Jun 30, 2015

ஆன்மிகச் சுற்றுலா

கோவாவில் கடந்த சில வருடங்களாக Publishing Next என்றவொரு கருத்தரங்கை நடத்துகிறார்கள். தேசிய அளவில் கவனம் பெற்றிருக்கும் பதிப்புத்துறை சார்ந்த கருத்தரங்கு இது. பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் என ஆரம்பித்து ஆசிரியர்கள், மாணவர்கள் வரை ஏகப்பட்ட பேர்கள் கலந்து கொள்கிறார்கள். 

இந்திய அளவில் புத்தக விற்பனை சந்திக்கக் கூடிய சவால்கள், பதிப்பகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்றவற்றையும் எதிர்காலத்தில் இத்தகைய சவால்களையும் பிரச்சினைகளையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியெல்லாம் முழுமையான விவாதங்களை நடத்துகிறார்கள். கொஞ்சம் காஸ்ட்லியான கருத்தரங்குதான், ஒரு ஆளுக்கு மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாய் டிக்கெட் நிர்ணயித்திருக்கிறார்கள் என்றால் முடிவு செய்து கொள்ளலாம்.

ஏன் இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறேன் என்று புரிந்திருக்குமே. உங்கள் யூகம் சரிதான்.  

இந்த வருடக் கருத்தரங்கில் என்னையும் அழைத்திருக்கிறார்கள். இரண்டு நாள் நிகழ்வில் சில குழு விவாதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. self publishing பற்றிய குழு விவாதத்தில்தான் கர்ச்சீப்பை போட்டு வைத்திருக்கிறார்கள். வலைப்பதிவு வழியாக எழுத்தை பரவலாக்குவது, பெரிய பதிப்பகங்களின் உதவியில்லாமல் புத்தகங்களை வெளியிடுவது, எந்தப் பின்புலமும் இல்லாதவர்கள் எழுத்து வழியாக எப்படி இணையத்தின் மூலமாகத் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசச் சொல்லியிருக்கிறார்கள். 

இணையத்தில் எழுதுவது பற்றி எனக்கு சில புரிதல்கள் உண்டு. சில ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பதால் உருவாகியிருக்கும் புரிதல் அது. அதைப் பற்றிச் சரியாக பேச வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன். 

எழுத்தில் இரண்டு வகையான போக்குகள் இருக்கின்றன. ‘எனக்கு எல்லாம் தெரியும்....நான் மேலே நிற்கிறேன்..நீங்க கீழே நில்லுங்க’ என்கிற வகையிலான எழுத்து முதல் வகை. அது எல்லோருக்கும் சாத்தியமில்லை- குறிப்பாக எனக்கு. வயதும் இல்லை; அனுபவமும் இல்லை. மீறி அப்படியொரு பிம்பத்தை உருவாக்கிவிட்டால் ‘எனக்கு இது தெரியாது’ என்று வெளிப்படையாக ஒத்துக் கொள்வதில் கூட ஒரு சங்கடம் இருக்கும். நமக்கு எல்லாம் தெரியும் என்கிற மிதப்பிலேயே எந்நேரமும் இருக்க வேண்டும்.

கஷ்டம். 

கவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டிருந்த போது மனதுக்குள் அப்படியொரு நினைப்பு இருந்தது. நமக்கு எவ்வளவு தெரியும் என்று நம் உள்மனதுக்குத் தெரியும் அல்லவா? ஆனால் வெளியில் பொய் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்படி போலியாக இருப்பது சாத்தியமில்லாத காரியம் என்று புரிந்து கொள்ள வெகு காலம் பிடிக்கவில்லை.  ‘இவன் புருடா விடுகிறான்’ என்று மற்றவர்கள் கண்டுபிடித்தால் ‘நீலச்சாயம் வெளுத்துப் போச்சு...ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு’ என்கிற கதையாகிவிடும். அதற்கு முன்பாக நம் எழுத்தை நாமே மாற்றிக் கொள்வது நல்லது. 

முதல் வழி அடைபட்டுவிட்டது. இரண்டாவது வழி? எழுத்தில் நம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் வாசிப்பவர்களை வேறு வகையில் அணுக வேண்டும். அத்தகையை முயற்சியில் பிடிபட்டதுதான் இரண்டாவது வகையிலான போக்கு. அது மிக எளிமையானது. ‘நானும் உங்களை மாதிரிதான்’ என்ற நினைப்பிலேயே எழுதுவது. உங்களுக்குத் தெரிந்ததைவிட துளி கூட அதிகமாகத் தெரியாது என்பதை வாசிப்பவர்களிடம் சொல்லாமல் சொல்லிவிட வேண்டும். நீங்கள் பார்ப்பதையும் பேசுவதையும் மனதில் நினைப்பதையும்தான் எழுத்தாக்குகிறேன் என்று உணர்த்திவிடுவது. அது செளகரியமானதும் கூட.

எழுத்து பிடிபட்ட பிறகு செய்யக் கூடிய இன்னொரு முக்கியமான காரியம்- உழைப்பு. இணையத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். பத்து நாட்கள் எழுதாமல் விட்டால் யாருமே கண்டு கொள்ளமாட்டார்கள். ஆறு மாதம் எழுதாமல் விட்டால் மறந்துவிடுவார்கள். ஒரு வருடம் எழுதாமல் விட்டால் அவ்வளவுதான். தொடர்ந்து எழுதுவதற்கு நிறைய வாசிக்க வேண்டியிருக்கும். வாசிப்பு என்றால் இலக்கியப் புத்தகங்கள் மட்டும்தான் என்றில்லை. தினத்தந்தி செய்தி கூட வாசிப்புதான். ஆனால் வெறும் தினத்தந்தி மட்டும் நம்முடைய மொழியறிவை செறிவூட்டுவதில்லை. தேங்கிவிடுவோம். அதற்காக வாசிப்பை பரவலாக்கிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. வெவ்வேறு தளங்களில் வாசிக்க வேண்டியிருக்கிறது. இப்படி நாம் உள்வாங்கிக் கொள்கிற செய்திகளை சுவாரஸியமாக எழுத ஆரம்பிக்கும் போது நம்மை பின் தொடர்கிறார்கள்.

இணையத்தைப் பொறுத்தவரையில் வாசிப்பவர்களை கவனிப்பது அத்தியாவசியமானது. நேற்று நமது எழுத்தை வாசித்த அத்தனை பேரும் இன்றும் வாசிப்பார்கள் என்று சொல்ல முடியாது. நேற்று வாசித்தவர்கள் ஏன் இன்று வாசிக்கவில்லை என்பதை புரிந்து கொள்வதும் அவசியம். இந்தப் புரிதலின் காரணமாக முரட்டுத்தனமாக நம் எழுத்தின் உள்ளடக்கடத்தையும், எழுத்து வடிவத்தையும் மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் மனதில் ஏற்றிக் கொண்டால் எழுத்து தானாக உருமாறிக் கொண்டேயிருக்கும். 

இவை போன்ற சில விஷயங்கள் அச்சு ஊடகத்திலும் உண்டு என்றாலும் வாசிப்பவர்களின் நாடியைப் பிடித்துப் பார்ப்பது அங்கு சாத்தியமில்லை. இங்கு அது மிகச் சுலபம். 

கோவாவில் இதையெல்லாம் கலந்து கட்டி அடித்துவிடலாம் என்றிருக்கிறேன். 

ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் - இப்படி இணையத்தில் எழுதுவது, அதன் வழியாக உருவாக்கி வைத்திருக்கும் நம்பகத்தன்மை, எடுத்துக் கொண்டிருக்கும் பொறுப்புகள் போன்றவற்றால் சாமியார் ஆகிவிடுவேனோ என்று அவ்வப்போது நினைத்துக் கொள்கிறேன். சாமியார் என்றால் நல்ல சாமியார். சைட் அடிக்கலாம் என்று நினைத்தால் கூட ‘நீ இந்தப் பொண்ணை சைட் அடிச்சுட்டு அதைப் போய் ப்லாக்ல எழுதுவே...அதைப் படிச்சுட்டு நீ சைட் அடிக்கலாமா? என்று யாராவது கேட்பார்கள்...அதற்கு என்ன பதில் சொல்லுவ?’ என்று அசிரீரி கேட்கிறது. என்ன பதில் சொல்வது என்று யோசித்துவிட்டு அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்குள் அவள் அந்த இடத்தைக் காலி செய்துவிடுகிறாள். 

சைட் அடிப்பதற்கே பட்டிமன்றம் என்றால் இத்யாதி இத்யாதிகளுக்கெல்லாம் நினைத்துப் பாருங்கள். டூ மச். இப்படியே போய்க் கொண்டிருந்தால் நித்யானந்தா பிடதியைக் காலி செய்தவுடன் அங்கே ஒரு ஆசிரமம் அமைத்துவிட வேண்டியதுதான்.

‘கோவா வர முடியுமா?’ என்று அமைப்பாளர்கள் கேட்டதிலிருந்து ஒரே பாடல் வரிதான் திரும்பத் திரும்ப மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன பாடல் என்று தனியாகச் சொல்ல வேண்டுமா? அதேதான்.

விமான டிக்கெட், தங்குமிடம் என அனைத்து ஏற்பாடுகளையும் அவர்களே செய்துவிடுகிறார்களாம். இரண்டு நாட்கள் யோசித்துச் சொல்கிறேன் என்று ஒரு கெத்து காட்டிவிட்டு அமைதியாக இருந்திருக்கலாம். அமைப்பாளர்களிடம் அப்படித்தான் பந்தாவாகச் சொல்லியிருந்தேன். ஆனால் அதோடு நிறுத்தவில்லை. எனக்குத்தான் நவகிரகங்களும் நாக்கில் நர்த்தனம் ஆடுகிறார்களே- வீட்டிற்குச் சென்றவுடன் ‘கோவா கூப்பிட்டிருக்காங்க’ என்று சொல்லிவிட்டேன். வீட்டில் இருப்பவர்கள் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்? என்ன வேண்டுமானாலும் சொல்லியிருக்கலாம்தான். ஆனால் ‘எங்களையும் கூட்டிட்டு போறதுக்கு தேங்க்ஸ்’ என்கிறார்கள். சென்னை, மதுரை, தஞ்சாவூர் என்றால் குடும்பத்தோடு செல்லலாம். கோவாவுக்கெல்லாம் குடும்பத்தோடு செல்ல முடியுமா? ஆனால் இத்தகைய சூழல்களில் தப்பிப்பதற்கு வழியே தெரிவதில்லை.

பயணச்சீட்டுக்கள் பதிவு செய்தாகிவிட்டது. மனைவி, மகன், தம்பியின் மகன் ஆகியவர்களோடு ஆன்மிகச் சுற்றுலாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். 

Jun 29, 2015

எது ஹாட்?

சென்ற வாரத்தில் ஒரு பெரிய மனிதரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அமெரிக்க வாழ் இந்தியர். தனது நிறுவனம் சம்பந்தமான வேலைக்காக பெங்களூர் வந்திருந்தவரை தான் சந்திக்கச் செல்வதாகவும் விருப்பமிருந்தால் நீயும் சேர்ந்து கொள்ளலாம் என்று நண்பர் ஒருவர் என்னையும் அழைத்திருந்தார். இத்தகையை பெரிய ஆட்களிடம் பேசும் போது காதைத் திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்தால் போதும். எப்படியும் நல்ல விஷயங்கள் வந்து விழும். 

பொதுவாக ஐடி துறையில் கீழ் மட்ட அளவில் இருக்கும் ஆட்களுக்கு ‘இந்த ப்ராஜக்டில் என்ன பிரச்சினை, இதை எப்பொழுது டெலிவரி கொடுக்க வேண்டும்’ என்று அன்றைய தினத்தின் பிரச்சினைகளைப் பற்றி யோசிக்கத்தான் நேரம் சரியாக இருக்கிறது. அப்படியே நேரம் கிடைத்தாலும் கவனச்சிதறலுக்கான வாய்ப்புகளும் அதிகம். வாட்ஸப்பும், ஃபேஸ்புக்கும் நேரத்தைக் கொன்றுவிடுகின்றன என்பதனால் எதிர்காலத்திற்கான முஸ்தீபுகள் எதையுமே செய்வதில்லை. மேல்மட்ட ஆட்கள்தான் அடுத்து இந்தத் துறையில் என்ன மாறுதல் வரப் போகிறது, எது இந்தத் துறையை ஆளப் போகிறது என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். மேல்மட்ட ஆட்கள் என்றால் ஒரு நிறுவனத்தில் முடிவெடுக்கும் நிலையில் இருக்கும் ஆட்கள்.

அப்படித்தான்- சில நாட்களுக்கு முன்பு நடந்த அலுவலக மீட்டிங் ஒன்றில் ‘Angular JS தெரிந்த ஆள் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று ஒரு இயக்குநர் பேசியதைக் கேட்ட போதுதான் அப்படியொரு ஐட்டம் இருப்பதே தெரியும். விசாரித்துப் பார்த்தால் Angular JS மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. உடன் வேலை செய்யும் பலருக்கு அந்தப் பெயர் தெரிந்திருக்கிறதே அதற்கு மேல் தெரியவில்லை. 

ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பாக Big Data பற்றி பேசத் தொடங்கியிருந்தார்கள். இந்த உலகம்தான் தகவல்களால் நிறைந்து கொண்டிருக்கிறதே- எல்லாமே தகவல்கள்தான். ஒரு சமயம் இணையத்தை ஃபோர்னோகிராபிதான் ஆக்கிரமித்திருந்தது. இப்பொழுதும் அதுதான் இணையத்தில் அதிக சதவீதம் இருக்கிறது என்று யாராவது சொன்னால் தங்களை அவர்கள் புதுப்பித்துக் கொள்ளவேயில்லை என்று அர்த்தம். இப்பொழுது இணையத்தில் மிக அதிக அளவில் குவிந்து கிடப்பது எதுவென்றால் நாம் சமூக ஊடகங்களில் எழுதிக் குவிக்கும் தகவல்கள்தான். ஃபேஸ்புக், ட்விட்டர், வலைப்பதிவு என்று கிடைக்கிற இடத்தில் எல்லாம் நாம் நம்முடைய எண்ணச் சிதறல்களை குவித்துக் கொண்டே போகிறோம். இவ்வளவு டெராபைட், பெட்டாபைட், எக்ஸாபைட் தகவல்களையெல்லாம் எப்படி பகுத்து வைப்பது? எதிர்காலத்தில் இன்னமும் பெருகப் போகும் தகவல்களை எப்படிச் சமாளிக்கப் போகிறோம்? தேவைப்படும் தகவல்களை இந்தக் குவியலிலிருந்து எப்படி பிரித்தெடுப்பது என்பதற்காக நிறுவனங்கள் மண்டை காய்கின்றன். 

Hadoop, No SQL போன்ற நுட்பங்கள் இத்தகையை தகவல் குவியல்களில் முத்துக்குளிக்க உதவுகின்றன. ஆனால் இந்த நுட்பங்களில் அனுபவம் வாய்ந்தவர்களைக் கண்டுபிடிப்பது கஷ்டம். ஐந்து வருட அனுபவம் கொண்டிருக்கும் எந்த ஐடிக்காரனும் வளைந்து புதிய நுட்பங்களைப் படிப்பதில்லை என்பதுதான் நிஜம்.  நிறுவனங்களுக்கு இத்தகையை புதிய நுட்பங்களில் ஆட்கள் தேவை. என்ன செய்வார்கள்? ஹைதராபாத்தின் அமீர்பேட்டிலும் பெங்களூரின் மடிவாலாவிலும் பயிற்சி நிறுவனங்கள் இந்தப் படிப்புகளைச் சொல்லித் தருகின்றன. புதிதாக கல்லூரி முடித்தவர்கள்தான் இதையெல்லாம் படிக்கிறார்கள். நிறுவனங்களுக்கும் வேறு வழியில்லை. அவர்களை எடுத்துக் கொள்கிறார்கள்.

நமக்கு இந்தத் துறையில் ஏழெட்டு வருட அனுபவம் இருக்கிறது ஆனால் புதிய தொழில்நுட்பங்கள் தெரியவில்லை என்றால் விளைவுகளைச் சந்திக்கத் தயாராகத்தான் இருக்க வேண்டும். பயமூட்டுவதற்காகச் சொல்லவில்லை. இந்திய மென்பொருள் நிறுவனங்களின் செயல்திறன்(efficiency) குறைந்து கொண்டே போகிறது என்பதான பேச்சுக்கள் ஏற்கனவே கிளம்பியிருக்கின்றன. ஐடி துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரும் நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொள்ளலாம். நம்முடைய டெக்னாலஜியில் வந்திருக்கும் புதிய நுட்பங்கள் பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? பெரும்பாலானவர்களின் பதில் திருப்தியளிக்கக் கூடியதாக இருக்காது.

Cloud பற்றி வெகு காலமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். எவ்ளவு பேருக்கு அது பற்றித் தெரிந்திருக்கிறது? Mobility, Internet of Things என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். இத்தகையை சூடான சொற்களைக் கேள்விப்படுவதோடு நிறுத்திக் கொள்வதுதான் இந்தியர்களின் மிகப்பெரிய பிரச்சினை என்றுதான் அந்த பெருந்தலை பேச ஆரம்பித்தார். அதற்கு மேல் அந்த நுட்பங்களைப் பற்றித் தோண்டித் துருவுவதில்லை. அதனால்தான் தேங்கிவிடுகிறோம்.

அவர் சொன்னதை மறுக்கமுடியவில்லை. சென்ற வாரத்தில் ஜாவா தெரிந்த ஆள் ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டிய வேலையைக் கொடுத்திருந்தார்கள். எனக்கு ஜாவாவில் பெரிய பரிச்சயம் கிடையாது. ஆனால் நேர்காணல் நடத்த வேண்டிய நபர் வராததால் முதல் நிலைத் தேர்வை மட்டும் என்னை செய்யச் சொல்லியிருந்தார்கள். தொலைபேசி வழியான நேர்காணல்தான். ஏழு வருட அனுபவம் உள்ள ஆள் அவர். தமிழர். அவருடைய ரெஸ்யூம் வந்தவுடனேயே ஃபேஸ்புக்கில் அவரது முகத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். ஃபேஸ்புக்கில் எனக்கு நண்பராக இல்லை. ஆனால் அவருக்கும் எனக்கும் பொதுவான நண்பர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். நேர்காணலில் என்ன விதமான கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று தயாரித்திருந்தேன். ஆனால் பெரியதாகச் சிரமப்பட வேண்டியதிருக்கவில்லை. 'web development துறையில் இப்பொழுது எது ஹாட்?’ என்கிற கேள்விதான் முதல் கேள்வி. ஒருவேளை அவர் ஏதாவது பதில் சொல்லியிருந்தால் நிச்சயமாக என்னால் சரிபார்த்திருக்க முடியாது. ஆனால் அவர் ‘எனக்கு நிறைய வேலைகள் இருந்தன...அதனால் நேர்காணலுக்கு எதையுமே தயாரிக்கவில்லை’ என்றார். சம்பந்தமே இல்லாத பதில். வேறு இரண்டு கேள்விகளைக் கேட்டுவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டேன்.

அவரைக் குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லிக்காட்டவில்லை. இதே கேள்வியை என்னிடம் யாராவது கேட்டிருந்தாலும் தெளிவான பதிலைச் சொல்லியிருக்கமாட்டேன் என்பதுதான் உண்மை. இப்படியான புதுப்புது நுட்பங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் காசைக் கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால் ஆட்கள்தான் இல்லை. 

குறைந்தபட்சம் அடுத்த ஹாட் ஏரியா என்பதைக் கூட தெரிந்து வைத்துக் கொள்வதில் கூட சுணக்கமாக இருக்கிறோம் என்று பெருந்தலை சொன்ன போது மறுக்க முடியவில்லை. நானும் அப்படித்தான் இருக்கிறேன். பக்கத்தில் இருப்பவனும் அப்படித்தான் இருக்கிறான். ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றனதான் - வீடு, குடும்பம், பொழுதுபோக்கு இடையில் ஃபேஸ்புக், ட்விட்டர்... ஆனால் இவையெல்லாவற்றையும் தாங்கிப் பிடிக்க நம்முடைய வேலையில் நம் கால்கள் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் அங்குதான் கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறோம்.

‘நீங்க கான்பரஸ்களில் கலந்துக்குறீங்க...பெரிய ஆட்களிடம் பேசறீங்க...உங்களுக்குத் தெரியுது...’ என்று சாக்கு போக்கு ஒன்றைச் சொல்ல முயன்றேன். சிரித்துக் கொண்டே கேட்டார். 

‘கடைசியாக, ஹாட் டாபிக் இன் சாப்ட்வேர் என்று எப்போ தேடின?’ என்றார்.

‘ஹாட் ஆக்டரஸ் இன் பாலிவுட்’ என்றுதான் தேடியிருக்கிறேன் என்று கழுத்து வரைக்கும் வந்துவிட்டது. அடக்கிக் கொண்டேன்.

தகவல்களைச் சேகரிப்பதற்கான எல்லாவிதமான வசதிகளும் நம்மிடம் இருக்கின்றன. ஆனால் நாம்தான் பயன்படுத்திக் கொள்வதில்லை. ‘இல்லையா?’ என்றார். என்ன பதிலைச் சொல்வது? ‘நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்’ என்று சொல்லிவிட்டு கிளம்பி வந்தோம்.

Jun 25, 2015

ஜூன் மாதம்

மே-ஜூன் மாதங்களில் நிசப்தம் அறக்கட்டளைக்கு நிறைய பணம் வந்திருக்கிறது. வழக்கமாக ஐந்து லட்சம் ரூபாய் என்கிற அளவில்தான் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும். இந்த மாதம் கிட்டத்தட்ட மூன்றே கால் லட்சம் ரூபாய்க்கு உதவிகள் வழங்கியிருக்கிறோம் என்ற போதிலும் கையிருப்பு ஐந்து லட்சத்து எண்பதாயிரம் ரூபாயாக இருக்கிறது. (துல்லியமாகச் சொன்னால் ரூ.5,80,831.95- ஐந்து லட்சத்து எண்பதாயிரத்து எந்நூற்று முப்பத்தோரு ரூபாய்). அந்த அளவுக்கு பணம் வந்திருக்கிறது.

1. மொபைல் வழியாக அனுப்பப்பட்ட பண விவரங்களில் மொபைல் எண்கள் தெரிவதால் முதல் சில எண்களை மட்டும் மறைத்திருக்கிறேன். பணம் அனுப்பியவர்கள் சரி பார்த்துக் கொள்வதற்கு ஏதுவாம கடைசி இலக்கங்களை மறைக்கவில்லை.

2. வரிசை எண் 1 இல் இருக்கும் தொகை தினமணியில் சினிமா பற்றிய தொடர் எழுதுவதற்காக அவர்கள் எனக்கு அனுப்பி வைக்கும் தொகை. எழுதுவதன் வழியாக வரும் பணத்தை அறக்கட்டளைக்கு பயன்படுத்திக் கொள்வது என்கிற முடிவின் காரணமாக அவர்களிடமிருந்து நிசப்தம் அறக்கட்டளையின் பெயரிலேயே காசோலை வாங்கிக் கொள்கிறேன்.

3. வரிசை எண் 5 இல் இருக்கும் தொகையை யாரோ வங்கியில் நேரடியாக செலுத்தியிருக்கிறார்கள். பெயர் தெரியவில்லை.

4. வரிசை எண் 14- இந்தத் தொகையையும் வங்கியில் நேரடியாகத் தொகையைச் செலுத்தியிருக்கிறார்கள்- தாங்கள் லண்டனில் இருப்பதாகவும் தங்களுடைய தந்தையார் வங்கியில் பணத்தை நேரடியாகச் செலுத்திவிடுவார் என்றும் சொன்னார்கள். அப்படி வந்த தொகை அது. பணம் வந்து சேர்ந்தவுடன் அவர்களுக்குத் தகவல் அனுப்பியதாக ஞாபகம் இருக்கிறது. ஆனால் இப்பொழுது அவர்களுடைய பெயர் மற்றும் மற்ற விவரங்களுக்காக மின்னஞ்சலைத் தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை. 

வரவு பற்றிய மற்ற விவரங்கள் தெளிவாக இருக்கின்றன.

5. வரிசை எண் 38- பாவனா என்னும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வழங்கப்பட்ட தொகை இரண்டு லட்ச ரூபாய். (விவரம் இணைப்பில்)

6. வரிசை எண்: 42- ஒவ்வொரு மாதமும் சிறுவன் கிருஷ்ணாவுக்கு வழங்கப்படும் உதவித் தொகையான இரண்டாயிரம் ரூபாய் (விவரம் இணைப்பில்)

7. வரிசை எண் 46- R.P.ராஜநாயஹம் பற்றி கேள்விப்பட்டிருக்கக் கூடும். எழுத்தாளர். ஒரு காலத்தில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்பொழுது இல்லை. திருப்பூரில் வசிக்கிறார். சமீபத்தில் அவருடைய மனைவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று நிறைய கடன் ஆகியிருக்கிறது. சில நண்பர்கள் அழைத்து ராஜநாயஹத்துக்கு உதவுமாறு சொல்லியிருந்தார்கள். அதே சமயத்தில் ராஜநாயஹமும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தற்பொழுது தனியார் பள்ளியில் ஸ்போக்கன் இங்கிலீஷ் ஆசிரியராக இருக்கிறார். முன்பு அவர் பணியாற்றிய பள்ளி சம்பளம் தராமல் ஏமாற்றியதாலும் தற்போதைய சொற்ப வருமானத்தினாலும் மிகுந்த வருத்தத்தில் இருந்தவருக்கு இன்னொரு பிரச்சினையாக கண்களில் கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்யச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு உதவி கோரியிருந்தார். ராஜநாயஹம் அவர்களின் கண் அறுவை சிகிச்சைக்காக ஐ பவுண்டேஷனுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்ட்ட தொகை ரூபாய் பதினாறாயிரத்து இருநூறு. இன்று தன்னுடைய கண் அறுவை சிகிச்சை முடிந்துவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். 

8. வரிசை எண் 47- காசோலை எண் 37 பி.எஸ்.ஜி மருத்துவமனையின் பெயரில்தான் வழங்கப்பட்டது. ஆனால் வங்கியின் ஸ்டேட்மெண்ட்டில் நிசப்தம் அறக்கட்டளை என்று வந்திருக்கிறது. என்ன காரணம் என்று பரோடா வங்கிக்குத்தான் வெளிச்சம். இந்த ஒரு லட்சம் ரூபாய் ஈரோடு மாவட்டம் கோபிப்பாளையம் பிரிவில் குடியிருந்து வரும் கூலித் தொழிலாளியான ரவிக்குமார் அவர்களின் மனைவிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவரது மனைவி, ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கல்லீரலில் கட்டி உருவானதன் விளைவாக காமாலை பீடித்துக் கொண்டது. இந்தச் சிக்கல்களின் காரணமாக குறைப் பிரசவத்தின் மூலமாக பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தாயும் சேயும் தனித்தனியாக சிறப்பு அறைகளில் (ICU) கோவை பி.எஸ்.ஜி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே ஒரு லட்ச ரூபாய் செலவாகியிருப்பதாகவும் இன்னமும் மூன்று இலட்சம் வரை தேவை என மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தொடர்பு கொண்டார்கள். கூலித் தொழிலாளிக்கு இது பெரிய செலவுதான். முழுமையான விசாரணைக்குப் பிறகு அந்த ஊர் தலைமையாசிரியர் திரு. தாமஸ் அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை அனுப்பி வைக்க, அதை அவர் அந்தக் குடும்பத்திடம் சேர்ப்பித்தார். இப்பொழுது அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.


9. வரிசை எண் 48- தமிழ்நாடு அறிவியல் கழகத்தில் தீவிரமாகச் செயலாற்றும் பாண்டியராஜன் மதுரையில் ஒரு பள்ளி நடத்துகிறார். சம்பக் என்பது பள்ளியின் பெயர். தனியார் பள்ளிதான் என்றாலும் பெரும்பாலும் கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி இது. எழுத்தாளர்கள் விழியன் போன்றவர்கள் இந்தப் பள்ளிக்கு ஏதாவதொருவிதத்தில் உதவ வேண்டும் என பரிந்துரைத்திருந்தார்கள். செல்வி. அகிலா பள்ளிக்கு ஒரு முறை நேரடியாகச் சென்று பார்த்துவிட்டு வந்து விவரங்களைக் கொடுத்திருந்தார். அதனடிப்படையில் பள்ளியின் கழிவறை வசதி மேம்பாட்டுக்காக பத்தாயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டிருக்கிறது.

இது ஜூன் மாதத்திற்கான வரவு செலவு விவரங்கள். மே மாத வரவு செலவு விவரங்களை இணைப்பில் காணலாம்.

அடுத்த மாதத்தில் செய்யவிருக்கும் உதவிகளுக்காக விசாரணைகள் நடந்து வருகின்றன. உதவி தேவைப்படும் இடங்களுக்கு நேரடியாகச் செல்வதற்கும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் கண்டு உண்மை நிலையைக் கண்டறிவதற்கும் நிறைய நண்பர்கள் உதவிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையிலான அத்தனை காரியங்களுக்கும் இத்தகையவர்களின் உதவிகள்தான் பெரும்பலம். 

பணம் அனுப்பி வைத்த நண்பர்களுக்கும், அறக்கட்டளைக்குத் தேவையான பல்வேறு உதவிகளைச் செய்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி. 

வெளிப்படையான பணப்பரிமாற்றம் என்பதுதான் முக்கியமான உறுதிப்பாடு. அதில் இதுவரை ஒரு கீறல் கூட விழவில்லை என்பதில் வெகு திருப்தியாக இருக்கிறேன். இனியும் இது அப்படியேதான் தொடரும்.

இருப்பினும் எந்தவிதமான சந்தேகம் என்றாலும் vaamanikandan@gmail.com என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Jun 19, 2015

ஆப்பிரிக்கர் என்ன சொன்னார்?

ராமையா மருத்துவமனை வரைக்கும் செல்ல வேண்டிய வேலை இருந்தது. தெரிந்த பெண் ஒருவரை அங்கு அனுமதித்திருக்கிறார்கள். ஏழு மாத கர்ப்பம். ஆரம்பத்திலிருந்தே பிரச்ச்சினைதான். உயர் ரத்தம் அழுத்தம், அது இதுவென்று திணறிக் கொண்டேயிருந்தார். ஏழு மாதமாக வேலைக்கும் செல்வதில்லை. நேற்று ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார்கள். குழந்தை அறுநூற்றைம்பது கிராம்தான் இருந்திருக்கிறது. இவருடைய உடல்நிலை மோசமாகியிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் கடைசி நேரத்தில் குழந்தைக்கு இதயத்துடிப்பு மிகக் குறைவாக இருந்திருக்கிறது. சுகப்பிரசவம்தான் சரியாக இருக்கும் என்று சொல்லி வலி மருந்து கொடுத்திருக்கிறார்களாம். அந்தப் பெண் நேற்றிலிருந்து அழுது கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். ஆறுதல் சொல்வதற்காகச் சென்றிருந்தோம். 

அவரைப் பார்க்க அனுமதிக்கவில்லை. வெளியில் அவருடைய அம்மாவும் கணவரும் வெளியில் நின்றிருந்தார்கள். காவலாளியிடம் பேசிப் பார்த்தோம். ‘பேசுனா அவங்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்’ என்று கன்னடத்தில் சொன்னார்கள். அவர் வரம் கொடுப்பதாகவே தெரியவில்லை. எங்களின் நச்சரிப்பு தாங்காமல் ‘உள்ளே ஆடிட்டிங் நடக்குது இருபது நிமிஷம் இருங்க...டாக்டர்கிட்ட பேசிட்டு சொல்லுறேன்’ என்றார். 

மருத்துவமனைக்குள் காத்திருப்பதைப் போன்ற கஷ்டம் வேறு எதுவுமில்லை. வலிகளையும் வேதனைகளையும் தூக்கமில்லாத இரவுகளையும் சுமந்தபடி நம்மைக் கடக்கும் கண்களை எதிர்கொள்வதும் கஷ்டம்; தவிர்ப்பதும் கஷ்டம். ஓரமாக ஒதுங்கி நின்று விட வேண்டும் அல்லது இந்த இடத்தை விட்டு ஓடி விட வேண்டும் என்றுதான் மனது விரும்புகிறது. ஆனால் அது எவ்வளவு சுயநலம்? இந்தச் சுவர்களுக்குள் சிக்கிக் கொண்ட மனிதர்கள் எதையோ அனுபவித்துவிட்டு போகட்டும்- இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான மனநிலையையும், இடத்தையும் தேடி ஓடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? ஆனால் நம்மால் வேறு என்ன செய்ய முடியும்? இந்த உலகில் ஒவ்வொருவருக்காகவும் அழத் தொடங்கினால் இந்த வாழ்க்கை முழுவதும் அழுது கொண்டேதான் இருக்க வேண்டும். துன்பத்திலிருக்கும் ஒவ்வொருவருக்காவும் வேதனைப் படத் தொடங்கினால் வாழ்நாள் முழுவதும் வேதனையைத் தவிர வேறு எதையும் அறிந்து கொள்ள மாட்டோம். 

எதை எதையோ நினைத்துக் கொண்டிருந்தேன்.

மருத்துவமனைக்குள் குழந்தைகளுக்கான விளையாட்டு அறை ஒன்றும் இருக்கிறது. சுவர் முழுக்கவும் வண்ணச் சித்திரங்களாகத் தீட்டி வைத்திருந்தார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் அறையினுள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். பெற்றவர்களுக்கு அந்த அறைக்குள் அனுமதியில்லை. குழந்தைகள் மட்டும்தான். குழந்தைகளுக்கு சந்தோஷம்தான். வெளியே நின்று வேடிக்கை பார்க்கும் பெற்றவர்களுக்கும் சந்தோஷம்தான். நமக்குத்தான் கஷ்டம். மருந்து இறக்குவதற்காக புறங்கையில் ஊசி குத்தப்பட்டு அந்த ஊசியோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் தலையிலும் கழுத்திலும் கட்டுப் போட்டபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பிஞ்சுகளும் மனதைப் பிசைந்தார்கள். அங்கிருந்தும் நகர்ந்துவிடத் தோன்றியது.

மருத்துவமனையில் சில ஆப்பிரிக்கர்களும் இருந்தார்கள். சிகிச்சைக்காக வருகிறார்கள். தனித்து அமர்ந்திருந்த ஓர் ஆப்பிரிக்க ஆணிடம் பேச்சுக் கொடுக்கத் தோன்றியது. மெதுவாக புன்னகைத்தவுடன் ‘ஹலோ’ என்றார். 

சம்பிரதாயமான அறிமுகத்துக்கு பிறகு ‘ட்ரீட்மெண்டுக்காக வந்திருக்கிறீர்களா?’ என்றேன். 

‘யெஸ்...ஃபார் மை வொஃய்ப்’ என்றார். சிறுநீரக பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக மாலியிலிருந்து வந்திருக்கிறார்கள். அப்படியொரு ஆப்பிரிக்க நாடு இருப்பது அவருடன் பேசிய பிறகுதான் தெரியும். மனைவி அறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். அந்த மனிதருக்கு நாற்பது வயதுதான் இருக்கக் கூடும். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். பேசிக் கொண்டிருந்தபோது தன்னுடைய மொபலை எடுத்து குழந்தைகளின் படத்தைக் காட்டினார். இரண்டு சிறுமிகள். 

மனைவி ஆசிரியராக பணியாற்றுகிறாராம். ‘அங்கேயெல்லாம் இவ்வளவு மருத்துவ வசதிகள் இல்லை’ என்றார். ஆனால் தங்கச் சுரங்கங்கள் இருக்கின்றனவாம். சுரங்கங்களுக்கு ஏஜெண்ட் என்பது போன்றதொரு வேலையைச் செய்கிறார். அந்தவிதத்தில்தான் சில இந்திய நகை வியாபாரிகளின் வழியாக ராமையா மருத்துவமனை அறிமுகமாகியிருக்கிறது. ‘எங்க நாட்ல ரொம்ப கஷ்டம்....திரும்பிய பக்கமெல்லாம் ஏழ்மைதான்’ என்றார். அவரிடம் கேட்கலாமா வேண்டாமா என்று தெரியவில்லை. ‘இந்தியா வந்து மருத்துவம் பார்க்கறீங்க....உங்களுக்கு வசதி இருக்கா?’ என்றேன். அவர் இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்கவில்லை. சில வினாடிகள் எதுவும் பேசவில்லை. பிறகு என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. பேச ஆரம்பித்துவிட்டார்.

சிறு காலத்திலிருந்தே வறுமைதான். அப்பா குடும்பத்தை விட்டுவிட்டு போய்விட்டார். அம்மாதான் இரண்டு மகன்களையும் வளர்த்திருக்கிறார். இவருக்கும் பெரிய படிப்பெல்லாம் எதுவுமில்லை. கொஞ்சம் வயது வந்தவுடன் தங்கச் சுரங்கத்தில் வேலை பார்க்கத் தொடங்கி ஓரளவு தம் கட்டியிருக்கிறார். இப்பொழுது இந்த மருத்துவச் செலவுகளுக்காக கையிருப்பு மொத்தத்தையும் வழித்தெடுத்து வந்திருக்கிறார். ‘இரண்டு பேரையும் காப்பாற்றிவிட வேண்டும்’ என்ற வெறியோடு இருப்பதாகச் சொன்னார். 

‘இரண்டு பேரா?’

‘உங்ககிட்ட சொல்லைல....ஆமா ரெண்டு பேர்தான்...அம்மாவும் குழந்தையும்’. குழந்தைக்கும் பிரச்சினை என்று அவர் சொல்லவில்லை. இப்பொழுதுதான் சொல்கிறார். அதே பிரச்சினைதான். சிறுநீரகத்தில் தொந்தரவு. 

‘குழந்தை எங்கே?’ என்றேன்.

அறைக்குள் விளையாடிக் கொண்டிருக்கிறாள். அந்த அறைக்குள் முன்பு பார்த்த போது ஆப்பிரிக்க குழந்தை இருப்பதை நான் கவனித்திருக்கவில்லை. அழைத்துச் சென்று காட்டினார். வெளியில் நின்று குழந்தையை நோக்கி சைகை செய்தார். அந்தக் குழந்தை சிரித்துவிட்டு விளையாட்டைத் தொடர்ந்தது.

‘இன்னொரு குழந்தை?’ 

‘அம்மாகிட்ட விட்டுட்டு வந்திருக்கோம்...நாலு வயசு ஆகுது’. தனது அம்மாவும் அப்பாவும் அக்காவும் வந்து சேர்வதற்காக அந்தக் குழந்தை காத்துக் கொண்டிருக்கும். 

‘எப்போ ஊருக்கு போவோம்ன்னு ஆசையா இருக்கு’ என்று அவர் சொன்ன போது வருத்தமாக இருந்தது. மனைவி மகள் என இரண்டு பேரையும் ஒரு சேர மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு மிச்சமிருக்கிற ஒரு குழந்தையை கண் காணாத இடத்தில் விட்டுவிட்டு நெரிசல் மிகுந்த இந்நகரத்தில் தனியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கும் இந்த மனிதனின் மனநிலை எப்படியெல்லாம் ஊசலாடிக் கொண்டிருக்கும்? 

‘ஏதாச்சும் ஹெல்ப் வேணும்ன்னா சொல்லுங்க’ என்றதற்கு எதுவுமே சொல்லாமல் சிரித்தார்.

‘தேங்க்ஸ்’ என்றவர் ‘ஒண்ணு சொல்லட்டுமா....Every successful person has a painful story. Every painful story has a successful ending. Accept the pain and get ready for success and Happiness' என்றார்.

சிரித்தேன். 

‘நான் சொந்தமா சொன்னேன்னு நினைச்சுக்க வேண்டாம்...அங்க பாருங்க’ என்று காட்டினார். படியில் ஒட்டி வைத்திருந்தார்கள். ‘காப்பியடிச்சுட்டேன்...ஆனா மனசுக்கு ஆறுதலா இருக்கு’ என்று சொல்லிவிட்டு பெருஞ்சிரிப்பு ஒன்றை உதிர்த்தார். 

இருவரும் பேசாமல் அமர்ந்திருந்தோம். அந்த இடத்தில் அந்த ஒரு வாக்கியமே எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது. அவ்வளவு வலிமை மிக்க வாக்கியம் அது.

‘அந்தப் பொண்ணை இன்னைக்கு பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க’ என்று உடன் வந்தவர்கள் சொன்னார்கள். அதனால் வந்த காரியம் நிறைவேறாமலேயே திரும்பினோம். ஆப்பிரிக்கருக்கு கை கொடுத்துவிட்டு கிளம்பினேன்.

வண்டியில் ஏறிய பிறகு ‘ஆப்பிரிக்கர் என்ன சொன்னார்?’ என்றார்கள். அவர் படியில் ஒட்டியிருந்ததை படித்துக் காட்டியதை மட்டும் சொன்னேன். சிரித்தார்கள். 

வழியெங்கும் மழை பெய்து கொண்டிருந்தது. மழைச் சத்தத்தையும் தாண்டி அவரது சிரிப்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

வேலை வாய்ப்புகள்

சில வேண்டுகோள்கள்-

1) நிசப்தத்தில் பதிவு செய்யப்படும் வேலைகளுக்கான தகுதிகள் இருந்தால் மட்டும் Resume ஐ அனுப்பி வைக்கவும். ‘இந்த ரெஸ்யூமுக்கு ஏற்ற வேலை எதுவும் இருக்கிறதா?’ என்று கேட்டு அனுப்பி வைக்க வேண்டாம். இத்தகைய மின்னஞ்சல்களால் எந்தப் பயனும் இல்லை. என்னாலும் பதில் அனுப்பக் கூட முடிவதில்லை. அவ்வளவு ரெஸ்யூம்கள் வந்து நிரம்பிக் கொண்டிருக்கின்றன.

2) வேலை காலி இருப்பதாக தகவல் அனுப்புபவர்கள் தங்களுடைய நிறுவனம் அல்லது நண்பர்களின் நிறுவனத்தில் தேவைகள் இருந்தால் மட்டும் அனுப்பவும். ‘எனக்கு இந்த ஈமெயில் வந்துச்சு...ஃபார்வேர்ட் செய்யறேன்...விசாரிச்சுக்குங்க’ என்று சொல்லி தயவு செய்து அனுப்ப வேண்டாம். அது சாத்தியமில்லாத காரியம்.

3) ஏற்கனவே சொன்னது போல தபால்காரன் வேலையை மட்டும்தான் செய்கிறேன். Job exchange என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்.

நன்றி.


                                                                    (1)

Freshers:
Electrical Engineer - 1 no
BE (EEE)
2014 அல்லது 2015 ஆம் ஆண்டு தேர்ச்சியடைந்தவர்கள்

Mechanical Engineer - 1 no
B.E (Mechanical)
2014 அல்லது 2015 ஆம் ஆண்டு தேர்ச்சியடைந்தவர்கள்
இடம்: பெங்களூர்

சரளமான ஆங்கிலம் மிக அவசியம். vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்கவும்

                                                                   (2)

C#.Net and SSRS
இடம்: திருவனந்தபுரம், கொச்சின், சென்னை மற்றும் பெங்களூர்
அனுபவம்: 4-6 வருடங்கள்
30 நாட்களுக்குள் சேர வேண்டும்.
sg.prem2@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்கவும்

                                                                   (3)

ஈரோட்டில் செயல்படும் விளம்பர நிறுவனம் ஒன்றில் அலுவலக நிர்வாகியாக பண்புரிய விருப்பமிருக்கும் பெண்கள் admin@designpluz.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
சம்பளம்: ரூ. 8000- 10000

                                                                  (4)

இடம்: பெங்களூர்
Industry: Semiconductor / Electronics
அனுபவம்: 2 to 5 years on SoC (System On Chip) validation of Pre-silicon and Post-Silicon
எதிர்பார்ப்புகள்:
Good understanding of digital and analog electronics circuits
Experience on firmware design, testing and debug.
Familiarity with Embedded C and scripting using PERL/Python
H/W and Lab debug skills: Familiarity with usage of instruments like oscilloscope and signal generators

vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்கவும்

                                                                 (5)

இடம்: சென்னை

iOS 
அனுபவம்: 2+ வருடங்கள்

L2 Java
அனுபவம்: 2 - 3 வருடங்கள்

Android 
அனுபவம்: 2+ வருடங்கள் 

HTML5
அனுபவம்: 2 - 4 வருடங்கள்

SQL Developer
அனுபவம்: 2 - 4 வருடங்கள்

Project Manager
அனுபவம்: 8 - 12 வருடங்கள்

Photoshop Designer- Biz. Development Team
அனுபவம்: 4 - 5 வருடங்கள்

Photoshop Designer
அனுபவம்: 3 - 4 வருடங்கள்

vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூம் அனுப்பி வைக்கவும்

                                                           (6)

கோயமுத்தூரில் இருக்கும் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் எட்டு காலி இடங்கள் இருக்கின்றன.
அனுபவம்: 2-3 வருடங்கள்
தொழில்நுட்பம்: HTML, JavaScript
Jquery தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பு.

மின்னஞ்சல்: vinodh.m@verticurl.com

                                                             (7)


Performance Engineering
அனுபவம்: 4-12 வருடங்கள்
ஊர்: பெங்களூர்
60 நாட்களுக்குள் சேர வேண்டும்.

QTP Testing
அனுபவம்: 6-8 வருடங்கள்
ஊர்: பெங்களூர்
7-20 நாட்களுக்குள் சேர வேண்டும்.

QTP with Web services
அனுபவம்: 5-12 வருடங்கள்
ஊர்: பெங்களூர்
30 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Mumps Developer
அனுபவம்: 1-10 வருடங்கள்
ஊர்: பெங்களூர்/சென்னை
45-60 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Java Lead
அனுபவம்: 6-10 வருடங்கள்
ஊர்: பெங்களூர்
30 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Java Developer
அனுபவம்: 4-8 வருடங்கள்
ஊர்: பெங்களூர்
30 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Java/ Dotnet Oracle Production Support - Night Shift
அனுபவம்: 2-5 வருடங்கள்
ஊர்: சென்னை
15-30 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Systematics Developer
அனுபவம்: 5+ வருடங்கள்
ஊர்: சென்னை
60 நாட்களுக்குள் சேர வேண்டும்.

SAP - BO Support : Night Shift
அனுபவம்: 4-6 வருடங்கள்
ஊர்: சென்னை
30-45 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Microfocus COBOL
அனுபவம்: 1-10 வருடங்கள்
ஊர்: சென்னை
45-60 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Mainframe Developer
அனுபவம்: 3-7 வருடங்கள்
ஊர்: சென்னை
30-45 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Oracle Database Prog. With Java
அனுபவம்: 6-9 வருடங்கள்
ஊர்: சென்னை
30-45 நாட்களுக்குள் சேர வேண்டும்.

C++, Unix with Banking Switch
அனுபவம்: 4-6 வருடங்கள்
ஊர்: சென்னை
60 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Datastage Administrator - Lead
அனுபவம்: 8-10 வருடங்கள்
ஊர்: சென்னை
30-45 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Java with Flex மற்றும் Java J2EE Developer
அனுபவம்: 3-5 வருடங்கள்
ஊர்: சென்னை
30 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Automation Testing- QTP
அனுபவம்: 4-7 வருடங்கள்
ஊர்: சென்னை
30 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Manual with Automation Testing - Payment domain
அனுபவம்: 4-5 வருடங்கள்
ஊர்: குர்கான்
30 நாட்களுக்குள் சேர வேண்டும்.
Automation Testing with Webservices & SOAP UI
அனுபவம்: 2-4 வருடங்கள்
ஊர்: குர்கான்
30 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Manual Testing with UNIX, Webservices & SOAP UI
அனுபவம்: 2-4 வருடங்கள்
ஊர்: குர்கான்
30 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Asp.net Developer
அனுபவம்: 3-5 வருடங்கள்
ஊர்: மொஹாலி
30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Asp.net Developer with Teleric Control
அனுபவம்: 1-4 வருடங்கள்
ஊர்: மொஹாலி
30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.

C++ Developer
அனுபவம்: 3-5 வருடங்கள்
ஊர்: மொஹாலி
30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Asp.net Developer with MVVM/MVC
அனுபவம்: 3-13 வருடங்கள்
ஊர்: மொஹாலி
30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Automation Testing
அனுபவம்: 4-6 வருடங்கள்
ஊர்: மொஹாலி
30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.

Manual Testing
அனுபவம்: 3-15 வருடங்கள்
ஊர்: மொஹாலி
30-40 நாட்களுக்குள் சேர வேண்டும்.

மேற்சொன்ன அனைத்து வேலைகளுக்கும்: manohar_gri@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு ரெஸ்யூமை அனுப்பி வைக்கவும்.

Jun 18, 2015

ஒரு ராத்தல் இறைச்சி

சமீபத்தில் இன்மை இதழில் நகுலனுக்கான சிறப்பிதழைக் கொண்டு வந்திருந்தார்கள். இன்மை சற்று கனமான இணையப் பத்திரிக்கை. எழுத்தாளர்கள் அபிலாஷூம், சர்வோத்தமனும் நடத்துகிறார்கள். சிறப்பிதழில் நகுலன் பற்றிய கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களை சில படைப்பாளிகளிடமிருந்து வாங்கி பதிவு செய்திருந்தார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்த ஒரு வரி எனக்கு மிகப் பிடித்திருந்தது. நகுலனின் கவிதையைக் காட்டிலும் உரைநடை தனித்துவமானது என்று சொல்லியிருந்தார். அதை நிறையப் பேர் ஒத்துக் கொள்ளக் கூடும். உரைநடையில் பரீட்சார்த்த முயற்சிகளை நகுலன் மேற்கொண்டிருந்தார் என்பதற்கு உதாரணம் காட்ட வேண்டுமானால் ‘ஒரு ராத்தல் இறைச்சி’ என்ற சிறுகதையைச் சொல்லலாம். சிறிய கதைதான். பத்து நிமிடங்களில் வாசித்துவிடலாம். ஆனால் சிறுகதையில் நாம் யோசிப்பதற்கான நிறைய இடங்களை விட்டு வைத்திருக்கிறார்.

ஒரு எழுத்தாளனுக்கும் அவனது வளர்ப்பு நாய்க்குமான பந்தம்தான் கதை. கதை சொல்கிறவன் தன்னை அறிமுகப்படுத்துவாகத்தான் கதை ஆரம்பமாகிறது. இதுவரை தான் எழுதிய படைப்புகளின் வழியாக வெறும் நான்கு ரூபாய் இருபத்தைந்து பைசா மட்டுமே சம்பாதித்திருக்கும் எழுத்தாளன். அடுத்த வரியில் தான் காதலித்த பெண்ணைப் பற்றியக் குறிப்பு வருகிறது. அதைத் தொடர்ந்து வரும் பத்தியில் தனது உத்தியோகம், சம்பள உயர்வு பற்றிய குறிப்பு. அதற்குப் பிறகு தான் ஐந்து வருடங்களாக வளர்க்கும் நாய் என கதை நீள்கிறது. இவையெல்லாம்  ஒன்றுக்கொன்று சம்பந்தமேயில்லாத குறிப்புகளாக இருக்கின்றன என்று ஆரம்பத்திலேயே ஒரு யோசனை வந்துவிடும்.

கால்களை நக்கியே கடுப்பேற்றிக் கொண்டிருக்கும் அந்த நாய்க்கு வெள்ளிக்கிழமையானால் கறி போட்டுவிட வேண்டும். அறிவார்ந்த நாய்தான். ஆனாலும் அது கறியை எதிர்பார்த்து இவ்வளவு தீவிரமாகச் சேட்டைகளைச் செய்வதைத்தான் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இருந்தாலும் ஐந்து வருடங்களைத் தாண்டிவிட்டார்கள். இடையில் எழுத்தாளனைப் பார்க்க இன்னொரு எழுத்தாளர் பாம்பேயிலிருந்து வருகிறார். அவரோடு பேசியபடி அந்த வாரம் நாய்க்கு கறி போடாமல் விட்டுவிடுகிறார் எழுத்தாளர். பொறுத்துப் பொறுத்து பார்த்த நாய் எஜமானனின் ஆடு சதையை எட்டிப்பிடித்துவிடுகிறது. 

துண்டித்த சித்திரங்களை ஒரு மெல்லிய சரடால் இணைக்கிற கதை இது. இந்தச் சித்திரங்கள் ஒவ்வொன்றும் தொடர்புடையவை போலவும் இருக்கும். இல்லாதது போலவும் தெரியும். இந்த ஊசல்தான் கதைக்கான பலமாகத் தெரிகிறது. இன்னொரு பலம்- நாய் மீது வாசகனுக்கு உருவாகும் அன்பு. ‘தனக்கு எரிச்சலாக இருக்கிறது’ என்று உணர்த்தியபடியே நாய் பற்றிய வர்ணிப்புகளைத் தந்து அதன் மீது நமக்கொரு பிரியத்தை உருவாக்கிவிடுகிறார். கதையின் இறுதியில் நாய்க்கு இவருடைய வேலைக்காரன் கொடுக்கும் தண்டனை நம்மைச் சலனமுறச் செய்துவிடுகிறது. அதுவரை கதையில் பிரதானமாகத் தெரிந்த எழுத்தாளன் மறைந்து அந்த நாயின் பிம்பம் வந்து நம் மனதுக்குள் ஒட்டிக் கொள்கிறது.

நடை, உள்ளடக்கம் என இரண்டிலும் செய்யப்பட்ட இத்தகைய பரிசோதனைகள் கதையை இன்றைக்கு புத்தம் புதியதாகக் காட்டுகின்றன. நகுலனின் மொழி விளையாட்டு பிரமாதமானது.

இதுவரை வாசித்திராதவர்கள் வாசித்துவிடுங்கள். இணைப்பு

கதையில் இடம்பெறும் துண்டிக்கப்பட்ட சித்திரங்கள் எதைக் குறிப்பிடுகின்றன? சன்மானமே வராத தனது எழுத்து குறித்தான குறிப்பின் வழியாக வாசகனிடம் எதைச் சொல்கிறார்? தனது காதல் தோல்விக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்? சம்பள உயர்வு பற்றிய குறிப்பு எழுத்தாளன் பற்றிய எந்தவிதமான அபிப்பிராயத்தை உருவாக்குகிறது? இந்த மூன்றையும் இணைத்து கதையின் கடைசியில் நாய்க்கு அளிக்கப்படும் தண்டனையை எப்படி புரிந்து கொள்கிறோம்? இந்த பதிலைக் கண்டுபிடிப்பதைத்தான் நாம் யோசிப்பதற்கான இடம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 

‘இதுதான் முடிவு’ என்பதோடு சிறுகதை நிறைவு பெற்றுவிடுவதில்லை. வாசிக்கிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கதையின் வீச்சை உணர்கிறார்கள். வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள் என்பது இரண்டாம்பட்சம். ஒருவரே  கூட இன்று ஒரு மாதிரி புரிந்து கொள்ளலாம் ஆறு மாதங்களுக்கு பிறகு வேறொரு மாதிரி புரிந்து கொள்ளலாம். அப்படியானதொரு சிறுகதை இது. அந்த வகையில்தான் இந்தச் சிறுகதை சிறந்த சிறுகதைளின் வரிசையில் தனக்கான இடத்தைப் பெறுகிறது என்று நம்புகிறேன்.

இன்றைய மற்றொரு பதிவு: அன்பார்ந்த களவாணிகள்

அன்பார்ந்த களவாணிகள்

வெள்ளிக்கிழமையானால் அலுவலகத்துக்கு ஒரு கூட்டம் வருகிறது. ஊழியர்கள் நலனுக்காக சில காரியங்களைச் செய்வார்கள் அல்லவா? அப்படியான செயல்பாடு அது. இரண்டு வாரங்களுக்கு முன்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை சோதனை செய்வதற்காக ஒரு குழுவினர் வந்திருந்தார்கள். தனியார் மருத்துவமனையின் ஆட்கள் அவர்கள்.  Random Blood Sugar பார்த்தார்கள். எங்கள் ஊரில் பரிசோதித்தால் ஐம்பது ரூபாய். பெங்களூரில் நூற்றியிருபது ரூபாய் வாங்குகிறார்கள். ஆனால் இந்த முகாமில் இலவசமாகச் செய்தார்கள். ‘இவ்வளவு பேருக்கு இலவசமாக பார்க்கிறார்கள். நல்ல மருத்துவமனை’ என்று நினைத்து வரிசையில் நின்றிருந்தேன். வரிசையில் நிற்கும் போதே ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்து நிரப்பச் சொல்லியிருந்தார்கள். வழக்கமான விவரங்கள்தான். தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி, வீட்டில் யாருக்கேனும் சர்க்கரை இருக்கிறதா என்கிற கேள்விகள். அம்மாவுக்கு இருக்கிறது என்று நிரப்பிக் கொடுத்திருந்தேன். அலுவலக பணியாளர்களுக்கு பரிசோதனை முடிந்த பிறகு மற்றவர்களுக்கும் செய்தார்கள்- மற்றவர்கள் என்றால் அலுவலகத்தை துடைத்துப் பெருக்கும் கடைநிலை ஊழியர்கள். ஒரு ஆயாவுக்கு சர்க்கரையின் அளவு முந்நூற்று சொச்சம் இருந்தது. அதைக் கேட்டு மயங்கி வீழ்ந்துவிட்டார். சர்க்கரை என்றால் உயிர்க்கொல்லி என்று நினைத்திருப்பார் போலிருக்கிறது.

அடுத்த நாள் காலையில் அந்த ஆயாவிடம் பேசினேன். நேற்றிலிருந்து சாப்பாடே சாப்பிடவில்லை என்றார். அவ்வளவு பயம். நூல்கோல் வைத்தியத்தைச் சொல்லிவிட்டு ‘எதுக்கும் நீங்க டாக்டரைப் பாருங்க’ என்றேன். நேற்று மாலையில் விசாரித்த வரைக்கும் அவர் மருத்துவரை பார்த்திருக்கவில்லை. பரிசோதனை செய்ய வந்த மருத்துவமனையிலிருந்தே இரண்டு மூன்று முறை அழைத்திருக்கிறார்கள். ‘அந்த ஆஸ்பத்திரிக்காரங்களே வரச் சொல்லியிருக்காங்க..டெஸ்ட் எல்லாம் செய்யணும்...தொள்ளாயிரம் ரூபாய் எடுத்துட்டு வரச் சொல்லுறாங்க...காசு ரெடி பண்ணிட்டு போகணும்’ என்றார். இப்பொழுதெல்லாம் மதிய உணவுக்குச் சென்றால் ஒரு பஃபே சாப்பாடு நானூறு ரூபாய்க்கு குறைவில்லாமல் ஆகிறது. பார்-பீ-க்யூவுக்குச் சென்றால் எழுநூறு ரூபாய்க்கு மேலாக ஆகிறதாம். அதே அலுவலகத்தில் வேலை செய்யும் ஆயாவுக்கு முந்நூறுக்கு மேல் சர்க்கரையிருந்தாலும் மருத்துவமனைக்குச் செல்வதற்கு காசு ஏற்பாடு செய்ய ஒன்றிரண்டு வாரங்கள் ஆகிறது. 

அந்த ஆயா இருக்கட்டும். மருத்துவமனைக்காரர்களை கவனித்தீர்களா? இலவச பரிசோதனை செய்வதாகவும் ஆயிற்று; நோயாளியையும் பிடித்த மாதிரி ஆகிவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து என்னையும் ஃபோனில் அழைத்தார்கள். ‘அம்மாவுக்கு சர்க்கரை இருக்குல்ல...கூட்டிட்டு வர்றீங்களா?’ என்றார் ஒரு பெண்மணி. அம்மா ஊரில் இருக்கிறார் என்று சொல்லியிருக்கலாம். அதற்கு மேல் தொந்தரவு இருந்திருக்காது. தெரியாத்தனமாக சரி என்று சொல்லிவிட்டேன். அதன் பிறகு தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்குத் தாளித்து தள்ளிவிட்டார்கள். ‘எப்போ வர்றீங்க?’ என்று கேட்கமாட்டார்கள். ‘உங்களுக்காக எப்போ அப்பாய்ண்ட்மெண்ட் புக் பண்ணட்டும்?’ என்பார்கள். ஏதாவது ஒரு நாளில் நாம் சென்றே தீர வேண்டும் என்பது மாதிரியான அழுத்தம் இது. அலுவலக நண்பர்கள் பலருக்கும் இதே தொந்தரவு. இவர்கள் இப்படி ஆள் பிடிப்பதற்கு இலவச மருத்துவ முகாம் என்று பெயர். முந்தாநாள் கூட அதே பெண் அழைத்திருந்தார். ‘எனக்கு ஓரளவுக்கு விவரம் இருக்குங்க...தயவு செஞ்சு நான் முடிவெடுக்க அனுமதிங்க...எந்த மருத்துவரிடம் அம்மாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும்’ என்று கத்திவிட்டேன். வழக்கமாக அப்படி யாரிடமும் ஃபோனில் கத்துவதில்லை. ஆனால் வெண்ணையை வெட்டுவது போல வழு வழுவென பேசி ஆள் பிடித்தால் கோபம் வந்துவிடுகிறது. நம்மை இளிச்சவாயன் என்று நினைத்தால் மட்டுமே அப்படி வழுவழுப்பாக பேச முடியும். அதற்கு மேல் தொந்தரவு இல்லை.

இவர்கள் இப்படியொரு களவாணி என்றால் கடந்த வெள்ளிக்கிழமை இன்னொரு கார்போரேட் களவாணிக் குழு வந்திருந்தது. யோகா சொல்லித் தருகிறோம் என்று இறங்கியிருந்தார்கள். ஈஷா யோக மையத்தினர்தான். உண்மையில் ஜக்கியின் ஆட்கள்தான் யோகா சொல்லித் தருகிறார்கள் என்று தெரியாது. ஷூவைக் கழற்றிவிட்டு அந்த இடத்துக்குச் சென்ற போதுதான் தெரிந்தது. ஒரு பெண் - அவளுக்கு முப்பது வயது இருக்கலாம் - முழு சந்நியாசினி ஆகிவிட்டாளாம். ‘நான் சிஸ்கோவில் வேலை செய்தேன்...லட்சக்கணக்கில் சம்பளம்...இப்போ வேலையை விட்டுட்டு சத்குருவின் பாதங்களில் சரணடைந்துவிட்டேன்...ரொம்ப நிம்மதி’ என்றார். இது ஒரு மூளைச் சலவை. இந்த உலகத்தில் வேலை, குடும்பம் உள்ளிட்ட லெளகீக வாழ்க்கை என்பதே சுமை என்பதாகவும் இந்தச் சுமையை இறக்கி வைக்க ஒரு குருவினால் மட்டுமே முடியும் என்கிற வகையில் ஐடிக்காரர்களிடம் காட்டுவதற்கான மாடல்கள் இந்த மாதிரியான சந்நியாசினிகள். ‘ச்சே ஐஐடியில் படிச்சவன் இப்படி மாறியிருக்கான் பாரு..நிச்சயம் ஏதோ இருக்கு’ என்று அடுத்தவர்களையும் யோசிக்கச் செய்கிறார்கள். பக்காவான strategy.

ஓட்டுவது எருமை. அதில் இப்படியொரு வெட்டிப் பெருமை.

முப்பது வயதிலும் நாற்பது வயதிலும் வாழ்க்கையில் அனுபவிக்கவும் தெரிந்து கொள்ளவும் எவ்வளவோ இருக்கின்றன. இந்த வயதில் எவனோ சொன்னான் என்று விட்டில் பூச்சியாக விழுந்துவிட்டு அடுத்தவனைப் பார்த்து ‘உங்கள் வாழ்க்கையைவிடவும் என்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கிறது’ என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? ஒருவிதமான மனப்பிரம்மை அது. சாதாரண மனித வாழ்க்கையின் எல்லாவிதமான பரிமாணங்களையும் பார்த்து அனுபவித்தவன்தான் பூரண மனிதனாக முடியுமே தவிர பாதியிலேயே எல்லாவற்றையும் விட்டு ஒரு அரைவேக்காட்டு சாமியாரிடம் சராணகதியடைந்தவர் வந்து பேசினால் எரிச்சல் வரத்தான் செய்யும். இதே ஜக்கியின் மகள் முழுநேர யோகா பயிற்சியாளர் ஆகிவிட்டாரா என்ன? அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ இருக்கிறாராம். உபதேசமெல்லாம் ஊருக்குத்தான்.

எனக்கு இந்த மாதிரி சமயங்களில் வாய் சும்மா இருக்காது. ‘உங்களை விட நான் சந்தோஷமாக இருக்கிறேன். இல்லையென்று நிரூபிக்க முடியுமா?’ என்று கேட்டேன். ஹோட்டலில் வேலை செய்பவரோ, சாலையோரம் காய்கறி விற்பவரோ ‘உன்னைவிட சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று சொன்னால் ஒத்துக் கொள்வேன். ஆனால் இந்தப் பெண்மணி சொல்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

எதைப்பற்றியும் யோசிக்காமல் ‘சத்குருவின் கூட்டம் பெங்களூரில் நடக்கிறது. அதற்கு நீங்கள் வர வேண்டும்’ என்றார். 

இவ்வளவுதான். இதுதான் இந்த யோகா பயிற்சியின் நோக்கம். எதையாவது சொல்லி சத்குருவின் கூட்டத்திற்கு ஆளை இழுத்து வர வேண்டும். இப்படித்தான் பெங்களூரில் நிறைய கார்போரேட் நிறுவனங்களில் நுழைந்திருக்கிறார்கள். யோகா சொல்லித் தருகிறோம் என்று நுழைந்து பிறகு ஜூன் 20 ஆம் தேதி ஜக்கி நடத்தும் யோகா பயிற்சிக்கு வந்துவிடுங்கள் என்று கொக்கி போடுகிறார்கள். பெங்களூரில் திரும்பிய பக்கமெல்லாம் பேனர்கள். முதலமைச்சரே சத்குருவுடன் சேர்ந்து யோகா செய்கிறாராம். செய்தித்தாள்களில் பிட் நோட்டீஸ் வைத்துக் கொடுக்கிறார்கள். பேருந்து நிறுத்தங்களில் விநியோகிக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான ஆட்களைத் திரட்டிவிடுவார்கள். அதுவும் கூட்டத்தை எங்கே நடத்துகிறார்கள்? மான்யாட்டா டெக் பார்க். கார்போரேட் நிறுவனங்கள் நிரம்பிக் கிடக்கும் வளாகம் அது. இந்த களவாணி சாமியார்கள் பேசும் போது ‘கார்போரேட் என்றாலே மன அழுத்தம்’ என்று நிறுவிவிடுகிறார்கள். ‘ஆமாம்டா நமக்கு பயங்கர டென்ஷன்’ என்று நாமும் நம்பத் தொடங்குகிறோம். ‘அப்போ வாங்க நாங்க ரிலாக்ஸ் பண்ணிவிடுறோம்’ என்று அமுக்குகிறார்கள்.

யோகா வாழ்க்கைக்கான கருவிதான். ஆனால் இந்தக் கருவியைப் பயன்படுத்திதான் அத்தனை சாமியார்களும் கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். பாபா ராம்தேவ் வெறும் யோகா சாமியாராக இருந்தால் பிரச்சினையில்லை. அவருடைய பதஞ்சலி கடைகளில் விசாரித்துப் பார்த்தால் தெரியும். கிட்டத்தட்ட ஐநூறு விதமான பொருட்களை வைத்திருக்கிறார்கள். மருத்துவப் பொருட்களை மட்டும்தான் விற்கிறார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. துணி துவைக்கும் டிடர்ஜெண்ட் வரைக்கும் அத்தனையும் கிடைக்கிறது. அரை லிட்டர் எண்பது ரூபாய்தான். வெரி வெரி சீப். யோகா என்ற பெயரில் ஆட்களை உள்ளே இழுத்து ஒரு மிகப்பெரிய வணிகத்தை நடத்துகிறார்கள். புத்தகம், ருத்ராட்சைகள் என்று எல்லாவற்றையும் வைத்து வியாபாரம் நடத்துகிறார்கள். இந்த வியாபாரிகளுக்குத்தான் யோகா தினம் பயன்படப் போகிறது. 

மாதா அமிர்தானந்தமாயியை தான வள்ளல் என்கிறார்கள். அவரது அமிர்தா பொறியியல் கல்லூரியில் எவ்வளவு ஃபீஸ் வாங்குகிறார்கள் என்று விசாரித்துப் பார்க்கலாமே. ஜக்கி இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டிருப்பதாகச் சொல்கிறார். ஆலந்துறையில் அவரது ஈஷா மையம் வனப்பகுதிக்குள் நடத்தும் அழிச்சாட்டியங்களை அந்த ஊர்க்காரர்களிடம் கேட்டால் சொல்வார்கள்- மிகப்பெரிய கட்டடங்களை எழுப்புவதும், வனவிலங்குகளின் பாதைகளை மறைப்பதும், வனப்பகுதிக்குள் கூட்டம் சேர்ப்பதும் என்று அடித்து நொறுக்குகிறார்கள். ஒரு பக்கம் கொடுப்பது மாதிரி கொடுத்துவிட்டு இன்னொரு சுருட்டியெடுக்கிறார்கள் இந்த சாமியார்கள்.

யோகாவை பழிக்கவில்லை. அதைக் குறை சொல்லவுமில்லை. ஆனால் எல்லாவற்றையும் வணிகமயமாக்கிக் கொண்டிருக்கும் யுகத்தில் யோகாவின் பெயரால் களவாணிகளும் கேடிகளும் கார்போரேட் சாமியார்களும் கோடிக்கணக்கில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் கணக்கெடுத்தால் யோகா தெரிந்த குருக்கள் பல்லாயிரக்கணக்கில் இருப்பார்கள். ஆனால் கார்போரேட் பெரு மருத்துவமனைகளைக் கொண்டு வந்து பிறகு குடும்ப மருத்துவர் என்கிற ஒரு அம்சத்தையே ஒழித்துக் கட்டினார்கள் அல்லவா? அப்படித்தான் யோகாவிலும்- யோகா பழக வேண்டுமானால் ஈஷாவிலும், ராம்தேவிடமும், வாழும்கலையிலும்தான் பழக வேண்டும் என்று அவர்கள் மீது பெரும் வெளிச்ச வெள்ளத்தைப் பாய்ச்சுகிறார்கள். அவர்களை மட்டும்தான் பிரதானப்படுத்துகிறார்கள். குடும்ப டாக்டர்கள் ஒழிந்தது போல இந்த சிறு சிறு யோகா குருக்களும் ஒழியப் போகிறார்கள். எல்லாவற்றிலும் கார்போரேட் மயமாக்கல்தான்.

இந்த யோகா தினக் கொண்டாட்டத்தின் பின்னணியில் இந்தியாவின் most influential சாமியார்கள் நிச்சயம் இருப்பார்கள் என்று நம்பலாம். அக்‌ஷய திருதியைப் போல இதில் மிகப்பெரிய வணிக நோக்கம் ஒளிந்திருக்கிறது.  இவ்வளவு விளம்பரங்களும் பிரம்மாண்டப்படுத்துதலும் யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ- தங்களின் வணிக சாம்ராஜ்யத்தை மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்திக் கொள்ள சாமியார்களுக்கு உதவும். இப்படியான ஒரு சூழலில் அரசாங்கம் கார்போரேட் சாமியார்களை முன்னிலைப்படுத்திக் காட்ட வேண்டியதில்லை. ஆனால் அப்படியெல்லாம் விட்டுவிடுவார்களா? வேலிக்கு ஓணான் தேவை. ஓணானுக்கு வேலி தேவை. இந்த லட்சணத்தில் நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள்?  

Jun 17, 2015

நடிகைகளைக் கண்டறிதல்

சமீபத்தில் உற்சாகமூட்டும் வேலை ஒன்றைத் தந்திருக்கிறார்கள் அல்லது அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். சினிமா சம்பந்தப்பட்ட வேலை. திரைக்கதை, வசனம் எழுதப் போகிறேன் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம். அதெல்லாம் இல்லை. நண்பரொருவர் இயக்குநர் ஆகியிருக்கிறார். அவரைப் பத்து வருடங்களுக்கு மேலாகத் தெரியும். உதவி இயக்குநராக இருந்தவர் இப்பொழுது ப்ரோமோஷன் வாங்கிவிட்டார். சென்னையில் அலுவலகம் அமைத்திருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார்கள் போலிருக்கிறது. நடிகைகளைத் தேடிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சென்னையில் தேடியிருக்கிறார்கள். யாரும் சரியாக அமையவில்லை. இப்பொழுது பெங்களூரில் வலை வீசப் போகிறார்கள்.

‘உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணுங்க யாராச்சும் நடிப்பாங்களா?’ என்றார். இதெல்லாம் என்ன கேள்வி. இதை வாய்ப்பாக பயன்படுத்தி நடிக்க விரும்புகிற பெண்களை தெரிந்த பெண்களாக மாற்றிக் கொள்ளவேண்டியதுதானே? ‘ம்ம்ம்ன்னு சொல்லுங்க...வரிசையில் நிற்க வைக்கிறேன்’ என்றேன். அவர் நம்பிவிட்டார். 

‘நாலஞ்சு மாடல் கோ-ஆர்டினேட்டர்கிட்ட சொல்லிட்டோம்...ஒண்ணும் சரியா அமையல’ என்றார். மாடல் கோ-ஆர்டினேட்ர்களாலேயே முடியவில்லையாம். நான்தான் முடிக்க வேண்டும் என்கிறார். மந்திரியால் முடியாததை கவுண்டமணி முடித்த மாதிரிதான். கைகள் பரபரப்பாகிவிட்டன. எத்தனை நாட்களுக்குத்தான் ஃபோனை எடுத்து கரிகாலனிடமும், சாத்தப்பனிடமுமே பேசிக் கொண்டிருப்பது? ஸம்ரிதா அகர்வால், ஷ்வேதா சிரோட்கர்  என்றெல்லாம் பெயர்களை ஃபோனில் சேமித்தாக வேண்டும். தயாராகிவிட்டேன்.

ஒரு நடிகையை எனக்குத் தெரியும். சில வருடங்களுக்கு முன்பு வரை நடித்துக் கொண்டிருந்தார். ஒன்றிரண்டு படங்கள்தான். இப்பொழுது வாய்ப்பு எதுவுமில்லாமல் சொந்த ஊருக்கே போய்விட்டார். ஆனால் பெயரைச் சொன்னால் இப்பொழுது கூட எல்லோருக்கும் தெரியும். அவ்வப்போது அவரிடம் பேசுவதுண்டு. புலம்புவார். அவருடைய அப்பா மருத்துவர். சிறிய க்ளினிக் நடத்திக் கொண்டிருக்கிறார். அது மட்டும்தான் வருமானம். திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று யோசிக்கிறார்களாம். ஆனால் நடிகை என்றால் ஒன்று புகழ் வேண்டும் இல்லையென்றால் பணம் வேண்டும். இவரிடம் இரண்டும் இல்லை. திருமணமும் நடப்பதாகத் தெரியவில்லை. சினிமாவைச் சார்ந்தவர்களிடம் விசாரித்தால் ‘அந்தப் பொண்ணோட ஆட்டிடியூட் சரியில்லை’ என்கிறார்கள். அப்படியென்றால் என்னவென்று புரியவில்லை. அதோடு நிறுத்திக் கொண்டேன். நேற்று அந்த நடிகையை அழைத்து ‘ஒரு வாய்ப்பிருக்கிறது. பனிரெண்டு நாட்கள்தான் நடிக்க வேண்டியிருக்கும். என்ன சொல்லுறீங்க?’என்றேன். மனசாட்சியே இல்லாமல் ‘பதினைந்து லட்சம் என்றால் நடிக்கிறேன்’ என்கிறார். மார்கெட் போன அவரை அழைத்து வந்து பதினைந்து லட்சம் கொடுப்பதற்கு இவர்கள் என்ன முட்டாள்களா? ‘சரிங்க’ என்று துண்டித்துவிட்டேன். 

சினிமா என்றில்லை. இந்தக் காலத்தில் எந்தத் துறையாக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பார்கள். அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் எல்லோராலும் ஜெயித்துவிட முடிகிறதா என்ன? கதவைத் தட்டுகிற மகாலட்சுமியை பொடனியிலேயே அடிக்கிறார் இந்த நடிகை. சரி. அது நம் பிரச்சினையில்லை. 

புது நடிகைகளைப் பிடித்தாக வேண்டும். அதுதான் பிரச்சினை. ‘ஒரு சினிமா சான்ஸ் இருக்கு...அழகான பெண்கள் இருந்தால் சொல்லுங்க’ என்று இரண்டு மூன்று பையன்களிடம் சொல்லி வைத்தேன். விதி- பையன்களிடம்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. பெண்களை எனக்குத் தெரியாது என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்? சத்தியமாகவே தெரியாது. அப்படியே ஒன்றிரண்டு பேரைத் தெரிந்து வைத்திருந்தாலும் நடிகையாகிற அளவுக்கு அழகுடைய பெண்களைத் தெரியாது. அதனால் வேறு வழியே இல்லாமல் பையன்களிடம் சொல்லி வைத்திருந்தேன். இதைச் சாக்காக வைத்துக் கொண்டு அவர்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. ஒருவன் கூட பதில் சொல்லவில்லை.

அலுவலகத்தில் ஒன்றிரண்டு பெண்களை நோட்டம் விடுவதுண்டு. அவர்களிடம் ‘நடிக்க வர்றீங்களா?’ என்று கேட்டு மனிதவளத்துறையில் போட்டுக் கொடுத்துவிடுவார்களோ என்று பயமாக இருந்தது. இருந்தாலும் ஒரு பெண்ணிடம் துணிந்து கேட்டுவிட்டேன். ஒருவேளை விருப்பமில்லை என்று சொன்னாலும் கூட நாளையிலிருந்து காபி குடிக்கிற இடத்திலும் வண்டி நிறுத்துகிற இடத்திலும் பார்த்தால் சிரிப்பதற்கு உதவும். 

‘கணவரிடம் கேட்டுச் சொல்கிறேன்’ என்றார். சுத்தம். இவளும் திருமணமானவள் என்று இப்பொழுதுதான் தெரிகிறது. இது தெரியாமல் சைட் அடித்திருக்கிறேன்.

‘சரிங்க’ என்று சொல்லிவிட்டு நண்பரை அழைத்து ‘கல்யாணம் ஆன பெண் ஓகேவா?’ என்றேன்.  

‘வெளியே தெரியுமா?’ என்றார். 

‘மாசமா இருக்கிற மாதிரி தெரியலைங்க..அப்புறம் எப்படி வெளியே தெரியும்’ என்றேன். காறித் துப்பிய சத்தம் கேட்டது. 

‘அப்புறமா கூப்பிடுறேன்’ என்று சொல்லிவிட்டு எனது வேட்டையைத் தொடர்ந்தேன். என்ன பெரிய வேட்டை? ஒரு வெங்காயமும் இல்லை. இதெல்லாம் நமக்கு ஒத்து வராது என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் நண்பருக்கு நம்பிக்கை. என்னால் காரியம் ஆகிவிடும் என்று நினைத்திருக்க வேண்டும். இரவில் அழைத்தார். 

‘கல்யாணம் ஆகியிருந்தா பரவாயில்லை...முகத்தைப் பார்த்தால் முதிர்ச்சி தெரியக் கூடாது..அதைத்தான் அப்படிக் கேட்டேன்’ என்றார். ரம்யா கிருஷ்ணனைப் பார்த்தால் கூடத்தான் எனக்கு இளைஞியாகத் தெரிகிறார். என்னிடம் போய் கேட்டால்?

‘பாஸ்..அதெல்லாம் என் வேலை இல்லை..நான் அனுப்பி வைக்கிறேன்...யூத்தா இருக்காங்களான்னு நீங்களே முடிவு பண்ணுங்க’ என்றேன். சரி என்று ஒத்துக் கொண்டார்.

இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ‘நடிக்க வர்ற பொண்ணுங்ககிட்ட எசகுபிசகா ஏதாச்சும் எதிர்பார்ப்பீங்களா?’ என்றேன். 

‘ச்சே ச்சே...இது ஃபர்ஸ்ட படம்...நம்ம தங்கச்சி மாதிரி பார்த்துக்கலாம்’ என்றார்.

எனக்கும் தங்கையா? அதற்கு ஏன் இவ்வளவு சிரமப்பட வேண்டும்? வெகு கோபம் வந்துவிட்டது. நண்பருடன் ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது வேணி பக்கத்தில்தான் இருந்தாள். ஆனால் அதை கவனிக்காமல் ‘உங்களுக்கு வேணும்ன்னா தங்கச்சின்னு சொல்லுங்க’ என்று சத்தமாகச் சொல்லிவிட்டேன். சொன்ன பிறகுதான் அவள் அருகில் இருக்கிறாள் என்பது உரைத்தது.  அவளைப் பார்த்தேன். வாயைத் திறக்காமல் புருவத்தை மட்டும் மேலே தூக்கி ‘என்ன?’ என்று சாடை காட்டினாள். சிக்கிக் கொண்டேன் போலிருக்கிறது. ஒரு வினாடி இருதயம் நின்று துடித்தது. தப்பித்தாக வேண்டும். எச்சிலை விழுங்கிக் கொண்டு ‘என்னைப் பொறுத்த வரைக்கும் அவங்க எல்லாம் அக்கா மாதிரி...என் வயசைக் குறைச்சுடாதீங்க’ என்று சொல்லித் தப்பித்துவிட்டேன். என் சமயோசித புத்திக்கு குறைந்தபட்சம் அமெரிக்க அதிபராக வேண்டும் என்று அந்தப் பக்கமாக நகர்ந்து எனக்கு நானே முதுகில் தட்டிக் கொண்டேன்.

இப்படியான அதிரடி தேடுதல் வேட்டையில் நேற்று மாலையில் இன்னொரு பெண்ணிடமும் கேட்டுவிட்டேன். முந்தைய நிறுவனத்தில் என்னோடு பணியாற்றினாள்.  அவ்வப்போது பேசியிருக்கிறேன். ‘நடிக்கிறேனே’ என்றார். என்ன படம், என்ன கதை என்றெல்லாம் எதுவும் கேட்கவில்லை. ‘சரி ரெண்டு மூணு ஃபோட்டோஸ் அனுப்பி வைங்க’ என்றேன். இதைச் சொல்லும் போது என்னுடைய பந்தாவை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். நான்கைந்து பாரதிராஜாக்களும், ஏழெட்டு பாலச்சந்தர்களும் எனக்குள் குடியிருந்தார்கள். ‘உன்னை ஸ்டார் ஆகிட்டுத்தான் ஓயப் போகிறேன்’ என்கிற பந்தா அது. அவள் அதைவிட விவரமாக இருந்தாள். 

‘டைரக்டர் மெயில் ஐடி கொடுங்க..நேரடியா அனுப்பிக்கிறேன்’ என்கிறாள். அவ்வளவு நம்பிக்கை. ‘இந்த முகம் எல்லாம் சினிமாவுக்கு சம்பந்தமேயில்லாத முகம்’ என்று நினைத்திருப்பாள் போலிருக்கிறது. பெண்கள் சரியாகக் கணித்துவிடுகிறார்கள். ‘சரி..மெயில் ஐடி வாங்கிட்டு திரும்பக் கூப்பிடுறேன்’ என்று சொல்லிவிட்டு அவசர அவசரமாக ஒரு திருட்டு மெயில் ஐடி உருவாக்கி அதை அவளுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். எப்படியும் இன்று மாலைக்குள் சில படங்களை அனுப்பி வைத்துவிடுவாள் என்று நம்பிக்கையிருக்கிறது. பார்க்கலாம்.

Jun 16, 2015

எங்கேயிருந்து தொடங்குவது?

ஒருவர் தனது கவிதைகளை அனுப்பியிருந்தார். வாசித்த போது உவப்பானதாக இல்லை. கவிதையின் வடிவம் பழையதாக இருந்தது. நாம் கவிதை எழுதுவதற்கும் முன்பாக தற்காலக் கவிதைகளின் உள்ளடக்கம், அதன் மொழி, நடை போன்றவை எவ்வாறு இருக்கின்றன என்ற புரிந்து வைத்திருப்பது அவசியம். இந்தப் புரிதல்தான் சுய பரிசோதனையைச் செய்ய உதவும். நமது கவிதைகள் எந்த நிலைமையில் இருக்கின்றன என்பதையும் இன்னமும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இது கவிதைக்கு மட்டுமில்லை- எதை எழுத விரும்பினாலும் பொருந்தும். 

கவிதைகளைப் பொறுத்த வரையிலும் எதுவுமே வாசிக்காமல் எழுதத் தொடங்குபவர்கள் அதிகம். நண்பரிடம் ‘நீங்கள் எந்தக் கவிஞர்களின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்கள்’ என்று கேட்டிருந்தேன். அவருடைய பதில் கவிதைகள் குறித்தான அவரது புரிதலை நமக்குச் சொல்லிவிடும் என்பதுதான் அந்தக் கேள்விக்கான காரணம். ‘இதுவரை வாசித்ததில்லை. உங்களிடமிருந்து ஆரம்பிக்கிறேன்’ என்று பதில் அனுப்பியிருந்தார். அது முகஸ்துதிக்கான பதில். துரதிர்ஷ்டவசமாக அவர் அப்படியொரு முடிவை எடுத்திருந்தால் அதைத் தவறான முடிவு என்பதைச் சொல்லும் கடமையும் இருக்கிறது. கவிதை வாசிப்பைத் தொடங்க விரும்பினால் அதற்குத் தகுதியான நிறையக் கவிஞர்கள் தமிழில் இருக்கிறார்கள். அவர்களில் இருந்து தொடங்கலாம். அந்தக் கவிஞர்களின் சிக்கல் இல்லாத, எளிமையான கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வாசிப்பதும் அவசியம். 

பத்தாண்டுகளுக்கு முன்பாக கவிஞர் மனுஷ்ய புத்திரன் உயிர்மை பதிப்பகத்தின் வாயிலாக முக்கியமான கவிதைகளைத் தொகுப்பாக்கி சிறு புத்தகமாக வெளியிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து சில கல்லூரிகளில் பயிற்சிப்பட்டறைகளையும் அவர் நடத்தினார். ந.பிச்சமூர்த்தியிலிருந்து இளம்பிறை வரையிலான கவிஞர்களின் தலா ஒரு கவிதை இருக்கும். கவிதை உலகுக்குள் நுழைபவர்களுக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளைக் கொண்ட தொகுதி அது.  சமயவேல், சுகுமாரன், ஞானக் கூத்தன், தேவதச்சன், ஆத்மாநாம் போன்ற மூத்த கவிஞர்களின் முக்கியமான கவிதைகளைக் கொண்ட அந்தப் புத்தகம் இப்பொழுது கடைகளில் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. அது கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.

அது கிடைக்கவில்லை என்பதற்காக அனைத்து கவிஞர்களின் கவிதைகளையும் வாசிக்க வேண்டும் என்று பெருந் தொகுப்புகளை நோக்கிச் செல்ல வேண்டியதில்லை. தமிழில் நிறைய தொகுப்பு புத்தகங்கள் வந்திருக்கின்றன. பல கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக்கியிருக்கிறார்கள். அவை புதிய வாசகர்களை மிரளச் செய்யக் கூடியவை. அதனால் ஆரம்பத்திலேயே இந்த பெரிய தொகுதிகளுக்குள் எட்டிக் குதிக்க வேண்டியதில்லை. இதைச் சொல்வதற்காக இந்தத் தொகுதிகளை உருவாக்கியவர்களின் உழைப்பை உதாசீனப்படுத்துவதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை-புதியதாக கவிதை வாசிக்க வருபவர்கள் தமிழின் அத்தனை முக்கியமான கவிஞர்களின் கவிதைகளையும் ஒரே தொகுப்பு வழியாக வாசிக்க வேண்டியதில்லை. கவிதையைப் பற்றிய ஓரளவு புரிந்து கொண்ட பிறகு மெதுவாக பிற கவிஞர்களை வாசிக்கலாம். பிரம்மராஜன், நகுலன் போன்றவர்கள் முக்கியமான கவிஞர்கள்தான். மறுக்கவில்லை. ஆனால் எடுத்த உடனேயே அவர்களை வாசிக்கச் செய்வது சரியான அணுகுமுறையாகாது. கவிதை வாசித்துப் பழகியவர்களையே திணறடிக்கக் கூடிய கவிதைகள் அவை. புதியவர்கள் என்றால் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

‘நான் கவிதை வாசிக்க விரும்புகிறேன்’ என்று யாராவது கேட்டால் வண்ணதாசனின் தேர்ந்தெடுத்த கவிதைகளைக் கொடுக்கவே விரும்புவேன். அவரது கவிதைகள் மிக எளிமையானவை. வாசிப்பவர்களுடன் ஒருவித நெருக்கத்தை உருவாக்கக் கூடியவை. அடுத்தபடியாக கலாப்ரியா. இவர்கள் வழியாக கவிதைகளுக்குள் நுழைவது கவிதை மீதான மிரட்சியை போக்கிவிடும் என்று உறுதியாக நம்புகிறேன். அதே போல முகுந்த் நாகராஜன், இசை போன்ற கொண்டாட்டத்தை உருவாக்கக் கூடிய கவிஞர்களின் கவிதைகளையும் தாராளமாக பரிந்துரைக்கலாம். கவிதைகளுக்குள் நுழைவதற்கான திறப்புகளை இவர்களின் கவிதைகள் கொண்டிருக்கின்றன.

கவிதைகள் புரிவதில்லை என்பதும் அவை மிகச் சிக்கலானவை என்பதும் ஒருவிதமான பிரமைதான். உண்மையில் அப்படியில்லை. நமக்கு கவிதைகள் குறித்தான பரிச்சயம் உருவாகாத வரைக்கும் கவிதைகள் கடினம்தான். ஆனால் அதன் கடினமான மேற்புற ஓட்டை சற்று உடைத்துப் பார்த்தால் உள்ளே நுழைந்துவிடலாம். அதை உடைப்பதற்கு சரியான வழிகாட்டுதல்கள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை.

முகுந்த் நாகராஜனின் கவிதையொன்று-

ஒரு மணி நேரத்துக்கு முன் 
ரயில் அடித்து இறந்தவன் உடலை 
கருப்பு ப்ளாஸ்டிக் கவரால் 
முழுவதும் மூடி 
ரயிலில் ஏற்றினார்கள் மூன்று பேர். 
ஒரு கால் செருப்பு எவ்வளவு தேடியும் 
கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டான் 
பிணத்தின் கால் பக்கம் இருந்தவன். 
இன்னும் கொஞ்ச நேரம் தேடி 
இருக்கலாம், 
என்ன அவசரம் என்று 
கோபித்துக் கொண்டான்
மற்ற இருவரையும் 
புதர் அடியில் கிடக்கும் 
நாளை எடுத்து கொள்ளலாம் என்றான் 
கிழவன். 
ஆனாலும் சமாதானம் ஆகவில்லை 
செத்தவனின் செருப்பைத் தேடியவன் 
இறங்கும்போது கவனித்தேன், 
இருவேறு நிறங்களில் 
செருப்புகள் அணிந்து இருந்த 
அவன் கால்களை.

இன்றைய மற்றொரு பதிவு: கிழவன் பேச்சு கிணாரக்காரனுக்கு கேட்காது

கிழவன் பேச்சு கிணாரக்காரனுக்கு கேட்காது

கடந்த சில நாட்களுக்கு முன்பாக வீட்டிற்கு பக்கத்தில் ஆழ்குழாய் கிணறு தோண்டினார்கள். வழக்கமாக ஐந்நூறு அடிகளில் தண்ணீர் வந்துவிடும். காலி இடம்தான். தண்ணீர் வந்த பிறகு கட்டிட வேலையை ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது. எழுநூறு அடிகளைத் தாண்டிய பிறகும் தண்ணீர் தென்படவில்லை. அவருக்கு முகம் சுண்டிவிட்டது. முதல் இருநூற்றைம்பது அடி வரைக்கும் எழுபது ரூபாய். அதற்கு மேல் ஒவ்வொரு நூறு அடிக்கும் ஒரு ரேட். அதுவும் எப்படி? அடுத்த நூறடிகளுக்கு எண்பது ரூபாய். அதற்கடுத்த நூறடிகளுக்கு தொண்ணூறு ரூபாய். இப்படியே அதிகரித்து ஐந்நூறு அடிகளைத் தாண்டும் போது ரேட் படு வேகமாக அதிகரிக்கும். பணம் போவது கூட பிரச்சினையில்லை. தண்ணீர் வந்துவிட்டால் சரி என்று புலம்பிக் கொண்டிருந்தார். ம்ஹூம். ஆயிரம் அடிகளுக்குப் பிறகும் வெறும் புகைதான். அப்படியே மூடி பெரிய கல்லைச் சுமந்து குழி மீது வைத்துவிட்டு போய்விட்டார்கள்.

எங்கள் வீடு இருக்கும் பகுதி ஒரு காலத்தில் விவசாய நிலமாக இருந்திருக்கிறது. அதை வாங்கி ப்ளாட் போட்டுவிட்டார்கள். அப்படி ப்ளாட் போடுவதற்கு மாநகராட்சியிடம் அனுமதி வாங்கியிருப்பார்கள் அல்லவா? அனுமதி வாங்கும் போது தண்ணீர் வசதிக்கு, மின்சார வசதிக்கு, சாக்கடை வசதிக்கு என்று தனித்தனியாக பணம் கட்ட வேண்டும். தண்ணீரைத் தவிர எல்லாவற்றுக்கும் பணம் கட்டியிருக்கிறார்கள். இப்பொழுது கார்போரேஷனில் விசாரித்தால் சில பல கோடிகளைக் கேட்கிறார்கள். ஒரு வீட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாலும் கூட பணம் போதாது போலிருக்கிறது. வேறு வழியில்லை- போர்வெல் இருந்தால் பிரச்சினையில்லை இல்லையென்றால் தண்ணீர் வியாபாரிகள்தான் கதி. இனி மாநகராட்சி தேர்தல் வரவிருக்கிறது. அப்பொழுது வரும் புதிய கவுன்சிலரை அமுக்கிவிடலாம் என்று காத்திருக்கிறார்கள்.

எங்கள் வீட்டிலும் ஆழ்குழாய் கிணறு பாழாகிவிட்டது. அது பாழாகி இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. வாரம் இரண்டு முறை தண்ணீர் வண்டிக்காரருக்கு தண்டம் அழ வேண்டியிருக்கிறது. நாளை காலையில் தண்ணீர் வேண்டுமானால் இன்றிரவே சொல்லி வைக்க வேண்டும். சில சமயங்களில் அடுத்த நாள் சாயந்திரம் வருவார்கள். இல்லையென்றால் இரவு இரண்டு மணிக்கு கதவைத் தட்டுவார்கள். பெரிய அக்கப்போர்தான். ஆனால் அவர்களிடம் எந்தச் சலனத்தையும் காட்டிவிட முடியாது. பகைத்துக் கொண்டால் வேறு ஆட்களும் தண்ணீர் கொண்டு வர மாட்டார்கள். அந்தந்த ஏரியாவில் அவர்கள் வைத்ததுதான் சட்டம். தண்ணீர் மாஃபியாக்களின் தனி உலகம் அது.

இதெல்லாம்தான் அப்பாவுக்கு பெரிய தொந்தரவு. தண்ணீர்காரருக்கு தகவல் கொடுப்பதிலிருந்து நள்ளிரவில் கதவைத் திறந்துவிடுவது வரைக்கும் அவருடைய வேலைதான். அம்மாவுக்கு இன்னொரு பிரச்சினை. நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் கை கழுவும் இடம் பாத்திரம் கழுவும் இடம் என்று ஓரிடம் பாக்கி வைக்க மாட்டேன். ‘தண்ணியை அளவா யூஸ் பண்ணுங்க’ என்று சொல்லிக் கொண்டேயிருப்பேன். கடுப்பாகிவிடுவார். ஏதாவது சண்டை வந்தால் ‘இந்த அறுவது வருஷத்துல ஒருத்தரு கூட என்ரகிட்ட தண்ணியை கொஞ்சமா புழங்குன்னு சொன்னதில்ல...இங்க வந்து அல்லல்பட எனக்கு என்ன தலையெழுத்தா’ என்று ஆரம்பித்துவிடுவார். பவானி ஆற்றுத் தண்ணீரிலேயே வாழ்ந்தவர். இப்படியெல்லாம் கட்டுப்பாடு விதித்தால் அப்படித்தான் இருக்கும்.

வீடு கட்டும் போது போட்டிருந்த ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் நிறைய இருந்தது. முதல் இருநூறடிகளுக்கு இரும்பு பைப்பை இறக்கியிருந்தார்கள். Casing Pipe. அதுதான் ஆழ்குழாயின் பாதுகாவல் அரண். ஆனால் கடந்த முறை கிணறு தோண்டிக் கொடுத்தவன் கேடிப்பயல். 1.8 மிமீ இரும்புக் குழாயைப் போட்டுவிட்டு 2.8 மிமீ போட்டிருப்பதாக காசு வாங்கிச் சென்றுவிட்டான். இத்தனைக்கும் எங்கள் வீட்டில் நான்கு பொறியாளர்கள். பொறியாளராக இருந்து என்ன பயன்? கடலையாளராக இருந்து என்ன பயன்? இதைச் சரிபார்க்கத் தெரியவில்லை. மிளகாய் அரைத்துவிட்டான். அதன் பிறகு பக்கத்தில் யாரோ போர்வெல் போட்டிருக்கிறார்கள். அந்த அழுத்தத்தில் இந்தக் குழாய் நசுங்கிப் போய்விட்டது. சலனப்படக் கருவியை உள்ளே அனுப்பி, குழாயை விரிவடையச் செய்ய தோட்டாவெல்லாம் உள்ளே வீசிப் பார்த்தார்கள். எதுவும் வேலைக்கு ஆகவில்லை. போனது போனதுதான். மூடிவிட்டு அடுத்த போர்வெல் தோண்டுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கினார்கள்.

எனக்கு அதில் உடன்பாடில்லை. பணம் ஒரு பக்கம். இப்பொழுதெல்லாம் ஆயிரம் அடிகளுக்குத் தோண்டுகிறார்கள். சூழலியல் சார்ந்து இது மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கும் என்கிறார்கள். பெங்களூரில் மட்டும் கிட்டத்தட்ட இரண்டேகால் லட்சம் ஆழ்குழாய் கிணறுகள் இருக்கின்றன. தண்ணீரை சகட்டு மேனிக்கு உறிஞ்சுகிறார்கள். நில நடுக்கங்களுக்குக் கூட இப்படி கோடிக்கணக்கில் தோண்டப்பட்டு நீரை உறிஞ்சுவது காரணமாக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இதையெல்லாம் சொன்னால் அம்மாவும் அப்பாவும் ஒரே வார்த்தையில் அடக்கிவிடுவார்கள். தம்பியும் அவர்களோடு சேர்ந்து கொள்வான். ‘ஊர்ல அத்தனை பேரும் போர் போடுறாங்க...இந்த ஒண்ணுதான் உனக்கு ஆகாதா?’ என்பார்கள். எங்கள் வீட்டில் அப்படித்தான். ‘இதையெல்லாம் நீ கண்டுக்காத..உனக்கு சம்பந்தமில்லாத சமாச்சாரம்’ என்று சொல்லிவிடுகிறார்கள். முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டிருந்தாலும் யாரும் கண்டு கொள்வதில்லை. அதனால் இதைப் பற்றி மேலும் மேலும் பேசினால் வெட்டி விவகாரம்தான். 

வெள்ளிக்கிழமையன்று வழக்கம் போல அலுவலகத்துக்கு கிளம்பிச் சென்றுவிட்டேன். அன்று காலையில்தான் போர்வெல் வண்டி வந்திருந்தது. கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது. ஒரு வாரம் முன்பாகத்தான் ஆயிரம் அடி ஆழத்திலிருந்து எழும்பிய புகையைப் பார்த்தோம். இருநூறு மீட்டர் தள்ளித்தான் அந்த இடம் இருக்கிறது. இங்கும் அப்படி ஏதாவது நடந்தால் குறைந்தபட்சம் ஒன்றரை லட்சம் ரூபாயாவது புகையாகிவிடும் என்று நினைத்திருந்தேன். ஒவ்வொரு நூறு அடிக்கும் தம்பி ஃபோன் செய்து ‘வெறும் புகைதான் வருது..கிளம்பி வாடா’ என்றான். நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி என்று அவன் நம்புவான். அதற்குத்தான் அழைக்கிறான். கிட்டத்தட்ட ஐநூறாவது அடியில் இறங்கிக் கொண்டிருந்த போது வீடு திரும்பியிருந்தேன். வீடே தெரியவில்லை. புகை மண்டலமாக இருந்தது. 

‘தண்ணீர் வந்தாலும் சரி...வரலைன்னாலும் சரி...இன்னும் நூறடியில் நிறுத்திவிடலாம்’ என்று சொல்லியிருந்தேன். கிட்டத்தட்ட ஒத்துக் கொண்டார்கள். ஆனால் தண்ணீர் வந்துவிட்டது. ஐந்நூற்றைம்பதாவது அடியில் ஊற்று பொத்துக் கொண்டது. வெதுவெதுப்புடன் நீர் வந்தது. பூமித்தாயின் கதகதப்பு அது. அறுநூறு அடியைத் தொட்ட போது ‘நிறுத்திவிடலாமா?’ என்று கேட்டேன். கண்டுகொள்ளவில்லை. எழுநூற்றைம்பது அடிகள் வரைக்கும் ஓட்டிவிடலாம் என்று ஓட்டிவிட்டார்கள். ஆழ்குழாய் கிணற்றின் அடிப்பகுதி வரைக்கும் பாறையும் மண்ணும் அடுக்கடுக்காக மாறிக் கொண்டே வந்திருக்கின்றன. அதனால் ஃபில்டர் குழாய் என்று இறக்கியிருக்கிறார்கள். மண்ணை வடிகட்டி வெறும் நீரை மட்டும் ஃபோர்வெல்லுக்கு அனுமதிக்கும். அது அடிக்கு நூற்று நாற்பத்தைந்து ரூபாய். காஸ்ட்லி செலவு. இல்லையென்றால் மண்ணும் கல்லும் சரிந்து ஆழ்குழாயை மூடிவிடும் என்றார்கள். வேறு வழியில்லை. ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் காலி. இனி மோட்டார் வாங்க வேண்டும். எழுநூறு அடிகளைத் தாண்டிவிட்டதால் மூன்று குதிரைத் திறன் கொண்ட மோட்டாரைத்தான் உள்ளே இறக்க வேண்டுமாம். பைப், வயர், மோட்டார் என்று எல்லாம் சேர்த்து கணக்குப் போட்டால் முக்கால் லட்சத்தைத் தொடுகிறது.

அதோடு நின்றதா? போர்வெல் வண்டியைக் கொண்டு வந்து நிறுத்தி ஜன்னல், சுவர்களையெல்லாம் பதம் பார்த்திருக்கிறார்கள். அதைச் சரி செய்வதற்கு மூன்று ஆட்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எப்படியும் இருபதாயிரத்துக்கு குறைவில்லாமல் செலவு வைப்பார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கிட்டத்தட்ட நான்கு லட்ச ரூபாய். பெரிய அடியாக அடித்திருக்கிறது. ‘எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்’ என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? ஒரு வண்டி தண்ணீர் வாங்கினால் அறுநூறு ரூபாய்தான். நான்கு லட்ச ரூபாய்க்கு கிட்டத்தட்ட அறுநூற்றைம்பது வண்டி தண்ணீர் வாங்கியிருக்கலாம். மாதம் பத்து வண்டி என்றாலும் கூட நான்கைந்து வருடங்களுக்குத் தாங்கியிருக்கும். அதற்குள்ளாக எப்படியும் காவிரித் தண்ணீர் கிடைத்திருக்கும். தமிழ்நாட்டுக்குத்தான் காவிரித் தண்ணீர் கிடைக்காது- கர்நாடகத்திலிருந்து சாக்கடையைக் கலக்கி அனுப்புகிறோம். ஆனால் பெங்களூர்வாசிகளுக்கு எப்படியும் கொடுத்துவிடுவார்கள். 

Jun 15, 2015

நான் அவன் இல்லை

வணக்கம். உங்களுடைய பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதால், நீங்கள் நலமா என விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

சுற்றி வளைத்துப் பேசாமல் நேராக விசயத்துக்கு வருகிறேன். எனக்கு தினசரி வாழ்க்கையில் பார்க்கிற, கேட்கிற, அனுபவிக்கற நிகழ்வுகள், சந்திக்கிற மனிதர்கள் எல்லா(ரு)மே என்னுடைய கனவில் வருவது வழக்கம். இதில் என்னுடைய பெற்றோர், மனைவி, மகள், நண்பர்கள், உறவினர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பலரும் அடக்கம். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாள் விடியலும் நான் கண்ட கனவின் ஞாபகங்களோடுதான் தொடங்கும்.

அது போல, நேற்று ராத்திரி (இல்லை....இரவு ) என்னுடைய கனவில் நீங்கள் வந்தீர்கள்.

அந்தக் கனவு:
"நானும் என்னுடைய நெருங்கிய நண்பனும் bachelors அறையில் தங்கிருக்கிறோம். ஒரு நாள் காலையில் பாத்தால் நீங்க எங்க அறையிலிருந்து தூங்கி எழுந்து ஆடை இல்லாம (மேலாடை மட்டும் தான் இல்லை ) வருகிறீர்கள். அங்கு உங்க அம்மா வெளியூரிலிருந்து வந்து நீங்கள் தூங்கி எழுந்து வருவதற்காக காத்துட்டிருக்காங்க. நீங்கள் வந்தவுடனே அவர் உங்களுடைய கல்யாண விஷயம் குறித்து பேசுகிறார். நீங்கள் ‘அதுக்கு இப்போ என்ன அவசரம்’ எனச் சொல்லி திருப்பி ஊருக்கு அனுப்பிவிடுகிறீர்கள். இது தான் அந்தக் கனவு. (இன்னொரு முக்கியமான விஷயம், உங்க நெஞ்சு பூராவும் கவுண்டமணி, சத்யராஜ் மாதிரி ஒரே முடி.)

அந்த நண்பனிடம் 2 வாரம் முன்பாக உங்களைப் பற்றியும் நிசப்தம் வலைத்தளம் மற்றும் அறக்கட்டளை உதவிகளைப் பற்றியும் விரிவாக பேசி இருந்தேன். அது போல தினமும் உங்கள் பதிவுகளைத் தவறாமல் படித்துக் கொண்டும் இருக்கிறேன். இவையெல்லாம் இந்தக் கனவுக்கு காரணமாக இருக்கலாம். எது எப்படியோ நீங்கள் கனவில் வந்தது ரொம்ப சந்தோசம். அதை விட, அதை உங்களிடம் சொல்லுகிற அளவுக்கு உங்களை நெருக்கமாக உணர்வதில் ரொம்ப ரொம்ப சந்தோசம். ஏன்னா, சில நடிகைகள் (ஹி ஹி ), ஒரு எழுத்தாளர், சில பதிவர்கள் என பலரும் இதுக்கு முன்னாடி என் கனவில் வந்திருந்தாலும் அதை அவர்களிடம் சொன்னதுமில்லை, சொல்ல வேண்டும் என தோன்றியதுமில்லை. அந்த வகையில் உங்களுக்கு என் நன்றி பல.

எனக்கு இது வரையில் இரண்டு கனவுகள் நிஜத்திலும் நிகழ்ந்த அனுபவம் உண்டு. விரைவில் தங்களை சந்திக்கும் ஆசை நிறைவேறி இந்த கனவும் நினைவாக வேண்டுகிறேன்.

தங்களுடைய நேரத்திற்கு நன்றி!

வாழ்க வளமுடன்,

அன்புடன்,
கோ.கார்த்தி

இந்தக் கடிதம் வந்து சில நாட்களாகிவிட்டன. என்ன அர்த்தத்தில் எழுதியிருக்கிறார் என்று குப்புறப் புரண்டாலும் கூட புரியவில்லை. இதற்கு எப்படி பதில் அனுப்புவது என்றும் தெரியவில்லை. ஒன்றைச் சொல்லியாக வேண்டும்- இதே மாதிரிதான் ‘நீங்க என் கனவில் வந்தீங்க’ என்று இரண்டு மூன்று நடிகைகளிடம் சொல்லியிருக்கிறேன். மார்கெட் சரிந்த நடிகைகள்தான் என்றாலும் கூட அவர்கள் சீந்தவே இல்லை. என்னை மாதிரி ஆயிரக்கணக்கானவர்களை அவர்கள் பார்த்திருப்பார்கள். எனக்கு அப்படியா? இந்தக் கடிதம்தான். ஒன்ணே ஒன்னு. கண்ணே கண்ணு. அதனால் ப்ரிண்ட் அவுட் கூட எடுத்து வைத்திருக்கிறேன்.

இரண்டு நாட்களாக காலையில் ஒரு முறை கடிதத்தை படித்துவிட்டு மூடி வைப்பதும் மீண்டும் மாலையில் ஒரு முறை படிப்பதுமாக மோன நிலையிலேயே இருந்திருக்கிறேன். இப்படியெல்லாம் யாராவது கடிதம் எழுதுவார்கள் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதுவும் அவருடைய வர்ணிப்புகளை வாசித்துவிட்டு விக்கித்து போய்விட்டேன். கோ.கார்த்தி என்பதை எத்தனை முறை வாசித்தாலும் கோ.கார்த்தியாகவேதான் தெரிகிறது. ஒரு முறை கூட கார்த்திகாவாகக் கூடத் தெரியவில்லை என்பதுதான் பெரிய துரதிர்ஷ்டம்.

ஆகவே அன்புள்ள கார்த்தி, உங்களின் பாராட்டுக்களுக்கும், ஆசைக்கும் நன்றி. ஏற்கனவே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். மகன் பள்ளிக்குச் செல்கிறான். உங்கள் கடிதம் மகிழ்ச்சியளிக்கிறது. பெங்களூர் வரும் போது சொல்லுங்கள். 

மற்றபடி, என்னுடைய மின்னஞ்சலின் கடவுச் சொல் என் மனைவிக்கும் தெரியும் என்பதை மட்டும் இன்னொரு முறை அழுத்தம் திருத்தமாகச் சொல்லி விடைபெற்றுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்.

இன்றைய மற்ற பதிவுகள்: வேலை, அடுத்தது

அடுத்தது

வ.வே.சு ஐயர் எழுதிய ‘குளத்தங்கரை அரசமரம்’ என்ற கதைதான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை என்கிறார்கள். அதற்கு முன்பாகவே நிறைய கதைகள் எழுதப்பட்டிருந்தாலும் 1908 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விவேகபோதினி என்ற பத்திரிக்கையில் வெளிவந்த இந்தக் கதையைத்தான் முதல் சிறுகதையாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இந்தக் கதையே கூட தழுவல்தான் என்று மாலன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அப்படியென்றால் ‘இதுதான் தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை’ என்று துல்லியமாக யாராவது சுட்டிக் காட்டியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

முதல் சிறுகதை பற்றித் தெரியாவிட்டால் பிரச்சினையில்லை- முதல் சிறுகதையிலிருந்துதான் தொடங்க வேண்டும் என்றில்லை- தமிழில் எழுதப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான சிறுகதைகளிலிருந்து முக்கியமான சிறுகதை எதையும் தவற விடக் கூடாது என்கிற எண்ணத்தில்தான் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறுகதைகளை வாசிக்கும் பணியைத் தொடங்கினோம். பெங்களூரில் ஒவ்வொரு மாதமும் நடக்கும் இரண்டாம் ஞாயிறு கூட்டம் அதற்கான மிகச் சிறந்த களமாக இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்துக்கும் எப்படியும் சற்றேறக்குறைய இருபது பேர்களாவது வந்துவிடுகிறார்கள். நேற்று (14-ஜூன்-2015) நடந்த கூட்டமும் அப்படித்தான் இருந்தது.

கி.ரா மற்றும் கு.அழகிரிசாமியின் தலா மூன்று கதைகள் விவாதிக்கப்பட்டன. இந்த வாசிப்பின் விளைவாக அழகிரிசாமியின் மொத்த எழுத்துக்களையும் வாசித்துவிட்டு ஒரு விவாதத்தை நடத்தலாம் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறோம். அழகிரிசாமி அவ்வளவு முக்கியமான எழுத்தாளராகத் தெரிகிறார். அதே போல தொகுப்பிலிருந்து இதுவரையிலும் இருபது சொச்சம் கதைகள் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கின்றன. ஐம்பது கதைகள் வாசிக்கப்பட்டவுடன் ஒரு சிறுகதை அரங்கு நடத்தலாம் என்கிற ஆசையும் துளிர்த்திருக்கிறது. பாவண்ணன் உள்ளிட்ட பெங்களூர் வாழ் எழுத்தாளர்கள் தவிர வெளியூரிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களையும் அழைத்து ஒரு அரங்கம் நடத்த வேண்டும். 

வாசிக்கத் தொடங்குபவர்களுக்கு எழுத்தின் பிற எந்த வடிவத்தை விடவும் சிறுகதைதான் மிகச் சிறந்த வாசல்.  ‘இதுவரைக்கும் நான் எதுவுமே வாசித்ததில்லை’ என்று சொல்பவனை எழுத்து வாசிப்பு போன்றவற்றிலிருந்து துரத்தியடிக்க வேண்டுமானால் அவனது கைகளில் கவிதைத் தொகுப்பைக் கொடுத்துவிட வேண்டும். அதே வாசகனை உள்ளே இழுத்து போட வேண்டுமானால் சிறுகதைகளைக் கொடுத்து வாசிக்கச் சொல்ல வேண்டும். இதைச் சொல்வதற்கு தயக்கம் எதுவுமில்லை. கவிதை புரியவில்லை, நாவல் வாசிக்க நிறைய நேரம் பிடிக்கிறது, கட்டுரையாளன் தன்னுடைய கருத்துக்களை என் மீது திணிக்கிறான் போன்ற பொதுமைப் படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இல்லாத எழுத்து வடிவம் சிறுகதை. 

எஸ்.ரா தேர்ந்தெடுத்த சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பை முழுமையாக வாசித்து முடிக்கும் போது தமிழில் சிறுகதைகளின் போக்கு பற்றிய ஒரு நீள்வெட்டான பார்வை கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. வெளியூர் வாசகர்களில் சிலரும் தொடர்ந்து இந்தச் சிறுகதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்தனை பேரும் விவாதத்தில் பங்கெடுக்க வேண்டும் என்கிற அவசியம் எதுவும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போது வாசித்து வைத்தால் போதும். வாரம் ஒன்று அல்லது இரண்டு சிறுகதைகளை வாசித்தால் கூட போதும். வெகு விரைவாகவே பெரும்பாலான கதைகளையும் வாசித்து முடித்துவிடலாம். 

அடுத்த மாதத்தில் லா.ச.ரா, சுந்தர ராமசாமி மற்றும் நகுலனின் சிறுகதைகள் வாசிக்கப்படவிருக்கின்றன. மொத்தம் ஆறு சிறுகதைகள். வாசித்துவிடுங்கள். வாரம் ஒன்றிரண்டு கதைகளைப் பற்றி இங்கு விவாதிக்கலாம். 

நகுலன்

சுந்தர ராமசாமி

லா.ச.ராமாமிருதம்
6. பச்சை கனவு

இன்றைய மற்றொரு பதிவு : வேலை

வேலை

சில நண்பர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த விஷயம்தான் - அவ்வப்பொழுது தெரிய வருகிற வேலை வாய்ப்புச் செய்திகளை நிசப்தத்தில் வெளியிட வேண்டும் என்பது. வேலைவாய்ப்புகள் குறித்தான ஏகப்பட்ட தகவல்கள் வருகின்றன என்று படமெல்லாம் ஓட்டவில்லை. ஒன்றிரண்டு தகவல்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. அதே சமயம் ‘உங்களுக்குத் தெரிந்து வேலை எதுவும் காலி இருக்கிறதா’ என்றும் சிலர் கேட்கிறார்கள். சரியாக கோர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்தான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் இரண்டையும் மண்டையில் நிறுத்தி வைத்துக் கொள்ள முடிவதில்லை. வேலை இருக்கிறது என்று சொன்னவர் பெயரையும், வேலை கேட்பவரின் பெயரையும் மறந்துவிடுகிறேன். பல சமயங்களில் வீணாகப் போய்விடுகிறது.

சில சமயங்களில் சரியாகவும் அமைந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகுமார் என்பவர் அமெரிக்காவில் இருந்து பேசினார். தனது தம்பி கோவையில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியின் நிர்வாகியாக இருப்பதாகவும் அந்தக் கல்லூரியில் தகுதி வாய்ந்த மாணவர்களை இலவசமாகக் கூடச் சேர்த்துக் கொள்வதாகச் சொன்னார். ‘மார்கெட்டிங் பண்ணுறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க..நிஜமாவே அந்தக் கல்லூரியை தரமானதாக்குவதற்கான செயல்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.. அதனால் இப்போதைக்கு அவர்கள் லாபம் பார்க்கவில்லை’ என்றும் சொல்லியிருந்தார்.

அந்த சமயத்தில்தான் எம்.ஈ படித்த பெண்ணுக்கு வேலை வேண்டும் என்ற வேண்டுகோளும் வந்திருந்தது. முன்பெல்லாம் பி.ஈ முடித்துவிட்டு வேலை எதுவும் கிடைக்கவில்லையென்றால் எம்.ஈ சேர்ந்துவிடுவார்கள். வாத்தியார் வேலை வாங்கிவிடுவதற்கு அதுதான் நல்ல உபாயம். இப்பொழுது அதுவும் சிரமமாகிவிட்டது. கிட்டத்தட்ட அத்தனை கல்லூரிகளிலும் எம்.ஈ படிப்பை வைத்திருக்கிறார்கள். படிக்கிறவர்கள் எல்லோருக்கும் ஆசிரியர் வேலை கிடைக்கிறதா என்ன? மிகச் சிரமம்.  கிருஷ்ணாவுக்கு ரெஸ்யூமை அனுப்பி வைத்திருந்தேன்.  விசாரிப்பதாகத்தான் சொல்லியிருந்தார். ஆனால் அந்தப் பெண்ணை அழைத்து நேர்காணல் நடத்தி வேலையும் கொடுத்துவிட்டார்கள். நேர்காணலில் கஷ்டமான கேள்விகள் எதுவும் கேட்கவில்லையாம். ‘ஈசிஈ பிரிவில் தேவையான அளவுக்கு ஆசிரியர்கள் இருப்பதாகவும் இருந்தாலும் கிருஷ்ணா சொன்னதற்காக வேலை தருவதாகவும்’ சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். 

சந்தோஷமாக இருந்தது. 

இனிமேல் இந்த மாதிரியான வேலையை ஓரளவுக்கு ஒழுங்காக(Organized) செய்யலாம் என்று தோன்றியது. வேலை வாய்ப்புகள் குறித்தான தகவல் கிடைக்கும் போது வெளியிட்டுவிடலாம். குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதியுடையவர்கள் தொடர்பு கொண்டால் ரெஸ்யூமை வாங்கி சரியான ஆட்களுக்கு அனுப்பி வைக்கும் தபால்காரர் வேலையை மிகச் சரியாக செய்துவிடுவேன் என்கிற உறுதியுடன் இன்றிலிருந்து ஆரம்பித்துவிடலாம்.

வேலை வாய்ப்புகள்:

1)

நாடு: ஏமன்
தகுதி: சிவில் இஞ்சினியர்
அனுபவம்: 4-5 வருடங்கள். Substation design.

2)

நாடு : இத்தாலி
a) CMM programmer
b) CNC programmer
c) Manufacturing engineers

அனுபவம் குறித்தான விவரம் இல்லை. ஆனால் ஐரோப்பாவில் பணி புரிவதற்கான வொர்க் பர்மிட் அவசியம் தேவை. 

3) 

பணியிடம்: பெங்களூர்
தகுதி: ஆரக்கிள் EBS, Functional, Technical, PL/SQL குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் அனுபவமுள்ளவர்கள்.

                                                                      *****

பொதுவான இரண்டு தளங்களை திரு. ராஜாராம் அனுப்பி வைத்திருந்தார். இரண்டுமே மிக முக்கியமான இணையதளங்கள்.

1) கல்லூரி மாணவர்கள் Internship குறித்து விசாரிப்பார்கள். வேலை கூட வாங்கிவிடலாம். ஆனால் Internship வாங்குவதற்குள் மண்டை காய்ந்துவிடும். அத்தகைய மாணவர்களுக்கு உதவக் கூடிய இணையதளம் இது.

2) இந்தியா முழுவதிலுமான அரசாங்க வேலை வாய்ப்புகளைச் சேகரித்து வைத்திருக்கும் இணைய தளம் சர்காரி நாக்ரி.
                      
                                                                          *****

தங்கள் அலுவகத்திலோ அல்லது நண்பர்கள் வட்டாரத்திலோ பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிய வரும் போது ஒரு மின்னஞ்சல் மட்டும் அனுப்பி வைக்கவும். அனுப்பியவரின் விவரங்கள், நிறுவனத்தின் பெயர் போன்றவை எது குறித்தும் வெளியில் சொல்லாமல் தவிர்த்துவிடலாம்.