Apr 8, 2015

கலந்துரையாடல் நிகழ்வு - கடிதங்கள்.

கடிதம் எழுதும்போது இந்த விஷயம் குறித்த பிரக்ஞைதான் இருந்துகொண்டே இருந்தது. விவாதிக்கிறேன் என்ற பெயரில் தங்கள் எழுத்து முறையை மாற்ற எங்காவது வலியுறுத்துகிறேனா என்ற பயம். அப்படி எதுவும் சொல்லிவிடக் கூடாது என்ற கவனம் இருந்தது. நீங்கள் குறிப்பிட்டது போல தங்களை துன்புறுத்திக் கொண்டு எழுதும் எதையும் நான் விரும்பவில்லை. 

ஆரம்ப காலத்தில் 'நீங்கள் இன்னும் கொஞ்சம் intellectual ஆக எழுதலாமே? ஏன் எல்லாவற்றையும் சாமானியனின் பார்வையிலேயே எழுதுகிறார் என்ற எண்ணம் இருந்தது உண்மைதான். நண்பர்களுடன் விவாதிக்கையில் அவர் வாசகர்களுக்காக சமரசம் செய்து கொள்கிறார் என்கிற கோணத்தில் விமர்சிப்பார்கள். ஆனால் தங்களை தொடர்ந்து கவனித்து வருவதிலும் கூட்டத்தில் தாங்கள் பேசியதிலுமிருந்து ஒரு புரிதல் ஏற்படுகிறது. சமரசம் செய்து கொள்கிறீர்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. இதுதான் இயல்பாக இருக்கிறது. தாங்களும் இப்படி எழுதுவதை comfort ஆக உணரும் போது எதற்காக மாற்றிக் கொள்ள வேண்டும்? தங்கள் எழுத்து கோராத வரையில் இப்படியே தொடர்ந்து கொண்டிருப்பதுதான் சரி. இதில் முழுமையாக உடன்படுகிறேன். 

யோசித்து பார்க்கையில் நீங்கள் சொன்னது போல இந்த பிரிவுகள் உண்டாவது, சித்திரம் உருவாவது, இவையெல்லாம் காலம்காலமாக இருந்து வருவதும் நம் கைக்கு அப்பாற்பட்டதுமாகும் என உணர்கிறேன். நாம் எதுவும் செய்வதற்கில்லை. ஆனால், உங்கள்மீது எந்த முத்திரையும் விழுவதை விரும்பவில்லை என்ற காரணத்திற்காகவும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவுமே அந்த கடிதம் எழுதினேன்.

சரி, தவறு என்று எதுவும் சொல்லத் தெரியவில்லை. தங்கள் நிலைப்பாட்டில் எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. பதிலுக்கு நன்றி. ஆமென்.

அன்புடன்,
தே.அ.பாரி. 
                                                                            (2)

எழுத்தாளர்கள் என்றாலே ஏதோ வேற்றுகிரகவாசிகள் போலவும் அதிமேதாவிகள் போலவும் அவர்களின் எழுத்தைப் படிப்பதற்கே நமக்கு தனிப்பட்ட அறிவு தேவை என்பது போலவும் தோற்றமளித்த எனக்கு, அட நம்மைப்போல ஒருவன்(ர்) என்ற சாமான்ய நடைதான் நிசப்தத்தை வாசிக்கக் காரணியாக அமைந்தது. சராசரி மனிதனான நமது எண்ணங்களின் பிரதிபலிப்பாகவே உணர்வதும் மற்றொரு காரணம். போர்த்திக்கொள்ளாமல் இருப்பதும் திணிக்காமல் இருப்பதுவும் சிறப்பு. இது ரொம்ப பிடிச்சிருக்கு. 4 பேருக்குத் தெரிவதை விட 400 பேருக்குத் தெரிந்திருப்பதில் தவறொன்றும் இல்லையே. இப்போதைக்கு இந்த நடை நல்லாவே இருக்குதுங்க.
        
அறக்கட்டளைப் பணி அற்புதம். கற்க ஆசைப்பட்ட போது ஒரு சொந்தக்காரனாவது உதவியிருந்தால் வாழ்கையே மாறியிருக்கும். பழக்க வழக்கமெல்லாம் காசுன்னு வந்துட்டா பத்தோட பதினொன்று. முகம் தெரியாதவர்களின் உதவி நமக்கு கிடைப்பதென்பது பெரும்பாக்கியம்.

என்னோட சாய்ஸ் மருத்துவ உதவி. எப்பாடியாவது சரி பண்ணிடவிடலாம் என போராடி வைத்தியம் பார்க்கும் போது காசில்லை என்கிற ஒரே காரணத்திற்காக மருத்துவம் பார்க்க முடியாம ஏங்கும் ஒருவருக்கு தங்களால் கிடைக்கப்பெறும் உதவியென்பது சாதாரணமானதல்ல. அதுவும் வலியச்சென்று. அனுபவப்பட்டவனுக்குத் தான் தெரியும், அதன் வலி(மை). அந்தத் தருணம் கடவுளை நேரில் கண்ட அற்புத தருணம். கட்டை காடு போகிற வரைக்கும் மறக்காது.

இது எழுத்தால் மட்டுமே சாத்தியமானது. அதற்காகவே நான் நிசப்தத்தின் கட்டாய வாசகனாக இருக்கிறேன். வரும் காலங்களில் அறக்கட்டளைக்கு சிறு அளவிலேனும் என்னாலான பங்களிப்பு கட்டாயம் இருக்கும்.

செந்தில்.
                                                                    (3)


வினோத் எழுதிக் கொள்வது. 

திருப்பதி மகேஷூடன் டிஸ்கவரி புக் பேலஸூக்கு வந்திருந்தேன். அது நல்ல கூட்டம். உங்களைச் சந்தித்ததில் மிகுந்த சந்தோஷமாகவும் உண்ர்ந்தேன். திரும்பிச் செல்லும் போது நீங்கள் மகேஷை அழைத்த போது நானும் அவரோடு பேருந்தில் இருந்தேன். தனியாக உரையாட இயலவில்லை என்பதற்காக நீங்கள் மன்னிப்புக் கோரியதாக மகேஷ் தெரிவித்தார். ஒரு பிரச்சினையும் இல்லை. உங்களை வாழ்க்கையில் சந்தித்ததற்காக தனிப்பட்ட முறையில் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். கடந்த பல மாதங்களாக உங்கள் பதிவுகள் வாயிலாக நிறையக் கற்றிருக்கிறேன். ஞாயிறன்று நடந்த நிகழ்ச்சியை அந்த கற்றலில் மிகச் சிறந்தது என்பேன். எப்படி ‘இருக்க’ வேண்டும் என்று கற்றுக் கொடுத்த உதாரணபுருஷர்களை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள்தான் எப்படி ‘வாழ’ வேண்டும் என்று கற்றுத் தரும் உத்வேகம்.

வினோத்சுப்ரமணியன்

                                                                   ***

கூட்டத்துக்காக திருப்பதியிலிருந்து மகேஷ் வந்திருந்தார். அவரைப் போலவே வினோத்துக்கும் கண் பார்வை இல்லை. இரண்டு பேரும் நண்பர்கள்.  நிகழ்வுக்கு வந்திருந்தார்கள். கூட்டம் முடிந்தவுடன் மகேஷை அலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தேன். அவ்வளவு தூரத்திலிருந்து சிரமப்பட்டு வந்தவருடன் தனியாகப் பேச முடியவில்லை என்ற வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டதற்குத்தான் வினோத் இந்த மின்னஞ்சலை எழுதியிருக்கிறார்.

ஏன் எழுத வேண்டும்? எழுதுவது சரியாக இருக்கின்றனவா? இது சரியான பாதைதானா உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்தக் கடிதங்கள் பதில் சொல்லிவிடுகின்றன.

இது போன்ற கடிதங்களைப் பிரசுரிப்பது பெருமையடித்துக் கொள்வது போன்ற பிம்பத்தை உருவாக்கினாலும் எங்கேயாவது இருந்த படி அவ்வப்போது சீண்டிக் கொண்டிருக்கும் சிலருக்காகவாவது இத்தகைய கடிதங்களைப் பிரசுரிக்க வேண்டியதாக இருக்கிறது.