‘எப்படி பையனுக்கான பள்ளியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’என்று ஒருவர் கேட்டிருந்தார். இந்தக் கேள்வியை எங்கள் அப்பாவிடம் யாராவது கேட்டிருப்பார்களா என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் அவர்களும் ஆங்கில வழிப் பள்ளிகளில்தான் முயற்சித்தார்கள். இரண்டாம் வகுப்பு வரைக்கும் ஆங்கில மீடியம்தான். அப்புறம் தமிழ் வழிக் கல்விக்கு மாற்றிவிட்டார்கள். என்ன காரணம் என்று சரியாகத் தெரியவில்லை- ஆனால் முதன்மையான காரணம் எனக்கு ஆங்கில வழிக் கல்வியில் படிப்பு வரவில்லை என்பதாகத்தான் இருக்கும். ஜட்டியோடு மைதானத்தைச் சுற்ற வைக்கும் தண்டனையை எல்லாம் கொடுத்து அந்தப் பள்ளியில் என்னை ஒரு வழியாக்கியிருந்தார்கள். இரண்டாவது பிரச்சினை- அநேகமாக இதுதான் முக்கியமான பிரச்சினையாகக் கூட இருக்கலாம்- ஆரம்பத்தில் அப்பாவுடைய ஒற்றைச் சம்பளம்தான் குடும்பத்துக்கான வருமானம். மின்வாரிய ஊழியர். எங்களுக்கு நினைவு தெரிந்த காலத்தில் கூட சைக்கிளில்தான் அலுவலகம் சென்று வருவார். அப்படியிருந்தாலும் கூட சமாளித்திருப்பார்கள்தான். ஆனால் அப்பாவுக்கான மருத்துவச் செலவு தாறுமாறாக இருந்தது. இந்தச் சூழலில் எங்கள் இரண்டு பேரையும் ஆங்கில வழிப் பள்ளிகளில் தொடரச் செய்திருந்தால் திணறிப் போயிருப்பார்கள். அப்படித்தான் எனக்கான பள்ளி முடிவானது.
இப்பொழுதெல்லாம் பள்ளியைத் தேர்ந்தெடுப்பதில் பெரிய குழப்பம் வந்துவிடுகிறது. ஏகப்பட்ட பள்ளிகள் இருக்கின்றன. படிப்புதான் குழந்தைகளின் ஒரே சொத்து என்று சொல்லிவிடுகிறார்கள். சுமாரான பள்ளிகளில் சேர்த்து அவர்கள் ஒழுங்காகச் சொல்லித் தராமல் விட்டுவிடுவார்களோ என்ற பயம் இயல்பிலேயே பெற்றவர்களுக்கு வந்துவிடுகிறது. அதற்காக அலை மோதுகிறார்கள். பெண் குழந்தைகள் என்றால் இன்னும் ஒரு பிரச்சினை இருக்கிறது. பாதுகாப்பு பற்றிய கேள்வி. எல்லாவற்றையும் திருப்திப்படுத்தும் பள்ளியாக இருக்க வேண்டும். இதையெல்லாவற்றையும்விட மிகப் பெரிய டார்ச்சர் ஒன்றிருக்கிறது. சக பெற்றோர்கள் நம் மீது செலுத்தும் அழுத்தம். தங்கள் குழந்தை ஐ.ஏ.எஸ் எழுதுவதற்கான தகுதி வந்துவிட்டதாக பீற்றுவார்கள். அதற்கு அந்தப் பள்ளிதான் ஒரே காரணம் என்பார்கள். அதைச் சொல்லித் தருகிறார்கள், இதைச் சொல்லித் தருகிறார்கள் என்று அடித்து நொறுக்கி நம்மைத் திணறடித்துவிடுவார்கள்.
இது ஒரு மிகப் பெரிய குழப்பமாகத்தான் இருந்தது. அந்தச் சமயத்தில் ஒரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த நண்பர் ஒரு நிறுவனத்தில் மிகப்பெரிய பதவியில் இருப்பவர். அவருடைய வேலையே எதிராளிகளைச் சமாளிப்பதுதான். unethical attack. தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்தான். பொறியியல் முடித்துவிட்டு அமெரிக்கா சென்றவர் அங்கேயே எம்.பி.ஏ படித்துவிட்டு வேலையில் சேர்ந்துவிட்டார். unethical attack என்பது எதிராளிகளைப் பற்றிய தவறான பிம்பத்தை வெளியுலகத்தில் உருவாக்குவது. இது குறித்து மற்ற விவரங்களைத் தருவதற்கு அவர் தயாராக இல்லை. அதனால் குழந்தைகளின் படிப்பைப் பற்றி பேச ஆரம்பித்திருந்தோம். அவர் சொன்ன விஷயம் ஞாபகத்தில் இருக்கிறது. வெட்டிக் கொண்டு வரச் சொன்னால் வெட்டியதை கட்டி எடுத்துக் கொண்டு வருபவனாக உருவாக்குவதுதான் நல்ல பள்ளி. செம்மாண்டபாளையத்தில் அவருக்கு இதையெல்லாம் யாரும் சொல்லித்தந்திருக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம்.
பெரும்பாலான பள்ளிகளில் வெறும் படிப்பைச் சொல்லித் தந்து ப்ராய்லர் கோழிகளைத்தான் உருவாக்குகிறார்கள். சாலையில் விட்டால் வண்டியில் சிக்கி நசுங்கிவிடும். நகரக் கூடத் தெரியாது. அப்படி இருக்கக் கூடாது. இன்னும் சில பள்ளிகளில் பெற்றவர்களை ஏமாற்றுவதற்காக பியானோ சொல்லித் தருகிறோம், நீச்சல் சொல்லித் தருகிறோம் என்று எதையாவது சொல்லித் தருகிறார்கள்.
குழந்தைகளை ஐஐடியில் படிக்க வைக்க வேண்டும், அமெரிக்கா அனுப்ப வேண்டும் என்பதெல்லாம் சரிதான். ஆனால் அது மட்டும்தானா வாழ்க்கை? எதிர்பாராத பிரச்சினைகளால்தான் இந்த உலகம் நிரம்பியிருக்கிறது. எந்த இடத்திலிருந்து எதிரி உருவாகிறான் என்பதே தெரிவதில்லை. இந்த உலகின் இருண்ட பக்கங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதையெல்லாம் சமாளிக்கும் திறன் இருக்க வேண்டும். கார்போரேட் உலகில் எதிரிகளைச் சமாளிப்பதுதான் பெரிய விவகாரம் என்று நினைக்கிறோம். உண்மையில் ஆட்டோக்காரனுடன் சண்டை போடுவதுதான் சிக்கல் மிகுந்த காரியம். அத்தனை பேரின் முன்னாலும் ங்கோத்தா என்று ஒற்றை வார்த்தையில் நம்மை காலி செய்துவிடுவார்கள். மீறிப் பேசினால் ஒற்றைக் குத்துவிட்டு நம்மை நிலைகுலையச் செய்துவிடுவார்கள். எகனாமிக்ஸ் இருக்கட்டும்- மார்கெட்டில் பேரம் பேசுவது நம் தலைமுறையில் எத்தனை பேருக்குச் சாத்தியம்? சாலையில் இறங்குவதுதான் வாழ்க்கை. சாலையை எதிர்கொள்வதில்தான் தனிமனிதனின் திறன் இருக்கிறது.
ஒவ்வொரு வீடும் தனித்தனி ஆமைகளாக மாறிக் கொண்டிருக்கிறது. துளி சத்தம் வந்தாலும் கூட விளக்கை அணைத்து கதவை அடைப்பதுதான் நமக்குத் தெரிந்த மிகப்பெரிய புத்திசாலித்தனம். நம் படிப்பும் வாழ்க்கை முறையும் கோழைகளைத்தான் உருவாக்கிக் கொண்டுடிருக்கின்றன. ‘நான் நல்லாத்தானே இருக்கேன்...கார், வீடு, வேலை, கிரெடிட் கார்ட்...எவனுக்கோ பிரச்சினை வந்தா எனக்கென்ன?...என் பையனும் என்னை மாதிரியே இருந்தா போதும்’ என்கிற மனநிலை இருக்கிறதல்லவா? இதைவிடப் பெரிய துரோகத்தை நம் குழந்தைகளுக்கு நாம் செய்துவிட முடியாது. நமது சூழல் ஓரளவுக்கு அமைதியாக இருப்பதனால் நம்மால் காலத்தை ஓட்ட முடிகிறது. இப்பொழுது ஏதேனும் பிரச்சினை உருவானால் தெரிந்துவிடும்- இந்தத் தலைமுறை எப்படியெல்லாம் நாறிப் போகும் என்று. இன்னும் நாற்பதாண்டுகளுக்குப் பிறகும் இந்த அமைதியான சூழல் நிலவினால் குழந்தைகள் நம்மைப் போலவே இருந்துவிட்டுப் போகலாம்தான். ஆனால் யாருக்குத் தெரியும்?
இண்டர்நேஷனல் பள்ளிகளிலும் வெளியுலகம் தெரியாத கான்வெண்ட்களிலும் படித்து கம்யூட்டரும், மல்ட்டிப்ளக்ஸ் பொழுதுபோக்குகளுமாக வாழ்க்கையை சொகுசாக்கித் தருவது பெரிய காரியமில்லை. ஓரளவுக்கு பணம் கையிலிருந்தால் சாத்தியப்படுத்திவிடலாம். காலையில் வீட்டை விட்டுக் கிளம்பினால் மாலையில் வீட்டுக்குள் நுழைவதுதான் அவர்களுக்குத் தெரியும். மற்றபடி இந்த உலகின் வண்ணங்கள், பரிமாணங்கள் என எதுவுமே தெரியாத வாழ்க்கையாகப் போய்விடும். இந்த உலகம் கலவையானது. அத்தனையும் கலந்து கிடைக்கும் இங்கு ஏதாவது ஒரு மட்டத்தில் இருந்து மட்டும்தான் வாழ்க்கையைப் பார்ப்பேன் என்று யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. ஆனால் அது எந்தவிதத்திலும் பாதுகாப்பானது இல்லை.
‘அய்யோ எம்பொண்ணை பஸ்ஸிலேயே அனுப்பினதில்லை’ என்று ஒருவர் சொன்னார். சிரிப்பு வந்துவிட்டது. பேருந்தில் எவனோ இடிக்கிறான் என்பதற்காக பேருந்தையே தவிர்த்துவிட்டால் அந்தப் பெண் பாதுகாப்பாக இருக்கிறாள் என்று அர்த்தமா? உலகின் ஒவ்வொரு திசையிலிருந்தும் கருநாக்குகள் நீண்டுகொண்டேயிருக்கின்றன. திரும்பிய பக்கமெல்லாம் கொழுத்த சதை தேடும் விரல்களாகத்தான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் எப்படி சமாளிப்பாள்? ஃபேஸ்புக்கிலும் சாட்டிங்கிலும் நீளும் குரூரமான கரங்களை அந்தப் பெண்ணால் சமாளித்துவிட முடியுமா?
வாழ்க்கையை அது நகரும் போக்கில் விட்டுவிட வேண்டும். குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தரவேண்டியது எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து எப்படித் தப்பி ஓடுவது என்றில்லை- எப்படி எதிர்த்து நின்று அடிப்பது என்றுதான். எதிராளிகளை எதிர்கொள்வது கூட ஒரு கலைதான். ஏதாவது பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் போது போகிற போக்கில் அடிக்கிறேன் என்று ‘இந்த பொம்பளைங்களே அப்படித்தான்’ என்றால் அவ்வளவுதான். உரித்து தொங்கவிட்டுவிடுவார்கள். அதையே ‘எனக்குத் தெரிந்த பெண்களில் பலரும் இப்படித்தான்’ என்று சொன்னால் தப்பித்துவிடலாம். ஒருவனோடு சண்டைப் போடும் போது அவனது அடையாளத்தை எந்தவிதத்திலும் தொட்டுவிடக் கூடாது. இவன் அந்தக் கட்சிக்காரன், இந்தச் சாதிக்காரன் என்கிற அடையாளங்களைத் தொட்டுவிட்டால் நம் கதை கந்தலாகிவிடும். அந்தக் கட்சிக்காரனும் இந்த சாதிக்காரனும் வந்து நம்மை மொத்திவிட்டுப் போவார்கள். எதிரியை முதலில் தனியனாக்க வேண்டும். அவனது தவறுகளை ஒவ்வொன்றாக அடுக்க வேண்டும். அவனது பிம்பம் நாறிக் கொண்டிருக்கும். அவனது வலு குறையும். சுற்றிலும் இருப்பவர்கள் அவன் செய்தது தவறுதான் என்று நினைக்கத் துவங்கும் போது நம் கால்கள் இரண்டையும் நிலத்தில் அழுந்தப் பதித்து மொத்த வலுவையும் நம் கைகளில் இறக்கி ஓங்கி அறைந்துவிட வேண்டும். சுருண்டு விழுவான். அதன் பிறகு அவன் என்னவோ கத்திக் கொண்டு போகட்டும். அதைக் கண்டு கொள்ளாமல் நம் வேலையைப் பார்த்தபடி நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.
ஒன்பதாம் வகுப்பில் தமிழாசிரியர் வைத்தியநாதன் இதைச் சொல்லித் தந்தார். எதற்காகச் சொன்னார் என்று இப்பொழுது ஞாபகமில்லை. ஆனால் அப்படியே மனதுக்குள் பதிந்து கிடக்கிறது. இப்படி பதிகிற விஷயங்கள்தான் எதிர்காலத்தில் நாம் எடுக்கும் முடிவுகளில் மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கின்றன. ஆங்கில வழிப் பள்ளிகளில் இதையெல்லாம் பேசுவார்களா என்று யோசிக்கக் கூட முடிவதில்லை. தனிம அட்டவணையைக் காட்டிலும் குழந்தைகளுக்கு இத்தகைய பாடங்கள் அவசியம். இயற்பியல் தேவைதான் ஆனால் வாழ்வியல் பாடங்கள் அதைவிடத் தேவையானவை.
பள்ளிகளைப் பொறுத்த வரைக்கும் குழந்தைகளின் முதல் பத்து வயது வரைக்கும் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை என நினைப்பேன். சாதாரண பள்ளிகளில் படித்தால் போதும். எந்நேரமும் புத்தகங்களால் நிரம்பிய பாடத் திட்டங்கள் அவசியமில்லை. எப்பொழுது அறிவியலும் கணக்குமாக நினைக்கும் மனதினை உருவாக்க வேண்டியதில்லை. அடிப்படையைச் சொல்லித்தருகிறார்களா என்று கவனித்துக் கொண்டிருந்தால் போதும். எல்லோருடனும் சகஜமாகப் பழகும் மனநிலையை குழந்தைக்கு உருவாக்கும் சூழல் இருக்க வேண்டும். மிகப்பெரிய பள்ளிகளில் படிக்க வைக்கும் போது நம்மைவிட உயர்ந்த குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள்தான் படிப்பார்கள். நம்மைவிட உயர்ந்தவர்களுடன் பழகுவதைவிட நம்மைவிட ஒரு படி கீழாக இருப்பவர்களுடன் பழகுவதுதான் இளம் பருவத்தில் அவசியமானது. அதுதான் வாழ்வியல் நுட்பங்களைக் கற்றுத்தரும்.
வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் பள்ளி, அதிகம் கட்டணம் வசூலிக்காத பள்ளி, குழந்தைகள் மீது அக்கறை செலுத்தும் பள்ளி என்கிற மூன்று விஷயங்கள் முக்கியமானவை. அதன் பிறகு குழந்தையின் பத்து வயது வரைக்கும் குழந்தைகளின் அடிப்படையான அறிவை நாம் கவனித்து வந்தாலே போதுமானது. சரியாக இருக்கிறபட்சத்தில் விட்டுவிடலாம். இல்லையென்றால் அதன் பிறகு பள்ளியை மாற்றிக் கொள்ளலாம். ‘இதெல்லாம் வேலைக்கு ஆகாது...ஸ்கூல் முக்கியம்’ என்று யாராவது சொல்லக் கூடும். பார்வைகள் வேறுபடலாம்தான். ஆனால் குழந்தைகளை வார்த்தெடுக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். உலகம் மிகப் பெரியது. மிகக் குரூரமானது. மிக ஆபத்தானது. அதே சமயம் கலைடாஸ்கோப்பைவிடவும் கவர்ச்சிகரமானது. அதனை லாவகமாக அவர்களால் சமாளித்துவிட முடியும் என்றால் அது போதும். அம்பானிகளும், ரத்தன் டாட்டாக்களும் வேண்டுமானால் இந்தப் பலகோடி ரூபாய்ச் சொத்துக்களை தனது குழந்தைகள் எப்படி கையாள்வார்கள் என்று கவலைப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் அப்படியொன்றும் கவலைப் படத் தேவையில்லை. வாழ்க்கையைக் கற்றுத் தரலாம். வெற்றியடைவதைக் குழந்தைகள் பார்த்துக் கொள்வார்கள்.