May 27, 2015

ரோஹின்ஜா இசுலாமிய இன அழிப்பு

மியான்மரில் வெட்டிக் கொல்லப்படும் இசுலாமியர்களின் படங்களை யதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. நடுக்கத்தில் குடல் வெளியே வந்துவிடும் போலிருக்கிறது. பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற எந்தப் பாகுபாடுமில்லாமல் வீச்சரிவாளையும் கொடுவாளையும் வீசியிருக்கிறார்கள். பாலம் பாலமாக வெட்டு வாங்கிச் செத்துக் கிடக்கிறார்கள். இவ்வளவு ஆழமான வெட்டுக்காயங்களை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. இணையத்தில் தேடத் தொடங்கிய போது எரித்துக் கொல்லப்பட்ட பெண்கள், தலை துண்டிக்கப்பட்ட குழந்தைகள் என்று விதவிதமான படங்கள் வந்து கொண்டேயிருந்தன. செய்தித்தாள்களை ஒழுங்காகத்தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ரோஹின்ஜா என்ற பெயரை சமீபத்தில் எந்தச் செய்தித்தாளிலும் பார்த்ததாக ஞாபகமில்லை. ரோஹின்ஜா- இதுதான் பர்மிய இசுலாமியர்களின் பெயர்.

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது எப்படி சித்தூரையும் ஓசூரையும் தாண்டி பிற மாநிலங்களில் அந்தச் செய்தி எந்தவிதமான கவனத்தையும் பெறவில்லையோ அதே நிலைமைதான் பர்மிய இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் இந்தக் கொலைவெறித்தாக்குதல்கள் பற்றிய எந்தத் தகவல்களும் வெளி வருவதில்லை. இணையத்தில் தேடினாலும் கூட பெரும்பாலான செய்திகள் மேம்போக்காகத்தான் இருக்கின்றன. நிழற்படங்களைத் தேடிப் பார்த்தால் சில புத்தப் பிக்குகள் 'No Rohingya' என்று கைகளில் எழுதி அதை கேமிராவுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். புத்த பிக்குகள் பற்றித்தான் நமக்குத் தெரியுமே! ஈழத்திலேயே பார்த்திருக்கிறோம். மியன்மாரிலும் அப்படித்தான் - பர்மிய நாட்டவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது என்று அலையும் முரட்டுக் கும்பலை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். Ethninc Cleansing.


இந்தக் கும்பல் நடத்தும் தேடுதலின் குறி ரோஹின்ஜா இசுலாமியர்கள். இந்த இசுலாமியர்கள் பர்மாவின் பூர்வகுடிகள் இல்லை. முன்னொரு காலத்தில் - குறிப்பாக ஆங்கிலேய ஆட்சியின் போது வங்காளத்திலிருந்து பர்மாவுக்கு குடிபெயர்ந்தவர்கள். வந்தேறிகள். அவர்களை தேசத்தைவிட்டு துரத்தியடிக்க வேண்டும் என்று மியன்மார் தேசியவாதிகள் உறுதியாக இருக்கிறார்கள். அதனால்தான் இந்த வெட்டுக்களும் எரிப்புகளும் கொலைகளும். 

சமீபத்திய கலவரத்தின் மூலகாரணம் என்று தேடினால் இசுலாமியர்களை நோக்கித்தான் கை நீட்டுகிறார்கள். மூன்று இசுலாமிய ஆண்கள் சேர்ந்து பர்மியப் பெண்ணொருத்தியை மானபங்கப்படுத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு பத்து இசுலாமியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விவகாரம் பெரிதாகி வெறி கிளம்பியிருக்கிறது. இந்த மூன்று பொறுக்கிகள் செய்த பிரச்சினை நீறு பூத்துக் கொண்டிருந்த நெருப்பை ஊதி விட்டிருக்கிறது. லட்சக்கணக்கில் இருக்கும் இந்த இனம் சின்னாபின்னப்படுத்தப்படுகிறது. துரத்தப்படும் இந்த இசுலாமியர்களை எந்த தேசமும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதுதான் கொடுமை. ஆஸ்திரேலியாவுக்கும் மலேசியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் பயணப்படும் இவர்கள் முடிந்தவரை விரட்டியடிக்கிறார்கள். படகுகளின் கொள்ளளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு நாடுவிட்டு நாடு மாறும் போது கடலுக்குள்ளேயே ஜலசமாதியடைகிறார்கள். உள்நாட்டில் இருந்தால் வெட்டு விழுகிறது. வெளிநாட்டுக்குச் சென்றால் படகு கடலில் விழுகிறது.

ரோஹின்ஜா இசுலாமியர்களின் பிரச்சினைகளை இப்பொழுதுதான் மெதுவாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அதிலும் மதம்தான் பிரதானம். ஆதரவாகப் பேசுபவர்கள் ‘அய்யோ இசுலாமியர்களை அடித்தால் கேட்க நாதியில்லையா’ என்கிறார்கள். எதிராகப் பேசுபவர்கள் ‘இசுலாமியர்கள்தான் காரணம்’ என்கிறார்கள். ஆனால் இந்த விவகாரம் விவாதிக்கப்படும் போது மதத்தை ஒதுக்கி வைத்துவிடவெல்லாம் முடியாது. இசுலாமியர்கள் என்றாலே பிரச்சினைக்குரியவர்கள் என்கிற முத்திரை குத்தப்பட்ட சூழல்தான் உலகம் எங்கும் இருக்கிறது. இசுலாமியர்களின் தவறுகள் பிரதானப்படுத்தப்பட்டு பூதாகரமாக்கும் ஊடகங்கள்தான் அதே இசுலாமியர்கள் மீதான வன்முறைகள் குறித்து மெளனம் காக்கின்றன. சர்வதேச பத்திரிக்கைகளில் வெகு சில பத்திரிக்கைகள் மட்டுமே பர்மிய விவகாரத்தை சற்று வெளிப்படையாக எழுதிக் கொண்டிருக்கின்றன. அவை அங்கு நடந்து கொண்டிருப்பது இன அழிப்புதான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றன. அப்படியிருந்தும் கண் முன்னால் நடக்கும் இந்த இன அழிப்பைப் பற்றி ஏன் பெரியதாக எந்தச் சலனமும் இல்லை? 

அந்த இசுலாமியர்கள் தவறு செய்பவர்களாகவே இருக்கட்டும். ஆனால் ஒரு கும்பலிடம் கத்தியையும் தீக்குச்சியையும் கொடுத்து அவர்களை அழித்து வீசச் சொல்லும் அக்கிரமத்தை தட்டிக் கேட்க வேண்டும் அல்லவா? குழந்தைகளும் முதியவர்களும் ரத்தம் சொட்டச் சரிந்து விழுவதை எந்த புனித நூலின் அடிப்படையில் நியாயப்படுத்த முடியும்? இசுலாமியன் என்றாலே செத்துத் தொலையட்டும் என்கிற மனநிலையை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா என்று சந்தேகமாக இருக்கிறது. இசுலாம் என்கிற மதத்தில் பிறந்ததற்காகவே பெண்களும் அப்பாவிகளும் சாகட்டும் என்று வேடிக்கை பார்க்கும் மனநிலை வெகு வேகமாக வாய்த்துக் கொண்டிருக்கிறது. 

மதம், சாதி என்று ஏதாவதொரு அடிப்படைவாதத்தைத் தூக்கிப் பிடிக்கிற சர்வாதிகார மனநிலை எல்லாக் காலத்திலும் எல்லா தேசத்திலும் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் அதையும் தாண்டி மனிதமும் அன்பும் ஏதாவதொரு வகையில் தங்களை உயிர்ப்பித்துக் கொண்டேயிருக்கின்றன.

இசுலாமியர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் என்கிற பாகுபாடெல்லாம் தேவையில்லை. எந்த தேசமாக இருந்தாலும் அரசியலையும் பொருளாதாரத்தையும் அறியாத அப்பாவிகள் நசுக்கப்படும் போது துளியாவது நம் குரலை உயர்த்த வேண்டும். அடுத்தவேளை சோற்றைத் தவிர வேறு எந்த நினைப்புமில்லாமல் பாடுபட்டுக் கொண்டிருக்கும் எளிய மனிதன் வெட்டி வீசப்படும் போது சிறு முனகலாவது நம்மிடமிருந்து வெளியேறியாக வேண்டும். எல்லோரிடமிருந்தும் எழும்பும் இந்தக் குரலும் முனகலும்தான் வல்லரசுகளையும் அதிகாரப் பீடங்களையும் அசைத்துப் பார்க்கும். அப்படி அதிகாரப் பீடங்கள் திரும்பிப் பார்க்கும் போது வெகு காலம் ஆகியிருக்கக் கூடும். ஒருவேளை அந்த இனமே கூட அப்பொழுது அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் எல்லாக் காலத்திலும் மனிதத்திற்காக எழும்பும் குரல்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன என்று அறிவிக்க வேண்டியது கட்டாயம். அதுதான் மனித குலத்தின் ஒரே நம்பிக்கைக் கீற்று. அது மட்டும்தான்!