சென்ற வாரத்தில் மர்மமான முறையில் இறந்து போன ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வீடு இருக்கும் பகுதிக்குச் சென்று வந்தேன். இன்றைக்கு யுகாதி என்பதால் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சோடிக் கிடந்தன. கோரமங்களாவும் விதிவிலக்கு இல்லை. அங்குதான் அவரது வீடு இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே ‘இது கொலை’ என்றோ அல்லது ‘இது அழுத்தம் கொடுக்கப்பட்டு நடத்தப்பட்ட தற்கொலை’ என்றோதான் பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது அந்த நம்பிக்கையில் சம்மட்டி வைத்து அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண் விவகாரம், குடும்பச் சிக்கல்கள் என்று உள்ளூர் பத்திரிக்கைகள் எழுதுகின்றன. சாமானிய மக்கள் ‘இந்தக் காலத்தில் யாரை நம்புறது?’ என்று தங்களது நம்பிக்கையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். விவரம் தெரிந்த கன்னடக்காரர்கள் வேறுமாதிரி பேசுகிறார்கள். ஆளுங்கட்சி பெரும்புள்ளிகள் பினாமிகளாக நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்குள்ளேயே ரவி வணிகவரி ரெய்டு நடத்தினார் என்பதால்தான் இந்த விவகாரம் திசை மாற்றப்படுகிறது என்கிறார்கள்.
உள்துறை அமைச்சர் ஜார்ஜின் நிறுவனத்தில் ரவி ரெய்டு நடத்தியதாக பேச்சு உலவுகிறது. எம்பஸி கோல்ப் லின்க் என்னும் மிகப்பெரிய நிறுவனத்தின் சேர்மனாக ஜார்ஜ்தான் இருக்கிறார். அவர்தான் ‘ரவி தனது பேட்ஜ் ஐஏஎஸ் பெண் அதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தார்’ என்று முதலில் அறிவித்தவர். இதையெல்லாம் சேர்த்து முடிச்சுப் போட்டு இது திசைமாற்றல் என்று விவகாரம் சூடு கிளம்பியிருக்கிறது.
திசை மாற்றமா என்பது முழுமையாகத் தெரியவில்லை ஆனால் கர்நாடக உள்துறை மந்திரி ‘இது தனிப்பட்ட காரணங்களினால் நடந்திருக்கிறது’ என்று பேசினால் ‘இது தற்கொலைதான்’ என்கிற ரீதியில் முதலமைச்சர் சித்தராமையா பேசினார். விசாரணையே ஆரம்பிக்காமல் இப்படிப் பேசுவது சரியான செயல் இல்லை என்று எதிர்க்கட்சிகள் துள்ளின. மாநிலம் முழுவதும் போராட்டங்கள் ஆரம்பமாகின.
அதன் பிறகு ரவியின் பெயரைக் களங்கப்படுத்தும் செய்திகளாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவருடன் ஐ.ஏ.எஸ் தேர்வான பெண்ணுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் என்ற தகவல்கள் கசியவிடப்பட்டன. அதுவும் ஒரே நாளில் நாற்பத்து நான்கு முறை அலைபேசியில் பேசினார் என்று ஒரு பத்திரிக்கையில் எழுதினார்கள். இன்னொரு பத்திரிக்கையில் நாற்பத்து நான்கு வாட்ஸப் மெசேஜ்கள் அனுப்பியிருக்கிறார் என்று எழுதினார்கள். அதுவும் கடைசி மெசேஜில் ‘அடுத்த வாழ்க்கையில் சந்திக்கலாம்’ என்று அனுப்பியிருந்தாராம்.
எது உண்மை எது பொய் என்று புரியாத அளவுக்கு குழப்பிவிட்டுவிட்டார்கள்.
இவர்கள் சொல்லும்படி பெண் விவகாரமாகவே இருந்தாலும் அமைச்சர்கள், மாபியாக்கள் என்று அத்தனை பேரையும் கலங்கடித்த ஒரு அதிகாரி இதற்காகவெல்லாம் தற்கொலை செய்து கொள்வாரா என்று சில கன்னட அமைப்புகள் கொடி பிடித்துக் கொண்டிருக்கின்றன. ‘உங்களுக்கும் வேண்டாம் எங்களுக்கு வேண்டாம். சிபிஐ விசாரிக்கட்டும்’ என்று போராட்டக்காரர்கள் சொல்கிறார்கள். ‘முடியவே முடியாது’ என்று சித்தராமையா ஒற்றைக்காலில் நிற்கிறார். மத்தியில் ஆளும் பா.ஜ.கவும் முடிந்தவரையில் நோண்டிப் பார்க்கிறது. நேற்று முதலமைச்சர் கவர்னரைச் சந்தித்து இது பற்றி விவாதித்துள்ளார். மத்திய அரசுதான் கவர்னர் வழியாக அழுத்தத்தை அதிகரிக்கிறது என்று காங்கிரஸ்காரர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். மாநிலத்தில் அரசியல் ரீதியாக மூன்றாவது இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ள குமாரசாமி கெளடாவும் இந்த விவகாரத்தை எடுத்திருக்கிறார். பெங்களூர் நகரில் ஆங்காங்கே ரவியின் பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகா முழுவதுமே இப்படித்தான் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். ‘சிபிஐக்கு மாற்றுங்கள்’ என்று சோனியாவே சித்தராமையாவுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவரது வீடு இருக்கும் பகுதியில் ஒரு கடைக்காரர் சொன்னார். ஆனால் அந்தப் பகுதியாட்களுக்கு முழுமையான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. ஊடகம் மற்றும் வாய்வழிச் செய்திகளைத்தான் அவர்களும் சொல்கிறார்கள். உள்துறையமைச்சர், முதலமைச்சர் என எல்லோரும் அவர்களது வாய்களுக்குள் விழுகிறார்கள்.
சிபிஐ விசாரணைக்கு ஏன் இப்படி பயப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. உள்ளூர் காங்கிரஸ் நபர் ஒருவர் இருக்கிறார். எனக்கு நல்ல பழக்கம். அவரிடம் கேட்டால் மம்தா பானர்ஜி எதற்கு பயப்படுகிறாரோ அதே காரணங்களுக்காகத்தான் சித்தராமையாவும் பயப்படுகிறார் என்கிறார். அது என்ன காரணம் என்று பெரியதாக மண்டை காய வேண்டியதில்லை. பா.ஜ.க இல்லாத மாநில அரசுகள் மிக மோசமாக அரசாங்கத்தை நடத்துகின்றன என்கிற பரப்புரையை மேற்கொள்வதற்கு பா.ஜ.கவுக்கு இதுவொரு வாய்ப்பாகிவிடும் என்கிறார். சிபிஐ இதற்கு பயன்பட்டுவிடும் என்கிறார். அப்படியும் நடக்குமா? நடக்காமல் என்ன? இத்தனை காலமாக பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்?
கூட்டிக் கழித்துப் பார்த்தால் மாபியாக்களின் அழுத்தத்தினால்தான் இறந்தார் என்று தரப்பினர் உறுதியாக நம்புகிறார்கள். மாநில அரசின் பெருந்தலைகள்தான் கொன்றுவிட்டார்கள் என்று இன்னொரு தரப்பினர் நம்புகிறார்கள். தனிப்பட்ட குடும்பக் காரணங்களுக்காத்தான் இறந்தார் என்று இன்னொரு தரப்பினர் சொல்கிறார்கள். இது தற்கொலையே இல்லை என்றும் கொன்று தொங்கவிட்டுவிட்டு ஆளாளுக்கு மடை மாற்றுகிறார்கள் என்று ஒரு கூட்டம் பேசிக் கொண்டிருக்கிறது. ஒரு மரணம். ஓராயிரம் கோணங்கள்.
இதையெல்லாம் விட ஒரு காமெடியும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குஜராத், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அதிகாரிகள் மர்மமான முறையில் இறக்கிறார்கள் ஆனால் அவை பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் என்பதால் வெளியிலேயே வருவதில்லை என்று ஒரு பத்திரிக்கைக்காரர் எழுதியிருந்தார். அப்படியெல்லாம் எதுவும் இல்லை. இந்த விவகாரத்தின் மீது இவ்வளவு வெளிச்சம் விழக் காரணம் ரவியின் கறார்த்தன்மை. அவரது எளிமையும் நேர்மையும் நிறையப் பேர்களின் முதுகை வெளுத்திருக்கிறது. கோலார் மாவட்டத்தின் செய்திகளை கவனித்தால் ஆச்சரியமாக இருக்கிறது. மக்கள் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரவியின் மீது அவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள். இது போன்ற காரணங்களால்தான் இந்த மரணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற செய்தியாக மாறியிருக்கிறது.
ஆனால் ஒன்று- எது உண்மை எது பொய் என்பதெல்லாம் எந்தக் காலத்திலும் வெளிவரப் போவதில்லை. எந்தத் தரப்பினரின் கரங்கள் வலிமையாக இருக்கின்றனவோ அவர்களது தரப்பு வாதங்கள்தான் வலுப்பெறும். மற்ற குரல்கள் முரட்டுத்தனமாக நசுக்கப்படும். அதிகபட்சமாக ஒரு மாதத்தில் மறக்கடிக்கச் செய்துவிடுவார்கள். மரணம் நடந்த வீட்டுக்கு வெகு அருகில் நிற்கிறேன். ஏதாவது சில தகவல்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிருந்தது. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அந்த வீட்டைச் சுற்றியிருப்பவர்கள் கூட ஊடகங்களின் செய்திகளின் அடிப்படையில்தான் பேசுகிறார்கள். ஊடகங்கள்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கின்றன. அதிகாரம் இருப்பவனும் பலம் வாய்ந்தவனும் என்ன தீர்ப்பு எழுத விரும்புகிறானோ அதை ஊடகங்கள் வழிமொழிகின்றன.
மரணம் ஒரு பொருட்டே இல்லை. அதன் வர்ணத்தை மிகச் சுலபமாக இந்தச் சமூகம் மாற்றிவிடுகிறது. ஒரு மாநிலமே கொண்டாடும் அதிகாரியின் மரணத்தையே மின்கம்பத்தில் தொங்கவிட்டு வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சாதாரணன் செத்துப் போனால் என்ன செய்வார்கள்? ஊதித் தள்ளிவிட்டு போய்விடுவார்கள்.