சமீபத்தில் ஒரு கட்டுரை வந்திருந்தது. ஐடி மார்கெட் சுருங்கிவிட்டது. இனி அதிகமான ஆட்களை எடுக்கமாட்டார்கள், சம்பள உயர்வும் இருக்காது என்றெல்லாம் நீண்டிருந்த அந்தக் கட்டுரை வாசிப்பவர்களுக்கு சற்று புளியைக் கரைப்பது போலத்தான் இருந்தது. இதே கட்டுரையை ஐந்து வருடங்களுக்கு முன்பாக வாசித்திருந்தால் இரண்டு நாட்கள் தூங்காமல் கிடந்திருப்பேன். இப்பொழுது அவ்வளவு பயம் இல்லை. கொஞ்சம் தெளிவடைந்திருக்கிறேன்.
கவனித்துப் பார்த்தால் மென்பொருள் துறையின் வேலைச் சந்தை நன்றாகத்தான் இருக்கிறது. கொத்து கொத்தாக வேலையை விட்டு நீக்குகிற செய்தியெல்லாம் எதுவும் இல்லை. அந்த நிறுவனம் காலியாகிவிட்டதாம்; இந்த நிறுவனத்திற்கு பூட்டுப் போடப் போகிறார்களாம் என்கிற பரபரப்பு ஒன்றையும் காணவில்லை. இன்னமும் சொல்லப் போனால் ஆட்களுக்கு பஞ்சம் இருக்கிறது.
எங்கள் டீமுக்கு ஏழு பேர் தேவை. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் கூட ஒரு இடம் காலி இருக்கிறது. தினமும் நேர்காணல்களை நடத்துகிறார்கள். ஒருவரும் சிக்குவதாக இல்லை. இவ்வளவு ஆட்களிடம் இல்லாத திறமை என்னிடம் இருக்கிறது என்று தப்புக் கணக்கு போட்டுவிட வேண்டாம். எதனால் எனக்கு வேலை கிடைத்தது என்று யோசித்தால் எளிமையான பதில்தான் கிடைக்கிறது. புதிய தொழில்நுட்பம் ஒன்றைக் கற்று வைத்திருந்தேன். அதை நானாகக் கற்று வைத்திருக்கவில்லை. பழைய நிறுவனத்தில் வலுக்கட்டாயமாக அந்த தொழில்நுட்பத்தில் வேலை செய்யப் பணித்திருந்தார்கள். வேண்டாவெறுப்பாக பழகியிருந்தேன். அது இந்த நிறுவனத்திற்கு தேவையானதாக இருந்தது. நேர்காணலின் போது ‘அது தெரியுமா?’ என்றார்கள். ‘முழுமையாகத் தெரியாது...பழகிக் கொள்வேன்’ என்றேன். அது குறித்தான சில கேள்விகளைக் கேட்டுவிட்டு எடுத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான்.
ஐடி துறையில் சமாளிப்பது எப்படியென்று யாராவது கேட்டால் துல்லியமான பதிலைச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் என்னளவில் ஒரு எளிமையான சூத்திரத்தை வைத்திருக்கிறேன். அவ்வப்போது ஏதாவதொரு புதிய விஷயத்தை மண்டையில் ஏற்றிக் கொள்ள வேண்டும். அந்தப் புதிய விஷயத்தைத் தெரிந்து வைத்திருப்பவர்களைத் ஏதாவதொரு நிறுவனம் தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தால் ஒட்டிக் கொள்ள வேண்டும். இப்படியே அடுத்த சில வருடங்களுக்கு சமாளித்துக் கொண்டிருக்கலாம்.
‘மேனேஜர் ஆக வேண்டும், வைஸ் பிரெசிடெண்ட் ஆக வேண்டும்’ என்றெல்லாம் கனவு காண்பவர்களுக்கு வேறு வழிகள் இருக்கின்றன. ஆனால் ‘அதெல்லாம் வேண்டாம்ப்பா....இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு பெரிய ஏற்ற இறக்கமில்லாமல் சம்பாதித்துக் கொண்டிருந்தால் போதும்’ என நினைக்கும் என்னை மாதிரியான மிடில் க்ளாஸ் மாதவன்களை இந்தச் சூத்திரம் கைவிடாது என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் அடுத்த சில ஆண்டுகளுக்காகவாவது.
ஐடி நிறுவனங்களில் வேலைக்கு ஆள் எடுப்பவர்களிடம் கேட்டுப் பார்த்தால் தங்கள் பிரச்சினைகளை கதை கதையாகச் சொல்கிறார்கள்.
இவர்களின் முதல் பிரச்சினை- தேவையான ஆட்கள் கிடைப்பதில்லை. டாட் நெட் தெரியுமா என்று கேட்டால் லட்சக்கணக்கானவர்கள் ‘எனக்குத் தெரியும்’ என்று கையைத் தூக்குவார்கள். கொஞ்சம் உள்ளே இறங்கி, டாட்நெட்டில் MVC தெரியுமா என்று கேட்டால் முக்கால்வாசிப் பேர் பின் வாங்கிவிடுவார்கள். தெரியாது. காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். படிப்பை முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார்கள். டாட் நெட், ஜாவா, ஆரக்கிள் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்- அதில் மட்டும்தான் அடுத்த ஐந்து வருடங்களுக்கும் வேலை செய்கிறார்கள். ஆரம்பத்தில் அந்தத் தொழில்நுட்பம் எப்படி இருந்ததோ அது மட்டும்தான் ஐந்து வருடங்களுக்குப் பிறகும் தெரியும். ஆனால் ஐந்து வருடங்களில் அந்தத் தொழில்நுட்பம் பத்து குட்டிக்கரணம் அடித்து வெகு முன்னால் ஓடியிருக்கும். ஐந்து வருடங்களுக்குப் பிறகு வேலை தேடத் தொடங்கினால் இந்த புதிய தொழில்நுட்பம் (Advanced versions) தெரியுமா என்றுதான் கேட்கிறார்கள். நிறையப் பேருக்குத் தெரிவதில்லை என்பதால்தான் சிக்கிக் கொள்கிறார்கள்.
வேலைக்கு ஆள் எடுப்பவர்கள் சந்திக்கும் இரண்டாவது பிரச்சினை- புதிய தொழில்நுட்பத்தைத் தெரிந்து வைத்திருக்கும் ஆட்களை வளைப்பது. வருடச் சம்பளம் பத்து லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்டு ஒரு நிறுவனத்தில் வேலையை வாங்கிவிடுவார்கள். வாங்கிவிட்டு சும்மா இருக்கிறார்களா? இன்னொரு நிறுவனத்தை அணுகி ‘பாரு..எனக்கு இது தெரியும்..அவன் பத்து லட்சம் தர்றேன்னு சொல்லுறான்..நீ பதினோரு லட்சம் தருவியா?’ என்று கேட்கிறார்கள். தேவையிருக்கும்பட்சத்தில் இரண்டாம் நிறுவனம் சரி என்று தலையை ஆட்டிவிடுகிறது. முதல் நிறுவனத்துக்காரன் ஊறுகாய் ஆகிவிடுகிறான். ‘எப்படியும் நம் நிறுவனத்துக்குத்தான் வருவான்’ என்று வழி மீது விழி வைத்துக் காத்துக் கொண்டிருப்பான். இது மிகச் சாதாரணமாக நடக்கிற சம்பவம்.
இந்த இரண்டு பிரச்சினைகளும் உணர்த்துகிற விஷயம் ஒன்றே ஒன்றுதான். இன்றைய சூழலுக்கு ஏற்ப நிறுவனங்களுக்குத் தேவைப்படுகிற தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்திருக்கும் ஆட்கள் மிகச் சொற்பம். ஒருவேளை தெரிந்து வைத்திருந்தால் அவர்கள் ராஜாவாகத் திரிகிறார்கள்.
சென்ற வாரத்தில் ஈரோட்டுப் பையன் ஒருவனிடம் பேச வேண்டியிருந்தது. பெங்களூரில் மென்பொருள் துறையில் இருக்கிறான். மூன்று வருட அனுபவமிருக்கிறது. சம்பளம் சொற்பம்தான். வேறு நிறுவனத்திற்கு மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் புதிய வேலையே கிடைக்கவில்லை. மேற்சொன்ன அதே காரணம்தான். வீட்டில் விடுவார்களா? ‘வேறு வேலைக்கு மாறி நல்ல சம்பளம் வாங்கத் தொடங்கினால் பெண் பார்த்து திருமணம் செய்து விடலாம்’ என்று பஜனை பாட ஆரம்பித்திருக்கிறார்கள். பையனுக்கு மன அழுத்தம் அதிகரித்திருக்கிறது. தன்னால் முடியாது போலிருக்கிறது என நினைத்தவன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக உளறியிருக்கிறான். வீட்டில் பதறிப் போனவர்கள் அலுவலகத்தின் வேலை அழுத்தம்தான் காரணம் என்று நம்பியிருக்கிறார்கள். ‘ஐடின்னாவே இப்படித்தான்..சோறு தண்ணியில்லாம கஷ்டப்படுறாங்க’ என்று தப்புக்கணக்கு போட்டு ஊரில் இருப்பவர்களிடமெல்லாம் தம்பட்டம் அடித்திருக்கிறார்கள். அவனிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. உண்மையில் அலுவலகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவனிடமும் குடும்பத்திடமும்தான் பிரச்சினை. அவனிடம் பேசிய பிறகுதான் புரிகிறது. குடும்பத்தினரின் எதிர்பார்ப்பையும் தவறு என்று சொல்ல முடியாது. பையன் வேலையில் சேர்ந்து மூன்று வருடங்களாகிறது. திருமணம் செய்து வைத்தால் தங்களது கடமை தீரும் என்று எதிர்பார்க்கிறார்கள். தவறு பையன் மீதுதான். அப்டேட் ஆகாமலேயே இருக்கிறான்.
‘இல்லண்ணா...ஆபிஸ் வேலை தவிர வேறு எதையுமே செய்ய முடியறதில்ல’ என்கிறான். இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது. ஃபேஸ்புக், வாட்ஸப் என எல்லாவற்றிலும் பையன் பயங்கர பிஸி. எதையுமே வேண்டாமென்று சொல்லவில்லை. இவற்றில் எல்லாம் இருந்து பத்து பத்து நிமிடங்களை மிச்சம் பிடித்தால் ஒரு மணி நேரத்தைச் சேர்த்துவிடலாம். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் போதும். மூன்றே மாதத்தில் எவ்வளவு பெரிய தொழில்நுட்பமாக இருந்தாலும் கற்றுக் கொள்ளலாம். காலத்துக்குத் தகுந்தபடிக்கு மாறிக் கொண்டிருந்தால் எந்த அழுத்தமும் நம்மை அவ்வளவு சுலபத்தில் அசைத்துவிடாது. The world never ends என்று சொல்லியபடி நகர்ந்து கொண்டேயிருக்கலாம்.
இன்றைய தினத்தின் இன்னொரு பதிவு: ஆர்.கே.நகர்
13 எதிர் சப்தங்கள்:
நல்ல கட்டுரை
எந்த தொழில்நுட்பம் உங்களுக்கு கைகொடுத்தது மணிகண்டன்..?
Good one Mani...even I am sailing in same boat, being in IT for more than 10 yrs, didnt learn anything new in last 5 years.
Let me try that 1 hr time.
Mani - Awesome blog.
Very simply & nicely explained the inner details of the IT Industry recruitment with your own style. Staying as Middle class Madhavan easy as long as folks update their skills. Absolutely true statement.
Keep writing IT related blogs like this also often. Thanks
Arul.
same question here also :)
எந்த தொழில்நுட்பம் உங்களுக்கு கைகொடுத்தது மணிகண்டன்..?
Subramanian Vallinayagam
MY DEAR MANIKANDAN,
AS USUAL SIMPLY BRILLIANT.
THIS TRUE OF ALL FIELDS NOT ONLY IT.
TODAYS CHILDREN STOP LEARNING THE MOMENT THEY GET A JOB. EVEN THOSE WAITING FOR EMPLOYMENT DO NOT UPDATE THEMSELVES. THE URGE TO LEARN IS ABSENT.
ALL SCIENCES ARE DEVELOPING DAILY. AS SOMEONE SAID YOU HAVE TO RUN TO STAY PUT/ WHERE YOU ARE,
AT OUR TIMES ONE HAS TO GO TO THE LIBRARY OR SEEK PROFESSIONAL JOURNALS.
TO DAY ALL KNOWLEDGE IS THERE IN THE NET. LEARNING IS JUST A CLICK OF THE MOUSE. IT IS NOT LACK OF TIME. IT IS LACK OF INTEREST/LAZINESS.
AS SAID,THEY HAVE ALL THE TIME FOR FACE BOOK,WHATSAPP, DRINKING,CHATTING ON FALSE NAMES AND ALL OTHER AVENUES PROVIDED BY MODERN GADGETS.
MIDDLE CLASS MADHAVANS CAN ALSO BECOME VPS. CEOS, COOS ETC IF ONE IS SINCERE AND HONOEST TO HIS PROFESSION.
I AM MYSELF A STANDING EXAMPLE.
HAILING/STUDYING FROM TRICHY AND IN TAMIL MEDIUM I WENT ON TO HEAD FINANCE OF A IMPORTANT DIVISION OF OIL MAJOR A FORTUNE 500 COMPANY.
FURTHER I WAS CEO OF AN OVERSEES VENTURE.
IT WAS KNOWLDGE/HONNESTY AND COMMITMENT THAT HELPED ME.
YOU HAVE ALL THESE AND MORE.
VERY SOON YOU WILL HEAD A COMPANY.
MY APPEAL TO TO DAYS YOUTH IS LEARN,LEARN AND LEARN.
YOU HAVE ALL THE TIME/TOOLS.
WITH LOVE,
NAGESWARAN.
This is true Mani anna. We will follow it from now onwards. Thanks for the blog.
ERP(Oracle Apps) அதில் கொஞ்சம் Cloud தெரியும் :)
மிக அருமை. நான் தங்களின் மற்ற பதிவுகளையும் படித்தாலும், இந்த ஒன்று மிகவும் பிடித்ததால் எழுதுகிறேன். இது போன்ற விழிப்புணர்வு பதிவுகள் இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு மிகவும் தேவை.
ஐ.டி. என்பதே எந்த நேரமும் நம்மை அந்த நிமிடம் வரை ஏற்பட்ட தொழில் நுட்பம் அறிந்து இருப்பது தான்.
இதனை, மிக அருமையாக விளக்கி உள்ளது அருமை.
அட...போட வச்சிட்டீங்க .... நல்ல கட்டுரை
It is easy to say but difficult to do.
இப்படியான கட்டுரைகளை எல்லாம் தொகுத்து ஒருபுத்தகம் போடலாம் மணி, நிறைய வழிகாட்டுதல்கள் கிடைக்கும். எழுத்து ஒரு வரம், அது மணிக்கு வாய்த்துள்ளது, வாழ்த்துகிறேன்.
இளவல் ஹரிஹரன்
அப்பட்டமான உண்மை.
Post a Comment