Jun 29, 2015

எது ஹாட்?

சென்ற வாரத்தில் ஒரு பெரிய மனிதரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அமெரிக்க வாழ் இந்தியர். தனது நிறுவனம் சம்பந்தமான வேலைக்காக பெங்களூர் வந்திருந்தவரை தான் சந்திக்கச் செல்வதாகவும் விருப்பமிருந்தால் நீயும் சேர்ந்து கொள்ளலாம் என்று நண்பர் ஒருவர் என்னையும் அழைத்திருந்தார். இத்தகையை பெரிய ஆட்களிடம் பேசும் போது காதைத் திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்தால் போதும். எப்படியும் நல்ல விஷயங்கள் வந்து விழும். 

பொதுவாக ஐடி துறையில் கீழ் மட்ட அளவில் இருக்கும் ஆட்களுக்கு ‘இந்த ப்ராஜக்டில் என்ன பிரச்சினை, இதை எப்பொழுது டெலிவரி கொடுக்க வேண்டும்’ என்று அன்றைய தினத்தின் பிரச்சினைகளைப் பற்றி யோசிக்கத்தான் நேரம் சரியாக இருக்கிறது. அப்படியே நேரம் கிடைத்தாலும் கவனச்சிதறலுக்கான வாய்ப்புகளும் அதிகம். வாட்ஸப்பும், ஃபேஸ்புக்கும் நேரத்தைக் கொன்றுவிடுகின்றன என்பதனால் எதிர்காலத்திற்கான முஸ்தீபுகள் எதையுமே செய்வதில்லை. மேல்மட்ட ஆட்கள்தான் அடுத்து இந்தத் துறையில் என்ன மாறுதல் வரப் போகிறது, எது இந்தத் துறையை ஆளப் போகிறது என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேல்மட்ட ஆட்கள் என்றால் ஒரு நிறுவனத்தில் முடிவெடுக்கும் நிலையில் இருக்கும் ஆட்கள்.

அப்படித்தான்- சில நாட்களுக்கு முன்பு நடந்த அலுவலக மீட்டிங் ஒன்றில் ‘Angular JS தெரிந்த ஆள் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று ஒரு இயக்குநர் பேசியதைக் கேட்ட போதுதான் அப்படியொரு ஐட்டம் இருப்பதே தெரியும். விசாரித்துப் பார்த்தால் Angular JS மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. உடன் வேலை செய்யும் பலருக்கு அந்தப் பெயர் தெரிந்திருக்கிறதே அதற்கு மேல் தெரியவில்லை. 

ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பாக Big Data பற்றி பேசத் தொடங்கியிருந்தார்கள். இந்த உலகம்தான் தகவல்களால் நிறைந்து கொண்டிருக்கிறதே- எல்லாமே தகவல்கள்தான். ஒரு சமயம் இணையத்தை ஃபோர்னோகிராபிதான் ஆக்கிரமித்திருந்தது. இப்பொழுதும் அதுதான் இணையத்தில் அதிக சதவீதம் இருக்கிறது என்று யாராவது சொன்னால் தங்களை அவர்கள் புதுப்பித்துக் கொள்ளவேயில்லை என்று அர்த்தம். இப்பொழுது இணையத்தில் மிக அதிக அளவில் குவிந்து கிடப்பது எதுவென்றால் நாம் சமூக ஊடகங்களில் எழுதிக் குவிக்கும் தகவல்கள்தான். ஃபேஸ்புக், ட்விட்டர், வலைப்பதிவு என்று கிடைக்கிற இடத்தில் எல்லாம் நாம் நம்முடைய எண்ணச் சிதறல்களை குவித்துக் கொண்டே போகிறோம். இவ்வளவு டெராபைட், பெட்டாபைட், எக்ஸாபைட் தகவல்களையெல்லாம் எப்படி பகுத்து வைப்பது? எதிர்காலத்தில் இன்னமும் பெருகப் போகும் தகவல்களை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்? தேவைப்படும் தகவல்களை இந்தக் குவியலிலிருந்து எப்படி பிரித்தெடுப்பது என்பதற்காக நிறுவனங்கள் மண்டை காய்கின்றன். 

Hadoop, No SQL போன்ற நுட்பங்கள் இத்தகையை தகவல் குவியல்களில் முத்துக்குளிக்க உதவுகின்றன. ஆனால் இந்த நுட்பங்களில் அனுபவம் வாய்ந்தவர்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம். ஐந்து வருட அனுபவம் கொண்டிருக்கும் எந்த ஐடிக்காரனும் வளைந்து புதிய நுட்பங்களைப் படிப்பதில்லை என்பதுதான் நிஜம்.  நிறுவனங்களுக்கு இத்தகையை புதிய நுட்பங்களில் ஆட்கள் தேவை. என்ன செய்வார்கள்? ஹைதராபாத்தின் அமீர்பேட்டிலும் பெங்களூரின் மடிவாலாவிலும் பயிற்சி நிறுவனங்கள் இந்தப் படிப்புகளைச் சொல்லித் தருகின்றன. புதிதாக கல்லூரி முடித்தவர்கள்தான் இதையெல்லாம் படிக்கிறார்கள். நிறுவனங்களுக்கும் வேறு வழியில்லை. அவர்களை எடுத்துக் கொள்கிறார்கள்.

நமக்கு இந்தத் துறையில் ஏழெட்டு வருட அனுபவம் இருக்கிறது ஆனால் புதிய தொழில்நுட்பங்கள் தெரியவில்லை என்றால் விளைவுகளைச் சந்திக்கத் தயாராகத்தான் இருக்க வேண்டும். பயமூட்டுவதற்காகச் சொல்லவில்லை. இந்திய மென்பொருள் நிறுவனங்களின் செயல்திறன்(efficiency) குறைந்து கொண்டே போகிறது என்பதான பேச்சுக்கள் ஏற்கனவே கிளம்பியிருக்கின்றன. ஐடி துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொள்ளலாம். நம்முடைய டெக்னாலஜியில் வந்திருக்கும் புதிய நுட்பங்கள் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? பெரும்பாலானவர்களின் பதில் திருப்தியளிக்கக் கூடியதாக இருக்காது.

Cloud பற்றி வெகு காலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். எவ்ளவு பேருக்கு அது பற்றித் தெரிந்திருக்கிறது? Mobility, Internet of Things என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். இத்தகையை சூடான சொற்களைக் கேள்விப்படுவதோடு நிறுத்திக் கொள்வதுதான் இந்தியர்களின் மிகப்பெரிய பிரச்சினை என்றுதான் அந்த பெருந்தலை பேச ஆரம்பித்தார். அதற்கு மேல் அந்த நுட்பங்களைப் பற்றித் தோண்டித் துருவுவதில்லை. அதனால்தான் தேங்கிவிடுகிறோம்.

அவர் சொன்னதை மறுக்கமுடியவில்லை. சென்ற வாரத்தில் ஜாவா தெரிந்த ஆள் ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டிய வேலையைக் கொடுத்திருந்தார்கள். எனக்கு ஜாவாவில் பெரிய பரிச்சயம் கிடையாது. ஆனால் நேர்காணல் நடத்த வேண்டிய நபர் வராததால் முதல் நிலைத் தேர்வை மட்டும் என்னை செய்யச் சொல்லியிருந்தார்கள். தொலைபேசி வழியான நேர்காணல்தான். ஏழு வருட அனுபவம் உள்ள ஆள் அவர். தமிழர். அவருடைய ரெஸ்யூம் வந்தவுடனேயே ஃபேஸ்புக்கில் அவரது முகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். ஃபேஸ்புக்கில் எனக்கு நண்பராக இல்லை. ஆனால் அவருக்கும் எனக்கும் பொதுவான நண்பர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். நேர்காணலில் என்ன விதமான கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று தயாரித்திருந்தேன். ஆனால் பெரியதாகச் சிரமப்பட வேண்டியதிருக்கவில்லை. 'web development துறையில் இப்பொழுது எது ஹாட்?’ என்கிற கேள்விதான் முதல் கேள்வி. ஒருவேளை அவர் ஏதாவது பதில் சொல்லியிருந்தால் நிச்சயமாக என்னால் சரிபார்த்திருக்க முடியாது. ஆனால் அவர் ‘எனக்கு நிறைய வேலைகள் இருந்தன...அதனால் நேர்காணலுக்கு எதையுமே தயாரிக்கவில்லை’ என்றார். சம்பந்தமே இல்லாத பதில். வேறு இரண்டு கேள்விகளைக் கேட்டுவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டேன்.

அவரைக் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லிக்காட்டவில்லை. இதே கேள்வியை என்னிடம் யாராவது கேட்டிருந்தாலும் தெளிவான பதிலைச் சொல்லியிருக்கமாட்டேன் என்பதுதான் உண்மை. இப்படியான புதுப்புது நுட்பங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் காசைக் கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால் ஆட்கள்தான் இல்லை. 

குறைந்தபட்சம் அடுத்த ஹாட் ஏரியா என்பதைக் கூட தெரிந்து வைத்துக் கொள்வதில் கூட சுணக்கமாக இருக்கிறோம் என்று பெருந்தலை சொன்ன போது மறுக்க முடியவில்லை. நானும் அப்படித்தான் இருக்கிறேன். பக்கத்தில் இருப்பவனும் அப்படித்தான் இருக்கிறான். ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றனதான் - வீடு, குடும்பம், பொழுதுபோக்கு இடையில் ஃபேஸ்புக், ட்விட்டர்... ஆனால் இவையெல்லாவற்றையும் தாங்கிப் பிடிக்க நம்முடைய வேலையில் நம் கால்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் அங்குதான் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம்.

‘நீங்க கான்பரஸ்களில் கலந்துக்குறீங்க...பெரிய ஆட்களிடம் பேசறீங்க...உங்களுக்குத் தெரியுது...’ என்று சாக்கு போக்கு ஒன்றைச் சொல்ல முயன்றேன். சிரித்துக் கொண்டே கேட்டார். 

‘கடைசியாக, ஹாட் டாபிக் இன் சாப்ட்வேர் என்று எப்போ தேடின?’ என்றார்.

‘ஹாட் ஆக்டரஸ் இன் பாலிவுட்’ என்றுதான் தேடியிருக்கிறேன் என்று கழுத்து வரைக்கும் வந்துவிட்டது. அடக்கிக் கொண்டேன்.

தகவல்களைச் சேகரிப்பதற்கான எல்லாவிதமான வசதிகளும் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் நாம்தான் பயன்படுத்திக் கொள்வதில்லை. ‘இல்லையா?’ என்றார். என்ன பதிலைச் சொல்வது? ‘நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டு கிளம்பி வந்தோம்.