புத்தகம் அச்சடிக்க எவ்வளவு செலவாகும் என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். குத்து மதிப்பாகச் சொன்னால் புத்தகத்தின் விலையில் நான்கில் ஒரு பங்கு. விசாரித்த வரையிலும் நூறு அல்லது நூற்றுப் பத்து பக்கமுள்ள புத்தகத்தை தரமான தாளில் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க வேண்டுமானால் அதிகபட்சமாக முப்பதாயிரம் ரூபாய் ஆகும். இதுதான் கணக்கு. உறுதிப்படுத்திக் கொள்வதற்காக யாவரும்.காம் பதிப்பகத்துக்காரர்களை அழைத்து மசால் தோசை 38 ரூபாய் புத்தகத்துக்கு எவ்வளவு செலவானது என்று கேட்டேன். முப்பதாயிரம் ரூபாய் என்றார்கள். அப்படியென்றால் ஒரு புத்தகத்தை நாற்பது ரூபாய்க்கு விற்றாலும் கூட பத்தாயிரம் ரூபாய் லாபம் கிடைக்க வேண்டுமல்லவா? அப்புறம் ஏன் நூறு ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று கேள்வி எழலாம்தான்.
கத்தியை வைத்து வெண்ணையைக் கிழிப்பது போல அப்படியே லாபம் கிடைப்பதில்லை.
மசால் தோசை புத்தகத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆயிரம் பிரதிகளைத் தலா 100 ரூபாய்க்கு விற்றால் மொத்த விற்பனைத் தொகை ஒரு லட்ச ரூபாய். நம்மால் விற்க முடிகிற அளவுக்குத் திராணி இருந்தால் லட்ச ரூபாய் கிடைக்கும். ஆனால் விற்பனை நெட்வொர்க் எதுவும் இல்லாத பதிப்பகம் என்றால் விற்பனை உரிமையை யாருக்காவது கொடுத்துவிடுவதுதான் நல்லது. விற்பனை உரிமைக்காரர்கள் விற்றுக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் விற்பனையில் முப்பத்தைந்திலிருந்து நாற்பது சதவீதம் வரைக்கும் விற்பனையாளருக்குக் கொடுத்துவிட வேண்டும். அப்படிப்பார்த்தால் ஒரு லட்ச ரூபாய்க்கு புத்தகங்களை விற்றால் முப்பத்தைந்தாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் ரூபாய் விற்பனையாளருக்கே போய்விடும். மிச்சமிருக்கும் அறுபதாயிரம் ரூபாய்தான் பதிப்பாளருக்கு நிற்கும். இதிலும் ஒரு நிபந்தனை - ஆயிரம் பிரதிகள் விற்க வேண்டும். அது லேசுப்பட்ட காரியமில்லை. முதல் வருடத்திலேயே அச்சடித்த புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துவிடும் என்றெல்லாம் சொல்ல முடியாது- இரண்டு வருடங்களும் ஆகலாம் ஐந்து வருடங்களும் ஆகலாம். கை நிறைய காசு வைத்திருக்கும் பதிப்பாளருக்கு பிரச்சினையில்லை. கடன் வாங்கி புத்தகம் போடும் தியாகிகள் மனைவியின் தாலியை அடகு வைத்துத்தான் கடனைக் கட்ட வேண்டும்.
நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் புத்தகம் முந்நூறு பிரதிகள் விற்கின்றன என்று வைத்துக் கொண்டால்- அதுவே பெரிய காரியம்தான் - வெறும் முப்பதாயிரம் ரூபாய்தான் விற்பனை வழியாகக் கிடைக்கும். அதில் நாற்பது சதவீதம் விற்பனையாளருக்குப் போய்விட்டால் அச்சகத்துக்குக் கொடுத்த காசு கூட கைக்கு வந்து சேராது என்பதுதான் நிதர்சனம். இது தமிழ் புத்தக விற்பனையின் மிகப்பெரிய பிரச்சினை. எப்படியும் படம் ஓடிவிடும் என்று பணம் போட்டுவிட்டு பிறகு தலையில் துண்டைப் போட்டுக் கொள்ளும் தயாரிப்பாளர் மாதிரிதான். அதனால்தான் ‘சார் புத்தகம் போடுங்க’ என்று கேட்டால் பதிப்பாளர்கள் தயங்குகிறார்கள். எழுத்தாளன் ஓரளவுக்காவது கவனம் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்றைய தகவல் தொழில்நுட்ப புரட்சியுகத்தில் அது ஒன்றும் பெரிய காரியமில்லை. ஆனால் அதற்கு வழி தெரியவில்லையென்றால்தான் ‘லம்ப்’ தொகைக்கு வழி தேட வேண்டியதாகிவிடுகிறது.
சிறிய பதிப்பகத்தினருக்குத்தான் விற்பனை உரிமை என்ற பெயரில் அடி விழுகிறது. பெரிய பதிப்பகங்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. அவர்களே பெரிய விற்பனை வலையமைவை வைத்திருப்பார்கள் என்பதால் நேரடியாக விற்றுவிடுவார்கள். விற்பனை உரிமை என்று விற்பனையாளருக்குக் கொடுக்க வேண்டிய தொகை மிச்சம்தான். ஆனால் அலுவலக செட்டப், பணியாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவற்றையெல்லாம் கணக்குப் போட்டால் அந்தச் செலவு எல்லாம் வாசகர்கள் தலையில்தான் வந்து இறங்கும். ரோட்டுக்கடை தோசை நாற்பது ரூபாய் என்றால் ரெஸ்டாரண்ட்டில் நூற்று பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள். எதுக்குய்யா இங்கு மட்டும் இவ்வளவு அதிகம் என்று கேட்டால்- ஏ.ஸியைக் கையை நீட்டுவார்கள். வெள்ளையும் சுள்ளையுமான சர்வரைக் கை நீட்டுவார்கள். மெதுவாக ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலை கவனிக்கச் சொல்வார்கள். இந்த ‘எக்ஸ்ட்ரா ஐட்டங்களுக்கான’ செலவை எல்லாம் தோசை விலையில் சேர்த்து நம் தலையில் கட்டுகிறார்கள் அல்லவா? அப்படித்தான்.
பொதுவாகவே ஒரு பதிப்பகம் நான்கு புத்தகங்களை வெளியிட்டால் ஒன்று விற்கும். மூன்று விற்காது. அது பதிப்பாளருக்கும் தெரியும். இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் நிர்பந்தங்களின் காரணமாக வெளியிடுகிறார்கள். மூன்று புத்தகங்கள் வழியாகும் ஏற்படும் நட்டத்தை விற்பனையாகும் ஒரு புத்தகத்தின் வழியாக ஓரளவாவது சரிக் கட்ட வேண்டும் என்ற அழுத்தம் சேர்ந்துவிடுகிறது. அது மட்டுமில்லை- பெரிய பதிப்பகமாக இருந்தால் நிறைய புத்தகங்கள் வெளியிடுகிறார்கள். அதில் விற்பனையாகாத புத்தகங்களை சேகரித்து வைத்து அதற்கான பராமரிப்புச் செலவுகளையும் செய்ய வேண்டும். இதற்கிடையில் அவ்வப்போது பல்வேறு ஊர்களில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன என்கிற ஆசையில் ஆள் ஒருவனுக்கு போக்குவரத்து செலவு, உணவுச் செலவு எல்லாம் கொடுத்து பார்சலாக ஒரு பெட்டி நிறைய புத்தகங்களை அனுப்பி வைத்தால் முக்கால் பெட்டி விற்பனையாகாமல் திரும்பி வரும். இப்படி பதிப்பாளர்களுக்கும் நிறைய பிரச்சினைகள் உண்டுதான். இவை போன்ற காரணங்களால்தான் உற்பத்தி விலையை விடவும் புத்தக விலையை நான்கு மடங்காக அதிகரித்து விற்கிறார்கள். அவர்கள் எப்படியோ விற்றுக் கொள்ளட்டும். அவை அவர்களது தொழில் சூட்சமங்கள்.
ஆனால் புத்தகம் அச்சடித்துத் தருகிறேன் என்று காசு வாங்குகிற ஆட்களிடம்தான் உஷாராக இருக்க வேண்டும். ஒரு புத்தகம் அச்சடிக்க எவ்வளவு செலவாகும் என்பதற்கு ஒரு குட்டி சூத்திரம் இருக்கிறது.
முன்பெல்லாம் கையெழுத்துப் பிரதிகளில் எழுதி அனுப்புவார்கள். அதைக் டைப் செய்துக் கொடுக்கும் DTPக்காரர்களுக்கு ஒரு தொகையைக் கொடுக்க வேண்டும். இப்பொழுது அந்தச் செலவு இல்லை. முக்கால்வாசி எழுத்தாளர்கள் கணினியில் தாங்களே தட்டச்சு செய்து அனுப்பிவிடுகிறார்கள் என்பதால் வெறும் லே-அவுட் வடிவமைப்பு மட்டும்தான். நூறு பக்கமுள்ள ஒரு புத்தகத்தின் வடிவமைப்புக்கு அதிகபட்சமாக இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பார்கள். அடுத்தது அட்டை வடிவமைப்பு. அதற்கும் பெரிய செலவு இல்லை. ஆயிரம் ரூபாய். தரமான பதிப்பகங்கள் பிழை திருத்தம் செய்பவருக்கு ஒரு புத்தகத்துக்கு ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கிறார்கள். ஆனால் பல பதிப்பகங்கள் இந்த வேலையை எழுத்தாளர் தலையில் கட்டிவிட்டு அதோடு விட்டுவிடுவார்கள் என்பதால் இந்தச் செலவும் இருப்பதில்லை. இதையெல்லாம் கூட்டிப் பார்த்தால் நான்காயிரம் ஆகிவிட்டதா? அதற்கு பிறகு நேரடியாக அச்சு செலவுதான். நல்ல தரமான காகிதத்தில் டெமி சைஸில் நூறு பக்கங்களை உடைய புத்தகத்தை அச்சடிக்க ஆயிரம் பிரதிகளுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் ஆகும். எவ்வளவுதான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் மொத்தச் செலவு முப்பதாயிரத்தைத் தாண்டாது.
ஆனால் எவ்வளவு வாங்குகிறார்கள்?
எண்பது பக்கக் கவிதைத் தொகுப்பு அதுவும் ஐந்நூறு பிரதி அடிக்க நாற்பதாயிரம் ரூபாய். அதுவே எண்பது பக்க புத்தகம் என்றால் எழுபதாயிரம் ரூபாய். இதெல்லாம் எனக்குத் தெரிந்த விலைப்பட்டியல். வித்தியாசங்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கின்றன. அப்படியே காசு கொடுத்து அச்சடித்தாலும் விற்றுக் கொடுக்கவெல்லாம் மாட்டார்கள். நாம்தான் விற்றுக் கொள்ள வேண்டும். ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல...நான் நடிகனாகியே தீர வேண்டும்’ என்கிற ஜே.கே.ரித்தீஷ் வகையறா எழுத்தாளர்களுக்காக இதைச் சொல்லவில்லை. காசு இருக்கிறது. பதிப்பாளர்களுக்குக் கொடுக்கிறார்கள். அவர்கள் இஷ்டம். ஆனால் ஒரு புத்தகம் போட்டால் சுஜாதா, சுந்தர ராமசாமி ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையில் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசைக் கொண்டு போய் வெட்டியாக பதிப்பாளர்களின் காலடியில் கொட்டும் பதிப்புலகம் தெரியாத இளம்பிஞ்சுகள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளலாம்.
ஆமென்!
5 எதிர் சப்தங்கள்:
comment box mindum thirakka pattu vittatha!. thelivaana vilakkam sir
என்னங்க கமென்ட் பாக்ச நீங்களும் Open பண்ணிட்டீங்க? சூப்பரே..
உங்க பதிவப் படிச்சிட்டு...
நாங்களும் கருத்து தந்தால்...
அத நீங்களும் படிச்சிலாம் பாக்குறீங்க...
ரொம்ப நல்லவர் நீங்க!!!
அப்பப்ப யாரோ வந்து அண்டாக்க கசம் அபூக்கா குசம் ன்னு சொல்லிடாறாங்க.எல்லாம் அந்த அலிபாபா வுக்கே வெளிச்சம்.
You said the publication cost, as said by your publisher is Rs.30 Thousand. But actual cost would be much lesser. I thought you might have referred a Printer and arrived at a actual cost of Paper, Board, Printing and binding charges, I am sure it should be much lesser than what you have told as per your Publisher
Post a Comment