Mar 18, 2015

கலாப்ரியாவை சந்திக்க விரும்பினால்

கலாப்ரியா தமிழின் முக்கியமான கவிஞர். தான், தன்னுடைய பிரச்சினைகள் என்று தனிமனிதனையே சுற்றிக் கொண்டிருந்த தமிழ் கவிதையை புறவெளிக்குக் கொண்டு வந்த கவிஞர்களில் முதன்மையான கவிஞர் என்று கலாப்ரியாவைக் குறிப்பிடுவார்கள். 

உரைநடையிலும் பட்டையைக் கிளப்புவார் என்பதை அவரது கட்டுரைத் தொகுப்புகளை வாசித்தவர்களுக்குத் தெரியும். மிக முக்கியமான கவிதைகளை எழுதிய கலாப்ரியா தமிழ் கவிதையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமை . அவரை இன்று மாலையில் சந்திக்கவிருக்கிறோம்.

பெங்களூர் கப்பன் பூங்காவுக்கு நான்கரை மணிக்கு வர முடியுமா என்று மகாலிங்கம் கேட்டார். கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்று யார் பெங்களூர் வந்தாலும் அவர்களின் தற்காலிக முகவரி மகாலிங்கம் என்பதாகத்தான் இருக்கும். மிகத் தீவிரமான வாசகர். தொலைத் தொடர்புத்துறையில் உயர்ந்த பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். துளி பந்தா இல்லாத மனிதர். அத்தனை முக்கியமான படைப்பாளிகளுடனும் தொடர்பில் இருக்கிறார்.  ‘வந்துடுறேன் சார்’ என்றேன்.

‘பூங்காவின் நுழைவாயிலில் ஒரு விக்டோரியா சிலை இருக்கிறது. அந்தச் சிலையருகில் சந்திக்கலாம்’ என்றார். விக்டோரியாவின் சிலை குறித்து ஒரு சுவாரஸியமான செய்தி இருக்கிறது இருக்கிறது. எம்.ஜி.சாலையில் இருக்கும் டிரினிட்டி சர்ச் குறித்து கேள்விப்பட்டிருக்கக் கூடும். 1850களில் வெறும் இருபத்தேழாயிரம் ரூபாய்க்கு கட்டப்பட்ட தேவாலயம் அது. அந்தச் சமயத்தில் பெங்களூரில் பணியாற்றிய ஆங்கிலேயே ராணுவவீரர்களும் அதிகாரிகளும் ‘எங்களுக்கு தேவாலயம் வேண்டும்’ என போராடியிருக்கிறார்கள். அவர்களது போராட்டத்தைச் சமாளிக்க முடியாமல் உடனடியாகக் கட்டப்பட்ட பெங்களூரின் இரண்டாவது சர்ச் இது. அப்படியானால் முதல் சர்ச்? அது பற்றி தனிக்கட்டுரையே எழுதலாம்.

வின்ஸ்டன் சர்ச்சில் ஆங்கிலேயே ராணுவத்தில் பணி புரிந்த காலத்தில் பெங்களூரில்தான் பணியில் இருந்திருக்கிறார். அப்பொழுது டிரினிட்டி தேவலாயத்திற்குத்தான் பிரார்த்தனைக்காக வந்து போவாராம். நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ‘அவ்வளவு முக்கியமான விஷயமா?’என்றார். எல்லா விஷயமும் எல்லோருக்கும் முக்கியமானதாக இருப்பதில்லை. அவருக்கு முக்கியமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது எனக்கு முக்கியமான விஷயம். இரண்டாம் உலகப்போரில் சர்ச்சிலின் பங்களிப்பு பற்றி தெரிந்தவர்களுக்கு இது புரியும். அந்த மனிதனின் ஆளுமை உருவாக்கத்தில் இந்தத் தேவாலயத்தின் பங்கு நிச்சயமாக இருந்திருக்கும். அந்த நினைப்போடு தேவாலயத்தில் அமர்ந்த போது உடல் சிலிர்த்தது என்பதுதான் உண்மை.

டிரினிட்டி சர்ச்சின் மீது நின்று பார்த்தால் விக்டோரியாவின் சிலை தெரியுமாம். இது அந்தக் காலத்தில். இப்பொழுது கட்டிடங்களும் மெட்ரோவும் தேவாலயத்தையும் விக்டோரியாவையும் பிரித்துவிட்டன. 

சர்ச்சும் விக்டோரியாவும் இருக்கட்டும். இன்று கலாப்ரியாவை அந்த விக்டோரியா சிலை அருகில் சந்திக்கலாம். 

கலாப்ரியாவின் முக்கியமான கவிதை ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் திரும்பத் திரும்ப சிலாகிக்கப்பட்ட இந்தக் கவிதை உடனடியாக ஞாபகத்திற்கு வருகிறது-

அந்திக் கருக்கலில்
திசை தவறிய
பெண் பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலைமோதிக் கரைகிறது
எனக்கதன் கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்
இருந்தும் எனக்கதன்
பாஷை புரியவில்லை

இந்தக் கவிதையை எழுதியவரோடு சேர்ந்து கப்பன் பூங்காவின் பறவைகளை கவனிக்கலாம். நான்கரை மணிக்கு சந்திக்கலாம் என்று பன்னிரெண்டு மணிக்குச் சொல்வது அவசரகதிதான். ஆனால் எனக்கும் பதினோரு மணிக்குத்தான் தெரியும். 

ஒருவேளை யாரிடமும் சொல்லாமல் போய்விட்டு வந்து ‘கலாப்ரியாவை பார்த்தேன்’ என்று எழுதினால் நான்கு பேராவது தடியெடுத்துக் கொண்டு வருவார்கள்.  ‘ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல’ என்பார்கள். சென்ற முறை பெருமாள் முருகனை பார்த்துவிட்டு வந்த போது அப்படித்தான் கேட்டார்கள். எதற்கு வம்பு? சொல்லியாகிவிட்டது.

பெருமாள் முருகனோடு நாள் முழுவதும் சுற்றிவிட்டு மாலையில் இதே மாதிரிதான் வேறொரு பூங்காவில் சில நண்பர்களோடு சந்தித்தோம். இந்தச் சந்திப்பு நிகழ்ந்து ஒரு வாரம் கூட ஆகியிருக்கவில்லை. மாதொருபாகன் ருத்ரதாண்டவமாடிவிட்டான். 

இன்றைக்கும் அதே பெங்களூர், அதே நண்பர்கள், அதே மாலை நேரம். ஆனால் வேறொரு பூங்கா. கலாப்ரியாவை கருப்பராயன்தான் காப்பாற்ற வேண்டும்.

தொடர்புக்கு: 9663303156