May 28, 2015

திருப்தி

பாவனாவுக்கு இரண்டு லட்சத்திற்கான காசோலையை இன்று அனுப்பி வைத்தாகிவிட்டது. நேற்றிரவிலிருந்து நிறையப் பேர் பணம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். சார்லஸ் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி வைத்திருப்பதாகவும் அதையும் சேர்த்துக் கொள்ளச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அநேகமாக இன்று அல்லது நாளை பணம் வந்து சேர்ந்துவிடும். அவர் அனுப்பினால் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்றுதான் அனுப்புகிறார். எதுவுமே சொல்லாமல் ஒரு முறை எழுபதாயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருந்தார். பரோடா வங்கியிலிருந்து வந்திருந்த எஸ்.எம்.எஸ்ஸைப் பார்த்தவுடன் சில வினாடிகள் நடுங்கிப் போனேன் என்பதுதான் உண்மை. அதற்கு முன்பாக ஐம்பதாயிரம் ரூபாய். இப்பொழுது ஒரு லட்சம். இன்னமும் வேறு எந்தத் தொகையாவது அனுப்பியிருக்கிறாரா என்று தெரியவில்லை. இதற்கெல்லாம் பெரிய மனம் வெண்டும். அதே போல அழகேசன் ஐம்பதாயிரம் அனுப்பியிருக்கிறார். இவர்களைத் தவிர ஒன்றிரண்டு பத்தாயிரம் ரூபாய்களும் இன்னமும் சில ஐந்தாயிரம் ரூபாய்களும் வந்திருக்கின்றன. அடுத்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக இருந்தாலும் மூன்று மணி நேரமாவது யோசிப்பேன். இவர்களால் மட்டும் எப்படி நினைத்தவுடன் கொடுக்க முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது.


இன்று காலை கூரியர் மூலமாக இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் கூட தொகையை சேர்த்து அனுப்பலாம்தான் ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டது போல நிறையப் பேர்கள் உதவிக்காகக் காத்திருக்கிறார்கள். முன்பு ஒரு முறை திரு.குமரேசன் என்பவர் பற்றி எழுதியிருந்தேன். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர். பத்து வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற பேருந்து வேலை நிறுத்தத்தின் போது தமிழகம் முழுவதும் ஸ்டியரிங் பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் அரசுப் பேருந்துகளை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அப்படி ஓட்டியவர்கள் சர்வசாதாரணமாக விபத்துகளையும் நிகழ்த்தினார்கள். அப்படியொரு விபத்தில் குமரசேனின் இரண்டு கால்களையும் நசுக்கித் தள்ளிவிட்டார்கள். அதிலிருந்து இன்று வரையிலும் குமரேசனுக்கு படுக்கைதான். அவரது மகன் படிப்பையெல்லாம் விட்டுவிட்டு குடும்ப பாரத்தைச் சமாளித்துக் கொண்டிருக்கிறார். இனி மாற்றுக் கால்கள் பொருத்தவிருக்கிறார்கள்.

குமரேசனின் குடும்பத்தார் கொடுத்திருந்த தகவல்களையெல்லாம் சரி பார்ப்பதற்காக திரு.சுந்தர் உதவினார். சுந்தர் சென்னையில் வருமானவரித்துறை அலுவலர். கடந்த வாரத்தில் குமரேசனின் வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு விவரங்களை அனுப்பியிருந்தார். குமரேசனுக்கு மாற்றுக் கால்கள் பொருத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அந்தத் தொகையை முழுமையாகவே புரட்டிக் கொடுத்துவிடலாம்தான். ஆனால் இருபத்தைந்தாயிரம் ரூபாய் மட்டும் தருவதாகச் சொல்லியிருக்கிறேன். மீதி இருபதாயிரம் ரூபாய் வரைக்கும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்திலும் மிச்சத்தை அவருடைய மகன் தயார் செய்வதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பச் சூழலில் இந்தத் தொகையைச் சமாளிப்பது கூட கஷ்டம்தான். ஆனால் இத்தகைய காரியங்களில் உதவி பெறுபவர்கள் அவர்களால் முடிந்த அளவுக்கு பணத்தை புரட்டட்டும். இப்படிச் சொல்வதில் பெரிய சித்தாந்தம் எதுவும் இல்லை. அவர்கள் சக்திக்கு ஏற்ப தேவையான பணத்தில் ஒரு பகுதியேனும் தயார் செய்துவிட்டால் நாம் கொடுக்க வேண்டிய தொகை குறைந்துவிடும். அப்படி நாம் மிச்சம் பிடிக்கிற தொகையை வேறு யாருக்காவது கொடுத்துவிடலாம். ஒருவேளை அவர்களால் எந்தவிதத்திலும் பணத்தை ஏற்பாடு செய்யமுடியவில்லை என்கிற சூழல் வருமானால் மட்டும் இன்னும் சற்று கூடுதலான தொகையைக் கொடுக்கலாம். 

மேற்சொன்ன காரணத்தினால்தான் பாவனாவின் தந்தைக்கு வழங்கும் தொகையை இரண்டு லட்சம் ரூபாயோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. இன்னமும் கூட அவர்களுக்கு பணம் தேவைப்படும்தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இந்தச் சிந்தனையைத் தாண்டி வேறு முடிவுகளை எடுக்க முடியவில்லை. ஒருவேளை என்னுடைய எண்ணம் தவறானதாகக் கூட இருக்கலாம். மனித மனம்தானே? இது போன்ற சூழல்களில் முடிவெடுப்பதில் சற்று திணறித்தான் போகிறது. 

பாவனா குடும்பத்தின் தேவையை கவனத்துக்கு கொண்டு வந்த ராஜேஷ், ரமணி பிரபா தேவி மற்றும் கிஷோர்.கே.சுவாமிக்கு நன்றி.

நிசப்தம் அறக்கட்டளை வழியாக இதுவரையிலும் செய்யப்பட்ட உதவிகள் என்று கணக்குப் பார்த்தால் பத்து லட்ச ரூபாயைத் தாண்டியிருப்போம். நிறையப் பேருக்கு உதவியிருக்கிறோம். மனதுக்குத் திருப்தி தரக் கூடிய காரியம் இது. நிசப்தம் என்பது பாலம் மட்டும்தான். பாலத்துக்கு அந்தப் பக்கமாக நின்று எந்தத் தயக்கமுமில்லாமல் பணம் அனுப்பிக் கொண்டிருப்பவர்கள், ஒவ்வொரு செயலையும் ஊக்குவித்து பாலத்தின் தூண்களாக நிற்பவர்கள் என அத்தனை பேரும் பக்கபலமாக இருக்கிறார்கள். வருமானவரித்துறை அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், வங்கி சார்ந்த காரியங்கள் என்று எந்த இடத்திலும் வேலை செய்து கொடுப்பதற்கு நல்லவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். குடும்பத்திலிருந்து எந்தத் தடையும் இல்லை. சொல்லிக் கொண்டே போகலாம். இதெல்லாம் எப்படி சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது என்று அவ்வப்போது நம்பவே முடிவதில்லை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஏதோவொரு நம்பிக்கைதான் இந்தக் காரியங்களையெல்லாம் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கைதான் அத்தனைக்கும் அடிப்படை. ஆனால் அந்த நம்பிக்கை சாதாரணமாக உருவாகிவிடுவதில்லை என்பதையும் புரிந்து வைத்திருக்கிறேன்.  இந்த வரிகளை தட்டச்சு செய்யும் போது மனம் கலங்கித்தான் போகிறது. நெகிழ்ச்சியில் துளி கண்ணீரும் திரண்டு நிற்கிறது.

இப்படியே செய்து கொண்டிருப்போம்- எவ்வளவு காலம் முடியுமோ அதுவரைக்கும். இன்னமும் எவ்வளவு விரிவுபடுத்த முடியுமோ அவ்வளவு விரிவுபடுத்தலாம். துடைக்கக் கூட மறந்துவிட்டு அழுது கொண்டிருக்கும் எளியவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகச் ஒற்றை விரலை நீட்டுவோம். நாம் பூமியில் பிறப்பெடுத்ததை அர்த்தப்படுத்துவதற்கு அதைவிடச் சிறந்த வழி வேறு இருப்பதாகத் தெரியவில்லை.