Mar 7, 2015

வரவு செலவுக் கணக்கு

அறக்கட்டளையின் முந்தைய வரவு செலவுக் கணக்குக்குப் பிறகான விவரம் இது. 

பிப்ரவரி மாதம் தொடங்கியதிலிருந்து ஒரு லட்சத்து பதினோராயிரம் ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

வரிசை எண் 123: ஊட்டியைச் சேர்ந்த தினேஷின் அறுவை சிகிச்சைக்கு வழங்கப்பட்ட ரூபாய் ஐம்பதாயிரம்.

வரிசை எண் 124: நல்லகவுண்டம்பாளையம் பள்ளியில் இரும்பு நாற்காலிகள் வாங்குவதற்காக வழங்கப்பட்ட ரூபாய் இருபத்தைந்தாயிரம்.

வரிசை எண் 127: நலங்கிள்ளியின் இருதய அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட ரூபாய் இருபத்தைந்தாயிரம்.

வரிசை எண் 130: சக்கர நாற்காலி வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட ரூபாய் பதினாறாயிரம்.

இன்று சிவஜோதி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் அவரது குடும்பத்தைச் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிவிடுகிறேன். 

அறக்கட்டளை தொடங்கப்பட்ட நவம்பர் 2014 தொடங்கி இன்று வரை நன்கொடையாளர்களிடமிருந்து வந்த தொகை- எட்டு லட்சத்து முப்பத்தெட்டாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தெட்டு ரூபாய் (ரூ. 8,38,938.00). 

இன்று சிவஜோதிக்கு வழங்கப்படும் தொகையையும் சேர்த்து நான்கு லட்சத்து எண்பத்து மூன்றாயிரத்து நூற்று நாற்பத்தொன்பது ரூபாய் (ரூ. 4,83,149.00) வழங்கப்பட்டிருக்கிறது. 

இன்னமும் வங்கியில் மூன்று லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்து எழுநூற்று முப்பத்து மூன்று ரூபாய் இருக்கிறது. (ரூ.3,55,733.70). இவை தவிர ரூ.5000 மற்றும் ரூ.1000க்கான காசோலைகள் இரண்டு வந்திருக்கின்றன. நேரமின்மையால் இன்னமும் வங்கியில் கொடுத்து தொகையாக மாற்றிக் கொள்ளவில்லை.

இதுவரையில் எந்தத் தொய்வுமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பயனாளிகளில் சரியான ஆட்களைக் கண்டுபிடிப்பதில் இருக்கும் சிரமங்கள் மற்றும் தாமதங்களைத்தான் இதுவரையிலும் அறக்கட்டளை நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய சவாலாகக் கருதுகிறேன். கணக்கு வழக்குகளை பரமாரிப்பது என்பதெல்லாம் பெரிய வேலை இல்லை. கடவுச் சொல்லை மறக்காமல் இருந்தால் போதும். நேரடியாகச் சென்று பயனாளிகளிடம் தொகையைக் கொடுப்பதிலும் சிரமம் இல்லை. அதை கடமையாகத்தான் கருதுகிறேன். 

நிறையப் பேர்கள் யாராவது ஒரு பயனாளி குறித்து மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். தொலைபேசியில் பேசுகிறார்கள். விவரங்களை வாங்கிக் கொண்டு பயனாளிகள் குறித்து தீவிரமாக விசாரிக்கத் தொடங்கிய பிறகு பேசியவர்களிடமிருந்து எந்தத் தகவலும் வராது. இந்த விசாரணைகளுக்காக நானும் நேரத்தைச் செலவழித்து யாராவது உள்ளூர் நண்பரையும் நேரம் செலவழிக்கச் செய்த பிறகு அந்த உழைப்புக்கு எந்தப் பலனும் இருக்காது. அதுதான் பெரிய காரியமாகத் தெரிகிறது. குறையாகச் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒருவரை பரிந்துரைக்கும் போது பணம் கொடுக்கும் வரையிலும் தொடர்ந்து தொடர்பில் இருந்தால் கொஞ்சம் பளு குறையும். 

மற்றபடி, நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செய்து கொண்டிருப்பதான திருப்தியிருக்கிறது. இவ்வளவு பேர்களின் நம்பிக்கையைச் சம்பாதித்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. யாருக்காவது உதவி செய்யப் போவதாக எழுதினால் குறைந்தபட்சம் இருபத்தைந்தாயிரம் ரூபாயாவது வங்கிக் கணக்குக்கு வந்துவிடுகிறது. இப்படியான சேகரத்தின் வழியாகவே இதெல்லாம் சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது. இன்னமும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. நிறையப் பேர்களின் ஆசிர்வாதமும் வாழ்த்துக்களும் இருக்கின்றன. இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமேயில்லை.

அறக்கட்டையின் விவரங்கள் இந்த இணைப்பில் இருக்கிறது.