஞ்ச நேரத்திலேயே இறந்துவிட இவர்கள் மூவரையும் மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். உறவினர்கள் பணம் புரட்டி செலவு செய்தார்கள். கணவர் இறந்தது தெரியாமலேயே சிகிச்சையில் இருந்த லட்சுமிக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தவர் பூர்ணிமா என்னும் மாணவி. நண்பர் பிரசன்னா நிசப்தம் சார்பில் சென்னை விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லட்சுமியைச் சந்திக்கச் சென்றிருந்தார். முழுமையாக விசாரித்துவிட்டு இரண்டு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கிறது என்றும் அதற்கு தேவைப்படும் தொகை விவரங்களையும் அனுப்பி வைத்திருந்தார். உறவினர்கள் ஓரளவு பணத்தை புரட்டிக் கொள்ள இருபதாயிரம் ரூபாய் மட்டும் நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து வழங்கபட்டது. காசோலை விஜயா மருத்துவமனையின் பெயரில்தான் வழங்கப்பட்டது. (Crossed cheque) இருந்தாலும் ஸ்டேட்மெண்ட்டில் ஏன் பெயர் வரவில்லை என்று தெரியவில்லை.

கொடுக்க வேண்டிய தொகை:

1. ஏழு அரசு பள்ளிகளுக்கு நூலகம் அமைப்பதற்கான தொகை (5000*7=35000) மாணவர்களின் போக்குவரத்துச் செலவு (1000*7=7000) ஆக மொத்தம் 42,000 இந்த வாரம் வழங்கப்பட்டுவிடும். ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய்க்கான கூப்பன்கள் மட்டும் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றை கோபி புத்தகக் கண்காட்சியில் கொடுத்து பள்ளி மாணவர்கள் தங்கள் நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வாங்கிக் கொள்வார்கள். அந்தக் கூப்பன்களை கடைக்காரர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டு அதற்குரிய தொகை வரும் சனிக்கிழமையன்று கடைக்காரர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.

2. சேலம் அரசுப் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவைத் தேர்ந்தெடுத்திருக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர் ஹரிக்குமாருக்கு கல்லூரிக் கட்டணம் ரூ.22,570க்கான காசோலை வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணம்  வங்கியிலிருந்து இன்னமும் எடுக்கப்படவில்லை.

3. பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கும் இன்னொரு தாழ்த்தப்பட்ட மாணவரான நவீந்திரனுக்கு அவருடைய ஓராண்டு விடுதிக்கட்டணத்தில் பாதித் தொகையான ரூ.35,000 இந்த வாரம் வழங்கப்படவிருக்கிறது.

வர வேண்டிய தொகை:

குழந்தை ராகவர்ஷினிக்கு கொடுக்கப்பட்ட தொகையான எழுபதாயிரத்தை அவர்கள் அனுப்பி வைத்துவிட்டதாகச் சொன்னார்கள். கூரியரில் அனுப்பியிருக்கிறார்கள். அநேகமாக அந்த வரைவோலை இன்று வந்துவிடக் கூடும்.

வரவு:

வரவு விவரத்தைப் பொறுத்தவரைக்கும் பெரும்பாலானவற்றில் யார் பணம் அனுப்பியிருக்கிறார்கள் என்ற விவரம் ஸ்டேட்மெண்ட்டில் இருக்கிறது. கடைசி இரண்டு வரவுகளும் நடிகர் திரு.சாருஹாசனுடையது. குங்குமம் இதழில் அவர் எழுதிக் கொண்டிருக்கும் தொடருக்கான தொகையை நிசப்தம் அறக்கட்டளைக்கு அவர் அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டார் என்று இன்று காலையில் குங்குமம் அலுவலகத்திலிருந்து அழைத்துச் சொன்னார்கள். இதுவரை திரு.சாருஹாசன் அவர்களுடன் பேசியது கூட இல்லை. இன்று அழைத்து நன்றி சொல்லிவிட வேண்டும்.

                                                                         ***

இன்றைய தேதியில் அறக்கட்டளையில் ரூபாய் ஆறு லட்சத்து நாற்பதோராயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தேழு (ரூ.6,41,957.15) ரூபாய் இருக்கிறது. கோரிக்கைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. சில கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடிகிறது. சிலவற்றைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது. தவிர்க்கும் போது சிலர் புரிந்து கொள்கிறார்கள். சிலர் திட்டிவிட்டுச் செல்கிறார்கள். இந்த மாதம் ஒரு அரசு அதிகாரியிடமிருந்து கடுமையான வசையை வாங்கிக் கட்ட வேண்டியிருந்தது. அவர் பரிந்துரைத்த ஒரு கோரிக்கையை நிராகரித்ததுதான் காரணம்.

புரிந்து கொள்பவர்களுக்கு நன்றி. திட்டுபவர்களுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று தெரியவில்லை.

அறக்கட்டளையின் செயல்பாடுகள் மற்றும் கணக்கு விவரங்கள் குறித்து ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்விகள் இருப்பின் vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Jul 23, 2015

அன்பும் நன்றியும்

புத்தகங்கள் வாங்கிக் கொள்வதற்காக ஏழு பள்ளிகளுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டிருந்தது அல்லவா? ஏழு பள்ளிகளில் இரண்டு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள். மீதி ஐந்தும் அரசுப் பள்ளிகள். அந்தப் பள்ளிகளில் பெரும்பாலானவர்கள் கோபி புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்கிவிட்டார்கள். ஒரு பள்ளி குறித்து மட்டும் இன்னமும் தகவல் இல்லை. நாளை விசாரித்துவிடுகிறேன். முதல் பள்ளியாக கோபிபாளையம் பள்ளி திங்கட்கிழமையன்றே சென்று வாங்கியிருக்கிறார்கள். அது அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி. வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து குழந்தைகளையும் அழைத்துச் சென்று வாங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான புத்தகங்களை மாணவர்களே தேர்ந்தெடுத்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் இன்று தெரிவித்தார். 

இந்த ஆண்டிலிருந்து ஒவ்வொரு வகுப்புக்கும் வாசிப்புக்கு என வாரத்தில் ஒரு பிரிவேளையை ஒதுக்கியிருப்பதாகவும் இனி அது தொடரும் என்றும் தெரிவித்தார். எதிர்பார்த்தது இதைத்தான். 

பள்ளி மாணவர்கள் புத்தகத் திருவிழாவுக்கு சென்ற நிகழ்வின் நிழற்படங்கள் சிலவற்றை ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார். அந்த நிழற்படங்கள்தான் இவை-நிழற்படங்களையும் அந்தக் குழந்தைகளின் முகங்களையும் பார்ப்பதற்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.

குழந்தைகளின் இந்த நன்றியும் புன்னகையும் நம் அனைவருக்குமானது.

கிராமப்புற குழந்தைகளுக்கு இது போன்றதொரு வாய்ப்பினை சாத்தியமாக்கிக் கொடுத்த அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றி. நன்கொடைகளும், ஊக்கமும், தொடர்ச்சியான நல் வார்த்தைகளும் இது போன்ற சிறு சிறு வெற்றிகளை உருவாக்கித் தருகின்றன. இந்தச் சிறு சிறு வெற்றிகள்தான் நம்மை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்துகின்றன.

உறுதுணையாக இருக்கும் நல்ல உள்ளங்கள் ஒவ்வொன்றுக்கும் அன்பும் நன்றியும்.

அப்புறம் என்ன ஆச்சு?

அமெரிக்காவில் ஒரு மேலாளர் இருக்கிறார். கேரளாக்காரர். ஆரம்பத்தில் பெயரைப் பார்த்து என்னையும் மலையாளி என்று நினைத்துக் கொண்டார் போலிருக்கிறது. பேச்சுவாக்கில் ‘ஞான் நன்னாயிட்டு மலையாளம் சம்சாரிக்கும்’ என்று அடித்து விட்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு ‘எங்க மாமன் அய்யப்ப பக்தருங்க..அதனால இந்த பதருக்கு அந்தப் பேரையே வெச்சுட்டாங்க’ என்று சொன்னதிலிருந்து பேச்சைக் குறைத்துக் கொண்டார். ஆனாலும் முழுமையாகக் கத்தரித்துவிட்டுவிட்டார் என்று சொல்ல முடியாது. அவ்வப்போது பேசிக் கொள்வோம்.

பொதுவாகவே மேலாளர்களிடம் பேசும் போது ‘எந்தெந்த ஏரியாக்களில் நான் வீக்காக இருக்கிறேன்?’ என்று கேட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். குற்றங்குறைகளை நிவர்த்தி செய்கிறோமோ இல்லையோ- குறைந்தபட்சம் எங்கேயெல்லாம் கோட்டை விடுகிறோம் என்று தெரிந்து வைத்துக் கொள்ளலாம். ‘பரவாயில்லையே...குறைகளைத் தெரிஞ்சுக்க ஆசைப்படுறான்’ என்று அவர்களுக்கும் நம் மீது நல்ல எண்ணம் வரும். கேட்காமல் விட்டுவிட்டால் எதையும் சொல்ல மாட்டார்கள். கமுக்கமாக வைத்துக் கொண்டு வருட இறுதியில் ‘நீ அதுல சரியில்லை...இதுல மோசம்’ என்று சொல்லும் போது நமக்கும் கிரகித்துக் கொள்வது சங்கடமாகத்தான் இருக்கும். ‘வருடம் பூராவும் இவன்  வாயைத் திறக்கவேயில்லை...இப்போ சம்பளம் உயர்வு கேட்டுடுவான்னோன்னு அடிச்சு ஊத்துறான்’ என்று நினைத்துக் கொள்வோம். அவர்கள் சொல்லக் கூடிய குற்றச்சாட்டுக்களில் உண்மை இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும் நம் மனம் ஏற்றுக் கொள்ளாது. அப்படியேதான் காலத்தை ஓட்டிக் கொண்டிருப்போம். 

இதையெல்லாம் ஏதோவொரு மேலாண்மை பயிற்சி வகுப்பில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள்.  அதனால் மேலாளர்களிடம் பேசும் போதெல்லாம் கேட்டு வைத்துக் கொள்வதுண்டு. சென்ற வாரத்தில் அந்த மலையாள மேலாளரிடம் இப்படிக் கேட்ட போது ‘நீ அப்படியொண்ணும் மோசமா இல்ல....ஆனா சரியா ஃபாலோ-அப் செய்யறதில்லை’ என்றார். அவரிடம் சில உதாரணங்களும் இருந்தன. சில பிரச்சினைகளைப் பற்றி ஆரம்பத்தில் சில மின்னஞ்சல்களை அனுப்பியிருக்கிறேன். அதன் பிறகு ‘எப்படியோ தொலையட்டும்’ என்று விட்டிருப்பேன். மலையாளத்தான்கள் விவரமானவர்கள் என்று சும்மாவா சொல்கிறோம்? துல்லியமாகக் கணித்து வைத்திருந்தார். இத்தனைக்கும் நேரில் கூட பார்த்ததில்லை. பக்கத்திலேயே இருந்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருப்பாரோ தெரியவில்லை.

ஐயப்பனுக்குத்தான் வெளிச்சம்.

‘ரொம்ப நன்றி ஐயா. திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறேன்.

யோசித்துப் பார்த்தால் இது தமிழ்நாட்டு தோஷம் என்று தெரிகிறது. ஏதாவது ஒரு செய்தி அல்லது அறிவிப்பு வெளிவரும். ஆளாளுக்கு கிளர்ச்சியடைந்து அதைப் பற்றிப் பேசித் தீர்ப்போம். அதோடு அந்தச் செய்தியையும் அறிவிப்பையும் புதைத்துவிட்டு அடுத்த செய்திக்குச் சென்றுவிடுகிறோம். 

சமீபகாலத்தில் நாம் எத்தனை விவகாரங்களை ஃபாலோ-அப் செய்திருக்கிறோம்? அதிகம் வேண்டாம்- இந்தக் கணத்தில் ஞாபகம் வரக் கூடிய சில செய்திகள் என்றாலும் கூட- சென்னை சிறுசேரியில் உமா மகேஸ்வரி என்ற டிசிஎஸ் பணியாளரை பலாத்காரம் செய்து கொன்றார்கள். அதன் பிறகு அந்தக் குற்றவாளிகள் என்ன ஆனார்கள்? பெண்களின் பாதுகாப்புக்காக அரசாங்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? கடலூரில் ஒரு பெண்ணை சில காலிப்பயல்கள் வன்புணர்வு செய்தார்கள். அந்த விவகாரம் என்ன ஆனது? பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் சிலர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்கள். அதைப் பற்றிய மேலதிகத் தகவல்கள் இருக்கின்றனவா? ராமஜெயம் கொலை வழக்கு என்னவாயிற்று? ஆம்பூர் கலவரம்? கோகுல்ராஜைக் கொலை செய்த யுவராஜைக் கைது செய்தார்கள். என்ன தகவல்களைக் கறந்தார்கள்?- என்று பட்டியலை நீளமாக்கிக் கொண்டே போக முடியும்.

மேற்சொன்ன எல்லாச் செய்திகளும் அந்தந்தச் சமயத்தில் ‘கவர்ஸ்டோரிகள்’ ஆக்கப்பட்டு மிக அதிக வெளிச்சம் அளிக்கப்பட்ட செய்திகள். பூதாகரமாக விவாதிக்கப்பட்டவை. ஆனால் ஒரு நாள்தான் ஆயுள். அடுத்த நாள் அப்படியே விட்டுவிட்டு மற்றொரு தினச் செய்திக்கு நகர்ந்துவிடுகிறோம். நம்முடைய மூளையே அப்படித்தான் ட்யூன் செய்யப்படுகிறது. பத்திரிக்கையாசிரியர்களிடம் பேசினால் ‘தொடர்கதையெல்லாம் இப்போ யார் படிக்கிறாங்க?. அந்தந்த இஷ்யூல அந்தந்தக் கட்டுரையும் கதையும் முடிந்துவிட வேண்டும்’ என்கிறார்கள். எதையுமே பின் தொடரும் மனநிலை நம்மிடம் இல்லை. நேற்று அன்புமணியின் போஸ்டர். இன்று கருணாநிதியின் மதுவிலக்கு அறிக்கை. நாளை நயன் தாராவோ த்ரிஷாவோ. ஒவ்வொரு செய்திக்கும் இங்கேயிருக்கும் மரியாதை அவ்வளவுதான்.

ஒருநாள் செய்தி என்று கூடச் சொல்ல முடியாது. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் புதுச் செய்தியை எதிர்பார்க்கிறோம். விகடன், தி இந்துவிலிருந்து மாலைமுரசு, தினத்தந்தி வரைக்கும் அத்தனை பேரும் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ஆட்களை வைத்து ஏதேனும் தகவலை அல்லது நிழற்படத்தைத் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வாசகர்களை உள்ளே இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்திகளில் முக்கால்வாசி கண நேரக் கிளர்ச்சிக்கானவை. ஆண் ஒருவனை வன்புணர்வு செய்த டெல்லிப் பெண் என்கிற செய்தி வரவேற்பு பெறும் அளவுக்கு கர்நாடகா காவிரியில் அணை கட்டும் செய்தி கவனம் பெறாது என்று அவர்களுக்குத் தெரியும். அதனால் அவர்களும் பெரிய அளவில் முக்கியமான பிரச்சினைகளில் கவனம் கொள்வதில்லை.

இங்கு அரசாங்கத்தைப் பற்றியும் பேச வேண்டியதில்லை. சட்டமன்றக் கூட்டத்தொடரை நடத்துவதற்கே இவ்வளவு தயங்குகிறார்கள். அவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? 

காவிரி பிரச்சினை என்று சொன்னவுடன் தான் ஞாபகம் வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக ‘மேகேதாட்டு’ என்று ஆளாளுக்கு கதறினோம். ஞாபகமிருக்கிறதா? காவிரி தமிழகத்திற்குள் நுழையும் இடத்தில் இருக்கிறது. மேகே என்றால் ஆடு;  தாட்டு என்றால் தாண்டுதல்.  இந்த இடத்தில் ஆடு தாண்டுகிற அளவுக்கு காவிரி குறுகி ஓடியதால் மேகேதாட்டு என்று பெயர். அங்கு ஒரு அணையைக் கட்டுவதாக கர்நாடகம் அறிவித்தவுடன் தமிழகக் கட்சிகள் அறிக்கைவிட்டன. முதலமைச்சர் கடிதம் எழுதினார். செய்தித்தாள்கள் முதல் பக்கத்தை நிரப்பின. புலனாய்வு வார இதழ்கள் கவர்ஸ்டோரி எழுதின. ஒரே வாரம். அவ்வளவுதான். விட்டுவிட்டோம். மறந்தும் போய்விட்டோம். ஆனால் கர்நாடகா வெறும் பேச்சோடு நிற்கவில்லை. வேலையை ஆரம்பித்துவிட்டார்கள். அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதங்களில் அறிக்கை வந்தவுடன் வேலையை ஆரம்பிக்கவிருக்கிறார்கள்.

தமிழகத்தின் விவசாய அமைச்சர் யார்? யாரோ இருந்துவிட்டு போகட்டும். ஆனால் கர்நாடகாவில் நீர்ப்பாசனத் துறைக்கு என்றே தனி அமைச்சர் இருக்கிறார். வாரத்தில் இரண்டு மூன்று முறையாவது  எம்.பி. பட்டீல் என்கிற அந்த அமைச்சரின் பெயர் செய்தியில் வரும். எதையாவது செயல்படுத்திக் கொண்டேயிருக்கிறார். துங்கபத்ரா அணையில் சகதியை நீக்க சர்வதேச நிறுவனங்களிடம் டெண்டர் கேட்கப் போகிறோம் என்கிறார். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 20 முதல் 50 டிஎம்சி தண்ணீர் தமிழகத்தின் வழியாக ஓடி கடலில் கலக்கிறது. ஏன் வீணாக விட வேண்டும்? அவர்கள்தான் பயன்படுத்துவதில்லை. நாமாவது பயன்படுத்துவோம் என்கிறார். மேகே தாட்டுவில் அணையைக் கட்டி உபரி நீரை நாமே பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறார். கர்நாடகா முழுவதும் காவிரி நீரை 781 ஏரிகளில் நிரப்பி வைக்கலாம் என்கிறார். அதற்கு கிட்டத்தட்ட எழுநூறு கோடி ரூபாய் ஒதுக்கி வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.  

இந்தச் செய்திகளையெல்லாம் எதிர்கொள்ளும் போது தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று யோசிக்காமல் இருக்க முடிவதில்லை. ஆனால் யோசித்து மட்டும் என்ன நடக்கப் போகிறது?

Jul 22, 2015

13 கொலையாளிகள்

ஜப்பானிய படங்களின் வரிசையைத் தேடிக் கொண்டிருந்த போது 13 அஸாஸின்ஸ் கிடைத்தது. 13 கொலையாளிகள். படத்தைப் பற்றி ஏற்கனவே சில நண்பர்களும் சிலாகித்திருந்தார்கள். வழக்கமான  சாமுராய் கதைகளைப் போல நம்ப முடியாத அதிரடிக் காட்சிகளை நிரப்பி மிளகாய் அரைப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்படியெல்லாம் எதிர்மறையாக நினைத்திருக்கவே வேண்டியதில்லை. படம் ஆரம்பிக்கும் போதே ஒரு மனிதர் தனது வயிற்றைக் கிழித்துக் கொண்டு சாகிறார். அது காலங்காலமாக ஜப்பானியர்கள் பின்பற்றிய முறை. வீரத்தோடு மரணத்தை தழுவும் இந்த முறைக்கு ‘செப்புகு’ என்று பெயர். எதற்காக இப்படிச் சாகிறார் என்று யோசிப்பதற்குள்ளாகவே அடுத்தடுத்து காட்சிகள் விரிகின்றன. இரண்டரை மணி நேரப் படம். சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டேயிருக்கிறது.

1840களில் நடந்த கதை இது. அப்பொழுது நிலவிய ஜப்பானிய ராணுவ ஆட்சியில் ராணுவத் தளபதிகளை ஷோகுன் என்கிறார்கள். அரசர் இருந்தாலும் கிட்டத்தட்ட இவர்கள்தான் ஆட்சியாளர்கள். அப்படியொரு ஷோகுனின் தம்பி சர்வாதிகாரியாக இருக்கிறான். பெண்களை வன்புணர்வு செய்வதிலிருந்து குஞ்சு குளுவான் என்று கூட பாராமல் ஒரு குடும்பத்தில் அத்தனை பேரையும் கொல்வது வரை எல்லாவிதமான முரட்டுத்தனங்களையும் செய்கிறான். ஒரு பெண்ணின் கைகள், கால்கள் என துண்டித்து வீசிவிட்டு நாக்கையும் கத்தரித்து விடுகிறான். அவளை விளையாட்டுச் சாமானாக்கிவிடுகிறான். அவ்வளவு குரூரமானவன். நரிட்சுகு என்பது அவன் பெயர். இவன் இப்பொழுதே இவ்வளவு ஆட்டம் போடுகிறானே இன்னமும் பெரிய பதவிகளுக்கு வந்தால் நாடு நாறிப் போய்விடும் என்று மந்திரி பயப்படுகிறார். அவரது பயம் எந்தவிதத்திலும் பொய்த்துவிடாமல் எல்லாவிதமான சேட்டைகளையும் செய்து கொண்டிருக்கிறான் நரிட்சுகு. 

அவனது சேட்டைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தனது வயிற்றைக் கிழித்துக் கொண்டு சாகிறவரைத்தான் முதல் காட்சியில் காட்டுகிறார்கள். மந்திரிக்கும் வருத்தம்தான். நரிட்சுகுவின் சோலியை முடித்துவிடலாம் என்று முடிவு செய்கிறார். அது லேசுப்பட்ட காரியமா? அவனைச் சுற்றிலும் எந்நேரமும் பெரும் ராணுவப்படை பாதுகாப்புக்கு நிற்கிறது. இருந்தாலும் ஏதாவது செய்தாக வேண்டும் என எத்தனிக்கிறார். தனக்கு நம்பகமான சாமுராய் ஒருவரை உதவிக்கு அழைக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வேறு பத்து சாமுராய்களைச் சேர்த்து ஒரு அணி அமைக்கிறார்கள். அப்படியானால் 12 அஸாஸின்ஸ் என்றுதானே படத்தின் பெயர் இருந்திருக்க வேண்டும்? காரணமிருக்கிறது. இந்தப் பனிரெண்டு பேரும் ஒரு காட்டு வழியாகச் செல்கிறார்கள். அப்பொழுது பாதையைக் கோட்டைவிட்டுவிடுகிறார்கள். அந்தச் சமயத்தில் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருக்கும் ஒருவன் - இந்த வேட்டைக்காரன்தான் படத்தின் நகைச்சுவைக் கதாபாத்திரம்- சாமுராய்களுக்கு வழிகாட்டுவதோடு நில்லாமல் அவர்களோடு இணைந்து கொள்கிறான். கணக்கு பதின்மூன்றாகிறது.

நரிட்சுகு தனது படையோடு இடோ என்னுமிடத்திலிருந்து அகாஷி என்னுமிடத்துக்குச் செல்கிறான். சாமுராய்கள் அவனது கதையை வழியிலேயே முடித்துவிடத் திட்டமிடுகிறார்கள். ஆனால் நரிட்சுகுவுடன் இருக்கும் ஹன்பேய் என்னும் போர்வீரன் சாமர்த்தியசாலி. அவனுக்கு இந்தச் சதித்திட்டம் பற்றிய தகவல் போய்ச் சேர்கிறது. அவன் சாமுராய்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறான். படம் வேகமெடுக்கிறது. சாமுராய்களை வழி நடத்தும் மந்திரியும் கில்லாடிதான். மிகச் சிறப்பாக வழிநடத்துகிறார். நரிட்சுகு பயணம் செய்யும் பாதையின் நடுவில் ஓர் ஊரைத் தேர்ந்தெடுக்கும் சாமுராய்கள் தங்களது எதிரிக்கான பொறியை உருவாக்குகிறார்கள். நரிட்சுகு அந்தப் பொறியில் வந்து சிக்க வேண்டுமல்லவா? அதற்காக அவன் செல்லுகிற பாதையில் சில தடைகளை ஏற்படுத்தி வைக்கிறார்கள். அதற்கு வேறொரு ஊரின் தலைவரும் உதவுகிறார். அவருடைய மகனையும் மருமகளையும் நரிட்சுகு சிதைத்திருக்கிறான் என்பதால் அவருக்கும் ஒரு பழைய கணக்கு இருக்கிறது. இவர்கள் நினைத்த மாதிரியே நடக்கிறது. நரிட்சுகு தனது படையின் ஒரு பகுதியை திசை மாற்றுகிறான். இவர்கள் பொறி வைத்திருக்கும் ஊருக்குள் நரிட்சுகுவின் படை வந்து சேரும் போது அவனிடம் எழுபது பேர்கள்தான் இருப்பார்கள் என்று கணக்குப் போடுகிறார்கள். அதுதான் தப்புக்கணக்காகிவிடுகிறது. ஹன்பேய் ஏதோவொரு வகையில் ஆட்களைத் திரட்டிவிட்டான். நரிட்சுகுவின் படையில் இருநூறு பேர்கள் சேர்ந்துவிட்டார்கள். சாமுராய்கள் வெறும் பதின்மூன்று பேர்கள்தான். தங்கள் முழு பலத்தையும் காட்டியாக வேண்டும். பொறிக்குள் சிக்கியிருக்கும் இருநூறு பேரையும் சின்னாபின்னப்படுத்தியாக வேண்டும். அப்பொழுதுதான் எதிரியை வீழ்த்த முடியும். சாமுராய்கள் துணிந்து களமிறங்குகிறார்கள். எதிரியின் படைக்குள் புகுந்து அடித்து நொறுக்குகிறார்கள். விறுவிறுப்பு கூடிக் கொண்டே போகிறது.

ஜப்பான் சென்றிருந்த போது ஒரு வரலாற்றாசிரியரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சாமுராய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தவர். நிறையப் பேசினார். ‘உண்மையிலேயே சாமுராய்கள் சகலவிதத்திலும் வல்லவர்களா’ என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லவில்லை. சாமுராய் என்பது உடல் ரீதியிலான பலசாலி மட்டுமில்லை. மனரீதியிலான பலசாலியும் கூட என்றார். தான் சாகப் போகிறோம் என்று தெரிந்த பிறகு போராடுவது சாமானிய மனிதனுக்கு சாத்தியமான காரியமில்லை. உதாரணமாக நான்கு பேர்கள் துரத்திக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் நம்மைக் கொல்வதற்காகத் துரத்துகிறார்கள். அது நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஓடுகிறோம். ஓடும் போதே வெட்டுக்கள் விழுகின்றன. சிறிது தூரம் ஓடிய பிறகு ஒரு மூலையில் சிக்கிக் கொள்கிறோம். அந்த கணத்தில் நம்முடைய அத்தனை மனவலிமையும் சரிந்துவிடும். கெஞ்சுவோமே தவிர போராடத் துணிய மாட்டோம். அதில்தான் சாமுராய்கள் வித்தியாசப்படுகிறார்கள் என்றார். சாமுராய்கள் இறுதி வரைக்கும் போராடுவார்கள் என்றார். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்தில் அதைத் துல்லியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சாமுராய்கள் ஒவ்வொருவருவராக வீழ்கிறார்கள். என்னதான் வீரர்களாக இருந்தாலும் இத்தனை பேர் சூழ்ந்து கொண்டு தாக்கும் போது நின்று போராடுவது யாருக்குமே சாத்தியமில்லாத காரியம்தான். ஆனால் கடைசியாக சரியும் வரைக்கும் போராடுகிறார்கள். கடைசி வெட்டு விழும் வரைக்கும் வாளைச் சுற்றுகிறார்கள். அப்படியான மனிதர்கள் ஒரு காலத்தில் உண்மையிலேயே வாழ்ந்தவர்கள்தானே? நினைத்துப் பார்த்தால் சிலிர்த்துவிட்டது.

இந்தப் படம் 1960களிலேயே வந்துவிட்டது. அப்பொழுதும் படத்தின் பெயர் இதேதான். 13 அஸாஸின்ஸ். அந்தப் படத்தைத்தான் கிட்டத்தட்ட ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு 2010 ஆம் ஆண்டில் ரீமேக் செய்திருக்கிறார்கள். மிகச் சிறந்த ஆக்‌ஷன் படமாக உலகெங்கிலும் கொண்டாடப்பட்ட படம் இது. அந்தக் கொண்டாட்டத்திற்கு முழு தகுதியான படம்தான். முதல் காட்சியில் ஒருவர் தனது வயிற்றை அறுத்துக் கொண்டு இறந்து போகிறார் அல்லவா? அதன் பிறகு சாமுராய்கள் அணி அமைவதற்கான முஸ்தீபுகளைத் தொடங்கும் சமயத்தில் சற்று இழுவையாகத் தெரிந்தது. அதுவரையிலும் உரையாடல்கள் சற்று அதிகம். ஆனால் அந்த இழுவை சில நிமிடங்களுக்கு மட்டும்தான். படம் வேகமெடுத்துவிடுகிறது.

படத்தின் காட்சியமைப்புகளுக்காகவும் இசைக்காவும் வெகுவாக பாராட்டுகிறார்கள். உண்மையிலேயே இரண்டுமே அருமை. அதைவிடவும் குறிப்பாக நடிகர்களின் நடிப்பைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். சாமுராய்களாகட்டும். நரிட்சுகுவாகட்டும், கை கால்கள் துண்டிக்கப்ட்ட பெண்ணாகட்டும்- பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு நீளமான வெளிநாட்டு படத்தை சலிப்பில்லாமல் பார்க்க வைத்திருக்கிறார்கள். சாமுராய்கள் ஏன் இந்தப் படையில் சேர்கிறார்கள் என்பதன் நியாயப்படுத்துதல்கள் எதுவுமே துருத்திக் கொண்டு நிற்பதில்லை. ரத்தமும் அன்பும் காதலும் அக்கறையும் சாமுராய்களின் அர்ப்பணிப்பும் படம் முழுக்கவும் விரவிக் கிடக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களுக்கு தேவையான அளவு மட்டும் நடிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் பெரும்பலம்.

கடைசி இருபதாண்டுகளில் வெளியான அதிரடித் திரைப்படங்களின் வரிசையில் இந்தப் படத்தை தவிர்க்க முடியாது என்று ஒரு விமர்சகர் பாராட்டியிருந்தார். அது முற்றாகச் சரி. படத்தைப் பார்த்துவிட்டு முடிவெடுங்கள்.