‘இந்த கேம்பாரித்தனத்தை என்ரகிட்ட வெச்சுக்காத’ என்று அந்த பாட்டி எகிறிக் கொண்டிருந்த போது சிக்கிக் கொண்டேன். கோபி மார்க்கெட்டில் நூல்கோல் கிடைப்பதேயில்லை. சர்க்கரை நோயாளிகள் அள்ளிக் கொண்டு போய்விடுகிறார்கள் என்பதால் வெகு கிராக்கி. அம்மாவுக்கு வாங்கி வருவதற்காகச் சென்றிருந்தேன். பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு நூல்கோலை கழுவி அதோடு சில ஆவாரம்பூவைப் போட்டு மிக்ஸியில் அடித்து அப்படியே குடித்துவிட வேண்டும். அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். தயிர் மாதிரி ஆகிவிடுகிறது. குடிக்க கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் ரத்தச் சர்க்கரையின் அளவு அற்புதமான கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. கடந்த இரண்டு முறையாக எப்பொழுது சர்க்கரை அளவு பார்த்தாலும் 120க்குள்தான் இருக்கிறது என்று அம்மாவுக்கு பயங்கர சந்தோஷம்.
ஒவ்வொரு முறையும் ‘நான் கொடுக்கிற மருந்தைத் தவிர வேறு எதையாச்சும் சாப்பிடுறீங்களா?’ என்று மருத்துவர் கொக்கி போடுகிறாராம்.
‘அதெல்லாம் இல்லை’ என்று சொல்லி விட்டு வந்திருக்கிறார்.
‘ஆமான்னு சொல்லுங்க..வேற யாருக்காச்சும் ரெகமண்ட் பண்ணுவாருல்ல’ என்று கேட்டேன்.
‘எந்த இங்கிலீஷ் டாக்டரு இதையெல்லாம் நம்புவாரு?’ என்று கேட்கிறார். அதுவும் சரியான கேள்விதான். ஆனால் இந்த மருத்துவம் பரவலாகத் தெரிய ஆரம்பித்துவிட்டது போலிருக்கிறது. அதனால்தான் கடைக்காரர்களிடம் கேட்டால் ‘மருந்துக்கு வாங்கிட்டு போயிடறாங்க’ என்கிறார்கள். எந்த மருத்துவம் என்று யாரும் சொல்வதில்லை. அதனால் சரக்கு வந்து இறங்கும் போது போய் நின்றால் வாங்கிவிட்டு வந்துவிடலாம் என்பதற்காகச் சென்றிருந்தேன். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பிற மருந்துகளோடு சேர்த்து இந்த வைத்தியத்தையும் முயன்று பார்க்கலாம்.
அப்பொழுதுதான் அந்த பாட்டி எகிறிக் கொண்டிருந்தார். எடை போட்டுத் தருகிற இடைத்தரகர் எடையில் ஏதோ தில்லாலங்கடி வேலையைச் செய்த போது கண்டுபிடித்துவிட்டார். எடை போட்டவரும் சும்மாவிடுவதாகத் தெரியவில்லை. விடிந்து விடியாமலும் சண்டையில் களை கட்டிக் கொண்டிருந்தது மார்கெட். எங்கள் ஊர் மார்கெட் சுற்றுவட்டாரத்தில் வெகு பிரசித்தம். பெரிய மார்கெட் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் அத்தனை சரக்குகளும் கிடைக்கும். சிறு வயதிலிருந்தே அப்பாவுடன் மார்கெட்டுக்குச் செல்வேன். அலுவலகம் முடித்து வரும் போது என்னை சைக்கிளின் முன்னால் அமர வைத்துக் கொண்டு பின்னால் காய்கறிக் கூடையைக் கட்டிக் கொண்டு வருவார். அப்பாவின் சைக்கிளில் குழந்தைகள் அமரும் ஸீட்டும் இருக்காது. அந்த இரும்புக் கம்பியில் துண்டைச் சுற்றி அதன் மேல் அமர வைத்துவிடுவார். கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரம். எப்படியும் அரை மணி நேரமாவது மிதிப்பார். வீடு வந்து சேர்வதற்குள் பின்னால் இருக்கும் எலும்புகளைக் கழட்டி வைத்துவிடலாம் போல் இருக்கும். இடையில் இரண்டு மூன்று முறையாவது ‘அப்பா ஒண்ணுக்கு வருது’ என்று இறங்கிவிடுவேன். அதைத் தவிர அந்த எலும்புகளுக்கு ரெஸ்ட் கொடுக்கும் வழி தெரியாது.

‘அப்பா நான் வேணும்னா பின்னாடி உக்காந்துக்கட்டுமா?’ என்று கேட்டிருக்கிறேன். பின்னால் அமர வைத்தால் கால்களைச் சக்கரத்துக்குள் விட்டுவிடுவேன் என்று காரணம் சொல்வார். இல்லையென்றால் எடை மிகுந்த காய்கறி பையை முன்னால் மாட்டிக் கொண்டு சைக்கிளை மிதிப்பது கஷ்டம் என்று சொல்வார். அப்பொழுது எனக்கு அது புரியாது. ஆனால் உண்மையிலேயே சிரமம்தான். அப்பாவுக்கு ஆஸ்துமா தொந்தரவு உண்டு. கச்சேரி மேடு, நல்லகவுண்டன்பாளையம் மேடு ஆகிய இடங்களில் எல்லாம் சைக்கிள் மிதிக்கும் போது மூச்சுத் திணறுவார். இப்பொழுது நினைத்தால் கூட வருத்தமாக இருக்கிறது. அப்பொழுதே டிவிஎஸ் 50 உண்டு. ஆனால் அப்பாவுக்கு ஒற்றைச் சம்பளம். பெட்ரோல் செலவுக்கு பயந்தே வெகு நாட்கள் சைக்கிள் மிதிப்பார்.
அந்த மார்கெட்டில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான். மூன்றாம் வகுப்பிலிருந்து என்னோடு படித்துக் கொண்டிருந்தான். ஐந்தாறு வருடங்கள் தொடர்ந்து ஒன்றாகவே படித்ததில் வெகு நெருக்கமாகியிருந்தோம். அவனைத் தக்காளி என்பார்கள். அதற்கு இரண்டு காரணங்கள்- ஒன்று, அவனுடைய அப்பா தக்காளிக் கடை வைத்திருந்தார். இன்னொரு காரணம்- ஆள் தக்காளி மாதிரியே இருப்பான். உருண்டு திரண்டு. இந்த இடத்தில் அவனுடைய பெயர் முக்கியமில்லை. தக்காளி என்றே வைத்துக் கொள்ளலாம். எட்டாம் வகுப்பு வரையிலும் தக்காளிக்கும் எனக்கும் படிப்பில் போட்டி இருக்கும். பல சமயங்களில் அவன்தான் ஜெயிப்பான். விளையாட்டிலும் வெகு கீர்த்தியுடையவன். குண்டுக்குதிரை ஓடுவது மாதிரி செருப்பைப் பற்றிக் கவலைப்படாமல் வெறுங்காலோடு அவன் ஓடினால் நிலமே அதிர்வது போல இருக்கும். அதனால் அவனை விளையாட்டு வாத்தியார்களுக்கும் பிடிக்கும்.
ஆனால் எட்டாம் வகுப்புக்குப் பிறகு படிப்பிலிருந்த தக்காளியின் சுட்டித்தனம் சுணங்கிப் போனது. பெரும்பாலான நேரங்களில் மார்கெட் கடையைப் பார்த்துக் கொள்ளத் தொடங்கியிருந்தான். ஆசிரியர்கள் சொன்னதை அவனும் அவனுடைய குடும்பமும் பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளவில்லை. பத்தாம் வகுப்புக்குப் பிறகு படிப்பை முற்றாக நிறுத்திவிட்டு மார்கெட் வியாபாரத்தில் முழுவீச்சாக இறங்கிவிட்டான். பத்தாம் வகுப்பில் Border Pass.
மார்கெட் தொழில் ஒன்றும் மோசமில்லை. பல வெற்றியாளர்களை உருவாக்கியிருக்கிறது. தக்காளியும் பணக்காரனாகிவிடுவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தக்காளி பாதை மாறிவிட்டான். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் ‘தக்காளி குடிச்சு பழகிட்டான்’ என்று யாரோ சொல்லக் கேள்விப்பட்டிருந்தேன். அதன்பிறகு யாராவது அவனைப் பற்றியத் தகவல்களைச் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்கள். ஒரு சமயம் சிவந்து வீங்கிய கண்களோடிருந்த அவனை மார்கெட்டில் பார்த்தேன். ‘தக்காளி’ என்று வாஞ்சையோடு கையைப் பிடித்த போது என்னை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. அப்பொழுது வருத்தத்தைவிடவும் எரிச்சல்தான் மிஞ்சியது எனக்கு. அதன் பிறகு அவனுக்குத் திருமணம் ஆனது பற்றியும், திருந்தாமல் குடித்துக் கொண்டிருந்தது குறித்தும், அவனுக்கு குழந்தை பிறந்தது பற்றியும்- என எல்லாவற்றையும் சொல்வதற்கு யாராவது இருந்தார்கள். ஆனால் நேரில் பார்க்கவேயில்லை. இப்பொழுது நூல்கோல் வாங்குவதற்காகச் சென்றிருந்த போது வெகுநாட்களுக்குப் பிறகு தக்காளியின் கடையைப் தாண்டி வந்தேன். தக்காளியைப் பற்றி விசாரிக்கத் தோன்றியது. அவனது கடையில் யாரோ ஒருவர் அமர்ந்திருந்தார். கேள்விகளுக்கு அசுவராசியத்துடன் பதில் சொன்னார்.
தக்காளி கடையை கை மாற்றிவிட்டதாகச் சொன்னார். அவருக்கு பதில் சொல்ல விருப்பமில்லைதான். ‘இப்பொழுது அவன் எப்படியிருக்கான்?’ என்றேன்.
தக்காளி கடையை கை மாற்றிவிட்டதாகச் சொன்னார். அவருக்கு பதில் சொல்ல விருப்பமில்லைதான். ‘இப்பொழுது அவன் எப்படியிருக்கான்?’ என்றேன்.
‘அவன் எப்பவோ போய்ட்டான்’ என்று சாதாரணமாகச் சொன்னார். இறந்துவிட்டான் என்றுதான் சொல்கிறார். அவன் இவ்வளவு சீக்கிரம் இறந்துவிடுவான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆல்ஹகாலினால் ஈரல் செயலிழந்துவிட்டது. அவனுடைய மனைவி தாராபுரம் பக்கத்தைச் சார்ந்தவர். குழந்தையைத் தூக்கிக் கொண்டு தந்தையின் வீட்டுக்கு போய்விட்டாள். அவரிடம் வேறும் எதுவும் சொல்லாமல் கிளம்பிய போது ‘குழந்தை அவனை மாதிரியே இருக்கும்’ என்றார். அந்த கடைசி வாக்கியம் அவ்வளவு முக்கியமானதாகத் தெரியவில்லை. அவனை மாதிரியே இல்லாமல் இருப்பதுதான் நல்லது என மனசுக்குள் முணுமுணுத்தபடியே வெளியேறினேன். நூல்கோல் பாட்டி சண்டையை மறந்துவிட்டு வியாபாரத்தில் படுமும்முரமாகியிருந்தார்.