Mar 4, 2015

நாளை முதல் உங்கள் அபிமான...

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பாக ஹங்கேரிய சினிமாக்களைப் பற்றி ஒரு கட்டுரையை புதுஎழுத்து சிற்றிதழில் எழுதியிருந்தேன். வறட்சியான கட்டுரை அது.  ‘இலக்கியவாதி ஆகியே தீர வேண்டும்’ என பாயைப் பிறாண்டியபடி எழுதியதன் விளைவு அது. அதன் பிறகு ப்ரெஞ்ச் நடிகை இஸபெல் ஹூப்பர்ட் பற்றிய கட்டுரை ஒன்று. அது இஸபெல்லுக்கு செய்த மிகப்பெரிய அவமரியாதை என்று வெகு நாட்களுக்குப் பிறகு தோன்றியது.

ஹைதராபாத்தில் இருக்கும் வரை அயல்மொழிப்படங்கள் பார்ப்பதற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. மாதம் பத்துப் படங்கள் லட்சியம் ஐந்து படங்கள் நிச்சயம். அமீர்பேட்டில் இருக்கும் சாரதி ஸ்டுடியோவில் ஒரு குழுவினர் படங்களைத் திரையிடுவார்கள். எஸ்.வி.ராமகிருஷ்ணன் அழைத்துச் செல்வார். அவர் உறுப்பினர். நான் ஓசி டிக்கெட்.

எஸ்.வி.ராமகிருஷ்ணன் தாராபுரத்துக்காரர். சுங்கத்துறையில் முதன்மை ஆணையாளராக இருந்து ஓய்வு பெற்றிருந்தார். வழக்கமாக சனி, ஞாயிறுகள் எனக்கு அவரோடுதான் கழியும். இப்படி படம் பார்க்கும் நாட்களில் வீட்டிலிருந்து கிளம்பும் முன்பாக ஃபோனில் அழைப்பார். அலுவலகத்திலிருந்து நேராகச் சென்று படம் பார்த்துவிடுவேன். ‘ஒரு படத்தை வெறும் சினிமாவாக மட்டும் பார்க்காத...அந்த நாட்டோட வரலாறு, கலாச்சாரம் என எல்லாத்தையும் சேர்த்துப் பாரு’ என்பார். அப்படியெல்லாம் பார்க்கிற வயதும் பக்குவமும் அப்பொழுது இல்லை. அயல்மொழிப் படங்களை வெறும் காமத்தின் கண்ணோடு மட்டுமே பார்க்கப் பழகியிருந்தேன். பெரும்பாலும் முதல் பத்து நிமிடங்களிலேயே ‘ஏதாச்சும்’ இருக்குமா இருக்காதா என்று தெரிந்துவிடும். தேறாது என்று தெரிந்தால் வெளியில் வந்துவிடுவது வாடிக்கையாகியிருந்தது. சாரதி ஸ்டுடியோஸில் பெரும்பாலான நாட்கள் ஏதாவது படப்பிடிப்பு நடக்கும். அதுவும் பாடல்கள். தெலுங்குப்பட பாடல்கள் எப்படியிருக்கும் என்று தெரியுமல்லவா? அப்படியான படப்பிடிப்பை பார்க்க வாய்ப்பு கிடைத்தால் விடுவேனா? கண்களும் மனமும் குளிர்ச்சியாக இருந்த காலகட்டம் அது.

இப்படி ஓடிக் கொண்டிருந்த காலத்தில் City of God என்ற படத்தை பார்க்கும் வரை பெரிய அதிர்ச்சிகள் இல்லை. அந்த தினத்தில் வெளியில் படப்பிடிப்பும் எதுவும் இல்லை. வேறு வழியே இல்லாமல்தான் படம் பார்க்க அமர்ந்திருந்தேன். பிரேசிலின் புறநகரில் நடக்கும் கதை. பெரும்பாலானவர்கள் பார்த்திருக்கு வாய்ப்பிருக்கிறது. பிரசித்தி பெற்ற படம். புதுப்பேட்டை படத்தை அதிலிருந்துதான் உருவினார்கள் என்று சில நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். புதுப்பேட்டையை நான் பார்த்ததில்லை.

தப்பித்து ஓடும் ஒரு கோழியை வெட்டுவதற்காகத் துரத்துவதிலிருந்துதான் படமே ஆரம்பிக்கும். வன்முறையின் பரிமாணங்களை வகைவகையாகக் காட்டியிருப்பார்கள். அந்தப் புறநகரில் தங்கியிருப்பவர்கள் வெளியிடங்களிலிருந்து வந்தவர்கள். முரட்டுத்தனமான அந்தப் பகுதியில் தாதாக்களாக உருவெடுக்கும் குட்டிப்பையன்களைப் பற்றிய கதை அது. போதை மருந்துக் கடத்தல், புகைப்படக்காரனாவதற்கு விரும்பும் குட்டி தாதா ஒருவனின் சகோதரன் என்று கதை நீளும். 

படம் முழுக்கவே வன்முறை, ரத்தம் என்றுதான் ஓடிக் கொண்டிருந்தது. அதுவரையில் இப்படியான படங்களைப் பார்த்த அனுபவம் எதுவும் இல்லாததால் கைகால்கள் நடுங்கத் தொடங்கியிருந்தன. அவ்வளவு பிஞ்சாக இருந்திருக்கிறேன். அந்த வயதுக்கும், மனநிலைக்கும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிய படம் அது. 

வெயிட்டீஸ். இந்தப் படத்தைப் பற்றி இப்பொழுது எதுவும் எழுதப் போவதில்லை. 

அப்பொழுதிருந்து சினிமாவைப் பற்றி எழுத வேண்டியதில்லை என நினைத்துக் கொண்டேன் என்பதைச் சொல்வதற்காகத்தான் இவ்வளவு தூரம் அளந்திருக்கிறேன். மிகச் சிறந்த படங்களைத் தாங்கிக்கொள்ளும் திறன் இல்லை என்பதான நினைப்பு அது. அதே சமயத்தில் சுரேஷ்கண்ணன், கருந்தேள் ராஜேஷ், கே.என்.சிவராமன் உள்ளிட்டவர்கள் அடுத்த தலைமுறை சினிமா எழுத்தாளர்களாக மிக முக்கியமான இடத்தை பிடித்திருந்தார்கள். சினிமாவை அக்குவேறாக்குகிறார்கள் என்று ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதோடு சரி. 

சென்ற ஆண்டில் தம்பிச்சோழன் தனிப்பட்ட காரணங்களுக்காக பெங்களூரில் தங்கியிருந்த போது அவரோடு நிறையப் பேசுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. அப்பொழுது பெரும்பாலும்  சினிமா பற்றித்தான் பேசுவார். வெறும் கலைப்படங்கள் என்றில்லாமல் ஜாலியான வணிகரீதியிலான படங்களைப் பார்க்கச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர்தான் சினிமாவைப் பற்றி எழுதச் சொன்னார். அவர் நாடகக்கலைஞர் மட்டுமில்லை சினிமா பற்றியும், புத்தகங்கள் பற்றியும் விரிவாக பேசக் கூடிய சினிமாக்காரரும் கூட. அவர் சொல்லித்தான் அவள் அப்படித்தான் படத்தைப் பற்றி எழுதினேன். தி இந்துவில் பிரசுரித்தார்கள். கொஞ்சம் நம்பிக்கை முளைத்திருந்தது. ஆசை யாரை விட்டது?.

சமீபத்தில் ஜீவகரிகாலன் கணையாழிக்கு கட்டுரை கேட்டார். அவர்தான் இப்பொழுது கணையாழியின் உதவி ஆசிரியர். ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு. ‘சினிமாக்கட்டுரை தரட்டுமாங்க?’ என்றேன். சற்று தயங்கிவிட்டு ‘சரிங்க’ என்று அரை மனதாகத்தான் சொன்னார். என் பலூனில் காற்று இறங்கியிருந்தது. ஆனால் அப்பொழுதே என்ன ஆனாலும் சினிமா பற்றி எழுத வேண்டும் என முடிவு செய்திருந்தேன்.

தற்பொழுது மற்ற பத்திரிக்கைகளைப் போலவே தினமணியும் தங்களது இணையதளத்தை இன்னமும் மேம்படுத்துவதற்கான சில முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதனடிப்படையில் தினமணி.காம் தளத்தில் சில தொடர்களையும் வெளியிடுகிறார்கள். என்னையும் மதித்துக் கேட்டவுடன் ‘சினிமா பத்தி எழுதறேன்’ என்றேன். சப் எடிட்டர் பார்த்தசாரதிக்கும் சந்தோஷம். ஒரு கட்டுரையை மாதிரிக்காக கேட்டிருந்தார்கள். அனுப்பி வைத்த ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.



இப்பொழுது மட்டும் மிகச் சிறந்த படங்களைத் தாங்கிக் கொள்ளும் திறன் வந்துவிட்டதா என்று கேட்கலாம்தான். எல்லாமே கற்றுக் கொள்வதில்தானே இருக்கிறது? சினிமா பற்றி எழுதிக் கொண்டிருக்கிற ஜாம்பவான்களுக்கு மத்தியில்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. விமர்சனம் என்ற பெயரில் இல்லாமல் ஒரு சினிமாவை எப்படி புரிந்து கொள்கிறேன் என்று ஒரு பார்வையாளனாக எழுதப் போகிறேன். கலைப்படங்கள் என்றில்லாமல் வணிகரீதியிலான முக்கியமான படங்களைப் பற்றியும் எழுத வேண்டும், சினிமாவோடு நில்லாமல் அந்தச் சினிமா சம்பந்தப்பட்ட வேறு சில சமாச்சாரங்களையும் கட்டுரையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் திட்டமிருக்கிறது. இப்போதைக்கு பத்து வாரங்களுக்கு எழுதுவதாக ஐடியா. ஆயிரம் வார்த்தைகள் அதிகபட்சம். எழுதிப் பார்க்கலாம். மனதுக்குப் பிடித்த வகையில் வந்தால் தொடரலாம் இல்லையென்றால் மூட்டைகட்டிவிடலாம் என்றிருக்கிறேன். நாம் என்ன மூட்டை கட்டுவது? அவர்களே கட்டச் சொல்லிவிடுவார்கள். நாளை முதல் கட்டுரை வெளியாகிறது. வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். ஆட்டோவும் நான்கு ஆட்களையும் அனுப்பாமல் மின்னஞ்சலோடு நிறுத்திக் கொள்ள இருக்கன்குடி மாரியம்மன்தான் உங்களுக்கு சாந்தத்தைத் தர வேண்டும். வழக்கம்போலவே உங்களின் ஆதரவோடு...நாளை முதல்...