Jun 9, 2015

தி.மு.க

நான்கு நாட்களுக்கு முன்பாக ஆர்.கே.நகர் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை குறித்து ஒரு கட்சிப் பிரமுகர் பேசினார். திமுக தேர்தலைப் புறக்கணித்தது அரசியல் சாதுர்யம் என்றார். பழம் தின்று கொட்டை போட்ட கட்சிக்காரர் அவர். தலைமை என்ன சொன்னாலும் அதுதான் சரி தர்க்கப் பூர்வமாக என்று வாதிடுவார். ‘திமுக நின்று தோற்றுப் போனால் கட்சியினருக்கு சோர்வைக் கொடுத்துவிடும்’ என்றும் ‘தேர்தல் எப்படி நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே’ என்றார். அவர் சொல்வதில் நியாயம் இருக்கிறது. பொதுத்தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம்தான் இருக்கிறது. எதிராளியே இல்லாத களம் என்றே தெரிந்திருந்த போதிலும் முந்தாநாள் வரைக்கும் முதலமைச்சராக இருந்தவரே கூட மொட்டையடித்துவிட்டு சாலையில் இறங்கி தெருத்தெருவாக கும்பிடு போகிறார். ஸ்டாலின் நின்றிருந்தால் என்னவெல்லாம் செய்திருப்பார்கள்? பெரிய வாக்கு வித்தியாசத்தைக் காட்டுவதற்காக தண்ணீர் தெளித்துவிட்டது போல வெறியெடுத்து திரிந்திருப்பார்கள்.

ஸ்டாலின் நின்று தோற்றிருந்தால் தொண்டர்கள் உற்சாகமிழந்து போவார்கள் என்பது சரிதான். அவர் போட்டியிட வேண்டாம். ஆனால் கட்சியின் அடிமட்டத் தொண்டனை நிறுத்தியிருக்கலாம் அல்லவா? பஞ்சர் கடை நடத்துபவரையோ, சாலையோரம் துணி தேய்த்துக் கொண்டிருப்பவரையோ திமுக சார்பில் நிறுத்தி கணிசமான வாக்கை வாங்கிக் காட்டியிருக்கலாம். கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் வெற்றிவேல் எண்பதாயிரம் வாக்குகள் வாங்கினார். திமுகவின் சேகர் பாபு ஐம்பதாயிரம் வாக்குகள் வாங்கியிருந்தார். மற்றவர்களின் டெபாசிட் காலியானது. இந்த முறை ஜெயலலிதா தவிர அத்தனை பேருக்கும் டெபாசிட் காலியாக வேண்டும் என்று அதிமுகவின் எந்திரம் வேலை செய்யும். அப்படி நடவாமல் தடுத்திருக்கலாம். திமுக இன்னமும் அதே வலுவுடன் இருக்கிறது என்று காட்டியிருக்கலாம். சேகர் பாபு இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்த தொகுதி இது.  சந்து பொந்தெல்லாம் அவருக்கு அத்துப்படியாக தெரிந்திருக்கும். அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து பெரும் படையைக் களமிறக்கியிருக்கலாம். வெல்வதும் தோற்பதும் அடுத்த கட்டம். குறைந்தபட்சம் செந்தில்பாலாஜியும், பன்னீர்செல்வமும், நத்தமும், வளர்மதியும் வாயில் துண்டைச் செருகியபடி அலைந்திருப்பார்கள். திமுக இன்னமும் ஓய்ந்துவிடவில்லை என்று தெனாவெட்டாக நிரூபித்திருக்கலாம். திமுகவின் அடிமட்டத் தொண்டன் வாங்கும் ஒவ்வொரு வாக்கும் ஜெயலலிதாவுக்கு விழும் அடி என்று பேச வைத்திருக்கலாம். அதைச் செய்யாமல் திருமண வரவேற்பில் கோட் சூட் போடலாமா அல்லது பட்டு வேட்டி கட்டலாமா என்று நிற்கிறார்களே என்றுதான் எழுதியிருந்தேன். 

நான்காண்டுகளுக்கு முன்பாக திமுகவின் மீது விழுந்த கரும்புள்ளியை மக்கள் மறந்திருப்பார்கள் என்றும் பொதுத்தேர்தலில் நமக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று குருட்டுத்தனமாக நம்புவதைத் தவிர பெரிய தவறு எதுவுமே இருக்க முடியாது. சமீபகாலமாக கவனித்தால் ஒன்றை புரிந்து கொள்ளலாம்- திமுகவின் கடந்த காலத் தவறுகளைத் தூசி தட்டி அவற்றை மீண்டும் நினைவூட்டும் வேலையை ஆரம்பித்திருக்கிறார்கள். அதிமுக ஆட்சியின் அத்தனை குறைகளையும் திமுகவின் பழைய கெட்டபெயர் மறக்கடிக்கச் செய்துவிடும் என்று நம்புகிறார்கள். சமூக ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் அந்த வேலையைத் திறம்படச் செய்து கொண்டிருக்கின்றன. கடந்த காலங்களில் இத்தகையை சூழல்களில் தனது துப்பாக்கிகளை எதிரிகளின் பக்கமாகத் திருப்பும் திமுக இப்பொழுது வெகு அமைதி காக்கிறது. ஏன் ஸ்டாலினால் வெகு தீவிரமாக எதிர்வினையாற்ற முடியவில்லை? அதிமுகவின் குறைகளை மக்கள் மன்றத்தில் ஏன் திறம்பட வெளிப்படுத்த முடியவில்லை? அதிமுகவைவிடவும் திமுக எந்த வகையில் சிறந்தது என்பதைக் கடந்த நான்காண்டுகளில் திமுகவினரால் நிரூபிக்கவே முடியவில்லை என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். 

பொதுமக்களிடம் கட்சியை எடுத்துச் செல்வது இரண்டாம்பட்சம். சாமானியத் தொண்டனின் மனநிலை எப்படியிருக்கிறது? உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறார்களா? இல்லையென்று சொன்னால் மேல்மட்டத் திமுகவினருக்கு கோபம் வரும். உள்நோக்கதோடு எழுதுகிறான் என்பார்கள். அவர்களே விசாரித்துப் பார்க்கட்டும். கடந்த இருபதாண்டுகளாக கட்சியில் இருப்பவர்களிடம் கேட்டுப் பார்க்கட்டும். நிலைமை புரியும்.

தேர்தல் தோல்விகள் மட்டும் இந்த உற்சாகக் குறைவுக்கும் சோர்வுக்கும் காரணமில்லை. எம்.ஜி.ஆர் காலத்து தோல்விகள் கூட திமுக தொண்டர்களை உற்சாகமிழக்கச் செய்ததில்லை. பிரச்சினை வேறு எங்கோ இருக்கிறது-திமுகவிற்கு காலங்காலமாக அதன் களப்பணிதான் பெரும்பலமாக இருந்தது. இப்பொழுது அப்படியில்லை. அதிமுகவின் பணபலத்துக்கும் அவர்களது களப்பணிக்கும் எதிரில் திமுகவினரால் போட்டிபோட முடிவதில்லை என்பதுதான் நிஜம். திமுகவில் தொண்டன் மட்டும்தான் களத்தில் இறங்குவான். பதவியில் இருப்பவர்களில் ஸ்டாலின் தவிர பெரும்பாலானவர்கள் காரை விட்டே இறங்குவதில்லை. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் மேலிடம் கவனிக்கிறது என்பதற்காகவாவது மொட்டை வெயிலில் கருகுகிறார்கள். திமுகவின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் இப்படி அலைவார்களா? அப்படியான களப்பணியாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். 

ஸ்டாலினால் எத்தனை வேலைகளைத் தன் தோளில் தூக்கிப் போட்டுக் கொள்ள முடியும்? இருந்த இடத்தில் இருந்து வேலை வாங்குவதுதான் தலைவனுக்கு அழகு. எவன் துள்ளினாலும் வாலைக் கத்தரிக்கும் தைரியம் வேண்டும். அதெல்லாம் அவரிடம் இருக்கிறதா? ஒத்துவராத ஆட்களைத் தட்டியெறிய வேண்டும். உட்கட்சி ஜனநாயகம் என்பது வேறு. கட்டுப்பாடு என்பது வேறு. கட்சிக்காக வேலை செய்கிறவன் கேள்வி கேட்டால் அர்த்தமிருக்கிறது. ஆனால் திமுகவில் குறுநில மன்னர்கள் அல்லவா கேள்வி கேட்கிறார்கள்? 

இப்படியெல்லாம் அதிமுகவில் யாராவது துள்ள முடியுமா? அதிமுகவை விடுங்கள். தேமுதிகவில் கூட துள்ள முடியாது. ஆனால் திமுகவில் துள்ளுவார்கள். பல மாவட்டங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. முப்பத்து இரண்டு மாவட்டங்கள் இப்பொழுது அறுபத்தைந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. பிரச்சினை செய்பவர்களிடம் ‘ஒன்றை நீ வைத்துக் கொள். இன்னொன்றை அவனுக்குக் கொடுத்துவிடு’ என்று அமைதிப்படுத்திவிட்டார்கள். ஈரோடு மாவட்டத்தில் விசாரித்தால் ஒரு கணக்கைச் சொல்கிறார்கள். புதிய மாவட்டத்தில் அறுபது சதவீத பதவிகள்தான் மாவட்டச் செயலாளரின் ஆட்கள் வசம் இருக்கும். மீதமிருக்கும் நாற்பது சதவீதத்தை எதிராளியிடம் ஒப்படைத்துவிட வேண்டும். உதாரணமாக ஒரு மாவட்டத்தில் பத்து பேரூர் கழகச் செயலாளர் பதவிகள் இருந்தால் ஆறு பேரூர் செயலாளர்கள் மாவட்டச் செயலாளரின் சொல்பேச்சைக் கேட்பார்கள். ஏனென்றால் அந்த ஆறு பேரும் அவருடைய ஆட்கள். மீதமிருக்கும் நான்கு பேர்கள் பக்கத்து மாவட்டச் செயலாளரின் பேச்சைத்தான் கேட்பார்கள். மாவட்டச் செயலாளர் பொறுப்பு என்பதே கட்சியை வலுப்படுத்தும் பதவிதானே? முழு பலத்தையும் அவருக்குக் கொடுக்காமல் வெறும் அறுபது சதவீத பலத்தை மட்டும் கொடுத்தால் எப்படி கட்சியை வலுப்படுத்துவார்? பிறகு எதற்கு அந்தப் பதவி? 

கடந்த ஐந்து ஆண்டுகள் வரைக்கும் வேறு கட்சிகளில் சம்பாதித்தவர்கள்தான் இன்றைக்கு ஒன்றியச் செயலாளர்களாகவும், நகரச் செயலாளர்களாவும் இருக்கிறார்கள். இப்படியெல்லாம் வேறு கட்சியில் இருந்து திமுகவில் பதவிக்கு வந்தவர்கள் எந்த ஊரில் பதவியில் இருக்கிறார்கள் என்று யாராவது கேள்வி கேட்டால் எங்கள் மாவட்டத்தையே கூட சுட்டிக் காட்டுவேன். பணம் படைத்தவனுக்குத்தான் பதவி என்று எழுதாமல் எழுதப்பட்டிருக்கிறது. ஜமீன்தார்களையும் மிட்டாமிராசுகளையும் எந்தக் கட்சி புரட்டி வீசியதோ அந்தக் கட்சியில்தான் இப்பொழுது அதே ஜமீன்தார்களும் பணக்காரர்களும்தான் பதவியில் இருக்கிறார்கள். அதே பணக்கார பவிசுடன் பந்தாவாக அலைகிறார்கள். பிறகு எப்படி கட்சி வளரும்? 

கட்சிப் பதவிக்கான நேர்காணலுக்குச் சென்றால் ‘கட்சி நிதி எவ்வளவு கொண்டு வந்திருக்கீங்க?’ என்கிறார்களாம். தேர்தலில் இடம் கேட்டு நேர்காணலுக்குச் சென்றால் ‘எவ்வளவு செலவு செய்ய முடியும்?’ என்கிறார்களாம். அடிமட்டத் தொண்டன் எப்படித் துணிந்து இடம் கேட்பான்? அடுத்த கட்சியைப் பார்ப்பான் அல்லவா? அங்கு மாரடைப்பு வந்து செத்தவன், மனைவியிடம் சண்டை பிடித்து விஷம் குடித்துச் செத்தவனுக்கெல்லாம் ‘மனம் ஒடிந்து இறந்துவிட்டதாக’ கணக்குக் காட்டி லட்சக்கணக்கில் காசு கொடுக்கிறார்கள். நம் கட்சியில் நம்மிடம்தான் காசு கேட்கிறார்கள் என்று சாதாரணக் கட்சிக்காரன் நினைப்பானா இல்லையா?

கட்சியில் கீழே இருப்பவன் வேலையும் செய்ய வேண்டும். கப்பமும் கட்ட வேண்டும். மாவட்டச் செயலாளரிடம் கட்சி நிதி கேட்டால் அர்த்தம் இருக்கிறது. அவர்கள்தான் முக்கால்வாசி பொறுப்புகளை காசுக்கு விற்று பணம் சேர்த்து வைத்திருக்கிறார்களே. வார்டு பிரதிதியிடமெல்லாம் காசு கேட்டால் அவன் எங்கே போவான்?  ‘நமக்கு எதுக்குய்யா கட்சியும் பதவியும்’ என்று ஒதுங்கி ஆயுளுக்கும் உதயசூரியனுக்கு வாக்களிப்பதோடு அமைதியாகிவிடுகிறான். அப்படித்தான் நிறையத் தொண்டர்கள் ஒதுங்கிக் கிடக்கிறார்கள். 

இதையெல்லாம் எழுதி திமுகவை குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கமெல்லாம் எதுவும் இல்லை. அதனால் எனக்கு எந்த இலாபமும் இல்லை. திமுகவின் மீது அபிமானம் வைத்திருந்தேன். அது கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டேயிருந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்த போது சற்று சந்தோஷமாக இருந்தது. அதுவரையிலும் பதவிக்காகவும் பணத்துக்காகவும் துள்ளிக் கொண்டிருந்த தூசிகள் திமுகவில் அடங்கிவிடும் என்ற நம்பிக்கை பிறந்திருந்தது. ஸ்டாலின் வலிமையான தலைவராக எழுவார் என்று எதிர்பார்த்தேன். நம்முடைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் சிதையும் போதும் உண்டாகக் கூடிய ஆதங்கம் இயல்பானதுதானே! அந்த ஆதங்கம்தான்.