Apr 27, 2015

உருளுதாம் சாயுதாம் புரளுதாம்

இந்தக் காலத்தில் ஒருவனை பொது இடத்தில் தாக்குவது பெரிய காரியமேயில்லை. நினைத்தால் போதும். நான்கு குத்துக்களை இறக்கிவிடலாம். பெரிய ஊர்களில்தான் இப்படி அடித்துக் கொள்வார்கள் என்று இல்லை. கோபி போன்ற ஊர்களிலும் அடித்துக் கொள்கிறார்கள். சனிக்கிழமையன்று மார்க்கெட் அருகில் பேசிக் கொண்டிருந்தோம். இப்போதைக்கு குமணன் அண்ணன் வழியாகத்தான் உள்ளூர் விவகாரங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்தான் source. அடுத்த முறை செங்கோட்டையனுக்கு ஸீட் தருவார்களா என்று பேசிக் கொண்டிருந்த போது வெளியில் தப், தொப் என சத்தம் கேட்கத் துவங்கியது. வடிவேல் சொல்வது போல உருளுதாம், சாயுதாம், புரளுதாம்- கடைக்கு முன்பாக நிறுத்த வைக்கப்பட்டிருக்கும் தகரத் தட்டிகள் மீதெல்லாம் விழுகிறார்கள். பைக், சைக்கிள் என்று ஒன்று பாக்கியில்லை. எழுந்து சென்றால் ஆளாளுக்கு சாத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுதெல்லாம் உள்ளூர் தட்டிகளில் செங்கோட்டையனின் பெயரே தென்படுவதில்லை. அமைச்சராக இருந்த போது அவர் ஊருக்கு வரும் போதெல்லாம் ‘சாதனைச் செம்மலே வருக’ என்று போஸ்டர் ஒட்டுவார்கள். அவரும் வெள்ளிக்கிழமையானால் ஊருக்கு வந்து போவார். ஒரு காலத்தில் அவருடைய விரலசைவு இல்லாமல் ஈரோடு மாவட்டத்தில் எதுவும் நடந்ததில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கொடி பறக்கவிட்டுக் கொண்டிருந்த சு.முத்துச்சாமி கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்ட பிறகு செங்கோட்டையனின் கொடி பறக்கத் தொடங்கியது. இரண்டாவது முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு சுத்தமாக காலி செய்யப்பட்ட முத்துச்சாமி இப்பொழுது திமுகவுக்குச் சென்றுவிட்டார். அங்கு என்.கே.கே.பி.ராஜாவுடன் லடாய் ஆகி இதுவரை ஒன்றாக இருந்த மாவட்ட திமுகவை இரண்டாகப் பிரித்து ஒன்றை ராஜாவுக்கும் இன்னொன்றை முத்துச்சாமிக்கும் கொடுத்துவிட்டார்கள். அதிமுகவின் தளபதியாக இருந்த செங்கோட்டையனுக்கு பெரிய பன்னாகக் கொடுத்து அமர வைத்துவிட்டார்கள்.

ஏன் அவரை டம்மியாக்கியிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. வெறும் யூகங்கள்தான். பெண் விவகாரத்தில் சிக்கிக் கொண்டதால் அவருடைய மகனும் மனைவியுமே மேலிடத்தில் புகார் அளித்து காலியாக்கிவிட்டார்கள் என்கிறார்கள். அதெல்லாம் இல்லை- தனக்கு ஆதரவாக தொண்ணூறு எம்.எல்.ஏக்களைத் திரட்டி வைத்திருந்தார். அதனால்தான் டம்மியாக்கிவிட்டார்கள் என்று இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள். செங்கோட்டையன் அந்தளவுக்கு தைரியமானவர் இல்லை என்றுதான் நினைக்கிறேன். 

அதெல்லாம் எப்படியோ போகட்டும். இப்பொழுது அவருக்கு நிலைமை சரியில்லை. தோப்பு வெங்கடாசலம்தான் பெரிய மனுஷன். பார்த்த பக்கமெல்லாம் அவருடைய பெயர்தான் இருக்கிறது. செங்கோட்டையனின் விசுவாசிகள் ‘எதுக்கு வெட்டி வம்பு?’ என்று ஜெயலலிதாவின் பெயரை மட்டும் அச்சடித்துவிட்டு மற்றவர்களின் பெயர்களை தவிர்த்துவிடுகிறார்கள். இந்த மாதிரி எதையோ பேசிக் கொண்டிருந்த போதுதான் அந்த உருளுதாம், சாயுதாம், புரளுதாம்.

உடனடியாக எதுவும் புரியவில்லை. மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவனுக்கு வாயிலும் மூக்கிலும் ரத்தம் ஒழுகுகிறது. இன்னொருவனுக்கு நெற்றி வீங்கிக் கிடந்தது. வேறு சிலரும் களத்தில் புலிகளாகி நின்றிருந்தார்கள். அத்தனை பேரும் இருபதைத் தாண்டாத விடலைகள். மூக்கில் ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தவன் சிவப்பு நிறச் சட்டை அணிந்திருந்தான். அவன் தனி ஆள். மற்ற அத்தனை பேரும் ஒரு குழு. ஏன் அடிக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. அடி வாங்கியவனும் அமைதியாக இருக்கவில்லை. வெறியெடுத்துத் திரிந்தான். தன்னை அடிப்பதற்காக அருகில் வருபவன் மீதெல்லாம் கையை வீசிக் கொண்டிருந்தான். அடித்தவர்கள் வண்டிப்பேட்டைக்காரர்கள். வண்டிப்பேட்டை இந்தக் கலவரம் நடந்த இடத்துக்கு அருகாமையில்தான் இருந்தது. அங்கிருந்து ஆட்கள் திமுதிமுவென்று வந்து கொண்டேயிருந்தார்கள். வந்தவர்கள் ஒவ்வொருவரும் சிவப்புச் சட்டைக்காரன் மீது ஒரு வீச்சை வீசினார்கள்.

சிவப்புச்சட்டைக்காரனின் வீடு சற்று தள்ளியிருக்கும் போலிருக்கிறது. தனக்குத் தெரிந்த நண்பர்களையெல்லாம் ஃபோனில் அழைத்துக் கொண்டிருந்தான். ஆனால் ஒருவரும் வந்து சேர்ந்தபாட்டைக் காணோம். அதற்குள் அவனுக்கு அடி மீது அடியாக இறங்கிக் கொண்டேயிருந்தது. இடையில் சிலர் புகுந்து தடுத்தார்கள். தடுத்தவர்கள் அத்தனை பேருக்கும் சினிமாவிலிருந்த பஞ்ச் டயலாக்குகளை பதிலாகச் சொன்னார்கள். 

‘ஒருத்தனைப் போட்டு இத்தனை பேர் அடிக்கறீங்களே’ என்று ஒருவர் கேட்டார்.

‘வரச் சொல்லுங்க..ஒத்தைக்கு ஒத்தை...நான் அடிக்கறேன்..இங்கேயே அடிக்கறேன்’ என்கிறான். இந்த வசனத்தைக் கேட்ட சிவப்புச் சட்டைக்காரனுக்கு கோபம் பொங்கி வர ஒத்தைக்கு ஒத்தை வரத் தயாராகினான். ஏற்கனவே ரத்தத்தைத் துப்பிக் கொண்டிருக்கிறான். மற்றவர்கள் தடுத்தார்கள். 

‘அவனுக்கு ஒரு உசிரு...வண்டிப்பேட்டைக் காரனுக்கு ரெண்டு உசிரு...தெரியுமா’ என்றான் இன்னொருவன். இந்த டயலாக் எந்தப் படத்தில் வருகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இன்னொருத்தன் சற்று நாகரீகமாக இருந்தான். மற்றவர்களை அழைத்துச் செல்வான் என்று நினைத்தால் நடு சாலையில் நின்று கொண்டு ‘வாங்கடா வாங்க...இன்னைக்கு அவனா நாமளான்னு பார்த்துடுவோம்’ என்கிறான்.

ட்விஸ்ட் இல்லாமல் கொலை நடக்கும் போலத் தெரிந்தது. ‘அண்ணா போலீஸைக் கூப்பிட்டுடலாம்’ என்றேன். குமணன் ‘டேய் கிளம்புங்கடா..வண்டிப்பேட்டைன்னா பெரிய கழட்டிகளா?’ என்கிற ரீதியில் சத்தம் போடவும் கண்ணாடிக்காரன் திரும்பி குமணனை முறைத்தான். அந்த ஏரியாவே தனுஷ், சிம்பு, விஜய்களாக மாறித் திரிவதாகத் தோன்றியது. அச்சு அசலாக சினிமா நாயகர்களைப் போலவே செயல்படுகிறார்கள். நடை, பாவனையிலிருந்து சட்டைப் பொத்தானைக் கழற்றி கொஞ்சம் மேலேற்றிவிட்டுக் கொள்ளும் உடை வரைக்கும் அப்படியே சினிமாவைக் காப்பியடிக்கிறார்கள். தங்களின் நாயக பிம்பத்தை வாய்ப்புக் கிடைக்கிற சமயத்தில் வெளிக் கொண்டு விரும்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் குடித்திருந்தார்கள். கைகளை முறுக்கியபடியே நிற்கிறார்கள். சர்வசாதாரணமாக பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள்.

ஒருவனுக்கு மூக்கு உடைந்து ரத்தம் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. செத்துவிடுவான் போலத் தெரிகிறது. இருந்தாலும் அடங்கவில்லை. அவனை அதே இடத்திலேயே கொல்ல வேண்டும் என்கிறார்கள். அவ்வளவு வன்மம். அவ்வளவு குரூரம். ரத்தத்திற்கும் உயிருக்கும் எந்த மரியாதையும் இல்லை. எவனாவது சிக்கும் போது தங்களின் மனக்கசடுகளை அப்படியே அவன் மீது இறக்கி வைக்கிறார்கள். சற்று நடுக்கமாகத்தான் இருந்தது. நல்லவேளையாக ஒரு கான்ஸடபிள் வந்தார். யாரோ தகவல் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. காக்கிச் சட்டையைப் பார்த்தவுடன் அடித்தவர்கள் அத்தனை பேரும் அந்த இடத்தை விட்டு தப்பித்துவிட்டார்கள். அடி வாங்கியவன் சற்று தள்ளி நின்றிருந்தான். ‘போலீஸ் வந்துட்டாங்க...வந்து கம்பெளய்ண்ட் கொடு’ என்று அழைத்து வந்தேன். 

அவனோடு வரும் போது ‘எதுக்கு உன்னை அடிச்சாங்க?’ என்றேன்.

‘தெரியலங்கண்ணா...சும்மா சிரிச்சானுக...கிண்டலடிச்சானுக...ஏண்டா சிரிக்கிறேன்னு கேட்டதுக்கு அடிச்சுட்டாங்க’ என்றான். இவனுக்கும் அந்தக் குழுவுக்கும் முன் பின் அறிமுகம் கூட இல்லை. பகைமையும் எதுவும் இல்லை. இன்ஸ்டண்ட் பகை. 

போலீஸ்காரருக்கு அருகில் நாங்கள் வந்த போது கண்ணாடிக்காரன் சிக்கியிருந்தான். விவரங்களைக் குறித்துக் கொண்டு அவனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அதற்குள் சிவப்புச் சட்டைக்காரன் வாந்தியெடுக்கத் துவங்கியிருந்தான். அவனுடைய நண்பர்களும் வந்து சேர்ந்திருந்தார்கள்.‘வாங்க ஜி.ஹெச்சுக்கு போயிடலாம்’ என்று அவர்களோடு சேர்ந்து கிளம்பினேன். அன்றைக்கு சிவசங்கர்தான் அங்கு பணி மருத்துவர். அவர் சாப்பிடச் சென்றிருந்தார். மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. வீட்டிலிருந்து அழைக்கத் துவங்கியிருந்தார்கள். ‘பார்த்துக்குங்க..’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். இரவு பதினோரு மணிக்கு மேலாக மருத்துவரை அழைத்துக் கேட்டேன். ‘பையனுக்கு தலையில் அடிபட்டிருக்கிறது. அதனால் வாந்தியெடுக்கிறான். சற்று அபாயம்தான். இங்கு வசதிகள் இல்லையென்பதால் ஈரோடு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்’ என்றார். தலையில் அடிபட்டு வாந்தி எடுப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன வேண்டுமானாலும் ஆகலாம். அவனைப் பெற்றவர்கள் என்ன பாடுபடுவார்கள்? அவனுடைய வாழ்க்கை என்னவாகும்? ஒரு சாதாரணப் பிரச்சினையில் ஒருவனைக் கொன்றுவிட்டுப் போகுமளவுக்கு எங்கேயிருந்து வேகம் வருகிறது?

நினைக்கவே திகிலாக இருக்கிறது. ஒரு செடியை வைத்து தட்டானை அடிப்பது போல மனிதர்களை அடித்துக் கொன்றுவிடுவதற்கு சக மனிதர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். தூக்கம் வரவில்லை. டிவி பார்க்கலாம் என்று தோன்றியது. லோக்கல் சானலில் சுள்ளான் ஓடிக் கொண்டிருந்தது. அணைத்துவிட்டு போய் படுத்தேன். எவ்வளவு நேரம் புரண்டு கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை.