Jun 17, 2015

நடிகைகளைக் கண்டறிதல்

சமீபத்தில் உற்சாகமூட்டும் வேலை ஒன்றைத் தந்திருக்கிறார்கள் அல்லது அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். சினிமா சம்பந்தப்பட்ட வேலை. திரைக்கதை, வசனம் எழுதப் போகிறேன் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். அதெல்லாம் இல்லை. நண்பரொருவர் இயக்குநர் ஆகியிருக்கிறார். அவரைப் பத்து வருடங்களுக்கு மேலாகத் தெரியும். உதவி இயக்குநராக இருந்தவர் இப்பொழுது ப்ரோமோஷன் வாங்கிவிட்டார். சென்னையில் அலுவலகம் அமைத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார்கள் போலிருக்கிறது. நடிகைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சென்னையில் தேடியிருக்கிறார்கள். யாரும் சரியாக அமையவில்லை. இப்பொழுது பெங்களூரில் வலை வீசப் போகிறார்கள்.

‘உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணுங்க யாராச்சும் நடிப்பாங்களா?’ என்றார். இதெல்லாம் என்ன கேள்வி. இதை வாய்ப்பாக பயன்படுத்தி நடிக்க விரும்புகிற பெண்களை தெரிந்த பெண்களாக மாற்றிக் கொள்ளவேண்டியதுதானே? ‘ம்ம்ம்ன்னு சொல்லுங்க...வரிசையில் நிற்க வைக்கிறேன்’ என்றேன். அவர் நம்பிவிட்டார். 

‘நாலஞ்சு மாடல் கோ-ஆர்டினேட்டர்கிட்ட சொல்லிட்டோம்...ஒண்ணும் சரியா அமையல’ என்றார். மாடல் கோ-ஆர்டினேட்ர்களாலேயே முடியவில்லையாம். நான்தான் முடிக்க வேண்டும் என்கிறார். மந்திரியால் முடியாததை கவுண்டமணி முடித்த மாதிரிதான். கைகள் பரபரப்பாகிவிட்டன. எத்தனை நாட்களுக்குத்தான் ஃபோனை எடுத்து கரிகாலனிடமும், சாத்தப்பனிடமுமே பேசிக் கொண்டிருப்பது? ஸம்ரிதா அகர்வால், ஷ்வேதா சிரோட்கர்  என்றெல்லாம் பெயர்களை ஃபோனில் சேமித்தாக வேண்டும். தயாராகிவிட்டேன்.

ஒரு நடிகையை எனக்குத் தெரியும். சில வருடங்களுக்கு முன்பு வரை நடித்துக் கொண்டிருந்தார். ஒன்றிரண்டு படங்கள்தான். இப்பொழுது வாய்ப்பு எதுவுமில்லாமல் சொந்த ஊருக்கே போய்விட்டார். ஆனால் பெயரைச் சொன்னால் இப்பொழுது கூட எல்லோருக்கும் தெரியும். அவ்வப்போது அவரிடம் பேசுவதுண்டு. புலம்புவார். அவருடைய அப்பா மருத்துவர். சிறிய க்ளினிக் நடத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டும்தான் வருமானம். திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று யோசிக்கிறார்களாம். ஆனால் நடிகை என்றால் ஒன்று புகழ் வேண்டும் இல்லையென்றால் பணம் வேண்டும். இவரிடம் இரண்டும் இல்லை. திருமணமும் நடப்பதாகத் தெரியவில்லை. சினிமாவைச் சார்ந்தவர்களிடம் விசாரித்தால் ‘அந்தப் பொண்ணோட ஆட்டிடியூட் சரியில்லை’ என்கிறார்கள். அப்படியென்றால் என்னவென்று புரியவில்லை. அதோடு நிறுத்திக் கொண்டேன். நேற்று அந்த நடிகையை அழைத்து ‘ஒரு வாய்ப்பிருக்கிறது. பனிரெண்டு நாட்கள்தான் நடிக்க வேண்டியிருக்கும். என்ன சொல்லுறீங்க?’என்றேன். மனசாட்சியே இல்லாமல் ‘பதினைந்து லட்சம் என்றால் நடிக்கிறேன்’ என்கிறார். மார்கெட் போன அவரை அழைத்து வந்து பதினைந்து லட்சம் கொடுப்பதற்கு இவர்கள் என்ன முட்டாள்களா? ‘சரிங்க’ என்று துண்டித்துவிட்டேன். 

சினிமா என்றில்லை. இந்தக் காலத்தில் எந்தத் துறையாக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பார்கள். அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் எல்லோராலும் ஜெயித்துவிட முடிகிறதா என்ன? கதவைத் தட்டுகிற மகாலட்சுமியை பொடனியிலேயே அடிக்கிறார் இந்த நடிகை. சரி. அது நம் பிரச்சினையில்லை. 

புது நடிகைகளைப் பிடித்தாக வேண்டும். அதுதான் பிரச்சினை. ‘ஒரு சினிமா சான்ஸ் இருக்கு...அழகான பெண்கள் இருந்தால் சொல்லுங்க’ என்று இரண்டு மூன்று பையன்களிடம் சொல்லி வைத்தேன். விதி- பையன்களிடம்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. பெண்களை எனக்குத் தெரியாது என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்? சத்தியமாகவே தெரியாது. அப்படியே ஒன்றிரண்டு பேரைத் தெரிந்து வைத்திருந்தாலும் நடிகையாகிற அளவுக்கு அழகுடைய பெண்களைத் தெரியாது. அதனால் வேறு வழியே இல்லாமல் பையன்களிடம் சொல்லி வைத்திருந்தேன். இதைச் சாக்காக வைத்துக் கொண்டு அவர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. ஒருவன் கூட பதில் சொல்லவில்லை.

அலுவலகத்தில் ஒன்றிரண்டு பெண்களை நோட்டம் விடுவதுண்டு. அவர்களிடம் ‘நடிக்க வர்றீங்களா?’ என்று கேட்டு மனிதவளத்துறையில் போட்டுக் கொடுத்துவிடுவார்களோ என்று பயமாக இருந்தது. இருந்தாலும் ஒரு பெண்ணிடம் துணிந்து கேட்டுவிட்டேன். ஒருவேளை விருப்பமில்லை என்று சொன்னாலும் கூட நாளையிலிருந்து காபி குடிக்கிற இடத்திலும் வண்டி நிறுத்துகிற இடத்திலும் பார்த்தால் சிரிப்பதற்கு உதவும். 

‘கணவரிடம் கேட்டுச் சொல்கிறேன்’ என்றார். சுத்தம். இவளும் திருமணமானவள் என்று இப்பொழுதுதான் தெரிகிறது. இது தெரியாமல் சைட் அடித்திருக்கிறேன்.

‘சரிங்க’ என்று சொல்லிவிட்டு நண்பரை அழைத்து ‘கல்யாணம் ஆன பெண் ஓகேவா?’ என்றேன்.  

‘வெளியே தெரியுமா?’ என்றார். 

‘மாசமா இருக்கிற மாதிரி தெரியலைங்க..அப்புறம் எப்படி வெளியே தெரியும்’ என்றேன். காறித் துப்பிய சத்தம் கேட்டது. 

‘அப்புறமா கூப்பிடுறேன்’ என்று சொல்லிவிட்டு எனது வேட்டையைத் தொடர்ந்தேன். என்ன பெரிய வேட்டை? ஒரு வெங்காயமும் இல்லை. இதெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் நண்பருக்கு நம்பிக்கை. என்னால் காரியம் ஆகிவிடும் என்று நினைத்திருக்க வேண்டும். இரவில் அழைத்தார். 

‘கல்யாணம் ஆகியிருந்தா பரவாயில்லை...முகத்தைப் பார்த்தால் முதிர்ச்சி தெரியக் கூடாது..அதைத்தான் அப்படிக் கேட்டேன்’ என்றார். ரம்யா கிருஷ்ணனைப் பார்த்தால் கூடத்தான் எனக்கு இளைஞியாகத் தெரிகிறார். என்னிடம் போய் கேட்டால்?

‘பாஸ்..அதெல்லாம் என் வேலை இல்லை..நான் அனுப்பி வைக்கிறேன்...யூத்தா இருக்காங்களான்னு நீங்களே முடிவு பண்ணுங்க’ என்றேன். சரி என்று ஒத்துக் கொண்டார்.

இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ‘நடிக்க வர்ற பொண்ணுங்ககிட்ட எசகுபிசகா ஏதாச்சும் எதிர்பார்ப்பீங்களா?’ என்றேன். 

‘ச்சே ச்சே...இது ஃபர்ஸ்ட படம்...நம்ம தங்கச்சி மாதிரி பார்த்துக்கலாம்’ என்றார்.

எனக்கும் தங்கையா? அதற்கு ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும்? வெகு கோபம் வந்துவிட்டது. நண்பருடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது வேணி பக்கத்தில்தான் இருந்தாள். ஆனால் அதை கவனிக்காமல் ‘உங்களுக்கு வேணும்ன்னா தங்கச்சின்னு சொல்லுங்க’ என்று சத்தமாகச் சொல்லிவிட்டேன். சொன்ன பிறகுதான் அவள் அருகில் இருக்கிறாள் என்பது உரைத்தது.  அவளைப் பார்த்தேன். வாயைத் திறக்காமல் புருவத்தை மட்டும் மேலே தூக்கி ‘என்ன?’ என்று சாடை காட்டினாள். சிக்கிக் கொண்டேன் போலிருக்கிறது. ஒரு வினாடி இருதயம் நின்று துடித்தது. தப்பித்தாக வேண்டும். எச்சிலை விழுங்கிக் கொண்டு ‘என்னைப் பொறுத்த வரைக்கும் அவங்க எல்லாம் அக்கா மாதிரி...என் வயசைக் குறைச்சுடாதீங்க’ என்று சொல்லித் தப்பித்துவிட்டேன். என் சமயோசித புத்திக்கு குறைந்தபட்சம் அமெரிக்க அதிபராக வேண்டும் என்று அந்தப் பக்கமாக நகர்ந்து எனக்கு நானே முதுகில் தட்டிக் கொண்டேன்.

இப்படியான அதிரடி தேடுதல் வேட்டையில் நேற்று மாலையில் இன்னொரு பெண்ணிடமும் கேட்டுவிட்டேன். முந்தைய நிறுவனத்தில் என்னோடு பணியாற்றினாள்.  அவ்வப்போது பேசியிருக்கிறேன். ‘நடிக்கிறேனே’ என்றார். என்ன படம், என்ன கதை என்றெல்லாம் எதுவும் கேட்கவில்லை. ‘சரி ரெண்டு மூணு ஃபோட்டோஸ் அனுப்பி வைங்க’ என்றேன். இதைச் சொல்லும் போது என்னுடைய பந்தாவை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். நான்கைந்து பாரதிராஜாக்களும், ஏழெட்டு பாலச்சந்தர்களும் எனக்குள் குடியிருந்தார்கள். ‘உன்னை ஸ்டார் ஆகிட்டுத்தான் ஓயப் போகிறேன்’ என்கிற பந்தா அது. அவள் அதைவிட விவரமாக இருந்தாள். 

‘டைரக்டர் மெயில் ஐடி கொடுங்க..நேரடியா அனுப்பிக்கிறேன்’ என்கிறாள். அவ்வளவு நம்பிக்கை. ‘இந்த முகம் எல்லாம் சினிமாவுக்கு சம்பந்தமேயில்லாத முகம்’ என்று நினைத்திருப்பாள் போலிருக்கிறது. பெண்கள் சரியாகக் கணித்துவிடுகிறார்கள். ‘சரி..மெயில் ஐடி வாங்கிட்டு திரும்பக் கூப்பிடுறேன்’ என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக ஒரு திருட்டு மெயில் ஐடி உருவாக்கி அதை அவளுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். எப்படியும் இன்று மாலைக்குள் சில படங்களை அனுப்பி வைத்துவிடுவாள் என்று நம்பிக்கையிருக்கிறது. பார்க்கலாம்.