காலையில் வந்தவுடன் அலுவலகத்தில் தலையைக் காட்டிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். எங்கள் அலுவலகத்திலிருந்து உயர்நீதிமன்றம் வெகு பக்கம்தான். கப்பன் பூங்காவுக்குள்தான் நீதிமன்றம் இருக்கிறது. நடந்து சென்றால் கூட பத்து நிமிடங்களில் சென்றுவிடலாம். ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்க விரும்பவில்லை என்பதால் பைக். உள்ளே நுழையும் போது பத்தரை மணி இருக்கும். நீதிமன்றத்தில் இரண்டு பெரிய வாயிற்கதவுகள் உண்டு. முதல் கதவில் நுழைவதற்கு பெரிய கெடுபிடிகள் எதுவும் இல்லை. அதுவும் என்னுடைய வண்டி கர்நாடகப் பதிவு எண் என்பதால் யாரும் தடுக்கவில்லை. உள்ளூர்க்காரனாக இருக்கும் என்று நினைத்திருப்பார்கள். இப்பொழுது கோடைகால விடுமுறை என்பதால் நீதிமன்ற வளாகத்தில் வழக்கமான கூட்டம் இல்லை. முக்கியமான கட்சிக்காரர்களும் யாரும் இல்லை. சில உள்ளூர் ஆட்கள் மட்டும் ஜெயலலிதாவின் படங்களை வைத்தபடி சுற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களை விடவும் மீடியாக்காரர்கள்தான் வெகு அதிகமாக இருந்தார்கள். இத்தனை சேனல்களா? புதுப்புது பெயர்கள். ஊடகத்துறையைச் சேர்ந்த நிறைய அழகான பெண்களால் உயர்நீதிமன்ற வளாகம் நிரம்பியிருந்தது.
கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தபடி சுற்றிக் கொண்டிருந்தேன். பேசியவரைக்கும் எல்லோரிடமும் ஒரே நம்பிக்கைதான் இருந்தது- ஜெயலலிதாவுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும் என்று சொல்லி வைத்தது போலச் சொன்னார்கள். இதுவரை மைக்கேல் குன்ஹாவின் தீர்ப்பை யாருமே ரத்து செய்ததில்லை என்றும் குமாரசாமி எப்பவுமே கீழ் நீதிமன்ற உத்தரவுகளைத்தான் அமுல்படுத்தியிருக்கிறார் என்பதால் எப்படியும் அம்மாவுக்கு சிக்கல்தான் என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்- ஒருவர் மட்டும்தான்.
அவரோடு இன்னொருவர் சேர்ந்து கொண்டார். திமுக அனுதாபியா என்று தெரியவில்லை. “நேற்று கட்சித் தலைமை தங்களது கட்சிக்காரர்களை நோக்கி ‘அடக்கி வாசியுங்க’ என்று சொன்னதை வைத்து முடிவு செய்ய வேண்டாமா? நிச்சயமாக ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும்" என்றார். எப்படிச் சொல்கிறார் என்று குழப்பமாக இருந்தது. அவரேதான் விளக்கினார். “ஆதரவா தீர்ப்பு வரும்ன்னு தெரிஞ்சதாலதான் இப்படி சொல்லி மக்களிடம் ஒருவித நம்பிக்கையை ஊட்டுகிறார்கள்..இதையே ஏன் சிறைச்சாலையில் இருந்தபோது சொல்லவில்லை” என்றார். இதற்கு மேல் அவரிடம் பேசினால் நம்மைச் சிக்க வைத்துவிடுவார் போலிருந்தது. நகர்ந்துவிட்டேன்.

பதினோரு மணிக்கு ஆளாளுக்கு உலாத்திக் கொண்டிருந்தார்கள். வெகு அமைதியாகத்தான் இருந்தது. அடுத்த ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் எல்லோரும் இரண்டாவது வாயிற்கதவை நோக்கி ஓடினார்கள். அங்கேயிருந்து ‘விடுதலை’ ‘அம்மா வாழ்க’ என்று யாரோ கத்திக் கொண்டிருந்தார்கள். திமுதிமுவென்று கூட்டம் சேர்ந்தது. கன்னட போலீஸ்காரர்கள் நல்லவர்கள். ‘ப்ளீஸ்...நகருங்க’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு சீக்கிரமாகத் தீர்ப்பு வந்திருக்குமா என்று சந்தேகமாகத்தான் இருந்தது. யாராவது புரளியைக் கிளப்பிவிட்டிருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். தந்தித் தொலைக்காட்சி நிருபர் சென்னைக்கு ஃபோன் செய்து ‘தீர்ப்பு வந்துவிட்டது....உடனடியாக கனெக்ட் செய்யுங்கள்’ என்றார். அதையேதான் கிட்டத்தட்ட அத்தனை நிருபர்களும் செய்து கொண்டிருந்தார்கள்.
நீதிமன்றத்திற்குள்ளிருந்து இரண்டாவது வாயிற்கதவை நோக்கி வக்கீல்கள் உற்சாகத்தோடு வந்தார்கள். ஒரு வழக்கறிஞரைத் தூக்கி தோள் மீது வைத்திருந்தார்கள். அவர் யாரென்று தெரியவில்லை. அவரது முகம் அவ்வளவு பிரகாசமாக இருந்தது. வெற்றிக்களிப்பு அது. அவரது கையில் ஜெ.வின் படத்தைக் கொடுத்தார்கள். அவர் அதைப் பெருமையோடு ஊடகவியலாளர்களிடம் காட்டினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. அவர்களோடு கர்நாடக மாநில அதிமுக தலைவர் புகழேந்தி மற்றும் சிலரும் இருந்தார்கள். தீர்ப்பு ஆதரவாக வந்திருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது. அதிமுகக்காரர்கள் ஆளாளுக்கு டிவி கேமிராவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். ‘அம்மான்னா சும்மா இல்லடா’ என்று ஒருவர் சத்தமாகப் பாடிக் கொண்டிருந்தார். அவரை நோக்கி கேமிராக்காரர்கள் ஓடினார்கள். வக்கீல்கள் ஆங்காங்கே பேட்டியளிக்கத் தொடங்கினார்கள். ஜெயலலிதா இன்னும் சில நாட்களில் முதலமைச்சர் ஆவார் என்றும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
செய்தியாளர்களைத் தவிர அங்கிருந்த அத்தனை பேரும் அதிமுகக் காரர்கள் என்பதால் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது என்றுதான் சொல்ல வேண்டும். மூச்சு வாங்கப் பேசினார்கள். குதித்தார்கள். பாடினார்கள். இனிப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. எந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று ஒரு வழக்கறிஞரிடம் கேட்டேன். அவருக்கு என் கேள்வி புரியவில்லை போலிருக்கிறது அல்லது இவனுக்கு என்ன தெரியும் என்று நினைத்திருக்கலாம். ‘சட்டத்தின் அடிப்படையில்தான்’ என்றார். கடுப்பாகிவிட்டது. நாளைக்கு தினத்தந்தியில் படித்துக் கொள்கிறேன் என்று நினைத்துக் கொண்டு நகர்ந்துவிட்டேன்.
இன்னும் மூன்று மாதங்களில் குமாரசாமி ஓய்வு பெறப் போகிறார். இத்தகைய தீர்ப்புகள் எதிர்கால வழக்குகளில் reference ஆக எடுத்துக் கொள்ளப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. நாடு முழுவதும் கவனிக்கப்பட்ட வழக்கு இது என்பதெல்லாம் அவருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.
எப்படியிருந்தாலும் அவரது இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலில் மிக முக்கியமான தாக்கங்களைக் உருவாக்கும் என்று மட்டும் தெரிகிறது. மக்கள் முதல்வர் மீண்டும் தமிழக முதல்வர் ஆகப் போகிறார். தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டு காலம் இருக்கிறது. இதுவரை சுணங்கிக் கிடந்த நிர்வாகம் சற்றேனும் சுறுசுறுப்படையும் என நம்பலாம். அடுத்த தேர்தலில் திமுக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க எத்தனிக்கும். பா.ஜகவுக்கு அதிமுக கணிசமான இடங்களை வழங்கும் எனத் தோன்றுகிறது. இனி என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறது.
மணி பதினொன்றரை ஆகியிருந்தது- திங்கட்கிழமை அதுவுமாக ஒழுங்காக அலுவலகத்துக்குச் சென்றுவிடுவதுதான் நல்லது. கப்பன் பூங்கா எம்.ஜி சாலையுடன் இணையும் இடத்தில் ஒருவழிப்பாதை. ஆனால் சீக்கிரம் அலுவலகத்துக்குச் சென்றுவிடலாம். சிக்கினால் தண்டம் அழ வேண்டும். ஒருவேளை வெள்ளைச்சட்டை போலீஸ்காரர்களிடம் சிக்கிக் கொண்டால் ‘என்ன சார் நீங்க? இந்தச் சின்னத் தப்புக்கு கூட விடுதலை தரமாட்டீர்களா?’ என்று கேட்டால் விட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கையிருந்தது. நல்லவேளையாக யாரும் பிடிக்கவில்லை. வியர்க்க விறுவிறுக்க வந்து இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்.