Mar 15, 2015

இயன்றதைச் செய்தல்

மார்ச் மாதம் தொடங்கி இந்த பதினைந்து நாட்களில் மட்டும் ஒன்றேகால் லட்சம் ரூபாய் அறக்கட்டளைக்கு வந்திருக்கிறது. ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்த மருதுவிலிருந்து இருநூறு ரூபாய் வரை கொடுத்த ஸ்ரீனிவாசன் வரை வெவ்வேறு தொகைகள்.

சிலர் மாதம் ஒரு சிறு தொகையை அனுப்பி வைக்கிறார்கள். சிலர் பிறந்தநாள், திருமண நாள் என்கிற காரணங்களுக்காக நன்கொடை தருகிறார்கள். அதனால் தொடர்ந்து பணம் வந்து கொண்டேதான் இருக்கிறது. இதுவரையிலும் கூட சற்று தயக்கமாகத்தான் இருந்தது. இதையெல்லாம் செய்யும் போது சிக்கல் எதுவும் வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது என்கிற தயக்கம் அது. இந்த ஐந்து மாத அனுபவங்கள் நம்பிக்கையூட்டக் கூடியதாக இருக்கின்றன. 

இதுவரை ஒன்பதேகால் லட்ச ரூபாய் வரைக்கும் கொடுத்திருக்கிறார்கள். ஐந்து லட்சம் ரூபாய் வரைக்கும் அறக்கட்டளை வழியாக உதவிகள் செய்யப்பட்டிருக்கின்றன. நிறுவன பலமோ அல்லது அனுபவமோ இல்லாத நிலையில் இது பெரிய தொகைதான். 

அறக்கட்டளை சார்ந்த செயல்பாடுகள் குறித்து மற்றவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது. ‘எப்படி நம்புறாங்க’ என்று யாராவது கேட்டால் சத்தியமாக என்னிடம் பதில் இல்லை. ‘இந்தக் காலத்தில் அடுத்தவர்களிடமிருந்து ஐந்நூறு ரூபாய் வாங்க முடியாது’ என்று நான் பேசியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் பொய். நம்பித் தருகிறார்கள். வெளிப்படையாக இருந்தால் மட்டும் நம்பிவிடுவார்கள் என்று அர்த்தமில்லை. அதையும் தாண்டி என்னவோ ஒரு நம்பிக்கை. உண்மையில் அது என்ன காரணம் என்று தெரியவில்லை. அப்படி காரணம் தெரியாமல் இருப்பது ஒரு வகையில் பயமூட்டக் கூடியதுதான்.  பெரிய கண்ணாடி பாத்திரத்தை உள்ளங்கையில் ஏந்தி நடப்பது போல அது- துளி ஏமாந்தாலும் சிதறிப் போய்விடும். இதை தன்னடக்கத்திற்காகச் சொல்லவில்லை- உணர்ந்துதான் சொல்கிறேன்.

என்ன காரணமாகவோ இருந்துவிட்டு போகட்டும். இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

இது ஓர் இயக்கம். குட்டி இயக்கம். எவ்வளவு பேரின் பங்களிப்பு என்று யோசித்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. உதவி பெறுபவர்களுக்கு மட்டுமில்லை- நன்கொடை தருபவர்களும் ஆன்மத் திருப்தி அடைவதாகச் சொல்லும் போது சந்தோஷமாக இருக்கிறது. விடுதி எதுவும் நடத்துவதில்லை, பள்ளிக்கூடம் நடத்துவதில்லை, மருத்துவமனைகள் எதுவும் இல்லை. இப்படி அமைப்பு எதுவுமில்லாமல் உதிரியாகச் செய்யும் காரியங்கள் இவை. 

அப்படியிருந்தும் நன்கொடை தருபவர்களுக்கு எது ஆன்மத் திருப்தியைக் கொடுக்கிறது?

சாலையில் யாரோ ஒருவருக்கு பத்து ரூபாயைக் கையில் கொடுத்துவிட்டு வருவதைவிட அவரை அழைத்து ஒரு வேளை சாப்பாடு வாங்கித் தரும் போது இந்தத் திருப்தியை உணர முடியும். அதை பொறுப்பாகச் செய்கிறோம் அல்லவா? அந்த பொறுப்புணர்வுடனான உதவிதான் நமக்கு எனர்ஜியைத் தருகிறது. அதே போன்ற செயல்பாடுதான் இதுவும். மிகுந்த பொறுப்புணர்வுடன் செய்ய வேண்டியிருக்கிறது. பணம் தருபவர்களும் அந்தப் பொறுப்பை உணர்கிறார்கள். அந்தப் பொறுப்புணர்வும், சரியான நபர்களுக்குத்தான் இந்தத் தொகை போய்ச் சேர்கிறது என்பதான நம்பிக்கையும் அதுதான் இந்தச் செயல்பாட்டை வெற்றிகரமானதாக மாற்றியிருக்கிறது. 

இப்படியே போய்க் கொண்டிருக்கட்டும். அகலக் கால் வைக்க வேண்டியதில்லை. ‘அந்த என்.ஜி.ஓவுடன் சேர்ந்து செயலாற்றுங்கள்; இவர்களுடன் கை கோர்த்துக் கொள்ளுங்கள்’ என்றெல்லாம் சில அறிவுரைகள் வந்தன. அப்படி எந்த ஆர்வமும் இல்லை. நம்மால் முடிந்த அளவுக்கு செயல்படுவோம் என்கிற மனநிலைதான் இருக்கிறது. அடுத்தவர்களுடன் சேர்ந்து செயல்படும் போதும் நம்மை ஒரு அமைப்பாக (organization) மாற்றிக் கொள்ளும் போது நமது சுதந்திரங்கள் கத்தரிக்கப்படும். அது தேவையில்லாத சங்கடங்களை உருவாக்கக் கூடும். இப்படியே உதிரியாக இருந்துவிடுவது எவ்வளவோ உசிதம். முடிந்த அளவு செய்து கொண்டிருக்கலாம். 

இதுவரை செய்த அனைத்து உதவிகளுக்குமான ஆவணங்களை அடுக்கித் தயாராக வைத்திருக்கிறேன். அறக்கட்டளையின் PAN card பிரதியுடன் உள்ளிட்ட ஆவணங்களையும் நாளை பட்டயக்கணக்கருக்கு அனுப்பிவிடுவதாக உத்தேசம். அவர் தாக்கல் செய்த பிறகு அதன் விவரங்களைத் தெரியப்படுத்துகிறேன். 

இப்பொழுது வங்கிக் கணக்கில் நான்கு லட்சத்து முப்பத்து மூன்றாயிரம் ரூபாய் இருக்கிறது. கடந்த வாரத்தில் உதவி கோரி எந்த வேண்டுகோளும் வரவில்லை. இந்த ஐந்து மாதங்களில் இதுவொரு ஆச்சரியமான வாரம். ஆனால் அப்படியிருக்கக் கூடாது. இது சம்பந்தமாக ஏதேனும் ஒரு வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருக்க வேண்டும். யாராவது தகுதியானவர்களுக்கு உதவி தேவைப்படுமாயின் தெரியப்படுத்துங்கள்.

உறுதுணையாக இருக்கும் அத்தனை பேருக்கும் இதயப்பூர்வமான நன்றி.