நிசப்தம் வழியாகச் செய்யப்படும் உதவிகள் ஏன் தமிழகத்தை தாண்டுவதில்லை? தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்கு மட்டும் ஏன் உதவுகிறீர்கள்? நிதினுக்கு எழுதிய கடிதத்தில் சாதி, மதம் பார்க்காமல் அன்பை பரப்பவும் என்று நீங்கள் சொல்லியதைப் படித்த போது இந்த சந்தேகம் வந்தது என திரு.பாலு கேட்டிருந்தார். பாலுவைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால் எந்த உள்நோக்கமும் இல்லாமல்தான் கேட்டிருக்கிறார் என்று நம்பலாம். ஆனால் இதே போன்ற கேள்வியை தேவிகா என்பவரும் கேட்டிருந்தார். தேவிகா கர்நாடகாவில் வசிக்கும் தமிழர். தனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு உதவ வேண்டும் என்று கோரியிருந்தார். மருத்துவ உதவி. விசாரித்ததில் செலவுக்கான தொகையப் புரட்டிக் கொள்ளும்படியான சூழல் இருந்தது. அதனால் தவிர்த்துவிட்டேன். அப்பொழுதுதான் தேவிகா இதே போன்றதொரு கேள்வியைக் கேட்டார்.
தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் உதவி செய்ய வேண்டும் என்கிற வரையறை இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் சரியான ஆட்களைக் கண்டுபிடிப்பது ஓரளவு சுலபமாக இருக்கிறது. தேனி மாவட்டத்தில் ஒரு பெண்ணுக்கு உதவி கோரியிருக்கிறார்கள். யுட்ரஸ் அறுவை சிகிச்சை. மணிகண்டன் என்கிற மதுரை நண்பரிடம் சொல்லியிருக்கிறேன். அவர் விசாரித்துவிடுவார். அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கான வேலை இது. இதே போன்ற விசாரிப்புகளை வேறொரு மாநிலத்தில் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் கேரளாவிலும் நமக்கு உதவக் கூடிய ஆட்களைப் பிடிப்பது சிரமம். அதனால் துணிந்து செய்வதில் தயக்கம் இருக்கிறது. ஒருவேளை இன்னும் சில காலம் போனால் அதற்கான வாய்ப்பு உருவாகலாம்.
இப்போதைக்கு அகலக்கால் வைக்க வேண்டியதில்லை. எல்லாம் சரியாக அமைகிறபட்சத்தில் மெதுவாக விரிவாக்கிக் கொள்ளலாம். இப்பொழுதும் கூட சில தமிழ் நண்பர்கள் பிற மாநிலங்களில் உதவி தேவைப்படுபவர்களைப் பற்றி தகவல் தெரிவிக்கிறார்கள். கேரளாவில் மனநலம் குன்றியவர்களுக்கான பள்ளியொன்றிருப்பதாகவும் அதற்கு உதவ முடியுமா என்றும் பாஸ்கர்ராஜா விசாரித்தார். அந்தப் பள்ளி மிகச் சிறப்பாக செயல்படுகிறது போலிருக்கிறது. செய்யலாம்தான். அதே சமயத்தில் தமிழ்நாட்டு பள்ளியொன்றில் கழிவறை கட்டுவதற்கான உதவியைச் செய்யமுடியுமா என்று கேட்டிருக்கிறார்கள். அதனால் கேரளாவிலிருக்கும் பள்ளியை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
இன்று காலையில்தான் ஒரு நண்பர் ‘பீலிபெய் சாக்காடும்..’ என்ற திருக்குறளை மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்தார். எதையாவது அதிகப்பிரசங்கித்தனமாகச் செய்து கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது என்று பதறியடித்து அழைத்துப் பேசினால் ‘ஒரு லிமிட் வெச்சுக்குங்க’ என்றார். என்ன லிமிட் என்று ஆரம்பத்தில் புரியவில்லை. ‘ஒருவருக்கு அதிகபட்சம் இவ்வளவுதான் உதவி’ என்கிற மாதிரியான வரையறையைச் சொல்கிறார். அவரும் தவறான எண்ணத்தில் சொல்லவில்லை என்றாலும் அப்படியெல்லாம் நம்மை நாமே சுருக்கிக் கொள்ள வேண்டியதில்லை.
தாலஸீமியா நோய் பாதித்த குழந்தைக்கான சிகிச்சைச் செலவு முப்பது லட்சம் பிடிக்கும் என்கிறார்கள். அந்தக் குழந்தையின் அப்பா தாராபுரம் மார்க்கெட்டில் சுமைத் தொழிலாளி என்று குறிப்பிட்டிருந்தேன். அலைந்து திரிந்து பத்து லட்சம் வரைக்கும் சேர்த்துவிட்டார். யார் யாரோ கொடுத்திருக்கிறார்கள். நிறையப் பேர் ஏமாற்றியிருக்கிறார்கள். ‘அவரைப் போய் பார்த்துட்டு வந்துடலாம் வா’ என்று வாடகைக்காரை எடுத்து வரச் சொல்வார்களாம். எடுத்துச் சென்றால் பைசா பிரையோஜனம் இருக்காது. எனக்கு அந்தக் குடும்பம் பற்றி எந்த விவரமும் தெரியாது. அடுத்தவர்கள் சொல்லிய தகவல்கள்தான். முப்பது லட்சத்தையும் நம்மால் கொடுக்க முடியாது. ஆனால் ஏன் வரையறை வைத்துக் கொள்ள வேண்டும்? ஒருவேளை இருபத்தெட்டு லட்சம் புரட்டிவிட முடிகிறது என்று வைத்துக் கொள்வோம். கடைசியில் இரண்டு லட்சம் தேவைப்படுகிறது என்கிற சூழலில் நம்மால் இயலுமெனில் கொடுத்துவிட வேண்டியதுதானே?
தாலஸீமியா நோய் பாதித்த குழந்தைக்கான சிகிச்சைச் செலவு முப்பது லட்சம் பிடிக்கும் என்கிறார்கள். அந்தக் குழந்தையின் அப்பா தாராபுரம் மார்க்கெட்டில் சுமைத் தொழிலாளி என்று குறிப்பிட்டிருந்தேன். அலைந்து திரிந்து பத்து லட்சம் வரைக்கும் சேர்த்துவிட்டார். யார் யாரோ கொடுத்திருக்கிறார்கள். நிறையப் பேர் ஏமாற்றியிருக்கிறார்கள். ‘அவரைப் போய் பார்த்துட்டு வந்துடலாம் வா’ என்று வாடகைக்காரை எடுத்து வரச் சொல்வார்களாம். எடுத்துச் சென்றால் பைசா பிரையோஜனம் இருக்காது. எனக்கு அந்தக் குடும்பம் பற்றி எந்த விவரமும் தெரியாது. அடுத்தவர்கள் சொல்லிய தகவல்கள்தான். முப்பது லட்சத்தையும் நம்மால் கொடுக்க முடியாது. ஆனால் ஏன் வரையறை வைத்துக் கொள்ள வேண்டும்? ஒருவேளை இருபத்தெட்டு லட்சம் புரட்டிவிட முடிகிறது என்று வைத்துக் கொள்வோம். கடைசியில் இரண்டு லட்சம் தேவைப்படுகிறது என்கிற சூழலில் நம்மால் இயலுமெனில் கொடுத்துவிட வேண்டியதுதானே?
சிவஜோதி என்கிற பெங்களூர்வாசிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்சம் தேவைப்பட்டபோது ‘அவ்வளவு கொடுக்க வேண்டுமா?’ என்று மனதுக்குள் எண்ணம் தோன்றியது என்பதுதான் உண்மை. அந்தச் சூழலைப் பார்த்துவிட்டு ஒரு லட்சம் கொடுத்தாகிவிட்டது. ஆனால் ஒன்றும் மோசமாகிவிடவில்லை. சிகிச்சை முடிந்து வந்துவிட்டார். அவரைப் பார்க்கப் போயிருந்த போது நிலைமை படுமோசமாக இருந்தது. தப்பிப்பதே பெரிய காரியம் என்றார்கள். பால்குடி மறக்காத தனது குழந்தையை தவிக்கவிட்டுவிடுவார் என்று அவநம்பிக்கை நிலவிய சூழலில் இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என்று இராணுவ அதிகாரத்துடன் முடிவெடுக்க வேண்டியதில்லை. இப்போதைக்கு கை கொடுத்துவிடலாம் என்றுதான் தோன்றியது. தப்பித்துவிட்டார். வேறு என்ன வேண்டும்?
கல்வி உதவியைக் காட்டிலும் சரியான நேரத்தில் செய்யப்படும் மருத்துவ உதவிகள்தான் மிக முக்கியமானவை. அவசியமானவையும் கூட. எனவே அதற்கு சற்று அதிகப்படியான முன்னுரிமை கொடுக்கலாம். அதே சமயம் மருத்துவம் சார்பான உதவிகளில் எடுக்கப்படும் முடிவுகளில் தொண்ணூற்றொன்பது சதவீதம் இதயம் சொல்வதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள்தான். இது போன்ற செயல்பாடுகளில் தவறான முடிவுகள் எடுத்துவிடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இல்லையென்று மறுக்கவில்லை. ஆனால் முடிந்தவரைக்கும் தவறுகளைத் தவிர்ப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தூய்மையான உள்ளத்துடன் செய்து கொண்டேயிருப்போம். மற்றபடி, இதுதான் செய்ய வேண்டும். இப்படித்தான் செய்ய வேண்டும். இவர்களுக்குத்தான் செய்ய வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்து வைத்துக் கொள்வதில்லை.
நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்பட வேண்டும் என்பதைத் தவிர எந்தப் பெரிய விதிமுறையும் அறக்கட்டளைக்கு இல்லை. Restrictions எதுவும் இல்லை. பழையன கழிதலும் புதியன புகுதலுமாக தேவையான நெகிழ்வுகளை அவ்வப்போது செய்து கொண்டேயிருக்கலாம். தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுதான் பாதையாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து ஓடுகிறதா என்ன? எது பள்ளமோ அதை நோக்கி ஓடுகிறது. அப்படித்தான். எங்கே ஒருபடி கீழானவர்கள் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு கையை நீட்டித் தூக்கிவிட்டு அடுத்த மனிதர்களை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கலாம்.
சரியாகத்தானே பேசுகிறேன்?!