ஓர் இளைஞர் கவிதைப் புத்தகம் வெளியிடுவது குறித்து பேசிக் கொண்டிருந்தார். இது நடந்து ஆறு மாதங்கள் இருக்கும். அவருடைய எந்தக் கவிதையும் பிரசுரமானதில்லை. பிரசுரம் செய்துவிட்டு வெளியிடுங்கள் என்று சொல்லியிருந்தேன். ஆர்வக் கோளாறு. வெளியிட்டுவிட்டார். ‘பதிப்பகத்திடம் இருபத்தைந்தாயிரம் ரூபாய் கொடுத்தேன்’ என்றார். தூக்கிவாரிப் போட்டது. இப்பொழுதெல்லாம் நிறையப் பேர் இதை வைத்து காசு சம்பாதிக்கிறார்கள். எண்பது பக்கமுள்ள ஒரு கவிதைத் தொகுப்புக்கு இருபத்தைந்தாயிரம் கறந்திருக்கிறார்கள். பன்னிரெண்டாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் வரைதான் செலவு பிடிக்கும். மிச்சமான பத்தாயிரம் ரூபாய் பதிப்பகம் நடத்தும் அந்த இலக்கிய கர்த்தாவின் சட்டைப்பைக்குள் சென்றுவிடும்.
நூற்றியிருபது பக்கமுள்ள ஒரு புத்தகத்துக்கு நாற்பத்தைந்தாயிரம் ரூபாய் வாங்கிய பதிப்பகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். இருபதாயிரம் ரூபாய்க்குள் முடிக்க வேண்டிய காரியம் அது. இதெல்லாம் இப்பொழுது மிகப்பெரிய மார்கெட். நிறையப் பேர் புத்தகம் வெளியிட வேண்டும் என்கிற ஆசையுடன் இருக்கிறார்கள். கார்போரேட்வாசிகள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் என்று தெரிந்தால் ‘நாங்க இருக்கோம்’ என்று இழுத்துப் போட்டு அச்சிட்டுக் கொடுத்துவிடுகிறார்கள். கொழுத்த இலாபம்.
பதிப்பகத்தில் விற்றுத் தர மாட்டார்கள். அச்சிட்டு மட்டும்தான் கொடுப்பார்கள்.
எழுத ஆரம்பித்த சில மாதங்களிலேயே புத்தகம் வெளியிட வேண்டும் என அவசரப்படுவதனால் உண்டாகும் விளைவு இது. அவசரப் வேண்டியதில்லை. அப்படியொரு ஆர்வம் இருக்கும்தான். ஆனால் அப்படி அவசர அவசரமாக வெளியிட்டு என்ன சாதிக்கப் போகிறோம்? நம்மிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஐந்நூறு பிரதிகள் அச்சிடும் பதிப்பகத்தார் எப்படியும் நானூறு பிரதிகளை நம்மிடம் தள்ளிவிட்டுவிடுவார்கள். பொரி கடலை மாதிரி அத்தனை பிரதிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? நமக்குத் தெரிந்த வட்டத்தில் விசிட்டிங் கார்ட் கொடுப்பது போலக் கொடுக்க வேண்டியதுதான். வாங்கி வைத்துக் கொள்பவர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் முதல் பத்து பக்கங்களைக் கூட புரட்ட மாட்டார்கள் என்று சத்தியமே செய்யலாம்.
எழுத்து என்பது மாமனுக்கும் மச்சானுக்கும் சேர வேண்டிய வஸ்து இல்லை. நம்மைத் தேடி வந்து வாசிக்கிறவர்களுக்கானது அது. நம்மைத் தேடி வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். சரியாக எழுதுகிறோமோ, பொருட்படுத்தத்தக்க வகையில் எழுதுகிறோமோ என்கிற கேள்விகளை நமக்கு நாமே எழுப்பிக் கொள்ள வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு புத்தகம் வெளியிடுவதில் கவனத்தைச் செலுத்தினால் கவனம் அதிலேயேதான் இருக்கும்.
இப்படி அவசரப்பட்டு புத்தகத்தை வெளியிடுவதில் ஒரு பெரிய எதிர்மறை விளைவும் இருக்கிறது. சிலரை கவனித்திருக்கலாம்- முதல் புத்தகம் வெளியாகும் வரைக்கும் எவ்வளவு தகிடுதத்தங்களை வேண்டுமானாலும் செய்வார்கள். ஒரு புத்தகம் வெளியானால் போதும். ஆசை, கனவு என அத்தனையும் வடிந்து போய்விடும். அவ்வளவுதான். அதன் பிறகு எழுதவே மாட்டார்கள். ஒற்றை தொகுப்போடு காணாமல் போனவர்களை பட்டியல் எடுத்துப் பார்த்தால் தெரியும்.
புத்தகம் வெளியிடுவதை இரண்டாம்பட்சமாக வைத்துக் கொள்ளலாம். எழுத ஆரம்பித்ததிலிருந்து நமது பெயரை சற்று பரவலாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்தலாம். அதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதழ்களுக்கு அனுப்பத் தொடங்கலாம். அதுதான் மிகச் சிறந்த முறை. நாம் கவிதையென்றும், சிறுகதையென்றும் நம்பிக் கொண்டிருப்பதை அடுத்தவர்களும் அப்படியே நம்புகிறார்களா என்று இதன் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். பிரசுரமாகவில்லை என்றால் எதனால் நிராகரிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள எத்தனிக்க வேண்டும். அது நாம் எழுதிக் கொண்டிருக்கும் முறையில் மாறுதல்களைக் கொண்டு வரும். ஆரம்பகாலத் தடைகளை மீறி நம் எழுத்துக்கள் பிரசுரமாகத் தொடங்கும் போது பெயர் கவனம் பெறத் தொடங்கும். குறைந்தபட்சம் ஓரிரண்டு வருடங்கள் இதைச் செய்ய வேண்டும். அதன் பிறகு பதிப்பகங்களை அணுகுவதில் பெரிய சிக்கல் இருக்காது. அவர்களும் காசு கேட்கத் தயங்குவார்கள். புத்தகமாக வந்தாலும் விற்பனையாவதிலும் சிரமம் இருக்காது.
இதையெல்லாம் நாம் செய்யாமல் ‘புத்தகம் வெளியிட ஆசைப்படுபவர்களிடம் காசு வாங்கிக் கொண்டு அச்சிட்டுத் தருகிறார்கள்’ என்று பதிப்பகத்தாரையும் குறை சொல்ல முடியாது. ‘இதைப் புத்தகமாக்கினால் விற்பனையாகுமா?’ என்று யோசிக்கத்தான் செய்வார்கள். நம்மைப் பற்றி வெளியுலகில் யாருக்குமே தெரியாத போது நமது எழுத்தை சொந்தக் காசு போட்டு அச்சிட்டு வைத்தால் யாராவது வாங்க வேண்டும் அல்லவா? அதனால்தான் காசு கேட்கிறார்கள். வருடம் பத்து புத்தகம் அச்சிட்டுக் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் இலாபம் பார்த்துவிடுகிறார்கள். ‘இந்த வருடம் இத்தனை புத்தகம் வெளியிட்டேன் தெரியுமா?’ என்று அவர்களுக்கும் ஜம்பம் பேசிக் கொள்ள ஒரு வாய்ப்புக் கிடைத்துவிடுகிறது.
‘எப்போ சார் என் தொகுப்பை வெளியிடுவீங்க?’ என்று கவிஞர். மனுஷ்யபுத்திரனிடம் ஏகப்பட்ட முறை கேட்டிருப்பேன். அப்பொழுது மொத்தமாகவே பத்து அல்லது பதினைந்து கவிதைகள்தான் பிரசுரம் ஆகியிருந்தன. ‘இப்போ எல்லாம் போட்டா யாரும் வாங்க மாட்டாங்க’ என்று அவர் சொன்னபோது நம்பவில்லை. அழுத்தம் மேல் அழுத்தமாகக் கொடுத்து அவரும் வெளியிட்டுவிட்டார். இருந்தாலும் மொத்தப் பணமும் அவருடையதுதான். புத்தகம் வரும் வரைக்கும் இருந்த ஆர்வம் அத்தனையும் வடிந்து ‘புத்தகம் விற்குமா’ என்கிற கேள்வி எழத் தொடங்கியது. மூன்று பிரதிகள் கூட அந்த வருடத்தில் விற்றிருக்காது. புத்தகக் கண்காட்சியில் நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். விற்காவிட்டாலும் பரவாயில்லை- யாரும் கையில் கூட எடுத்துப் பார்க்க மாட்டார்கள். பெயர் வெளியிலேயே தெரியாத போது புத்தகம் வெளியானால் இதுதான் நடக்கும்.
பெயர் வெளியில் தெரிய வேண்டுமானால் அச்சு இதழ்களுக்குத்தான் படைப்புகளை அனுப்ப வேண்டும் என்றில்லை. இணைய இதழ்களுக்கும் அனுப்பலாம். சொல்வனம், இன்மை போன்ற இதழ்கள் மிகச் சிறந்த கவனம் பெற்று வருகின்றன. முதலில் இணைய இதழ்களில் முயற்சித்துவிட்டு பிறகு அச்சு இதழ்களில் முயற்சிக்கலாம். ஆனால் தயவு செய்து ஃபேஸ்புக்கை மட்டும் நம்ப வேண்டியதில்லை. இங்கு பிரச்சினை என்னவென்றால் ஃபேஸ்புக்கைத்தான் நம்புகிறார்கள். விழுகிற லைக் எல்லாம் படைப்புகளுக்கான ஆதரவு என்று நம்புகிறார்கள். அதில் துளி கூட உண்மை இல்லை. விழுகிற லைக்குகளில் பெரும்பாலானவை ஃப்ரொபைல் படத்துக்கான லைக்குகள்தான்.
அந்தத் தம்பியிடம் ‘கவிதைத் தொகுப்பை என்ன செய்யறீங்க?’ என்றேன். இதுவரை முந்நூறு பேருக்கு அனுப்பி வைத்திருக்கிறாராம். கூரியர் மூலமாக. குறைந்தபட்சம் இருபது ரூபாய் என்றால் கூட ஆறாயிரம் ரூபாய் ஆகியிருக்கும். இதுவரை இரண்டு பேர் கவிதைத் தொகுப்பைப் பற்றி பேசியிருக்கிறார்களாம். இன்னும் நூறு பிரதிகள் கைவசம் இருக்கின்றன. ஒவ்வொன்றாக அனுப்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். இரண்டு பேர் நமது கவிதைகளைப் பற்றி பேசுவதற்காக முப்பத்தைந்தாயிரம் ரூபாய் வரைக்கும் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. காஸ்ட்லியான விஷயம் இல்லையா?