Mar 31, 2015

கை மாற்றியாகிவிட்டதா?

கிட்டத்தட்ட எல்லோருடைய ஞாபகத்திலும் இருக்கக் கூடிய கேரக்டர்தான். ஒவ்வொருவரும் பள்ளிப்பருவத்தில் பார்த்திருப்போம். வாத்தியார் என்ன சொன்னாலும் ‘சரிதான் சார்’ ‘கரெக்ட்தான் சார்’ என்று சொல்வதற்கு ஒரு சுண்டைக்காயன் இருப்பான். வாத்தியாருக்கும் அவனை மிகப் பிடித்திருக்கும். எந்த வேலையாக இருந்தாலும் அவனிடம்தான் கொடுப்பார். ஓடிப் போய் சாக்பீஸ் எடுத்து வருவதிலிருந்து அடுத்தவன் முட்டியை பெயர்த்தெடுக்க நல்ல மூங்கில் குச்சியாக ஒடித்து வருவது வரைக்கும் சலிக்காமல் செய்வான். ஒரு வினாடி கண்களை மூடிக் கொண்டு யோசித்தால் போதும். நமக்கு அவனது முகம் ஞாபகத்துக்கு வந்துவிடும். யோசித்துப் பாருங்கள். ஞாபகம் வந்ததா? எங்களுடனும் ஒரு பையன் இருந்தான். கிருஷ்ணகுமார். 

அவனைப் பற்றிச் சொல்லக் காரணமிருக்கிறது. The Grand Budapest Hotel. கடந்த ஆண்டு வெளிவந்தபடம். நகைச்சுவை படம் என்று சொல்லி அறிமுகப்படுத்தினார்கள். அப்படியென்றால் வெறித்தனமாக சிரிக்க வைத்துவிடுவார்கள் என்று அதற்கான முஸ்தீபுகளோடுதான் பார்க்கத் தொடங்கியிருந்தேன். முஸ்தீபுகள் என்றால் சிரிக்கிற சிரிப்பில் வீட்டில் இருப்பவர்கள் எழுந்து நான்கு அடி கொடுத்துவிடக் கூடாது என்பதான ஏற்பாடுகள். ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லை. மெலிதாக புன்னகை வரவைக்கக் கூடிய காட்சிகள். அமைதியாக பின்னப்பட்ட நகைச்சுவைதான் படம் நெடுகவும்.


ஒரு எழுத்தாளர் கதையைச் சொல்கிறார். அவரது இளம்பருவத்தில் பிரம்மாண்டமான ஹோட்டலில் அதன் முதலாளியைச் சந்திக்கிறார். அந்த முதலாளியின் ப்ளாஷ்பேக்தான் படத்தின் கதை. அவர் அந்த ஹோட்டலில் ஊழியனாகச் சேர்ந்தவர். ஜீரோ என்பதுதான் பெயர். அப்பொழுது அந்த விடுதியின் பொறுப்பாளராக இருந்தவருக்கு வயது முதிர்ந்த பணக்காரப் பெண்கள் சிலரோடு தொடர்பு உண்டு. அப்படியான தொடர்புடைய பெண்ணொருத்தி இறந்துவிடுகிறாள். அவளது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக தனது விடுதியின் ஊழியனான ஜீரோவை அழைத்துக் கொண்டு செல்கிறார் பொறுப்பாளர். ஜீரோதான் தலையாட்டி பொம்மை. விசுவாசமனாவன். அங்கே இறுதிச்சடங்குக்கு முன்பாக அவளது உயில் வாசிக்கப்படுகிறது. மிக பிரசித்தி பெற்ற ஓவியமொன்றை பொறுப்பாளருக்கு எழுதி வைத்திருக்கிறாள். அந்தப் பெண்மணியின் மகன் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறான். வேறு வழியில்லை. பொறுப்பாளரும் ஜீரோவும் அந்தப் படத்தைத் திருடிக் கொண்டு ஓடிவருகிறார்கள். 

ஆனால் இறந்து போனவளின் மகன் லேசுப்பட்டவன் இல்லை. உயில் வாசிக்கும் வக்கீலின் கதையை முடித்துவிடுகிறான். அந்தப் பெண்மணி கூட கொலைதான் செய்யப்பட்டிருக்கிறாள் என்று அந்தப் பழி பொறுப்பாளரின் மீது விழுகிறது. பொறுப்பாளரைக் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்துவிடுகிறார்கள். ஜீரோவுக்கு ஒரு காதலி உண்டு. மிகச் சிறப்பாக கேக் தயாரிப்பவள். அவளது உதவியுடன் கேக்குக்குள் கருவிகள் ஒளித்து சிறைச்சாலைக்குள் அனுப்பப்படுகின்றன. அந்தக் கருவிகளை வைத்துக் கொண்டு பொறுப்பாளரும் அவரோடு சேர்ந்து இன்னமும் சிலரும் சிறைச்சாலையிலிருந்து தப்பிக்கிறார்கள். இந்தச் சமயத்தில் இறந்து போன அந்தப் பெண்மணி இரண்டாவது உயிலை எழுதி வைத்திருப்பதாகவும் அது இவர்கள் திருடிக் கொண்டு வந்த ஓவியத்தின் பின்னால் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. சிறைச்சாலையில் இருந்து தப்பிக்கும் பொறுப்பாளருக்கு ஜீரோ எப்படி உதவுகிறான் அந்த உயிலை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதையெல்லாம் லாஜிக்கைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பார்க்க வேண்டும். 

இரண்டாவது உயிலின் படி அந்தப் பெண்மணிதான் அந்த ஹோட்டலின் உரிமையாளர் என்று தெரிகிறது. அவள் விடுதியை பொறுப்பாளரின் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு பரலோகத்தை அடைந்திருக்கிறாள். அந்தப் பொறுப்பாளர் தனது வாரிசாக ஜீரோவை நியமிக்கிறார். அந்த ஜீரோதான் எழுத்தாளரிடம் தனது ப்ளாஷ்பேக்கைச் சொல்லும் முதலாளி. ஆரம்பித்த இடத்திலேயே முடித்துவிட்டார்.

இப்பொழுது கிருஷ்ணகுமாரின் கதையைச் சொல்லிவிடுகிறேன். கிருஷ்ணகுமாருக்கு கணக்கு வாத்தியார் எதிர்வீடுதான். சுமாராகப் படித்த மற்ற மாணவர்கள் எல்லாம் பொறியியல் என்று ஒரே குட்டையில் விழ இவன் வாத்தியாரைப் பின் தொடர்கிறேன் என்று கல்லூரியில் கணிதப் பிரிவில் சேர்ந்தான். பிறகு முதுகலை கணிதம் என்று இழுத்துக் கொண்டே சென்றவன் முனைவர் பட்டம் வாங்கிவிட்டுத்தான் ஓய்ந்தான்.ஒன்றும் மோசம் போய்விடவில்லை. கணிதப் பேராசிரியர் ஆகிவிட்டான். 

ஜீரோவைப் பார்க்கும் போது கிருஷ்ணகுமார்தான் நினைவுக்கு வந்தான். ஜீரோவின் வெள்ளந்தியான உடல்மொழியும் தனது முதலாளியின் வார்த்தைகளுக்காக அவன் காட்டும் விசுவாசமும் நம்மை கதையோடு ஒன்றச் செய்துவிடுகின்றன. பொறுப்பாளர் தனது இறந்து போன முதிய காதலியைப் பார்க்கச் செல்லும் போது எல்லையில் விசாரணை நடத்துகிறார்கள். அப்பொழுது ஜீரோவுக்கு அடி விழுகிறது. அப்பொழுது பரிதாபமாகத் தெரிகிறான். அதே ஜீரோ பொறுப்பாளருடன் சேர்ந்து ஊர் ஊராக ஓடும் போதும் எதிரிகளுடன் சண்டைப் போடும் போதும் ‘அட நம்ம பையன்’ என்கிற நினைப்பை உருவாக்கிவிடுகிறான். பொறுப்பாளர் ஜீரோவின் காதலியுடன் பேசும் போது ‘அவள் எனது காதலி...வழியாதே’ என்று தடுக்கும் போது சிரிப்பை வரவழைத்துவிடுகிறான். அந்தப் பையனாக நடித்த நடிகரின் பெயர் டோனி ரெவோல்ரி. அடித்து தூள் கிளப்பியிருக்கிறார்.

படத்தில் கிறுக்குத்தனமான தனி காமெடி ட்ராக் எதுவும் இல்லை. ஒரு கொலை, அந்தக் கொலைக்கான சொத்துப் பின்னணி, அதில் சிக்க வைக்கப்படும் விடுதிப் பொறுப்பாளர், சிறைச்சாலை, அதிலிருந்து தப்பித்து ஓடுவது என படம் விறுவிறுப்பாக ஓடுகிறது. சிறைச்சாலையை உடைக்கிறார்கள், துப்பாக்கியில் சுட்டுக் கொள்கிறார்கள், விரல்களைத் துண்டிக்கிறார்கள், கொலை செய்கிறார்கள். ஒரு அதிரடித் திரைப்படத்திற்கான அத்தனை சரக்குகளும் இருக்கின்றன. ஆனால் அதிரடித் திரைப்படம் என்று சொல்லிவிட முடியாது. இவற்றில்தான் நகைச்சுவை. கதாபாத்திரங்கள் நடப்பதிலிருந்து அவர்கள் காட்டும் சேஷ்டைகள் வரை அனைத்திலும் வழக்கமான படங்களிலிருந்து வித்தியாசத்தைக் காட்டுகிறார்கள். அதனால்தான் இதை முக்கியமான படம் என்று என்னிடம் சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. வெறும் கதையை மட்டும் பார்த்தால் ஒரு சுமாரான திரைப்படம் என்று முடிவு செய்து கொள்ளலாம். அப்படித்தான் முடிவு செய்து வைத்திருந்தேன். அவ்வளவுதான் திரைப்படங்கள் குறித்தான அறிவு எனக்கு. ஆனால் வெஸ் ஆண்டர்ஸனின் படங்களை வெறும் கதையோடு மட்டும் பார்க்கக் கூடாது என்றார்கள்.

இது என்ன வம்பாக இருக்கிறது என்று மீண்டும் ஒரு முறை பார்க்கத் துவங்கினேன். மேற்சொன்ன அத்தனை விஷயங்களும் புலப்படத் துவங்கின. ஜீரோவாக நடிக்கும் பொடியனின் முகபாவனையிலிருந்து காட்சிகளில் இடம்பெறும் கவித்துவமான இடங்கள் வரை அனைத்தையும் சேர்த்து கவனித்தால் ஒரு முழுமையான படம் பார்த்த நிறைவினைத் தருகிறது. ஆனால் இரண்டு முறை பார்ப்பதற்கான பொறுமையும் இதிலிருந்து எதைக் கற்றுக் கொள்ளப் போகிறோம் என்கிற மூக்கரிப்பும் அவசியம். 

படம் பார்த்துவிட்டு கிருஷ்ணகுமாரிடம் பேசினேன். இதுநாள் வரையிலும் அவனது குருநாதருக்கு தனிப்பயிற்சியில்தான் கொழுத்த வருமானம். அவருக்கு வயதாகிவிட்டது. இனிமேல் தனிப்பயிற்சி எடுப்பதை நிறுத்திவிடலாம் என்றிருக்கிறாராம். அவர் நிறுத்தியவுடன் தான் தொடரப் போவதாகச் சொன்னான். ‘The Grand Budapest Hotel கைமாறுகிறதா’ என்றேன். அவனுக்கு புரியவில்லை. திரும்பத் திரும்பக் கேட்டான். ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டுத் இணைப்பைத் துண்டித்தேன். பைத்தியகாரன் என்று நினைத்திருப்பான். நினைத்துவிட்டுப் போகட்டும். எல்லா இடங்களிலும் ஜீரோவும் கிருஷ்ணகுமாரும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இல்லையா?