May 29, 2015

யாரையாச்சும் சைட் அடிக்கிறயா?

கல்லூரியில் சேர்ந்த புதிதில் திங்கட்கிழமையானால் வகுப்புக்குச் செல்லவே எரிச்சலாக இருக்கும். ஒவ்வொரு வாரமும் முதல் இரண்டு பிரிவேளைகள் தேர்வு எழுத வேண்டும். அந்தக் கருமாந்திரத்தின் முடிவுகளை மாதம் தவறாமல் வீட்டுக்கு அனுப்பித் தொலைத்துவிடுவர்கள். முக்கால்வாசி ஃபெயிலாகத்தான் இருக்கும். மீறி தேர்ச்சியடைந்திருந்தால் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் கருணை காட்டியிருக்கிறான் என்று அர்த்தம். ஆங்கிலம் வழியாக பொறியியல் பாடங்களைப் புரிந்து கொள்வதில் சிரமங்கள், கணக்குப் பாடத்தைப் பொறுத்தவரையிலும் நீதியரசர் குமாரசாமியின் வாரிசாக இருந்தது என்று எனக்கு பல பிரச்சினைகள் இருந்தன. அதனால் கல்லூரிக்குள் கால் வைப்பதை நினைத்தாலே வேப்பங்காயை நாக்குக்கடியில் வைத்துவிட்டது மாதிரிதான். 

அந்தச் சமயத்தில் விடுதியில் ராகிங்கும் அதிகம். ஒரு நாள் சீனியர் பாலகுமாரன் அழைத்து ‘காலேஜ் எப்படிடா இருக்கு?’ என்றார். அவரது அறையில் வைத்துத்தான் இந்தக் கேள்வியைக் கேட்டார்.

‘நல்லாருக்குங்கண்ணா’ என்றேன். 

‘யாரையாச்சும் சைட் அடிக்கிறயா?’ என்றார். இத்தகைய கேள்விகளுக்கு கவனமாக பதில் சொல்ல வேண்டும். 

அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இன்னொரு சீனியர் அழைத்து ‘உங்க க்ளாஸ்லேயே யாரு நல்ல ஃபிகர்?’ என்றார். யதார்த்தமாகக் கேட்கிறார் என்று நினைத்து ஒரு பெண்ணின் பெயரைச் சொன்னேன். உண்மையிலேயே அவள் அழகிதான். ஆனால் அந்த கிராதகன் பளார் என்று அறைவிட்டு ‘அவ என் ஆளு...எவனாச்சும் ரூட் போட்டீங்க...பொங்கல் வெச்சுடுவேன் பார்த்துக்க’ என்று கதாநாயகனின் தொனியில் எச்சரித்திருந்தார். கேள்வி கேட்காமலேயே இதைச் சொல்லியிருந்தால் எனக்கு அடியாவது மிச்சமாகியிருக்கும். கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே ஒவ்வொருவரிடமும் சென்று ‘அவ அவரோட ஆளு’ ‘அவ அவரோட ஆளு’ என்று வரிசையாகச் சொல்லிவிட்டு சோறு தின்னாமல் படுத்துத் தூங்கினேன். இப்பொழுது இரண்டாம் முறையும் அடி வாங்குவதற்கு நான் ஒன்றும் அவ்வளவு பெரிய முட்டாள் இல்லை.

‘ச்சே..ச்சே...எவளும் சரியில்லங்கண்ணா...ஒருத்தியையும் சைட் அடிக்கிறதில்ல’ என்று சொன்னேன். அவ்வளவுதான். அதுவரை நான் கேட்டிராத தத்துவங்களையெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார். ‘அந்த அண்ணனுக்கு பத்துக்கு மேல அரியர் தெரியுமா?’ என்று ஏற்கனவே சிலர் பாலகுமாரனைப் பற்றி பெருமையாகச் சொல்லியிருந்தார்கள். இவ்வளவு தத்துவம் பேசினால் பத்து என்ன? பதினாறு அரியர் கூட வைக்கலாம் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு அவர் வாய்க்கு என் காதைக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர் பேசப் பேச நானும் அவரிடம் புலம்பத் தொடங்கியிருந்தேன். பொறியியல் கல்லூரிக்கு வருவதற்கே பிடிக்கவில்லையென்றும் வாய்ப்புக் கிடைத்தால் வேறு ஏதாவது படிக்கச் சென்றுவிடலாம் என்றும் சொல்லியிருந்தேன். ஆனால் அதற்கும் அவரிடம் ஒரு உபாயம் இருந்தது.

‘லவ் பண்ணுறோமோ இல்லையோ யாராவது ஒரு பொண்ணை சைட் அடிக்கணும்டா....அவளுக்குத் தெரிய வேண்டியதில்லை..நம்ம மனசுக்குள்ள மட்டும் வெச்சுக்கணும்...அப்படி இருந்து பாரு...அவளைப் பார்க்கிறதுக்காகவே காலேஜ் போகத் தோணும்’ என்றார். அவர் சாதாரணமாகச் சொன்ன விஷயம்தான். ஆனால் அதில் அவ்வளவு உண்மை இருந்தது. அதன் பிறகு கல்லூரியில், வேலைக்குச் சென்ற இடங்களில் என்று ஆத்மார்த்தமாக சைட் அடித்த பெண்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் நூற்றுக் கணக்கில் தேறும். ஒவ்வொரு நாளும் அந்தப் பெண்ணைப் பார்க்கப் போகிறோம் என்கிற நினைப்பே இழுத்துச் சென்றுவிடும். இன்று வரை அவரது வார்த்தைகளைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்று எழுதலாம்தான். ஆனால் மாலையில் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருப்பதால் ‘இப்பொழுது திருந்திவிட்டேன்’ என்று பொய் சொல்லித் தப்பித்துக் கொள்கிறேன்.

உண்மையில் இப்பொழுது வழியில்லை என்பதுதான் காரணம். இந்த நிறுவனத்தில் மொத்தமே இருநூறு பேர்கள்தான். அதில் முக்கால்வாசி ஆண்கள். இருக்கிற கொஞ்ச நஞ்ச பெண்களும் நாற்பதுகளைத் தொட்டுவிட்டார்கள். மாலை நேரமானால் அவர்களுடைய குழந்தைகள்- அவர்களைக் குழந்தைகள் என்று சொல்ல முடியாது- அநேகமாக பத்தாம் வகுப்பு படிப்பார்கள். அம்மாவை அழைத்துச் செல்வதற்காக வந்துவிடுகிறார்கள். ஜாதகத்தை எடுத்துப் போய் ஆட்டையம்பாளையம் ஜோசியகாரரிடம் காட்டலாம் என்றிருக்கிறேன். ஏதாவது பரிகாரம் சொன்னாலும் சொல்வார்.

இதைச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா?

பெரிய காரணம் எதுவும் இல்லை. இப்பொழுதெல்லாம் சாயந்திரமானால் எம்.ஜி.ரோடு வரை சென்று வருவது வழக்கமாகியிருக்கிறது. வெறும் நடைப் பயிற்சிதான் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்? என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். அங்கு நித்யாவைச் சந்தித்தேன். கல்லூரி காலத்தில் அவளை மிகப் பிடிக்கும். வெகு நாட்கள் அவளுக்காகவே கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தேன். என் அப்பாவின் பெயர் வாசு. அம்மாவின் பெயர் சுப்புலட்சுமி. அவர்களின் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களான Va, Su வைச் சேர்த்தால் அப்பாவின் பெயரான வாசு வருகிறதல்லவா? அதே மாதிரிதான் எனக்கு அமையும் என்கிற நினைப்பில் நித்யாவுக்கு நூல் விட்டுக் கொண்டிருந்தேன். Ma, Ni - இரண்டையும் சேர்த்தால் மணி. பேசத் தொடங்கிய இரண்டாவது நாளே அண்ணா என்று அழைத்து கத்தரித்துவிட்டுவிட்டாள் என்பது வேறு கதை. அவளைத்தான் நேற்று சந்தித்தேன். 

ஆட்டோகிராப் சேரன் அளவுக்கெல்லாம் கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை. அவள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்கா செல்கிறாள். பயணத்திற்கான துணிமணிகளை வாங்குவதற்காக அந்தச் சாலையில் சுற்றிக் கொண்டிருந்தாள். இப்பொழுதும் அண்ணா என்றே அழைத்தாள். அவ்வளவு பாதுகாப்பு. ‘அய்யோ நான் அப்படியெல்லாம் இல்லை’ என்று எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. தொலைந்து போகட்டும் என்று காபி வாங்கிக் கொடுத்துவிட்டு நம் பிரதாபங்களை அடுக்கிவிட வேண்டும் என்று நினைத்து ‘தமிழ் படிப்பியா?’ என்றேன். 

‘காலேஜ் டைம்ல படிச்சதுண்ணா’

‘விகடன் குமுதம்?’

‘ப்ப்ச்ச்’

‘வேற என்ன டைம்பாஸ்?’

‘ஃபோன்..வாட்ஸப்..’

‘ஃபேஸ்புக்லயாச்சும் இருக்கியா?’

‘இருந்தேன்...’

‘இப்போ இல்லையா?’

நான் தான் கேள்விகளைக் கேட்கிறேன். அவள் எதுவும் கேட்பதாகவே இல்லை. வெட்கத்தைவிட்டு ‘நான் ஒரு ப்லாக் எழுதிட்டு இருக்கேன்’ என்றேன். ஒரு காலத்தில் நாம் விரும்பிய பெண்ணிடம் பந்தா காட்டுவதில் சந்தோஷம்தான். ஆனால் அவள் அசரவே இல்லை.

‘ஓ...ஓகே’ என்றாள். எந்தச் சுவாரஸியமும் காட்டாமல்.

இதற்கு மேல் என்ன பேசுவது? 

‘சரி கிளம்புறேன்’

‘பைண்ணா...டேக் கேர்’ - ரொம்ப முக்கியம். போடி என்று நினைத்துக் கொண்டேன். வேறு என்ன செய்ய முடியும்? 

அவள் படிக்காவிட்டால் தொலைகிறாள். நீங்கள் படிக்கிறீர்கள் அல்லவா? அது போதும். தினமணியில் கிறிஸ்டி படம் பற்றி எழுதியிருக்கிறேன். அப்படியே அங்கும் ஒரு அட்டண்டன்ஸ் போட்டுவிடுங்கள். கர்த்தரும், அல்லாவும், கருப்பராயனும் தங்கள் ஆசிர்வாதங்களை நேரடியாக தலையிலேயே இறக்குவார்கள். 

May 28, 2015

திருப்தி

பாவனாவுக்கு இரண்டு லட்சத்திற்கான காசோலையை இன்று அனுப்பி வைத்தாகிவிட்டது. நேற்றிரவிலிருந்து நிறையப் பேர் பணம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். சார்லஸ் ஒரு லட்சம் ரூபாய் அனுப்பி வைத்திருப்பதாகவும் அதையும் சேர்த்துக் கொள்ளச் சொல்லி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அநேகமாக இன்று அல்லது நாளை பணம் வந்து சேர்ந்துவிடும். அவர் அனுப்பினால் ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்றுதான் அனுப்புகிறார். எதுவுமே சொல்லாமல் ஒரு முறை எழுபதாயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருந்தார். பரோடா வங்கியிலிருந்து வந்திருந்த எஸ்.எம்.எஸ்ஸைப் பார்த்தவுடன் சில வினாடிகள் நடுங்கிப் போனேன் என்பதுதான் உண்மை. அதற்கு முன்பாக ஐம்பதாயிரம் ரூபாய். இப்பொழுது ஒரு லட்சம். இன்னமும் வேறு எந்தத் தொகையாவது அனுப்பியிருக்கிறாரா என்று தெரியவில்லை. இதற்கெல்லாம் பெரிய மனம் வெண்டும். அதே போல அழகேசன் ஐம்பதாயிரம் அனுப்பியிருக்கிறார். இவர்களைத் தவிர ஒன்றிரண்டு பத்தாயிரம் ரூபாய்களும் இன்னமும் சில ஐந்தாயிரம் ரூபாய்களும் வந்திருக்கின்றன. அடுத்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக இருந்தாலும் மூன்று மணி நேரமாவது யோசிப்பேன். இவர்களால் மட்டும் எப்படி நினைத்தவுடன் கொடுக்க முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது.


இன்று காலை கூரியர் மூலமாக இரண்டு லட்ச ரூபாய்க்கான காசோலை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் கூட தொகையை சேர்த்து அனுப்பலாம்தான் ஆனால் ஏற்கனவே குறிப்பிட்டது போல நிறையப் பேர்கள் உதவிக்காகக் காத்திருக்கிறார்கள். முன்பு ஒரு முறை திரு.குமரேசன் என்பவர் பற்றி எழுதியிருந்தேன். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர். பத்து வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற பேருந்து வேலை நிறுத்தத்தின் போது தமிழகம் முழுவதும் ஸ்டியரிங் பிடிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் அரசுப் பேருந்துகளை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அப்படி ஓட்டியவர்கள் சர்வசாதாரணமாக விபத்துகளையும் நிகழ்த்தினார்கள். அப்படியொரு விபத்தில் குமரசேனின் இரண்டு கால்களையும் நசுக்கித் தள்ளிவிட்டார்கள். அதிலிருந்து இன்று வரையிலும் குமரேசனுக்கு படுக்கைதான். அவரது மகன் படிப்பையெல்லாம் விட்டுவிட்டு குடும்ப பாரத்தைச் சமாளித்துக் கொண்டிருக்கிறார். இனி மாற்றுக் கால்கள் பொருத்தவிருக்கிறார்கள்.

குமரேசனின் குடும்பத்தார் கொடுத்திருந்த தகவல்களையெல்லாம் சரி பார்ப்பதற்காக திரு.சுந்தர் உதவினார். சுந்தர் சென்னையில் வருமானவரித்துறை அலுவலர். கடந்த வாரத்தில் குமரேசனின் வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு விவரங்களை அனுப்பியிருந்தார். குமரேசனுக்கு மாற்றுக் கால்கள் பொருத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அந்தத் தொகையை முழுமையாகவே புரட்டிக் கொடுத்துவிடலாம்தான். ஆனால் இருபத்தைந்தாயிரம் ரூபாய் மட்டும் தருவதாகச் சொல்லியிருக்கிறேன். மீதி இருபதாயிரம் ரூபாய் வரைக்கும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்திலும் மிச்சத்தை அவருடைய மகன் தயார் செய்வதாகவும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பச் சூழலில் இந்தத் தொகையைச் சமாளிப்பது கூட கஷ்டம்தான். ஆனால் இத்தகைய காரியங்களில் உதவி பெறுபவர்கள் அவர்களால் முடிந்த அளவுக்கு பணத்தை புரட்டட்டும். இப்படிச் சொல்வதில் பெரிய சித்தாந்தம் எதுவும் இல்லை. அவர்கள் சக்திக்கு ஏற்ப தேவையான பணத்தில் ஒரு பகுதியேனும் தயார் செய்துவிட்டால் நாம் கொடுக்க வேண்டிய தொகை குறைந்துவிடும். அப்படி நாம் மிச்சம் பிடிக்கிற தொகையை வேறு யாருக்காவது கொடுத்துவிடலாம். ஒருவேளை அவர்களால் எந்தவிதத்திலும் பணத்தை ஏற்பாடு செய்யமுடியவில்லை என்கிற சூழல் வருமானால் மட்டும் இன்னும் சற்று கூடுதலான தொகையைக் கொடுக்கலாம். 

மேற்சொன்ன காரணத்தினால்தான் பாவனாவின் தந்தைக்கு வழங்கும் தொகையை இரண்டு லட்சம் ரூபாயோடு நிறுத்திக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. இன்னமும் கூட அவர்களுக்கு பணம் தேவைப்படும்தான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இந்தச் சிந்தனையைத் தாண்டி வேறு முடிவுகளை எடுக்க முடியவில்லை. ஒருவேளை என்னுடைய எண்ணம் தவறானதாகக் கூட இருக்கலாம். மனித மனம்தானே? இது போன்ற சூழல்களில் முடிவெடுப்பதில் சற்று திணறித்தான் போகிறது. 

பாவனா குடும்பத்தின் தேவையை கவனத்துக்கு கொண்டு வந்த ராஜேஷ், ரமணி பிரபா தேவி மற்றும் கிஷோர்.கே.சுவாமிக்கு நன்றி.

நிசப்தம் அறக்கட்டளை வழியாக இதுவரையிலும் செய்யப்பட்ட உதவிகள் என்று கணக்குப் பார்த்தால் பத்து லட்ச ரூபாயைத் தாண்டியிருப்போம். நிறையப் பேருக்கு உதவியிருக்கிறோம். மனதுக்குத் திருப்தி தரக் கூடிய காரியம் இது. நிசப்தம் என்பது பாலம் மட்டும்தான். பாலத்துக்கு அந்தப் பக்கமாக நின்று எந்தத் தயக்கமுமில்லாமல் பணம் அனுப்பிக் கொண்டிருப்பவர்கள், ஒவ்வொரு செயலையும் ஊக்குவித்து பாலத்தின் தூண்களாக நிற்பவர்கள் என அத்தனை பேரும் பக்கபலமாக இருக்கிறார்கள். வருமானவரித்துறை அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், வங்கி சார்ந்த காரியங்கள் என்று எந்த இடத்திலும் வேலை செய்து கொடுப்பதற்கு நல்லவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். குடும்பத்திலிருந்து எந்தத் தடையும் இல்லை. சொல்லிக் கொண்டே போகலாம். இதெல்லாம் எப்படி சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது என்று அவ்வப்போது நம்பவே முடிவதில்லை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஏதோவொரு நம்பிக்கைதான் இந்தக் காரியங்களையெல்லாம் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கைதான் அத்தனைக்கும் அடிப்படை. ஆனால் அந்த நம்பிக்கை சாதாரணமாக உருவாகிவிடுவதில்லை என்பதையும் புரிந்து வைத்திருக்கிறேன்.  இந்த வரிகளை தட்டச்சு செய்யும் போது மனம் கலங்கித்தான் போகிறது. நெகிழ்ச்சியில் துளி கண்ணீரும் திரண்டு நிற்கிறது.

இப்படியே செய்து கொண்டிருப்போம்- எவ்வளவு காலம் முடியுமோ அதுவரைக்கும். இன்னமும் எவ்வளவு விரிவுபடுத்த முடியுமோ அவ்வளவு விரிவுபடுத்தலாம். துடைக்கக் கூட மறந்துவிட்டு அழுது கொண்டிருக்கும் எளியவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்காகச் ஒற்றை விரலை நீட்டுவோம். நாம் பூமியில் பிறப்பெடுத்ததை அர்த்தப்படுத்துவதற்கு அதைவிடச் சிறந்த வழி வேறு இருப்பதாகத் தெரியவில்லை. 

ஒரே வினாடி

பால்யத்தில் ஒரு நாள் பஸ் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தோம். அதுவொன்றும் சிக்கலான விளையாட்டு இல்லை. சரடு ஒன்றை எடுத்து இரு நுனிகளையும் ஒரு முடிச்சால் இணைத்து அதற்குள் நான்கைந்து பேர் வரிசையாக நின்று கொள்ள வேண்டும். முன்னாடி நின்று கொண்டிருப்பவன் ஓட்டுநர். பின்னாடி நிற்பவன் நடத்துநர். பேருந்து வீதி வீதியாக ஓடும். ஓட்டுநர் வாயால் ஒலியெழுப்பியபடியே ஓட்டுவான். நடத்துநர் ஆங்காங்கே பயணிகளை ஏற்றியும் இறக்கியும் சிகரெட் அட்டைகளை பயணச்சீட்டாகக் கொடுப்பான். அவ்வளவுதான் விளையாட்டு. அப்படியான ஒரு நாளில் நடத்துநரான எனக்கும் ஓட்டுநரான சரவணனுக்கும் ஏதோ பிரச்சினை வந்துவிட்டது. மனஸ்தாபம். குறுக்குப்புத்தி வேலை செய்யத் தொடங்கியது. அவன் மிக வேகமாக ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென்று நின்றுவிட்டேன். சரடு அறுந்துவிடும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் அறுந்துவிட்டது. அவன் கீழே விழவும் மற்றவர்கள் அவன் மீது விழுந்து அமுக்கினார்கள். வெற்றிப் புன்னைகையுடன் நின்று கொண்டிருந்தேன். அந்தச் சந்தோஷம் சில வினாடிகளுக்கு மட்டும்தான். சரவணன் எழுந்திருக்கவேயில்லை. என்னையுமறியாமல் உடல் பதறத் தொடங்கியது. மற்றவர்கள் அவனை எழுப்ப முயன்ற போது கவ்விய பயத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்- அவனுடைய நெற்றி உடைந்து ரத்தம் பெருக்கெடுத்திருந்தது. அந்த அதிர்ச்சியில் அவன் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான். மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். என்னால்தான் நடந்தது என்று யாரும் சொல்லவில்லை. உண்மையில் யாருக்குமே காரணம் தெரியாது. ஆனால் அவனது காயத்துக்கு முழுப்பொறுப்பும் நான் தான் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

பெரும்பாலான சமயங்களில் நாம் செய்யும் காரியங்களினால் நேரப் போகும் விளைவுகளை எதிர்பார்ப்பது இல்லை. நாம் ஒன்று நினைக்க இன்னொன்று நடந்துவிடுகிறது. சரவணன் விவகாரத்திலும் அதுதான் நடந்தது. கயிறு அவன் வயிற்றை இறுக்கும். அது அவனுக்கு வலியுண்டாக்கும் என்றுதான் எதிர்பார்த்தேன். ரஸாபாஸம் ஆகிவிட்டது. சண்டை வரும் போதும் சரி அல்லது வேறு பிரச்சினைகளின் போதும் சரி- நம்முடைய சிறு எதிர்ப்பைத்தான் காட்டுகிறோம். ஆனால் அந்தச் சிறு எதிர்ப்புதான் பல சமயங்களில் மிகப்பெரிய சிக்கல்களைக் கொண்டு வந்துவிட்டு விடுகிறது. அவை எந்தக் காலத்திலும் நிவர்த்தி செய்யவே முடியாத சிக்கல்களாக அமைந்துவிடும் போதுதான் கடந்த காலத்தைத் திரும்பிப்பார்க்கவே மனம் கூசுகிறது. 


அப்படியான சிக்கலில் ஒரு பையன் சிக்கிக் கொள்கிறான். பதின்ம வயதில் இருக்கும் பொடியன் அவன். அவனைச் சுற்றி நகரும் கதைதான் Little Accidents படம். அமெரிக்காவின் ஒரு சிறிய நகரம் அது. அந்த ஊரில் ஒரு நிலக்கரிச் சுரங்கம் இருக்கிறது. அந்த ஊரில் நிறையப் பேருக்கு அந்தச் சுரங்கம்தான் வாழ்வாதாரம். நிலக்கரிச் சுரங்கத்தில்தான் நம் பொடியனின் அப்பாவும் வேலை செய்கிறார். சுரங்கத்தில் ஒரு விபத்து நிகழ்கிறது. பத்து பணியாளர்கள் இறந்துவிடுகிறார்கள். அதில் பொடியனின் அப்பாவும் ஒருவர். அம்மாவின் தலையில் பாரம் இறங்குகிறது. பொடியனையும் அவனுடைய தம்பியையும் பாதுகாக்கும் பொறுப்பு அது. பொடியன் விவரமானவன்தான் ஆனால் தம்பி சற்று மனவளர்ச்சி குன்றிய குழந்தை. இரண்டு மகன்களையும் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறாள். 

அதே ஊரில் இன்னொரு குடும்பமும் இருக்கிறது. அந்த சுரங்கத்தில் அதிகாரியாகப் பணியாற்றுபவரின் குடும்பம் அது. அவர்களுக்கும் ஒரு மகன் இருக்கிறான். அவனை ஜே.டி என்கிறார்கள். நம் பொடியனின் வயதையொத்தவன். அவர்களது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் கண்ணாடியை யாரோ உடைத்துவிட்டுப் போகிறார்கள். தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்கள் யாராவது விபத்து நடப்பதற்கு இந்த அதிகாரிதான் காரணம் என்று கண்ணாடியை உடைத்திருக்கக் கூடும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். நாமும் அப்படித்தான் நினைக்கிறோம். அதிகாரியின் மகனுக்கு நிறைய நண்பர்கள் உண்டு. ஆனால் அவர்கள் பொடியனை தங்கள் குழாமோடு சேர்த்துக் கொள்வதில்லை. பொடியன் வீட்டிலிருந்து பியர் பாட்டில்களையெல்லாம் எடுத்துச் சென்று கொடுக்கிறான். அப்படியாவது தம்மைச் சேர்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறான். ஆனாலும் ரிஸல்ட் பூஜ்ஜியம்தான்.

கதையில் இரண்டு குடும்பங்கள் ஆகிவிட்டதல்லவா? இவர்கள் இரண்டு குடும்பம் தவிர இன்னொரு முக்கியமான பாத்திரமும் உண்டு. விபத்தில் தப்பித்த அமோஸ். அவன் மட்டும்தான் விபத்தில் தப்பித்த ஒரேயொருவன். அவனோடு இருந்த அத்தனை பேரும் இறந்து போய்விடுகிறார்கள். விபத்தைப் பற்றி அதிகாரிகளும் மற்றவர்களும் விசாரிக்கும் போது வாயைத் திறப்பதேயில்லை. தான் எதையாவது உளறி வைத்தால் அது தன்னோடு இறந்து போனவர்களை அவமானப்படுத்திவிடுவது போலாகிவிடும் என்றோ அல்லது ஒருவேளை சுரங்கத்தை மூடிவிட்டால் மற்றவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றோ பயப்படுகிறான். அமோஸுக்கு குடும்பம் எதுவும் இல்லை. வயதான தந்தை மட்டும் இருக்கிறார். மற்றபடி திருமணமாகாத தனிக்கட்டை.

இவர்களை வைத்து ஒரு முக்கோணத்தை வரைகிறார் இயக்குநர். இந்த முக்கோணத்தை வைத்துக் கொண்டு படத்தை அட்டகாசமாக்கியிருக்கிறார் சாரா. அவர்தான் இயக்குநர் - அவருக்கு இது முதல் படம். 

படத்தின் தொடக்கத்தில் சுரங்க விபத்து குறித்தான குறிப்புகள் வரும் போது அதுதான் படத்தின் முக்கியமான திருப்பமாக இருக்கும் என்று யோசிக்கச் செய்கிறார்கள். ஆனால் படத்தின் முக்கியத் திருப்பம் என்பது சுரங்க விபத்து இல்லை. படத்தில் இடம்பெற்றிருக்கும் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் ஏதாவதொருவிதத்தில் மன ரீதியிலான அழுத்தத்தை உருவாக்குகிறது என்கிற வகையில் அந்த முக்கியமான நிகழ்வு. அவ்வளவுதான். 

அப்படியென்றால் எது முக்கியமான திருப்பம்? பியர் பாட்டிலைக் கொண்டு வந்து நண்பர்களுக்கு பொடியன் கொடுக்கிறான் அல்லவா? அந்த தினம்தான். அப்பொழுது பொடியனின் தம்பியும் வீட்டிலிருந்து கிளம்பி கூடவே வருகிறான். இவனிடம் பியரை வாங்கிக் குடிக்கும் சக நண்பர்கள் ஒரு பெண்ணைத் தேடிச் செல்வதாகச் சொல்லிவிட்டு பொடியனை மட்டும் கழட்டி விட்டுச் செல்கிறார்கள். பொடியன் பயங்கரக் கடுப்பில் இருக்கிறான். எல்லோரும் சென்றுவிட்ட பிறகு சில கணங்களில் அந்த அதிகாரியின் மகன் மட்டும் திரும்ப அதே இடத்துக்குத்தான் வருகிறான். அவன் என்னவோ பியர் பாட்டிலைத் தேடித்தான் வருகிறான். ஆனால் பொடியனுக்கும் அவனுக்கும் வாய்த் தகராறு முற்றிவிடுகிறது. ‘உங்கள் அப்பாவினால்தான் சுரங்க விபத்து நடந்தது’ என்றும் அதை மறுத்தும் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இந்த இடத்தில்தான் அந்த எதிர்பாராத விபத்து நிகழ்கிறது. பொடியன் ஒரு கல்லை எடுத்து வீச அதிகாரியின் மகன் பேச்சு மூச்சில்லாமல் விழுந்துவிடுகிறான். சரவணன் மாதிரி இல்லாமல் உயிரையும் விட்டுவிடுகிறான். பொடியன் சமயோசிதமாகச் செயல்கபடுகிறான். மரங்கள் அடர்ந்த அந்தக் காட்டுப்பகுதிக்குள் பிணத்தை மறைத்துவிட்டு தம்பியை அழைத்துச் செல்கிறான். தம்பியின் வாயை அடைக்க வேண்டுமல்லவா? சாக்லேட் வாங்கித் தருவதாகக் கெஞ்சியும், மிரட்டியும் சமாளிக்கிறான்.

அதே சமயம் அந்த அதிகாரியின் குடும்பத்தினர் போலீஸாரின் உதவியுடன் மகனைக் காணவில்லை என்றுதான் தேடத் தொடங்குகிறார்கள். ஆனால் அவனைப் பற்றிய எந்தத் தடயமும் இல்லாதது அவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. இதில் இன்னொரு பிரச்சினையும் அந்த அதிகாரிக்கு வந்து சேர்கிறது. நடந்த சுரங்க விபத்தில் தொழிற்சாலை அவனை பகடைக் காயாக்குகிறது. அவனுக்கு அலுவலகத்திலும் பிரச்சினை; மனைவியின் துக்கமும் பிரச்சினை; தன் மகன் இல்லாததும் வேதனை. நொந்து போகிறான். இவன் அலுவலகத்தின் பிரச்சினைகளோடு போராடத் தொடங்கும் போது அவனுடைய மனைவி தன்னுடைய துக்கங்களுக்கு வடிகால் இல்லாமல் தவித்துப் போகிறாள். சுரங்க விபத்தில் உயிர் தப்பித்த அமோஸ் அவளை பைபிள் வகுப்புக்கு அழைக்கிறான். அவன் இன்னமும் மருத்துவ சிகிச்சையில்தான் இருக்கிறான். கை, கால்கள் சரியாக இயங்குவதில்லை. அவனும் ஆறுதல் தேடும் மனநிலையில்தான் பைபிள் வகுப்புகளுக்குச் செல்கிறான். ஆக, இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அமோஸூக்கும் அதிகாரியின் மனைவிக்குமிடையே காதல் அரும்புகிறது. அது காமத்தோடு மலர்கிறது. அதை வெறும் காமம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. சக மனித மனத்திடம் இன்னொரு மனித மனம் தேடும் ஆறுதல்.

இது ஒரு தனியான ட்ராக்கில் சென்று கொண்டிருக்கும் போது தான் செய்த கொலையை மனதுக்குள் புதைத்துக் கொண்ட பொடியன் அதிகாரியின் வீட்டில் பகுதி நேர வேலைகளைச் செய்கிறான். அவனாக விருப்பப்பட்டுத்தான் அந்த வீட்டுக்கு வருகிறான். தோட்டத்தை சீராக்குவதுதான் அவனுடைய முக்கியமான வேலை. அடிக்கடி வந்து போகிறவன் அந்தக் குடும்பத்தின் அன்பையும் வலியையும் புரிந்து கொள்ளத் தொடங்குகிறான். அவனுடைய குற்றவுணர்ச்சி அழுத்துகிறது. அவனுடைய தம்பிக்கும் அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் தங்களது பிரச்சினையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பாத்திரங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த உலகில் யாருக்குத்தான் பிரச்சினையில்லை? ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு பிரச்சினைகள். ஆனால் இந்தப் பாத்திரங்களுக்கு ஒரு சம்பவம்தான் பிரச்சினை. அது உருவாக்கும் அழுத்தங்கள்தான் சிக்கல். இந்தப் பிரச்சினைக்கான வடிகால் எதுவும் இருக்கிறதா என்று தேடலில் படம் முடிகிறது. 

மிகச் சாதாரணமாகத்தான் படத்தை பார்க்கத் துவங்கினேன். ஆனால் இது சாதாரணமாக பார்க்கக் கூடிய படமில்லை. ஒரு மிகப்பெரிய அழுத்தம்- படத்தின் அத்தனை பாத்திரங்களின் மீதும் அந்த அழுத்தம்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த அழுத்தம்தான் அத்தனை பேருடைய வாழ்க்கைப் போக்கையும் நிர்ணயிக்கிறது. அதை மனிதர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள், சூழல்களுடன் எப்படி தோற்றுப் போகிறார்கள் என்பதையெல்லாம் தத்ரூபமாக்கியிருக்கிறார்கள். இவ்வளவு வலிமையான கருவை எடுத்துக் கொண்டு அதைக் கதையாகவும் திரைக்கதையாகவும் நடிப்பாகவும் மாற்றுவது சாதாரணக் காரியமாகத் தெரியவில்லை. ஆனால் அதை இந்தப் படத்தில் சாதித்திருக்கிறார்கள். I love it!

May 27, 2015

ரோஹின்ஜா இசுலாமிய இன அழிப்பு

மியான்மரில் வெட்டிக் கொல்லப்படும் இசுலாமியர்களின் படங்களை யதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. நடுக்கத்தில் குடல் வெளியே வந்துவிடும் போலிருக்கிறது. பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற எந்தப் பாகுபாடுமில்லாமல் வீச்சரிவாளையும் கொடுவாளையும் வீசியிருக்கிறார்கள். பாலம் பாலமாக வெட்டு வாங்கிச் செத்துக் கிடக்கிறார்கள். இவ்வளவு ஆழமான வெட்டுக்காயங்களை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. இணையத்தில் தேடத் தொடங்கிய போது எரித்துக் கொல்லப்பட்ட பெண்கள், தலை துண்டிக்கப்பட்ட குழந்தைகள் என்று விதவிதமான படங்கள் வந்து கொண்டேயிருந்தன. செய்தித்தாள்களை ஒழுங்காகத்தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் ரோஹின்ஜா என்ற பெயரை சமீபத்தில் எந்தச் செய்தித்தாளிலும் பார்த்ததாக ஞாபகமில்லை. ரோஹின்ஜா- இதுதான் பர்மிய இசுலாமியர்களின் பெயர்.

ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது எப்படி சித்தூரையும் ஓசூரையும் தாண்டி பிற மாநிலங்களில் அந்தச் செய்தி எந்தவிதமான கவனத்தையும் பெறவில்லையோ அதே நிலைமைதான் பர்மிய இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்படும் இந்தக் கொலைவெறித்தாக்குதல்கள் பற்றிய எந்தத் தகவல்களும் வெளி வருவதில்லை. இணையத்தில் தேடினாலும் கூட பெரும்பாலான செய்திகள் மேம்போக்காகத்தான் இருக்கின்றன. நிழற்படங்களைத் தேடிப் பார்த்தால் சில புத்தப் பிக்குகள் 'No Rohingya' என்று கைகளில் எழுதி அதை கேமிராவுக்கு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். புத்த பிக்குகள் பற்றித்தான் நமக்குத் தெரியுமே! ஈழத்திலேயே பார்த்திருக்கிறோம். மியன்மாரிலும் அப்படித்தான் - பர்மிய நாட்டவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கக் கூடாது என்று அலையும் முரட்டுக் கும்பலை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். Ethninc Cleansing.


இந்தக் கும்பல் நடத்தும் தேடுதலின் குறி ரோஹின்ஜா இசுலாமியர்கள். இந்த இசுலாமியர்கள் பர்மாவின் பூர்வகுடிகள் இல்லை. முன்னொரு காலத்தில் - குறிப்பாக ஆங்கிலேய ஆட்சியின் போது வங்காளத்திலிருந்து பர்மாவுக்கு குடிபெயர்ந்தவர்கள். வந்தேறிகள். அவர்களை தேசத்தைவிட்டு துரத்தியடிக்க வேண்டும் என்று மியன்மார் தேசியவாதிகள் உறுதியாக இருக்கிறார்கள். அதனால்தான் இந்த வெட்டுக்களும் எரிப்புகளும் கொலைகளும். 

சமீபத்திய கலவரத்தின் மூலகாரணம் என்று தேடினால் இசுலாமியர்களை நோக்கித்தான் கை நீட்டுகிறார்கள். மூன்று இசுலாமிய ஆண்கள் சேர்ந்து பர்மியப் பெண்ணொருத்தியை மானபங்கப்படுத்தியிருக்கிறார்கள். அதன் பிறகு பத்து இசுலாமியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். விவகாரம் பெரிதாகி வெறி கிளம்பியிருக்கிறது. இந்த மூன்று பொறுக்கிகள் செய்த பிரச்சினை நீறு பூத்துக் கொண்டிருந்த நெருப்பை ஊதி விட்டிருக்கிறது. லட்சக்கணக்கில் இருக்கும் இந்த இனம் சின்னாபின்னப்படுத்தப்படுகிறது. துரத்தப்படும் இந்த இசுலாமியர்களை எந்த தேசமும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதுதான் கொடுமை. ஆஸ்திரேலியாவுக்கும் மலேசியாவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் பயணப்படும் இவர்கள் முடிந்தவரை விரட்டியடிக்கிறார்கள். படகுகளின் கொள்ளளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக் கொண்டு நாடுவிட்டு நாடு மாறும் போது கடலுக்குள்ளேயே ஜலசமாதியடைகிறார்கள். உள்நாட்டில் இருந்தால் வெட்டு விழுகிறது. வெளிநாட்டுக்குச் சென்றால் படகு கடலில் விழுகிறது.

ரோஹின்ஜா இசுலாமியர்களின் பிரச்சினைகளை இப்பொழுதுதான் மெதுவாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அதிலும் மதம்தான் பிரதானம். ஆதரவாகப் பேசுபவர்கள் ‘அய்யோ இசுலாமியர்களை அடித்தால் கேட்க நாதியில்லையா’ என்கிறார்கள். எதிராகப் பேசுபவர்கள் ‘இசுலாமியர்கள்தான் காரணம்’ என்கிறார்கள். ஆனால் இந்த விவகாரம் விவாதிக்கப்படும் போது மதத்தை ஒதுக்கி வைத்துவிடவெல்லாம் முடியாது. இசுலாமியர்கள் என்றாலே பிரச்சினைக்குரியவர்கள் என்கிற முத்திரை குத்தப்பட்ட சூழல்தான் உலகம் எங்கும் இருக்கிறது. இசுலாமியர்களின் தவறுகள் பிரதானப்படுத்தப்பட்டு பூதாகரமாக்கும் ஊடகங்கள்தான் அதே இசுலாமியர்கள் மீதான வன்முறைகள் குறித்து மெளனம் காக்கின்றன. சர்வதேச பத்திரிக்கைகளில் வெகு சில பத்திரிக்கைகள் மட்டுமே பர்மிய விவகாரத்தை சற்று வெளிப்படையாக எழுதிக் கொண்டிருக்கின்றன. அவை அங்கு நடந்து கொண்டிருப்பது இன அழிப்புதான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றன. அப்படியிருந்தும் கண் முன்னால் நடக்கும் இந்த இன அழிப்பைப் பற்றி ஏன் பெரியதாக எந்தச் சலனமும் இல்லை? 

அந்த இசுலாமியர்கள் தவறு செய்பவர்களாகவே இருக்கட்டும். ஆனால் ஒரு கும்பலிடம் கத்தியையும் தீக்குச்சியையும் கொடுத்து அவர்களை அழித்து வீசச் சொல்லும் அக்கிரமத்தை தட்டிக் கேட்க வேண்டும் அல்லவா? குழந்தைகளும் முதியவர்களும் ரத்தம் சொட்டச் சரிந்து விழுவதை எந்த புனித நூலின் அடிப்படையில் நியாயப்படுத்த முடியும்? இசுலாமியன் என்றாலே செத்துத் தொலையட்டும் என்கிற மனநிலையை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா என்று சந்தேகமாக இருக்கிறது. இசுலாம் என்கிற மதத்தில் பிறந்ததற்காகவே பெண்களும் அப்பாவிகளும் சாகட்டும் என்று வேடிக்கை பார்க்கும் மனநிலை வெகு வேகமாக வாய்த்துக் கொண்டிருக்கிறது. 

மதம், சாதி என்று ஏதாவதொரு அடிப்படைவாதத்தைத் தூக்கிப் பிடிக்கிற சர்வாதிகார மனநிலை எல்லாக் காலத்திலும் எல்லா தேசத்திலும் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் அதையும் தாண்டி மனிதமும் அன்பும் ஏதாவதொரு வகையில் தங்களை உயிர்ப்பித்துக் கொண்டேயிருக்கின்றன.

இசுலாமியர்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் என்கிற பாகுபாடெல்லாம் தேவையில்லை. எந்த தேசமாக இருந்தாலும் அரசியலையும் பொருளாதாரத்தையும் அறியாத அப்பாவிகள் நசுக்கப்படும் போது துளியாவது நம் குரலை உயர்த்த வேண்டும். அடுத்தவேளை சோற்றைத் தவிர வேறு எந்த நினைப்புமில்லாமல் பாடுபட்டுக் கொண்டிருக்கும் எளிய மனிதன் வெட்டி வீசப்படும் போது சிறு முனகலாவது நம்மிடமிருந்து வெளியேறியாக வேண்டும். எல்லோரிடமிருந்தும் எழும்பும் இந்தக் குரலும் முனகலும்தான் வல்லரசுகளையும் அதிகாரப் பீடங்களையும் அசைத்துப் பார்க்கும். அப்படி அதிகாரப் பீடங்கள் திரும்பிப் பார்க்கும் போது வெகு காலம் ஆகியிருக்கக் கூடும். ஒருவேளை அந்த இனமே கூட அப்பொழுது அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் எல்லாக் காலத்திலும் மனிதத்திற்காக எழும்பும் குரல்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன என்று அறிவிக்க வேண்டியது கட்டாயம். அதுதான் மனித குலத்தின் ஒரே நம்பிக்கைக் கீற்று. அது மட்டும்தான்!

அதீத நம்பிக்கைகள்

பாவனாவுக்கு ஏழு வயதாகிறது. ‘Ependymoma’ என்றழைக்கப்படும் மூளைப் புற்று நோய் அவளுக்கு. அவளுடைய தந்தை ராஜ்குமார் நேற்று பேசினார். ஏகப்பட்ட செலவைச் செய்துவிட்டார்கள். இன்னமும் ஏழு முதல் எட்டு லட்சம் ரூபாய் வரைக்கும் தேவைப்படும் போலிருக்கிறது. கீமோதெரபி, ரேடியோதெரபி என்று என்னென்னவோ முயற்சித்துப் பார்த்துவிட்டார்கள். ஒன்றும் பிரையோஜனப்படாமல் மாற்று வழியாகக் கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்து கட்டியை நீக்கியிருக்கிறார்கள். அதோடு சேர்த்து தொற்று ஏற்பட்டிருந்த தலைப்பகுதியை வெட்டி எடுத்துவிட்டார்களாம். இனி அந்த இடத்தில் செயற்கையான பாகத்தை பொருத்த வேண்டும். ஏழு வயது பிஞ்சுக்கு இதெல்லாம் மிகப் பெரிய தொந்தரவு.


இன்னமும் முழுமையாக குணமடைந்துவிட்டாள் என்று சொல்ல முடியாது. உணவு எதையும் சாப்பிட முடியாத நிலையில் இருப்பதால் மாதம் இருமுறை ‘gastrostomy’ எனப்படும் முறையில் இரைப்பையைத் திறந்து உணவு கொடுக்கிறார்களாம். கண்களைக் கூடத் திறக்கச் சக்தியற்றுக் கிடப்பதாகச் சொன்னார். 

வீட்டுக்குச் சென்றாலும் மருத்துவமனையின் செட்டப்பைச் செய்ய வேண்டும், தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து போக வேண்டும் என என பெரிய செலவு காத்திருக்கிறது.

நிசப்தம் பற்றி  ராஜ்குமாரிடம் அதீதமாகச் சொல்லியிருக்கிறார்கள். ‘எப்படியும் ஐந்து லட்சம் புரட்டிக் கொடுத்துவிடுவார்’ என்று சொன்னதை அவரும் நம்பியிருக்கிறார். எந்த அடிப்படையில் இப்படி தேவையற்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்கள் என்று புரியவில்லை. இன்று காலையில் ராஜ்குமாரை அழைத்து ஒரு லட்ச ரூபாய்தான் சாத்தியம்ம் என்று சொன்னவுடன் அவருக்கு வார்த்தைகளே வரவில்லை. கைவசம் இருப்பது ஐந்தேகால் லட்சம். ஆனால் அனைத்தையும் கொடுத்துவிட முடியாது. இன்னமும் ஏகப்பட்ட பேருக்கு பணம் அனுப்ப வேண்டியிருக்கிறது.

அறுவை சிகிச்சை முடிந்த தினத்திலிருந்து இரண்டொரு நாட்களுக்கு முன்பு வரையில் ஐ.சி.யூவில் இருந்திருக்கிறாள். அடுத்த வாரத்தில் வீட்டுக்குச் சென்றுவிடுவாள் போலிருக்கிறது. பணம் கட்டச் சொல்லியிருக்கிறார்கள். ராஜ்குமார் தனியார் நிறுவனமொன்றில் வடிவமைப்பாளராக இருக்கிறார். பெரிய வருமானம் இல்லாத வேலை.  இது போன்ற வியாதிகள் வந்து முடக்கும் போது என்னதான் சம்பளம் இருந்தாலும் திணறிப் போய்விடத்தான் வேண்டும். ‘இதுவரை கடன் வாங்கிச் சமாளித்துவிட்டேன்’ என்று சொன்ன போது நம்மிடமிருந்து பெரும் தொகையை எதிர்பார்க்கிறார் என்று நினைக்கவில்லை.

இரண்டொரு நண்பர்கள் எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். மிகுந்த சிரமத்தில்தான் இருக்கிறார்கள். மொத்த சேமிப்புகளும் தீர்ந்து வாய்ப்பிருக்கிற அத்தனை கடன்களையும் வாங்கிவிட்டார். ‘இந்தக் குழந்தைக்கு என்னால் என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்துவிடுவேன்’ என்று சொன்னார்.


ராஜ்குமாரிடம் நிசப்தம் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தவரிடம் ‘அஞ்சு லட்சம் கொடுப்பதெல்லாம் சாத்தியமே இல்லைங்க...எந்த நம்பிக்கையில் சொன்னீங்க’ என்று கேட்டால் அவரிடம் சரியான பதில் இல்லை. ஏற்கனவே நொடிந்து போய் இருப்பவர்களிடம் இப்படியான அதீத நம்பிக்கையை உருவாக்குவது பாவம். எது சாத்தியம் என்று நினைக்கிறோமோ அதை மட்டும்தான் சொல்ல வேண்டும். அந்த அளவுகு மட்டும்தான் உறுதியளிக்க வேண்டும். அப்பொழுதுதான் மாற்று வழிகளை யோசிப்பார்கள் அல்லது மனதை திடப்படுத்திக் கொள்வார்கள். மாற்றாக வெற்று நம்பிக்கைகளை உருவாக்கி அது நடக்காது என்று தெரிய வரும் போது நொறுங்கிப் போய்விடுகிறார்கள். எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று தெரியவில்லை.


பாவனாவின் மருத்துவச் செலவுகளுக்கென நாளை ஒரு தொகையை அனுப்பி வைத்துவிடலாம். அநேகமாக ஒரு லட்ச ரூபாய் அனுப்ப முடியும் என்று தோன்றுகிறது. குமரேசன் உள்ளிட்டவர்களின் மருத்துவச் செலவுகளுக்கும் கல்வி உதவித் தொகைகளும் வரிசையாக அனுப்ப வேண்டியிருக்கிறது என்பதால் அதற்கு மேல் பாவனாவுக்கு கொடுப்பதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு. ஆனாலும் இந்த குழந்தையின் முகம் மனதைப் பிசைகிறது. எவ்வளவோ கனவுகள் வெண்டிலேட்டரின் வயர்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றன. அந்தப் புன்னகையை மீட்டெடுத்துவிட வேண்டும். வேறு யாராவது உதவ விரும்பினால் தெரியப்படுத்தவும். சேர்த்துக் கொடுக்கலாம்.

May 26, 2015

499

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்த போது இணையத்தின் பக்கமே வரவில்லை. நல்லதாகப் போய்விட்டது. இரண்டு நாட்கள் கழித்து வந்த போது இருபது வருடங்களுக்கு முன்பாக நானூறு மதிப்பெண்கள் வாங்கியதற்காகக் வீதி முழுக்க சாக்லேட் கொடுத்த சரவணனின் நினைவுகள்தான் வந்து போயின. அவன் விவசாயக் கூலியின் மகன். என்னைவிட இரண்டு வயது மூத்தவன். கிராமப்புற பள்ளியில் இரண்டாம் இடம் வாங்கியிருந்தான். முதல் இடம் நானூற்று இருபது மதிப்பெண்கள். சரவணனின் அம்மாவுக்கு அவ்வளவு சந்தோஷம். மருத்துவராகவோ அல்லது பொறியாளராகவோ ஆகிவிடுவான் என்று கணக்குப் போட்டார்கள். ஒன்றும் நடக்கவில்லை. இப்பொழுது ஊரில் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் தினக்கூலியாக இருக்கிறான்- கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களாக. 

சரவணனைப் பற்றிச் சொல்வதற்காக இதை எழுத ஆரம்பிக்கவில்லை.

ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாக வரையிலும் கூட 400 மதிப்பெண்களைத் தாண்டினாலே கூட கெளரவமாகப் பார்த்தார்கள். 450 ஐத் தாண்டினால் கொண்டாடித் தீர்த்தார்கள். இப்பொழுதெல்லாம் அவையெல்லாம் மதிப்பெண்களே இல்லை என்றாகிவிட்டது. மதிப்பெண்களை எந்த மதிப்புமே இல்லாத வெற்று எண்களாக்கி வைத்திருக்கிறார்கள். வினாத்தாள் வெகு எளிமையானதாக இருக்கிறது. தெரிந்ததை எழுதி வைத்துவிட்டு வந்தால் போதும். விடைத்தாள் திருத்தம் அதை விட எளிமையானதாக இருக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வுத் தாள் திருத்தும் பணிக்குச் சென்ற ஆசிரியரிடம் பேசிய போது அதிர்ச்சியாக இருந்தது. இருபத்து நான்கு மதிப்பெண்களைத் தாண்டியிருந்தால் கூட முப்பத்தைந்தாக மாற்றி தேர்ச்சி வழங்கியிருக்கிறார்கள். அப்படியே தோல்வியடைந்தாலும் உடனடியாக மறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களை இவ்வளவு அதிமாகத் தேர்ச்சியடைச் செய்வதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என்று புரியவில்லை. கர்நாடகாவில் அறுபத்தைந்து சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தாலே பெரிய காரியம். ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான் இருக்கின்றன. அவர்கள் கல்வித் தரத்தில் எந்தவிதத்திலும் தாழ்ந்துவிடவில்லை. ஆனால் தமிழகம் மட்டும்தான் தறிகெட்டு ஓடுகிறது. 

எதை எழுதினாலும் மதிப்பெண் கிடைத்துவிடும் என்ற மனநிலை உருவாக்கம் என்பது மழுங்கிப் போன மாணவர் சமுதாய கட்டமைப்பதற்கான முதற்படி. அதுதான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை யாரையுமே தோல்வியடையச் செய்வதில்லை. ஒன்பதாம் வகுப்பில் மிக மட்டமாகப் படிக்கும் மாணவர்களை அழைத்து ஒரு எச்சரிக்கையுடன் பத்தாம் வகுப்புக்கு அனுப்புகிறார்கள். பத்து லட்சம் பேர் எழுதும் பொதுத் தேர்வில் ஒன்பது லட்சத்துக்கும் அதிமானவர்கள் தேர்ச்சியடைகிறார்கள். அதில் சரிபாதிக்கும் மேலானவர்கள் எழுபது அல்லது எண்பது சதவீத மதிப்பெண்களைத் தாண்டுகிறார்கள். அரசுக் கல்வித் துறை ஒவ்வொரு வருடமும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மாணவர் தேர்ச்சி இரண்டு சதவீதம் கூடுதலாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இது சரியான இலக்குதான். ஆனால் அந்த இலக்கை அடையும் வழிமுறைதான் சரியாக இல்லை. கற்றலிலும் கற்பித்தலிலும் சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டுமே தவிர இப்படி வினாத்தாளையும், திருத்தும் முறையையும் எளிமையாக்கி மாணவர்களை தூக்கி மேல் வகுப்புகளுக்கு வீசக் கூடாது.

ஏன் இப்படி ப்ராய்லர் கோழி வளர்ப்பு மாதிரி தமிழக கல்வி முறை மாறிக் கொண்டிருக்கிறது? எதனால் சிந்தனை மழுங்கடிக்கப்பட்ட, வெளியுலகம் பற்றி சிந்திக்காத மோல்டிங் செய்யப்பட்ட பொம்மைக்கட்டைகளாக மாணவர்களை வடிவமைக்கிறார்கள்? இப்படி தாறுமாறான மதிப்பெண்களுடன் தேர்ச்சியடையச் செய்வதால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன? கொஞ்சம் உள்ளே இறங்கிப் பார்த்தால் பகீரென்றிருக்கிறது.

பத்தாம் வகுப்பில் நானூறு மதிப்பெண்களைத் தாண்டுபவர்களில் பெரும்பாலானவர்கள் பதினோராம் வகுப்பில் முதல் பாடப்பிரிவில் (ஃபர்ஸ்ட் க்ரூப்) சேர்கிறார்கள். இப்படிச் சேர்பவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டுகிறது. இவர்கள் அத்தனை பேரும் பனிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு மருத்துவப் படிப்பிலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரப் போவதில்லை. பத்தாம் வகுப்பில் நானூறு மதிப்பெண்களைத் தாண்டியவர்களில் பெரும்பாலானவர்கள் பனிரெண்டாம் வகுப்பில் பெருத்த அடி வாங்குகிறார்கள். ஆனாலும் பிரச்சினையில்லை. எழுநூறு மதிப்பெண்கள் வாங்கினாலும் எங்கள் கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என்று ஒவ்வொரு தனியார் பொறியியல் கல்லூரியும் வலை விரித்துக் காத்திருக்கின்றன. வசதியில்லாத மாணவர்களைக் கூட ‘பேங்க் லோன் வாங்கிக்கலாம்’ என்று இழுத்துச் சென்று அமுக்குகிறார்கள். தமிழகத்தில் மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான பொறியியல் படிப்புக்கான இடங்கள் இருக்கின்றன. அந்தப் இடங்களை நிரப்ப வேண்டுமானால் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் பேராவது முதல் க்ரூப்பில் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அறிவியல் பாடங்களில் சேரும் சொற்பமான மாணவர்களைத் தவிர மீதமிருப்பவர்கள் பொறியியலில் சேர்வார்கள்.

கருப்பு மார்கெட் இது.

தமிழகம் முழுவதும் பல நூறு பொறியியல் கல்லூரிகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான பொறியியல் படிப்புக்கான இடங்கள் இருக்கின்றன. அதை நிரப்ப வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. அப்பொழுதுதான் பேராசிரியர்களுக்கு சம்பளம் தருவதிலிருந்து பெருத்த லாபம் கொழிப்பது வரை அத்தனையும் சாத்தியம். அதற்காக முதல் க்ரூப் பாடப்பிரிவில் மாணவர்களைக் குவித்தே தீர வேண்டும். இந்த ஒரு பின்னணியோடுதான் இந்தத் தேர்ச்சி விகிதத்தையும் அள்ளி வீசப்படும் மதிப்பெண்களையும் பார்க்கிறேன். இதைத் தாண்டி வேறு எந்தக் காரணத்தையும் யோசிக்க முடியவில்லை. இதனால் கல்வித்தரம் உயர்கிறது, மாணவர்களின் அழுத்தம் குறைகிறது என முன் வைக்கப்படும் எந்தவொரு காரணமும் சரியான தரவுகளுடன் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.

தன் மகன் ஏன் நானூறு மதிப்பெண்களை வாங்கியிருக்கிறான்? இந்த மதிப்பெண்ணுக்கு அவன் உண்மையிலேயே தகுதியானவன்தானா? போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாத அல்லது விடை தெரிந்து கொள்ள விரும்பாத அப்பாவிப் பெற்றோர்கள் மகனும் மகளும் நானூறு மதிப்பெண்களைத் தாண்டியவுடன் புளகாங்கிதம் அடைகிறார்கள். மாணவர்களும் தங்களுக்கு ஆகச் சிறந்த திறமை இருப்பதாக மதிமயங்கிப் போகிறார்கள். ஆனால் இவையெல்லாம் தமிழகக் கல்விச் சூழலை இருண்ட பகுதியொன்றுக்கு மிக வேகமாக நகர்த்திக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று நம்புகிறேன்.

பால் ஊற்றிவிடலாம்

கடந்த வாரத்தில் சொந்தக்காரர் வீட்டுக்குச் செல்ல வேண்டிய வேலை இருந்தது. பொள்ளாச்சி பக்கத்தில் இருக்கிறார்கள். இந்த வருடம் மழை பரவாயில்லை. சென்ற வருடம் போல் இல்லை. இப்பொழுது கோடையிலும் கூட பச்சை துளிர்த்திருக்கிறது. நாங்கள் சென்றிருந்த போது தென்னை மரங்களுக்கு தயிரை ஊற்றிக் கொண்டிருந்தார். ‘ரொம்பவுமே மிகுந்து கிடக்கிறது’ என்று நினைத்துக் கொண்டேன். சுள்ளென்று கேட்டும் விட்டேன். ரஜினி, அஜீத் கட் அவுட்டுகளுக்கு ஊற்றினால் கூட அர்த்தமிருக்கிறது. தென்னை மரங்களுக்குத் தயிரை ஊற்றினால்? தவறாக நினைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை. நினைத்தால் நினைத்துவிட்டு போகட்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் பிரச்சினை அவரிடமில்லை.

ஆவின்காரர்கள் சில நாட்களாக சொதப்பிக் கொண்டிருக்கிறார்கள். பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வதில்லை. ஏதாவது நொட்டை நொள்ளைக் காரணங்களை அடுக்கி பல பால்காரர்களைத் திருப்பி அனுப்பிவிடுகிறார்களாம். டெஸ்ட் வரவில்லை, பால் சரியில்லை என்று ஆளாளுக்கு ஒரு காரணம். இடையில் ஒரு நாள் மொத்தமாக விடுமுறை விட்டுவிட்டார்கள். யாரிடமிருந்தும் பால் வாங்கவில்லை. கறந்து வைத்த பாலை என்னதான் செய்வார்கள்? அதுதான் தயிராக மாற்றி தென்னை மரங்களுக்கு ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். பஞ்சகவ்யம் மாதிரி. மண்ணில் உரமேறும் என்று நம்புகிறார்கள். ‘நான் பரவாயில்லைங்க தம்பி...நம்ம பங்காளி ஒருத்தரு ரோட்டுல ஊத்திட்டு வந்திருக்காப்டி’ என்றார் அந்தச் சொந்தக்காரர்.

ஆவின்காரர்களிடம் கேட்டால் சமீபகாலத்தில் பால் வரத்து அதிகமாகிவிட்டது என்கிறார்கள். அதனால் சமாளிக்க முடிவதில்லையாம். கொள்முதலுக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு எப்படியெல்லாம் பிரச்சினை வருகிறது பாருங்கள். கடந்த ஆண்டு வறட்சி தாண்டவமாடிய போது மேய்ச்சலுக்கு பச்சை இல்லாமல் இருக்கிற கால்நடைகளையெல்லாம் கால்காசுக்கும் அரைக்காசுக்கும் விற்றார்கள். யார் வாங்குவார்கள்? இருக்கிற ஆடு மாடுகளுக்கே தீவனம் இல்லை. விற்கலாம் என நினைத்தவர்கள் கூட கொள்வாரில்லாமல் பதறிப் போனார்கள். ஆனால் அந்தச் சமயத்தில் பால் பற்றாக்குறையின் காரணமாக பாலின் விலை ஏறியது. நம் ஊர் விவசாயிகளைப் போல பாவப்பட்ட ஜென்மங்களைப் பார்க்கவே முடியாது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்கள். ஒரு தோட்டத்தில் செவ்வந்தி விளைவித்து நல்ல விலை வந்தால் அடுத்த போகத்தில் அக்கம்பக்கத்தில் அத்தனை பேரும் செவ்வந்தியை நடுவார்கள். விலை அதலபாதாளத்தில் விழுந்துவிடும். இந்த வருடம் மஞ்சளுக்கு விலை இல்லை என்றால் யாருமே மஞ்சளை நாட மாட்டார்கள். அடுத்த வருடம் மஞ்சளின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறும்.

பாலும் அப்படித்தான். இந்த வருடம் மழை பெய்து பச்சை தெரியத் துவங்கியதும் ஆளாளுக்கு ஆடு மாடுகளை வாங்கினார்கள். பால் உற்பத்தி பெருகிப் போனது. ஆவின்காரர்களிடம் உற்பத்தியைச் சமாளிக்கும் திறன் இல்லை. கையை விரித்துவிட்டார்கள்.  சாலையிலும் தென்னைமரத்தின் வேரடியிலும் ஊற்றுகிறார்கள். புரட்சித்தலைவி அவர்களின் பார்போற்றும் ஆட்சி இன்றுடன் நான்காம் ஆண்டை நிறைவு செய்கிறது. தினத்தந்தியில் நான்கு பக்கங்களுக்கு முழுப் பக்க விளம்பரங்கள். மற்ற செய்தித்தாள்களிலும் விளம்பரங்கள் வந்திருக்கும். எப்படியும் பல கோடி ரூபாயை இந்த விளம்பரச் செலவுகளுக்காகக் கொட்டியிருப்பார்கள். கொட்டினால் கொட்டிவிட்டுப் போகட்டும். கால்நடைகளுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தேன். நான்காண்டுகளில் நாற்பத்தெட்டாயிரம் கறவை மாடுகளை விவசாயிகளுக்கு வழங்கியிருக்கிறார்களாம். வள்ளலின் ஆட்சி. வழங்கட்டும்.  கால்நடைகளை இலவசமாக வழங்கினால் மட்டும் போதுமா? இதனால் பெருகப் போகும் பால் உற்பத்தியைச் சமாளிக்கும் திறன்களை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டாமா? அது குறித்தான ஒரு துப்பும் விளம்பரத்தில் இல்லை.

சமீபகாலத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இப்பொழுது மழையும் பெய்திருக்கிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கிடைப்பதால் பால் உற்பத்தி பெருகியிருக்கிறது - இது போன்ற காரணங்களை அரசாங்கம் கவனத்தில் எடுத்திருக்க வேண்டும். ம்ஹூம். இவ்வளவுதான் லட்சணம். வெட்டி விளம்பரங்கள், வாக்கு வாங்கும் சலுகைகள், எதிர்கால நோக்கம் எதுவும் இல்லாத திட்டங்கள் என்று கந்தரகோலம் ஆகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம்

தமிழக ஆவினிடம் சமாளிக்கும் திறன் இல்லாதது மட்டும்தான் பிரச்சினையா என்று விசாரித்தால் விவசாயிகள் வெவ்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். பால் பவுடரின் விலை குறைந்துவிட்டதால் தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் பால் வாங்குவதை குறைத்துக் கொண்டதாகவும் இதுவரை தனியார் நிறுவனங்களிடம் பால் ஊற்றிக் கொண்டிருந்தவர்களும் அரசாங்கத்தின் ஆவின் நிலையங்களை நாடுகிறார்கள் என்பது ஒரு காரணம் என்கிறார்கள். தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களும் உற்பத்திப் பெருக்கத்தின் காரணமாக பால் வாங்குவதைக் குறைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். உற்பத்தி செய்யப்படும் பால் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதும் இல்லை. இப்படி ஏகப்பட்ட காரணங்கள். இவையெல்லாம் வெளிப்படையான காரணங்கள். தில்லுமுல்லுகள் நடக்கின்றனவா என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். 

ஏற்கனவே எந்த விளைபொருளுக்கும் சரியான விலை கிடைப்பதில்லை. தோட்டங்காடுகளில் பாடுபடுவதற்கு ஆட்கள் இல்லை. பருவம் தப்பிப் போகும் காலநிலை மாற்றங்கள் என்று ஏகப்பட்ட பிரச்சினைகளால் விவசாயி நாஸ்தியாகிக் கொண்டிருக்கிறான். எனக்குத் தெரிந்து அவனைக் கைவிடாத வாழ்வாதாரமாக கால்நடைகள் இருந்தன. ஒரு நாளைக்கு ஏழெட்டு லிட்டர் பால் கறந்து ஊற்றினால் அன்றாடச் செலவுகளுக்கான வருமானம் வந்து கொண்டிருந்தது. இப்பொழுது அதன் மீது சம்மட்டியை இறக்கிவிடுவார்கள் போலிருக்கிறது. ஆவின் பால் நிலையத்தில் இயந்திரம் பழுது, பால்வண்டியின் சக்கரத்தில் வைப்பதற்கு எலுமிச்சம் பழம் கிடைக்கவில்லை என்று ஏதாவது பொக்கைக் காரணங்கள் எல்லாம் வேடிக்கையாக இருக்கின்றன. 

விவசாயி இந்நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிச் சொல்லியே அவன் கழுத்தில் கதுமையான கத்தியை இறக்கிக் கொண்டேயிருக்கிறோம். இல்லையா? மிகைப்படுத்திச் சொல்லவில்லை. ஒரு விவசாயியிடம் பேசிப் பார்க்கலாம். கண்ணீர் வந்துவிடும் நமக்கு. அத்தனை சிரமங்கள் அவனுக்கு மலிந்து கிடக்கின்றன. எவ்வளவு நாட்களுக்குத்தான் அவன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டேயிருப்பான்? ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் அவன் மூச்சை நிறுத்தப் போகிறான். அதன் பிறகு மொத்தமாக பால் ஊற்ற வேண்டியதுதான்.

May 25, 2015

மே மாதம்

நிசப்தம் அறக்கட்டளையின் மே மாதத்திற்கான வரவு செலவுக் கணக்கு விவரம் இது. வரிசை எண் 5-இல் இருக்கும் இருபத்தைந்தாயிரம் ரூபாய் குணசேகருக்கு வழங்கப்பட்டது. குணசேகர், சென்னையில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தவர். நாற்பத்தைந்து வயது. மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சுய நினைவை இழந்தவருக்கு சோழிங்கநல்லூரில் இருக்கும் க்ளோபல் மருத்துவமனையின் நியூரோ பிரிவில் சிகிச்சையளித்தார்கள் குணசேகருக்கு ஒரே மகன். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். குணசேகர் மட்டும்தான் குடும்பத்தின் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருந்தவர். அவருடைய மருத்துவச் செலவுகளுக்காக காசோலை அனுப்பி வைக்கப்பட்டது. செலவைத் தாங்க முடியாமல் அவர இப்பொழுது புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு மாற்றிவிட்டார்கள். இன்னமும் சில மாதங்களுக்காவது மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்று சொல்லியிருக்கிறார்களாம். அரசு மருத்துவமனை என்பதனால் பெரிய அளவிலான செலவு இல்லை என்றும் செலவைக் குடும்பம் சமாளித்துக் கொண்டிருப்பதாகவும் திரு. மகுடபதி சொன்னார். அவர்தான் குணசேகர் பற்றிய விவரங்களைத் தெரிவித்தவர்.

வரிசை எண் 7- இல் இருக்கும் முப்பதாயிரம் ரூபாய் ஜெர்மனியில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் திரு.மணிகண்டன் தனது ஸ்காலர்ஷிப் சம்பந்தமாக தமிழ்நாடு வந்து செல்வதற்கு கடனாக வழங்கப்பட்டிருக்கிறது. இன்னமும் இரண்டு மாதங்களில் திருப்பித் தந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். ஸ்காலர்ஷிப் விவகாரம் என்ன ஆனது என்ற பதில் எதுவும் அவரிடமிருந்து இன்னமும் வரவில்லை. இன்று அல்லது நாளை அவரை அழைத்துப் பேசவிருக்கிறேன்.

வரிசை எண் 16- குழந்தை கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் மாதப் பரமாரிப்புத் தொகை. இனி ஒவ்வொரு மாதமும் இரண்டாயிரம் ரூபாய் அந்தக் குழந்தைக்காகச் சென்றுவிடும்.

வரிசை எண் 20- குழந்தைகளுக்கான சஞ்சிகையான மின்மினி மாத இதழுக்கான சந்தா. மொத்தம் ஐம்பது பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். 48 பள்ளிகளைத்தான் தேர்ந்தெடுக்க முடிந்தது. பள்ளிகளின் முகவரிகளை பூவுலகின் நண்பர்கள் குழுவிற்கு அனுப்பி வைத்துவிடுகிறேன். அவர்கள் ஓராண்டுக்கு மின்மினி இதழை இந்தப் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். 

பெரும்பாலான வரவு விவரங்கள் தெளிவாக இருக்கின்றன- பின்வரும் இரண்டைத் தவிர.

வரிசை எண் 24- பிரிட்டனில் வசிக்கும் திருமதி. நர்மதா தனது தந்தையின் மூலமாக வங்கியில் நேரடியாகச் செலுத்தியிருக்கிறார். அதனால் அவருடைய பெயர் வரவில்லை.

வரிசை எண் 26- தினமணி.காம்மில் எழுதும் அயல் சினிமா பற்றிய தொடருக்கான தொகை. அறக்கட்டளையின் பெயரிலேயே காசோலை அனுப்பியிருந்தார்கள். அந்தத் தொகை இது.

ஏப்ரல் மாத வரவு செலவுக் கணக்கை இணைப்பில் பார்க்கலாம்.

பொதுவான தகவல்-

அறக்கட்டளையின் 80G மற்றும் 12 Aவுக்கான விசாரணை கடந்தவாரம் நடப்பதாக இருந்தது. அன்றைய தினம் தங்களால் வர இயலவில்லை என்பதால் விசாரணையைத் தள்ளி வைக்கச் சொல்லி ஆடிட்டர் அலுவலகத்திலிருந்து வருமான வரித்துறையிடம் கோரியிருக்கிறார்கள். அதனால் விசாரணை வேறொரு நாளில் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

உதவிகள் சம்பந்தமாக ஒரு கோரிக்கை-

அடுத்தவர்களுக்காக உதவி கோரி மின்னஞ்சல் அல்லது அலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ளும் போது தயவு செய்து தொடர்ந்து follow-up செய்யவும். உதவி கோரி தொடர்பு கொள்பவர்கள் ஏதேதோ சில காரணங்களால் பாதியிலேயே விட்டுவிடுகிறார்கள். ‘இவன் பதில் சொல்வதில்லை’ என்றோ அல்லது ‘இவனிடமிருந்து சரியாக பதில் வருவதில்லை’ என்றோ நினைப்பதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. மறுக்கவில்லை. ஆனால் உண்மையில் அவையெல்லாம் காரணமேயில்லை. நிறைய கோரிக்கைகள் வருகின்றன. அவற்றை விசாரிக்க வேண்டியிருக்கிறது. பலரையும் தொடர்பு கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் பல சமயங்களில் மின்னஞ்சல்களுக்கு பதில் சொல்ல முடியாமல் போய்விடுகிறது. பலருக்கு உதவுவதாகச் சொல்லிவிட்டு மறந்தும் விடுகிறேன். 

இப்படித்தான் விடுபடல்கள் நேர்கின்றன. தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு பேசாமல் மறந்து போன சம்பவங்களும் இருக்கின்றன. இப்படி விடுபடும்போது அந்த முனையில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் கருதிக் கொள்ள வாய்ப்பிருக்கிறதுதான். ஆனால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை.

அழைப்புகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. குடும்பம், வேலை, எழுத்து தாண்டி அறக்கட்டளை சார்ந்த வேலைக்கும் நிறைய நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும் கூட நேரம் போதவில்லை என்பதுதான் நிதர்சனம். அதனால் மேற்சொன்னது போன்ற நிர்வாகச் சிக்கல்களல் எழுவதால் உதவி கோரியவர்களை என்னால் மீண்டும் தொடர்பு கொள்ள முடிவதில்லை. அதனால் உதவி கோருபவர்கள் எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் திரும்பவும் அழைக்கவும்.

அறக்கட்டளையின் செயல்பாடுகள், வங்கி வரவு செலவுக் கணக்கு உள்ளிட்டவற்றி வேறு ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் இருப்பின் கேட்கவும்.


                    1) அரியலூர் மாவட்டம்

                    2) சென்னை மாவட்டம்
1)
வா.கணேஷ்குமார்,
தலைமை ஆசிரியர் ,
சென்னை நடு நிலைப் பள்ளி,
12,கபிலர் தெரு,
மடுமா நகர்,பெரம்பூர்,
சென்னை.11.

2)
தலைமையாசிரியர்,
பாவேந்தர் தமிழ் வழிப்பள்ளி,
10, திருநீலகண்டர் சாலை,
சேக்கிழார் நகர்,
குன்றத்தூர்
சென்னை - 69

3) கோயமுத்தூர் மாவட்டம்
3)
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கரவழி மாதப்பூர்,
சூலூர் ஒன்றியம்
கோவை மாவட்டம்- 641668

4) கடலூர் மாவட்டம்
4)
திரு.வசந்த்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கீழப்பாளையூர்
கம்மாபுரம்.
கடலூர் மாவட்டம் -606 103

5) 
திரு. இப்ரஹிம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (கலப்பு)
உடையார்குடி
காட்டுமன்னார்கோவில் 
கடலூர் மாவட்டம்- 608301

5) தர்மபுரி மாவட்டம்
6)
திரு. அன்பழகன்
ஊ.ஒ.ந.பள்ளி,
நல்லாம்பட்டி,
சாமனூர் அஞ்சல்
பாலக்கோடு வட்டம்,
தருமபுரி மாவட்டம்- 636 806

7)
திரு. P.குணசேகரன்
அறிவியல் ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
பள்ளப்பட்டி,
நல்லம்பள்ளி ஒன்றியம்
தர்மபுரி மாவட்டம் - 636 803

6) திண்டுக்கல் மாவட்டம்
8)
திரு.அருண்மொழி,
தலைமையாசிரியர்,
செல்வவிநாயகர் ஆரம்பப்பள்ளி,
லந்தக்கோட்டை,
வேடச்சந்தூர் வட்டம்,
திண்டுக்கல் மாவட்டம்- 624620

7) ஈரோடு மாவட்டம்
9)
திருமதி.செந்தில் வடிவு,
தலைமை ஆசிரியர்,
ஊராட்சி ஓன்றிய நடுநிலைப்பள்ளி 
முருகம்பாளையம்
அய்யம்பாளையம் [தபால்]
கொடுமுடி [வழி]
ஈரோடு மாவட்டம்.
638151

10)
தலைமையாசிரியர்,
தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி,
பாலிக்காடு,
காந்திநகர்,
கோபிச்செட்டிபாளையம்.
ஈரோடு மாவட்டம்- 638452

11)
திருமதி. தனலட்சுமி,
தலைமையாசிரியர்,
அரசு நடுநிலைப்பள்ளி,
பிலியம்பாளையம்,
நம்பியூர் அஞ்சல்,
கோபி வட்டம்,
ஈரோடு மாவட்டம் -638 458.

12)
திரு. தாமசு,
தலைமையாசிரியர்,
புனித திரேசாள் ஆரம்பப்பள்ளி,
கோபிபாளையம்,
அளுக்குளி (அஞ்சல்),
கோபி வட்டம்
ஈரோடு மாவட்டம்- 638453

8) காஞ்சிபுரம் மாவட்டம்
13)
திரு. அன்பழகன்,
பட்டதாரி அறிவியல் ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
1-3, வார்டு உத்திரமேரூர்,
காஞ்சிபுரம் மாவட்டம்- 603406

9) கன்னியாகுமரி மாவட்டம்

10) கரூர் மாவட்டம்

14)
தலைமையாசிரியர்,
சக்தி தமிழ் பள்ளிக்கூடம்,
தொழிற்பேட்டை,
கரூர்- 639004

15)
தலைமையாசிரியர்,
ஊ.ஒ.ஆரம்பப்பள்ளி, 
மேலமேட்டுப்பட்டி, 
எருதிக்கோண்பட்டி அஞ்சல், 
கடவூர் ஒன்றியம். 
கரூர் மாவட்டம்- 621311

16)
திரு. செல்வக்கண்ணன்
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
கே.பரமத்தி அஞ்சல்,
கரூர் மாவட்டம்- 639111

11) கிருஷ்ணகிரி மாவட்டம்
17)
சுகவனமுருகன் 
தலைமையாசிரியர்(பொறுப்பு)
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
சவுளூர் கூட் ரோடு,
அகரம் சாலை
காவேரிப்பட்டினம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் - 635112

   12) மதுரை மாவட்டம்
18)
நூர்ஜஹான்
தலைமையாசிரியர்,
அல்-அமீன் துவக்கப்பள்ளி,
மண்கட்டி தெப்பக்குளம் அருகில்,
மேலூர்-625106
மதுரை மாவட்டம்.

19)
திரு. தென்னவன்,
தலைமையாசிரியர்
மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,
Y.ஒத்தக்கடை,
மதுரை மாவட்டம்- 625107

20)
திரு. கே.சரவணன்,
தலைமையாசிரியர்,
டாக்டர். T.திருஞானம் துவக்கப்பள்ளி,
கீழ சந்தைப்பேட்டை,
மதுரை- 625 009

21)
திரு. நாகேஸ்வரன்,
நிர்வாகி,
காந்திஜி ஆரம்பப்பள்ளி,
பொட்டுலுபட்டி,
வாடிப்பட்டி வட்டம்
மதுரை மாவட்டம்- 625218

13) நாகப்பட்டினம்  மாவட்டம்
22)
திரு. பாலு,
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கிச்சான்குப்பம்
நாகப்பட்டினம் மாவட்டம் - 611108

14) நாமக்கல் மாவட்டம்
23)
திருமதி. மா.சாந்தி
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
நாவலடியூத்து கிராமம்
தாண்டக்கவுண்டனூர் அஞ்சல் 
நாமகிரிப்பேட்டை ஒன்றியம் 
ராசிபுரம் தாலுக்கா 
நாமக்கல் மாவட்டம் - 636202

24)
திரு . மோகன்
தலைமை ஆசிரியர் 
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
சின்ன முதலைப் பட்டி, 
நாமக்கல் (வ )
நாமக்கல் (மா ) - 637002

15) நீலகிரி மாவட்டம்

25)
திரு.நல்லமுத்து
தலைமையாசிரியர்
PUPS Havoor,
கீழ் கோத்தகிரி அஞ்சல்,
கோத்தகிரி(தாலுக்கா)
நீலகிரி மாவட்டம்- 643271

16) பெரம்பலூர் மாவட்டம்

17) புதுக்கோட்டை மாவட்டம்
26)
திருமதி. அழகம்மை,
தலைமையாசிரியர்,
ஸ்ரீ சிவகாமி அம்பாள் வித்யாசாலை ஆரம்பப்பள்ளி,
ராங்கியம் அஞ்சல்
திருமயம் வட்டம்
புதுக்கோட்டை மாவட்டம்-622301

18) ராமநாதபுரம் மாவட்டம்
27)
திரு. சேவியர் ஜோசப்,
தலைமையாசிரியர்,
ஸ்ரீ சேதுபதி நடுநிலைப்பள்ளி,
(தலைமை தபால் நிலையம் அருகில்)
ராமநாதபுரம்- 623 501

19) சேலம் மாவட்டம்
28)
திரு. திருஞானம்
தலைமை ஆசிரியர்:
அரசு நடுநிலைப்பள்ளி,
தேவண்ணகவுண்டனூர்,
சங்ககிரி தாலுக்கா 
சங்ககிரி - 637301 
சேலம் மாவட்டம்

29)
திருமதி.புஷ்பா,
தலைமையாசிரியர்,
ஊ ஒ தொ பள்ளி 
அண்ணாநகர்காலனி
வாழப்பாடி.
சேலம் மாவட்டம் - 636115.

30)
திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளி,
கோனேரிப்பட்டி அஞ்சல்,
எடப்பாடி வட்டம்,
சேலம் மாவட்டம் - 637107

31)
தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,
67ஏ, பவானி நெடுஞ்சாலை,
மாதையன்குட்டை,
மேட்டூர் அணை- 636452
சேலம் மாவட்டம்

20) சிவகங்கை மாவட்டம்
32)
திரு. லூர்து சேவியர்.
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
கட்டம்மன்கோட்டை,
திருப்புவனம் (அஞ்சல்)
சிவகங்கை மாவட்டம்- 630611

33)
திரு.எல்.சொக்கலிங்கம்,
தலைமையாசிரியர்,
சேர்மேன் மாணிக்கவாசகம் பள்ளி,
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம்- 630 302

21) தஞ்சாவூர் மாவட்டம்
34)
திருமதி. செல்வமேரி,
தலைமையாசிரியர்,
பாரதமாதா உதவிபெறும் துவக்கப்பள்ளி, 
ஆணூர்,
அத்தியூர் அஞ்சல், 
கும்பகோணம் தாலுக்கா, 
தஞ்சாவூர் மாவட்டம்- 612503.

22) தேனி மாவட்டம்

23) தூத்துக்குடி மாவட்டம்
35)
திருமதி ஹேமலதா,
தலைமை ஆசிரியர்,
இந்துதொடக்கப்பள்ளி,
ஜமீன்தேவர்குளம்(அஞ்சல்)
வானரமுட்டி(வழி)
கோவில்பட்டி(தாலுகா)
தூத்துக்குடி மாவட்டம்-628721.

24) திருச்சி மாவட்டம்
36)
திருமதி. வனசெல்வி,
தலைமையாசிரியர்,
சிறுமலர் மற்றும் மழலையர் ஆரம்பப்பள்ளி,
வெள்ளகுளம்,
அயன் பொருவாய்(அஞ்சல்)
பாலக்குறிச்சி,
திருச்சி- 621 308

25) திருநெல்வேலி மாவட்டம்
37)
வே.சங்கர்ராம்
தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி,
127, பாரதியார் எட்டாம் தெரு,
இளவன்குளம் சாலை,
சங்கரன்கோவில் 
நெல்லை மாவட்டம்- 627756

26) திருப்பூர் மாவட்டம்
38)
திருமதி. சத்யபாமா,
தலைமையாசிரியர்,
ஊ ஒ தொ பள்ளி 
உப்புபாளையம்
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டம்- 638111

39)
சி.கலையரசி,
தலைமையாசிரியை,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
துலுக்கமுத்தூர்,
அவிநாசி தாலுக்கா.
திருப்பூர் மாவட்டம் - 641 654

40)
திருமதி.வேதநாயகி,
தலைமையாசிரியர்,
ஆனந்தா பள்ளி,
கே.பி.சி.நகர்,
வெள்ளகோவில்
திருப்பூர் மாவட்டம்- 638111

41)
திரு. சம்பத்குமார்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 
வேலாயுதம்பாளையம் 
அவிநாசி 
திருப்பூர் மாவட்டம் - 641654 

42)
திருமதி.சிவகாமி,
தலைமையாசிரியை,
பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி,
கெங்கநாய்க்கன்பாளையம்,
மானூர் அஞ்சல்,
திருப்பூர் மாவட்டம்- 641606

27) திருவள்ளூர் மாவட்டம்
43)
திருமதி. பவானி,
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,
73 நத்தம் கிராமம், பஞ்செட்டி அஞ்சல், 
பொன்னேரி வட்டம்
திருவள்ளூர் மாவட்டம்- 601204

28) திருவண்ணாமலை மாவட்டம் 
44)
திருமதி. சசிகலா,
தலைமையாசிரியர்,
சன்னதி அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி,
38-பி, சன்னதி தெரு,
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம்- 604 408

29) திருவாரூர் மாவட்டம்
45)
திரு.மணிமாறன்
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
மேலராதாநல்லூர்,
கண்கொடுத்தவனிதம் (அஞ்சல்)
கொரடச்சேரி,
திருவாரூர் மாவட்டம் - 610 113

30) வேலூர் மாவட்டம்
46)
திரு.வின்செண்ட்,
தலைமையாசிரியர்,
கன்கார்டியா ஆரம்பப்பள்ளி,
Mission Compound,
ஆம்பூர்,
வேலூர் மாவட்டம்-635 802

31) விழுப்புரம் மாவட்டம்
47)
திரு. பாலு
தலைமை ஆசிரியர் / பொறுப்பாளர், 
அழகப்பா நடுநிலைப் பள்ளி,
பூட்டை கிராமம்,
சங்கராபுரம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம். 606401

32) விருதுநகர் மாவட்டம்
48)
கே.அன்புவேலன்,
தலைமையாசிரியர்,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,
முத்தனேரி,
நரிக்குடி(அஞ்சல்)
விருதுநகர் மாவட்டம் - 626607

May 20, 2015

புத்தகம் போட எவ்வளவு செலவாகும் சார்?

புத்தகம் அச்சடிக்க எவ்வளவு செலவாகும் என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். குத்து மதிப்பாகச் சொன்னால் புத்தகத்தின் விலையில் நான்கில் ஒரு பங்கு. விசாரித்த வரையிலும் நூறு அல்லது நூற்றுப் பத்து பக்கமுள்ள புத்தகத்தை தரமான தாளில் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்க வேண்டுமானால் அதிகபட்சமாக முப்பதாயிரம் ரூபாய் ஆகும். இதுதான் கணக்கு. உறுதிப்படுத்திக் கொள்வதற்காக யாவரும்.காம் பதிப்பகத்துக்காரர்களை அழைத்து மசால் தோசை 38 ரூபாய் புத்தகத்துக்கு எவ்வளவு செலவானது என்று கேட்டேன். முப்பதாயிரம் ரூபாய் என்றார்கள். அப்படியென்றால் ஒரு புத்தகத்தை நாற்பது ரூபாய்க்கு விற்றாலும் கூட பத்தாயிரம் ரூபாய் லாபம் கிடைக்க வேண்டுமல்லவா? அப்புறம் ஏன் நூறு ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று கேள்வி எழலாம்தான். 

கத்தியை வைத்து வெண்ணையைக் கிழிப்பது போல அப்படியே லாபம் கிடைப்பதில்லை.

மசால் தோசை புத்தகத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆயிரம் பிரதிகளைத் தலா 100 ரூபாய்க்கு விற்றால் மொத்த விற்பனைத் தொகை ஒரு லட்ச ரூபாய். நம்மால் விற்க முடிகிற அளவுக்குத் திராணி இருந்தால் லட்ச ரூபாய் கிடைக்கும். ஆனால் விற்பனை நெட்வொர்க் எதுவும் இல்லாத பதிப்பகம் என்றால் விற்பனை உரிமையை யாருக்காவது கொடுத்துவிடுவதுதான் நல்லது. விற்பனை உரிமைக்காரர்கள் விற்றுக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் விற்பனையில் முப்பத்தைந்திலிருந்து நாற்பது சதவீதம் வரைக்கும் விற்பனையாளருக்குக் கொடுத்துவிட வேண்டும். அப்படிப்பார்த்தால் ஒரு லட்ச ரூபாய்க்கு புத்தகங்களை விற்றால் முப்பத்தைந்தாயிரத்திலிருந்து நாற்பதாயிரம் ரூபாய் விற்பனையாளருக்கே போய்விடும். மிச்சமிருக்கும் அறுபதாயிரம் ரூபாய்தான் பதிப்பாளருக்கு நிற்கும். இதிலும் ஒரு நிபந்தனை - ஆயிரம் பிரதிகள் விற்க வேண்டும். அது லேசுப்பட்ட காரியமில்லை. முதல் வருடத்திலேயே அச்சடித்த புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துவிடும் என்றெல்லாம் சொல்ல முடியாது- இரண்டு வருடங்களும் ஆகலாம் ஐந்து வருடங்களும் ஆகலாம். கை நிறைய காசு வைத்திருக்கும் பதிப்பாளருக்கு பிரச்சினையில்லை. கடன் வாங்கி புத்தகம் போடும் தியாகிகள் மனைவியின் தாலியை அடகு வைத்துத்தான் கடனைக் கட்ட வேண்டும். 

நூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் புத்தகம் முந்நூறு பிரதிகள் விற்கின்றன என்று வைத்துக் கொண்டால்- அதுவே பெரிய காரியம்தான் - வெறும் முப்பதாயிரம் ரூபாய்தான் விற்பனை வழியாகக் கிடைக்கும். அதில் நாற்பது சதவீதம் விற்பனையாளருக்குப் போய்விட்டால் அச்சகத்துக்குக் கொடுத்த காசு கூட கைக்கு வந்து சேராது என்பதுதான் நிதர்சனம். இது தமிழ் புத்தக விற்பனையின் மிகப்பெரிய பிரச்சினை. எப்படியும் படம் ஓடிவிடும் என்று பணம் போட்டுவிட்டு பிறகு தலையில் துண்டைப் போட்டுக் கொள்ளும் தயாரிப்பாளர் மாதிரிதான். அதனால்தான் ‘சார் புத்தகம் போடுங்க’ என்று கேட்டால் பதிப்பாளர்கள் தயங்குகிறார்கள். எழுத்தாளன் ஓரளவுக்காவது கவனம் பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்றைய தகவல் தொழில்நுட்ப புரட்சியுகத்தில் அது ஒன்றும் பெரிய காரியமில்லை. ஆனால் அதற்கு வழி தெரியவில்லையென்றால்தான் ‘லம்ப்’ தொகைக்கு வழி தேட வேண்டியதாகிவிடுகிறது.

சிறிய பதிப்பகத்தினருக்குத்தான் விற்பனை உரிமை என்ற பெயரில் அடி விழுகிறது. பெரிய பதிப்பகங்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. அவர்களே பெரிய விற்பனை வலையமைவை வைத்திருப்பார்கள் என்பதால் நேரடியாக விற்றுவிடுவார்கள். விற்பனை உரிமை என்று விற்பனையாளருக்குக் கொடுக்க வேண்டிய தொகை மிச்சம்தான். ஆனால் அலுவலக செட்டப், பணியாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவற்றையெல்லாம் கணக்குப் போட்டால் அந்தச் செலவு எல்லாம் வாசகர்கள் தலையில்தான் வந்து இறங்கும். ரோட்டுக்கடை தோசை நாற்பது ரூபாய் என்றால் ரெஸ்டாரண்ட்டில் நூற்று பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள். எதுக்குய்யா இங்கு மட்டும் இவ்வளவு அதிகம் என்று கேட்டால்- ஏ.ஸியைக் கையை நீட்டுவார்கள். வெள்ளையும் சுள்ளையுமான சர்வரைக் கை நீட்டுவார்கள். மெதுவாக ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலை கவனிக்கச் சொல்வார்கள். இந்த ‘எக்ஸ்ட்ரா ஐட்டங்களுக்கான’ செலவை எல்லாம் தோசை விலையில் சேர்த்து நம் தலையில் கட்டுகிறார்கள் அல்லவா? அப்படித்தான்.

பொதுவாகவே ஒரு பதிப்பகம் நான்கு புத்தகங்களை வெளியிட்டால் ஒன்று விற்கும். மூன்று விற்காது. அது பதிப்பாளருக்கும் தெரியும். இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் நிர்பந்தங்களின் காரணமாக வெளியிடுகிறார்கள். மூன்று புத்தகங்கள் வழியாகும் ஏற்படும் நட்டத்தை விற்பனையாகும் ஒரு புத்தகத்தின் வழியாக ஓரளவாவது சரிக் கட்ட வேண்டும் என்ற அழுத்தம் சேர்ந்துவிடுகிறது. அது மட்டுமில்லை- பெரிய பதிப்பகமாக இருந்தால் நிறைய புத்தகங்கள் வெளியிடுகிறார்கள். அதில் விற்பனையாகாத புத்தகங்களை சேகரித்து வைத்து அதற்கான பராமரிப்புச் செலவுகளையும் செய்ய வேண்டும். இதற்கிடையில் அவ்வப்போது பல்வேறு ஊர்களில் புத்தகக் கண்காட்சிகள் நடக்கின்றன என்கிற ஆசையில் ஆள் ஒருவனுக்கு போக்குவரத்து செலவு, உணவுச் செலவு எல்லாம் கொடுத்து பார்சலாக ஒரு பெட்டி நிறைய புத்தகங்களை அனுப்பி வைத்தால் முக்கால் பெட்டி விற்பனையாகாமல் திரும்பி வரும். இப்படி பதிப்பாளர்களுக்கும் நிறைய பிரச்சினைகள் உண்டுதான். இவை போன்ற காரணங்களால்தான் உற்பத்தி விலையை விடவும் புத்தக விலையை நான்கு மடங்காக அதிகரித்து விற்கிறார்கள். அவர்கள் எப்படியோ விற்றுக் கொள்ளட்டும். அவை அவர்களது தொழில் சூட்சமங்கள்.

ஆனால் புத்தகம் அச்சடித்துத் தருகிறேன் என்று காசு வாங்குகிற ஆட்களிடம்தான் உஷாராக இருக்க வேண்டும். ஒரு புத்தகம் அச்சடிக்க எவ்வளவு செலவாகும் என்பதற்கு ஒரு குட்டி சூத்திரம் இருக்கிறது.

முன்பெல்லாம் கையெழுத்துப் பிரதிகளில் எழுதி அனுப்புவார்கள். அதைக் டைப் செய்துக் கொடுக்கும் DTPக்காரர்களுக்கு ஒரு தொகையைக் கொடுக்க வேண்டும். இப்பொழுது அந்தச் செலவு இல்லை. முக்கால்வாசி எழுத்தாளர்கள் கணினியில் தாங்களே தட்டச்சு செய்து அனுப்பிவிடுகிறார்கள் என்பதால் வெறும் லே-அவுட் வடிவமைப்பு மட்டும்தான். நூறு பக்கமுள்ள ஒரு புத்தகத்தின் வடிவமைப்புக்கு அதிகபட்சமாக இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பார்கள். அடுத்தது அட்டை வடிவமைப்பு. அதற்கும் பெரிய செலவு இல்லை. ஆயிரம் ரூபாய். தரமான பதிப்பகங்கள் பிழை திருத்தம் செய்பவருக்கு ஒரு புத்தகத்துக்கு ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கிறார்கள். ஆனால் பல பதிப்பகங்கள் இந்த வேலையை எழுத்தாளர் தலையில் கட்டிவிட்டு அதோடு விட்டுவிடுவார்கள் என்பதால் இந்தச் செலவும் இருப்பதில்லை. இதையெல்லாம் கூட்டிப் பார்த்தால் நான்காயிரம் ஆகிவிட்டதா? அதற்கு பிறகு நேரடியாக அச்சு செலவுதான்.  நல்ல தரமான காகிதத்தில் டெமி சைஸில் நூறு பக்கங்களை உடைய புத்தகத்தை அச்சடிக்க ஆயிரம் பிரதிகளுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் ஆகும். எவ்வளவுதான் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் மொத்தச் செலவு முப்பதாயிரத்தைத் தாண்டாது.

ஆனால் எவ்வளவு வாங்குகிறார்கள்? 

எண்பது பக்கக் கவிதைத் தொகுப்பு அதுவும் ஐந்நூறு பிரதி அடிக்க நாற்பதாயிரம் ரூபாய். அதுவே எண்பது பக்க புத்தகம் என்றால் எழுபதாயிரம் ரூபாய். இதெல்லாம் எனக்குத் தெரிந்த விலைப்பட்டியல். வித்தியாசங்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கின்றன. அப்படியே காசு கொடுத்து அச்சடித்தாலும் விற்றுக் கொடுக்கவெல்லாம் மாட்டார்கள். நாம்தான் விற்றுக் கொள்ள வேண்டும். ‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல...நான் நடிகனாகியே தீர வேண்டும்’ என்கிற ஜே.கே.ரித்தீஷ் வகையறா எழுத்தாளர்களுக்காக இதைச் சொல்லவில்லை. காசு இருக்கிறது. பதிப்பாளர்களுக்குக் கொடுக்கிறார்கள். அவர்கள் இஷ்டம். ஆனால் ஒரு புத்தகம் போட்டால் சுஜாதா, சுந்தர ராமசாமி ஆகிவிடலாம் என்ற நம்பிக்கையில் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசைக் கொண்டு போய் வெட்டியாக பதிப்பாளர்களின் காலடியில் கொட்டும் பதிப்புலகம் தெரியாத இளம்பிஞ்சுகள் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளலாம். 

ஆமென்!

May 19, 2015

என்ன கேஸ்?

சமீபத்தில் ஒரு விவகாரம் கேள்விப்பட்டேன். இலக்கிய விவகாரம்தான். பணப் பிரச்சினை. காவல் நிலையம் வரைக்கும் சென்றுவிட்டது. உள்ளூர் காவல் நிலையத்தில் இரு தரப்பையும் அழைத்து விசாரித்திருக்கிறார்கள். இப்போதைக்கு விவகாரம் முடியுமா என்று தெரியவில்லை. ‘இந்த லெவலிலேயே முடித்துக் கொள்ளுங்கள்’ என்று ஸ்டேஷனில் சொல்லியிருக்கிறார்களாம். இன்னும் கொஞ்சம் தகவல் கிடைத்தவுடன் விரிவாக எழுதலாம். டிசம்பர் புத்தகக் கச்சேரி ஆரம்பிப்பதற்குள் இது பற்றிய தகவல்கள் நிறைய வந்துவிடும் போலிருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது.

எண்பது பக்க புத்தகத்துக்கு நாற்பதாயிரம் ரூபாயைத் தண்டம் அழும் சில அப்பாவிகளாவது தப்பித்துவிடுவார்கள். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைள் என எதுவாக இருந்தாலும் ஓரளவு கவனம் பெற்ற எழுத்தாளராக இருந்தால் எந்தப் பதிப்பகத்திலும் காசு கேட்க மாட்டார்கள். ஆனால் புதிதாக எழுத வரும் எழுத்தாளர்கள் நிறையப் பேர்களுக்கு உடனடியாக புத்தகம் கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அந்த ஆசையைத்தான் இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ‘உங்க கவிதை புக்கெல்லாம் விக்காது..காசு கொடுங்க போட்டுத் தர்றேன்’ என்று கொக்கி போடுகிறார்கள். இந்த மாதிரி சமயத்தில் பொறுமை காப்பதுதான் நல்ல செயல். இரண்டு வருடங்களுக்குத் தொடர்ந்து எழுதினால் எப்படியும் கவனம் பெற்றுவிடலாம். பிறகு புத்தகம் கொண்டு வரலாம். அதைவிட்டுவிட்டு அவசரப்பட்டு பணம் கொடுத்து அவர்கள் அச்சடித்துக் கொடுத்தாலும் நாம்தான் விற்க வேண்டும். 

ஒரு புரளியை வேறு கிளப்பிவிட்டிருக்கிறார்கள்-  ‘இந்தப் பதிப்பகத்தில் புத்தகம் போடுவது பெருமை..அந்த ப்ராண்டுக்காகவே ஐம்பதாயிரம் ரூபாய் வேண்டுமானாலும் கொடுக்கலாம்’ என்பார்கள். நம்மவர்களும் நம்பிக் கொடுத்தால் பாதிக்காசை பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டு மீதிக் காசுக்கு புத்தகமாகத் தருவார்கள். இப்படியெல்லாம் பதிப்பகத்தின் பெயரோடுதான் புத்தகம் கொண்டு வர வேண்டும் என்பதில்லை. எவ்வளவு பெரிய பதிப்பகத்தில் புத்தகத்தை வெளியிட்டாலும் கவனம் பெறக் கூடிய உள்ளடக்கம் இருந்தால் மட்டும்தான் கவனம் பெறும். இல்லையென்றால் சீண்ட நாதி இருக்காது. எத்தனையோ புத்தகங்கள் எழுத்தாளராலேயே வெளியிடப்பட்டு மிகப்பெரிய கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அதனால் பதிப்பகத்தின் ப்ராண்ட் என்பதெல்லாம் அவ்வளவு முக்கியமில்லை. அதை நம்பியெல்லாம் பல்லாயிரம் ரூபாயை அழ வேண்டியதில்லை.

ம்ஹூம்.

வேறு எதையாவது எழுத வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் இப்படி கண்டதையும் எழுதித் தொலைத்து பகையாளி ஆவதுதான் மிச்சம். மேலே சொன்னதையெல்லாம் மறந்துவிடுங்கள். பெங்களூர் செய்தி ஒன்றிருக்கிறது.

இந்த ஊரில் நாற்பதாண்டு கால வழக்கு ஒன்றிற்கு தீர்ப்புச் சொல்லியிருக்கிறார்கள். நாற்பது வருடங்களுக்கு முன்பாக ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ‘பெண் குழந்தையைப் பெற்றவளுடன் எல்லாம் வாழ்க்கை நடத்த முடியாது’ என்று சொல்லி கணவன் துரத்திவிட்டுவிட்டார். அந்தப் பெண்மணி ஜீவனாம்ஸம் கேட்டு வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இழு இழுவென்று இழுத்த வழக்கு நேற்று முடிவுக்கு வந்திருக்கிறது. அந்தப் பெண்மணி வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறார். இனிமேல் அந்த ஆள் இந்தப் பெண்மணிக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் ஜீவனாம்ஸம் தர வேண்டும்.

எவ்வளவு வேகம் பார்த்தீர்களா?

பிறந்த குழந்தைக்கு நாற்பது வயதாகும் போது மாதம் ஆறாயிரம் ரூபாய் ஜீவனாம்ஸம். இதே நீதிமன்றத்தைத்தான் கொஞ்ச நாட்களுக்கு முன்பாக உச்சநீதிமன்றம் அவ்வளவு அவசரப்படுத்தியது. நீதிபதியும் மின்சாரம் இல்லாத சமயத்தில் கூட நேரத்தை வீணடிக்காமல் அவசர அவசரமாக ஸ்லேட்டும் பென்சிலும் வைத்து கூட்டல் கணக்கை குண்டக்க மண்டக்க முடித்து முடித்து தீர்ப்பையும் எழுதினார். இதோடு விட்டுவிட்டால் தப்பித்தோம். மேல் முறையீடு அது இது என்று போனால் ‘நான்கு பேருக்கும் பாரத ரத்னா விருது வழங்க உத்தரவிடுகிறேன்’ என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள். அப்புறம் என்னதான் தணங்கிணத்தோம் என்று குதித்தாலும் ஒன்றும் நடக்காது. சரி விடுங்கள். நாம் சொன்னால் கேட்கவா போகிறார்கள்? முறையீடு செய்யட்டும்.

இந்த விவகாரம் சம்பந்தமாக இன்னொரு விஷயம் ஞாபகமிருக்கிறதா? மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தவுடன் உடனடியாக அவர் தகுதியிழப்பு செய்யப்பட்டு அந்தத் தொகுதி காலியாக இருப்பதாக கெஜட்டிலும் அறிவிக்க வேண்டுமாம். ஆனால் குன்ஹாவின் தீர்ப்பு வந்த பிறகு எவ்வளவு நாட்கள் இழுத்தார்கள் என்று பழைய செய்தித்தாள்களை புரட்டிப் பார்த்தால் தெரியும். ஆமை வேகத்தில் நகர்ந்தவர்கள் இப்பொழுது பறக்கிறார்கள்- முதல் நாள் எம்.எல்.ஏ ராஜினாமா செய்கிறார். அதே நாளிலேயே ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டு உடனடியாக கெஜட்டிலும் குறிக்கப்படுகிறது அடுத்த நாளே இந்தியத் தேர்தல் கமிஷனுக்கு ‘தேர்தல் நடத்தலாம்’ என்று தமிழகத்திலிருந்து கடிதம் எழுதுகிறார்கள். மோனோ ரயில் வேகம்.

அதெல்லாம் அப்படித்தான் பாஸ். இங்கு யாருக்கு எது வேகமாகச் செயல்பட வேண்டுமோ அது அவர்களுக்காக வேகமாகச் செயல்படும். நம்மால் முடிந்த காரியமெல்லாம் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் நம் பெயரைச் சேர்க்க முடிகிறதா என்று பார்க்க வேண்டும். இல்லையென்றால் அந்தத் தொகுதி வாக்காளர் யாரிடமாவது துண்டைப் போட்டு வைத்து பெர்சனல் லோன் வாங்கிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

அது சரி. எனக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. இல்லையென்றால் நாக்கு இவ்வளவு பேச்சு பேசுமா? சுருட்டி எடுத்து உள்ளே வைக்க வேண்டும்.

இதுவரை பேசியதற்கு தண்டிக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ஒல்லிப்பிச்சானை நடமாடும் நீதிமன்றத்தில் நிறுத்தி முந்நூறு ரூபாய் பைன் போடுவதோடு விட்டுவிடுங்கள் அய்யா!

இன்னும் சில பத்திரிக்கைகள்

இன்று வரை சிற்றிதழ்கள் பற்றிய பதினெட்டு குறிப்புகள் வந்திருந்தன. அவற்றில் சிலவற்றை நிராகரிக்க வேண்டியிருந்தது. வரிசை எண் 12, 13 ஆகிய இரண்டையும் ஒருவரே எழுதியிருக்கிறார். மொத்தம் பன்னிரெண்டு சந்தா. கணையாழி எனக்குக் கொடுத்த ஆயிரம் ரூபாய் போக மீதத் தொகையை அனுப்பி வைத்துவிடுகிறேன். அடுத்த மாதத்திலிருந்து அனைவருக்கும் கணையாழி இதழ் வந்துவிடும்.

அனைவருக்கும் நன்றி.


5)
பாசமலர்- குடும்ப உறவு பற்றிய சிற்றிதழ்

பாசமலர் என்றொரு சிற்றிதழ் கோவை கவுண்டம்பாளையத்திலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது. 

பாசம் தவழும் குடும்பங்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தோடு போளி பைய்யாப்பிள்ளி என்ற பாதிரியார் நடத்துகிறார். குழந்தை வளர்ப்பு, குழந்தைகளின் கல்வி, குடும்பங்களில் உருவாகும் பிரச்சனைகளை சமாளிக்கும் வழிகள், குழந்தைகளுக்கான சில செயல்பாடுகள் என்று பல்வேறு வகை கட்டுரைகள் அதில் உடங்கியுள்ளன. 500 பிரதிகள் என தொடங்கி தற்போது 2500 பிரதிகள் வெளிவருகின்றன என்று நினைக்கிறேன். 

குழந்தைகளின் கல்வி பற்றியும், குழந்தைகளுக்கான செயல்பாடுகள் பற்றியும் நான் எழுதுகிறேன். திரு என். சொக்கன் அவர்கள் மாதம் ஒரு திருக்குறளின் கருத்து வெளிப்படும் விதம் கதை எழுதுகிறார். முக்கியமாக பெற்றோர்களுக்காக வெளிவரும் இம்மாத இதழ் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் குறுகிய வட்டத்தில் நல்ல பல கருத்துகளைப் பரப்பி வருகிறது. 

http://www.paasamalar.com/  

குறிப்பை அனுப்பியவர்: ராஜேந்திரன், பாலக்காடு


6)
சஞ்சிகை

ஃபேஸ்புக் பல்வேறு அரிய‌ முகங்களின் அறிமுகத்தை தந்துக் கொண்டே இருக்கிறது. அப்படியாக சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானவர் தான் முருகராஜ். கும்பகோணத்தை சேர்ந்தவர். சுய விருப்பத்தின் காரணமாக வள்ளலார் நூலகத்தை  (நடமாடும் நூலகம்) கும்பகோணத்தில் நடத்தி வருகிறார். ஒரு ஃபோன் செய்தால் வீட்டிற்கு புத்தகம் வந்துவிடும். சொந்த செலவிலும் நண்பர்களின் உதவி மூலமாகவும் சுமார் 1500 புத்தகங்களை நூலகத்தில் சேர்த்துள்ளார். வீட்டில் புத்தகம் சேர்க்கவே இங்கு பலருக்கு எதிர்ப்பு இருக்கும் பட்சத்தில் நண்பருக்கு சொல்லத் தேவையில்லை.அதையும் மீறித் தான் இத்தனை விஷயங்களையும் சாத்தியப்படுத்தி வருகிறார். அவரிடம் என்ன ஏதென்று விசாரித்தால் , "சும்மா சின்ன வயசுலேந்து நூலகம் மீது ஒரு ஈர்ப்பு அவ்வளவு தான்" என்று எளிமையான பதிலைத் தருவார். இது ஒரு பக்கம் என்றால் மறுப்பக்கம் சஞ்சிகை எனும் சிற்றிதழையும் நடத்திவருகிறார்.

சஞ்சிகை சிற்றிதழையும் கும்பகோணத்திலிருந்து தான் இயங்குகின்றார். மாதம் ஒரு முறை வெளியாகின்றது. தனிச் சுற்றுக்கு மட்டும் அனுப்பிவைக்கப்படுகிறது. சஞ்சிகை இணைய தளத்திலும் ஏற்றப்படுகிறது. எளிமையான கதைகள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், புத்தகம் பற்றின அறிமுகங்கள், கவிதைகள், உதிரி என வெவ்வேறு தலைப்புகள் நிறைந்ததாக இந்த இதழ் இருக்கிறது. சஞ்சிகை இதழில் வெளிவ‌ந்த படைப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த சில‌ பதிவுகள் இதோ உங்களுக்காக.

*தெரிந்ததில் தெளிந்தது – காந்தி என்ற தலைப்பில் நண்பர் அருண் எழுதிய கட்டுரை. காந்தி பற்றின தனது புரிதலை வாசிப்புப் பழக்கம் எவ்வாறு மாற்றுகிறது என்பதை அழகாக எழுதியிருப்பார் .அதற்கு உதவிய புத்தகங்கள் பற்றிய‌ எளிய அறிமுகங்களைத் தந்திருப்பார்.

*பசுமை நடை - மதுரையில் நடக்கும் பசுமை நடைப் பற்றின பதிவுகளைத் தொடர்ந்து பதிந்துக் கொண்டிருக்கிறார் .பசுமை நடையில் பங்கேற்க முடியாத என்னைப் போன்றவர்களுக்கு இது உதவியாக இருக்கின்றது. 

*விசா இல்லாமல் செய்த வெளிநாட்டுப் பயணம் பற்றிய‌ ராஜன்னா எழுதிய கட்டுரையும் பயணக் கட்டுரைகளில் எனக்குப் பிடித்த ஒன்று.

*தண்ணீர், காட்டுயிர் போன்ற சில சிறப்பிதழ்களும் வெளிவந்துள்ளன‌.இவையும் எனக்கு மிகவும் பிடித்தவை.

சஞ்சிகைப் பதிவுகள் இந்தத் தளத்தில் கிடைக்கின்றது.

அலைபேசி: 9655322933
மின்னஞ்சல்: sanjigai@gmail.com

குறிப்பை எழுதியவர்: பிரபு ராஜேந்திரன்

7)
காவிரிக்கதிர்

தமிழ்நாட்டிலேயே ஓர் ஊர் அல்லது பகுதியின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் குரல் கொடுக்கும் ஒரே புத்தக வடிவ மாத இதழ் ‘காவிரிக்கதிர்’.  இதன் ஆசிரியர் ஊடகவிலாளரும் சமூக செயற்பாட்டாளருமான கோமல் அன்பரசன்.

முன்னணி இதழ்களைப் போன்று பொதுவான செய்திகளையும் கூடவே மயிலாடுதுறை பகுதி செய்திகளையும் கலந்து தரும் வித்தியான இதழ் இது. இயல்பாகவே பண்பாட்டு பெருமையும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட காவிரிப்படுகை பகுதியில் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறை தனியான புகழுக்குரியது. ஆனால் அரசியல் காரணங்களால் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ச்சிப் பாதையில் மிகவும் பின்தங்கி இருக்கும் மயிலாடுதுறை பகுதியின் குரலை ஓங்கி ஒலிப்பதே காவிரிக்கதிர் இதழின் முதன்மை நோக்கம். அதிலும்  இதழில் ‘மாயூர யுத்தம்’ என்ற பெயரில் கோமல் அன்பரசன் எழுதி வரும் தொடர், இதழ் மூலமாகவும் இணையம் வழியாகவும் உலகெங்கும் காவிரி டெல்டாவைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது.

காவிரிக்கதிர்
118,இரண்டாம் தளம்,தாஜ் டவர், காந்திஜி சாலை,
மயிலாடுதுறை-609001
நாகப்பட்டினம்(Dist).

மின்னஞ்சல்:Kavirikathir@gmail.com
Phone:04364-225757

குறிப்பை அனுப்பியவர்: கருணாநிதி கன்னையன்

8)
கணையாழி

கணையாழி எனக்கு அறிமுகமாகி ஒரு வருடமாகிறது. இலக்கிய உலகில் தனி அடையாளமாக இருப்பது அதன் இயல்பு. ஒவ்வொரு கவிதைக்கும் தனியொரு பக்கம் ஒதுக்கி, அதற்கு வரைபடமும் கொடுதிருப்பார்கள், நான் மிகவும் ரசித்த கவிதை பக்கங்கள் பல.

மற்ற பத்திரிக்கைகளை வாசிப்பதற்கும், கணையாழியை வாசிப்பதற்கும் அதிகமான வேறுபாடு உண்டு, இது மிகையல்ல உண்மை. வாசகனால் வாசிக்கப்படும் ஒவ்வொரு சிறுகதைகளும் வெவ்வேறு தளங்களை உருவாக்கிச் செல்லும் வடிவமைப்பு நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.

கணையாழியை வாங்குவதற்காக நான் செல்லும் பாதைகள் மாறுவதில்லை, அதன் வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

கணையாழிக்கு எனது வாழ்த்துக்கள்

மாத இதழ்
விலை: 20 ரூபாய்

மின்னஞ்சல் : kanaiyazhi2011@gmail.com

கிடைக்குமிடம்:
பனுவல் புத்தக நிலையம்
112, திருவள்ளுவர் சாலை, 
திருவான்மியூர் -600041

குறிப்பை அனுப்பியவர்: பாண்டிய ராஜ்

9)
தமிழ்ச்சிட்டு

தமிழ்ச்சிட்டு சிறுவர்களுக்கான மாத இதழ். தென்மொழி என்ற பெயரில் பாவலேரேறு பெருஞ்சித்திரனார் தொடங்கிய இலக்கிய மாத இதழின் தொடர்ச்சியாக சிறுவர்களுக்காக வெளிவந்த தமிழ்ச்சிட்டு இதழும் மாத இதழாக வெளிவருகிறது.

ஆண்டுக்கட்டணம்: உரு.120.00
வாழ்நாள் கட்டணம்: உரு.1000.00 (பத்து ஆண்டுகள்)
தனி இதழ் உரு.10.00
வெளிநாடு ஆண்டுக்கட்டணம்: உரு.1000.00

அலுவலகத் தொடர்பு முகவரி:
தென்மொழி,
மேடவாக்கம் கூட்டுச் சாலை,
சென்னை – 600100.
94444 40449, 94438 10662

thamizhnilam@gmail.com

குறிப்பை அனுப்பியவர்: தமிழ்.

10)
சிற்றேடு. 

இந்த சிற்றிதழை எனக்கு திரு.க.நல்லதம்பி அவர்கள் அறிமுகப்படுத்தினார்.

சிற்றேடு  பெங்களூரில் இருந்து வெளிவரும் காலாண்டிதழ். முக்கிய கன்னட மற்றும் கேரள எழுத்தாளர்களின்  மொழிபெயர்ப்பு  கதைகள், தலித் இலக்கியம் குறித்த பார்வை, நவீன தமிழ் வளர்ச்சி மற்றும் பயன்பாடு பற்றிய கட்டுரைகள், சமூக/ பொருளாதார கட்டுரைகள், கவிதைகள், பின் நவீனத்துவத்தின் பரிமாணங்கள் என விரிகிறது இந்த சிற்றிதழ்.

பிற சிற்றிலக்கிய இதழ்கள் பற்றிய அறிமுகம்  பெட்டிச் செய்தியாக பக்கம் தோறும் வருவது புதுமை மற்றும் சிறப்பு.

ஆசிரியர்:தமிழவன்
இணை ஆசிரியர்:சிவசு

முத்துக்கிரிஷ்னன்
பா.ரவிகுமார்
விஷ்ணுக்குமாரன்
வனிதா
திருநாவுக்கரசு

அலை பேசி  எண் 09346787741 
மின்னஞ்சல்:tamil4545@gmail.com

குறிப்பை அனுப்பியவர்: மணிமொழி

11) 
உயிர்மை

கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களால் உயிர்மை பதிப்பகத்தின் மூலமாக நடத்தப் பெற்று வரும் உயிர்மை மாத இதழாக வெளிவருகிறது. தமிழ் இலக்கிய சூழலின் ஆரோக்கியமான பக்கத்தை படம் பிடித்துக் காட்டுவது இவ்விதழின் சிறப்புகளின் ஒன்றாகும். 

இவ்விதழில்  வெளியாகும் பதிவுகள் சிறுகதை, கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்புக் கதை, புத்தக விமரிசனம் போன்ற பல பிரிவுகளின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.

பல எழுத்தாளர்களின் சிறுகதைகள், கவிதைகள் மற்றும்  கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இதழ் இவ்விதழின் 100-வது சிறப்பிதழாக வெளிவந்த தருணத்தில் பல எழுத்தாளர்களிடம் தமிழ் இலக்கிய சூழல் மற்றும் அரசியல் பற்றி கேட்கப்பெற்ற கேள்விகளும் பதில்களும் இடம்பெற்றிருந்தன என்பது சிறப்புச் செய்தி. 

சந்தா - 
ஆண்டுச் சந்தா 225/- ரூபாய்கள்  
தனி இதழ் - 20 ரூபாய்கள்  
ஆயுட்காலச்  சந்தா - 5000 ரூபாய்கள் . 

தனி மாத இதழ் மட்டும் அன்றி, கடந்த வருடங்களின் இதழ்களின் தொகுப்புகளை பெற விரும்பும்  வாசகர்களுக்கு அவை சிறந்த முறையில் பைண்ட் செய்யப்பெற்று விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த தொகுப்புகள் பெரும்பாலும் சென்னை மற்றும் தமிழ் நாட்டின் பிற நகரங்களில்  நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் போது உயிர்மை பதிப்பகத்தின் கடையில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. ஆண்டுச்  சந்தா மற்றும் ஆயுட்காலச் சந்தா செலுத்தும் வாசகர்களுக்கு ஒவ்வொரு மாதமும் முதல் 3 தேதிகளுக்குள் அம் மாததத்திற்கான  இதழ் புக் போஸ்ட் மூலம் முறையில் அனுப்பி வைக்கப் படுகின்றன.              
                  
மேலும் விபரங்களுக்கு http://www.uyirmmai.com

குறிப்பை அனுப்பியவர்: விக்ரம்

12)
இளந்தமிழன்

விவரங்கள்
ஆசிரியர்: தி.வ. மெய்கண்டார்
துணையாசிரியர் எஸ்.இராசரத்தினம்
அ.பெ.எண்.637, 7 கிழக்கு மாட வீதி, மயிலை, சென்னை-600 004
தனி இதழ் ரூ.10, ஆண்டுக் கட்டணம் ரூ.120

ஒவ்வொரு மாதமும், தமிழ் உலகில் முக்கியப் பங்காற்றியவர்களில் ஒருவர் பற்றிய சிறப்பிதழாக இது வெளியிடப்படுகிறது. அனேகமாக, நமக்குத் தெரியாத தகவல்களாக அவை இருக்கும். இவை தவிர ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள் ஆகியவையும் உண்டு. இளம் எழுத்தாளர்களின் சிறுகவிதை, கவிதை, கட்டுரை முதலிய படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

குறிப்பை அனுப்பியவர்: கி.அனந்தநாராயணன்.

13)
கவிதா மண்டலம்

ஆசிரியர்: தி.வ. மெய்கண்டார்
அ.பெ.எண்.637, 7 கிழக்கு மாட வீதி, மயிலை, சென்னை-600 004
தனி இதழ் ரூ.10, ஆண்டுக் கட்டணம் ரூ.120

இதுவும் ஒரு மாத இதழ், ஆனால் கவிதைகள், கவிஞர்கள், அவைபற்றிய குறிப்புகள், ஆய்வுகள், தகவல்கள் முதலியவை இடம் பெறுகின்றன. 

குறிப்பை அனுப்பியவர்: கி.அனந்தநாராயணன்.