May 3, 2015

பயன்படுத்தப்பட்ட கணினிகள்

நேற்று ஒரு பள்ளியின் நிர்வாகத்தினரை சந்திக்க வேண்டியிருந்தது. ஸ்ரீ டி.எஸ். சாரதா வித்யாலயா பள்ளி. 1919 ஆம் ஆண்டில் திண்ணைப்பள்ளியாக தொடங்கப்பட்டது. பிறகு 1935 ஆம் ஆண்டிலேயே பள்ளிக்கு அரசு அங்கீகாரம் பெற்றுவிட்டார்கள். தொண்ணூறுகள் வரைக்கும் நடுநிலைப்பள்ளியாக மட்டுமே இருந்த வந்த பள்ளி இது. அதன் பிறகு உயர்நிலைப்பள்ளியாகவும் இரண்டாயிரத்துக்குப் பிறகு மேநிலைப்பள்ளியாகவும் தரமுயர்த்தியிருக்கிறார்கள். எட்டாம் வகுப்பு வரைக்கும் அரசு உதவி பெறுகிற பள்ளியாக இருக்கிறது. அதற்கு மேல் சுயநிதிப் பள்ளி. எட்டாம் வகுப்பு வரைக்கும் கட்டணம் இல்லை. அதற்கு மேல் வகுப்புகளில் படிக்கும் மாணவிகளிடம் வருடக் கட்டணம் மூன்றாயிரத்திற்குள்ளாகத்தான் வாங்குகிறார்கள். இருப்பினும் பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானவர்கள் ப்ளஸ் டூ எழுதிய இந்தப் பள்ளியில் இந்த ஆண்டும் வெறும் நாற்பத்தைந்து பேர்கள்தான் எழுதியிருக்கிறார்கள்.

இந்தப் பள்ளியைப் பற்றிச் சொன்னால் ஜி.எஸ். லட்சுமண ஐயரைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். கோபியின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தவர். காந்தியவாதி. இருந்த சொத்துக்களையெல்லாம் விற்று அரிஜன விடுதிக்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் செலவு செய்த தியாகி. தியாகி என்றால் உண்மையிலேயே தியாகி. அதனால்தான் பிழைக்கத் தெரியாதவர் என்கிறார்கள். தேர்தலில் நின்ற போது தயவு தாட்சண்யமேயில்லாமல் தோற்கடித்தார்கள். நம் மக்கள் அப்படித்தானே? இருந்தாலும் கடைசி வரைக்கும் பாடுபட்டு மூச்சை நிறுத்திக் கொண்டார். அவர் காலத்தில்தான் இந்தப் பள்ளி வெகு வேகமாக வளர்ச்சியடைந்தது. இப்பொழுது ஐயர் உயிரோடில்லை. அவரது மகன் இந்தப் பள்ளியில் கணினி ஆசிரியர். ஐயருக்கு இருந்த சொத்துக்கள் அப்படியே இருந்திருந்தால் இந்தக் கணினி ஆசிரியர் ஒரு ஜமீனாக இருந்திருப்பார். 

நிர்வாகத்தினரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். தங்கள் பள்ளியின் கணினி ஆய்வகத்தை தரம் உயர்த்த விரும்புகிறார்கள். தரமுயர்த்துதல் என்றால் பெரிய செலவு எதுவும் இல்லை. இப்பொழுது பத்து கணினிகள் வைத்திருக்கிறார்கள். அதில் பல வேலை செய்வதில்லை போலிருக்கிறது. இன்னும் ஐந்து கணினிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றார்கள். பயன்படுத்தப்பட்ட கணினிகளாக இருந்தாலும் பரவாயில்லை. ப்ளஸ் டூ படிக்கும் போதே ஒரு பெண் திருமணம் முடித்துவிட்டு தேர்வெழுத வர முடியாது என்று சொல்லிவிட்டாளாம். அப்படியான பெண்கள்தான் அதிகம். ப்ளஸ் டூ முடித்துவிட்டு மேற்படிப்புக்குச் செல்பவர்களைக் காட்டிலும் வேலைக்குச் செல்லும் பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களுக்கு Tally உள்ளிட்ட வேலைக்குத் தேவையான மென்பொருட்களைச் சொல்லித் தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே ஓரளவு நல்ல கணினிகள் அது லேப்டாப், டெஸ்க்டாப் என எதுவாக இருப்பினும் சரி. யாராவது கொடுத்தால் பிரயோஜனமாக இருக்கும்.

ஏற்கனவே குடிர் இன்ஃபோடெக் நிறுவனத்தினர் ஏழெட்டு மடிக்கணினிகளை அனுப்பியிருந்தார்கள். அவை ஒரே பள்ளிக்குக் கொடுக்காமல் சில பள்ளிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டன. சென்னையில் கணினிகளை மறுசுழற்சி செய்யும் திரு.பார்த்திபன் வழங்கிய கணினிகளும் இப்படித்தான் பள்ளிகளுக்குத் தரப்பட்டன. அவையெல்லாம் மிகுந்த உதவிகரமாக இருக்கின்றன. 

தலித்துகளும், கிராமப்புற மாணவிகளும் மிகுந்திருக்கும் சாரதா பெண்கள் பள்ளிக்கு இப்படி யாராவது உதவ விரும்பினால் தெரியப்படுத்தவும். 

கணினிகளை எப்படி இடம் மாற்றுவது என்பது குறித்து பிறகு முடிவு செய்து கொள்ளலாம்.

vaamanikandan@gmail.com