Jun 16, 2015

எங்கேயிருந்து தொடங்குவது?

ஒருவர் தனது கவிதைகளை அனுப்பியிருந்தார். வாசித்த போது உவப்பானதாக இல்லை. கவிதையின் வடிவம் பழையதாக இருந்தது. நாம் கவிதை எழுதுவதற்கும் முன்பாக தற்காலக் கவிதைகளின் உள்ளடக்கம், அதன் மொழி, நடை போன்றவை எவ்வாறு இருக்கின்றன என்ற புரிந்து வைத்திருப்பது அவசியம். இந்தப் புரிதல்தான் சுய பரிசோதனையைச் செய்ய உதவும். நமது கவிதைகள் எந்த நிலைமையில் இருக்கின்றன என்பதையும் இன்னமும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இது கவிதைக்கு மட்டுமில்லை- எதை எழுத விரும்பினாலும் பொருந்தும். 

கவிதைகளைப் பொறுத்த வரையிலும் எதுவுமே வாசிக்காமல் எழுதத் தொடங்குபவர்கள் அதிகம். நண்பரிடம் ‘நீங்கள் எந்தக் கவிஞர்களின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்கள்’ என்று கேட்டிருந்தேன். அவருடைய பதில் கவிதைகள் குறித்தான அவரது புரிதலை நமக்குச் சொல்லிவிடும் என்பதுதான் அந்தக் கேள்விக்கான காரணம். ‘இதுவரை வாசித்ததில்லை. உங்களிடமிருந்து ஆரம்பிக்கிறேன்’ என்று பதில் அனுப்பியிருந்தார். அது முகஸ்துதிக்கான பதில். துரதிர்ஷ்டவசமாக அவர் அப்படியொரு முடிவை எடுத்திருந்தால் அதைத் தவறான முடிவு என்பதைச் சொல்லும் கடமையும் இருக்கிறது. கவிதை வாசிப்பைத் தொடங்க விரும்பினால் அதற்குத் தகுதியான நிறையக் கவிஞர்கள் தமிழில் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து தொடங்கலாம். அந்தக் கவிஞர்களின் சிக்கல் இல்லாத, எளிமையான கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாசிப்பதும் அவசியம். 

பத்தாண்டுகளுக்கு முன்பாக கவிஞர் மனுஷ்ய புத்திரன் உயிர்மை பதிப்பகத்தின் வாயிலாக முக்கியமான கவிதைகளைத் தொகுப்பாக்கி சிறு புத்தகமாக வெளியிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து சில கல்லூரிகளில் பயிற்சிப்பட்டறைகளையும் அவர் நடத்தினார். ந.பிச்சமூர்த்தியிலிருந்து இளம்பிறை வரையிலான கவிஞர்களின் தலா ஒரு கவிதை இருக்கும். கவிதை உலகுக்குள் நுழைபவர்களுக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட தொகுதி அது.  சமயவேல், சுகுமாரன், ஞானக் கூத்தன், தேவதச்சன், ஆத்மாநாம் போன்ற மூத்த கவிஞர்களின் முக்கியமான கவிதைகளைக் கொண்ட அந்தப் புத்தகம் இப்பொழுது கடைகளில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. அது கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.

அது கிடைக்கவில்லை என்பதற்காக அனைத்து கவிஞர்களின் கவிதைகளையும் வாசிக்க வேண்டும் என்று பெருந் தொகுப்புகளை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை. தமிழில் நிறைய தொகுப்பு புத்தகங்கள் வந்திருக்கின்றன. பல கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக்கியிருக்கிறார்கள். அவை புதிய வாசகர்களை மிரளச் செய்யக் கூடியவை. அதனால் ஆரம்பத்திலேயே இந்த பெரிய தொகுதிகளுக்குள் எட்டிக் குதிக்க வேண்டியதில்லை. இதைச் சொல்வதற்காக இந்தத் தொகுதிகளை உருவாக்கியவர்களின் உழைப்பை உதாசீனப்படுத்துவதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை-புதியதாக கவிதை வாசிக்க வருபவர்கள் தமிழின் அத்தனை முக்கியமான கவிஞர்களின் கவிதைகளையும் ஒரே தொகுப்பு வழியாக வாசிக்க வேண்டியதில்லை. கவிதையைப் பற்றிய ஓரளவு புரிந்து கொண்ட பிறகு மெதுவாக பிற கவிஞர்களை வாசிக்கலாம். பிரம்மராஜன், நகுலன் போன்றவர்கள் முக்கியமான கவிஞர்கள்தான். மறுக்கவில்லை. ஆனால் எடுத்த உடனேயே அவர்களை வாசிக்கச் செய்வது சரியான அணுகுமுறையாகாது. கவிதை வாசித்துப் பழகியவர்களையே திணறடிக்கக் கூடிய கவிதைகள் அவை. புதியவர்கள் என்றால் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

‘நான் கவிதை வாசிக்க விரும்புகிறேன்’ என்று யாராவது கேட்டால் வண்ணதாசனின் தேர்ந்தெடுத்த கவிதைகளைக் கொடுக்கவே விரும்புவேன். அவரது கவிதைகள் மிக எளிமையானவை. வாசிப்பவர்களுடன் ஒருவித நெருக்கத்தை உருவாக்கக் கூடியவை. அடுத்தபடியாக கலாப்ரியா. இவர்கள் வழியாக கவிதைகளுக்குள் நுழைவது கவிதை மீதான மிரட்சியை போக்கிவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். அதே போல முகுந்த் நாகராஜன், இசை போன்ற கொண்டாட்டத்தை உருவாக்கக் கூடிய கவிஞர்களின் கவிதைகளையும் தாராளமாக பரிந்துரைக்கலாம். கவிதைகளுக்குள் நுழைவதற்கான திறப்புகளை இவர்களின் கவிதைகள் கொண்டிருக்கின்றன.

கவிதைகள் புரிவதில்லை என்பதும் அவை மிகச் சிக்கலானவை என்பதும் ஒருவிதமான பிரமைதான். உண்மையில் அப்படியில்லை. நமக்கு கவிதைகள் குறித்தான பரிச்சயம் உருவாகாத வரைக்கும் கவிதைகள் கடினம்தான். ஆனால் அதன் கடினமான மேற்புற ஓட்டை சற்று உடைத்துப் பார்த்தால் உள்ளே நுழைந்துவிடலாம். அதை உடைப்பதற்கு சரியான வழிகாட்டுதல்கள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.

முகுந்த் நாகராஜனின் கவிதையொன்று-

ஒரு மணி நேரத்துக்கு முன் 
ரயில் அடித்து இறந்தவன் உடலை 
கருப்பு ப்ளாஸ்டிக் கவரால் 
முழுவதும் மூடி 
ரயிலில் ஏற்றினார்கள் மூன்று பேர். 
ஒரு கால் செருப்பு எவ்வளவு தேடியும் 
கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டான் 
பிணத்தின் கால் பக்கம் இருந்தவன். 
இன்னும் கொஞ்ச நேரம் தேடி 
இருக்கலாம், 
என்ன அவசரம் என்று 
கோபித்துக் கொண்டான்
மற்ற இருவரையும் 
புதர் அடியில் கிடக்கும் 
நாளை எடுத்து கொள்ளலாம் என்றான் 
கிழவன். 
ஆனாலும் சமாதானம் ஆகவில்லை 
செத்தவனின் செருப்பைத் தேடியவன் 
இறங்கும்போது கவனித்தேன், 
இருவேறு நிறங்களில் 
செருப்புகள் அணிந்து இருந்த 
அவன் கால்களை.

இன்றைய மற்றொரு பதிவு: கிழவன் பேச்சு கிணாரக்காரனுக்கு கேட்காது

7 எதிர் சப்தங்கள்:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

கவிதையின் திசைக்கு செல்பவர்களுக்கு மட்டுமல்ல பொதுவான கவிதை விரும்பிகளுக்கும் நல்ல வழிகாட்டல் பதிவு இது .

”தளிர் சுரேஷ்” said...

ஒரு துயரச் சம்பவத்தையும் அழகாக சொல்ல முடியும் என்று இந்த முகுந்த் நாகராஜனின் கவிதை படித்து அறிந்து கொண்டேன்! என்னைப்போன்றவர்களுக்கு வழிகாட்டும் எழுத்து! நன்றி!

சேக்காளி said...

எரிந்து போன செங்கொடியின்
எரியாத கடிதத்தை
பத்திரப் படுத்துகிறார்கள்
தற்கொலை வழக்கிற்கு
சாட்சியமாய்.
கலாப்ரியா

சேக்காளி said...

கவிதை பற்றி கலாப்ரியா
http://www.kalapria.blogspot.com/2012/08/blog-post_1773.html

சேக்காளி said...

கலாப்ரியா எழுத்து பற்றி அறிய
http://www.kalapria.blogspot.com/

சேக்காளி said...

யாரோ தயாரித்த பானம்.

யாரோ அருந்திய குவளைகள்.

இரண்டு யாரோக்களின்

இனிப்பையும் மொய்க்கின்றன

கருப்பு எறும்புகள்

ஒரே சமயத்தில்.

கல்யாண்ஜி (வண்ணதாசன்)

சேக்காளி said...

google ல் தேடினால் கிடைக்கும் தான்
ஆனாலும் என்ன https://vannathasan.wordpress.com/