Jun 15, 2015

நான் அவன் இல்லை

வணக்கம். உங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதால், நீங்கள் நலமா என விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

சுற்றி வளைத்துப் பேசாமல் நேராக விசயத்துக்கு வருகிறேன். எனக்கு தினசரி வாழ்க்கையில் பார்க்கிற, கேட்கிற, அனுபவிக்கற நிகழ்வுகள், சந்திக்கிற மனிதர்கள் எல்லா(ரு)மே என்னுடைய கனவில் வருவது வழக்கம். இதில் என்னுடைய பெற்றோர், மனைவி, மகள், நண்பர்கள், உறவினர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பலரும் அடக்கம். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாள் விடியலும் நான் கண்ட கனவின் ஞாபகங்களோடுதான் தொடங்கும்.

அது போல, நேற்று ராத்திரி (இல்லை....இரவு ) என்னுடைய கனவில் நீங்கள் வந்தீர்கள்.

அந்தக் கனவு:
"நானும் என்னுடைய நெருங்கிய நண்பனும் bachelors அறையில் தங்கிருக்கிறோம். ஒரு நாள் காலையில் பாத்தால் நீங்க எங்க அறையிலிருந்து தூங்கி எழுந்து ஆடை இல்லாம (மேலாடை மட்டும் தான் இல்லை ) வருகிறீர்கள். அங்கு உங்க அம்மா வெளியூரிலிருந்து வந்து நீங்கள் தூங்கி எழுந்து வருவதற்காக காத்துட்டிருக்காங்க. நீங்கள் வந்தவுடனே அவர் உங்களுடைய கல்யாண விஷயம் குறித்து பேசுகிறார். நீங்கள் ‘அதுக்கு இப்போ என்ன அவசரம்’ எனச் சொல்லி திருப்பி ஊருக்கு அனுப்பிவிடுகிறீர்கள். இது தான் அந்தக் கனவு. (இன்னொரு முக்கியமான விஷயம், உங்க நெஞ்சு பூராவும் கவுண்டமணி, சத்யராஜ் மாதிரி ஒரே முடி.)

அந்த நண்பனிடம் 2 வாரம் முன்பாக உங்களைப் பற்றியும் நிசப்தம் வலைத்தளம் மற்றும் அறக்கட்டளை உதவிகளைப் பற்றியும் விரிவாக பேசி இருந்தேன். அது போல தினமும் உங்கள் பதிவுகளைத் தவறாமல் படித்துக் கொண்டும் இருக்கிறேன். இவையெல்லாம் இந்தக் கனவுக்கு காரணமாக இருக்கலாம். எது எப்படியோ நீங்கள் கனவில் வந்தது ரொம்ப சந்தோசம். அதை விட, அதை உங்களிடம் சொல்லுகிற அளவுக்கு உங்களை நெருக்கமாக உணர்வதில் ரொம்ப ரொம்ப சந்தோசம். ஏன்னா, சில நடிகைகள் (ஹி ஹி ), ஒரு எழுத்தாளர், சில பதிவர்கள் என பலரும் இதுக்கு முன்னாடி என் கனவில் வந்திருந்தாலும் அதை அவர்களிடம் சொன்னதுமில்லை, சொல்ல வேண்டும் என தோன்றியதுமில்லை. அந்த வகையில் உங்களுக்கு என் நன்றி பல.

எனக்கு இது வரையில் இரண்டு கனவுகள் நிஜத்திலும் நிகழ்ந்த அனுபவம் உண்டு. விரைவில் தங்களை சந்திக்கும் ஆசை நிறைவேறி இந்த கனவும் நினைவாக வேண்டுகிறேன்.

தங்களுடைய நேரத்திற்கு நன்றி!

வாழ்க வளமுடன்,

அன்புடன்,
கோ.கார்த்தி

இந்தக் கடிதம் வந்து சில நாட்களாகிவிட்டன. என்ன அர்த்தத்தில் எழுதியிருக்கிறார் என்று குப்புறப் புரண்டாலும் கூட புரியவில்லை. இதற்கு எப்படி பதில் அனுப்புவது என்றும் தெரியவில்லை. ஒன்றைச் சொல்லியாக வேண்டும்- இதே மாதிரிதான் ‘நீங்க என் கனவில் வந்தீங்க’ என்று இரண்டு மூன்று நடிகைகளிடம் சொல்லியிருக்கிறேன். மார்கெட் சரிந்த நடிகைகள்தான் என்றாலும் கூட அவர்கள் சீந்தவே இல்லை. என்னை மாதிரி ஆயிரக்கணக்கானவர்களை அவர்கள் பார்த்திருப்பார்கள். எனக்கு அப்படியா? இந்தக் கடிதம்தான். ஒன்ணே ஒன்னு. கண்ணே கண்ணு. அதனால் ப்ரிண்ட் அவுட் கூட எடுத்து வைத்திருக்கிறேன்.

இரண்டு நாட்களாக காலையில் ஒரு முறை கடிதத்தை படித்துவிட்டு மூடி வைப்பதும் மீண்டும் மாலையில் ஒரு முறை படிப்பதுமாக மோன நிலையிலேயே இருந்திருக்கிறேன். இப்படியெல்லாம் யாராவது கடிதம் எழுதுவார்கள் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதுவும் அவருடைய வர்ணிப்புகளை வாசித்துவிட்டு விக்கித்து போய்விட்டேன். கோ.கார்த்தி என்பதை எத்தனை முறை வாசித்தாலும் கோ.கார்த்தியாகவேதான் தெரிகிறது. ஒரு முறை கூட கார்த்திகாவாகக் கூடத் தெரியவில்லை என்பதுதான் பெரிய துரதிர்ஷ்டம்.

ஆகவே அன்புள்ள கார்த்தி, உங்களின் பாராட்டுக்களுக்கும், ஆசைக்கும் நன்றி. ஏற்கனவே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். மகன் பள்ளிக்குச் செல்கிறான். உங்கள் கடிதம் மகிழ்ச்சியளிக்கிறது. பெங்களூர் வரும் போது சொல்லுங்கள். 

மற்றபடி, என்னுடைய மின்னஞ்சலின் கடவுச் சொல் என் மனைவிக்கும் தெரியும் என்பதை மட்டும் இன்னொரு முறை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விடைபெற்றுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

இன்றைய மற்ற பதிவுகள்: வேலை, அடுத்தது