Mar 26, 2015

நட்சத்திரம் எப்படி பிறக்கிறது?

குழந்தைகள் கேட்கும் பெரும்பாலான கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடியாது. சில கேள்விகளுக்கு பதில் தெரியும்தான். ஆனால் குழந்தைகளுக்கு புரியும்படி விளக்க முடியாது. அதுதான் பிரச்சினை. உதாரணமாக தண்ணீர் எப்படி உருவாகிறது என்றால் ஹைட்ரஜனும் ஆக்ஸிஜனும் சேர்ந்து உருவாகிறது என்று சொல்வதுதான் சரியான பதில். ஆனால் அப்படியா சொல்கிறோம்? மழையினால் உருவாகிறது என்று சொல்லிவிடுவோம். எளிமையான பதில் இது. மழை எப்படி பெய்கிறது என்று அடுத்த கேள்வி வந்தால் மேகத்திலிருந்து என்போம். மேகம் எப்படி உருவாகிறது என்றால் கீழேயிருந்து போகும் புகைதான் மேகமாக மாறுகிறது. அவ்வளவுதான். முடித்தாயிற்று.

இப்படி பதில் சொன்னால் கூட போதும். அதுவே பெரிய விஷயம். ஆனால் முக்கால்வாசி நேரங்களில் ‘அப்பா வேலையா இருக்கேன்ல....அப்புறமா சொல்லுறேன்’ என்று சொல்வதுதான் நடக்கிறது. விருப்பட்டு அப்படிச் சொல்லியிருக்க மாட்டோம். ஆனால் முக்கியமான காரியம் என்று நாம் நினைக்கும் ஒரு விஷயத்தைச் செய்து கொண்டிருக்கும் போது நம்மையுமறியாமல் சொல்லிவிடுவோம். முதல் முறை இப்படிச் சொல்லும் போது குழந்தை சிணுங்கும். இரண்டாவது முறை பரிதாபமாகப் பார்க்கும். மூன்றாவது முறை நம்மிடம் கேட்கவே கேட்காது. ‘இந்த அப்பா பதிலே சொல்லமாட்டார்’ என்று நினைத்துக் கொள்ளும். இப்படித்தான் குழந்தைகளின் கேள்விகள் மெதுமெதுவாக மழுங்கடிக்கப்படுகின்றன. 

குழந்தைகளுக்கு fantasy முக்கியம் என்பார்கள். அதுதான் அவர்களின் படைப்பாக்கத் திறனை வளர்க்கும் உந்துசக்தி. அதனால் முடிந்தவரைக்கும் முடிந்துவிடாத பதில்களாகச் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். முடிந்துவிடாத பதில்கள் என்றால் நாம் சொல்லும் பதிலிலிருந்து அவர்கள் இன்னொரு கேள்வியைக் கேட்க வேண்டும். அதற்கேற்ற பதில்களாக இருக்க வேண்டும். அப்படி அவர்கள் கேள்வி கேட்பதை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் உற்சாகப்படுத்த வேண்டும். அது எளிமையான காரியம்தான். குழந்தை கேள்வி எதுவும் கேட்கவில்லையென்றால் நாம் கேட்கத் துவங்கிவிடலாம். எல்லாவற்றையும் குறித்து அடிப்படையான கேள்விகளில் ஆரம்பிக்கலாம். காற்று குறித்து, மழை குறித்து, கல், மண், பூமி, சூரியன் என எல்லாவற்றையும் குறித்தான கேள்விகளை நாம் எழுப்பினால் குழந்தைகளின் மூளை விழித்துக் கொள்ளும். அடுத்த முறை அவர்களே கேட்கத் தொடங்குவார்கள்.  ‘வெளவாலுக்கு கண்ணு இருக்குதா?’ என்று குழந்தை கேட்டால் ‘தெரியலையே’ என்று சொல்வதைவிடவும் தேடிப்பார்ப்பதுதான் சரியான அணுகுமுறை. இப்பொழுதுதான் நம்மிடம் இணையம் இருக்கிறதே! கூகிளிடம் கேட்டால் தெரிந்துவிடப் போகிறது. கூடவே மீயொலி பற்றியும் சொல்லித் தரலாம். இப்படித்தான் குழந்தைகளின் கற்பனை உலகத்தை விரிவாக்க முடியும்.

கதை சொல்லும் போது நாம் வெளவாலாக மாறிவிட வேண்டும் அல்லது வெளவாலை கதையின் ஒரு கதாபாத்திரமாக மாற்றிவிட வேண்டும். பறக்கும் போது சுவரில் மோதாமல் இருக்க மீயொலியை எழுப்பிக் கொண்டே பறக்க வேண்டும். மனிதர்களால் இந்த மீயொலியைக் கேட்க முடியாது. வெளவாலாலும் நாய்களாலும் மட்டுமே கேட்க முடியும். அந்தச் சத்தம் சுவரில் பட்டு திரும்ப வருவதை வைத்து இரவிலும் மோதாமல் வெளவாலால் பறக்க முடிகிறது. இப்படி பறந்து போய் வில்லன் ஒருவனை அடிக்கப் போகிறது வெளவால் படை. அந்த வெளவால் படைக்கு ஒரு தலைவன் இருக்கிறான்...... இப்படிக் கதையை நீட்டிக் கொண்டே போகும் போது குழந்தைகளிடம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அவர்கள் பதில் சொல்லத் தொடங்குவார்கள் அல்லது திரும்பக் கேள்வி கேட்கத் தொடங்குவார்கள். குழந்தைகளின் அறிவு பிடித்துக் கொள்ளும். ஒரு முறை பதிய வைத்துவிட்டால் போதும். பிறகு அவர்கள் வளர்த்தெடுத்துவிடுவார்கள்.

பி.எஸ்.ராமையாவின் கதை ஒன்றிருக்கிறது. நட்சத்திரக் குழந்தைகள் என்று தலைப்பு.

கதைக்குச் செல்வதற்கு முன்பாக ராமையா பற்றி ஒரு முக்கியமான குறிப்பு இருக்கிறது. தமிழில் மணிக்கொடி என்ற இதழ் ஒரு காலத்தில் வந்து கொண்டிருந்தது. தமிழ் இலக்கிய வரலாறைப் படிக்கும் போது மணிக்கொடிகாலம் என்ற குறிப்பு கட்டாயமாக இருக்கும். முப்பதுகளில் வெளியான அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இந்த இதழ் ஒரு சமயத்தில் நின்று போனது. அதை மீண்டும் சிறுகதைக்கான மணிக்கொடியாக சில காலம் நடத்தியவர் பி.எஸ்.ராமையா. அதன் பிறகு அவர் சினிமாவுக்கு சென்றதால் மீண்டும் நின்று போனது.

ராமையா எழுதிய கதைதான் நட்சத்திரக் குழந்தைகள். 1930களில் எழுதப்பட்ட கதை என்பதால் மொழி நடையும் அப்படித்தான் இருக்கிறது. வழுக்கிக் கொண்டு போகிறது என்றெல்லாம் சொல்ல முடியாது. சற்று மெதுவான நடைதான். ஆனால் அந்தக் காலத்தில் வெளியான கதைகளில் முக்கியமான கதை என்று வரிசைப்படுத்துகிறார்கள். எனவே அந்தக் காலக் கதைகளின் மொழியமைவு, உள்ளடக்கம் போன்றவை குறித்தான ஒரு சாம்பிளாக இந்தக் கதையை எடுத்துக் கொள்ளலாம்.

ரோகிணி என்னும் குழந்தை வானில் இருக்கும் நட்சத்திரங்கள் பற்றி அவளது அப்பாவிடம் கேட்கிறாள்.  அவளது அப்பா சோமசுந்தரம் பி.ஏ படித்தவர்தான். அந்தக்கால பி.ஏ. ஆனால் அவராலும் எல்லாச் சமயங்களிலும் பதில் சொல்ல முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் யாராவது உண்மையைச் சொல்லும் போதும் ஒரு நட்சத்திரம் பிறக்கும் என்று அப்பா சொல்கிறார். அவள் அதையே நினைத்துக் கொண்டு இருக்கிறாள். அவர் அலுவலகம் சென்றவுடன் அம்மாவுடன் நட்சத்திரத்தைக் காட்டி விளையாடுகிறாள். ஒவ்வொரு நட்சத்திரம் தெரியத் தொடங்கும் போதும் யாரோ உண்மையைச் சொல்லிவிட்டார்கள் என்று புளகாங்கிதமடைகிறாள். மகளைப் பார்த்து அம்மா உச்சி குளிர்ந்து போகிறாள்.

அப்பா வீடு திரும்பிய பிறகு திடீரென்று குழந்தை அழுகிறாள். அப்பா பதறிப் போய் விசாரிக்கிறார். ஒரு நட்சத்திரம் சரிந்து விழுவதைக் கண்ட ரோகிணி யாரோ பொய் சொல்லிவிட்டார்கள் என்று அழுகிறாள். அது வார்த்தைகளால் வெளிப்படுத்திவிட முடியாத துக்கம் என்றும் இதயத்தால் உணர வேண்டிய துக்கம் என்றும் கதை முடிகிறது.

வெறும் கதையாக வாசித்தால் அப்படியொன்றும் பிரமாதமான கதை என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. ஆனால் அந்தக் குழந்தையின் மனச்சித்திரம், அந்தக் காலத்து அம்மா, அப்பா என்கிற விஷயங்களையெல்லாம் ஒன்று சேர்த்து வாசிக்க வேண்டும். நமக்குத் தெரிந்த குழந்தைகளோடு இணைத்துப் பார்க்க வேண்டும். சிறுகதையின் போக்கு குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்கிற வகையில் இந்தக் கதையை தவிர்க்க முடிவதில்லை. அந்தக் கால மொழி நடை, சித்தரிப்பு, குழந்தையின் அக உலகம் பற்றிய குறிப்புகள் போன்றவற்றால் முக்கியமான கதை என்ற முடிவுக்கு வந்துவிடலாம்.

(அடுத்த பெங்களூரு வாசகர் சந்திப்பில் விவாதிக்கப்படவிருக்கும் இந்தக் கதை ஆன்லைனில் கிடைக்கிறது)