ஏப்ரல் 05 ஆம் நாள் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற நிகழ்வின் நிழற்படத் தொகுப்பு இது. நிகழ்வு மனதுக்குத் திருப்தியாக இருந்தது. தம்பிச்சோழன், கவிதாபாரதி, கார்டூனிஸ்ட் பாலா ஆகியோர் லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் மற்றும் மசால் தோசை 38 ரூபாய் ஆகிய புத்தகங்களைப் பற்றி பேசினார்கள். கிருஷ்ணபிரபு வந்தவுடன் நிகழ்வைத் தொகுத்துக் கொண்டிருந்த ஜீவகரிகாலன் அவரையும் அழைத்து பேசச் சொன்னார்.
நாகேஸ்வரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் நிசப்தம்.காம் பற்றி பேசினார்கள். செல்லமுத்து குப்புசாமி மற்றும் வேடியப்பன் ஆகியோரும் சில நிமிடங்கள் பேசினார்கள்.
மகேஷ், சுந்தர் போன்றவர்கள் வெளியூரிலிருந்து வந்திருந்தார்கள். கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அக்கறையின் காரணமாக கலந்து கொண்டவர்கள் என்று புரிந்து கொள்ள முடிந்தது. அந்தவிதத்தில் மிகச் சந்தோஷமாக உணர்ந்தேன். செல்லமுத்து குப்புசாமி போன்று பரவலாக கவனம் பெற்ற எழுத்தாளர் ஒருவர் மேடைக்கு வந்து ‘நான் எழுதுவதற்கு இவன் இன்ஸ்பிரேஷன்’ என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவரை முறைப்படி அழைக்கக் கூட இல்லை. ஆனால் வந்து பேசினார். நெகிழ்ச்சியாக இருந்தது.
நிகழ்வு நடக்கவிருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு கூட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே ஒன்பது மாதக் குழந்தையொன்றின் ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி கோரி ஒரு குடும்பம் வந்திருந்தது. அந்தக் குழந்தையைப் பற்றியும் அந்தக் குடும்பத்தின் நிலை பற்றியும் உடன் வந்திருந்தவர் சொன்ன செய்திகள் அலை கழித்துக் கொண்டேயிருந்தன. பேசத் தொடங்கிய முதல் சில நிமிடங்கள் வரைக்கும் உள்ளுக்குள் அந்தப் பதற்றம் இருந்து கொண்டேயிருந்தது. அதைச் சமாளித்து சமநிலைக்கு வருவதற்கு சற்றே போராட வேண்டியிருந்தது.
இந்தத் தடுமாற்றம், பதற்றம், நெகிழ்ச்சி, அன்பு என அத்தனையும் கலந்துதான் நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இங்கு எல்லோருக்குள்ளும் குரூரமான மிருகம் உண்டு. ஆனால் அதை வேறொரு உணர்ச்சியின் வழியாகக் கட்டி போட்டுவிட முடிகிறது. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் அதைச் சரியாகச் செய்து கொண்டிருப்பதாக இந்த நிகழ்வின் வழியாக புரிந்து கொள்ள முடிந்தது.
கடைசியாக சில கேள்விகளும் கேட்கப்பட்டன. ‘உங்களை அதிகார மையமாக மாற்றிக் கொள்ளும் வழியில்தானே நீங்களும் சென்று கொண்டிருக்கிறீர்கள்?’ என்றார் ஒருவர். அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எச்சிலை விழுங்கிக் கொண்டேன். எதனால் அப்படியொரு எண்ணம் அவருக்கு உருவாகியிருக்கிறது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ‘கலந்துரையாடலுக்கான அரங்க அமைப்பு இப்படி இருக்கக் கூடாது’ என்று இன்னொருவர் சொன்னார். அவர் சொன்னதும் சரிதான். ஆனால் டிஸ்கவரி அரங்கில் வட்ட வடிவில் நாற்காலிகளை அமைப்பது சாத்தியமில்லாத காரியம். இன்னமும் சில கேள்விகள் மற்றும் கருத்துக்களை மண்டைக்குள் போட்டு வைத்தாகிவிட்டது. நொதித்துக் கொண்டிருக்கட்டும். அவ்வப்போது பேசலாம்.
நிகழ்வை ஏற்பாடு செய்த யாவரும்.காம், டிஸ்கவரி புக் பேலஸ், நிகழ்வில் பேசியவர்கள், கலந்து கொண்டவர்கள் என அத்தனை பேருக்கும் நன்றி. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குத்தான் ஏதாவது அன்பளிப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் கலந்து கொண்டவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.
ஸ்ருதி டிவி சார்பில் முழு நிகழ்வும் பதிவு செய்யப்பட்டது. வீடியோ கிடைத்ததும் இணைப்பைத் தருகிறேன்.
அரங்கில் இடம் இல்லாமல் சிலர் வெளியில் நின்று கொண்டிருந்ததைப் பற்றிச் சொல்லி உசுப்பேற்றி அனுப்பி வைத்திருக்கிறார்கள். ‘ஞாயிற்றுக்கிழமை காலையில் இவ்வளவு பேர் வருவது அதிசயம்’ என்று வேடியப்பனும் ஏற்றிவிட்டிருந்தார். பேருந்தில் ஏறும் போது கெத்தாக நினைத்துக் கொண்டேன். ‘நிறையப் பாராட்டுறாங்க இல்ல...’ என்று மனைவியிடம் கேட்டேன்.
‘பாராட்டுகிறவர்களை கூட்டத்துக்கு அழைத்தால் பாராட்டத்தான் செய்வார்கள். ____________________ மாதிரியானவர்களை அழைத்து பேச வைத்திருக்க வேண்டும்...அப்போ தெரியும்’ என்கிறாள். இந்த உலகத்தையே கூட நம்ப வைத்துவிடலாம். ஆனால் இவளை நம்ப வைக்க முடியாது என்று திரும்பிப் படுத்து தூங்கிவிட்டேன்.
பெங்களூர் வந்த பிறகு ‘எந்திரிச்சு நிலத்தில் காலை வைங்க’ என்றாள். அதற்கு ஏகப்பட்ட அர்த்தங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வெகு நேரம் ஆகவில்லை.
ஜீவ கரிகாலன்
நாடகக் கலைஞர் தம்பிச்சோழன்
கார்டூனிஸ்ட் பாலா
கிருஷ்ணபிரபு
இயக்குநர் கவிதாபாரதி
டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்
நாகேஸ்வரன் மற்றும் புகழேந்தி
செல்லமுத்து குப்புசாமி
நிழற்படங்கள் உதவி: சுதர்ஸன்.