May 27, 2015

அதீத நம்பிக்கைகள்

பாவனாவுக்கு ஏழு வயதாகிறது. ‘Ependymoma’ என்றழைக்கப்படும் மூளைப் புற்று நோய் அவளுக்கு. அவளுடைய தந்தை ராஜ்குமார் நேற்று பேசினார். ஏகப்பட்ட செலவைச் செய்துவிட்டார்கள். இன்னமும் ஏழு முதல் எட்டு லட்சம் ரூபாய் வரைக்கும் தேவைப்படும் போலிருக்கிறது. கீமோதெரபி, ரேடியோதெரபி என்று என்னென்னவோ முயற்சித்துப் பார்த்துவிட்டார்கள். ஒன்றும் பிரையோஜனப்படாமல் மாற்று வழியாகக் கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்து கட்டியை நீக்கியிருக்கிறார்கள். அதோடு சேர்த்து தொற்று ஏற்பட்டிருந்த தலைப்பகுதியை வெட்டி எடுத்துவிட்டார்களாம். இனி அந்த இடத்தில் செயற்கையான பாகத்தை பொருத்த வேண்டும். ஏழு வயது பிஞ்சுக்கு இதெல்லாம் மிகப் பெரிய தொந்தரவு.


இன்னமும் முழுமையாக குணமடைந்துவிட்டாள் என்று சொல்ல முடியாது. உணவு எதையும் சாப்பிட முடியாத நிலையில் இருப்பதால் மாதம் இருமுறை ‘gastrostomy’ எனப்படும் முறையில் இரைப்பையைத் திறந்து உணவு கொடுக்கிறார்களாம். கண்களைக் கூடத் திறக்கச் சக்தியற்றுக் கிடப்பதாகச் சொன்னார். 

வீட்டுக்குச் சென்றாலும் மருத்துவமனையின் செட்டப்பைச் செய்ய வேண்டும், தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து போக வேண்டும் என என பெரிய செலவு காத்திருக்கிறது.

நிசப்தம் பற்றி  ராஜ்குமாரிடம் அதீதமாகச் சொல்லியிருக்கிறார்கள். ‘எப்படியும் ஐந்து லட்சம் புரட்டிக் கொடுத்துவிடுவார்’ என்று சொன்னதை அவரும் நம்பியிருக்கிறார். எந்த அடிப்படையில் இப்படி தேவையற்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள் என்று புரியவில்லை. இன்று காலையில் ராஜ்குமாரை அழைத்து ஒரு லட்ச ரூபாய்தான் சாத்தியம்ம் என்று சொன்னவுடன் அவருக்கு வார்த்தைகளே வரவில்லை. கைவசம் இருப்பது ஐந்தேகால் லட்சம். ஆனால் அனைத்தையும் கொடுத்துவிட முடியாது. இன்னமும் ஏகப்பட்ட பேருக்கு பணம் அனுப்ப வேண்டியிருக்கிறது.

அறுவை சிகிச்சை முடிந்த தினத்திலிருந்து இரண்டொரு நாட்களுக்கு முன்பு வரையில் ஐ.சி.யூவில் இருந்திருக்கிறாள். அடுத்த வாரத்தில் வீட்டுக்குச் சென்றுவிடுவாள் போலிருக்கிறது. பணம் கட்டச் சொல்லியிருக்கிறார்கள். ராஜ்குமார் தனியார் நிறுவனமொன்றில் வடிவமைப்பாளராக இருக்கிறார். பெரிய வருமானம் இல்லாத வேலை.  இது போன்ற வியாதிகள் வந்து முடக்கும் போது என்னதான் சம்பளம் இருந்தாலும் திணறிப் போய்விடத்தான் வேண்டும். ‘இதுவரை கடன் வாங்கிச் சமாளித்துவிட்டேன்’ என்று சொன்ன போது நம்மிடமிருந்து பெரும் தொகையை எதிர்பார்க்கிறார் என்று நினைக்கவில்லை.

இரண்டொரு நண்பர்கள் எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். மிகுந்த சிரமத்தில்தான் இருக்கிறார்கள். மொத்த சேமிப்புகளும் தீர்ந்து வாய்ப்பிருக்கிற அத்தனை கடன்களையும் வாங்கிவிட்டார். ‘இந்தக் குழந்தைக்கு என்னால் என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்துவிடுவேன்’ என்று சொன்னார்.


ராஜ்குமாரிடம் நிசப்தம் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தவரிடம் ‘அஞ்சு லட்சம் கொடுப்பதெல்லாம் சாத்தியமே இல்லைங்க...எந்த நம்பிக்கையில் சொன்னீங்க’ என்று கேட்டால் அவரிடம் சரியான பதில் இல்லை. ஏற்கனவே நொடிந்து போய் இருப்பவர்களிடம் இப்படியான அதீத நம்பிக்கையை உருவாக்குவது பாவம். எது சாத்தியம் என்று நினைக்கிறோமோ அதை மட்டும்தான் சொல்ல வேண்டும். அந்த அளவுகு மட்டும்தான் உறுதியளிக்க வேண்டும். அப்பொழுதுதான் மாற்று வழிகளை யோசிப்பார்கள் அல்லது மனதை திடப்படுத்திக் கொள்வார்கள். மாற்றாக வெற்று நம்பிக்கைகளை உருவாக்கி அது நடக்காது என்று தெரிய வரும் போது நொறுங்கிப் போய்விடுகிறார்கள். எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.


பாவனாவின் மருத்துவச் செலவுகளுக்கென நாளை ஒரு தொகையை அனுப்பி வைத்துவிடலாம். அநேகமாக ஒரு லட்ச ரூபாய் அனுப்ப முடியும் என்று தோன்றுகிறது. குமரேசன் உள்ளிட்டவர்களின் மருத்துவச் செலவுகளுக்கும் கல்வி உதவித் தொகைகளும் வரிசையாக அனுப்ப வேண்டியிருக்கிறது என்பதால் அதற்கு மேல் பாவனாவுக்கு கொடுப்பதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு. ஆனாலும் இந்த குழந்தையின் முகம் மனதைப் பிசைகிறது. எவ்வளவோ கனவுகள் வெண்டிலேட்டரின் வயர்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றன. அந்தப் புன்னகையை மீட்டெடுத்துவிட வேண்டும். வேறு யாராவது உதவ விரும்பினால் தெரியப்படுத்தவும். சேர்த்துக் கொடுக்கலாம்.