Jun 19, 2015

ஆப்பிரிக்கர் என்ன சொன்னார்?

ராமையா மருத்துவமனை வரைக்கும் செல்ல வேண்டிய வேலை இருந்தது. தெரிந்த பெண் ஒருவரை அங்கு அனுமதித்திருக்கிறார்கள். ஏழு மாத கர்ப்பம். ஆரம்பத்திலிருந்தே பிரச்ச்சினைதான். உயர் ரத்தம் அழுத்தம், அது இதுவென்று திணறிக் கொண்டேயிருந்தார். ஏழு மாதமாக வேலைக்கும் செல்வதில்லை. நேற்று ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்கள். குழந்தை அறுநூற்றைம்பது கிராம்தான் இருந்திருக்கிறது. இவருடைய உடல்நிலை மோசமாகியிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் குழந்தைக்கு இதயத்துடிப்பு மிகக் குறைவாக இருந்திருக்கிறது. சுகப்பிரசவம்தான் சரியாக இருக்கும் என்று சொல்லி வலி மருந்து கொடுத்திருக்கிறார்களாம். அந்தப் பெண் நேற்றிலிருந்து அழுது கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆறுதல் சொல்வதற்காகச் சென்றிருந்தோம். 

அவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. வெளியில் அவருடைய அம்மாவும் கணவரும் வெளியில் நின்றிருந்தார்கள். காவலாளியிடம் பேசிப் பார்த்தோம். ‘பேசுனா அவங்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்’ என்று கன்னடத்தில் சொன்னார்கள். அவர் வரம் கொடுப்பதாகவே தெரியவில்லை. எங்களின் நச்சரிப்பு தாங்காமல் ‘உள்ளே ஆடிட்டிங் நடக்குது இருபது நிமிஷம் இருங்க...டாக்டர்கிட்ட பேசிட்டு சொல்லுறேன்’ என்றார். 

மருத்துவமனைக்குள் காத்திருப்பதைப் போன்ற கஷ்டம் வேறு எதுவுமில்லை. வலிகளையும் வேதனைகளையும் தூக்கமில்லாத இரவுகளையும் சுமந்தபடி நம்மைக் கடக்கும் கண்களை எதிர்கொள்வதும் கஷ்டம்; தவிர்ப்பதும் கஷ்டம். ஓரமாக ஒதுங்கி நின்று விட வேண்டும் அல்லது இந்த இடத்தை விட்டு ஓடி விட வேண்டும் என்றுதான் மனது விரும்புகிறது. ஆனால் அது எவ்வளவு சுயநலம்? இந்தச் சுவர்களுக்குள் சிக்கிக் கொண்ட மனிதர்கள் எதையோ அனுபவித்துவிட்டு போகட்டும்- இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான மனநிலையையும், இடத்தையும் தேடி ஓடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? ஆனால் நம்மால் வேறு என்ன செய்ய முடியும்? இந்த உலகில் ஒவ்வொருவருக்காகவும் அழத் தொடங்கினால் இந்த வாழ்க்கை முழுவதும் அழுது கொண்டேதான் இருக்க வேண்டும். துன்பத்திலிருக்கும் ஒவ்வொருவருக்காவும் வேதனைப் படத் தொடங்கினால் வாழ்நாள் முழுவதும் வேதனையைத் தவிர வேறு எதையும் அறிந்து கொள்ள மாட்டோம். 

எதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தேன்.

மருத்துவமனைக்குள் குழந்தைகளுக்கான விளையாட்டு அறை ஒன்றும் இருக்கிறது. சுவர் முழுக்கவும் வண்ணச் சித்திரங்களாகத் தீட்டி வைத்திருந்தார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் அறையினுள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெற்றவர்களுக்கு அந்த அறைக்குள் அனுமதியில்லை. குழந்தைகள் மட்டும்தான். குழந்தைகளுக்கு சந்தோஷம்தான். வெளியே நின்று வேடிக்கை பார்க்கும் பெற்றவர்களுக்கும் சந்தோஷம்தான். நமக்குத்தான் கஷ்டம். மருந்து இறக்குவதற்காக புறங்கையில் ஊசி குத்தப்பட்டு அந்த ஊசியோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் தலையிலும் கழுத்திலும் கட்டுப் போட்டபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பிஞ்சுகளும் மனதைப் பிசைந்தார்கள். அங்கிருந்தும் நகர்ந்துவிடத் தோன்றியது.

மருத்துவமனையில் சில ஆப்பிரிக்கர்களும் இருந்தார்கள். சிகிச்சைக்காக வருகிறார்கள். தனித்து அமர்ந்திருந்த ஓர் ஆப்பிரிக்க ஆணிடம் பேச்சுக் கொடுக்கத் தோன்றியது. மெதுவாக புன்னகைத்தவுடன் ‘ஹலோ’ என்றார். 

சம்பிரதாயமான அறிமுகத்துக்கு பிறகு ‘ட்ரீட்மெண்டுக்காக வந்திருக்கிறீர்களா?’ என்றேன். 

‘யெஸ்...ஃபார் மை வொஃய்ப்’ என்றார். சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக மாலியிலிருந்து வந்திருக்கிறார்கள். அப்படியொரு ஆப்பிரிக்க நாடு இருப்பது அவருடன் பேசிய பிறகுதான் தெரியும். மனைவி அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். அந்த மனிதருக்கு நாற்பது வயதுதான் இருக்கக் கூடும். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பேசிக் கொண்டிருந்தபோது தன்னுடைய மொபலை எடுத்து குழந்தைகளின் படத்தைக் காட்டினார். இரண்டு சிறுமிகள். 

மனைவி ஆசிரியராக பணியாற்றுகிறாராம். ‘அங்கேயெல்லாம் இவ்வளவு மருத்துவ வசதிகள் இல்லை’ என்றார். ஆனால் தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றனவாம். சுரங்கங்களுக்கு ஏஜெண்ட் என்பது போன்றதொரு வேலையைச் செய்கிறார். அந்தவிதத்தில்தான் சில இந்திய நகை வியாபாரிகளின் வழியாக ராமையா மருத்துவமனை அறிமுகமாகியிருக்கிறது. ‘எங்க நாட்ல ரொம்ப கஷ்டம்....திரும்பிய பக்கமெல்லாம் ஏழ்மைதான்’ என்றார். அவரிடம் கேட்கலாமா வேண்டாமா என்று தெரியவில்லை. ‘இந்தியா வந்து மருத்துவம் பார்க்கறீங்க....உங்களுக்கு வசதி இருக்கா?’ என்றேன். அவர் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. சில வினாடிகள் எதுவும் பேசவில்லை. பிறகு என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. பேச ஆரம்பித்துவிட்டார்.

சிறு காலத்திலிருந்தே வறுமைதான். அப்பா குடும்பத்தை விட்டுவிட்டு போய்விட்டார். அம்மாதான் இரண்டு மகன்களையும் வளர்த்திருக்கிறார். இவருக்கும் பெரிய படிப்பெல்லாம் எதுவுமில்லை. கொஞ்சம் வயது வந்தவுடன் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்க்கத் தொடங்கி ஓரளவு தம் கட்டியிருக்கிறார். இப்பொழுது இந்த மருத்துவச் செலவுகளுக்காக கையிருப்பு மொத்தத்தையும் வழித்தெடுத்து வந்திருக்கிறார். ‘இரண்டு பேரையும் காப்பாற்றிவிட வேண்டும்’ என்ற வெறியோடு இருப்பதாகச் சொன்னார். 

‘இரண்டு பேரா?’

‘உங்ககிட்ட சொல்லைல....ஆமா ரெண்டு பேர்தான்...அம்மாவும் குழந்தையும்’. குழந்தைக்கும் பிரச்சினை என்று அவர் சொல்லவில்லை. இப்பொழுதுதான் சொல்கிறார். அதே பிரச்சினைதான். சிறுநீரகத்தில் தொந்தரவு. 

‘குழந்தை எங்கே?’ என்றேன்.

அறைக்குள் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அந்த அறைக்குள் முன்பு பார்த்த போது ஆப்பிரிக்க குழந்தை இருப்பதை நான் கவனித்திருக்கவில்லை. அழைத்துச் சென்று காட்டினார். வெளியில் நின்று குழந்தையை நோக்கி சைகை செய்தார். அந்தக் குழந்தை சிரித்துவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தது.

‘இன்னொரு குழந்தை?’ 

‘அம்மாகிட்ட விட்டுட்டு வந்திருக்கோம்...நாலு வயசு ஆகுது’. தனது அம்மாவும் அப்பாவும் அக்காவும் வந்து சேர்வதற்காக அந்தக் குழந்தை காத்துக் கொண்டிருக்கும். 

‘எப்போ ஊருக்கு போவோம்ன்னு ஆசையா இருக்கு’ என்று அவர் சொன்ன போது வருத்தமாக இருந்தது. மனைவி மகள் என இரண்டு பேரையும் ஒரு சேர மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு மிச்சமிருக்கிற ஒரு குழந்தையை கண் காணாத இடத்தில் விட்டுவிட்டு நெரிசல் மிகுந்த இந்நகரத்தில் தனியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கும் இந்த மனிதனின் மனநிலை எப்படியெல்லாம் ஊசலாடிக் கொண்டிருக்கும்? 

‘ஏதாச்சும் ஹெல்ப் வேணும்ன்னா சொல்லுங்க’ என்றதற்கு எதுவுமே சொல்லாமல் சிரித்தார்.

‘தேங்க்ஸ்’ என்றவர் ‘ஒண்ணு சொல்லட்டுமா....Every successful person has a painful story. Every painful story has a successful ending. Accept the pain and get ready for success and Happiness' என்றார்.

சிரித்தேன். 

‘நான் சொந்தமா சொன்னேன்னு நினைச்சுக்க வேண்டாம்...அங்க பாருங்க’ என்று காட்டினார். படியில் ஒட்டி வைத்திருந்தார்கள். ‘காப்பியடிச்சுட்டேன்...ஆனா மனசுக்கு ஆறுதலா இருக்கு’ என்று சொல்லிவிட்டு பெருஞ்சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். 

இருவரும் பேசாமல் அமர்ந்திருந்தோம். அந்த இடத்தில் அந்த ஒரு வாக்கியமே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது. அவ்வளவு வலிமை மிக்க வாக்கியம் அது.

‘அந்தப் பொண்ணை இன்னைக்கு பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க’ என்று உடன் வந்தவர்கள் சொன்னார்கள். அதனால் வந்த காரியம் நிறைவேறாமலேயே திரும்பினோம். ஆப்பிரிக்கருக்கு கை கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

வண்டியில் ஏறிய பிறகு ‘ஆப்பிரிக்கர் என்ன சொன்னார்?’ என்றார்கள். அவர் படியில் ஒட்டியிருந்ததை படித்துக் காட்டியதை மட்டும் சொன்னேன். சிரித்தார்கள். 

வழியெங்கும் மழை பெய்து கொண்டிருந்தது. மழைச் சத்தத்தையும் தாண்டி அவரது சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.