Jun 16, 2015

கிழவன் பேச்சு கிணாரக்காரனுக்கு கேட்காது

கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீட்டிற்கு பக்கத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டினார்கள். வழக்கமாக ஐந்நூறு அடிகளில் தண்ணீர் வந்துவிடும். காலி இடம்தான். தண்ணீர் வந்த பிறகு கட்டிட வேலையை ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது. எழுநூறு அடிகளைத் தாண்டிய பிறகும் தண்ணீர் தென்படவில்லை. அவருக்கு முகம் சுண்டிவிட்டது. முதல் இருநூற்றைம்பது அடி வரைக்கும் எழுபது ரூபாய். அதற்கு மேல் ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு ரேட். அதுவும் எப்படி? அடுத்த நூறடிகளுக்கு எண்பது ரூபாய். அதற்கடுத்த நூறடிகளுக்கு தொண்ணூறு ரூபாய். இப்படியே அதிகரித்து ஐந்நூறு அடிகளைத் தாண்டும் போது ரேட் படு வேகமாக அதிகரிக்கும். பணம் போவது கூட பிரச்சினையில்லை. தண்ணீர் வந்துவிட்டால் சரி என்று புலம்பிக் கொண்டிருந்தார். ம்ஹூம். ஆயிரம் அடிகளுக்குப் பிறகும் வெறும் புகைதான். அப்படியே மூடி பெரிய கல்லைச் சுமந்து குழி மீது வைத்துவிட்டு போய்விட்டார்கள்.

எங்கள் வீடு இருக்கும் பகுதி ஒரு காலத்தில் விவசாய நிலமாக இருந்திருக்கிறது. அதை வாங்கி ப்ளாட் போட்டுவிட்டார்கள். அப்படி ப்ளாட் போடுவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி வாங்கியிருப்பார்கள் அல்லவா? அனுமதி வாங்கும் போது தண்ணீர் வசதிக்கு, மின்சார வசதிக்கு, சாக்கடை வசதிக்கு என்று தனித்தனியாக பணம் கட்ட வேண்டும். தண்ணீரைத் தவிர எல்லாவற்றுக்கும் பணம் கட்டியிருக்கிறார்கள். இப்பொழுது கார்போரேஷனில் விசாரித்தால் சில பல கோடிகளைக் கேட்கிறார்கள். ஒரு வீட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் கூட பணம் போதாது போலிருக்கிறது. வேறு வழியில்லை- போர்வெல் இருந்தால் பிரச்சினையில்லை இல்லையென்றால் தண்ணீர் வியாபாரிகள்தான் கதி. இனி மாநகராட்சி தேர்தல் வரவிருக்கிறது. அப்பொழுது வரும் புதிய கவுன்சிலரை அமுக்கிவிடலாம் என்று காத்திருக்கிறார்கள்.

எங்கள் வீட்டிலும் ஆழ்குழாய் கிணறு பாழாகிவிட்டது. அது பாழாகி இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. வாரம் இரண்டு முறை தண்ணீர் வண்டிக்காரருக்கு தண்டம் அழ வேண்டியிருக்கிறது. நாளை காலையில் தண்ணீர் வேண்டுமானால் இன்றிரவே சொல்லி வைக்க வேண்டும். சில சமயங்களில் அடுத்த நாள் சாயந்திரம் வருவார்கள். இல்லையென்றால் இரவு இரண்டு மணிக்கு கதவைத் தட்டுவார்கள். பெரிய அக்கப்போர்தான். ஆனால் அவர்களிடம் எந்தச் சலனத்தையும் காட்டிவிட முடியாது. பகைத்துக் கொண்டால் வேறு ஆட்களும் தண்ணீர் கொண்டு வர மாட்டார்கள். அந்தந்த ஏரியாவில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். தண்ணீர் மாஃபியாக்களின் தனி உலகம் அது.

இதெல்லாம்தான் அப்பாவுக்கு பெரிய தொந்தரவு. தண்ணீர்காரருக்கு தகவல் கொடுப்பதிலிருந்து நள்ளிரவில் கதவைத் திறந்துவிடுவது வரைக்கும் அவருடைய வேலைதான். அம்மாவுக்கு இன்னொரு பிரச்சினை. நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் கை கழுவும் இடம் பாத்திரம் கழுவும் இடம் என்று ஓரிடம் பாக்கி வைக்க மாட்டேன். ‘தண்ணியை அளவா யூஸ் பண்ணுங்க’ என்று சொல்லிக் கொண்டேயிருப்பேன். கடுப்பாகிவிடுவார். ஏதாவது சண்டை வந்தால் ‘இந்த அறுவது வருஷத்துல ஒருத்தரு கூட என்ரகிட்ட தண்ணியை கொஞ்சமா புழங்குன்னு சொன்னதில்ல...இங்க வந்து அல்லல்பட எனக்கு என்ன தலையெழுத்தா’ என்று ஆரம்பித்துவிடுவார். பவானி ஆற்றுத் தண்ணீரிலேயே வாழ்ந்தவர். இப்படியெல்லாம் கட்டுப்பாடு விதித்தால் அப்படித்தான் இருக்கும்.

வீடு கட்டும் போது போட்டிருந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் நிறைய இருந்தது. முதல் இருநூறடிகளுக்கு இரும்பு பைப்பை இறக்கியிருந்தார்கள். Casing Pipe. அதுதான் ஆழ்குழாயின் பாதுகாவல் அரண். ஆனால் கடந்த முறை கிணறு தோண்டிக் கொடுத்தவன் கேடிப்பயல். 1.8 மிமீ இரும்புக் குழாயைப் போட்டுவிட்டு 2.8 மிமீ போட்டிருப்பதாக காசு வாங்கிச் சென்றுவிட்டான். இத்தனைக்கும் எங்கள் வீட்டில் நான்கு பொறியாளர்கள். பொறியாளராக இருந்து என்ன பயன்? கடலையாளராக இருந்து என்ன பயன்? இதைச் சரிபார்க்கத் தெரியவில்லை. மிளகாய் அரைத்துவிட்டான். அதன் பிறகு பக்கத்தில் யாரோ போர்வெல் போட்டிருக்கிறார்கள். அந்த அழுத்தத்தில் இந்தக் குழாய் நசுங்கிப் போய்விட்டது. சலனப்படக் கருவியை உள்ளே அனுப்பி, குழாயை விரிவடையச் செய்ய தோட்டாவெல்லாம் உள்ளே வீசிப் பார்த்தார்கள். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. போனது போனதுதான். மூடிவிட்டு அடுத்த போர்வெல் தோண்டுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கினார்கள்.

எனக்கு அதில் உடன்பாடில்லை. பணம் ஒரு பக்கம். இப்பொழுதெல்லாம் ஆயிரம் அடிகளுக்குத் தோண்டுகிறார்கள். சூழலியல் சார்ந்து இது மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் என்கிறார்கள். பெங்களூரில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டேகால் லட்சம் ஆழ்குழாய் கிணறுகள் இருக்கின்றன. தண்ணீரை சகட்டு மேனிக்கு உறிஞ்சுகிறார்கள். நில நடுக்கங்களுக்குக் கூட இப்படி கோடிக்கணக்கில் தோண்டப்பட்டு நீரை உறிஞ்சுவது காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் சொன்னால் அம்மாவும் அப்பாவும் ஒரே வார்த்தையில் அடக்கிவிடுவார்கள். தம்பியும் அவர்களோடு சேர்ந்து கொள்வான். ‘ஊர்ல அத்தனை பேரும் போர் போடுறாங்க...இந்த ஒண்ணுதான் உனக்கு ஆகாதா?’ என்பார்கள். எங்கள் வீட்டில் அப்படித்தான். ‘இதையெல்லாம் நீ கண்டுக்காத..உனக்கு சம்பந்தமில்லாத சமாச்சாரம்’ என்று சொல்லிவிடுகிறார்கள். முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருந்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. அதனால் இதைப் பற்றி மேலும் மேலும் பேசினால் வெட்டி விவகாரம்தான். 

வெள்ளிக்கிழமையன்று வழக்கம் போல அலுவலகத்துக்கு கிளம்பிச் சென்றுவிட்டேன். அன்று காலையில்தான் போர்வெல் வண்டி வந்திருந்தது. கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. ஒரு வாரம் முன்பாகத்தான் ஆயிரம் அடி ஆழத்திலிருந்து எழும்பிய புகையைப் பார்த்தோம். இருநூறு மீட்டர் தள்ளித்தான் அந்த இடம் இருக்கிறது. இங்கும் அப்படி ஏதாவது நடந்தால் குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாயாவது புகையாகிவிடும் என்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு நூறு அடிக்கும் தம்பி ஃபோன் செய்து ‘வெறும் புகைதான் வருது..கிளம்பி வாடா’ என்றான். நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி என்று அவன் நம்புவான். அதற்குத்தான் அழைக்கிறான். கிட்டத்தட்ட ஐநூறாவது அடியில் இறங்கிக் கொண்டிருந்த போது வீடு திரும்பியிருந்தேன். வீடே தெரியவில்லை. புகை மண்டலமாக இருந்தது. 

‘தண்ணீர் வந்தாலும் சரி...வரலைன்னாலும் சரி...இன்னும் நூறடியில் நிறுத்திவிடலாம்’ என்று சொல்லியிருந்தேன். கிட்டத்தட்ட ஒத்துக் கொண்டார்கள். ஆனால் தண்ணீர் வந்துவிட்டது. ஐந்நூற்றைம்பதாவது அடியில் ஊற்று பொத்துக் கொண்டது. வெதுவெதுப்புடன் நீர் வந்தது. பூமித்தாயின் கதகதப்பு அது. அறுநூறு அடியைத் தொட்ட போது ‘நிறுத்திவிடலாமா?’ என்று கேட்டேன். கண்டுகொள்ளவில்லை. எழுநூற்றைம்பது அடிகள் வரைக்கும் ஓட்டிவிடலாம் என்று ஓட்டிவிட்டார்கள். ஆழ்குழாய் கிணற்றின் அடிப்பகுதி வரைக்கும் பாறையும் மண்ணும் அடுக்கடுக்காக மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. அதனால் ஃபில்டர் குழாய் என்று இறக்கியிருக்கிறார்கள். மண்ணை வடிகட்டி வெறும் நீரை மட்டும் ஃபோர்வெல்லுக்கு அனுமதிக்கும். அது அடிக்கு நூற்று நாற்பத்தைந்து ரூபாய். காஸ்ட்லி செலவு. இல்லையென்றால் மண்ணும் கல்லும் சரிந்து ஆழ்குழாயை மூடிவிடும் என்றார்கள். வேறு வழியில்லை. ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் காலி. இனி மோட்டார் வாங்க வேண்டும். எழுநூறு அடிகளைத் தாண்டிவிட்டதால் மூன்று குதிரைத் திறன் கொண்ட மோட்டாரைத்தான் உள்ளே இறக்க வேண்டுமாம். பைப், வயர், மோட்டார் என்று எல்லாம் சேர்த்து கணக்குப் போட்டால் முக்கால் லட்சத்தைத் தொடுகிறது.

அதோடு நின்றதா? போர்வெல் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தி ஜன்னல், சுவர்களையெல்லாம் பதம் பார்த்திருக்கிறார்கள். அதைச் சரி செய்வதற்கு மூன்று ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எப்படியும் இருபதாயிரத்துக்கு குறைவில்லாமல் செலவு வைப்பார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட நான்கு லட்ச ரூபாய். பெரிய அடியாக அடித்திருக்கிறது. ‘எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்’ என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? ஒரு வண்டி தண்ணீர் வாங்கினால் அறுநூறு ரூபாய்தான். நான்கு லட்ச ரூபாய்க்கு கிட்டத்தட்ட அறுநூற்றைம்பது வண்டி தண்ணீர் வாங்கியிருக்கலாம். மாதம் பத்து வண்டி என்றாலும் கூட நான்கைந்து வருடங்களுக்குத் தாங்கியிருக்கும். அதற்குள்ளாக எப்படியும் காவிரித் தண்ணீர் கிடைத்திருக்கும். தமிழ்நாட்டுக்குத்தான் காவிரித் தண்ணீர் கிடைக்காது- கர்நாடகத்திலிருந்து சாக்கடையைக் கலக்கி அனுப்புகிறோம். ஆனால் பெங்களூர்வாசிகளுக்கு எப்படியும் கொடுத்துவிடுவார்கள்.