May 12, 2015

அட்டைப்பூச்சிகள் உறிஞ்சும் வாழ்க்கை

முள்ளிவாய்க்கால் என்கிறோம். தனி ஈழம் என்கிறோம். எல்லாம் சரிதான். ஆனால் மலையகத் தமிழர்கள் என்றொரு பிரிவினரை நாம் கண்டுகொள்வதேயில்லை என்றுதான் கூட்டம் ஆரம்பித்தது. சூடான கூட்டம் என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஆழமாகப் பேசினார்கள். அதே சமயம் அழுத்தம் திருத்தமாகவும். இலங்கையின் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்கு ஏதேதோ காரணங்களைச் சொல்லி இழுத்துச் செல்லப்பட்ட அடிமைகளைத் தோட்டக்காட்டான் என்கிறார்கள். பெண்ணாக இருந்தால் தோட்டக்காட்டீ. ஈழத்தில் தமிழன் சிங்களப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் கூட விட்டுவிடுவார்கள். ஆனால் மலையகப் பெண்ணைத் திருமணம் செய்தால் தொலைந்தான். கழட்டிவிட்டுவிடுவார்களாம்.

ஆக, மலையகத் தமிழர்கள் இலங்கையின் பாவப்பட்ட குடிகள். ஈழத்தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் வேறு; மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள் வேறு. ஈழத்தையும் மலையகத்தையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. நாம் அறிந்து வைத்திருக்கும் இலங்கையின் பிரச்சினைகளிலிருந்து மலையகத் தமிழர்களின் சிக்கல்கள் வேறு பரிமாணங்களைக் கொண்டவை. இதைப் பற்றியெல்லாம் பெங்களூரில் அமர்ந்து கொண்டு பேசுவோம் என்று நினைத்திருக்கவில்லை. பெங்களூரில் நடைபெறும் ‘இரண்டாம் ஞாயிறு’ நிகழ்வில் எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த கதைகளைப் பற்றி பேசுவது போலத்தான் இந்தக் கூட்டம் இருக்கும் என்று நினைத்தபடிதான் அல்சூர் தமிழ் சங்கத்திற்குச் சென்றிருந்தேன். வழக்கமாக சிறுகதைகளைத் தாண்டி ஒரு கவிதைத் தொகுப்பு பற்றிய விவாதமும் நடக்கும். அப்படித்தான் இரா.வினோத் எழுதிய தோட்டக்காட்டீ தொகுப்பை வைத்திருந்தோம். பெரிய திட்டமிடல் எதுவும் இல்லை. வினோத்தும் பெரிதாக திட்டமிட்டிருக்கவில்லை. 

கூட்டம் தொடங்கியவுடன் தோட்டக்காட்டீ தொகுப்பு பற்றி பேசிவிடலாம் என்று ஆரம்பித்தோம். தொகுப்பு பற்றி அமுதவனும் இறையடியானும் பேசிய போது பெரிய அளவில் ஈர்ப்பு உண்டாகியிருக்கவில்லை. அவர்கள் பேசி முடித்தவுடன் லோகேஷ் ஆரம்பித்தார். அவர் மலையகத் தமிழர். பெங்களூரில் படித்துக் கொண்டிருக்கிறார். தனது இனம் சந்திக்கும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக முன்வைத்தார். லயம் என்பது அவர்கள் வாழ்கிற இடம். எந்தவசதியுமில்லாத குதிரை லாயத்திற்கும் இவர்கள் வசிக்கும் லயத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்றவர், எங்கள் ஆட்கள் தலையில் இடிக்கிற உயரத்தில் இருக்கும் லயத்துக்குள் குனிந்தபடிதான் வருவார்கள். குனிந்தபடிதான் வெளியேறுவார்கள். மிச்சமிருக்கிற நேரமெல்லாம் தேயிலைத் தோட்டத்தில் தலையைக் குனிந்தபடியேதான் கொழுந்துகளைக் கிள்ளுகிறார்கள். என் இனம் தலை நிமிரவே வழியில்லாத இனமாக சிக்கிச் சீரழிகிறது என்றார். ‘எங்களுக்கு ஒதுக்கப்படும் ஸ்காலர்ஷிப்பில் கூட சிங்களவனும் ஈழத்தமிழனும்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தோட்டக்காட்டானுக்கு சொற்பம் கிடைத்தாலே பெரிது’என்று முடித்தார்.

தொகுப்பின் பெயரில் இருக்கும் டீ என்பது தேநீரைக் குறிக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் தோட்டக்காட்டீ என்பது மலையகத் தமிழரை இழிவுபடுத்துகிற சொல்லாம். ‘என்னடா காட்டான் மாதிரி நடந்துக்கிற?’ என்று நாம் சொல்வது போல ‘என்னடி தோட்டக்காட்டீ மாதிரி நடந்துக்குற?’ என்பார்களாம். இரா.வினோத் மலையகத் தமிழர்களோடு தங்கியிருக்கிறார். லயத்திலும் லயன் வீடுகளிலும் படுத்துறங்கி அட்டை பூச்சியின் கடி வாங்கியிருக்கிறார். ‘ஷூவெல்லாம் போட்டுட்டுத்தான் போனேன்...தெரியாத்தனமாக வெள்ளை நிற டீ ஷர்ட் அணிந்து தூங்கிவிட்டேன்...எழுந்து பார்க்கும் போது சட்டை சிவப்பாகியிருந்தது’ என்று அவர் சொன்ன போது நம்ப முடியாமல்தான் இருந்தது. ஆனால் அதுதான் உண்மை என்று லோகேஷ் ஆமோதித்தார். எந்தவசதியுமில்லாத குதிரை லாயத்தில்தான் அந்த மக்கள் தங்கியிருக்கிறார்கள்- அட்டைப் பூச்சிகளின் கடியோடும் சதசதக்கும் மண்ணின் ஈரத்தோடும்.

‘இவர்களுக்காக யாருமே பேசுறதில்லை’ என்பதுதான் வினோத்தின் முக்கியமான குற்றச்சாட்டு. இலங்கையின் ஈழத்தமிழர்களைப் பற்றி பேச ஆட்கள் இருக்கிறார்கள். அங்கேயிருக்கும் இசுலாமியர்களின் பிரச்சினைகளைப் பேசுகிறார்கள். ஆனால் மலையகத் தமிழர்களைப் பற்றி யாருமே கண்டுகொள்வதில்லை என்பதைத் திரும்பத் திரும்ப பேசினார். அவரோடு அருள் சேர்ந்து கொண்டார். அவர் யாழ்பாணத் தமிழர். ‘அண்ணன் சொல்லுவதை ஒத்துக் கொண்டாக வேண்டும்’ என்று தொடங்கியவர் மலையகத் தமிழர்கள் தங்கள் பகுதியில் எவ்வளவு அருவெறுப்புடனும் அசூசையுடனும் பார்க்கிறார்கள் என்று விவரித்தார்.

மலையகத் தமிழர்களுக்கு இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. ஏன் மலையகத் தமிழர்களைப் பற்றி நாம் எதுவுமே பேசுவதில்லை? அவர்களின் பிரச்சினைகள் குறித்து ஊடகங்களில் எந்த விவகாரமும் வருவதில்லை? அவர்களின் கல்வியறிவு, விழிப்புணர்வின்மை, அடிபட்ட வாழ்க்கை என்பன பற்றியெல்லாம் எந்தவிதமான புரிதலும் இல்லாமல் இருக்கிறோம் என்பதை இந்த மூவரும் வெவ்வேறு குரல்களில் பதிவு செய்தார்கள். ‘ஊரிலிருந்து யாராவது வந்தால் நீங்க  என்ன கேட்பீர்கள்?’ என்று கேட்டு நிறுத்திய வினோத் தனக்கு மலையகத்திலிருந்து வரும் கடிதங்களில் ‘பிரிட்டானியாவின் புது பிஸ்கெட் வாங்கி வரச் சொல்லியிருப்பார்கள்’ அல்லது ‘கண்ணாடி சீப்பு வாங்கி வரச் சொல்வார்கள்’ என்றார். அவர்களின் இந்த எளிய ஆசைகளிலிருந்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்பது வினோத்தின் வாதம். 

கூட்டத்திற்கு வந்திருந்த பெரும்பாலானோருக்கு இந்நிகழ்வு மிகப் பிடித்திருந்தது. இதுவரை பொதுவெளியில் அதிகம் பேசப்படாத தகவல்கள் இவை. பலருக்கும் அவை புத்தம் புதியதாகவும் வலியை உணர்த்தக் கூடியதாகவும் இருந்தது. எழுத்தாளர் பாவண்ணன் நிகழ்வுக்கு வந்திருந்தார். பாவண்ணன் நெகிழ்வான மனிதர். அன்பான மனிதரும் கூட. மனிதர்களின் சிக்கல்கள் அவரை எப்பொழுது நெகிழச் செய்துவிடுகின்றன. ஒருவரின் பிரச்சினையை நாம் மிகச் சாதாரணமாகச் சொல்லும் போது கூட அவர் நெகிழ்ந்துவிடுவதைப் பார்த்திருக்கிறேன். இவ்வளவு பாரமான விஷயத்தை இவர்கள் பேசியது அவரை நெக்குருகச் செய்திருக்க வேண்டும். கூட்டம் முடியும் போது ‘உங்களைத் தழுவிக் கொள்ள விரும்புகிறேன்’ என்று மூன்று பேரையும் தழுவிக் கொண்டார்.

கூட்டத்தில் சிறுகதைகள் எதையும் பேசவில்லை. இரண்டரை மணி நேரங்களும் இதைத்தான் பேசிக் கொண்டிருந்தோம். இதைப் பற்றி இன்னமும் விரிவாகப் பேச வேண்டும் என்று தோன்றுகிறது.  

ஆறு கதைகளையும் அடுத்த கூட்டத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம். வாழ்க்கையின் அடிமட்டத்தில் கிடக்கும் ஒரு இனத்தின் பிரச்சினைகளைப் பற்றிய அடிப்படையான புரிதல்களை உள்வாங்கிக் கொள்வது என்பது இலக்கியத்தையெல்லாம் விட பன்மடங்கு முக்கியமானது என நம்பலாம்.