‘எப்போ ஓகே கண்மணிக்கு கூட்டிட்டு போறீங்க?’ - படம் வந்த போது இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது பெரிய காரியமாகத் தெரியவில்லை.
‘கண்டிப்பா போலாம்’ என்று சொல்லித் தப்பித்துக் கொண்டேன். நாட்கள் நகர நகர நச்சரிப்பு அதிகமானது.
‘உத்தமவில்லன் கூட வந்துடுச்சு...நீங்க கூட்டிட்டு போறதுக்குள்ள ஓகே கண்மணி பெங்களூரைவிட்டே போய்டும்’ - அப்படி நடந்தால் நல்லதுதானே? ஐநூறு ரூபாய் மிச்சமாகும். ஐநூறு என்பது மனசாந்திக்காகச் சொல்வது. டிக்கெட் மட்டும் ஆளுக்கு இருநூறை தாண்டிவிடுகிறது. அது தவிர அண்டாஹாஹசம் அபுஹாஹசம் திறந்திடு சீசேம் என்றும் வாயைத் திறந்து வயிற்றுக்குள் எதையாவது தள்ளி இன்னொரு செலவை வைத்துத்தான் அனுப்பி வைக்கிறார்கள். அவர்களே 'outside food strictly not allowed' என்று எழுதி வைத்துவிடுகிறார்கள். ‘ராஜா சின்ன ரோஜா’ படத்துக்கு அழைத்துச் சென்ற போது வீட்டிலிருந்தே இட்லி சுட்டுக் கொண்டு வந்து ‘தின்றே ஆக வேண்டும்’ அம்மா திணித்தது ஞாபகமிருக்கிறது. ஐஸ்க்ரீம்தான் வேண்டும் என்று அழுதேன். ‘அதெல்லாம் தர மாட்டாங்களாம்’ என்று மிரட்டி இரண்டு மூன்று இட்லிகளை அமுக்கிவிட்டார்கள். இப்பொழுது இட்லி கொண்டு போகலாம் என்று நான் திட்டமிடுகிறேன். ஆனால் காலம் செய்த கோலம்- தியேட்டர்காரர்கள் சதி செய்கிறார்கள்.
‘5.1 பிரிண்ட்டா பார்த்து வாங்கித் தர்றேன்’ என்றெல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டேன்.
‘பாவங்க..கஷ்டப்பட்டு படம் எடுக்கிறாங்க’
‘எந்த டைரக்டரா இருந்தாலும் அடுத்தவன் தயாரிப்பில்தான் பிரமாண்டப் படம் எடுப்பாங்க..இது மணிரத்னத்தோட சொந்தத் தயாரிப்பாம்...சுத்திச் சுத்தி ஒரே ஊர்ல எடுத்து முடிச்சிருப்பாரு’ என்றாலும் கேட்பதாக இல்லை. அதனால் ஓகே கண்மணி பெங்களூரை விட்டே போகட்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஆனால் அப்படியெல்லாம் விட்டுவிடுவார்களா என்ன? ‘நாலு நாளைக்கு பேசவே மாட்டேன்’ என்பதோடு நிறுத்தியிருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. ‘காலையில் எழுந்து சோறாக்கி வெச்சுட்டு போவேன்னு மட்டும் நினைச்சுக்காதீங்க’ என்ற போதுதான் மிரட்டலின் வீரியம் புரிந்தது. அம்மாவும் ஊரில் இல்லை. நடந்தாலும் நடந்துவிடும். ஆனால் இதற்கெல்லாம் பயப்பட முடியுமா? மிரட்டல் விடுக்கப்பட்ட இரவிலும் அசராமல் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு தூங்கியிருந்தேன். அதுவும் ஒரு எசகுபிசகான படம்தான். என்ன படம் என்று தனியாக எழுதலாம்.
படத்தைப் பற்றி எழுதுவது என்றவுடன் ஞாபகம் வருகிறது. இந்த வாரம் தினமணியில் எழுதிய கட்டுரையை வாசித்துவிட்டு- வாசிக்காவிட்டாலும் பரவாயில்லை- ‘அருமை’ ‘அட்டகாசம்’ ‘தூள் டக்கர்’ என்று எதையாவது எழுதிக் காப்பாற்றுங்கள். தினமணிக்காரர்கள் கூட விட்டுவிடுவார்கள் போலிருக்கிறது. ‘உங்க கட்டுரையை ஏன் ஒருத்தரும் கண்டுக்கவே மாட்டேங்குறாங்க’ என்கிற வீட்டு நக்கலைத்தான் சமாளிக்க முடிவதில்லை. புனைப்பெயர்களில் நானாகவே கமெண்ட் எழுதிக் கொள்ளலாம் என்கிற உத்தேசம் கூட இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அது இருக்கட்டும்-
நேற்று காலையில் ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. bookmyshowக்காரர்கள் இரண்டு டிக்கெட்டுக்கான செய்தியை அனுப்பி வைத்திருந்தார்கள். அவனுக்கென்ன? காசு கொடுத்தால் அனுப்பி வைக்கப் போகிறான். அம்மிணியின் கைங்கர்யம். ‘என்கிட்ட சொல்லாம ஏன் டிக்கெட் போட்டே?’ என்று கேட்டால் ‘என்கிட்ட சொல்லிட்டுத்தான் ஸ்டீம்பாத் எடுத்தீங்களா?’ என்றார். அதற்கு மேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது?
ஐநாக்ஸ் லிடோ எங்கள் அலுவலகத்துக்கு வெகு அருகாமையில்தான் இருக்கிறது. ஒரு காலத்தில் வெறும் சினிமா தியேட்டராகத்தான் இருந்திருக்கிறது. இப்பொழுது மால் ஆக்கிவிட்டார்கள். நூற்றியிருபது பேர்தான் அமர முடியும். அதில் ஐம்பது இருக்கைகள் நிரம்பியிருந்தன. ஒரு டிக்கெட் இருநூறு ரூபாய் என்றால் பத்தாயிரம் ரூபாய். அது போக பாப்கார்ன், கோகோ கோலோவுக்கு இடைவேளையின் போது ஒரு நீண்ட வரிசை நின்றிருந்தது. அவற்றை வாங்குவதற்கு பதிலாக அந்தியூர் சந்தைக்குச் சென்றால் குதிரையும் யானையும் வாங்கிவிடலாம். கேட்கிறார்களா? ம்ஹூம்.
படத்தில் முத்தம் கொடுத்துக் கொள்வார்களா என்று விசாரித்து வைத்திருந்தேன். அதற்கு மேலேயே இருக்கிறது என்று ஏற்றி விட்டிருந்தார்கள்.
குழந்தைகள் சூழ் உலகாக இருந்தது. முன்பெல்லாம் படத்தில் குஜால் காட்சிகள் வந்தால் பக்கத்தில் இருக்கும் பெண்களின் முகத்தைப் பார்ப்பேன். இப்பொழுது குழந்தைகள் பார்த்துவிடுவார்களோ என்கிற பதற்றத்தில் அவர்களின் முகத்தைப் பார்க்கிறேன். வயதாகிக் கொண்டிருப்பதன் ஒரு அறிகுறி. இந்தக் குழந்தைகள் எல்லாம் இன்னும் பத்து வருடங்களில் ஆளுக்கு ஒரு எதிர்பாலின ஆளையோ அல்லது தங்கள் பாலினத்திலேயே ஒரு ஆளிடமோ லிவ்-இன் உறவில் சிக்கிச் சின்னாபின்னமாகமல் இருக்கக் கடவது என்று வேண்டிக் கொள்ள வேண்டியதுதான். படத்தில் முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். கசமுசா பற்றி பேசிக் கொள்கிறார்கள். பூசணிக்காய் மாதிரி இருந்தாலும் நித்யா மேனன் வெகு அழகாகச் சிரிக்கிறார். அவரை மட்டுமே திரையில் பார்த்துக் கொண்டிருந்ததால் சல்மானை கவனிக்காமல் விட்டுவிட்டேன்.
Live-in relationship.
இது சரி; தவறு என்றெல்லாம் பேச முடியுமா என்று தெரியவில்லை. இதுதான் போக்கு. இதை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறோம். திருமணம் என்பது பாரம். குழந்தைகள் என்பது சாபம் என்பதெல்லாம் திரும்பத் திரும்பக் காதில் விழுகின்றன. நிறையப் பேர் அப்படி நினைக்கவும் தொடங்கிவிட்டார்கள். குடும்பத்திற்கென ஒரு மதிப்பு இருக்கிறது. எவ்வளவுதான் சண்டைகள் வந்தாலும், பிரச்சினைகள் உருவானாலும் குடும்பத்தோடு நமக்கிருக்கும் ஈர்ப்புதான் நம்மை இந்த உலகத்தோடு கட்டிப் போடுகிறது. தூய அன்போடு இருக்கும் வரை குடும்பத்தின் மதிப்பு சிதைவதில்லை. இப்பொழுது அந்த அன்பு மிக வேகமாக corrupt ஆகிவிடுவதற்கான வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. அதனால்தான் குடும்பத்தைத் தாண்டி எல்லாவற்றையும் யோசிக்கிறோம்.
எல்லாக் காலத்திலும்தான் கணவன் மனைவிக்கிடையே சண்டைகளும் மனத்தாங்கல்களும் இருந்திருக்கும். முன்பெல்லாம் பிரச்சினைகள் வந்தால் படி தாண்டுவது குறைவாக இருந்தது. நான்கு நாட்களில் சேர்ந்து விடுவார்கள். குறைந்தபட்சம் ஊர் உலகத்தின் பற்களில் விழாமல் இருக்கவாவது மீண்டும் சேர்ந்து வழமைக்குள் வருவார்கள். இப்பொழுது சர்வசாதாரணமாக ‘வீட்டில் ஒரே டார்ச்சர்.....எனக்கு அவுட்லெட்டே இல்லை தெரியுமா?’ என்று எவன்/எவளிடமாவது கண்ணீரைக் கசிய அவன்/அவள் கர்சீப்பை நீட்ட அங்கு புது உறவு முளைத்துக் குடும்பத்தில் விரிசல் விழுகிறது. அப்புறம் ஏன் குடும்பம், குழந்தையெல்லாம் சாபமாகவும் பாரமாகவும் தெரியாது?
சேர்ந்து வாழ்தல் சரி தவறு என்பது பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தால் பழமைவாதி என்கிற இடத்துக்குத்தான் வந்து நிற்பேன். அவனவனுக்கு புத்தி இருக்கிறதுதானே? இருக்கிறவன் பிழைத்துக் கொள்ளட்டும். எனக்கு எழுநூறு ரூபாய் செலவானதுதான் மிச்சம். வண்டியில் வரும் போது ‘இந்த த்ரிஷா கல்யாணம் நின்னுடுச்சாமே’ என்றாள்.
‘இது அவ்வளவு முக்கியமா?’ என்று கேட்கத் தோன்றியது. ஆனால் வாயைத் திறந்து கேட்கவா முடியும்? எதையாவது பதிலாகச் சொல்லி வைப்போம் என்று ‘த்ரிஷா இல்லைன்னா திவ்யான்னு பசங்கதான் சொல்லணுமா என்ன? வருண் மணியன் இல்லைன்னா வா.மணியன் என்று பெண்களும்தான் சொல்லட்டுமே’ என்று உளறித் தொலைந்துவிட்டேன். ரைமிங்குக்காகத்தான் சொன்னேன். இருபத்து நான்கு மணி நேரம் ஆகப் போகிறது. இப்பொழுது வரைக்கும் எதுவுமே பேசாமல் திரிகிறாள்.