May 15, 2015

அடுத்த சாத்தியங்கள்

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து ஒரு பெண்மணி அழைத்திருந்தார். அவருடைய மகள் 180க்கு மேலாக பொறியியல் கட்-ஆப் வைத்திருக்கிறாள். என்ன படிக்கலாம் என்று விசாரிப்பதற்காக அழைத்திருந்தார்கள். அந்த மாணவி படித்த பள்ளியில் ஒரு முறை பேசியிருக்கிறேன். அதன் வழியாக இந்தத் தொடர்பு. அந்த மாணவியின் மதிப்பெண்ணுக்கு ஓரளவு மரியாதையான கல்லூரியில் இடம் பிடித்துவிடலாம். ‘உங்கள் தரப்பில் என்ன விருப்பம்?’ என்று திருப்பி கேட்ட போது அவர்களிடம் சரியான பதில் இல்லை. கெமிக்கல் டெக்னாலஜி படிக்கலாம், பிளாஸ்டிக் தொழில்நுட்பம் படிக்கலாம் என்றெல்லாம் சொன்னார்கள். நல்ல விஷயம்தான். வித்தியாசமான படிப்புகள். ஆனால் அதற்குப் பிறகு என்ன செய்யப் போகிறோம் என்று எந்தத் திட்டமும் இல்லை. 

பலரும் சீண்டாத வித்தியாசமான படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போது எதிர்காலத் திட்டம் குறித்து தெளிவாக இருந்தால் தப்பித்துவிடலாம். இல்லையென்றால் நட்டாற்றில் இறங்கியது போல ஆகிவிடும். ஏதாவதொரு படிப்பில் சேர்வது பிரச்சினையில்லை. அதுதான் கொட்டிக் கிடக்கின்றனவே. ஆனால் படித்துவிட்டு என்ன செய்யப் போகிறோம் என்று முடிவு செய்து கொள்வது நல்லது. அப்பாவுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார். தோல் பதனிடும் தொழிலைச் செய்து கொண்டிருந்தார். மகனை லெதர் டெக்னாலஜி படிக்க வைத்தார். கொஞ்ச நாட்கள் வெளி நிறுவனத்தில் பணி செய்யட்டும் என்று விட்டுவிட்டார். படித்து முடித்தவுடனயே முதலாளி ஆக்கிவிட்டால் அடிப்படையைக் கற்றுக் கொள்ள மாட்டான் என்று சொல்லி வேறு நிறுவனங்களில் வேலைக்கு அனுப்பி வைத்திருந்தார்.  ராணிப்பேட்டையிலும் ஆம்பூரிலும் வேலை செய்து நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டவன் இப்பொழுது அப்பாவின் தொழிற்சாலையை கவனித்துக் கொள்கிறான். கடந்த நான்கைந்து வருடங்களில் அசுர வளர்ச்சி என்று பேசிக் கொள்கிறார்கள். கோயமுத்தூரில் மோட்டார் நிறுவனங்களுக்கு ரப்பர் உதிரிப்பாகங்களைச் செய்து கொடுக்கும் சிறு தொழிற்சாலை நடத்துபவர் மகனை பாலிமர் தொழில்நுட்பப் படிப்பில் சேர்த்தார். படிக்கும் போதே தொழிற்சாலையில் கவனம் செலுத்தத் தொடங்கியவன் இப்பொழுது தந்தைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு தொழிலை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறான். 

இவையெல்லாம் விதிவிலக்கான உதாரணங்கள். எல்லோருடைய அப்பாவும் தொழிற்சாலை நடத்துவதில்லை. எல்லோருடைய குடும்பமும் தொழிலதிபர்களை உருவாக்குவதில்லை. பெரும்பாலானவர்கள் ‘படித்து முடித்துவிட்டு வேலைக்கு போற மாதிரி கோர்ஸ் சொல்லுங்க’ என்றுதான் கேட்கிறார்கள். இப்படிச் சொல்பவர்களிடம் ஒன்றே ஒன்றைத்தான் அறிவுறுத்த வேண்டும்- கொஞ்சமாவது மாணவர்கள் யோசிக்க வேண்டும். அவனுடைய விருப்பங்கள், இயலாமைகள் குறித்த மேம்போக்கான சுய ஆலோசனையையாவது அவன் செய்து கொள்ள வேண்டும். பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடன் அப்படியே வேரோடு பிடுங்கிச் சென்று கல்லூரியில் நட்டு வைக்க வேண்டியதில்லை. நேற்று பேசிய அந்தப் பெண்மணி தனது மகளிடம் அலைபேசியைக் கொடுக்கவேயில்லை. என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை அந்நிய ஆணுடன் பேச அனுமதிப்பதற்கு அவர் பயப்பட்டிருக்கலாம். அது இயல்பானதுதான். பிரச்சினையில்லை. ஆனால் தனது மகள் என்ன படிக்க வேண்டும் என்பதை மொத்தமாக அந்தப் பெண்மணிதான் முடிவு செய்கிறார்.

பல குடும்பங்களில் இதுதான் நடக்கிறது. நான்கு வருடங்களுக்கு முன்பாக அத்தனை பேரும் சேர்கிறார்கள் என்று ECE படிப்பில் சேர்ந்தார்கள். இப்பொழுது என்ன ஆகிவிட்டது? வேலைச் சந்தை அப்படியேதான் இருக்கிறது. இன்னமும் மென்பொருள் துறைதான் அதிகமான வேலையை உருவாக்கியிருக்கிறது. அப்பொழுது யாரும் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. இந்த வருடம் அத்தனை பேரும் EEE படிப்பில் விழப் போகிறார்கள். விவரமான மாணவராக இருந்தால் நல்ல கல்லூரியில் யாரும் கண்டு கொள்ளாமல் விடும் கம்யூட்டர் சயின்ஸ், ஐடி போன்ற பாடங்களை எடுத்துக் கொள்ளலாம். இன்னமும் நான்கு வருடங்கள் கழித்தாலும் கூட அதிகமான வேலை வாய்ப்பை மென்பொருள் துறைதான் உருவாக்கிக் கொண்டிருக்கும்.

நரேந்திர மோடியின் Make In India வருகிறது அதனால் மெக்கானிக்கல் துறைக்கும் உற்பத்தி துறைக்கும் அதிகமான தேவை இருக்கும் என்று பேசிக் கொள்கிறார்கள். இந்தப் படிப்புகளை மோசம் என்று சொல்லவில்லை. ஆனால் அரசாங்கத்தின் திட்டங்களை எல்லாம் எதிர்பார்த்து படிப்பில் சேர்வது என்பது ‘மேலைக்கே தாலி கட்டுறேன் இப்பவே அடிடா மத்தளத்தை’ என்று பெண் பார்ப்பதற்கு முன்பாகவே கல்யாணத்தைப் பற்றி பேசுகிற கதைதான். இதெல்லாம் நடக்கும் போதுதான் நம்ப வேண்டும். இப்பொழுதுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னமும் இரண்டு வருடங்கள் தாண்டிய பிறகு முடிவு செய்து கொள்ளலாம். வேலைக்குத்தான் செல்ல வேண்டும் என்றால் எந்தத் துறைகளில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றனவோ அவற்றில்தான் சேர வேண்டும்.

வேலையைத் தாண்டிய லட்சியங்கள் இருப்பின் கலை அறிவியல் படிக்க விரும்பினாலும் கூட அனுமதிக்கலாம். ஆனால் மாணவர்களிடம் ஒரு தெளிவான முடிவு இருக்கிறதா என்று மட்டும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுகள் எழுத விரும்புபவர்கள், வங்கிப் பணி குறித்து யோசிப்பவர்கள் தேவையில்லாமல் பொறியியலில் சேர வேண்டியதில்லை. கல்லூரியில் சுலபமான பாடங்களில் சேர்ந்துவிட்டு முதலாமாண்டிலிருந்தே தேர்வுகளுக்கான தயாரிப்புகளில் ஈடுபடலாம். ஆனால் இதில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்- தேர்வுகளில் வெற்றிபெற்றால் சந்தோஷம். இல்லையென்றால் என்ன செய்யப் போகிறோம்? அந்த Backup பற்றிய தெளிவு அவசியம். 

அதே போல சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரிக்கிறேன் என்று நூலகம் கூட சரியாக இல்லாத கல்லூரிகளில் கலை அறிவியல் பாடங்களைப் படித்துவிட்டு வெளியே வரும் போது இந்த ஊரே பொட்டல் காடாகத்தான் தெரியும். அதனால் எதை நோக்கமாக வைத்திருக்கிறோமோ அதற்கான வசதி வாய்ப்புகளை உடைய கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து சரியான பாடத்தில் சேர வேண்டும். ஆனால் இந்த வருடம் கலை அறிவியல் படிப்பைப் படிப்பதற்கான சாத்தியங்கள் கிட்டத்தட்ட மூடப்பட்டுவிட்டன என்றுதான் நினைக்கிறேன். பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்தவுடனேயே பல கல்லூரிகளில் சேர்க்கைகள் முடிந்துவிட்டன. 

பெங்களூரில் ஹோட்டல் மேலாண்மைக் கல்லூரிகள் சிலவற்றில் விசாரித்த போது அதிர்ச்சியாக இருந்தது. முக்கால்வாசி இடங்களை தமிழ்நாட்டு மாணவர்கள்தான் அமுக்கியிருக்கிறார்கள். எனவே பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பெரும்படிப்புகளைத் தவிர பிற படிப்புகளை நல்ல கல்லூரிகளில் படிப்பதற்கான சாத்தியங்கள் வெகு குறைவுதான் என்று தோன்றுகிறது. அதனால் பொறியியலில் இருக்கக் கூடிய சாத்தியங்களை யோசிக்கலாம்.