வருமான வரித்துறையின் 80G மற்றும் 12A ஆகிய பிரிவுகளில் அறக்கட்டளையை பதிவு செய்து கொள்வதன் வாயிலாக நன்கொடையாளர்களும், அறக்கட்டளையும் பயன் பெறலாம். 80G பிரிவில் பதிவு செய்யப்பட்டிருந்தால் நன்கொடையாளர்கள் தாங்கள் நன்கொடையாகக் கொடுக்கும் தொகைக்கு வரிவிலக்கு பெற்றுக் கொள்ளலாம். 12 A பிரிவில் பதிவு செய்யப்பட்டிருந்தால் தனக்கு வரும் நன்கொடைகளுக்கு அறக்கட்டளை வரி கட்ட வேண்டியதில்லை. அதனால் இரண்டு பிரிவுகளிலும் பதிவு செய்துவிடலாம் என்று பட்டயக்கணக்கர்கள் சொல்லியிருந்தார்கள். விண்ணப்பித்து இரண்டு மாதங்களாகிவிட்டது.
இப்பொழுது வருமான வரித்துறையிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. ரெய்டு எல்லாம் எதுவும் வரப்போவதில்லையாம். அப்படி வந்தாலாவது சொத்துக்குவிப்பு வழக்கு ஏதாவது விழுந்து பரபரப்பாகலாம். சிறையில் அடைக்கவா போகிறார்கள்?. ஆனாலும் முடியாது என்று சொல்லிவிட்டார்கள். ‘நீ அந்தளவுக்கு வொர்த் இல்லை’ என்று சொன்னவர்கள் இன்னும் கூடுதல் விவரங்கள் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
கடிதம் இதுதான்.
மற்ற விவரங்களையெல்லாம் கொடுத்துவிடலாம். மூன்றாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் விஷயம்தான் சிக்கல். நிறைய நன்கொடையாளர்களின் பெயர் மட்டும்தான் தெரியும். அதுவும் கூட வங்கியின் ஆன்லைன் - ஸ்டேட்மெண்ட் பார்த்துத்தான் தெரியும். இன்று கூட பணம் வந்திருக்கிறது. யார் அனுப்பினார்கள் என்று தெரியவில்லை. இப்படித்தான் முக்கால்வாசிப் பேர் இருக்கிறார்கள். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியாத மனிதர்கள். நிஜமாகத்தான் சொல்கிறேன். நீதியரசர் குமாரசாமி மாதிரி இல்லாமல் சரியாக சதவீதக் கணக்குப் போட்டால் கிட்டத்தட்ட தொண்ணூற்றைந்து சதவீத நன்கொடையாளர்களின் விவரங்கள் எனக்குத் தெரியாது. அவர்களுடைய மின்னஞ்சல் கூட இல்லை. அப்புறம் எப்படி முகவரியை வாங்குவது? ‘இது சாத்தியமே இல்லை சார்’ என்று ஆடிட்டரிடம் சொன்னேன். எதைச் சொன்னாலும் அவர் வெகு அமைதியாக இருக்கிறார். ‘அது பிரச்சினையே இல்லை’ என்றவர் குறைந்தபட்ச எண்ணிக்கையில் மட்டும் முகவரி, PAN அட்டை எண் இருந்தால் போதும் என்கிறார். குறைந்தபட்ச எண்ணிக்கை என்றால் ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரம் ரூபாய்க்கு மேலாகக் கொடுத்த ஏழெட்டு பேர்களின் விவரங்கள். அநேகமாக அதை வாங்கிச் சேர்ப்பதற்குள்ளேயே என் நாக்குத் தள்ளிவிடும் என நினைக்கிறேன்.
எப்படி வாங்குவது? கருப்பராயன்தான் துணை.
சிலருக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்தான். ஆனால் இந்த விவரங்களைக் கேட்டுத் தனித்தனியாக மின்னஞ்சல் அனுப்பும் போது சில சங்கடங்கள் இருக்கின்றன. ஒருவேளை தங்களுடைய விவரங்களைத் தர விரும்பாமல் இருக்கக் கூடும். கேட்டுவிட்ட பிறகு அதை எப்படி மறுப்பது என்று யோசிக்கலாம். எதற்கு குழப்படிகள்? பொதுவான கோரிக்கையாக இங்கு வைத்துவிடலாம். ஏழெட்டு முகவரிகளுடன் PAN எண்ணையும் வாங்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளியிருக்கிறார்கள். ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேலாக நன்கொடை தந்திருப்பவர்கள் PAN Card மற்றும் இந்தியாவில் ஒரு முகவரி தந்து உதவுங்கள்.
யாரையும் வலியுறுத்திக் கேட்க விரும்பவில்லை. விருப்பமில்லையென்றாலும் ஒன்றும் பிரச்சினையில்லை.
இந்த விவரங்கள் கிடைக்குமாயின் 12A மற்றும் 80G பதிவு சுலபமாகிவிடும். இதுவரையிலும் அறக்கட்டளையின் செயல்பாடுகள் மிக மிக வெளிப்படையாகவே இருந்திருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கும். பாராட்டி ஊக்கப்படுத்தியவர்கள், அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து நேர்மறையான கருத்துக்களை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லி பரப்பியவர்கள், நிதி கொடுத்தவர்கள், நேர்மையான முறையில் உதவி கேட்டு அணுகியவர்கள் என அத்தனை பேரின் பங்களிப்பும்தான் இதுவரையிலான செயல்பாடுகளுக்கு முதுகெலும்பு. இந்த ஒரு குட்டி உதவியையும் செய்துவிடுங்கள். கருப்பராயனுக்கு பெரிய கும்பிடாகப் போட்டுவிடுகிறேன்.
vaamanikandan@gmail.com
இந்த விவரங்கள் கிடைக்குமாயின் 12A மற்றும் 80G பதிவு சுலபமாகிவிடும். இதுவரையிலும் அறக்கட்டளையின் செயல்பாடுகள் மிக மிக வெளிப்படையாகவே இருந்திருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கும். பாராட்டி ஊக்கப்படுத்தியவர்கள், அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து நேர்மறையான கருத்துக்களை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லி பரப்பியவர்கள், நிதி கொடுத்தவர்கள், நேர்மையான முறையில் உதவி கேட்டு அணுகியவர்கள் என அத்தனை பேரின் பங்களிப்பும்தான் இதுவரையிலான செயல்பாடுகளுக்கு முதுகெலும்பு. இந்த ஒரு குட்டி உதவியையும் செய்துவிடுங்கள். கருப்பராயனுக்கு பெரிய கும்பிடாகப் போட்டுவிடுகிறேன்.
vaamanikandan@gmail.com