நேற்றிரவு பன்னிரெண்டு மணி இருக்கும். சேலம் பேருந்து நிலையத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுதே பேருந்தில் ஏறி அமர்வது பெரிய காரியமில்லை. பெங்களூருக்குச் செல்லும் நிறைய வண்டிகள் காலியாகத்தான் இருந்தன. வார விடுமுறை சிறப்புப் பேருந்துகள் இடையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட எந்த ஊருக்குள்ளும் நுழைவதில்லை. சேலத்தில் வண்டி எடுத்தால் ஓசூரில்தான் வந்து நிற்பார்கள். அதிகாலை நான்கு மணிக்கு பெங்களூருக்குள் கொண்டு வந்துவிட்டுவிடுகிறார்கள். சீக்கிரம் வீட்டுக்கு வந்து சேர்ந்தால் நல்லதுதானே? நன்றாகத் தூங்கியெழுந்து அலுவலகம் செல்லலாமே. அப்படியெல்லாம் இல்லை- பிரதான சாலையில் இருந்து வீட்டை அடையும் வரைக்கும் நடுங்கிக் கொண்டே இருக்க வேண்டும். நடுவில் ஒரு ஏரி இருக்கிறது. அந்நேரத்தில் ஆளரவமே இருக்காது. பம்மிக் கொண்டே ஏரியைத் தாண்டிச் செல்ல வேண்டும். பெங்களூரு குளிருக்கு சுருண்டு படுத்திருக்கும் தெரு நாய்கள் எவனோ வருகிறான் என்று குரைக்கத் தொடங்கும். குனிந்து கல்லை எடுப்பது போன்ற பாவனையைச் செய்தால் எழுந்து தூரமாக ஓடி இரண்டு சப்தம் எழுப்பிவிட்டு தெரியாதது போல அமைதியாகிவிடும். நாய்களைச் சமாளிப்பது கூட எளிதுதான். ஆனால் இருட்டுக்குள்ளிருந்து இரண்டு உருவங்கள் வருவது போன்ற பிரமை இருந்து கொண்டேயிருக்கும். அப்படி யாராவது வந்தால் எந்தப்பக்கமாக ஓடுவது? கையில் இருக்கும் பையை என்ன செய்வது என்று மனம் கணக்குப் போட்டுக் கொண்டேயிருக்கும்.
எவனாவது வந்து ‘ஏடிஎம் கார்டைக் கொடு’ என்று கேட்டால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே நடக்க வேண்டியிருக்கிறது. இப்பொழுதெல்லாம் நிறையச் சம்பவங்களைக் கேள்விப்பட முடிகிறது. காரில் கடத்திச் சென்று பணத்தைப் பிடுங்கிக் கொண்டார்கள், வண்டியில் லிஃப்ட் கேட்டு ஏறியவன் திடீரென்று வண்டிக்காரன் கழுத்தில் கத்தியை வைத்துவிட்டான் - இப்படியான கதைகள். அப்படியெல்லாம் மாட்டிக் கொண்டால் பேசாமல் பின் நெம்பரைக் கொடுத்துவிடுவதுதான் உசிதம் என்று அறிவுரையோடு முடிக்கிறார்கள். தாராளமாகக் கொடுத்துவிடுவேன். ஆனால் என் அட்டையில் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்காது. அதுதான் பெரிய பிரச்சினை. ‘இவ்வளவு கஷ்டப்பட்டு இவனை இழுத்து வந்தால் வெறும் ஐயாயிரம் ரூபாய் வைத்திருக்கிறான்..பிச்சைக்காரப் பயல்’ என்ற கடுப்பில் நான்கு மொத்து கூடுதலாக போட்டுவிட்டு போவார்கள். நல்லி எலும்பு நான்கை இறுக்கிக் கட்டி வைத்துத் திரியும் என்னால் எதிர்த்து நிற்பதெல்லாம் ஆகாத காரியம்.
அதனால் இரண்டு மணிக்கு மேலாக பேருந்து பிடித்துக் கொள்ளலாம் என்று பேருந்து நிலையத்தை மேயத் தொடங்கினேன். சற்று நேரத்திற்கு முன்பாக மழை பெய்திருந்தது. ஆங்காங்கே தண்ணீர் குட்டையாகத் தேங்கியிருந்தது. மிகச் சுறுசுறுப்பான பேருந்து நிலையங்களைத் தமிழ்நாட்டில் கணக்கில் எடுத்தால் சேலம் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும். இருபத்து நான்கு மணி நேரமும் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து போகிறார்கள். நள்ளிரவுகளிலும் பழக்கடைகளைத் திறந்து வைத்திருப்பார்கள். அச்சாகி வரும் செய்தித்தாள்களைச் சுடச் சுட பையன்கள் விற்றுக் கொண்டிருப்பார்கள். இருளுக்குள் மல்லிகைப்பூ மணக்கும் போலிப் புன்னகையை சில பெண்கள் உதிர்த்துக் கொண்டிருப்பார்கள். ‘சுக்காப்பே’ என்று சுக்குக்காப்பிக்கு அழைப்பு வந்து கொண்டேயிருக்கும். இப்படியான நெரிசல் மனதுக்குள் அலையடிக்கச் செய்துவிடும்.
ஊரிலிருந்து கொண்டு வந்த மீன்குழம்போடு சுற்றிக் கொண்டிருந்த போது கள்ளக்குறிச்சி பேருந்துகள் நிற்குமிடத்தில் சற்று கூட்டமிருந்தது. அதைக் கூட்டம் என்று சொல்ல முடியாது. இரண்டு மூன்று பேர் நின்றிருந்தார்கள். ‘இனிப்பு பைனாப்பிள்’ என்று அன்னாசியை துண்டித்து பாலித்தீன் பைகளில் போட்டு ஒரு பொட்டலம் பத்து ரூபாய் என்று ஒரு பொடியன் விற்றுக் கொண்டிருந்தான். பதினைந்து வயது இருக்கும் அவனுக்கு. படிக்கிறானா என்று தெரியவில்லை. படித்துக் கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இரவு நேரம் வேலையைச் செய்துவிட்டு தூங்கி எழுந்து பள்ளிக்குச் செல்பவரகளை தமிழ்நாட்டின் பேருந்து நிலையங்களில் சாதாரணமாகப் பார்க்க முடியும். கையில் நான்கு பொட்டலங்களை வைத்திருந்தானாம். ஒரு பெரிய மனிதர்- கரை வேட்டி கட்டியவரை அப்படித்தானே சொல்ல முடியும்? அன்னாசியை வாங்கியிருக்கிறார். ஒரு துண்டை விழுங்கிவிட்டு ‘இனிப்பு அன்னாசின்னு சொன்னே..சப்பையா இருக்கே’ என்று கேட்டிருக்கிறார். நடுராத்திரியில் இப்படி லோலாயம் பேசினால் எந்த வியாபாரிக்கும் கோபம் வரத்தான் செய்யும். அந்தப் பையன் என்ன பதில் சொன்னான் என்று தெரியவில்லை. அந்தப் பெரிய மனிதர் பணத்தைத் திரும்பக் கேட்டிருக்கிறார் . பேச்சுவார்த்தை அதிகமாகி சற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டுவிட்டது. பையனின் கையிலிருந்த அன்னாசிகள் கீழே விழுந்துவிட்டன. நான்கு பொட்டலங்கள். நாற்பது ரூபாய் நட்டம்.
இப்பொழுது காட்சி மாறிவிட்டது. பையன் பணம் கேட்கத் தொடங்கியிருந்தான். ‘உங்க பணம் பத்து ரூபாயை வெச்சுட்டு மீதி முப்பது ரூபாயைக் கொடுங்க’. பையன் கேட்டதும் சரி என்று பட்டது. பக்கத்தில் இருந்தவர்கள் பையனுக்கு ஆதரவாகப் பேசினார்கள். பெரியவர் சற்று பதறினார். அதைக் கோபமாக வெளிக்காட்டினார். அவருடைய அருகில் கிடந்த நாற்காலியில் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார். அநேகமாக மனைவியாக இருக்கக் கூடும். இந்த விவகாரத்தைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இரும்பு நாற்காலியில் அமர்ந்தபடியே கண்களைச் சொருகிக் கொண்டிருந்தார்.
ஒரு கான்ஸ்டபிள் கூட நடந்து போனார். அவர் எதையாவது சொல்வார் என்று எதிர்பார்த்தேன். அவரும் கண்டுகொள்ளவில்லை. அவ்வளவு அசுவராசியமான சண்டையாக இருந்தது. வழவழா என்று பேசிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் அந்த ஆள் பணம் தருவதைப் போலத் தெரியவில்லை. எல்லோரும் அசந்த நேரத்தில் அந்தப் பையன் பெரியவரின் வேட்டியை உருவிவிட்டான். பெரியவர் நாற்பதைத் தாண்டிய மனிதர். ‘அடேய் தே....’ என்று கத்திக் கொண்டே ஓடத் தொடங்கினார். பையனை யாராவது தடுப்பார்கள் என்று நினைத்தால் அத்தனை பேரும் சிரிக்கிறார்கள். அந்த கரைவேட்டிக்காரரைத் தவிர அத்தனை பேருக்கும் இது ஒரு சிரிப்புச் சண்டையாகிவிட்டது. ஓடிய பையன் வேட்டியை வீசியெறிந்துவிட்டாவது போயிருக்கலாம். கிராதகன். தேங்கி நின்ற தண்ணீருக்குள் போட்டு ஒரு மிதி மிதித்துவிட்டு ஓடிவிட்டான். அதன் பிறகு அந்தக் கூட்டத்துக்குள் அவனைக் கண்டுபிடிப்பது சாதாரணக் காரியமாகத் தெரியவில்லை. நின்று கொண்டிருந்த பேருந்துகளுக்குள் நுழைந்து தப்பித்திருந்தான்.
பெரியவர் வேட்டியை எடுத்து உதறினார். கரிய நிறத்தில் ஈரமாக இருந்தது. இந்த மழையிரவில் ஈரவேட்டியைக் கட்டிக் கொண்டு இருப்பதெல்லாம் சாத்தியமில்லை. பட்டாப்பட்டி ட்ரவுசரோடு வந்தார். அந்தப் பெண்மணிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. அவளும் தன் பங்குக்கு அந்தப் பையனுக்கு சில சாபங்களை விட்டாள். அவனது மனைவி வேறு யாருடனாவது ஓடிப்போவாள் என்பதும் அதில் முக்கியமான சாபம். தனது பையைத் துழாவிப் பார்த்தாள். வேறு வேட்டி எதுவும் இல்லை. கணவனிடம் வேட்டியை வாங்கி முறுக்கிப் பிழிந்தவள் நான்கைந்து முறை உதறினாள். காய்ந்தபாடில்லை. அப்படியே பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். பெரிய மனிதர் அரை ட்ரவுசரோடு நடந்து போய் ஒரு டீ வாங்கினார். ‘ஏண்டா சப்பை டீயைக் கொடுத்தே’ என்று பிரச்சினையை ஆரம்பித்துவிடுவாரோ என்று யோசித்தபடியே ஓடி வந்து பேருந்தில் அமர்ந்து கொண்டேன். இதை நினைத்துக் கொண்டே ஏரிக்கரையை சிரித்தபடியே தாண்டிவிடலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. ‘எலெக்ட்ரானிக் சிட்டி எந்திரிச்சு வாங்க’ என்று நடத்துநர் மின்விளக்கை எரியவிட்டு பயணிகளை அழைத்த போதும் சிரித்துக் கொண்டே இருந்தேன்.