முன்பெல்லாம் பிச்சைக்காரர்கள் வீடுகளுக்கு வருவார்கள். பழைய சாப்பாடு இருந்தால் எடுத்துக் கொட்டுவார்கள். திருவோட்டில் வாங்கிச் சென்று தின்றுவிட்டு கோவில் வாசலிலோ அல்லது மரத்தடியிலோ காலை நீட்டியபடி அடுத்த வேளைக்காக காத்திருப்பார்கள். வாழ்க்கை வெகு எளிமையாக இருந்தது. இப்பொழுது அவர்களுக்கும் சிக்கல்தான். திருவோட்டை நீங்கள் கடைசியாகப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும்? பிச்சைக்காரர்கள் மாறிவிட்டார்கள். சிக்னல் சிக்னலாக நிற்கிறார்கள். காசு மட்டும்தான் வாங்குகிறார்கள். நல்ல மூர்க்கமான ஆள் கூட கிழவனைப் போல நடிக்க வேண்டியிருக்கிறது. சிவப்பு விழுந்தவுடன் நடுக்கம் வந்தவரைப் போல வந்து கையை நீட்டுவார். பச்சை விழுந்தவுடன் சாதாரண மனிதனைப் போல நடந்து செல்வார். அவ்வளவு நடிப்பு. வேறு சிலர் இருக்கிறார்கள். தனியாக வந்தால் பரிதாபம் வராது என்பதால் குழந்தையைத் தூக்கி வர வேண்டியிருக்கிறது. இதற்காக வாடகைக் குழந்தைகள் கிடைக்கின்றன. நாள் வாடகை. காலையில் தூக்கி வந்து மாலையில் திருப்பித் தந்துவிடுவார்கள்.
பிச்சைத் தொழில்தான் - அதுவே ஏகப்பட்ட சிக்கல்கள் நிறைந்ததாக மாறிப் போய்விட்டது? மற்றது பற்றியெல்லாம் கேட்கவா வேண்டும்?
ஒரு விவசாயி தனக்கும் தன் ஊருக்குமான விவசாயத்தை செய்து கொண்டிருந்தவரை எல்லாமும் நன்றாகத்தான் இருந்தது. எப்பொழுது புகையிலையையும், வாழையையும் இன்னபிற பணப்பயிர்களையும் கொண்டு வந்து லாபத்தைக் கண்களில் காட்டினோமோ அப்பொழுதிருந்து அவன் நொடிந்து போகத் தொடங்கினான். வாங்கி விற்கும் தரகன், தொழிற்சாலைகள் என ஒவ்வொருவரும் லாபம் பார்க்க முயன்றார்கள். இவர்கள் தின்றது போகத் தனக்கு லாபம் வர வைக்க வேண்டுமானால் இன்னமும் விளைச்சலைப் பெருக்க வேண்டும். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்தவனுக்கு அம்மோனியாவையும் பாலிடாலையும் காட்டினார்கள். கொண்டு வந்து மண்ணில் நிரப்பினான். மண்புழுக்களிலிருந்து எறும்புகள் வரை செத்துச் சுண்ணாம்பாயின. மண் என்பது தெய்வம் என்கிற நினைப்பு போய் அது வெறும் மண்ணாகத் தெரியத் தொடங்கியதிலிருந்து விவசாயி பாதாளத்தில் விழ ஆரம்பித்தான்.
நெசவாளியும் அப்படித்தான். தனக்கும் ஊருக்கும் வேட்டியும் துண்டும் நெய்து கொண்டிருந்த வரை அவை அவை அதனதன் இடத்தில் இருந்தன. பவர் லூம், ஆட்டோ லூம் என்று குவியத் துவங்கி லாபம், லாபத்துக்கு மேல் லாபம் என்கிற போது எவனெவனோ தலையெடுத்தான். ஒருவனை சாப்பர் என்றார்கள் இன்னொருவனை ஃபிட்டர் என்றார்கள் இன்னொருவனை buyer என்றார்கள் இன்னொருவனை நூல் புரோக்கர் என்றார்கள் இன்னொருவனை கூலிக்காரன் என்றார்கள். புதிது புதிதாக ஆட்கள் வரத் தொடங்கியதும் அவனவன் சம்பாதிக்க முற்பட்டான். பணத்தை வாங்கிக் கொண்டு காணாமல் போகத் தொடங்கினார்கள். பொய்கள் நிரம்பின. திருப்பூரில் ஒரு முறை உள்ளே புகுந்து வெளியே வந்தால் தெரியும். அத்தனை பேரும் வெகு நாகரிகமாக இருப்பார்கள். யார் உண்மையைச் சொல்கிறார்கள், யார் பொய்யைச் சொல்கிறார்கள் என்று கண்டுபிடிக்கவே முடியாது.
எந்தத் தொழிலை எடுத்தாலும் அப்படித்தான் இருக்கிறது. திண்ணையில் நான்கு பேரை அமர வைத்து சொல்லிக் கொண்டிருந்த வரையிலும் மாதா பிதாவுக்குப் பிறகு குருதான் இருந்தார். பள்ளி முடிந்த சாயந்திரவேளைகளில் ‘ட்யூஷனுக்கு வந்துடுங்க’ என்றும் ‘நோட்ஸ் என்கிட்டதான் வாங்கிக்கணும்’ என்றும் சொல்லியபடியும் கந்துவட்டித் தொழிலை பார்ட் டைமாக செய்ய ஆரம்பித்த காலத்திலிருந்தும் குரு காலியாகிப் போனார்.
இதெல்லாம் பழைய பல்லவி. உலகம் அப்படித்தான். வெகு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விவசாயியும் நெசவாளியும் ஆசிரியனும்தான் பண விரும்பிகளாகிவிட்டார்களா என்ன? எல்லோருமேதான்.
இதோ! இந்த பெங்களூரில் முப்பதாயிரம் ரூபாய் இருந்தால் ஓரளவுக்கு செளகரியமான வாழ்க்கையை வாழ்ந்துவிட முடியும். ஆனால் பாருங்கள்- பையனுக்கு வருடம் அறுபத்தைந்தாயிரம் ஃபீஸ் கட்ட வேண்டியிருக்கிறது. ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளமாக இருந்தால் செளகரியமாக இருக்கும். அப்புறம் இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டேன் - இந்த ஊரில் போக்குவரத்து நெரிசல் பயங்கரமாக இருக்கிறது. ஒரு கார் இருந்தால் இந்தக் கச்சடாவில் வியர்த்து விறுவிறுத்து சிரமப்பட வேண்டியதில்லை. ஆனால் கார் வாங்க, பெட்ரோல் அடிக்க என்று எழுபதாயிரம் சம்பளம் தேவைப்படுமே! இவை எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது- இந்த வீட்டு உரிமையாளருக்கு பதினைந்தாயிரம் ரூபாய் வாடகையாகக் கொடுப்பதற்கு பதிலாக ஒரு அபார்ட்மெண்ட் வாங்கிவிடலாம் போலிருக்கிறது. ஆனால் அதற்கு ஒரு லட்சம் சம்பளம் இருந்தால்தான் இஎம்ஐ கட்ட வசதியாக இருக்கும்.
எல்லாம் ஆன பிறகு - ‘அபார்ட்மெண்ட் அவ்வளவு வசதியா இல்ல......ஒரு வில்லா பார்க்கலாம்..கோடி ரூபாயிலிருந்து தொடங்குகிறது’.
பணம் என்பது வெறும் மெட்டீரியல்தான். ஆனால் அதுதான் நம் அத்தனை பேரையும் சுண்டுவிரலில் வைத்து அசைக்கிறது. நேற்று ஒரு மென்பொருள் துறையில் இருப்பவரின் கதையைச் சொன்னார்கள். இருந்தவரின் கதை. அவருக்கு இருபத்தேழு ஆகிறது. இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சில மாதங்களாக அலுவலக வேலை பிடிக்கவில்லையாம். வெளிநாட்டு பயணம் இல்லை, சம்பள உயர்வு இல்லை என்ற காரணங்கள். வேறு நிறுவனத்திற்கு மாற முயற்சித்திருக்கிறார். இருப்பதைவிடவும் நல்லதாக வேறு வேலை எதுவும் சரியாக அமையவில்லை. அதுவே மன அழுத்தத்தை உருவாக்கியிருக்கிறது. சொந்த ஊருக்குச் சென்றவர் உயிரை மாய்த்துக் கொண்டார். தனக்கு வேறு நல்ல வேலை கிடைக்கவில்லை என்பது மட்டுமே காரணமாக இருந்திருக்காது. ஆனால் அதுவும் ஒரு காரணம். அப்படித்தான் தனது இறுதிக் கடிதத்தை எழுதி வைத்திருந்தாராம். மனிதனுக்கு எப்படியெல்லாம் சிக்கல்கள் வருகின்றன பாருங்கள்.
பெரும்பாலான சிக்கல்கள் இந்த சமூகம் நம் மீது உருவாக்கியவை. சில சிக்கல்கள் நமக்கு நாமே திட்டத்தில் நாமே உருவாக்கிக் கொண்டவை. அடுத்தவனோடு ஒப்பிடுவதன் வழியாகவோ, அதீத ஆசைகளினாலோதான் முக்கால்வாசி சமயங்களில் சிக்கலின் வலையில் வீழ்கிறோம். சற்று யோசித்துப் பார்த்தால் தப்பித்துவிடலாம்தான். ஆனால் யோசிக்கத்தான் நேரமே கிடைப்பதில்லையே. இப்படித்தான் தேவையில்லாத அழுத்தங்கள். தேவையில்லாத சுமைகள் என எல்லாவற்றையும் மண்டையில் ஏற்றிக் கொள்ள வேண்டியது. அப்புறம் என்னை மாதிரி இருக்கிற முடியெல்லாம் கொட்டிப் போன பிறகு நான்கு தலைமுடியை வாரிக்கொள்ள நான்கு சீப்புகளை செருகிக் கொண்டு கண்டதையும் பேசித் திரிய வேண்டியதுதான். லேப்டாப் பைக்குள் ஒரு சீப்பு. வண்டியின் பெட்ரோல் கவரில் ஒன்று. அது தவிர எப்பொழுதும் பேண்ட் பாக்கெட்டுக்குள் ஒன்று இருக்கும். இன்றுதான் கவனித்தேன். அலுவலக மேசைக்குள்ளும் ஒன்று வைத்திருக்கிறேன். கடவுளே!