Jun 11, 2015

எரிச்சலாக இருக்கிறது

“முதல்ல ஒரு தடவை பணம் கேட்டீங்க அனுப்பி வைச்சோம். பின்னாடி அதுவே உங்களுக்கு வேலையாப் போச்சு. எரிச்சலாக இருக்கிறது. வாசகனுக்காகத் தான் எழுத்தாளனே தவிர எழுத்தாளனுக்காக வாசகன் இல்லை”- சில நாட்களுக்கு முன்பாக இப்படி ஒருவர் பின்னூட்டம் எழுதியிருந்தார். படித்தவுடனேயே சுள்ளென்றிருந்தது. பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை செய்யவில்லை. ஒருவேளை அவர் சொல்வதில் நியாயமிருக்கிறதோ என்று இருபது பேரிடமாவது விசாரித்திருப்பேன்.

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட வேண்டும். நிசப்தம் வாசிப்பவர்களால் மட்டும்தான் அறக்கட்டளையின் காரியங்கள் சாத்தியமாகியிருக்கின்றன. வேறு எந்த பலமும் அறக்கட்டளைக்கு இல்லை.  ஊடக ஆதரவு, பிரபலங்களின் உதவிகள் என்ற எதையும் எதிர்பார்க்கவில்லை. வாசிப்பதற்காக வந்து போகிற ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு பகுதியினர் வழங்கும் நிதியின் வழியாகத்தான் அடுத்தவர்களுக்கு உதவ முடிகிறது. நிசப்தமும் இந்த எழுத்தும் இல்லையென்றால் இவையெல்லாம் நடந்திருக்காது என்பதை அறிந்து வைத்திருக்கிறேன். இவை எதுவும் என்னுடைய தனிப்பட்ட சாதனை இல்லை என்பதிலும் தெளிவாகவே இருக்கிறேன். எனவே அதே எழுத்து வழியாக வாசிப்பவர்களை எரிச்சல் அடையச் செய்துவிடக் கூடாது என்பதில் முடிந்தவரைக்கும் கண்ணும் கருத்தமாகவே இருக்க முயல்கிறேன். 

வரவு செலவுக் கணக்கையெல்லாம் மாதம் ஒரு முறை வெளியிட்டால் போதும்தான். ஆனால் அறக்கட்டளையின் செயல்பாடுகள் என்னவென்பதை குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறையேனும் எழுதிவிட விரும்புகிறேன். இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு நான்கு பேர்களாவது தொடர்பு கொள்கிறார்கள். அதில் ஒருவர் சொல்லக் கூடிய விஷயமாவது படுபயங்கரமானதாக இருக்கிறது. நேற்று பேசிய பெண்மணி விபத்தில் அடிபட்ட தனது உறவுக்கார குடும்பத்தைப் பற்றிச் சொன்னார். அந்தக் குடும்பமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குடும்பத் தலைவர் இறந்துவிட்டார். மகன்களுக்கு முகத்தில் அடி. பெண்மணிக்கு கால் எலும்புகள் நொறுங்கிப் போயிருக்கின்றன. இதற்கு மேல் அதை விலாவாரியாக எழுத விரும்பவில்லை. எழுதவும் முடியாது. அவ்வளவு கொடூரமாக இருக்கிறது. 

இப்படியான செய்திகள் அலைகழிக்கச் செய்கின்றன. இதையெல்லாம் யாரோ ஒருவர் சொல்லி அதைக் கேள்விப்படும்போது பெரிய பாதிப்பு இருப்பதில்லை.  ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவுகளும் நட்புகளும் அவர்கள் உணர்ந்து கொண்டிருக்கும் அதே வலியோடு நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் போது அதன் வீரியம் பன்மடங்காக இருக்கிறது. இந்த உலகில் ஏன் சில குடும்பங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தக் குடும்பங்களின் மீது மிகப்பெரும் பாரங்கள் இறக்கி வைக்கப்படுகின்றன? இதே உலகத்தில்தான் அயோக்கியர்களும், துரோகிகளும், இன்னபிற மோசமானவர்களும் சகல செளபாக்கியங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் எளியவர்களும் அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லாதவர்களும் நோய்மையாலும் விபத்தினாலும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். முரண்கள் சூழ்ந்த உலகு இது. பல சமயங்களில் இந்தக் குழப்பங்கள் மனதுக்குள் பேயாட்டம் போடுகின்றன. சில நாட்களில் தூங்கவே முடிவதில்லை. 

இத்தகைய செய்திகளைத் தொடர்ந்து உள்வாங்கிக் கொண்டேயிருந்தால் என்னுடைய நிலைமை என்னவாகிப் போகும் என்று பயம் வருவது இயல்பானதுதானே? ஏற்கனவே சில நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த விஷயம்தான் - கொஞ்ச காலத்தில் மனிதர்களின் பிரச்சினைகள் பற்றிய எந்தக் கருணையுமில்லாமல் இறுகிப் போய்விடுவேனோ என்று நடுக்கமாக இருக்கிறது. இவ்வளவு குரூரமான செய்திகளையும் மனித வாழ்வோடு விதி நடத்தும் அதிபயங்கரமான விளையாட்டுகளையும் இத்தனை நெருக்கமாகச் சென்று அறிய வேண்டியிருக்கும் என்று எந்தக் காலத்திலும் நினைத்துப் பார்த்ததில்லை. திரும்பத் திரும்ப விபத்துகளையும் நோய்மைகளையும் ஏழ்மையையும் இவ்வளவு அணுக்கத்தில் பார்க்கும் போது சற்று பதற்றமாகவும் இருக்கிறது.

இதையெல்லாம் வீட்டிலும் சொல்ல முடிவதில்லை. சொன்னால் இவற்றை விட்டுவிடச் சொல்வார்கள். அவர்களுடைய அக்கறையின் வெளிப்பாடு அப்படித்தான் இருக்கும். வேறு என்னதான் வடிகால்? தினந்தோறும் எதிர்கொள்கிற, கேள்விப்படுகிற அத்தனை விஷயங்களையும் இங்கு அப்படியே இறக்கி வைக்கப் போவதில்லை என்றாலும் மேம்போக்காகவாவது எழுதிவிட விரும்புகிறேன்- வாரம் ஒரு முறையாவது. அதன் வழியாக எதையோ இறக்கி வைத்த உணர்வு கிடைக்கிறது என்று சொன்னால் அதில் எந்த மிகைப்படுத்துதலும் இல்லை.

பணம் கேட்பதாகச் சொல்லும் வாக்கியம்தான் குத்துகிறது. என்னுடைய தேவைகளுக்காகக் கூட இதுவரை யாரிடமும் பணம் கேட்டதாக ஞாபகம் இல்லை. சுய தேவைகளுக்காக பணத்தை வைத்துக் கொள்கிற மனநிலையும் என்னிடமில்லை. நம்புவீர்களா என்று தெரியாது. ஒவ்வொரு மாதமும் ஐந்தாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு மீதச் சம்பளத்தை தம்பியிடம் கொடுத்துவிடுகிறேன். வீட்டின் வரவு செலவுக் கணக்கு பற்றிய எந்த விவரமும் எனக்குத் தெரியாது. இந்த லட்சணத்தில் நான் எதற்கு பணம் கேட்க வேண்டும்? 

மேலே சொன்னதையெல்லாம் வைத்து இதைப் புலம்பலாகவோ அல்லது பயப்படுவதாகவோ அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். பெரும்பாலானவை எதிர்பார்த்த சமாச்சாரங்கள்தான். இதற்கெல்லாம் ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும் என்று தெரியும். பதில் சொல்கிற அதே சமயத்தில் ‘இந்த சமூகத்துக்காக என்னை எவ்வளவு வருத்திக் கொள்கிறேன் தெரியுமா?’ என்று காட்டிக் கொள்கிற தொனி வந்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையுணர்வுடனும், சக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிற மனநிலையிலும்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இவர் எழுதியிருப்பது போன்ற வாசகர்- எழுத்தாளர் என்கிற படிநிலை மீதெல்லாம் எந்த நம்பிக்கையும் இல்லை. அது அவசியமும் இல்லை. எனக்குத் தெரிந்ததை எளிய மொழியில் சக மனிதர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதற்கு மேல் எதுவும் இல்லை. இங்கு யாருக்காகவும் யாரும் இல்லை.

இவருடைய நோக்கம் என்னவென்று தெரியவில்லை. என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். இதே எரிச்சல் வேறு யாருக்காவது கூட வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் மன்னிப்புக் கோரிக் கொள்கிறேன். சிலர் படும் எரிச்சலைக் கடந்துதான் வேறு சிலருக்கு கை நீட்ட முடிகிறது என்பது துரதிர்ஷ்டம்தான். நம் சுற்றம், குடும்பம் என்பதைத் தாண்டி யாரோ சிலருக்கு நம்மால் சிறு உதவியைச் செய்ய முடியும் என்று புரிந்து கொண்ட தருணத்தின் சந்தோஷத்தையும் ஆன்ம திருப்தியையும் விவரிக்க முடியுமா என்று தெரியவில்லை. வாழ்வின் அர்த்தம் அதில்தான் இருக்கிறது. அதைத் தொடர்ந்து செய்வதற்கான பலத்தையும் பணத்தையும் இங்கிருந்துதான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். இதே இடத்தில்தான் என்னுடைய சிக்கல்களின் முடிச்சுகளையும் அவிழ்த்துக் கொள்ள விரும்புகிறேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இன்று எழுதப்பட்ட மற்றொரு கட்டுரை: கேடிகள்