ஒரு கதையைச் சொல்ல ஆரம்பிக்கும் போது முதல் வரியிலேயே இழுத்துப் பிடித்துவிட வேண்டும் என்று சொல்வார்கள். அந்த முதல் வரிதான் கடைசி வரி வரைக்கும் இழுத்துக் கொண்டே வர வேண்டும். முடிவு என்னவாக இருக்கும் என்று வாசிக்கிறவன் யோசித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம் என்று அசைக்காட்டியபடியே கடைசி வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி தன் இஷ்டத்துக்கு முடிவை எழுதிவிட்டு போய்விட வேண்டும். சிறுகதைக்கு இது மிகச் சிறந்த ஃபார்முலா. இதற்கு அப்படியே பொருந்துகிற ஒரு கதையை உதாரணம் காட்டச் சொன்னால் கு.ப.ராவின் ‘விடியுமா?’வைக் காட்டலாம். ‘சிறுகதை ஆசான்’ என்று அவரைச் சும்மாவா சொல்லியிருப்பார்கள்?
‘சிவராமையர்- டேஞ்சரஸ்’ என்று ஒரு தந்தி வருகிறது- இப்படித்தான் கதையே ஆரம்பம். யார் அந்த சிவராமையர்? கதையைச் சொல்ல்லிக் கொண்டிருக்கிறவருடைய அக்கா குஞ்சம்மாளின் கணவர். அக்கா அம்மாவின் ஊருக்கு வந்திருக்கிறாள். மூன்று நாளைக்கு முன்பாக கூட சிவராமையர் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் உடல்நிலை பற்றிய குறிப்பெல்லாம் எதுவும் இல்லை. இப்பொழுது டேஞ்சரஸ் என்று வந்தால் என்ன அர்த்தம்? அதற்குள் என்ன நடந்திருக்கும்? அதுவும் சென்னை பொது மருத்துவமனையிலிருந்து வந்திருக்கிறது. அக்காவும் தம்பியும் ரயில் ஏறுகிறார்கள். விடியும் வரைக்கும் பயணிக்க வேண்டும். அம்மாக்காரி மகளுக்கு வெற்றிலைபாக்கு, பூ, மஞ்சள் எல்லாம் கட்டி அனுப்புகிறாள். வீட்டை விட்டு வெளியேறும் போது நல்ல சகுனம் எதிர்ப்படுகிறது. காவிரிக் கரையிலிருந்து பக்கத்து வீட்டுப் பெண் தண்ணீர் குடம் எடுத்து வருகிறாள். ‘நாம யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம்..கெட்டது எதுவும் நமக்கு வராது’ என்று ஆறுதல் சொல்லி அம்மா அனுப்பி வைக்கிறாள். ரயிலில் சந்திக்கும் நகரத்தார் சமூகப் பெண் ஒருத்தி குஞ்சம்மாளுக்கு பூ கொடுக்கிறாள். அம்பாளே அவளின் வடிவத்தில் வந்திருப்பதாக குஞ்சம்மாள் ஆறுதல் அடைகிறாள்.
தம்பிக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனால் அக்கா ஊருக்கு வந்து வெகுநாள் ஆகிவிட்டதால் அவளை சீக்கிரம் வர வைப்பதற்காக அவர் தந்தி கொடுத்திருக்கக் கூடும் என்கிறான். அக்காவிடம் தனது சந்தேகத்தைச் சொல்லும் போது அவளுக்கு அது ஆறுதலாக இருக்கிறது. ‘அப்படிச் செய்ய சாத்தியமிருக்கிறதா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்கிறாள். இரவு முழுவதும் பயணிக்கிறார்கள். சற்றே தேறுவதும் திடீரென்று பயம் பீடித்து முகம் இறுகிப் போவதுமாக மனம் சஞ்சலத்திலேயே இருக்கிறது. இப்படியே கதையின் கடைசி வரைக்கும் சிவராமையரின் உயிர் ஊசலாடிக் கொண்டேயிருக்கிறது. தப்பித்துவிடுவாரா என்று அவர்களாலும் கணிக்க முடிவதில்லை வாசிக்கிறவனாலும் கணிக்க முடிவதில்லை.
கதையின் ஊடாக ‘அவரைக் கட்டி என்ன சந்தோஷம் கண்டேன்’ என்று அக்கா புலம்புவதையும் கவனிக்க வேண்டும். அந்த ஒரு வரியை வைத்துக் கொண்டு அலசினால் கதையின் மொத்த எடையும் வேறு மாதிரி மாறிவிடுகிறது.
கு.ப.ராஜகோபாலன் கும்பகோணத்துக்காரர். ஆரம்பத்தில் அரசுப்பணியில் இருந்தவர். கண்நோயின் காரணமாக இளமையிலேயே பார்வைக் குறைபாடு வந்துவிட்டது. அரசு வேலையை விட்டுவிட்டார். சிகிச்சைக்குப் பிறகு பார்வை மீண்டும் திரும்பியிருக்கிறது. அதன் பிறகு சென்னை வந்தவர் முழு நேர எழுத்தாளராகிவிட்டார். பெரிய வருமானம் எதுவும் இல்லாமல் சிரமப்பட்டிருப்பார் போலிருக்கிறது. மீண்டும் கும்பகோணம் திரும்பி எழுதிக் கொண்டிருந்தவர் இறுதிக்காலத்தில் கால்கள் செயல்படாமல் சிரமப்பட்டு இறந்து போனார்.
பெங்களூரில் நடக்கவிருக்கும் அடுத்த வாசகர் சந்திப்பில்(ஏப்ரல் 12, 2015) எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் ஆறு கதைகளில் ‘விடியுமா?’ கதையும் ஒன்று. இந்தக் காலத்தில் இப்படியொரு கதைக்கு சாத்தியமிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. இப்பொழுதெல்லாம் ஒருவர் கவலைக் கிடமாக இருக்கிறார் என்ற தகவல் தெரிந்தால் அடுத்த கணத்திலிருந்து நிமிடத்திற்கு நிமிடம் அப்டேட் ஆகிக் கொள்ள முடிகிறது. ‘அங்கு என்ன ஆனதோ ஏது ஆனதோ’ என்றெல்லாம் தெரியாமல் விடிய விடிய குழம்பியபடியே பயணிக்க வேண்டியதில்லை. முடிவு தெரியாமல் வெகு நேரம் திணறிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
மரணம் இப்பொழுது மிகச் சாதாரண விஷயம். ஒரு மனிதன் இறந்த முக்கால் நிமிடத்தில் RIP எழுதிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடலாம். பத்தாவது நிமிடத்தில் அஞ்சலிக் குறிப்புகள் வரிசையாக வந்து விழுகின்றன. ‘அவரைப் பற்றி எனக்குத் தெரியாது..ஆனால் கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று ஒரு வரியை எழுதிவிட்டு எவ்வளவு வேண்டுமானாலும் எழுதி நிரப்பிக் கொள்ளலாம். பெரிய பதற்றம் இல்லை. இறப்புக்குச் செல்ல வேண்டியதாக இருப்பின் ‘ஆனது ஆகிடுச்சு.....பேசாம தூங்குங்க...காலையில் நாலு மணிக்கு கார் எடுத்தால் பத்து மணிக்குள்ள போய்ச் சேர்ந்துக்கலாம்’ என்கிற அளவுக்கு மாறியிருக்கிறோம். இந்த ஒரு சூழலில் 'விடியுமா?' கதையை எப்படி புரிந்து கொள்வது?
இந்தக் கதையை இப்பொழுது எழுத முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் வாசிக்கும் போது அந்த மனிதர்களின் உணர்ச்சியை நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. கொஞ்சம் தேறுவதும் பிறகு பயப்படுவதுமாக அலைவுறும் மனதோடு நம்மையும் பொருத்திக் கொள்ள முடிகிறது. கதையைச் சொல்லும் போது நம் கண் முன்னால் நடப்பது போன்ற தோற்றத்தை கு.ப.ரா உருவாக்கிவிடுகிறார். ஏதோவொரு புள்ளியில் கதையோடு சேர்ந்து பயணிக்கத் தொடங்குகிறோம். கதாபாத்திரத்தோடு நமது உணர்ச்சிகளை பரிமாறிக் கொள்கிறோம். முடிவை நாம் கணிக்கத் தொடங்குகிறோம் அல்லது இப்படித்தான் முடிவு இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இந்த ஒரு பிணைப்பை உருவாக்குவதுதானே சிறுகதையின் சூட்சமம்? அதுதானே சிறுகதையின் வெற்றி? விடியுமா அப்படியான கதை.