முதலாம் உலகப்போருக்குப் பிறகு தலையெடுத்த நாஜிக்களின் ராவுடிகள் இரண்டாம் உலகப்போர் வரைக்கும் கொடிகட்டிப் பறந்தன என்பதை வைத்து ஏகப்பட்ட புத்தகங்கள் வந்துவிட்டன். திரைப்படங்களைக் கணக்கெடுத்தால் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும் போலிருக்கிறது. யூதர்களை குழுவாக ஒரு அறைக்குள் தள்ளிவிட்டு விஷ வாயுவை பாய்ச்சிக் கொல்வது, கூட்டம் கூட்டமாகச் சுட்டுக் கொல்வது, தூக்கிலிடுவது, உயிரோடு புதைப்பது, சித்ரவதை செய்து சாகடிப்பது என்று விதவிதமான வகைகளில் தீர்த்துக் கட்டினார்கள். இந்த வதைகளை படம் முழுக்கவும் காட்டி திகிலூட்டுவது ஒரு வகை என்றால் Backtrack(nazi vengeance) படம் இன்னொரு வகையில் திகிலூட்டுகிறது.
2014 ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது. இணையத்தில் நாஜிக்கள் குறித்தான படங்களைத் தேடிக் கொண்டிருந்த போது சிக்கியது. ஒரு படத்தைப் பார்ப்பதற்கு முன்பாக அந்தப் படத்திற்கு என்னவிதமான விமர்சனங்கள் வந்திருக்கின்றன என்று பார்ப்பது வழக்கம். தெரியாத்தனமாக ஆகாவழிப்படத்தைப் பார்க்கத் துவங்கி ஒன்றும் புரியாமல் திருகுவலி வந்துவிடக் கூடாதல்லவா? அதனால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. இந்தப் படத்திற்கு 10 க்கு 3 என்கிற ரீதியில்தான் புள்ளிகள் கொடுத்திருந்தார்கள். நாஜிக்கள் பற்றிய படம் என்பதால் கொட்டாவிப்படமாக இருந்தாலும் துணிந்து பார்த்துவிட வேண்டும் என்கிற நினைப்பில்தான் பார்க்கத் துவங்கினேன். எதனால் இவ்வளவு குறைவான ரேட்டிங் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சோப்பலாங்கி படம் எல்லாம் இல்லை. நடுங்க வைத்துவிடுகிறார்கள்.
நாயகனுக்கு அதிபயங்கரமான கனவுகள் வருகின்றன. அத்தனையும் துண்டு துண்டான கனவுகள். ஒன்றும் பிடிபடுவதில்லை. நாயகிக்கு அரையும் குறையுமாக மனோவியல் தெரியும். அதை வைத்துக் கொண்டு அவள் அவனுடைய ஆழ்மனதோடு பேசி அவனது முன் ஜென்மத்து நினைவுகளைக் கிளறி எடுக்கிறாள். இந்தக் கிளறலின் காரணமாக அவனுக்கு ப்ளம்ப்டன் என்கிற இடம் நினைவுக்கு வருகிறது. அந்த இடத்திற்குச் செல்கிறார்கள். அவர்களோடு இன்னொரு ஜோடியும் வருகிறது. நாயகனும் நாயகியும் இடங்களைத் தேடிச் செல்லும் போது மற்றொரு ஜோடி தங்களது கொட்டகைக்குள் வழக்கமான வெளிநாட்டுப் படங்களில் எதைச் செய்வார்களோ அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது கொட்டகைக்கு வெளியில் ஆளரவம் கேட்கிறது. அந்தப் பெண் ‘உனக்கு ஏதாவது சத்தம் கேட்கிறதா?’ என்கிறாள். அவன் வக்கனையான பதிலைச் சொல்லிவிட்டுச் சிரிக்கிறான். சுதாரித்திருந்தால் தப்பித்திருப்பார்கள். ம்ஹூம். கொட்டகைக்கு வெளியிலிருந்தபடியே ஒரு முரட்டு ஆசாமி அவனது மண்டையில் அடித்து மயக்கமடையச் செய்கிறான். பிறகு அவனையும் அவளையும் தனித்தனியாகக் கட்டி தனது ட்ராக்டரில் தூக்கிப் போட்டுச் செல்கிறான். அதோடு நிறுத்துவதில்லை. இருவரையும் கட்டி வைத்து மிகக் குரூரமான சித்ரவதைகளைச் செய்கிறான்.
நாயகனும் நாயகியும் திரும்பி வருகையில் இவர்கள் இருவரும் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைகிறார்கள். தேடத் துவங்குகிறார்கள். அவர்களும் அந்த முரட்டுக் கிழவனிடம் சிக்கிக் கொள்கிறார்கள். இருவரையும் அதே சித்ரவதைக் கூடத்துக்கு கொண்டு போய் தனித்தனியாகக் கட்டி வைக்கிறான் அந்த முரட்டுக் கிழவன். நான்கு பேர்களும் அவனிடம் ஏன் சிக்குகிறார்கள், எதனால் அந்தக் கிழவன் சித்ரவதை செய்கிறான், இதில் எங்கே நாஜிக்கள் வருகிறார்கள், கடைசியில் என்ன ஆகும் என்பதையெல்லாம் சொல்லிவிட்டால் படம் பார்க்கும் போது திகில் இருக்காது. அதனால் யாம் பெற்ற திகில் பெறுக இவ்வையகம் என்று இதோடு நிறுத்திக் கொள்ளலாம். மீதியை வெள்ளித்திரையிலோ அல்லது திருட்டு டிவிடியிலோ காண்க. ஆனால் எதில் பார்த்தாலும் நல்ல படம் என்று ஒத்துக் கொள்வீர்கள்.
படத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் விமர்சனங்களைப் படித்தேன். எடிட்டிங் சரியில்லை, கேமரா கோணம் சரியில்லை என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். குருவிக்குஞ்சு அளவில்தான் எனக்கு மூளை என்பதால் அதெல்லாம் ஒன்றும் தெரியவில்லை. முதல் காட்சியில் நாயகன் தனது நினைவின் படிகளில் மெல்ல இறங்குவதிலிருந்தே படம் ஈர்ப்புடன்தான் இருக்கிறது. அந்த ஈர்ப்பு கடைசிவரைக்கும் சிதறாமல் இருக்கிறது என்பதுதான் இந்தப் படத்தை நல்ல படம் என்று சொல்ல வைக்கிறது. நம்பிக்கையில்லையென்றால் நீங்களே படத்தைப் பார்த்துவிடுங்கள்.
ஒரு திரைக்கதையை எழுதும் போது அதில் வேறு சில கதைகளையும் பின்னும் போது சுவாரஸியம் கூடிவிடும் என்பார்கள். அப்படிப் பின்னுவது பெரிய காரியமில்லை ஆனால் துருத்தாமல், தனியாகத் தெரியாமல், தேவையில்லாத திணிப்பு என்று பார்வையாளன் நினைக்காதபடிக்கான திணிப்பாக இருக்க வேண்டும். Back track படத்தின் திரைக்கதையை மேம்போக்காக பிரித்தால் கூட நான்கைந்து கதைகளை தனித்தனியாக எடுக்கலாம். ஆனால் பெரும்பாலும் நாசூக்காகத்தான் பின்னியிருக்கிறார்கள்.
உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு பெண்ணும் அவளது குழந்தைகளும் வரும் பகுதி. நாயகனின் பழைய நினைவுகளில் அந்தப் பெண்ணும் அவளது குழந்தைகளும் நாஜி படைவீரனால் கொல்லப்படுகிறார்கள். குழந்தைகள் கொல்லப்படுவதையெல்லாம் காட்சிகளாகக் காட்டுவதில்லை. ரத்தம் கூட தெறிப்பதில்லை. குழந்தைகள் ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அம்மா தனியாக தரையில் அமர்ந்திருக்கிறாள். சந்தோஷமாக விளையாடும் அந்தக் குழந்தைகளின் முகங்கள் ஒவ்வொன்றாகக் காட்டப்படுகின்றன. அடுத்து அந்த அப்பாவிக் குழந்தைதான் சாகப் போகிறது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். குழந்தைகளைக் கொன்றுவிட்டு அவன் அந்தப் பெண்ணின் முன்பாக சென்று நிற்கிறான். அந்தப் பெண் பயத்தோடு எழுந்து நின்று தனது குழந்தைகளை அழைக்கிறாள். ‘நான் அவர்களைக் கொன்றுவிட்டேனே’ என்ற குரல் மட்டும் கேட்கிறது. அது அந்தக் கொலைகார நாஜிப்படை வீரனின் குரல். அவனது முகம் காட்டப்படுவதில்லை. ஆனாலும் நமக்கு அவன் மீது அவ்வளவு கோபம் வருகிறது. அப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதே போலத்தான் சித்ரவதைக் கூடமும். கை கால்களைக் கட்டிப் போட்டு கழுத்திலும் ஒரு பெல்ட் ஒன்றை அணிவித்துவிடுகிறான் முரட்டுக் கிழவன். கழுத்தை அசைக்கக் கூட முடியாது. வாயில் துணியைத் திணித்துவிடுகிறான். கத்தவும் முடியாது. முதலில் நாயகியின் உடலில் சூடு வைக்கிறான். கியாஸ் வெல்டிங் மிஷின்தான் அவனது ஆயுதம். அதைப் பற்ற வைத்து அவளது அருகில் எடுத்துச் செல்லும் போதே அவள் பயத்தில் சிறுநீர் கழித்துவிடுகிறாள். அவன் சூடு வைக்க ஆரம்பிக்கும் போது கதறுகிறாள். சப்தம் வெளியில் வராத கதறல் அது. வாயில்தான் துணி இருக்கிறதே! கண்ணீரும் வழிகிறது. மூக்கிலிருந்தும் நீர் வடிகிறது. அந்த முரடன் சர்வசாதாரணமாக ‘அய்ய..இது செகண்ட் டிகிரி நெருப்புக் காயம்தான்....மூன்றாவது டிகிரியைக் காட்டுகிறேன் இரு’ என்று மெஷினைத் தூக்கிக் கொண்டு நாயகனிடம் செல்கிறான். அவனுக்கு சூடு வைக்கப்படும் இடம் நெஞ்சு. எலும்பு தெரியுமளவுக்கு சதையைக் கருக்குகிறான்.
இந்த சூடு வைக்கும் காட்சிகளில் மட்டும்தான் வன்முறையை அப்பட்டமாக காட்டுகிறார்கள். ஆனால் அதுவே நரம்புகளில் ஊடுருவிப் போய்விடுகிறது.
நாஜிக்கள் என்பது படத்தின் ஒற்றைவரிக் கதைதான். ஆனால் அதைச் சுற்றிச் சுற்றி மற்ற பாத்திரங்களைக் கோர்த்து நல்லதொரு திகில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அடுத்த முறை படம் பார்க்கும் போது விமர்சனங்களை நம்பக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். குருட்டுவாக்கில் பார்த்துவிட வேண்டும். நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம். இவர்கள் என்ன சொல்வது? அப்படித்தான் இந்த விமர்சனமும். நான் சொல்வதையெல்லாம் நம்ப வேண்டாம். பார்த்துவிட்டு முடிவு செய்து கொள்ளுங்கள்.