Apr 6, 2015

பீடாதிபதிகள்

அன்புள்ள வா.ம. அண்ணனுக்கு,

கூட்டம் நிறைவாக இருந்தது. புகைப்படங்களில் பார்த்தது போலவே நீங்கள் இருந்ததும், வேட்டியில் வந்திருந்ததும் திருப்தியாக இருந்தது.

தன் எழுத்தாளனை கொண்டாடும் இத்தனை வாசகர்களை ஒரு இலக்கிய கூட்டத்தில் நான் பார்ப்பது இதுவே முதன்முறை. எத்தனை அன்பு. எத்தனை நெகிழ்ச்சி! நீங்கள் என்னதான் மறுத்தாலும் உங்கள் நேர்மைக்கும், வெளிப்படைத்தன்மைக்கும் தொடர்ந்த உழைப்பிற்கும் கிடைத்த வெற்றியே இது. சிறப்பு விருந்தினர்களின் பேச்சைக் காட்டிலும் வாசகர்களான நாகேஸ்வரன் ஐயாவின் பேச்சும், சைதை புகழேந்தி அண்ணனின் பேச்சும் சிறப்பாக அமைந்ததை கூட்டத்தின் சிறப்பம்சமாக நான் பார்க்கிறேன்.

கவிதா பாரதி அவர்களின் பேச்சின் போதுதான் எனக்கு சில கேள்விகளும் குழப்பமும் உண்டாயின. அவர் மட்டுமல்ல கூட்டத்தில் பெரும்பாலானோர் பேச்சில் இந்த ‘அப்பாடக்கர்’ எழுத்தாளர்கள் மீதான எரிச்சலை காண முடிந்தது. ‘அப்பாடக்கர்’ என்கிறார்கள், ‘பீடாதிபதிகள்’ என்கிறார்கள். இவர்கள் குறிப்பிட்டு யாரை சொல்கிறார்கள் என புரியவில்லை. (அப்படி குறிப்பிட்டு யாரையும் சொல்லிவிடக் கூடாது என்றும் பயந்து கொண்டிருந்தேன்.) தீவிரமாக எழுதக்கூடிய (தங்களைபோன்ற எளிமையான எழுத்துநடை இல்லாமல்) அனைவரையுமே இவர்கள் இப்படி குறிப்பிடுகிறார்களா அல்லது தீவிரமான எழுத்து என்ற பாவனையில் எழுதப்படும் போலிகளையா? பின்னதை விமர்சிப்பதை பற்றி கவலையில்லை. ஆனால் இவர்கள் ஒட்டுமொத்தமாக முன்னதையும் சேர்த்து நிராகரிக்கிறார்களோ என்ற எண்ணம்தான் வருத்தமளிக்கிறது.

கவிதா பாரதி அவர்கள் பீடாதிபதிகள் என ஆரம்பித்ததும் எனக்கு ஜெமோ ஞாபகம்தான் வந்தது. அவர் ஆரம்பத்தில் பொதுவுடைமை இயக்கத்தில் வேறு இருந்ததாக சொன்னாரே? ஆம் ஜெமோவைதான் சொல்கிறார் என மனம் கணக்கு போட ஆரம்பிதது. கூட்டத்தில் யாரோ ‘விருதெல்லாம் தருவார்கள்’ என ஏற்றி விட்டது என் எண்ணத்தை உறுதிபடுத்தியது. ஜெமோ பெயரை மட்டும் அவர் சொல்லிவிடக் கூடாது எனப் பிரார்தித்துக் கொண்டிருந்தேன். நல்லவேளையாக அவர் எந்த பெயரையும் கடைசிவரை குறிப்பிடவில்லை. தன்னை பார்க்க வருபவர்களை மூவாயிரம் ரூபாய்க்கு குறையாமல் சரக்கு வாங்கி வரச்சொல்வார் என ஒருவரை குறிப்பிட்டாரே? அவர் யார்..? சாருவா?.. பிறகு சேவகம் செய்தால் பதிப்பகத்தில் புத்தகம் போட்டுவிடலாம் எனக் குறிப்பிடப்பட்டவர்…. மனுஷ்யபுத்திரன்? அல்லது அது பதிப்பகங்கள் குறித்த பொதுவான விமர்சனமா? அப்படியென்றால் அது உயிர்மையா? காலச்சுவடா? என ஏகப்பட்ட கேள்விகள். இல்லை இப்படியெல்லம் யோசிக்க கூடாது. அவர் குறிப்பிட்ட பீடாதிபதிகள் மேலே சொன்ன எவரும் அல்ல. அவர்கள் வேறு யாரோ என்றே எண்ணிக் கொள்கிறேன். ஆனால் தமிழிலக்கியம் அறிமுகம் ஆனதிலிருந்தே எனக்கு இந்த பூசல்களும் விடுகதைகளும் சோர்வையே அளிக்கின்றன.

சரி விடுகதைகளை விட்டுவிடுவோம். எனக்கு இந்த மனநிலைதான் பயமாக இருக்கிறது. எளிமையான எழுத்து, புரிகிற மாதிரியான எழுத்து- இதுவே போதும் என்ற மனநிலை. இவர்கள் இப்படி தீவிரமான எழுத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கும் போது எளிமையான எழுத்துக்கு பிரதிநிதியாக உங்களை முன்வைப்பதுதான் எனக்கு சங்கடமாக இருக்கிறது. அண்ணன் கரிகாலன் சொன்னது போல அப்படி யாரையும் எளிதில் விட்டுகொடுத்துவிட முடியாது. இது ஒரு ஒட்டுமொத்த சங்கிலி. இங்கு அனைத்து வகையான எழுத்துக்கும் சமமான தேவை இருக்கிறது என்றே நினைக்கிறேன். எளிமையான எழுத்து இங்கில்லையேல் வாசிப்பே அறுபட்டுவிடக் கூடும். தீவிரமான எழுத்து இல்லாமல் போவது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பேரிழப்பே. எவ்வளவு கட்டியமைக்கபட்டதாக தோன்றினாலும் சாருவின் துள்ளலும் கொண்டாட்டமுமான எழுத்து நமக்குத் தேவை. எவ்வளவு ஆயாசமூட்டக்கூடியதாய் இருந்தாலும் ஜெமோவின் நீண்ட கட்டுரைகள் நம் சிந்தனைக்கு கண்டிப்பாகத் தேவை. இவர்களை ஏற்கலாம், மறுக்கலாம். ஆனால் பெருமொத்தமாக ‘புரியாத எழுத்து’ என்ற ஒற்றை வரியில் நிராகரிப்பது எப்படி அறிவுடைமை ஆகும்?

கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக நிசப்தம் தளம் வாசிப்பவர்கள். அப்படியெனில் வாசிப்பு பழக்கம் கொண்டவர்கள். இவர்களே தீவிரமான எழுத்தை இப்படி பொத்தாம்பொதுவாக நிராகரித்தால் சராசரித் தமிழனுக்கு எப்படி தமிழிலிக்கியம் என ‘ஒன்று’ இருக்கிறது என்கிற சேதியை கொண்டு சேர்த்துவது? இத்தனைக்கும் நீங்கள் நல்ல கவிதைகள் குறித்தும், புத்தகங்கள் குறித்தும் அவ்வபோது அறிமுகம் தருகிறீர்கள். தீவிரமான எழுத்துக்கு நீங்கள் எதிரி என்றும் காட்டிக் கொண்டதில்லை. நீங்கள் அப்படி நினைப்பவரும் அல்ல என்பதை தங்கள் எழுத்தில் அறிகிறேன். ஆனால் வாசகர்கள் இந்த மனநிலைக்கு எப்படி வந்து சேர்கிறார்கள் என்றுதான் குழப்பமாய் இருக்கிறது.

அதேசமயம் ‘தினசரி மாதிரி எழுதுறான், இலக்கியத் தரம் இல்லாம எழுதுறான்’ போன்ற பொறுப்பற்ற எதிர்வினைகளை கண்டு நீங்கள் கோபப்படுவதோ, எரிச்சலடைவதோ, கண்டுகொள்ளாமல் விடுவதும் மிகவும் சரியே. அது உங்கள் உரிமையும் கூட. என் கவலையெல்லாம் உங்களை defend செய்கிறேன் என்ற பெயரில் வாசகர்கள் தீவிர எழுத்துமுறைக்கு எதிரியாக மாறிவிடுவார்களோ என்பதுதான்.

கண்முன்னே இரு பிரிவுகள் உண்டாவதை கான்கிறேன். எளிமையான எழுத்து vs தீவிரமான எழுத்து. இந்த பக்கம் இருப்பவன் அவனை பார்த்து ‘நீளமான எழுத்து, புரியாத எழுத்து’ என இடதுகையால் தள்ளிவிடலாம். அவன் இவனை பார்த்து ‘சாரமில்லாத எழுத்து, ஒரு தரிசனமே இல்ல’ எனக் கைகொட்டலாம். இருதரப்பினரும் மறுதரப்பினரை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கலாம்.

இவ்வாறு ஒரு மனச்சித்திரம் எழுகிறது. ‘எனக்கு உங்க விளக்கமெல்லாம் வேணாம்யா. இங்க பாரு.. வா.ம.ன்னு ஒருத்தர் எழுதுறார்.. எல்லார்க்கும் புரியற மாதிரி எழுதுறார்.. தினமும் எழுதுறார்... இந்த மாதிரி எழுத்துதான் ‘சமூகத்துக்கு தேவை’ மத்ததெல்லாம் எழுத்தாளனின் வெறும் மேதாவித்தனங்கள்! முடிஞ்சா இவர மாதிரி எழுதுங்கய்யா..!’. இப்படி ஒரு சித்திரம் மட்டும் எழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன்.
தே.அ.பாரி.

                                                                     ***

சென்னையில் நடைபெற்ற நிகழ்வு குறித்து கணிசமான எதிர்வினைகள் வந்திருந்தன. அவற்றுள் நீண்டதும் முக்கியமானதுமாக இந்த மின்னஞ்சலைக் கருதுகிறேன். 

பாரி குறிப்பிடுவது போன்ற இரு பிரிவுகள் காலங்காலமாக இருந்து கொண்டேதான் இருக்கின்றன. ‘நீ எழுதுவது இலக்கியமா?’ என்று ஒரு தரப்பு சொல்வதும் ‘இவன் எழுதுவது புரிகிறதா?’ என்று இன்னொரு தரப்பு கேட்பதும் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் விவகாரம்தான். ஆனால் எழுதிக் கொண்டிருப்பவன் இதைப் பெரிதாக மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியதில்லை. மற்றவர்களைப் பற்றி தெரியவில்லை. நான் அப்படித்தான் இருக்க விரும்புகிறேன். 

எழுத்தின் படிநிலைகளைப் பற்றிப் பேசத் துவங்கினால் எந்த எழுத்தையுமே நிராகரிக்க வேண்டியதில்லை என்கிற முடிவுக்குத்தான் வருவோம்.  ஆய்வியல் மாணவனுக்கு எட்டாம் வகுப்புப் பாடத்தைப் படிப்பதில் சிரத்தை இல்லாமல் இருக்கலாம். அது அவனுக்கு மிக எளிதான ஒன்றாக இருக்கக் கூடும். அதே போல பத்தாம் வகுப்பு மாணவன் ‘இதோடு படிப்பை நிறுத்திக் கொள்கிறேன்’ என்று திருப்திப் பட்டுக் கொள்ளலாம். ஆனால் அத்தனை பாடங்களும் தொடர்ந்து evolve ஆகிக் கொண்டேதான் இருக்கும். எதை வாசிக்கிறோம் அல்லது எதை நிராகரிக்கிறோம் என்பது தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம்.

ஒரு காலத்தில் தனிமையும் துக்கமும் அழுத்திக் கொண்டிருந்த போது கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். ஒருவிதத்தில் அவை stress busters. இப்பொழுதிருக்கும் வாழ்க்கை முறைக்கு இன்றைக்கு எப்படி எழுதிக் கொண்டிருக்கிறேனோ அது இதமானதாக இருக்கிறது. நாளைக்கு வாழ்க்கை எப்படியிருக்கும் என்று தெரியாது. அந்தச் சமயத்திற்குத் தகுந்தபடி அப்பொழுது எழுதிக் கொள்ளலாம். இதைத்தான் எழுத வேண்டும் என்று மற்றவர்களுக்காக வருத்திக் கொள்ளப் போவதில்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று என்னைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொள்வதிலும் விருப்பம் இல்லை. அதன் போக்கில் செல்லட்டும். 

நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல என்னைப் பற்றி எந்தச் சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளவும் விருப்பம் இல்லை. அது எந்தவிதமான சித்திரமாக இருந்தாலும் சரி. ஆனால் நம்மை மீறி உருவாகும் சித்திரங்களை நம்மால் எப்படி கலைக்க முடியும் என்றும் தெரியவில்லை. ஏதாவதொருவிதத்தில் கலைக்க முடியுமானால் கலைத்துவிட எல்லாவிதமான பிரயத்தனங்களையும் செய்து பார்க்கவே விரும்புகிறேன்.