Apr 29, 2015

சில்லரைப்பயலே

ஒருவனோடு சண்டை. இன்னோவா காரை சிக்னலில் நிறுத்தியிருந்தான். சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவனது வண்டிக்கு அருகில் துளி சந்து இருந்தது. கிடைக்கிற சந்தில் ஆட்டோ ஓட்டிவிட வேண்டும் என்கிற கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடியின் முதுமொழிக்கேற்ப வண்டியை நுழைத்து நிறுத்தினேன். அப்படி நுழைத்திருக்க வேண்டியதில்லைதான். ஆனால் இடைவெளி சரியானதாக இருந்தது. இன்னோவாக்காரன் கண்ணாடியை இறக்கினான். ‘அப்படியென்ன அவசரம்?’ என்றான். ஹிந்திக்காரன். ஹிந்தி புரிந்தாலும் பதில் சொல்கிற அளவுக்கு எனக்கு தெரியாது. 

‘அவசரம்தான்...ஒரு மீட்டிங் இருக்கு’ என்றேன். அதைச் சிரித்துக் கொண்டுதான் சொன்னேன். முகத்தை கரடு முரடாக வைத்துக் கொண்டு ‘Asshole' என்றான். எடுத்த உடனேயே இப்படித் திட்டுவார்களா? திட்டுகிறான். சென்ற வாரத்தில் ஊரில் பாரதிதாசனின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியொன்று நடந்தது. போய் வந்ததிலிருந்து பாரதிதாசன் பாடல்களாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். ‘கற் பிளந்து மலை பிளந்து கனிகள் வெட்டிக் கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை’ போன்ற முறுக்கேற்றும் பாடல்களை உருப்போட்டு வெறியேறிக் கிடக்கிறேன். போதாதா? அதே வேகத்தில் நானும் ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லிவிட்டேன். சொன்னது சொல்லியாகிவிட்டது. பாரதிதாசனா வந்து காப்பாற்றப் போகிறார்? நாம்தான் சமாளித்தாக வேண்டும்.

கையை வெளியே நீட்டி தோள் மீது வைத்தான். ‘கையை எடு’ என்றேன். ஜெயா டிவி நிருபரை விஜயகாந்த மிரட்டுவது போலவா மிரட்ட முடியும்? பூனைக்குட்டி பேசுவது போல அடிக் குரலிலிருந்துதான். தோளிலிருந்து கையை எடுக்காமல் ‘அப்படியே ஒரு அறை விட்டேன்னு வை’ - இது அவன். சிக்னலைப் பார்த்தேன். இன்னும் நூற்று முப்பது நொடிகள் மிச்சமிருந்தன. வசமாகச் சிக்கிக் கொண்டேன் போலிருக்கிறது. எதைச் சொல்லி பிரச்சினையை முடிப்பது என்று புரியவில்லை. இதற்காகவாவது பத்துக் கிலோ ஏற்ற வேண்டும். ஐம்பத்து நான்கு கிலோ யார் பயப்படுவார்கள்? சாலையில் எந்தப் பயலும் பயப்படுவதில்லை. பிச்சை எடுக்க வருபவன் கூட ‘தள்ளி நில்லுய்யா’ என்கிறான். இதுவே வாட்டசாட்டமாக தொண்ணூறு கிலோ இருந்தால் இவனெல்லாம் இப்படி பேசுவானா? 

இருக்கிறேன். பேசுகிறான். அதற்காக பயந்தபடி விட்டுவிட்டு வர முடியுமா? தமிழனின் மானத்தை மெட்ரோவில் ஏற்றுவதற்காகவா பெங்களூர் எனக்கு சோறு போடுகிறது? விடமாட்டேன். எதையாவது சொல்லி வைப்போம் என ‘எனக்கும் அறையத் தெரியும்’ என்றேன். அவன் நிச்சயமாக உள்ளுக்குள் சிரித்திருப்பான். ‘எங்க அடிச்சுப் பாரு’ என்கிறான். எவ்வளவு எகத்தாளம்? அவன் சொன்னதையே நாமும் திரும்பிச் சொல்லலாம்தான். ஆனால் அவன் கடுப்பாகி அறைந்து தொலைந்துவிட்டால் அவ்வளவுதான். 108 வந்துதான் நம்மை தூக்கிச் செல்ல வேண்டும் என்கிற பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டு ‘நீ ஏனய்யா வண்டியை கோணலா நிறுத்தியிருக்க?’ என்றேன். பேச்சை மாற்றிவிட்ட சந்தோஷம் எனக்கு. 

மீண்டும் ஏ டபுள் எஸ் என்றான். இவன் என்ன இதையே திரும்பத் திரும்பச் சொல்லுகிறான்? வேறு எதுவும் தெரியாது போலிருக்கிறது. நாம் புதியதாக எதையாவது சொல்ல வேண்டும் என்று மூளைக்குள் சிக்னல்கள் சிதறடித்தன. சில கணங்களில் அந்த வார்த்தையைக் கண்டுபிடித்துவிட்டேன்.  ‘பீப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்’- சொல்லி முடித்தவுடன் அவனுக்கு உச்சியில் நான்கு முடி நட்டிருக்க வேண்டும். கதவைத் திறந்து இறங்க முயற்சித்தான். அவன் இறங்க எத்தனிக்கிற வேகத்தைப் பார்த்தால் வீசிவிடுவான் போலிருக்கிறது.  அப்படி அவன் வீசினால் 108தான். அடி வாங்கி ஆஸ்பத்திரியில் சேர்வதற்கெல்லாம் அலுவலகத்தில் காப்பீடு தருவார்களா என்று தெரியவில்லை. சம்பளப் பணம் மொத்தத்தையும் தம்பியிடம் கொடுத்து வைத்திருக்கிறேன். அவன் என்னைவிடக் கஞ்சப்பயல். இப்படியெல்லாம் வெட்டிச் செலவைக் கொண்டு வந்தால் கண்டபடி திட்டுவான். தம்பியிடம் திட்டு வாங்குவதற்கு பதிலாக இந்த ஹிந்திக்காரனிடம் திட்டு வாங்குவதே மேல்.

‘அய்யனாரப்பா இந்த மூணு நிமிஷத்துக்கு மட்டும் அடி விழுந்துடாம பார்த்துக்க’ என்று வேண்டிக் கொண்டேன். அவனால் கார் கதவைத் திறக்க முடியவில்லை. திறந்தால் என் பைக் மீது இடிக்கிறது. மீண்டும் இருக்கையில் அமர்ந்தபடி ‘என்ன சொன்ன? என்ன சொன்ன?’ என்றான். 

‘நீ என்ன சொன்ன?’ என்றேன்.

அதற்குள் பின்னாலிருந்து ஒரு பைக்காரர் ஒலியெழுப்பி ‘வழியை விடுங்கய்யா..நான் U டர்ன் அடிக்கணும்’ என்றார். அவர் சொன்னது தெலுங்கில். எனக்குத்தான் தெலுங்கு தெரியுமே. 

‘இவாடு அலோ செய்யலேதண்டி....***********’ இந்த நட்சத்திரங்களில் ஒரு தெலுங்கு கெட்டவார்த்தை. ஹிந்திக்காரனுக்கு நிச்சயமாக அது கன்னடமா தெலுங்கா என்று புரிந்திருக்காது. கண்ணாடியை ஏற்றிக் கொண்டான். என்னை உள்ளூர்க்காரன் என்று நம்பிவிட்டான் போலிருக்கிறது. இப்பொழுதுதான் நமக்கு வாய்ப்பு. எதிரி பயப்படும்போது அவனுடைய பயத்தை இன்னமும் அதிகமாக்கி விட வேண்டும். கண்ணாடிக்கு வெளியிலிருந்தபடி திட்டினேன். அதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று கண்ணாடியைக் கீழே இறக்கி அவனும் திட்டினான். அவனுக்கும் மண்டைக்குள் பல்ப் எரிந்திருக்க வேண்டும். ‘நீ எந்த கம்பெனின்னு சொல்லு..அங்கேயே வர்றேன்’என்றான். சரியான கடன் காரனாக இருப்பான் போலிருக்கிறது - வந்தாலும் வந்துவிடுவான். ஐடி கார்டை வேறு வெளியில் தெரியும்படி தொங்க விட்டிருக்கிறேன். பார்த்துவிடுவானோ என்று திகிலாகத்தான் இருந்தது. 

இப்பொழுது பின்னாலிருந்த பைக்காரர் மீண்டும் சப்தம் எழுப்பினார். சிக்னல் விழுவதற்கு இன்னும் பதினைந்து வினாடிகள்தான் இருந்தன. எதையாவது செய்ய வேண்டும். அவன் கார் மீது எச்சிலைத் துப்பிவிட்டு வண்டியை ஒன்வேயில் விட்டுவிடலாம் என்பதுதான் ஆகச் சிறந்த திட்டமாகத் தெரிந்தது. என்னுடைய உடலுக்கும் பலத்துக்கும் இந்தச் சில்லரைத்தனம்தான் சரியாக இருக்கும். தயாராகிக் கொண்டிருந்தேன். ஹெல்மெட் அணிந்தபடி எச்சிலைத் துப்புவது ஒரு கலை. மல்லாந்து படுத்து விட்டத்தை நோக்கி துப்புவது போலத்தான். லாவகமாகச் செய்ய வேண்டும். சற்று ஏமாந்தாலும் ஹெல்மெட் நாசக்கேடாகி நம் சட்டை மீதே விழும். வண்டியை முறுக்கினேன். அவனும் மீண்டும் ஒரு முறை திட்டிவிட்டு கண்ணாடியை ஏற்றிக் கொண்டான். ‘இருடி...இரு’ என்று கறுவிக் கொண்டிருந்தேன். 

8..

7...

இன்னும் சில வினாடிகள்தான். இப்பொழுது ஆபரேஷனை ஆரம்பித்தால் சரியாக இருக்கும். வண்டியை திருப்பிக் கொண்டேன்.

4..

3..

டன்.

குறி தப்பவில்லை. பார்த்துவிட்டான். கண்டபடிக்கு கத்தினான். அவனால் தனது வண்டியை அவ்வளவு சீக்கிரமாகத் திருப்ப முடியாது என்று தெரியும். அப்படியே திருப்பி வந்தாலும் ஒன்வேயில் சிக்கிக் கொள்வான். முறுக்கிக் கொண்டு வந்துவிட்டேன். என்னவெல்லாம் திட்டினானோ தெரியவில்லை. வழிப்பிள்ளையார் கோவிலில் நிறுத்தி அவன் ஏதாவது சாபம் விட்டிருந்தால் அத்தனையும் காற்றோடு கலந்து போகட்டும் என்று வேண்டிக் கொண்டேன். ‘என் மீது துக்கினியூண்டு தப்புதான் பிள்ளையாரப்பா...அவன்தான் கெட்டவன்...கெட்ட கெட்ட வார்த்தையா பேசுறான்’ என்று வாத்தியாரிடம் புகார் வாசிப்பது போல வாசித்து வைத்திருக்கிறேன். சில்லரைப் பயலே என்று பிள்ளையார் என்னைத் திட்டியிருப்பார்தான் என்றாலும் காப்பாற்றிவிடுவார்.

Apr 28, 2015

இரண்டாம் ஞாயிறு

பெங்களூரில் நடைபெறும்  ‘இரண்டாம் ஞாயிறு’ நிகழ்வுக்கான அடுத்த ஆறு கதைகளாக கு.அழகிரிசாமி மற்றும் கி.ராஜநாராயணனின் சிறுகதைகளை எடுத்துக் கொள்ளலாம். 

இரண்டு எழுத்தாளர்களின் தலா மூன்று கதைகள். கு.அழகிரிசாமி மற்றும் கி.ராஜநாராயணன் இருவரின் கதைக்களமும் கரிசல் பூமிதான். கி.ரா கரிசல் பூமியை மட்டுமே கதைக்களமாகக் கொண்டவர். அழகிரிசாமி அப்படியில்லை. அவரது கதைகளில் கரிசல் மண்ணும் இருக்கும். இரண்டு எழுத்தாளர்களைப் பற்றியும் யாராவது தனித்தனியாக விரிவான கட்டுரையை வாசித்தால் நன்றாக இருக்கும். கலந்து கொள்பவர்களில் யாராவது தயாராகிக் கொள்ள முடியுமா என்று விசாரித்துவிடுகிறேன்.

இந்த முறை காலை பத்தரை மணிக்கு மிகச் சரியாகத் தொடங்கிவிட வேண்டும். சென்ற முறை தாமதமாகிவிட்டது. அதை நிறைய நண்பர்கள் குறையாகச் சொன்னார்கள். முதல் பதினைந்து நிமிடங்கள் எழுத்தாளர்களைப் பற்றி பேசலாம். அடுத்த ஒரு மணி நேரம் சிறுகதைகளைப் பற்றி பேசலாம்.


கு.அழகிரிசாமியின் கதைகள்: கி.ராஜநாராயணன் கதைகள்: 

சிறுகதைகளை விவாதித்துவிட்டு இரா.வினோத் அவர்களின் ‘தோட்டக்காட்டீ’ கவிதைத் தொகுப்பு பற்றிய உரையாடலும் நடைபெறும். இந்தத் தொகுப்பு குறித்து யார் பேசவிருக்கிறார்கள் என்பது இன்னமும் உறுதியாகவில்லை. இந்த வாரத்தில் முடிவாகிவிடும். 


இரா.வினோத் கவனிக்கத்தகுந்த பத்திரிக்கையாளர். விகடன் குழுமத்தில் இருந்த போது ஆனந்த விகடனுக்காகவும், ஜுனியர் விகடனுக்காகவும் அவர் எடுத்த நேர்காணல்களும், கட்டுரைகளும் மிகுந்த கவனம் பெற்றன. இப்பொழுது தமிழ் இந்துவின் பெங்களூரு பிரிவில் பணியாற்றுகிறார். 

அவர் எழுதிய தோட்டக்காட்டீ தொகுப்பிலிருக்கும் கவிதையின் வடிவத்தைப் பொறுத்தவரையில் எனக்கு விமர்சனங்கள் உண்டு. நவீன கவிதையின் வடிவத்திலிருந்து வெகுவாக விலகிய வடிவம் அது. ஆனால் இந்தத் தொகுப்பிற்காக வினோத் இலங்கையின் மலையகத்தில் தங்கியிருக்கிறார். அங்கு தான் நேரடியாகக் கண்டுணர்ந்த மலையகத் தமிழர்களின் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் அவர்களது வாழ்க்கையும்தான் இந்தத் தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார். அவரை அழைத்து இந்தத் தொகுப்புக்காக அவர் மேற்கொண்ட பயணத்தைப் பற்றியும், அந்த அனுபவங்களையும் பேசச் செய்வதும் இந்த உரையாடலின் முக்கியமான நோக்கம்.

நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் பெங்களூர்வாசிகள் விரும்பினால் தோட்டக்காட்டீ தொகுப்பினை முன்னதாகவே பெற்று தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன்.

மே மாத நிகழ்வு வழக்கம் போல இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை(மே 10, 2015) காலை பத்தரை மணிக்கு அல்சூர் தமிழ்ச்சங்கத்தில் நடைபெறும்.

கல்லை வீசிப் பார்க்கலாம்

நூறாண்டு கடந்துவிட்ட அரசு உதவி பெறும் பள்ளி அது. பத்து வருடங்களுக்கு முன்பு வரையில் இரண்டாயிரம் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு ஆயிரத்து சொச்சம் மாணவர்கள் கூட இல்லை. சில பல ஏக்கர்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அப்படியேதான் இருக்கின்றன. மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அப்படியேதான் இருக்கிறது. ஆசிரியர்களின் எண்ணிக்கையும் கூட அப்படியேதான் இருக்கிறது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்து விட்டது.

கேட்டால் ‘ப்ரைவேட் ஸ்கூலுக்கு போயிடுறாங்க’ என்று காரணம் சொல்கிறார்கள். 

அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் ‘ஆல்-பாஸ்’. பத்தாம் வகுப்பில் தேர்ச்சியடைவது கூட பெரிய காரியமில்லை. விடைத்தாள் திருத்தும் பணிக்குச் சென்றிருந்த ஆசிரியரிடம் விசாரித்தால் ‘இருபத்தைந்து அல்லது இருபத்தாறு மார்க் வாங்கியிருந்தால் முப்பத்தைந்தாக்கி பாஸ் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்’ என்கிறார். ஆக ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவன் பத்தாம் வகுப்பு வரைக்கும் எங்கேயும் நிற்பதில்லை. இலவச பேருந்து, இலவச மிதிவண்டி, இலவச பாட புத்தகங்கள் அத்தனையும் அரசு கொடுக்கிறது. இவ்வளவு சலுகைகளும் வசதிகளும் கிடைத்த பிறகும் ஏன் அரசுப் பள்ளிகளைத் தவிர்த்துவிட்டு தனியார் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள்?

பிரச்சினை எங்கேயிருக்கிறது?

ஓர் அரசு ஆசிரியருக்கான மாதச் சம்பளம் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ரூபாயைத் தொடுகிறது. அரசு அறிவுறுத்தலின் படி ஒரு பள்ளி இருநூறு நாட்கள் இயங்கினால் போதும். இந்த இருநூறு நாட்களில் ஓர் ஆசிரியருக்கு பனிரெண்டு நாட்கள் தற்செயல் விடுப்பு. ஈட்டிய விடுப்பு பதினேழு நாட்கள். இருநூறு நாட்களில் முப்பது நாட்கள் இப்படி போய்விடுகிறது. அதைத் தவிர மருத்துவ விடுப்பு எடுப்பதாக இருந்தால் அவ்வளவுதான். சராசரியாக ஒரு அரசு ஆசிரியர் வருடத்திற்கு நூற்று அறுபது நாட்கள் வேலை செய்தால் பெரிய காரியம். இவ்வளவு சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் ஏன் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை? 

இதுவே தனியார் பள்ளிகளை கவனத்தில் எடுத்துக் கொண்டால் நிலைமை புரியும். மாதம் ஐந்தாயிரம் ரூபாய்தான் சம்பளம் தருகிறார்கள். எம்.ஏ அல்லது எம்.எஸ்ஸி முடித்துவிட்டு கூடவே எம்.எட் படிப்பையும் முடித்திருப்பார்கள். சிலர் எம்.ஃபில்லும் முடித்துவிட்டு ஐந்தாயிரத்துக்கு மாரடித்துக் கொண்டிருப்பார்கள். சனி, ஞாயிறு, தீபாவளி, பொங்கல் என்ற எந்த விடுமுறையும் கிடையாது. தினசரி தேர்வு நடத்த வேண்டும். தினசரி விடைத்தாள்களைத் திருத்த வேண்டும். பெற்றோர்களுக்கு கடிதம் எழுத வேண்டும். பள்ளி மேலாண்மைக்கு பதில் சொல்ல வேண்டும். இப்படி பிழிந்து எடுத்துவிடுகிறார்கள். அது போக ஏப்ரல், மே மாதங்களில் வீதி வீதியாக ஆள் பிடிக்கச் செல்கிறார்கள்.

தனியார் பள்ளிகளின் பாடமுறை சரியானது என்று சொல்லவில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உருவாக்கும் பிம்பங்கள் பற்றிய வித்தியாசங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளைத் தவிர்ப்பதற்கு ஆழமான காரணங்கள் உண்டு. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்தால் மாணவர்களால் மதிப்பெண் வாங்க முடியாது என்று நம்புகிறார்கள். அவர்கள் நம்புவதைத் தவறு என்று சொல்ல முடியாது. ஏன் அரசுப் பள்ளி மாணவர்களால் மதிப்பெண்கள் வாங்க முடிவதில்லை? 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்தவர்கள் ‘நாங்கள் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதில்லை’ என்று சொன்னால் வேறு எதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று கேட்க வேண்டியிருக்கிறது. விளையாட்டு, அறிவியல், பொது அறிவு என்று படிப்பைத் தவிர வேறு எந்தத் துறையில் இந்தப் பள்ளி மாணவர்கள் கவனம் பெறுகிறார்கள்? எதிலும் இல்லை என்பதுதான் உண்மை. இதுதான் சிக்கல். ஏன் தமிழக கிராமப்புற மாணவர்களின் திறன் வீழ்ச்சியடைந்து கொண்டேயிருக்கிறது என்றால் இதுவொரு முக்கியமான காரணம். வசதி வாய்ப்பிருப்பவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். அதற்கான வசதி இல்லாதவர்கள் அருகாமையில் இருக்கும் ஏதாவதொரு பள்ளியில் படித்து எந்தக் கவனமும் இல்லாமல் கரைந்து போகிறார்கள்.

ஒரு ஆசிரியர் அழைத்து ‘எங்கள் பள்ளிக்கு நூலகம் அமைத்துத் தர முடியுமா?’ என்று கேட்டார். அது உயர்நிலைப்பள்ளி. 

‘உயர்நிலைப்பள்ளிக்குத்தான் அரசு நிதி ஒதுக்கித் தருகிறதல்லவா?’ என்று கேட்டால் ‘தருது சார்..ஆனால் தலைமையாசிரியர் சரியில்லை..வவுச்சர் போட்டு பணத்தை எடுத்துக்கிறாரு..இங்க மட்டும் இல்ல...நிறையப் பக்கம் அப்படித்தான்’ என்கிறார். இதை இட்டுக்கட்டிச் சொல்லவில்லை. சென்ற வாரத்தில் ஒரு அக்கறையுள்ள ஆசிரியர் சொன்ன விஷயம்தான் இது. இப்படித்தான் பெரும்பாலான பள்ளிகளில் நிலைமை இருக்கிறது. நூலகம், விளையாட்டுச் சாதனங்கள் என எந்த வசதியையும் அமைப்பதில்லை. சரியான பயிற்று முறைகள் இல்லை. பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடம் சிக்கல் இருக்கிறது. வழி நடத்தும் தலைமையாசிரியரிடம் பிரச்சினையிருக்கிறது.

அத்தனை ஆசிரியர்களையும் தலைமையாசிரியர்களையும் குறை சொல்லவில்லை. சில தலைமையாசிரியர்கள் சரியானவர்களாக இருப்பார்கள். ‘வாத்தியார் போதலை சார்..நாங்க என்ன பண்ணுறது?’ என்கிறார்கள். அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் போதவில்லை என்றால் ஆயிரக்கணக்கான அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் நிறைந்து கிடக்கிறார்கள். ஒரு ஆசிரியருக்கு முப்பது மாணவர்கள் என்பது விகிதாச்சாரம். பத்து வருடங்களுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்த அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏகப்பட்ட ஆசிரியர்கள் இருந்திருப்பார்கள். இப்பொழுது மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்திருக்கும் ஆனால் ஆசிரியர்களின் எண்ணிக்கை அப்படியேதான் இருக்கும். 

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இடம் மாறுதல் செய்யப்படுவதில்லை. பணியில் சேர்ந்தால் கடைசி வரைக்கும் அதே பள்ளிதான். அதனால் அப்படியே இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் கூட வகுப்பெடுக்காத ஆசிரியர்களின் பட்டியல் பல்லாயிரக்கணக்கில் இருக்கும். அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. இடம் மாற்றம் கொடுத்தால் சென்றுவிடுவார்கள்தான். ஆனால் இடமாறுதலுக்குத்தான் வழியில்லையே? இப்படியே ஓய்வு பெறும் வயது வரைக்கும் வெட்டிச் சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

விதிமுறைகளின்படி,  உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கை உபரியாக இருந்தால் அந்தப் பணியிடங்களை அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். எந்தப் பள்ளியும் அதைச் செய்வதில்லை. இது குறித்தான துறை ரீதியிலான எந்த ஆய்வும் நடப்பதாக தெரியவில்லை. 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை தரமுயர்த்த விரும்பினால் அரசு செய்ய வேண்டிய இந்தக் காரியம் மிக முக்கியமானது. தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றிய வாரியாக உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கைகளைக் கணக்கெடுக்க வேண்டும். அவர்களை பற்றாக்குறையுடைய அரசுப் பள்ளிகளுக்கு இடம் மாற்றுவதற்கான வழிவகைகளை உருவாக்க வேண்டும். ஆசிரியர்- மாணவர் விகிதாச்சாரத்தை அத்தனை பள்ளிகளிலும் சீராக அமுல்படுத்த வேண்டியது மிக முக்கியமான காரியம். இன்றைய சூழலில் அரசாங்கம் இதைச் செய்யுமா என்று தெரியவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம் வாரியாக இருக்கக் கூடிய உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கையைப் பெறும் வேலையைச் செய்வதாக உத்தேசம் இருக்கிறது. அதன் பிறகு தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம் என்ற யோசனையும் இருக்கிறது. எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. கல்லை வீசிப் பார்க்கலாம்.

Apr 27, 2015

ஏப்ரல் மாதத்தில்

நிசப்தம் அறக்கட்டளையின் ஏப்ரல் மாத நடவடிக்கை குறித்தான விவரங்கள் இவை.

மார்ச் 30 ஆம் தேதியன்று கணக்கில் இருந்த தொகை நான்கு லட்சத்து நாற்பதாயிரத்து அறுநூற்று நாற்பத்தெட்டு ரூபாய். (விவரங்களை இணைப்பில் பார்க்கலாம்). ஏப்ரல் மாத இறுதியில் அந்தத் தொகை ஐந்து லட்சத்து பதினோராயிரத்து நானூற்று ஐம்பத்தாறு ரூபாயாக இருக்கிறது.


வரிசை எண்: 7 லிருந்து 10 வரையிலான காசோலைகளில் ஒன்று திரு.ஹரிஹரன் அனுப்பியது. ஒன்று திருமதி. விலாசினி அனுப்பிய காசோலை. மற்ற இரண்டும் திருமதி.விஜயா கொடுத்த காசோலைகள். வரிசை எண் 18  வருண் ராமநாதன் என்கிற குழந்தையின் பங்களிப்பு. அவரது தாத்தா வழியாக அனுப்பி வைத்திருக்கிறார்.

இவை தவிர தினமணியில் எழுதும் செல்லுலாய்ட் சிறகுகள் தொடருக்காக ஒரு காசோலை வந்திருக்கிறது. அறக்கட்டளையின் பெயரில் அனுப்பி வைக்கச் சொல்லியிருந்தேன். ஆனால் இன்னமும் வங்கியில் செலுத்தாமல் வைத்திருக்கிறேன்.

இவையெல்லாம் வரவுக் கணக்குகள்.

உதவி என்று பார்த்தால் ஏப்ரல் மாதத்தில் அறக்கட்டளையின் கணக்கிலிருந்து எண்பத்து இரண்டாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டிருக்கிறது. விஷ்ணுபிரியா என்கிற கல்லூரி மாணவியின் கட்டணத்திற்காக பன்னிரெண்டாயிரம் ரூபாயும் (வரிசை எண்: 21) , ராகவர்ஷினி என்ற குழந்தையின் ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக எழுபதாயிரம் ரூபாயும்(வரிசை எண்: 27) அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 

இவை தவிர இரண்டு காசோலைகள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இன்னமும் பணத்தை எடுத்துக் கொள்ளவில்லை. 

ஒரு காசோலை குணசேகருக்கு. அவர் சென்னையில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து கொண்டிருந்தவர். நாற்பத்தைந்து வயதாகிறது. கடும் அழுத்தம் தரக் கூடிய வேலை என்கிறார்கள். அழுத்தத்தின் காரணமாகவோ என்னவோ மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சுய நினைவை இழந்துவிட்டார். முதலில் ஹைதராபாத்தில் சிகிச்சையளித்திருக்கிறார்கள். இப்பொழுது சோழிங்கநல்லூரில் இருக்கும் க்ளோபல் மருத்துவமனையின் நியூரோ பிரிவின் ஐசியூவில் இருக்கிறார். இதுவரையிலும் பல லட்ச ரூபாய் மருத்துவச் செலவு ஆகியிருக்கிறது. குணசேகருக்கு ஒரே மகன். பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறான். குணசேகர் மட்டும்தான் குடும்பத்தின் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருந்தவர். இனி அவரால் இந்த வேலையைச் செய்ய முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். சொந்த ஊரில் ஜீவனத்துக்கு ஏதாவது வழி செய்ய வேண்டும். நண்பர்கள் உதவிக் கொண்டிருக்கிறார்கள். இருந்த சொத்துக்களையெல்லாம் விற்று பணம் புரட்டியிருக்கிறார்கள். இருபத்தைந்தாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்று சொல்லியிருந்தார்கள். மருத்துவமனையின் பெயருக்கு காசோலை அனுப்பப்பட்டிருக்கிறது. 

இன்னொரு காசோலை மணிகண்டனுக்கு. மணிகண்டன் நாமக்கல் பக்கத்தில் இருக்கும் ஒரு குக்கிராமத்தைச் சார்ந்தவர். அம்மா, அப்பா இரண்டு பேருமே விவசாயக் கூலிகள். வயிற்றைக் கட்டி பையனை படிக்க வைத்துவிட்டார்கள். மணிகண்டன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.ஸி முடித்துவிட்டு பிறகு பெங்களூர் IISC யில் இளநிலை ஆராய்ச்சியாளராக இருந்தவர். இப்பொழுது ஜெர்மனியில் பி.ஹெச்.டிக்கான ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறார். ஆதி திராவிடர்களுக்கான கல்வி உதவித் தொகையில் படித்துக் கொண்டிருந்த மணிகண்டனுக்கு சில சிக்கல்களின் காரணமாக உதவித் தொகை நின்று போய்விட்டது. அதனால் மணிகண்டனுக்கு ஏற்கனவே உதவியிருக்கிறோம். நிசப்தம் தளத்தில் எழுதியதன் வழியாக கிட்டத்தட்ட நான்காயிரம் யூரோக்கள் நிதி கொடுக்கப்பட்டது. அப்பொழுது அறக்கட்டளை தொடங்கப்பட்டிருக்கவில்லை. மணிகண்டனின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக பணம் அனுப்பினார்கள்.

இப்பொழுது மணிகண்டன் தனது ஆராய்ச்சியை படிப்பை ஜெர்மனியில் நீட்டிப்பதற்காக சில அதிகாரிகளைச் சந்திக்க சென்னை வந்திருக்கிறார். கல்வி உதவித் தொகையை நீட்டிப்பதுதான் முக்கிய நோக்கம். அவர் இந்தியா வந்து செல்வதற்காக உதவி தேவைப்பட்டிருக்கிறது. விமான பயணச்சீட்டுக்காக முப்பதாயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறேன். வந்து போவதற்கெல்லாம் உதவி செய்வதில்லை என்பதால் இந்தத் தொகை கடனாகத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மாதங்களில் திருப்பித் தந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். மணியின் மீது நம்பிக்கையிருக்கிறது. இரண்டு மாதங்கள் என்பது நெருக்கடிகளின் காரணமாக மூன்று மாதங்கள் ஆகக்கூடுமே தவிர வந்துவிடும்.

இப்போதைக்கு உடனடியாகத் தர வேண்டிய தொகை குழந்தை கிருஷ்ணாவுக்கான பராமரிப்புத் தொகை. அந்தக் குழந்தையின் வீட்டுக்கு இந்த வாரம் செல்வதாகத் திட்டமிடப்பட்டது. ஆனால் இயலவில்லை. நத்தக் காடையூர் சென்று வர எப்படியும் முக்கால் நாள் ஆகிவிடும் என்றார்கள். நேரம் கிடைக்கவில்லை என்பதால் அடுத்த வாரத்தில்தான் கிருஷ்ணாவுக்கான காசோலைகளை வழங்க வேண்டும். .அடுத்த வாரம் மூன்று நாட்கள் விடுமுறை இருக்கிறது. சனிக்கிழமையன்று நேரில் சந்தித்துக் கொடுத்துவிடுகிறேன்.

இயன்றவரையிலும் எந்தத் தொய்வுமில்லாமல் அறக்கட்டளையின் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விவரங்களைச் சரி பார்க்காமல் எதையும் செய்வதில்லை என்பதால் சில சமயங்களில் தாமதமாகிவிடுகிறது. 

மற்றபடி வழக்கம்போலவே அத்தனை தகவல்களும் வெளிப்படையாக இருக்கின்றன. எந்தச் சந்தேகமிருப்பினும் கேட்கலாம். அறக்கட்டளை குறித்தான வேறு ஏதேனும் கேள்விகள் இருப்பினும் கேட்கவும். விரிவாக பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. 

அனைவருக்கும் நன்றி.

vaamanikandan@gmail.com

எதுக்கு ஆயா உனக்கு இவ்வளவு கோபம் வருது?

‘டேய் பசங்களா....இந்தப் பக்கம் வந்தீங்கன்னா மண்டையை உடைச்சுப் போடுவேன்’ என்று அந்த ஆயா கத்திக் கொண்டேயிருக்கும். வெள்ளாட்டுக்கார ஆயா. எங்கள் ஊரிலிருந்து வெகுதூரத்தில் வாய்க்கால் ஓரமாக அவருடைய வீடு இருந்தது. அதை வீடு என்று சொல்ல முடியாது. குடிசை. நாவல் மரங்கள் சூழ்ந்த பகுதி என்பதால் சீஸனில் கற்களை எடுத்து வீசும் பையன்களின் முரட்டுத்தனத்தால் குடிசையும் பதம் பார்க்கப்படும். குடிசைக்குள் எதையாவது செய்து கொண்டிருக்கும் ஆயா அவசர அவசரமாக வெளியே வந்து தாய்கோழி, தேவதையின் பசங்களா என்று எதையாவது சொல்லித் திட்டுவார். அவருக்கு அப்பொழுதே எண்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் ஆயாவுக்கு உடம்பில் தெம்பு அதிகம். இல்லையென்றால் வயலுக்குள் தன்னந்தனியாக சோறாக்கித் தின்று காலத்தை ஓட்ட முடியுமா?

ஆயா வெள்ளைச் சேலைதான் கட்டியிருக்கும். விதவைகள்தான் வெள்ளைப் புடவை அணிவார்கள் என்பதால் நிச்சயமாக திருமணம் ஆகியிருக்க வேண்டும். ஆனால் கேட்டால் பதில் சொல்ல மாட்டார். ஒரு நாள் சரவணன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் ‘ஆயா உங்க ஊட்டுக்காரருக்கு என்னாச்சு?’ என்று கேட்டுவிட்டான். ஆயா எதுவுமே சொல்லவில்லை. காது கேட்கவில்லை போலிருக்கிறது என்று நினைத்தவன் எங்களிடம் திரும்பி ‘கெழவிக்கு காது கேட்கலையாட்ட இருக்குது...நம்மளையே இந்தப் போடு போடுறா...புருஷனை என்ன போடு போட்டிருப்பா?’ என்றான். அது ஆயாவுக்கு காது கேட்டுவிட்டது. 

‘அடேய்.....வப்பானோளிக்கு பொறந்தவனே...’ என்று கத்திக் கொண்டே சல்லைக் கத்தியைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார். சல்லைக்கத்தி என்பது நீண்ட மூங்கில் குச்சியின் நுனியில் சிறு கத்தியைக் கட்டி வைத்திருப்பார்கள். அந்தக் கத்தி வளைந்திருக்கும். கீழே நின்றபடியே மரத்திலிருந்து காய்கள் பறிப்பதற்கும் கிளைகளை ஒடிப்பதற்கும் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆயாவின் வேகத்தைப் பார்த்து சரவணன் திகிலைடந்துவிட்டான். நாங்களும்தான். சிக்கினால் பின்பக்க சதையை கிழவி கிழித்து எடுத்தாலும் எடுத்துவிடும். ஒரே ஓட்டமாக ஓடி வாய்க்காலுக்குள் குதித்து விட்டோம். எட்டாவது ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த வயது. ட்ரவுசரோடு நாங்கள் தறி கெட்டு ஓடியதைப் பார்த்ததும் கிழவிக்கு சிரிப்பு வந்துவிட்டது. கொஞ்சம் பெருமையும் கூட. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் வந்து மோரி மேல் அமர்ந்து கொண்டார். ‘நீங்க எப்படி மேல வர்றீங்கன்னு பார்க்கிறேன் இருங்கப்புனுகளா’ என்றார். ஆயா நகர்வது போலத் தெரியவில்லை.

‘எதுக்கு ஆயா உனக்கு இவ்வளவு கோபம் வருது?’ என்றான். 

‘எம்புருஷன் எப்படிச் செத்தா உனக்கு என்னடா? நீ இன்னொருக்கா என்னையைக் கட்டி போறியா?’ என்ற ஆயாவின் கேள்வியை சரவணன் எதிர்பார்க்கவில்லை.

‘அதுக்கு என்ன ஆயா...நீ சரின்னு சொல்லு...கட்டிக்கிறேன்...ஆனா ஒண்ணு...வருஷம் ஒரு குழந்தை பெத்து போட்டுறோணும்..சரியா?’என்றான். எங்களுக்கு பயங்கரமாக சிரிப்பு வந்துவிட்டது. இதைச் சொல்லும் போது சரவணனுக்கு பதினான்கு வயது கூட ஆகியிருக்கவில்லை. ஜட்டி போடாமல் ட்ரவுசர் போட்டுத் திரிந்த பருவம். ஆனால் அப்பொழுதே எங்களுக்கு பலான பலான விவரங்கள் தெரியும். வாய்க்கால் மேட்டில் யார் ஒளிகிறார்கள் என்பதிலிருந்து கரும்புக் காட்டுக்குள் யார் நுழைகிறார்கள் என்பது வரை மோப்பம் பிடித்து வைத்திருப்போம். 

ஆயாவுக்கு மறுபடியும் சிரிப்புதான். அது தனிமையின் சிரிப்பு. யாரிடமும் பேசுவதற்கு வாய்ப்பில்லை. இப்படி யாராவது நக்கலாக பேசினாலும் கூட அது ஆயாவுக்கு சந்தோஷமாகத்தான் இருந்திருக்கக் கூடும். சல்லைக் கத்தியை நிலத்தில் நட்டு வைத்தபடி பிடித்துக் கொண்டு ‘நீ மேல வா...அறுத்து மீனுக்கு வீசறேன்’ என்று அமர்ந்து கொண்டார். 

சரவணனும் விடுவதாகத் தெரியவில்லை. ‘கெழவி...உனக்கு வேண்டாம்ன்னா விட்டுடு....அறுத்துவீசிட்டா நான் எங்க போய் தேடுவேன்’ என்று கேட்டு எக்கனைக்கு தக்கனையாக இரண்டு பேரும் பேசிக் கொண்டேயிருந்தார்கள். அப்பொழுது அந்தி சாயும் நேரம். ‘போங்கடா பொழப்பு கெட்டவனுகளா’ என்று சொல்லிவிட்டு தனது வெள்ளாடுகளை ஓட்டி வரச் சென்றுவிட்டார். ஆயா பற்றி நிறையக் கதைகள் உண்டு. வெகு மூர்க்கமாக இருந்த காலத்தில் தண்ணிவாக்கியாக இருந்திருக்கிறாராம். வாய்க்காலின் நீரை வயல்களுக்கு மடை மாற்றிவிடும் வேலை. தண்ணீர் பாய்ச்சுபவர் என்பதுதான் மருவி தண்ணிவாக்கியாகிவிட்டது. பெரும்பாலும் ஆண்கள்தான் இந்த வேலையைச் செய்வார்கள். ஆனால் ஆயா செய்திருக்கிறார். 

குடும்பம், குழந்தை என்று எதுவும் இல்லை. தனிக்காட்டு ராணி. கடைசி காலத்தில் வெள்ளாடு மேய்த்தபடி காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். கடைசிக் காலம் என்பது இருபது வருடங்களுக்கு முன்பாக. 
ஆயா பற்றிய ஒரு கதை வெகு பிரசித்தமாகியிருந்தது. ஆயா மூர்க்கமாக இருந்த காலத்தில் வயல்வெளிக்குள் நெல் திருட வந்த எவனோ ஒருவன் ஆயாவின் குடிசைக்குள் நுழைந்துவிட்டான். வாட்டசாட்டமாக பெண்ணொருத்தி இருக்கிறாள் என்கிற நினைப்புதான் அவனுக்கு. வந்திருந்தவன் போதையில் இருந்திருக்கிறான். குடிசையின் படல் அசைவின் சத்தத்திலேயே எவனோ நுழைந்துவிட்டான் என்பதை மோப்பம் பிடித்துக் கொண்ட ஆயா பதற்றமேயில்லாமல் படுத்திருக்கிறார். உள்ளே நுழைந்தவன் மெதுவாக ஆயாவின் மீது பரவவும் அதுவரை காத்திருந்த ஆயா எந்தச் சத்தமுமில்லாமல் தலையணைக்குக் கீழாக இருந்த கருக்கு அரிவாளை எடுத்து குரல்வளையை அறுத்துவிட்டார். அந்த இரவில் கேட்ட அவனது கதறல் சத்தம் வெகு தூரத்திற்கு கேட்டிருக்கிறது. ஆனால் யாரும் வரவில்லை. இரவோடு இரவாக பெரிய தக்கையில் அவனது உடலைக் கட்டி ஆற்றில் விட்டுவிட்டாராம். அவ்வளவுதான். அந்தக் காலத்தில் ஒரு விசாரணையும் இல்லை. இருந்தாலும் ஆயா மீது மற்றவர்களுக்கு பயம் வந்துவிட்டது. யாரும் முகம் கொடுத்துக் கூட பேசத் தயங்கியிருக்கிறார்கள். அதுவே கூட ஆயாவுக்கு தனிமையைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. 

அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லையென்றும் ஆயாவாகவே கிளப்பிவிட்ட வதந்தி என்றும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் காலத்தில் வனாந்திரமான வயல்வெளியில் ஒரு பெண்மணி குடிசை அமைத்து வாழ்வது சாதாரணக் காரியமில்லை. என்னதான் தைரியமான பெண்மணியாக இருந்திருந்தாலும் எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்திருக்கக் கூடும். கண்டவனெல்லாம் கண் வைத்திருக்கக் கூடும். அதற்காகவே கூட இப்படியான பிம்பங்களைத் தன்னைச் சுற்றி உருவாக்கி வைத்திருக்கலாம். எவனும் யோசிப்பான் இல்லையா? ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்கிற வயது எங்களுக்கு இல்லை. ஒரு கிழவியை சீண்டும் சந்தோஷம்தான். அந்த வருடத்தின் முழு ஆண்டுத் தேர்வு முடிந்த பிறகு பெரும்பான்மையான நாட்களில் வாய்க்காலில் குளித்து ஆயாவிடம் எதையாவது பேசிவிட்டு வருவோம். ஆயாவுக்கும் அது ஓரளவு மனத் திருப்தியைக் கொடுத்திருக்கக் கூடும். 

வெள்ளாடு வழியாக ஆயாவுக்கு ஓரளவுக்கு வருமானம் இருந்தது. சிலுவாடு தொகை வைத்திருந்திருக்கக் கூடும். எவ்வளவு வைத்திருந்தார் என்றெல்லாம் தெரியவில்லை.

நாங்கள் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று ஆயாவை யாரோ கொன்றுவிட்டதாகச் சொன்னார்கள். அப்பொழுது என்னிடம் சைக்கிள் இருந்தது. சரவணனும் நானும் சைக்கிளை வேக வேகமாக மிதித்தோம். நாங்கள் சென்ற போதே கூட்டம் கூடியிருந்தது. குடிசைக்குள் பிணம் கிடந்தது. போலீஸார் எங்களை அருகில் விடவில்லை. சிறுவர்கள் என்பதால் மற்ற பெரியவர்களும் எங்களை விரட்டினார்கள். யாரோ ஆயாவின் கழுத்தை அறுத்துவிட்டு பணத்தை திருடிவிட்டுச் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். எவ்வளவு தொகை என்பதெல்லாம் தெரியவில்லை. ஆயாவின் பிணம் வெகு கோரமாக இருந்தது. வாயைத் திறந்தபடி ரத்தம் உறைந்து கிடந்த முகம். தலை முடி பரட்டையாகக் கிடந்தது.  இந்த முறை குடிசையின் படல் அசைவுச் சத்தத்தை ஆயாவால் கண்டுபிடிக்க முடியவில்லை போலிருக்கிறது என்று தோன்றியது. ஒருவேளை கண்டுபிடித்திருந்தாலும் கழுத்தை அறுக்குமளவுக்கு ஆயாவின் உடலில் வலுவில்லாமல் போயிருக்கக் கூடும்.

‘பாவம்’ என்று இருவரும் சொல்லிக் கொண்டோம். 

வீட்டுக்குக் கிளம்பலாம் என்று நினைத்த போது சரவணன் ‘வாய்க்கால்ல குளிக்கலாமா?’ என்றான் . சற்று தொலைவுக்குச் சென்று மற்றவர்களின் கண் படாத இடத்தில்  வாய்க்காலில் இறங்கினோம். குளிக்கவே பிடிக்கவில்லை. ஆயாவின் நினைப்பாகவே இருந்தது. ஆயாவின் நினைப்பு என்பதைவிடவும் ஆயாவின் பிணம் பற்றிய நினைப்பு அது. ‘போலாம்’ என்று கிளம்பினோம். வெள்ளாடுகளை என்ன செய்தார்கள் என்று கவனிக்கவில்லை. சட்டையை அணிந்து கொண்டு வாய்க்கால் கரையோரமாகவே சைக்கிளை மிதித்தோம். அன்றைய தினம் மட்டும் வாய்க்காலில் ரத்தம் ஓடுவதாக தெரிந்தது. 

உருளுதாம் சாயுதாம் புரளுதாம்

இந்தக் காலத்தில் ஒருவனை பொது இடத்தில் தாக்குவது பெரிய காரியமேயில்லை. நினைத்தால் போதும். நான்கு குத்துக்களை இறக்கிவிடலாம். பெரிய ஊர்களில்தான் இப்படி அடித்துக் கொள்வார்கள் என்று இல்லை. கோபி போன்ற ஊர்களிலும் அடித்துக் கொள்கிறார்கள். சனிக்கிழமையன்று மார்க்கெட் அருகில் பேசிக் கொண்டிருந்தோம். இப்போதைக்கு குமணன் அண்ணன் வழியாகத்தான் உள்ளூர் விவகாரங்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்தான் source. அடுத்த முறை செங்கோட்டையனுக்கு ஸீட் தருவார்களா என்று பேசிக் கொண்டிருந்த போது வெளியில் தப், தொப் என சத்தம் கேட்கத் துவங்கியது. வடிவேல் சொல்வது போல உருளுதாம், சாயுதாம், புரளுதாம்- கடைக்கு முன்பாக நிறுத்த வைக்கப்பட்டிருக்கும் தகரத் தட்டிகள் மீதெல்லாம் விழுகிறார்கள். பைக், சைக்கிள் என்று ஒன்று பாக்கியில்லை. எழுந்து சென்றால் ஆளாளுக்கு சாத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுதெல்லாம் உள்ளூர் தட்டிகளில் செங்கோட்டையனின் பெயரே தென்படுவதில்லை. அமைச்சராக இருந்த போது அவர் ஊருக்கு வரும் போதெல்லாம் ‘சாதனைச் செம்மலே வருக’ என்று போஸ்டர் ஒட்டுவார்கள். அவரும் வெள்ளிக்கிழமையானால் ஊருக்கு வந்து போவார். ஒரு காலத்தில் அவருடைய விரலசைவு இல்லாமல் ஈரோடு மாவட்டத்தில் எதுவும் நடந்ததில்லை. எம்.ஜி.ஆர் காலத்தில் ஈரோடு மாவட்டத்தில் கொடி பறக்கவிட்டுக் கொண்டிருந்த சு.முத்துச்சாமி கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டப்பட்ட பிறகு செங்கோட்டையனின் கொடி பறக்கத் தொடங்கியது. இரண்டாவது முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு சுத்தமாக காலி செய்யப்பட்ட முத்துச்சாமி இப்பொழுது திமுகவுக்குச் சென்றுவிட்டார். அங்கு என்.கே.கே.பி.ராஜாவுடன் லடாய் ஆகி இதுவரை ஒன்றாக இருந்த மாவட்ட திமுகவை இரண்டாகப் பிரித்து ஒன்றை ராஜாவுக்கும் இன்னொன்றை முத்துச்சாமிக்கும் கொடுத்துவிட்டார்கள். அதிமுகவின் தளபதியாக இருந்த செங்கோட்டையனுக்கு பெரிய பன்னாகக் கொடுத்து அமர வைத்துவிட்டார்கள்.

ஏன் அவரை டம்மியாக்கியிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. வெறும் யூகங்கள்தான். பெண் விவகாரத்தில் சிக்கிக் கொண்டதால் அவருடைய மகனும் மனைவியுமே மேலிடத்தில் புகார் அளித்து காலியாக்கிவிட்டார்கள் என்கிறார்கள். அதெல்லாம் இல்லை- தனக்கு ஆதரவாக தொண்ணூறு எம்.எல்.ஏக்களைத் திரட்டி வைத்திருந்தார். அதனால்தான் டம்மியாக்கிவிட்டார்கள் என்று இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள். செங்கோட்டையன் அந்தளவுக்கு தைரியமானவர் இல்லை என்றுதான் நினைக்கிறேன். 

அதெல்லாம் எப்படியோ போகட்டும். இப்பொழுது அவருக்கு நிலைமை சரியில்லை. தோப்பு வெங்கடாசலம்தான் பெரிய மனுஷன். பார்த்த பக்கமெல்லாம் அவருடைய பெயர்தான் இருக்கிறது. செங்கோட்டையனின் விசுவாசிகள் ‘எதுக்கு வெட்டி வம்பு?’ என்று ஜெயலலிதாவின் பெயரை மட்டும் அச்சடித்துவிட்டு மற்றவர்களின் பெயர்களை தவிர்த்துவிடுகிறார்கள். இந்த மாதிரி எதையோ பேசிக் கொண்டிருந்த போதுதான் அந்த உருளுதாம், சாயுதாம், புரளுதாம்.

உடனடியாக எதுவும் புரியவில்லை. மாற்றி மாற்றி அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவனுக்கு வாயிலும் மூக்கிலும் ரத்தம் ஒழுகுகிறது. இன்னொருவனுக்கு நெற்றி வீங்கிக் கிடந்தது. வேறு சிலரும் களத்தில் புலிகளாகி நின்றிருந்தார்கள். அத்தனை பேரும் இருபதைத் தாண்டாத விடலைகள். மூக்கில் ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தவன் சிவப்பு நிறச் சட்டை அணிந்திருந்தான். அவன் தனி ஆள். மற்ற அத்தனை பேரும் ஒரு குழு. ஏன் அடிக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. அடி வாங்கியவனும் அமைதியாக இருக்கவில்லை. வெறியெடுத்துத் திரிந்தான். தன்னை அடிப்பதற்காக அருகில் வருபவன் மீதெல்லாம் கையை வீசிக் கொண்டிருந்தான். அடித்தவர்கள் வண்டிப்பேட்டைக்காரர்கள். வண்டிப்பேட்டை இந்தக் கலவரம் நடந்த இடத்துக்கு அருகாமையில்தான் இருந்தது. அங்கிருந்து ஆட்கள் திமுதிமுவென்று வந்து கொண்டேயிருந்தார்கள். வந்தவர்கள் ஒவ்வொருவரும் சிவப்புச் சட்டைக்காரன் மீது ஒரு வீச்சை வீசினார்கள்.

சிவப்புச்சட்டைக்காரனின் வீடு சற்று தள்ளியிருக்கும் போலிருக்கிறது. தனக்குத் தெரிந்த நண்பர்களையெல்லாம் ஃபோனில் அழைத்துக் கொண்டிருந்தான். ஆனால் ஒருவரும் வந்து சேர்ந்தபாட்டைக் காணோம். அதற்குள் அவனுக்கு அடி மீது அடியாக இறங்கிக் கொண்டேயிருந்தது. இடையில் சிலர் புகுந்து தடுத்தார்கள். தடுத்தவர்கள் அத்தனை பேருக்கும் சினிமாவிலிருந்த பஞ்ச் டயலாக்குகளை பதிலாகச் சொன்னார்கள். 

‘ஒருத்தனைப் போட்டு இத்தனை பேர் அடிக்கறீங்களே’ என்று ஒருவர் கேட்டார்.

‘வரச் சொல்லுங்க..ஒத்தைக்கு ஒத்தை...நான் அடிக்கறேன்..இங்கேயே அடிக்கறேன்’ என்கிறான். இந்த வசனத்தைக் கேட்ட சிவப்புச் சட்டைக்காரனுக்கு கோபம் பொங்கி வர ஒத்தைக்கு ஒத்தை வரத் தயாராகினான். ஏற்கனவே ரத்தத்தைத் துப்பிக் கொண்டிருக்கிறான். மற்றவர்கள் தடுத்தார்கள். 

‘அவனுக்கு ஒரு உசிரு...வண்டிப்பேட்டைக் காரனுக்கு ரெண்டு உசிரு...தெரியுமா’ என்றான் இன்னொருவன். இந்த டயலாக் எந்தப் படத்தில் வருகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இன்னொருத்தன் சற்று நாகரீகமாக இருந்தான். மற்றவர்களை அழைத்துச் செல்வான் என்று நினைத்தால் நடு சாலையில் நின்று கொண்டு ‘வாங்கடா வாங்க...இன்னைக்கு அவனா நாமளான்னு பார்த்துடுவோம்’ என்கிறான்.

ட்விஸ்ட் இல்லாமல் கொலை நடக்கும் போலத் தெரிந்தது. ‘அண்ணா போலீஸைக் கூப்பிட்டுடலாம்’ என்றேன். குமணன் ‘டேய் கிளம்புங்கடா..வண்டிப்பேட்டைன்னா பெரிய கழட்டிகளா?’ என்கிற ரீதியில் சத்தம் போடவும் கண்ணாடிக்காரன் திரும்பி குமணனை முறைத்தான். அந்த ஏரியாவே தனுஷ், சிம்பு, விஜய்களாக மாறித் திரிவதாகத் தோன்றியது. அச்சு அசலாக சினிமா நாயகர்களைப் போலவே செயல்படுகிறார்கள். நடை, பாவனையிலிருந்து சட்டைப் பொத்தானைக் கழற்றி கொஞ்சம் மேலேற்றிவிட்டுக் கொள்ளும் உடை வரைக்கும் அப்படியே சினிமாவைக் காப்பியடிக்கிறார்கள். தங்களின் நாயக பிம்பத்தை வாய்ப்புக் கிடைக்கிற சமயத்தில் வெளிக் கொண்டு விரும்புகிறார்கள். பெரும்பாலானவர்கள் குடித்திருந்தார்கள். கைகளை முறுக்கியபடியே நிற்கிறார்கள். சர்வசாதாரணமாக பஞ்ச் டயலாக் பேசுகிறார்கள்.

ஒருவனுக்கு மூக்கு உடைந்து ரத்தம் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. செத்துவிடுவான் போலத் தெரிகிறது. இருந்தாலும் அடங்கவில்லை. அவனை அதே இடத்திலேயே கொல்ல வேண்டும் என்கிறார்கள். அவ்வளவு வன்மம். அவ்வளவு குரூரம். ரத்தத்திற்கும் உயிருக்கும் எந்த மரியாதையும் இல்லை. எவனாவது சிக்கும் போது தங்களின் மனக்கசடுகளை அப்படியே அவன் மீது இறக்கி வைக்கிறார்கள். சற்று நடுக்கமாகத்தான் இருந்தது. நல்லவேளையாக ஒரு கான்ஸடபிள் வந்தார். யாரோ தகவல் சொல்லிவிட்டார்கள் போலிருக்கிறது. காக்கிச் சட்டையைப் பார்த்தவுடன் அடித்தவர்கள் அத்தனை பேரும் அந்த இடத்தை விட்டு தப்பித்துவிட்டார்கள். அடி வாங்கியவன் சற்று தள்ளி நின்றிருந்தான். ‘போலீஸ் வந்துட்டாங்க...வந்து கம்பெளய்ண்ட் கொடு’ என்று அழைத்து வந்தேன். 

அவனோடு வரும் போது ‘எதுக்கு உன்னை அடிச்சாங்க?’ என்றேன்.

‘தெரியலங்கண்ணா...சும்மா சிரிச்சானுக...கிண்டலடிச்சானுக...ஏண்டா சிரிக்கிறேன்னு கேட்டதுக்கு அடிச்சுட்டாங்க’ என்றான். இவனுக்கும் அந்தக் குழுவுக்கும் முன் பின் அறிமுகம் கூட இல்லை. பகைமையும் எதுவும் இல்லை. இன்ஸ்டண்ட் பகை. 

போலீஸ்காரருக்கு அருகில் நாங்கள் வந்த போது கண்ணாடிக்காரன் சிக்கியிருந்தான். விவரங்களைக் குறித்துக் கொண்டு அவனை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அதற்குள் சிவப்புச் சட்டைக்காரன் வாந்தியெடுக்கத் துவங்கியிருந்தான். அவனுடைய நண்பர்களும் வந்து சேர்ந்திருந்தார்கள்.‘வாங்க ஜி.ஹெச்சுக்கு போயிடலாம்’ என்று அவர்களோடு சேர்ந்து கிளம்பினேன். அன்றைக்கு சிவசங்கர்தான் அங்கு பணி மருத்துவர். அவர் சாப்பிடச் சென்றிருந்தார். மணி ஒன்பதைத் தாண்டியிருந்தது. வீட்டிலிருந்து அழைக்கத் துவங்கியிருந்தார்கள். ‘பார்த்துக்குங்க..’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினேன். இரவு பதினோரு மணிக்கு மேலாக மருத்துவரை அழைத்துக் கேட்டேன். ‘பையனுக்கு தலையில் அடிபட்டிருக்கிறது. அதனால் வாந்தியெடுக்கிறான். சற்று அபாயம்தான். இங்கு வசதிகள் இல்லையென்பதால் ஈரோடு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்’ என்றார். தலையில் அடிபட்டு வாந்தி எடுப்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். என்ன வேண்டுமானாலும் ஆகலாம். அவனைப் பெற்றவர்கள் என்ன பாடுபடுவார்கள்? அவனுடைய வாழ்க்கை என்னவாகும்? ஒரு சாதாரணப் பிரச்சினையில் ஒருவனைக் கொன்றுவிட்டுப் போகுமளவுக்கு எங்கேயிருந்து வேகம் வருகிறது?

நினைக்கவே திகிலாக இருக்கிறது. ஒரு செடியை வைத்து தட்டானை அடிப்பது போல மனிதர்களை அடித்துக் கொன்றுவிடுவதற்கு சக மனிதர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். தூக்கம் வரவில்லை. டிவி பார்க்கலாம் என்று தோன்றியது. லோக்கல் சானலில் சுள்ளான் ஓடிக் கொண்டிருந்தது. அணைத்துவிட்டு போய் படுத்தேன். எவ்வளவு நேரம் புரண்டு கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை.

Apr 26, 2015

வீடியோ இணைப்புகள்

சென்னை டிஸ்கவரி புத்தகக் கடையில் நடைபெற்ற லிண்ட்சே லோஹன் W/o மாரியப்பன், மசால் தோசை 38 ரூபாய் மற்றும் நிசப்தம்.காம் ஆகியவை குறித்தான விமர்சனக் கூட்டத்தின் முழு பேச்சுக்களும் வீடியோவாக யூடியூப்பில் கிடைக்கின்றன. 

ஸ்ருதி தொலைக்காட்சிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்களுக்கு இதனால் பொருளாதார ரீதியில் எந்த வருமானமும் இல்லை. ஒரு நிகழ்ச்சியை முழுமையாகப் படமெடுத்து அதை வெட்டி ஒட்டி பின்னணி சப்தங்களுக்கான வேலைகளைச் செய்து மெனக்கெடுகிறார்கள். ஏகப்பட்ட நேரம் பிடிக்கிற காரியம் இது. 

‘எதுக்கு சார் இதையெல்லாம் செய்யறீங்க?’ என்று கேட்டால் 

‘ஒரு சந்தோஷம்தான்’  என்றார். 

நமக்கும் சந்தோஷம்தான். இப்படியான கெளரவங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததில்லை. 

நேற்று ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘உங்களைச் சாதாரணன் என்றும் சராசரி என்றும் சொன்னால் என்ன பதில் சொல்வீர்கள்’ என்பதுதான் அந்த மின்னஞ்சலின் சாராம்சம். மிகுந்த சந்தோஷப்படுவேன் என்று பதில் அனுப்பியிருக்கிறேன். எப்பொழுது என்னைப் முகுடாதிபதி என்று சொல்லிக் கொண்டேன்? வருத்தப்படுவதற்கு?. எனது உயரம் எனக்குத் தெரியும். மிக மிகச் சராசரியான குடும்பத்தில் பிறந்த ஒரு சராசரியான பொடியன் என்பதில்தான் எனக்கு வெகு பெருமை. அதுதான் உண்மையும் கூட. 

மேடையில் அமர்ந்து ஆசி வழங்கவோ, உன்னதமான கருத்துக்களையும் தரிசனங்களையும் வழங்கி இந்த உலகை உய்விக்கவெல்லாம் பிறப்பெடுக்கவில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். குடும்பம், மனைவி, குழந்தை, வேலை, மாதச் சம்பளம், ஸ்பெண்டர் ப்ளஸ் பைக், தினத்தந்தி பேப்பர், ப்ரீ பெய்ட் சிம் கார்ட், பால் கணக்கு எழுதிய காலண்டர், பெட்ரோல் பில் சேகரிக்கப்பட்ட பர்ஸ், சில்லரைக் காசுகள் போட்டு வைக்கும் சாமியறை டப்பா என்று சராசரியிலும் சராசரியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழக அரசுப் பேருந்தைவிட கர்நாடக அரசுப் பேருந்தில் பத்து ரூபாய் அதிகம் என்று யோசித்துக் கொண்டிருக்கிற, நடுத்தர வர்க்கத்திலிருந்து மேலேற விரும்பிக் கொண்டிருக்கும் ஒரு சராசரியின் பார்வைதான் என்னுடையது. விமர்சனம் செய்பவர்கள் இதைத்தான் என்னுடைய பலவீனமாகக் காட்டுவார்கள். ஆனால் இதுதான் என்னுடைய பலமும் கூட. 

எந்த அஜெண்டாவும் எனக்கு இல்லை. யாரிடமும் வாலைக் குழைக்க வேண்டியதில்லை. எனது கொம்பு சீவப்பட்டிருக்கிறது என்று எப்பொழுதும் நிரூபித்துக் கொண்டேயிருக்க வேண்டியதில்லை. ஒளிவட்டம் மங்கிவிடுமோ என்று பயப்பட வேண்டியதில்லை. அதே சமயம் தெரியவில்லை என்பதை ஒத்துக் கொள்வதில் எப்படி தயக்கம் இல்லையோ அதே போலத்தான் பிடிக்கவில்லையென்றால் எந்த மகராசனை நோக்கியும் ஆள்காட்டி விரலை நீட்டவும் பயமில்லை. எனக்கு நான் நேர்மையாக இருக்கிறேன். என்னை நம்புவர்களிடம் நேர்மையாக இருக்கிறேன். அவ்வளவுதான். நமக்கெதுக்கு அடுத்தவர்கள் கட்டும் பரிவட்டங்கள் எல்லாம்?

இதோ இந்தச் சலனப்படங்களைக் கூட ஒரு சந்தோஷத்தில்தான் பகிர்ந்து கொள்கிறேன். நம்மையும் மதித்து ஒரு கூட்டம் நடத்துகிறார்கள் என்கிற ஒரு சந்தோஷம். ஒரு சராசரியின் அற்பமான சந்தோஷம்தான். 

நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த யாவரும்.காம் நண்பர்களுக்கு நிகழ்ச்சியில் நேரம் ஒதுக்கிக் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கும் பார்வையாளர்களாகக் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

நேரம் கிடைக்கும் போது பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

நன்றி.

1. இயக்குநர் கவிதா பாரதி
2. கார்ட்டூனிஸ்ட் பாலா
3. விமர்சகர் கிருஷ்ணபிரபு
4. நாடகக் கலைஞர் தம்பிச்சோழன்
6.  திரு, சைதை புகழேந்தி

Apr 23, 2015

வெளியில் பெயர் தெரிய வேண்டாம்

இன்று இரண்டு சந்தோஷமான செய்திகள். 

ஒரு பெண்மணியின் கல்விச் சான்றிதழ்களை பிடித்து வைத்துக் கொண்டு கல்லூரிக்காரர்கள் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று சொன்னது ஞாபகம் இருக்கக் கூடும். அந்தப் பெண் உண்மையில் மதுரை இல்லை. கோவையைச் சார்ந்தவர். எந்த ஊர், எந்தக் கல்லூரி என்கிற விவரத்தையெல்லாம் எழுதினால் அந்தப் பெண்ணுக்கு பிரச்சினையாகிவிடும் வாய்ப்பிருக்கிறது என்பதால் மதுரைக்காரர் என்று எழுதியிருந்தேன். அதன் பிறகு பின்னணியில் நிறையக் காரியங்கள் நடந்தன. அத்தனை வேலையையும் ஒரு அதிகாரி பார்த்துக் கொண்டார். தமிழக அரசில் முக்கியமான பதவியில் இருப்பவர். அரசு அதிகாரிகளின் வழியாக கல்லூரி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு அந்த நிர்வாகம் நேற்று சான்றிதழ்களைத் திரும்பக் கொடுத்துவிட்டது.

அதிகாரி தனது பெயரைச் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதுவும் சரிதான். இது தமிழ்நாடு முழுவதுமான பிரச்சினை. நிறையப் பேர் இந்தப் பிரச்சினையில் சிக்கியிருக்கக் கூடும். அத்தனை பேருக்கும் உதவுவது சாத்தியமில்லை என்பதால் மற்ற விவரங்களை எழுத விரும்பவில்லை. அந்த அதிகாரிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதே சமயம் இதை ஒரு விழிப்புணர்வாக எடுத்துக் கொள்ளலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரிஜினல் சான்றிதழ்களை நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டியதில்லை. அதைப் பணியில் சேரும் போதே தெளிவாக எடுத்துச் சொல்லிவிடலாம். அப்படியும் அழுத்தம் கொடுத்தால் வண்ணப் பிரதி (கலர் ஜெராக்ஸ்) எடுத்து அதன் மீது லேமினேஷன் செய்தால் ஓரளவுக்கு ஏமாற்ற முடியும். அதற்கும் வாய்ப்பில்லையென்றால் நிறுவனத்தில் சான்றிதழ்களைக் கொடுத்திருப்பதற்கான அத்தாட்சிக் கடிதத்தை வாங்கிக் கொண்டு பிறகு ஒப்படைக்கலாம். அவர்களிடம் நாம் ஒப்படைக்கும் சான்றிதழ்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்து அதில் அவர்களின் கையொப்பமும் முத்திரையும் அவசியம். ‘அதெல்லாம் முடியாது’ என்று அவர்கள் சொன்னால் வேலையைத் தவிர்த்துவிடுவதுதான் உத்தமம். இல்லையென்றால் இப்படி சிக்கிக் கொண்டு அலைய வேண்டியதுதான்.

சான்றிதழ்களை மீட்டுத் தருவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்துக் கொடுத்த தமிழக அரசின் அதிகாரிக்கு மனப்பூர்வமான நன்றி. வேறு வழி எதுவும் தெரியாத அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு மிகப்பெரிய உபாயத்தைச் செய்திருக்கிறார் அவர். அந்தப் பெண் நேற்று அழைத்துப் பேசினார்.

இரண்டாவது செய்தி-

கிருஷ்ணா என்கிற குழந்தையின் பராமரிப்பு மற்றும் மருத்துவ உதவிக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாயிரம் கொடுக்க வேண்டியிருக்கிறது எனச் சொல்லியிருந்தேன். ஒவ்வொரு மாதமுக் கொடுக்க வேண்டிய தொகையான தலா இரண்டாயிரம் ரூபாயைத் தானே கொடுத்துவிடுவதாகவும்- அதுவும் மூன்று வருடத்திற்கான தொகையையும் இப்பொழுதே அனுப்பி வைத்துவிடட்டுமா என்று கேட்டு ஒரு அன்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். எழுபத்து இரண்டாயிரம் ரூபாய். ‘உங்கள் இஷ்டப்படி அனுப்புங்கள்’ என்று பதில் அனுப்பியிருக்கிறேன்.

அவரும் பெயரை வெளியிடக் கூடாது என்று சொல்லிவிட்டார். நல்லவர்களில் பெரும்பாலானவர்கள் அனானிமஸாகவே இருக்க விரும்புகிறார்கள் என்று நினைத்தபடியே தூங்கினால் நள்ளிரவு தாண்டிய பிறகு வயிற்று வலி. 

டயட் என்ற பெயரில் நாக்கு செத்துக் கிடக்கிறது. இப்படியே விட்டால் எடுத்து அடக்கம் செய்துவிடலாம் போலிருக்கிறது என்பதால் நேற்று வீட்டுக்கு போகிற வழியில் வண்டியை நிறுத்தி சில பல சிக்கன் துண்டுகளை உள்ளே தள்ளிவிட்டேன். இரவு மூன்று மணிக்கு வயிறு வலித்தது. எழுந்து அமர்ந்து புத்தகம் ஒன்றைப் புரட்டிவிட்டு மின்னஞ்சலைத் திறந்த போதுதான் இன்னொரு நண்பரிடமிருந்தும் அதே மாதிரியான மின்னஞ்சல்- அவரது மனைவியும் நிசப்தம் தளத்தைப் பார்ப்பதாகவும், பணம் கொடுத்தவர்களின் பட்டியலில் இருக்கும் தனது பெயரைக் கண்டுபிடித்துவிட்டார் என்பதால் அடுத்த முறை கண்டிப்பாக பெயரை மறைத்துவிடவும் என்று கோரியிருந்தார். எனக்கு இருக்கும் பிரச்சினைதான் இந்த உலகின் சகலமான ஆண்களுக்கும் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் எவ்வளவு ஆனந்தம் தெரியுமா? ஆனந்தத்தில் மொத்த வயிற்று வலியும் போய்விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படியெல்லாம் நகைச்சுவைக்காக எழுதினாலும் பெயரை மறைத்துக் கொண்டு உதவும் நல்லவர்களை நினைத்தால் நெகிழ்ச்சியாக இருக்கிறது. எதுவுமே செய்யாமல் விளம்பரம் தேடிக் கொள்பவர்களைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போன நம்மைப் போன்றவர்களுக்கு இதெல்லாம் மிகப்பெரிய ஆறுதல். சத்தமேயில்லாமல் உதவும் மனிதர்களின் மத்தியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காகவாவது இதையெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது. 

மூன்றாவது செய்தி- 

தினமணியில் வெளியாகும் கட்டுரைகளை பத்து நாட்கள் கழித்துத்தான் நிசப்தத்தில் பதிவேற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று யோசித்தால் எளிமையான காரணமாகத்தான் தெரிகிறது. ‘உன் கட்டுரையை ஒருத்தனும் படிக்கறதில்லை’ என்பதைத்தான் நாசூக்காகச் சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது.  அப்படியெல்லாம் விட்டுவிட முடியுமா? எப்படியாவது ஆட்களைக் கொண்டு போய் இறக்கி நம் கெத்துக் காட்டியே தீர வேண்டும். ஆனால் எப்படி என்றுதான் தெரியவில்லை. அவர்களே ஐடியாவும் கொடுத்திருக்கிறார்கள். ஏதாவது உசுப்பேற்றும் விதமான ஒரு பத்தியை மட்டும் நிசப்தத்தில் எழுதி ‘மேலும் வாசிக்க தினமணி இணையத் தளத்துக்குச் செல்லுங்கள்’ என்று இணைப்பைக் கொடுத்துவிடச் சொல்லியிருக்கிறார்கள். செம ஐடியா. உங்களையெல்லாம் ஏமாற்றப் போகிறேன்.

இன்று வெளியாகியிருக்கும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி- 

அலுவலக நண்பர் ஒருவர் இருக்கிறார். மாலை ஏழு மணிக்கு மேல் கோடி ரூபாய் கொடுத்தாலும் அலுவலகத்தில் இருக்கமாட்டேன் என்று காலையில் வந்தவுடனே சொல்லிவிடுவார். அவருடன் பழகிய ஆரம்ப நாட்களில் உண்மையாகத்தான் சொல்கிறார் என நினைத்துக்கொள்வேன். ஆனால், ஆறரை மணிவரைக்கும் நகர்வதற்கான எந்த அசைவும் இல்லாமல் கணினியை வெறித்துக்கொண்டிருப்பார். ‘கிளம்பலையா?’ என்று யாராவது கேட்டுவிடக்கூடாது. கேட்டால் அவ்வளவுதான். பதறத் தொடங்கிவிடுவார். வேலையும் முடிந்திருக்காது. கிளம்ப வேண்டும் என்கிற ஆசையும் வடிந்திருக்காது. பினாத்திக்கொண்டே இருப்பார். அவருக்கான பிரச்னை மிக எளிமையானது. ஒவ்வொரு நாளும் அவரது மனைவி ‘இன்று சீக்கிரம் வந்துவிட வேண்டும்’ என்று உத்தரவிட்டு அனுப்பிவைப்பாராம். இவரும் மண்டையை ஆட்டிவிட்டு வந்துவிடுகிறார். ஆனால், வேலை இழுத்துப் பிடித்துவிடுகிறது. அலுவலகத்தில் வந்து வீராப்பாக சவால் விடாமலாவது இருக்கலாம். ஒவ்வொருவரிடம் சொல்லி வகையாக மாட்டிக்கொள்கிறார்.

மேலும் வாசிக்க தினமணி தளத்துக்குச் செல்லுங்கள்.

அப்பாடா!

யார் சிறியர்?

ஒரு விருது அறிவித்தால் போதும் ஆளாளுக்கு புனிதர்கள் ஆகிவிடுகிறார்கள். ‘அவன் மாஃபியா இவள் சோஃபியா’ என்று கூவத் தொடங்குகிறார்கள். இங்கு இலக்கியவாதி என்று சொல்லித் திரிபவர்களில் தொண்ணூற்றொன்பது சதவீதம் பேர் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள்? தம் பின்னால் நான்கைந்து கைத்தடிகள் வேண்டும், தனக்கென ஒரு இலக்கிய வட்டம், ஊர் ஊராகச் சுற்ற விரும்பினால் செலவு செய்வதற்கு பத்து அடிமைகள். நாம் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். ஆனால் எந்தத் தயக்கமுமில்லாமல் அடுத்தவனை நோக்கி ‘இவன் மாஃபியா’ என்று பேசிவிட வேண்டும். மாஃபியாவை ஒழிப்போம்தான் ஆனால் அதை இன்னொரு மாஃபியா தலைவன் சொல்லக் கூடாது. 

ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று புரியவில்லை. 

தனக்கென ஒரு வாசகர் வட்டத்தை வைத்துக் கொண்டு ரிட்டையர்ட் ஆனவர்களுக்கு மரியாதை செய்கிறேன் பேர்வழி அந்த விழாவுக்கு சினிமாக்காரனையும் புகழ்பெற்றவனையும் அழைத்து வைத்து அதன் வழியாக மொத்த வெளிச்சத்தையும் தன் மீது விழச் செய்யும் ஒரு ஆளுமையாக இருந்து கொண்டு ‘அரிப்புக்கு எழுதுகிறார்கள்’ என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டுமே. இன்றைய தேதியில் விநாயகமுருகனும், போகன் சங்கரும் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உரையாடலை உருவாக்குகிறார்கள். கொம்ப மகராசன்களையும் எந்த தயக்கமும் இல்லாமல் பகடி செய்கிறார்கள். அதுதானே உங்கள் பிரச்சினை? எப்பொழுது வாய்ப்புக் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டியது. வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு மொத்து மொத்துகிறீர்கள். இல்லையா?

இந்த அதிரடியான உலகத்தில் இளம் எழுத்தாளனின் முன்னால் இருக்கும் மிகப்பெரும் சவால் தனக்கான இடத்தை உருவாக்கிக் கொள்வதுதான். ஏறி மிதித்துக் கொண்டு போய்விடக் கூடிய புல்டோசர்களாக தங்களைக் காட்டிக் கொண்டிருக்கும் காண்டாமிருகங்களுக்கு முன்பாக நின்று ஆடுகிறார்கள். அதற்காகவாவது விருது அளிக்கட்டும். ராஜமார்த்தாண்டன் விருதைத் தவிர இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விருது வேறென்ன இருக்கிறது? விருது வேண்டாம். மூத்த எழுத்தாளர்கள் மனமுவந்து எத்தனை இளம் எழுத்தாளரகளை ஊக்குவிக்கிறார்கள்? நம் திண்ணையைப் பிடித்துக் கொள்வார்கள் என்று பம்மிக் கொண்டுதானே இருக்கிறார்கள்? இந்த லட்சணத்தில் ஒரு கேங்கை உருவாக்குகிறார்கள் என்று பேசுகிறார்கள்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அஜயன்பாலாவுக்கு விருது கொடுத்தார்கள். தமிழ் மகனுக்குக் கொடுத்தார்கள். சுகுமாரன், அழகிய பெரியவன், ஜோ டி க்ரூஸ், கலாப்ரியா, ரமேஷ் ப்ரேதன் என்று சுஜாதா விருது வாங்கியவர்களின் பட்டியலில் எத்தனை பேர் மனுஷ்ய புத்திரனின் கேங்கில் சொம்படித்துக் கொண்டிருக்கிறார்கள்? விருது என்பது ஒரு கவனமுண்டாக்குதல் மட்டும்தான். ஐந்து வருடங்களுக்கு முன்பாக நோபல் பரிசு வாங்கியவரை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறோமா என்ன? சாதாரண வாசகனுக்கு அவ்வளவுதான் அந்த விருதின் முக்கியத்துவம். நோபல் பரிசுக்கே அவ்வளவுதான். மற்ற இலக்கிய விருதுகளைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டுமா என்ன?

பரபரப்புக்காவும், வெளிச்சம் தன் மீது விழ வேண்டும் என்பதற்காகவும் எதை வேண்டுமானாலும் பேசலாம். சமூக ஊடகங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு அடித்துக் கொண்டிருக்கட்டும் என்று போகிற போக்கில் தட்டிவிட்டுப் போக வேண்டியதுதான். தான் மட்டுமே யோக்கியம், தான் கொடுக்கும் விருது மட்டுமே உத்தமம் என்கிற வெற்றுப் பரப்புரை. இதில் சுஜாதா வேறு சிக்கிக் கொள்கிறார். சுஜாதாவின் பெயரில் ஒரு விருது கொடுத்துதான் அவரை ஐகான் ஆக்க வேண்டுமா என்ன? அந்த இடத்தை அவர் அடைந்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிடவில்லையா? சுஜாதா யார், சுந்தர ராமசாமி யார், நகுலன் யார் என்று வாசிக்கிறவனுக்குத் தெரியும். ஆனால் அதை ஏன் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள்? சுஜாதா இலக்கியவாதியே இல்லை என்று நீங்கள் சொல்வீர்கள். ஆனால் சொல்கிற இவரே இலக்கியவாதி இல்லையென்று இன்னொரு நான்கு பேர்கள் உங்களைச் சொல்வார்கள். சொல்கிறார்கள். இதுதானே காலங்காலமாக நடந்து கொண்டிருக்கிறது? யார் இலக்கியவாதி என்பதை வாசகன் முடிவு செய்யட்டும் விடுங்கள்.

தமிழில் இலக்கியவாதிகளைப் போன்ற கேடுகெட்ட மனநிலை கொண்டவர்களைப் பார்க்கவே முடியாது. பொறாமை, வன்மம், வயிற்றெரிச்சல், புகழ் போதை என்கிற வெறிபிடித்துத் திரிகிறவர்கள் அவர்கள். தனது இடம் காலியாகிவிடும், தன்னைத் தவிர பெரியவனில்லை என்கிற பயம் பீடித்த நோய்மையுடையவர்கள்தான் இலக்கிய பீடாதிபதிகள். தங்களது எழுத்திலும் செயல்பாட்டிலும் அதைத்தான் திரும்பத் திரும்பக் காட்டுகிறார்கள். 

ஒரு எழுத்தாளனுக்கு விருது கொடுக்கப்படுவது என்பது அவனுக்கான கவனத்தை உருவாக்குதல். தொடர்ந்து இயங்குவதற்கான உற்சாகத்தை ஊட்டுதல். அதைச் செய்கிறார்கள். பாராட்டாவிட்டாலும் ஓரிரு நாட்கள் அமைதியாக இருக்கலாம். அவனை விமர்சிப்பதாக இருந்தால் இன்னொரு நாள் தனியாக விமர்சிக்கலாம். அவனது புத்தகத்தை எடுத்து வைத்து பக்கம் பக்கமாகக் கிழித்துத் தொங்கவிடலாம். யார் வேண்டாம் என்கிறார்கள்? அதைவிட்டுவிட்டு ஒரு படைப்பாளிக்கு விருது அறிவிக்கப்படும் போது ‘அது நொட்டை இது நொட்டை’ என்று சொல்லி அவனுக்கு காயத்தை உண்டாக்குவதைப் போன்ற சிறுமைத்தனம் வேறெதுவும் இருக்க முடியாது.

Apr 22, 2015

சுஜாதா விருதுகள் - 2015

2015 ஆம் ஆண்டுக்கான சுஜாதா விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விருதுகளை இன்று கவிஞர் மனுஷ்ய புத்திரன் அறிவித்திருக்கிறார். 

சுஜாதா சிறுகதை விருது பாவண்ணன் எழுதிய பச்சைக் கிளிகள் தொகுப்புக்கும், நாவல் விருது விநாயக முருகனின் சென்னைக்கு மிக அருகில் தொகுப்புக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

போகன் சங்கரின் கவிதைத் தொகுப்பான எரிவதும் அணைவதும் ஒன்றே  சுஜாதா கவிதை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

கட்டுரை விருது சமஸ் எழுதிய யாருடைய எலிகள் நாம் தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.

இணைய விருதை சுரேஷ்கண்ணன் மற்றும் சந்தோஷ் நாராயணன் பெறுகிறார்கள். 

சிற்றிதழ் பிரிவில் திணை மற்றும் அடவி ஆகிய சிற்றிதழ்கள் விருதைப் பெறுகின்றன.


விருது பெறும் அனைவருமே மிகத் தீவிரமாக இயங்கி வருபவர்கள். சுரேஷ் கண்ணனின் சினிமாக் கட்டுரைகள் வெகுகாலமாக கவனம் பெற்று வந்தவை. பத்து வருடங்களுக்கும் மேலாக  இணையத்தில் இயங்கி வருபவர்களில் முக்கியமானவர் அதே சமயத்தில் கவனிக்கத் தகுந்தவர் சுரேஷ் கண்ணன். 

அதே போல சந்தோஷ் நாராயணனின் அஞ்ஞானச் சிறுகதைகளும், மினிமலிஸ ஓவியங்களும் இந்த வருடத்தில் இணையத்தின் டாப் கவன ஈர்ப்பாக இருந்தன. ஒருவரின் மூளை இவ்வளவு சுறுசுறுப்பாக  இயங்குமா என்று அவ்வப்போது அவரைப் பார்த்து வியந்திருக்கிறேன்.


வழக்கமாக ஒருவருக்கு வழங்கப்படும் இணைய விருது இந்த முறை இரண்டு பேருக்கு அளிக்கப்படுகின்றன. இரண்டு பேரும் மிகச் சரியான தேர்வுகள்.


சிறுகதைகள் பிரிவில் பாவண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. ஆரவாரமேயில்லாமல், எந்த அங்கீகாரத்தையும் எதிர்பாராமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் அற்புதமான எழுத்தாளர் பாவண்ணன். எழுத்தாளர், விமர்சகர் என்பதையெல்லாம் தாண்டி நல்ல மனிதர். அவரிடமிருந்து கற்றுக் கொள்ள அடுத்த தலைமுறை எழுத்தாளர்களுக்கு எவ்வளவோ இருக்கின்றன. அவரை அங்கீகரிப்பது காலத்தின் அவசியம்.


இந்த வருட புத்தகக் கண்காட்சியில் நின்று கொண்டிருந்த போது மிக வேகமாக விற்றுக் கொண்டிருந்த புத்தகங்களில் ஒன்று யாருடைய எலிகள் நாம். சமஸ் தம் எழுத்துக்கென மிகப்பெரிய வாசகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்பதற்கான அத்தாட்சி அந்த விற்பனை. தி இந்துவில் சமஸ் எழுதும் கட்டுரைகளின் தீவிர வாசகன் நான். ஒரு விஷயத்தை முற்றிலும் புதிதான கோணத்தில் அணுகும் சமஸின் அணுகுமுறையும் சிந்தனையும் வியப்பூட்டக் கூடியவை.


விநாயக முருகன் புதிதாக எழுத வருபவர்களின் inspiration. எழுத்தைத் தாண்டி எழுத்தாளன் கற்றுக் கொள்ள வேண்டிய திட்டமிடல், நேர்த்தி, வியூகம், தர்க்கம் உள்ளிட்டவற்றை விநாயக முருகனிடம் கவனிக்கலாம்.


போகன் சங்கர் கவிதைக்கான புதிய வெளியையும் மொழியையும் மிகுந்த உத்வேகத்துடன் முன்வைக்கிறார். எந்தவிதமான தடங்கலுமின்றி தொடர்ந்து இயங்குகிறார்.

விருது பெறும் ஒவ்வொரு படைப்பைப் பற்றியும் தனித்தனியாகவும் விரிவாகவும் எழுத வேண்டும் என விரும்புகிறேன்.

இந்த வருடத்தின் விருதுக்குரிய அத்தனை பேரும் ஏதாவதொருவிதத்தில் முக்கியமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். விருது பற்றிய அறிவிப்பு வெளியானவுடன் சில சலசலப்புகளை கவனிக்க நேர்ந்தது. இது இயல்பான ஒன்றுதான். எந்த விருது அறிவிக்கப்பட்டாலும் இப்படி யாராவது பேசத்தான் செய்வார்கள். இவர்களைத் தவிர வேறு யாரும் தகுதியானவர்களே இல்லையென்றால் இருக்கக் கூடும்தான். ஆனால் இவர்கள் யாரும் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் இல்லை. அத்தனை பேரும் தகுதியானவர்கள்தான். 

விருது பெறும் அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். விருது வழங்கும் உயிர்மைக்கும், சுஜாதா அறக்கட்டளைக்கும், தேர்வுக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.

ஜெய் கிஸான் எல்லாம் வாய் வரைக்கும்தான்

ஆண்ட்ரியா பலியானியை நான்கைந்து வருடங்களாகத் தெரியும். நல்ல உயரம். இத்தாலிய ரத்தம். முந்தைய நிறுவனத்தில் இருக்கும் போது வெகு பழக்கம். ஜப்பானில் இரண்டு பேரும் ஒன்றாகச் சுற்றியிருக்கிறோம் - இப்படியெல்லாம் நான் சொல்லிக் கொண்டே போகும் போது முக்கியமான விஷயத்தையும் சொல்லிவிட வேண்டும்- ஆண்ட்ரியா என்றவுடன் நம்மூர் அழகான தேவதையை நினைத்துப் பார்க்கக் கூடாது. நாற்பதைத் தாண்டிய சொட்டைத் தலையர். அவர் எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தவுடன் ‘ஆண்ட்ரியாவிடம் கேட்டுப் பார்’ ‘ஆண்ட்ரியாவிடம் விசாரி’ என்று என் மேலாளர் திரும்பத் திரும்பச் சொன்ன போது என்னை கார்த்தியாக நினைத்துக் கொண்டு அரை டிரவுசர் போட்ட ஆண்ட்ரியாவுடன்  ‘உன் மேல ஆசதான்’ என்று ஆட்டம் போடுவதாகவெல்லாம் கனவு கண்டது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்துதான் வைப்பான்.  ‘யெஸ் டெல் மீ’ என்று தகர டப்பாக் குரலில் ஃபோனின் அந்த முனையிலிருந்து முதன்முறையாக அவர் பேசிய போது உள்ளங்காலில் கிளம்பிய சில்லிட்ட ரத்தம் உச்சந்தலையில் பாய்ந்துதான் அடங்கியது. 

ஆண்ட்ரியாவிடம் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. அவசரமில்லாத மனிதர். தெரியாத்தனமாக உறுதி வார்த்தையைக் கொடுத்துவிட்டு பிறகு பிதுங்கப் பிதுங்க விழிக்கமாட்டார். முடியும் என்றால் முடியும். இல்லையென்றால் சிரித்துக் கொண்டே முடியாது என்று சொல்லிவிடுவார். இது மிகப்பெரிய வரப்பிரசாதம். எனக்கு அது சுட்டுப்போட்டாலும் வருவதில்லை. அவர் தவறாக நினைத்துக் கொள்வாரோ, இவர் ஏதேனும் நினைத்துக் கொள்வாரோ என்று அடுத்தவர்களுக்காக யோசித்து யோசித்து நம் தலையில் சுமையை இறக்கி வைத்துக் கொள்வதுதான் வாடிக்கையாகியிருக்கிறது. அப்படித்தான் ஒரு சீனாக்காரனிடம் சிக்கிக் கொண்டேன். அவன் கேட்டவுடன் சரி என்று சொல்லியிருந்தேன். ஆனால் சொன்ன தேதிக்கு வேலையை முடித்துத் தர முடியவில்லை. அந்தச் சீனாக்காரனிடம் ஒரு சில்லரைத்தனம் உண்டு. போட்டுக் கொடுத்துவிடுவான். அதுவும் என்னைப் போன்ற குள்ளக்கத்திரிக்காய் இந்தியன் என்றால் அவனுக்கு இன்னமும் இளக்காரம். என்னிடம் நேரடியாக கேட்காமல் மேனேஜருக்கும் இயக்குநருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைத்துவிட்டான். மேனஜர் பிரச்சினையில்லை. சமாளித்துவிடலாம். ஆனால் இயக்குநரிடம் அதுவரை பேசியது கூட இல்லை. ‘என்ன காரணம்?’ என்று கேட்டு மின்னஞசல் அனுப்பியிருந்தார். என்ன சொல்வது என்று தெரியவில்லை. அப்பொழுதிருந்த ஒரே ஆபத்பாந்தவன் ஆண்ட்ரியாதான்.

‘வேலையை முடித்துவிட்டதாகவும் மின்னஞ்சல்தான் அனுப்பவில்லை’ என்றும் சொல்லச் சொன்னார். அப்படி எப்படிச் சொல்ல முடியும்? சிக்கினால் கதையை முடித்துவிடுவார்கள். ‘அதெல்லாம் பார்த்துக்கலாம் சொல்லு’ என்றார். அப்படியே சொன்னேன். ‘வேலை முடிந்துவிட்டது...சரி பார்க்கவும்’ என்று சீனாக்காரனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். அப்பொழுது மணி மாலை ஆறு ஆகியிருந்தது. சீனர்கள் நம்மைவிட இரண்டரை மணி நேரம் முன்னாடி இருப்பதால் அப்பொழுது அவன் வீட்டுக்குக் கிளம்பியிருப்பான். அடுத்த நாள் காலையில்தான் சரி பார்ப்பான். ஆண்ட்ரியா ப்ரான்ஸிலிருந்தார். நமக்கு மாலை நேரம் என்றால் அவர்களுக்கு மதியம். தனது அத்தனை வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு எனக்கு வேலையைச் செய்து கொடுத்தார். அவர் அவ்வளவு மெனக்கெட வேண்டியதில்லை. ஆனால் செய்து கொடுத்தார். அதிகாலை இரண்டு மணிக்கு வேலை முடிந்தது. சந்தோஷமாக வீட்டுக்குக் கிளம்பினேன்.

அது உண்மையிலேயே சிக்கலான வேலைதான். தனியாளாக நிச்சயமாக முடித்திருக்க முடியாது. ஆனால் வேலையைப் பொறுத்தவரையில் ஆண்ட்ரியா கில்லி. அலுவலகத்திலும் அவருக்கு மரியாதை அதிகம். இதிலேயேதான் குப்பை கொட்டுவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஆண்ட்ரியாவுக்கு விவசாயத்தில் நாட்டம் அதிகம். எல்லாவற்றையும் விட்டுவிட்டு விவசாயத்திற்குச் செல்லப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். விவசாயத்தைப் பொறுத்தவரையில் ஐரோப்பிய நாடுகளில் நிலைமை எப்படியென்று தெரியவில்லை. ஆனால் நம் ஊரில் விவசாயம் என்றாலே பதறுகிறார்கள். எங்கள் தாத்தா காலத்தில் எங்களுக்கு கொஞ்சம் நிலம் இருந்தது. அவர் காலத்திலேயே விற்றுவிட்டார்கள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அரசாங்க வேலை இருந்ததால் தப்பித்துவிட்டார்கள். வேலைக்குச் சென்று எங்களைப் படிக்க வைத்து ஒரு வீடு கட்டினார்கள். ஆனால் தோட்டங்காடு எதுவும் சேர்க்க முடியவில்லை. இப்பொழுது அப்பாவுக்கு கொஞ்சம் ஆசை. நிலபுலன்களைப் பார்த்துவிட வேண்டும் என்று. வாங்கலாம்தான். ஆனால் ஒரு ஏக்கர் வயல் பதினெட்டு லட்ச ரூபாய்க்கு விற்கிறது. எப்படி வாங்க முடியும்? அப்படியே வாங்கினாலும் கூட நஷ்டத்தில்தான் ஓட்ட வேண்டும் என்கிறார்கள். 

விவசாயம் செய்யச் சொல்லிப் பரிந்துரைக்கும் ஒரு விவசாயியைக் கூட பார்க்க முடிவதில்லை. ‘நாங்க படற கஷ்டம் போதாதா?’ என்றுதான் கேட்கிறார்கள். காசு இருந்தால் இடம் வாங்கி வாடகை வருகிற மாதிரி வீடு கட்டி விடச் சொல்கிறார்களே தவிர விவசாய பூமி பற்றி நினைத்துப் பார்க்கவே வேண்டாம் என்கிறார்கள். ‘இக்கரைக்கு அக்கரை பச்சை..அதனால்தான் அப்படிச் சொல்கிறார்கள்’ என்று எளிதாகச் சொல்லிவிடலாம்தான். ஆனால் அப்படியில்லை. திணறுகிறார்கள். வேலை செய்ய ஆட்களே கிடைப்பதில்லை. எவ்வளவு கூலி கொடுத்தாலும் தோட்டத்தில் இறங்கி வேலை செய்வதற்கு ஆட்கள் வருவதில்லை. முன்பு மாதிரியெல்லாம் நாமே வேலையைச் செய்வதும் சாத்தியமில்லை. எருவைப் போட்டு பயிரை நட்டால் அடுத்து களை வெட்டினால் போதும் என்றெல்லாம் விட முடியாது. நிலத்தை பாழ் படுத்தி வைத்திருக்கிறோம். விதையை ஊற வைப்பதிலிருந்து காயையும் கனியையும் ஊற வைப்பது வரை அத்தனையும் வேதிப் பொருட்கள்தான். ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு வேதிப்பொருளைக் கொட்டிக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. எதையாவது அடிக்காமல் விட்டால் வெள்ளாமை படுத்துவிடும். முன்பெல்லாம் மண்வெட்டியை வைத்து களையை வெட்டி அதை மண்ணுக்குள் போட்டு எருவாக்குவார்கள். இப்பொழுது களைக்கும் வேதிப் பொருள்தான். அடித்துவிட்டால் அப்படியே கருகிவிடும். மருந்தடிப்பதற்கும் ஆள் கிடைப்பதில்லை. மருந்தடிக்கவென ஒரு ஆள் காட்டுக்குள் இறங்கினால் ஒரு நாள் கூலி எழுநூறு ரூபாய் வரைக்கும் கொடுக்க வேண்டியிருக்கிறது. உண்மையிலேயே வெகு கஷ்டமான தொழிலாகத்தான் விவசாயம் இருக்கிறது.

நகரங்களில் வாழ்பவர்களில் பத்துக்கு ஆறு பேராவது ‘அடுத்தது விவசாயம்தான் மிகப்பெரிய தொழிலாக மாறப் போகிறது’ என்கிறார்கள். ஆனால் அந்த ஆறு பேரில் ஒருவர் கூட விவசாயம் செய்யத் தயாரில்லை. நாட்டில் இருக்கும் நிலைமையை வைத்துப் பார்த்தால் இப்போதைக்கு விவசாயம் பிழைக்காது என்றுதான் தோன்றுகிறது. பெரும்பாலான கொள்கைகள் ஆலைகளின் நலம் சார்ந்த கொள்கைகள்தான். உரத் தொழிற்சாலைகள் லாபம் கொழிக்க வேண்டும், கரும்பு முதலாளிகள் காசு சம்பாதிக்க வேண்டும், அரிசி ஆலைகள் கொடி கட்ட வேண்டும் என்கிற கொள்கைகளின் அடிப்படையில்தான் பெரும்பாலான முடிவுகள் இருக்கின்றன. நம்மாழ்வாரின் இயற்கை வழி விவசாயம் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். அரசு சொல்லும் வழிமுறைகளில், அரசு காட்டும் உரங்களையும் மருந்துகளையும் அடித்து பிழைப்பை ஓட்டும் விவசாயிகளில் எத்தனை பேர் லாபம் சம்பாதிக்கிறார்கள்? வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாக இருந்தாலே பெரிய விஷயம்.

விவசாயம்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று பேசுகிறோம். விவசாயம் பற்றிய விரிவான விவாதம் எத்தனை இடங்களில் நடக்கிறது? இந்தத் தலைமுறையில் எத்தனை பேருக்கு விவசாயத்தின் சூட்சமங்கள் தெரியும்? நாற்பது அல்லது ஐம்பது ஏக்கர் வைத்திருப்பவன் விவசாயி அல்ல. அரை ஏக்கரும் முக்கால் ஏக்கரும் வைத்திருக்கிறான் அல்லவா? அவன் தான் விவசாயி. அவன் வாழ்வதற்கான சாத்தியங்களை சுருக்கிக் கொண்டுதானே வருகிறோம்? ஒவ்வொரு குறுவிவசாயிக்கும் இதை விட்டுப் போனால் போதும் என்கிற சூழல் உருவாகிக் கொண்டேயிருக்கிறது. நிலத்தின் விலையும் கூடிக் கொண்டே போகிறது. கிடைக்கிற பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்றோ அல்லது வங்கியில் போட்டு வட்டியை வாங்கிக் கொள்ளலாம் என்கிற விவசாயிகளின் எண்ணிக்கைதான் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

இன்று ஆண்ட்ரியா இந்தியா வந்திருக்கிறார். வேலையை ராஜினாமா செய்துவிட்டார். கொஞ்ச நாட்கள் காசியையும் ராமேஸ்வரத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு தனது ஊரில் பண்ணையை கவனித்துக் கொள்ளப் போகிறாராம். ஜெய்ப்பூரில் இருந்து அழைத்திருந்தார். அவருடைய அப்பாவுக்கு வெகு சந்தோஷம் என்றார். செந்தில்குமார் என்றொருவர் இங்கிலாந்தில் இருக்கிறார். சொந்தக்காரர்தான். ஃபோனில் பேசும் போதெல்லாம் இந்தியா வந்து விவசாயம் செய்ய வேண்டும் என்று சொல்வார். அவருடைய அம்மாவும் அப்பாவும் விவசாயிகள். ‘நீ அங்கேயே இருந்தாலும் போச்சாது...இங்க வந்து தோட்டங்காட்டுல கால வெச்சுடாத..அப்புறம் நடக்கிறதே வேற’ என்று மிரட்டுகிறார்களாம். 

Apr 21, 2015

குரூரத்தின் வர்ணங்கள்

அறக்கட்டளை ஆரம்பித்த பிறகு சந்திக்கிற மனிதர்களும் அவர்களது சிரமங்களும் உருவாக்கும் மனக் கொந்தளிப்புகளை அவ்வளவு சுலபமான வார்த்தைகளால் விவரிக்க முடிவதில்லை. நினைத்துப் பார்க்கவே முடியாத பிரச்சினைகள் மனிதர்களை நசுக்கிக் கொண்டிருக்கின்றன. எப்படி இவற்றையெல்லாம் எதிர்கொள்கிறார்கள்? எதற்காகப் போராடுகிறார்கள்? எந்த ஈர்ப்பு இந்த மனிதர்களை வாழச் செய்கிறது? யோசித்துக் கூட பார்க்க முடிவதில்லை.

மிகச் சாதாரணமான பிரச்சினைகளையெல்லாம் சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய ஜனத்திரளின் நடுவில்தான் இவ்வளவு பெரிய சுமைகளைத் தாங்கித் திரியும் மனிதர்களும் அலைகிறார்கள். அற்பக்காரணங்களுக்காக வாழ்வின் விளிம்பை நோக்கி ஓடுபவர்களிடையேதான் இவர்களும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாழ்க்கையின் விசித்திரங்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒவ்வொரு கணமும் வர்ணங்களைப் புரட்டிப் புரட்டி நம் மீது பூசிக் கொண்டேயிருக்கிறது. சில நேரங்களில் இன்பத்தின் வர்ணங்கள். சில நேரங்களில் குரூரத்தின் வர்ணங்கள்.


அப்படி குரூரத்தின் வர்ணம் பூசப்பட்ட இந்தக் குழந்தையின் பெயர் கிருஷ்ணா. ஒன்பது வயதாகிறது. நடப்பதற்கும் பேசுவதற்கும் இயலாத குழந்தை. ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட மருத்துவர்களை பார்த்துவிட்டார்கள். 2010இல் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் அவனுக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்த இயலாது என உறுதியாகத் தெரிவித்துவிட்ட பிறகு ஓமியோபதியிலிருந்து சித்தா வரைக்கும் மாற்று மருந்துகளையும் முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். எதுவுமே பலனளிக்கவில்லை. இனி சிகிச்சை எதுவும் சாத்தியமில்லை என்று தெரிந்தாகிவிட்டது. அவன் உயிரோடு இருக்கும் வரை பராமரிப்பது தவிர வேறு வழியில்லை என்கிற சூழலுக்கு வந்துவிட்டார்கள். இப்பொழுது மருந்து மாத்திரைகளோடு நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறான். 

எங்கேயாவது செல்ல வேண்டுமென்றால் தூக்கித்தான் செல்ல வேண்டும். உணவை யாராவது ஊட்டிவிட வேண்டியிருக்கிறது. அவனால் தனது தேவைகளைச் சொல்லவும் முடியாது. இன்னும் எவ்வளவு காலத்திற்கு இப்படியே சிரமப்படுவான் என்று தெரியவில்லை. இறைவனின் படைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிரமம். கிருஷ்ணாவுக்கு பிறப்பே சிரமம்.

பிரச்சினை என்னவென்றால் இந்தக் குழந்தையை அவனது தாயும் தந்தையும் பார்த்துக் கொள்வதில்லை. தந்தை எப்பொழுதோ குடும்பத்தை விட்டுவிட்டு போய்விட்டார். தாயும் இப்பொழுது குழந்தையுடன் இல்லை. தாய்வழிப் பாட்டிதான் பார்த்துக் கொள்கிறார். நிரந்தர வேலையோ அல்லது சொத்துக்களோ இல்லாத பாட்டியும் தாத்தாவும் அவர்கள். சிரமத்தில் இருக்கிறார்கள். மருந்து மாத்திரை உள்ளிட்ட சிகிச்சைச் செலவுகள் மாதம் மூன்றாயிரம் ரூபாய் வரைக்கும் ஆகிறது. இடையில் கிருஷ்ணாவுக்கு ஏதாவது உடல் உபாதை ஏற்பட்டால் அதற்கு தனியாகச் செலவு. 

காங்கேயம் அருகில் நத்தக்காடையூரில் இந்தக் குடும்பம் வசிக்கிறது. உதவ முடியுமா என்று விசாரித்தார்கள். கண்டிப்பாக உதவ வேண்டிய நிலைமையில்தான் இருக்கிறார்கள். ஆனால் கிருஷ்ணாவுக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லை. யோசித்துப் பார்த்த பிறகு முன் தேதியிட்ட பன்னிரெண்டு காசோலைகளைக் கொடுத்துவிட்டு வந்துவிடலாம் என்று தோன்றியது. தலா இரண்டாயிரம் ரூபாய் நிரப்பப்பட்ட காசோலைகள். ஒவ்வொரு மாதமும் அவர்கள் அதை வங்கியில் கொடுத்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம். முதலில் நிசப்தம் அறக்கட்டளையின் பன்னிரெண்டு காசோலைகளைக் கொடுத்துவிடலாம். ஒரு வருடத்திற்கான செலவுகளைச் சமாளித்துக் கொள்வார்கள். பன்னிரெண்டு மாதங்களுக்குப் பிறகு நிலைமையை அனுசரித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் உதவலாம் என்பதுதான் திட்டம். ஒரே தொகையாக இருபத்தைந்தாயிரம் ரூபாயைக் கொடுப்பதைவிடவும் அந்தந்த மாதத் தேவைக்கு அந்தந்த மாதத்தின் தேதியிட்ட காசோலையைக் கொடுத்துவிடுவதுதான் சரியானதாக இருக்கும் என்று தோன்றியது. இந்த வார இறுதியில் பன்னிரெண்டு காசோலைகளையும் கிருஷ்ணாவின் குடும்பத்தை நேரில் சந்தித்துக் கொடுத்துவிடுகிறேன். அந்தப் பகுதியில் யாராவது இருந்தால் தெரிவிக்கவும். சேர்ந்து செல்லலாம்.

வைரமுத்துவும் மாயச்சூழலும்

புகழ் ஒரு மாயச் சூழல். இழுத்துக் கொண்டேயிருக்கும். யாராவது நம்மைக் கவனிக்கத் தொடங்கும் போதே ஒரு பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். அதன் பிறகு அந்தப் புகழ் இன்னமும் பரவ வேண்டும் என மனம் விரும்புகிறது. அதற்கான காரியங்களைச் செய்யத் தொடங்குகிறோம். அந்த வெளிச்சம் ஒரு போதை. போதை குறையும் போதெல்லாம் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. எதையெல்லாம் செய்ய வேண்டும் என கணக்குப் போட்டு அதன்படி காய்களை நகர்த்துகிறோம். மீண்டும் தாங்கிப்பிடித்துவிட்டால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் ஒரு படி கீழே இறங்கவும் தயங்குவதில்லை. ஒரு படி இரண்டு படிகளாகி இரண்டு படிகள் என்பது மூன்று படிகளாகி எவ்வளவு வேண்டுமானாலும் கீழே இறங்கும் போதுதான் சந்தி சிரிக்கிறது.

நமது புகழ் பரவுகிறது என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. வயிற்றெரிச்சல், பொறாமை, இயலாமை அல்லது உண்மையான காரணங்கள் எது வேண்டுமானாலும் பின்னணியில் இருக்கக் கூடும் ஆனால் புகழ் வெளிச்சம் அதிகரிக்க அதிகரிக்க எதிரிகளின் பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கும். ஒரேயொரு வாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் அவர்கள். நாமே அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் நமது கதை முடிந்தது என்று அர்த்தம். நேர்மை, நாணயம், அறம், புண்ணாக்கு, பருத்திக் கொட்டை என்ற ஏதாவதொரு காரணத்தை முன்வைத்து அடித்து நொறுக்கி சிதைத்துச் சின்னாபின்னமாக்கி தொங்கவிட்டுவிடுவார்கள். ஊரே சேர்ந்து அடித்துக் கொண்டிருக்கும் போது யாருடைய சட்டையையும் பிடித்து ‘என்னை அடிக்கிறயே நீ ஒழுக்கமா?’ என்று கேட்க முடியாது. அவனும் ஒழுக்கமில்லைதான். அவனும் அயோக்கியன்தான். ஆனால் என்ன செய்ய முடியும்?


வைரமுத்து அப்படித்தான் சிக்கிக் கொண்டிருக்கிறார். குமுதத்தில் தான் எழுதிக் கொண்டிருப்பதைப் பாராட்டி ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தை எழுதி அவரது பழைய கையொப்பத்தையும் பயன்படுத்தி ‘இதுதான் ஜெயகாந்தனின் கடைசி ஆவணம்’ என்று குமுதத்திலும் வெளியிட்டுவிட்டார்களாம். ஆச்சரியமாக இருக்கிறது. ஜெயகாந்தனிடம் சிபாரிசு வாங்க வேண்டிய இடத்தில்தான் வைரமுத்து இருக்கிறாரா என்ன? அவர் அடைய வேண்டிய புகழ் என்று ஏதாவது மிச்சமிருக்கிறதா? தமிழ் வாசிக்கத் தெரிந்த அத்தனை பேருக்கும் வைரமுத்துவைத் தெரிந்திருக்கும். அதற்குப் பிறகும் ஏன் தவியாய்த் தவிக்கிறார் என்றுதான் புரியவில்லை.

நமக்கான ஒரு இடத்தை அடைந்த பிறகு- இதில் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது- எது நமக்கான இடம் என்பதே குழப்பம்தான். போதும் என்கிற மனமெல்லாம் வாய்ப்பதில்லை. ‘இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்’ என்கிற ஆசையில் அறிவை இழந்து, அறிவின் கட்டுப்பாட்டை இழந்து எதையாவது செய்து அடைந்த புகழை இன்னும் உயரச் செய்வதையே கவனமாகச் செய்யத் துவங்குகிறது மனம். வைரமுத்து அப்படியான ஒரு சிக்கலில் இருக்கிறார். 

பாரதிக்குப் பிறகு மிகப்பெரிய புகழை அடைந்த தமிழ்க்கவிஞனாக தான் இருக்க வேண்டும் என விரும்புகிறார். அப்படியான ஆசை இருப்பதில் தவறொன்றுமில்லை. அதற்கான மேடை மொழி, மீசை, உடை, பாவனை என அத்தனையையும் மாற்றியமைத்திருக்கிறார். இதெல்லாம் லேசுப்பட்ட காரியமில்லை. யார் வேண்டுமானாலும் ஆசைப்பட்டுவிடலாம். ஆனால் அந்த இடத்தை அடைவதற்கான முயற்சிகளோடு வெகுசிலர்தான் நகர்கிறார்கள். வைரமுத்து நகர்ந்து கொண்டிருந்தார். ஆனால் தாம் விரும்புகிற இடத்தை அடைய முடியாது போய்விடக் கூடும் என்று பதறுகிறார். அதற்கான சாத்தியங்கள் அருகிக் கொண்டே வருவதாக நம்பத் தொடங்கியிருக்கிறார். அதுதான் வைரமுத்துவின் பிரச்சினை. அதனால்தான் மரணப்படுக்கையில் கிடந்த ஜெயகாந்தனின் சிபாரிசு தேவைப்பட்டிருக்கிறது. 

சில ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் ஊரில் பொங்கல் விழா நடந்தது. வைரமுத்துதான் சிறப்பு விருந்தினர். ஒரு திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது. இடமில்லாமல் வெளியில் நின்றபடியே ஏகப்பட்ட பேர் மெகா திரைகளில் கவிஞரின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தார்கள். கூட்டம் முடியும் வரை ஒரு ஆள் நகரவில்லை. வைரமுத்துவின் திறமைக்குச் சேர்ந்த கூட்டம் அது. அவரது எழுத்து மற்றும் பேச்சு மீதான நம்பிக்கையில் கூடியிருந்தார்கள். கோபிச்செட்டிபாளையம் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் கூட அவ்வளவு பெரிய கூட்டத்தை அசையாமல் கட்டிப் போடும் ஆளுமையுடைய எழுத்தாளர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா என்று தெரியவில்லை. வைரமுத்துவை தமிழ்ச் சமூகத்தின் சாமானிய மனிதன் நம்புகிறான். இந்த மொழிக்காகவும் இனத்துக்காகவும் சிந்திக்கிற கவிஞன் என்று வைரமுத்துவை ஏற்றிப் பிடிக்கிறான். ஆனால் வைரமுத்துவுக்கு ஓரளவு புரிதல் இருக்கிறது அல்லவா? அதனால் அவர் தன்னை நம்புவதில்லை. தமக்குச் சேர்கிற கூட்டமும் இந்தப் புகழும் தனக்குப் பின்னால் காலியாகிவிடும் என்று பயப்படுகிறார். அதனால்தான் விருதுகளையும் சிபாரிசுகளையும் தேடித் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார். 

வயது கூடக் கூட வரக் கூடிய இயல்பான பதற்றமும் பயமும்தான் இது. மருமகள் வந்தவுடன் தனது இடம் கேள்விக்குள்ளாகிவிடும் என்று பயப்படுகிற மாமியாரின் மனநிலைதான் இது. அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. அம்மாவின் இடம் அம்மாவுக்குத்தான். இளங்கவிஞர்கள் தனது இடத்தைப் பிடிக்கிறார்கள் என்று வைரமுத்து பயப்படுகிறார் போலிருக்கிறது. அடுத்த தலைமுறை வந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் முந்தய தலைமுறையின் இடத்தைக் காலி செய்துவிட முடியாது. psychological crisis இது. ஆனால் ஒன்று- எம்.ஜி.ஆருக்குப் பிறகு ரஜினி என்பார்கள். ஆனால் ரஜினி தலைகீழாக நின்றாலும் எம்.ஜி.ஆரின் இடத்தை அடைய முடியாது. ரஜினிக்குப் பிறகு இவர்தான் என்று யாரை நோக்கியும் விரலை நீட்ட முடியாது. ரஜினியின் இடம் ரஜினிக்குத்தான். அப்படித்தான் வைரமுத்துவும் என்று நம்புகிறேன். எப்படி பட்டுக்கோட்டையாரின் பெயரையும் கண்ணதாசனின் பெயரையும் வைரமுத்துவால் ஸ்வாஹா செய்துவிட முடியாதோ அப்படித்தான் முத்துக்குமாராலும் யுகபாரதியாலும் வைரமுத்துவை விழுங்கிவிட முடியாது. பாரதியின் பெயருக்கு அடுத்தபடியாக வரவில்லையென்றாலும் தமிழ் வரலாற்றில் வைரமுத்துவின் பெயரை இருட்டடிப்பு செய்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். இதைக் கூட புரிந்து கொள்ளாத அளவுக்கு சாமானிய மனநிலையோடுதான் கவிப்பேரரசு இருக்கிறார் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது.

Apr 20, 2015

மசாஜ் பார்லர் ரெய்டு

இரவில் தூக்கம் கெட்டு பயணம் செய்தால் அடுத்த நாள் தெளிவாகிவிடுவதற்கான ஒரு வழி இருக்கிறது. நீராவிக் குளியல். நாம் கால் வைக்கும் அத்தனை ஊர்களிலும் இந்த வசதி இருக்காதுதான். ஆனால் சென்னையில் உண்டு. நேற்று காலையில் பத்து மணிக்கெல்லாம் டிஸ்கவரி புத்தகக் கடைக்குச் சென்றிருந்தோம். கடையே திறக்கவில்லை.  ‘பிரபா ஒயின்ஸ் ஷாப் ஓனருங்களா?’ என்கிற ரீதியில் வேடியப்பனின் எண்ணுக்கு ஆளாளுக்கு ஃபோன் செய்யத் தொடங்கினார்கள். பதினோரு மணிக்கு கெளதம சித்தார்த்தனின் படைப்புலகம் குறித்தான கூட்டம் தொடங்கியது. என்னால் அமரவே முடியவில்லை. தூக்கம் தள்ளுகிறது. கூட்டத்தில் பேசியவர்கள் மோசம் என்று சொல்லவில்லை. பயணக் களைப்பு. 

புத்தகக் கடையிலிருந்து நேராக நடந்தால் ஒரு சலூன் இருக்கிறது. அந்த சலூனின் மேல்தளத்தில் நீராவிக் குளியல் எடுத்துக் கொள்ளலாம். கடந்த முறை காலை எட்டு மணிக்கே அந்தக் கடையைத் தட்டியதால் வெறும் ஆண்கள்தான் இருந்தார்கள். சலூன் கடை ஊழியர்கள். பெரிய பிரச்சினை இல்லை. அறைக்குள் அமர வைத்து சூட்டைக் கிளப்பிவிட்டார்கள். வியர்வை வழிந்தது. உடல் வெடுக்கென்று ஆகிவிட்டது. அதனால் இந்த முறையும் அதே கடைக்குச் சென்றேன். நேற்று பதினோரு மணியைத் தாண்டிவிட்டதல்லவா? அதனால் நீராவிக் குளியல் ஏற்பாடுகளை பெண்கள்தான் செய்தார்கள். எசகுபிசகாகவெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பத்து நிமிடம் காத்திருக்கச் சொல்லிவிட்டு அறையைத் தயார் செய்தார்கள். ஹீட்டரை அவர்கள் ‘ஆன்’ செய்துவிடுவார்கள். அறைக்குள் அமர்ந்து கதவைப் பூட்டிக் கொள்ள வேண்டும். கடந்த முறை சூடு தாங்க முடியாத போது அவ்வப்போது அறைக் கதவைத் திறந்து வைத்துக் கொண்டேன். இந்த முறை அதற்கு சாத்தியமில்லை. வெளியே பெண்கள் நடமாடினால் சங்கோஜம் ஆகிவிடுமே என்று அடைபட்டுக் கிடக்க வேண்டியதாகிவிட்டது.

‘எவ்வளவு நேரம் தருவீங்க?’ என்றேன்.

‘பதினைந்திலிருந்து இருபது நிமிடம் சார்’

‘சரிங்க...நீங்க போங்க.. நேரம் ஆனவுடன் வந்து கதவைத் தட்டுங்க’ என்று சொல்லிவிட்டு தாழிட்டுக் கொண்டேன். துணிமணியெல்லாம் கழட்டி- துணியை மட்டும்தான் - பக்கத்து அறையில் மாட்டிவிட்டு வந்து அமர்ந்து கொண்டேன். நல்லவேளையாக ஒரு துண்டைக் கைவசம் கொடுத்துவிட்டு போயிருந்தார்கள்.

ஒரு குட்டி அறை. அதற்கு நடுவில் ஒரு முக்காலியைப் போட்டு வைத்திருந்தார்கள். பக்கவாட்டில் இருக்கும் குழாயிலிருந்து நீராவி அறையை நிரப்புகிறது. அந்த வெப்பம் மெதுவாக நம்மை ஆக்கிரமிக்கத் துவங்கி ரத்தக் குழாய்கள் விரிவடைந்து வியர்வையை வழியச் செய்கிறது. பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். வெப்பம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. பற்களைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் பார்த்தேன். வெளியே பெண்கள் யாராவது நடமாடக் கூடும் என்ற சங்கடம் இருக்கத்தான் செய்தது. ஆனால் சமாளிக்க முடியாது போலிருந்தது. கதவைத் திறந்துவிடலாம் என்று துண்டைக் கட்டிக் கொள்ளத் தயாராவதற்குள் யாரோ கதவைத் தட்டினார்கள்.

‘சார்...கதவைத் திறங்க’

நேரம் முடிந்துவிட்டது போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

‘சரிங்க..நீங்க போங்க’- கதவைத் திறக்காமலேயே பதில் சொன்னேன்.

‘இல்ல சார்...போலீஸ் நிக்கிறாங்க..உங்களைப் பார்க்கணுமாம்’

என்னைப் பார்க்க போலீஸா? டிஸ்கவரி கடையிலிருந்து யாரோ பின்னாலேயே வந்து கலாய்க்கிறார்கள் போலிருக்கிறது என்றுதான் நினைத்தேன். இருந்தாலும் அந்த மூன்றெழுத்துச் சொல்லைக் கேட்டாலே பதறத் தொடங்கிவிடுகிறேன்.

‘எதுக்குங்க?’

‘ரெய்ட் வந்திருக்காங்க...சும்மா செக்கிங்’

ரெய்டு- இந்த ஒரு வார்த்தை போதாதா? சப்தநாடிகளும் துள்ளி அடங்கின. இருந்தாலும் ஒரு நம்பிக்கை- அறைக்குள் தனியாகத்தான் இருக்கிறேன். எந்த வழக்கும் பதிய முடியாது என்கிற ஆசுவாசம். இருந்தாலும் மண்டைக்குள் குறுக்கும் மறுக்குமாக எண்ணங்கள் அலைபாயத் தொடங்கியிருந்தன. அடுத்த அறைக்குள் யாராவது ஒரு அரசியல்வாதியின் மகன் ஏதாவது தப்புத்தண்டா செய்து கொண்டிருந்தால் அவனைத் தப்பிக்க வைப்பதற்காக வழக்கை என் மீது போடவும் வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தபோது வியர்த்திருந்த உடம்பில் மீண்டுமொருமுறை வியர்வை பெருக்கெடுத்தது. எப்படித் தப்பிக்க முடியும்? பிடித்துக் கொண்டு போய் அமர வைத்து நிழற்படம் எடுப்பார்கள். நாளைக்கு ‘சென்னையில் விபச்சாரம். பெங்களூர் சாஃப்ட்வேர் இஞ்சினியர் உட்பட ஐந்து பேர் கைது’ என்று தினத்தந்தியில் படத்தோடு செய்தி வரும். செல்ஃபோனை வாங்கி வீட்டில் இருப்பவர்களுக்குத் தகவல் கொடுப்பார்கள். என்னவென்று சொல்வார்கள்? யோசிக்கும் போதே பேயறைந்த மாதிரி இருந்தது. இனி அவ்வளவுதான். ஃபேஸ்புக், ஜிமெயில், நிசப்தம் என அத்தனையும் மூடி வைத்துவிட வேண்டியதுதான். ‘இவனையா நல்லவன் என்றோம்’ என்று ஆளாளுக்கு வாயில் வசம்பை வைத்துத் தேய்த்துக் கொள்வார்கள். ‘இவன் ஒரு தில்லாலங்கடின்னு அப்பவே தெரியும்’ என்று ஒரு சாரார் நாறடிப்பார்கள். ஃபேஸ்புக் நக்கல் கமெண்ட்டுகளில் பிரேமானந்தா, நித்யானந்தா வரிசையில் நம் படத்தையும் சேர்த்துக் கொள்வார்கள். ஆண்டவா என்ன இது சோதனை? 

இவற்றையெல்லாம் யோசிப்பதற்குள் மீண்டும் கதவைத் தட்டினார்கள். 

இது ஆண் குரல்- ‘வெளியே வாங்க சார்’. போலீஸ்காரனேதான்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. அவசரத்தில் ‘ஜட்டியைப் போட்டுட்டு வர்றேன்’ என்று உளறிவிட்டேன். உண்மையில் ‘துண்டைக் கட்டிக் கொண்டு வருகிறேன்’ என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். கண்றாவி. அந்தப் போலீஸ்காரர் மனதுக்குள் என்னவெல்லாம் நினைத்துப் பார்த்தாரோ! ஜட்டி மீது அரைஞாண் கயிறைப் போட்டு இறுக்கி துண்டையும் அவிழ்க்கவே முடியாத அளவுக்கு படி-முடிச்சு போட்டுக் கொண்டேன். ஏதாவது தள்ளுமுள்ளு நடந்தால் மானம் துண்டு வழியாக போய்விடக் கூடாதல்லவா?

நல்லவனைப் போல முகத்தை வைத்துக் கொண்டு கதவைத் திறந்தேன்.

‘எதுக்கு வந்தீங்க?’ என்றார் அந்த மஃப்டி மனிதர்.

வியர்வை வடியும் முகத்தில் பால் வடியும் படியான பாவனையைக் கொண்டு வந்து ‘ஸ்டீம் பாத் எடுத்தா ரத்த ஓட்டம் அதிகமாகி கொழுப்பு கரையும் சார்’

‘உங்க உடம்புலதான் சதையே இல்ல..அப்புறம் எங்கே கொழுப்பு?’ 

ஜோக் எல்லாம் அடிக்கிறார். சிரித்து வைத்துவிடலாம் என்று சிரித்துக் கொண்டேன். ‘போய் குளிச்சுட்டு வாங்க’

குளிக்கவெல்லாம் இல்லை. குளியலறைக்குள் புகுந்து இரண்டு குடுவை தண்ணீரை ஊற்றிவிட்டு ஆடையை மாற்றிக் கொண்டு வந்து நின்றேன். அதற்குள் கூடச் சேர்ந்த இன்னொரு மஃப்டியாளர் ‘இவரைப் பார்த்தா சம்பந்தமே இல்லையே’ என்றார். எதுக்கு சம்பந்தமில்லை என்று சொல்கிறார் என்று புரிந்து கொள்ள வெகுநேரம் ஆகவில்லை. ஈகோவைத் தீண்டுகிறான் கிராதகன்.

ஐடி கார்ட் வைத்திருந்தேன். 

‘பெங்களூரா?’

‘ஆமா சார்...ஒரு மீட்டிங்குக்கு வந்தேன்’

‘என்ன மீட்டிங்’

‘இலக்கியம் சார்’

‘ம்ம்ம்ம்’

‘எங்கே நடக்குது?’

சொன்னேன். 

‘பெங்களூரில் இல்லாத ஸ்டீம்பாத்தா?’

‘அங்க இருக்கு சார்...காலையில்தான் சென்னை வந்தேன்....ரூம் எடுத்தா ஐந்நூறு ஆகும்....இங்க அப்படியில்ல....ஷேவிங் முடிச்சு ஸ்டீம்பாத் எடுத்து குளிச்சுட்டு கீழே போன முந்நூறு ரூபாதான் கேட்பாங்க’ என்ற போது அந்த பெண் அப்படி முறைத்தாள். அடுத்த முறை இந்தப் பக்கமே எட்டிப்பார்க்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். மீறி வந்தால் கழுத்தில் கத்தியை வைத்துவிடுவார்கள்.

போலீஸ்காரர்களுக்கு சந்தேகம் நிவர்த்தி ஆகியிருக்கக் கூடும். மற்ற எந்த விவரமும் கேட்கவில்லை. ‘சரி போய் எடுத்துக்குங்க’ என்றார்கள்.

‘அதெல்லாம் வேண்டாம்...ஆளை விட்டீங்கன்னா போதும்...கிளம்பட்டுமா?’

விட்டுவிட்டார்கள். அவசர அவசரமாக பையைத் தூக்கிக் கொண்டு திப்புரு திப்புரு என இறங்கி வெளியே ஓடி வந்த பிறகுதான் ஆசுவாசமாக இருந்தது. ‘சாஃப்ட்வேர் இஞ்சினியர் கைதுக்கு பதிலாக இளம் எழுத்தாளர் கைது என்று செய்தி வந்தால் கெத்தாக இருக்குமல்லவா?’ என்று நினைத்த போது ‘ஏண்டா உன் புத்தி இப்படிப் போகுது’ என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். ஈரத்தை நன்றாகக் கூட துவட்டவில்லை. அப்படியே டிஸ்கவரி புக் பேலஸில் போய் அமர்ந்தேன். மேடையில் இன்னமும் யாரோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஈழத்துக் கவிஞர் அகரமுதல்வன் அருகில் வந்து ‘ஷேவிங் செஞ்சுட்டு வர்றீங்களோ’ என்றார்.  ‘ஜஸ்ட் மிஸ்...save ஆகிட்டு வர்றேன்’ என்றேன். அவருக்கு நிச்சயமாக புரிந்திருக்காது. ஆனால் இட் ஹேஸ் ஒரே ஒரு மீனிங்...பட் பிக் மீனிங்!

திக்கும் இல்லை திசையும் இல்லை

1930களின் தொடக்கத்தில் ஜப்பானுக்கு பேராசை. உலகின் மாபெரும் பேரரசாக தன்னை அறிவித்துக் கொள்ள வேண்டும் என்கிற முஸ்தீபுகளில் இறங்கியது. முதலில் சீனாவை அடித்தது. ஹிட்லரின் ஜெர்மனியுடனும், முசோலினியின் இத்தாலியுடனும் கூட்டு சேர்ந்து கொண்டது. அந்தத் தில்லாலங்கடிகளோடு இராணுவ ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டது. இந்த மூன்றுபேரும் சேர்ந்தால் குடி மூழ்கிப் போய்விடும் என்று மற்ற நாடுகள் பதறின. அமெரிக்காவுக்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு. அந்தக்காலத்திலேயே பெரியண்ணன் ஆகியிருந்ததால் ஜப்பான் மீது பொருளாதாரத் தடையை விதித்தது. ஜப்பானில் எண்ணெய் உள்ளிட்ட சரக்குகள் கிடைக்காமல் அழுத்தம் அதிகமானது. ஜப்பான்காரனும் லேசுப்பட்டவனா? விடுவேனா என்று முரட்டுத்தனமாக அமெரிக்காவின் பேர்ள் துறைமுகத்தைத் தாக்கினார்கள். அது அமெரிக்காவுக்கு பெரிய அடி. சுதாரித்துக் கொண்ட அமெரிக்காவும் போரை அறிவித்துக் களத்தில் இறங்கியது. அதன்பிறகு போர் உக்கிரமாக நடந்து ரஷ்யா, இங்கிலாந்து என்று ஆளாளுக்கு ஜப்பானை வெளுத்துக் கட்டினார்கள் என்பதும் கடைசியாக 1945 ஆம் ஆண்டு இரண்டு அணுகுண்டுகளை ஹிரோஷிமா, நாகசாகி மீது போட்டதில் நிலைகுலைந்த ஜப்பான் சரணடைந்தது என்பதெல்லாம் வரலாறு.

வரலாற்றின் பக்கங்களில் கண்டுகொள்ளப்படாத சில வரிகள் இருந்து கொண்டேயிருக்கும். அப்படியொரு வரியை எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் Against the sun.உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் போது மூன்று அமெரிக்க வீரர்கள் போர் விமானத்தில் பசிபிக் கடலின் மீது பறக்கிறார்கள். தகவல் தொடர்பு சரியாக இருப்பதில்லை. கிழக்கில் திரும்ப வேண்டுமா, மேற்கில் திரும்ப வேண்டுமா என்று குழம்பி தடம் மாறிவிடுகிறார்கள். கதை கந்தல். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் நிலமே தெரிவதில்லை. விமானத்தில் எரிபொருளும் குறைந்து கொண்டே வருகிறது. உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். பைலட் விமானத்திற்குள் இருப்பதையெல்லாம் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். மூன்று பேருமாகத் தயாரான பிறகு விமானம் கடலுக்குள் இறக்கப்படுகிறது. பைலட் தவிர மற்ற இரண்டு பேருக்கும் நீச்சல் அவ்வளவாகத் தெரியாது. என்றாலும் மிதவையை எடுத்துக் கொண்டு குதித்ததால் தப்பித்துவிடுகிறார்கள். ஆனால் உடனடியாக மிதவை விரிவடைவதில்லை. சதிகார மிதவை அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்க போதாக்குறைக்கு இவர்கள் எடுத்து வந்த சாமான்கள் தண்ணீருக்குள் இழுக்கின்றன. எடையைக் குறைத்தாக வேண்டும். வேறு வழியில்லாமல் முடிந்தவரை பிற சாமான்களை கடலுக்குள் வீசிவிடுகிறார்கள். திக்கித் திணறி மிதவையை விரிவடையச் செய்து சிரமப்பட்டு அதன் மீது ஏறி அமர்கிறார்கள்.  


அப்போதைக்குத் தப்பித்துவிடுகிறார்கள். ஆனால் அடுத்த முப்பத்து நான்கு நாட்களுக்கு அந்த மிதவைதான் வீடு படுக்கை எல்லாமும். இரண்டாம் உலகப்போரின் போது உண்மையில் நிகழ்ந்த சம்பவம் இது. அந்த மூன்று அமெரிக்க வீரர்களின் கதையை அப்படியே படமாக்கியிருக்கிறார்கள். டிக்ஸன், டோனி, ஜீன் ஆல்ட்ரிச். இவர்களில் டிக்ஸன் விமானி. சற்று வயதானவர். மற்ற இரண்டு பேரும் திருமணம் ஆகாத இளைஞர்கள்.

எல்லை தெரியாத பசிபிக் பெருங்கடலில் என்னதான் செய்து தொலைவது? ஆரம்பத்தில் சற்று ஆசுவாசமாகத்தான் இருக்கிறார்கள். தனது தங்கையைப் பற்றி ஒரு இளைஞன் சொல்கிறான். அவன் விவரிப்பதிலிருந்தே இன்னொரு இளைஞனுக்கு அவள் மீது காதல் வருகிறது. அவளைப் பற்றி கற்பனை செய்து பார்க்கிறான். கற்பனை என்றால் கண்டபடிக்கு இல்லை. வெறும் மூன்று பேர்களை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தால் பார்வையாளனுக்கு சலித்துவிடும் என்பதால் ஒரு பெண்ணின் முகத்தை காட்ட இயக்குநர் விரும்பியிருப்பார் போலிருக்கிறது. அவளுக்கு வசனம் கூட இல்லை. முகத்தை மட்டும் இரண்டு முறை காட்டியிருக்கிறார். கடலையும் இந்த மூன்று ஆண் கிடாய்களையும் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு ஒரு கவன மாற்றம். படத்தில் இந்த நான்கு முகங்கள்தான். அப்புறம் வெறும் நீலக்கடல். 

மிதவையில் கீறல் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக ஆரம்பத்திலேயே ஷூக்களைக் கழட்டி வீசிவிடுகிறார்கள். பைலட் டிக்ஸன் தனது ஷூக்களை மிதவைக்குள்ளாகவே வைக்கிறார். முதல் சில நாட்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை. அந்த ஷூவில் சிறுநீரைக் கழித்து அதையே குடிக்கிறார்கள். சாப்பாட்டுக்கும் வழியில்லை. வெயில் சுட்டெரிக்கிறது. கடற்காற்று கொஞ்சம் கொஞ்சமாக உடலில் புண்களை உண்டாக்குகிறது. முகம், உடல் என எங்கும் உப்புப் படிந்து வெளுத்துப் போகிறது. மிகக் கொடுமையான நாட்கள். ஏதோவொரு நம்பிக்கையில் வாழ்க்கையின் கரையைப் பார்த்துவிட முடியும் என்று மிதந்து கொண்டிருக்கிறார்கள். 

எவ்வளவுதான் பசியோடு சமாளிக்க முடியும்? இருக்கிற கம்பியை வைத்துத் தூண்டில் ஒன்று தயாரிக்கிறார்கள். ஒரு மீன் கூட சிக்குவதில்லை. கத்தியை வைத்துக் குத்துவதற்கு முயலும் போது மிதவை கிழிந்துவிடும் என டிக்ஸன் எச்சரிக்கிறார். அதைக் காதில் கேட்காமல் குத்தி மீனைப் பிடித்துவிடுகிறான். ஓரளவு பெரிய உருவமுடைய சுறா மீன் அது. அதைப் பச்சையாகவே தின்கிறார்கள். விதி வலியது. ரத்தவாடையின் காரணமாகவோ என்னவோ பிற சுறாமீன்கள் சூழ்ந்து கொள்கின்றன. ஒருவன் தெரியாத்தனமாக கையை வெளியில் விட்டு கடி வாங்கித் தப்பிக்கிறான். அதன் பிறகு மீண்டும் சுறாவை வேட்டையாடினார்களா என்று தெரியவில்லை. சில நாட்கள் கழித்து ஒரு பறவை மிதவையின் மீது வந்து அமர்கிறது. கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டு அந்தப் பறவையைக் கொன்று தின்கிறார்கள். இப்படித்தான் வயிற்றை எப்பொழுதாவது நிறைக்கிறார்கள். இப்படியே நாட்கள் நகர்கின்றன.

அட்டகாசமான படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. படமாக மட்டும் பார்த்தால் சில இடங்களில் இழுவையாகத் தெரிகிறது. ‘எப்படா முடியும்?’ என்று கூடத் தோன்றியது. ஆனால் இது புனைகதை இல்லை. உண்மையிலேயே இந்த மூன்று மனிதர்களும் இதையெல்லாம் அனுபவித்திருக்கிறார்கள். மீண்டும் வாழ்ந்துவிட முடியும் என்ற ஏதோவொரு நம்பிக்கையைப் பற்றிக் கொண்டு போராடியிருக்கிறார்கள். உணவு, தண்ணீர், கடற்பயணத்துக்கான உபகரணங்கள் என எதுவுமில்லாமலேயே திசை தெரியாத கடலுக்குள் ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்திருக்கிறார்கள். முப்பத்து நான்கு நாட்கள் இப்படி போராடியது சாதாரணக் காரியமில்லை. சுறாக்களிடமிருந்து தப்பித்திருக்கிறார்கள். புயலில் சிக்கி மீண்டிருக்கிறார்கள். கருக்கியெடுக்கும் சூரியனின் வெப்பம், உப்புக் காற்று உள்ளிட்ட அத்தனை சிக்கல்களிலிருந்தும் தப்பியவர்களின் கதை. இந்தப் படத்தை அப்படித்தான் பார்க்கிறேன்.

மூன்று பேரின் உளவியலும் மிக முக்கியமானது. படத்தில் அதைச் சரியாக பதிவு செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் டிக்ஸனை தங்களின் தலைவனாக ஏற்றுக் கொண்டு அவர் சொல்வதை இம்மிபிசகாமல் கேட்கிறார்கள். ஆனால் இனி தேறுவது கஷ்டம் என்று அவர் சொல்வதை மறுக்கத் தொடங்கி தங்கள் இஷ்டத்துக்கு செயல்படத் தொடங்குகிறார்கள். எதனால் விமானம் திசை மாறியது என்று டிக்ஸன் சொல்கிறார். அவருடைய தவறுதான். விமானத்துக்குள் வெப்பம் அதிகமாக இருந்திருக்கிறது. ஓரிரு நிமிடங்கள் உறங்கிவிடுகிறார். திருப்ப வேண்டிய இடத்தில் விமானத்தைத் திருப்பாமல் வேறொரு இடத்தில் திருப்புகிறார். அந்த சில நிமிடங்கள்தான் மூவரின் விதியை நிர்ணயிக்கிறது. மூன்று பேரையும் கடலுக்குள் இறக்குகிறது. ஆனால் இனி என்ன செய்ய முடியும்? மற்ற இரண்டு பேரும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பயணத்தினால் மூன்று பேருக்கும் உண்டாகும் விரக்தி, இயலாமை, கோபம் என எல்லாவற்றையும் உரையாடல் வழியாகவும் சோர்ந்து போன தங்களின் முகங்களின் வழியாகவுமே காட்டுகிறார்கள். ‘ஒருத்தன் செத்துட்டா மத்த இரண்டு பேரும் என்ன செய்வது?’ என்று கேட்டு இதயத்தைத் தின்பது குறித்தும் நுரையீரலையும் சிறுநீரகத்தையும் எடுத்து ஆளுக்கு ஒன்றாகத் தின்பது பற்றியும் பேசிக் கொள்கிறார்கள். சிரித்துக் கொண்டேதான் பேசுகிறார்கள் என்றாலும் உள்ளுக்குள் அப்படியொரு நினைப்பு மூன்று பேருக்குமே இருக்கிறது என்று தெரிகிறது. தற்கொலை குறித்தும் கூட பேசிக் கொள்கிறார்கள். 

வாழ்க்கையின் விளிம்பு வரைக்கும் சென்றாலும் அத்தனை பிரச்சினைகளையும் தாண்டி எப்படியாவது தப்பித்துவிட மாட்டோமா என்கிற ஆசையை பிடித்துக் கொண்டே நகர்வதுதானே மனித மனம்? எவ்வளவுதான் பெரிய ஆபத்து வந்தாலும் கடைசி வரைக்கும் தம் கட்டி பார்த்துவிட வேண்டும் என்கிற நினைப்பில்தான் மொத்த உலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் எல்லா உயிர்களாலும் கடைசி வரைக்கும் போராட முடிவதில்லை. ஒரு கட்டத்தில் ‘அவ்வளவுதான்’ என்று கைவிட்டுவிடுகின்றன. அவர்களை இந்த உலகம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. சிலர் மட்டுமே இலக்கை அடையும் வரை போராடி வெல்கிறார்கள். அவர்களைத்தான் inspiration என்கிறோம். இந்த மூவரையும் அப்படி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எந்தவிதமான அதிகப்படியான பில்ட் அப்களும் இல்லாமல் இயல்பான inspirations.