May 17, 2015

கணையாழி- ஒரு குட்டி போட்டி

கணையாழி இதழ் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. ஏகப்பட்ட ஜாம்பவான்கள் எழுதிய பத்திரிக்கை. ஜூன் மாத இதழ் ஐம்பதாவது ஆண்டுவிழாவின் தொடக்கம். ஐம்பது வருடங்களாக ஒரு சிறுபத்திரிக்கை- இலக்கியப்பத்திரிக்கை வெளிவந்து கொண்டிருப்பது தமிழில் சாதாரணக் காரியமில்லை. சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். கணையாழிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

கணையாழியின் சார்பாக ஒவ்வொரு மாதமும் வாசகர் வட்டக் கூட்டத்தை நடத்துகிறார்கள். யாராவதொரு சிறப்பு விருந்தினரை அழைத்து வந்து ஒரு தலைப்பில் பேசச் செய்கிறார்கள். அந்த சிறப்பு விருந்தினருக்கு இன்னொரு வேலையும் இருக்கிறது. அந்த மாதக் கணையாழி இதழில் வெளிவந்த கவிதை, கட்டுரை, சிறுகதை ஆகிய பிரிவுகளிலிருந்து தலா ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும். அதை எழுதியவர்களுக்கு வாசகர் வட்டக் கூட்டத்தில் ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்குகிறார்கள். 

இந்த மாதக் கூட்டம் நேற்று (மே’16) சென்னையில் நடந்திருக்கிறது. சிறப்பு விருந்தினராக கல்கி இதழின் உதவியாசிரியரும் கவிஞருமான அமிர்தம் சூர்யா கலந்து கொண்டிருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்துக் கொடுத்த படைப்புகளில் சிவப்புப் பட்டைக் கோடு கட்டுரையும் ஒன்று. கட்டுரைகளின் பிரிவில் ஆயிரம் ரூபாய். அழைத்துச் சொன்னார்கள். இப்பொழுது எழுத்து வழியாக வரும் தொகை எதுவாக இருந்தாலும் நிசப்தம் அறக்கட்டளையின் பெயரில்தான் காசோலை தரச் சொல்லிக் கேட்கிறேன். எழுதி லட்சக்கணக்கில் சம்பாதிப்பதில்லை என்றாலும் பத்திரிக்கைகளில் எழுதுவது, புத்தக விற்பனை உள்ளிட்டவற்றில் கிடைக்கிற தொகை- சொற்பமாக இருந்தாலும்- அறக்கட்டளைக்கு கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். 

அறக்கட்டளையின் பெயரில் காசோலை கேட்டபோது தயங்கினார்கள். ஏதாவது காரணம் இருக்கக் கூடும். அதனால் ஒன்றும் பிரச்சினையில்லை. கணையாழிக்கு ஐம்பதாவது ஆண்டுப் பரிசாக அதை வேறு வகையில் திருப்பிக் கொடுத்துவிடலாம். கணையாழியின் ஓராண்டுச் சந்தா இருநூற்று இருபது ரூபாய். இந்த ஆயிரம் ரூபாயை ஐந்து பேருக்கான சந்தாவாக மாற்றிவிடலாம். அவர்கள் கொடுக்கும் தொகையை அப்படியே திருப்பிக் கொடுத்தால் அதை எப்படி பரிசு என்று சொல்ல முடியும்? அதனால் என்னுடைய பணம் இரண்டாயிரத்து முந்நூறு ரூபாயைக் கொடுத்து பதினைந்து பேருக்கான சந்தாவைக் கட்டிவிடலாம்.

பதினைந்து பேர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது? அதற்குத்தான் இந்த குட்டி போட்டி. இதைப் போட்டி என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு விளையாட்டு. தங்களுக்குத் தெரிந்த இலக்கியப் பத்திரிக்கை அல்லது சிறு பத்திரிக்கை பற்றிய குறிப்பை எழுதி அனுப்ப வேண்டும். அவ்வளவுதான்.

மணல்வீடு, அடவி, கொம்பு, கணையாழி, பூவுலகின் நண்பர்கள், புது எழுத்து, உயிர் எழுத்து, உயிர்மை, காலச்சுவடு என்று எந்தப் பத்திரிக்கை பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். விகடன், குமுதம், குங்குமம் உள்ளிட்ட பெரும் பத்திரிக்கைகள் வேண்டாம். அனுப்பப்படுகிற குறிப்பானது பத்திரிக்கை குறித்தான ஒரு சுருக்கமான அறிமுகமாக இருக்கட்டும். வாசிக்கிறவர்களுக்கு அந்த இதழை வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஊட்டும்படியான குறிப்பாக இருந்தால் நல்லது. அந்த இதழின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணுடன் சேர்த்து அனுப்புங்கள். எழுதி அனுப்பப்படுகிற அறிமுகக் குறிப்புகளை அந்தந்த இதழ்களின் முகவரி மற்றும் தொடர்பு எண்ணுடன் நிசப்தத்தில் பிரசுரம் செய்யலாம். இலக்கிய மற்றும் சிறுபத்திரிக்கைகள் பற்றிய அறிமுகம் இல்லாத புதியவர்களுக்கு தமிழில் வரக் கூடிய சிறுபத்திரிக்கை அல்லது இலக்கியப் பத்திரிக்கை குறித்தான பரவலான அறிமுகம் கிடைப்பதாக இருக்கும்.  

இந்தப் போட்டிக்கென கால அளவு என்று எதுவும் இல்லை. பதினைந்து பத்திரிக்கைகள் பற்றிய குறிப்புகள் வந்தவுடன் போட்டியை முடித்துக் கொள்வதாக அடுத்த பதிவு வரும் வரை அனுப்பலாம். பதினைந்து பேருக்கும் ஓராண்டுக்கு கணையாழி இதழ்கள் அனுப்பப்பட்டுவிடும்.

குறிப்புகளை மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். vaamanikandan@gmail.com

நன்றி.