May 29, 2015

யாரையாச்சும் சைட் அடிக்கிறயா?

கல்லூரியில் சேர்ந்த புதிதில் திங்கட்கிழமையானால் வகுப்புக்குச் செல்லவே எரிச்சலாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் முதல் இரண்டு பிரிவேளைகள் தேர்வு எழுத வேண்டும். அந்தக் கருமாந்திரத்தின் முடிவுகளை மாதம் தவறாமல் வீட்டுக்கு அனுப்பித் தொலைத்துவிடுவர்கள். முக்கால்வாசி ஃபெயிலாகத்தான் இருக்கும். மீறி தேர்ச்சியடைந்திருந்தால் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் கருணை காட்டியிருக்கிறான் என்று அர்த்தம். ஆங்கிலம் வழியாக பொறியியல் பாடங்களைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள், கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரையிலும் நீதியரசர் குமாரசாமியின் வாரிசாக இருந்தது என்று எனக்கு பல பிரச்சினைகள் இருந்தன. அதனால் கல்லூரிக்குள் கால் வைப்பதை நினைத்தாலே வேப்பங்காயை நாக்குக்கடியில் வைத்துவிட்டது மாதிரிதான். 

அந்தச் சமயத்தில் விடுதியில் ராகிங்கும் அதிகம். ஒரு நாள் சீனியர் பாலகுமாரன் அழைத்து ‘காலேஜ் எப்படிடா இருக்கு?’ என்றார். அவரது அறையில் வைத்துத்தான் இந்தக் கேள்வியைக் கேட்டார்.

‘நல்லாருக்குங்கண்ணா’ என்றேன். 

‘யாரையாச்சும் சைட் அடிக்கிறயா?’ என்றார். இத்தகைய கேள்விகளுக்கு கவனமாக பதில் சொல்ல வேண்டும். 

அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இன்னொரு சீனியர் அழைத்து ‘உங்க க்ளாஸ்லேயே யாரு நல்ல ஃபிகர்?’ என்றார். யதார்த்தமாகக் கேட்கிறார் என்று நினைத்து ஒரு பெண்ணின் பெயரைச் சொன்னேன். உண்மையிலேயே அவள் அழகிதான். ஆனால் அந்த கிராதகன் பளார் என்று அறைவிட்டு ‘அவ என் ஆளு...எவனாச்சும் ரூட் போட்டீங்க...பொங்கல் வெச்சுடுவேன் பார்த்துக்க’ என்று கதாநாயகனின் தொனியில் எச்சரித்திருந்தார். கேள்வி கேட்காமலேயே இதைச் சொல்லியிருந்தால் எனக்கு அடியாவது மிச்சமாகியிருக்கும். கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே ஒவ்வொருவரிடமும் சென்று ‘அவ அவரோட ஆளு’ ‘அவ அவரோட ஆளு’ என்று வரிசையாகச் சொல்லிவிட்டு சோறு தின்னாமல் படுத்துத் தூங்கினேன். இப்பொழுது இரண்டாம் முறையும் அடி வாங்குவதற்கு நான் ஒன்றும் அவ்வளவு பெரிய முட்டாள் இல்லை.

‘ச்சே..ச்சே...எவளும் சரியில்லங்கண்ணா...ஒருத்தியையும் சைட் அடிக்கிறதில்ல’ என்று சொன்னேன். அவ்வளவுதான். அதுவரை நான் கேட்டிராத தத்துவங்களையெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார். ‘அந்த அண்ணனுக்கு பத்துக்கு மேல அரியர் தெரியுமா?’ என்று ஏற்கனவே சிலர் பாலகுமாரனைப் பற்றி பெருமையாகச் சொல்லியிருந்தார்கள். இவ்வளவு தத்துவம் பேசினால் பத்து என்ன? பதினாறு அரியர் கூட வைக்கலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவர் வாய்க்கு என் காதைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர் பேசப் பேச நானும் அவரிடம் புலம்பத் தொடங்கியிருந்தேன். பொறியியல் கல்லூரிக்கு வருவதற்கே பிடிக்கவில்லையென்றும் வாய்ப்புக் கிடைத்தால் வேறு ஏதாவது படிக்கச் சென்றுவிடலாம் என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் அதற்கும் அவரிடம் ஒரு உபாயம் இருந்தது.

‘லவ் பண்ணுறோமோ இல்லையோ யாராவது ஒரு பொண்ணை சைட் அடிக்கணும்டா....அவளுக்குத் தெரிய வேண்டியதில்லை..நம்ம மனசுக்குள்ள மட்டும் வெச்சுக்கணும்...அப்படி இருந்து பாரு...அவளைப் பார்க்கிறதுக்காகவே காலேஜ் போகத் தோணும்’ என்றார். அவர் சாதாரணமாகச் சொன்ன விஷயம்தான். ஆனால் அதில் அவ்வளவு உண்மை இருந்தது. அதன் பிறகு கல்லூரியில், வேலைக்குச் சென்ற இடங்களில் என்று ஆத்மார்த்தமாக சைட் அடித்த பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் நூற்றுக் கணக்கில் தேறும். ஒவ்வொரு நாளும் அந்தப் பெண்ணைப் பார்க்கப் போகிறோம் என்கிற நினைப்பே இழுத்துச் சென்றுவிடும். இன்று வரை அவரது வார்த்தைகளைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்று எழுதலாம்தான். ஆனால் மாலையில் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் ‘இப்பொழுது திருந்திவிட்டேன்’ என்று பொய் சொல்லித் தப்பித்துக் கொள்கிறேன்.

உண்மையில் இப்பொழுது வழியில்லை என்பதுதான் காரணம். இந்த நிறுவனத்தில் மொத்தமே இருநூறு பேர்கள்தான். அதில் முக்கால்வாசி ஆண்கள். இருக்கிற கொஞ்ச நஞ்ச பெண்களும் நாற்பதுகளைத் தொட்டுவிட்டார்கள். மாலை நேரமானால் அவர்களுடைய குழந்தைகள்- அவர்களைக் குழந்தைகள் என்று சொல்ல முடியாது- அநேகமாக பத்தாம் வகுப்பு படிப்பார்கள். அம்மாவை அழைத்துச் செல்வதற்காக வந்துவிடுகிறார்கள். ஜாதகத்தை எடுத்துப் போய் ஆட்டையம்பாளையம் ஜோசியகாரரிடம் காட்டலாம் என்றிருக்கிறேன். ஏதாவது பரிகாரம் சொன்னாலும் சொல்வார்.

இதைச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா?

பெரிய காரணம் எதுவும் இல்லை. இப்பொழுதெல்லாம் சாயந்திரமானால் எம்.ஜி.ரோடு வரை சென்று வருவது வழக்கமாகியிருக்கிறது. வெறும் நடைப் பயிற்சிதான் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்? என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். அங்கு நித்யாவைச் சந்தித்தேன். கல்லூரி காலத்தில் அவளை மிகப் பிடிக்கும். வெகு நாட்கள் அவளுக்காகவே கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தேன். என் அப்பாவின் பெயர் வாசு. அம்மாவின் பெயர் சுப்புலட்சுமி. அவர்களின் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களான Va, Su வைச் சேர்த்தால் அப்பாவின் பெயரான வாசு வருகிறதல்லவா? அதே மாதிரிதான் எனக்கு அமையும் என்கிற நினைப்பில் நித்யாவுக்கு நூல் விட்டுக் கொண்டிருந்தேன். Ma, Ni - இரண்டையும் சேர்த்தால் மணி. பேசத் தொடங்கிய இரண்டாவது நாளே அண்ணா என்று அழைத்து கத்தரித்துவிட்டுவிட்டாள் என்பது வேறு கதை. அவளைத்தான் நேற்று சந்தித்தேன். 

ஆட்டோகிராப் சேரன் அளவுக்கெல்லாம் கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை. அவள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்கா செல்கிறாள். பயணத்திற்கான துணிமணிகளை வாங்குவதற்காக அந்தச் சாலையில் சுற்றிக் கொண்டிருந்தாள். இப்பொழுதும் அண்ணா என்றே அழைத்தாள். அவ்வளவு பாதுகாப்பு. ‘அய்யோ நான் அப்படியெல்லாம் இல்லை’ என்று எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. தொலைந்து போகட்டும் என்று காபி வாங்கிக் கொடுத்துவிட்டு நம் பிரதாபங்களை அடுக்கிவிட வேண்டும் என்று நினைத்து ‘தமிழ் படிப்பியா?’ என்றேன். 

‘காலேஜ் டைம்ல படிச்சதுண்ணா’

‘விகடன் குமுதம்?’

‘ப்ப்ச்ச்’

‘வேற என்ன டைம்பாஸ்?’

‘ஃபோன்..வாட்ஸப்..’

‘ஃபேஸ்புக்லயாச்சும் இருக்கியா?’

‘இருந்தேன்...’

‘இப்போ இல்லையா?’

நான் தான் கேள்விகளைக் கேட்கிறேன். அவள் எதுவும் கேட்பதாகவே இல்லை. வெட்கத்தைவிட்டு ‘நான் ஒரு ப்லாக் எழுதிட்டு இருக்கேன்’ என்றேன். ஒரு காலத்தில் நாம் விரும்பிய பெண்ணிடம் பந்தா காட்டுவதில் சந்தோஷம்தான். ஆனால் அவள் அசரவே இல்லை.

‘ஓ...ஓகே’ என்றாள். எந்தச் சுவாரஸியமும் காட்டாமல்.

இதற்கு மேல் என்ன பேசுவது? 

‘சரி கிளம்புறேன்’

‘பைண்ணா...டேக் கேர்’ - ரொம்ப முக்கியம். போடி என்று நினைத்துக் கொண்டேன். வேறு என்ன செய்ய முடியும்? 

அவள் படிக்காவிட்டால் தொலைகிறாள். நீங்கள் படிக்கிறீர்கள் அல்லவா? அது போதும். தினமணியில் கிறிஸ்டி படம் பற்றி எழுதியிருக்கிறேன். அப்படியே அங்கும் ஒரு அட்டண்டன்ஸ் போட்டுவிடுங்கள். கர்த்தரும், அல்லாவும், கருப்பராயனும் தங்கள் ஆசிர்வாதங்களை நேரடியாக தலையிலேயே இறக்குவார்கள்.