Mar 20, 2015

ஐம்பது பள்ளிகள்

தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் ஐம்பது பள்ளிகளின் பட்டியல் ஒன்று தேவைப்படுகிறது. தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் பட்டியல். பட்டியலை இறுதி செய்தவுடன் அந்தப் பள்ளிகளுக்கு இரண்டு சஞ்சிகைகளின் ஆண்டுச் சந்தாவைக் கட்டிவிடலாம். ஒன்று சின்னநதி. இன்னொன்று மின்மினி. இரண்டுமே தற்பொழுது தமிழில் வெளியாகிக் கொண்டிருக்கும் சிறார்களுக்கான முக்கியமான சஞ்சிகைகள். சின்னநதியின் ஆண்டுச்சந்தா நூற்றைம்பது ரூபாய். மின்மினியின் ஆண்டுச்சந்தா இருநூறு ரூபாய். ஆக ஒரு பள்ளிக்கு முந்நூற்றைம்பது ரூபாய். ஐம்பது பள்ளிகள் என்றால் பதினேழாயிரம் ரூபாய் ஆகும்.

பள்ளிகளின் முகவரிகளின் பட்டியலைத் தயார் செய்துவிட்டு பணத்துக்கான காசோலைகளை இரண்டு சஞ்சிகைகளுக்கும் தனித்தனியாக அனுப்பி வைத்துவிடலாம். அவர்கள் ஒரு வருடத்திற்கு இதழைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு அனுப்புவார்கள். இந்தப் பள்ளிகளுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு அவர்களது கருத்துக்களைத் தெரிந்து கொள்ளும் திட்டமிருக்கிறது. 

சஞ்சிகைகளை ஐம்பது பள்ளிகளுமே சரியாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பத் தேவையில்லை. ஆனால் குறைந்தபட்சம் நாற்பது பள்ளிகளாவது பயன்படுத்திக் கொள்ளக் கூடும். வகுப்பாசிரியர்கள் கதைகளைப் படித்துக் காட்டலாம். சஞ்சிகைகளில் இருக்கும் ஓவியங்களை வரையச் சொல்லலாம். பொது அறிவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் சஞ்சிகைகள்தான் இவை. சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் பள்ளிகளுக்கு தொடர்ந்து வேறுவிதமான உதவிகளைச் செய்வதற்கும் திட்டமிருக்கிறது.

குழந்தைகளிடம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குவதற்கும் பாடம் தாண்டிய பிற அறிவைப் பெற்றுக் கொள்வதற்கும் இத்தகைய செயல்பாடுகள் மிக அவசியமானதாக இருக்கும். அதற்கான சிறு துரும்பைக் கிள்ளிப்போடும் வேலைதான் இது.

இப்பொழுது ஐம்பது பள்ளிகளின் பட்டியலைத் தயாரிப்பதற்கு உங்களின் உதவி தேவைப்படுகிறது. 

எந்த மாவட்டமாக இருந்தாலும் சரி. கிராமப்புறப் பள்ளிகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஆனால் நகர்ப்புறப் பள்ளிகளை முற்றாகத் தவிர்க்கிறோம் என்று அர்த்தமில்லை. அதே போல அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு(Aided schools) முன்னுரிமை கொடுக்கலாம். இந்தப் பள்ளிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து ஆசிரியர்களுக்கான சம்பளம் மட்டும்தான் கிடைக்கிறது. வேறு நிதி வருவாய் ஏதும் இருப்பதில்லை. உயர்நிலைப்பள்ளி அல்லது மேல்நிலைப்பள்ளிகளாக இருந்தால் சமாளித்துவிடுகிறார்கள். தொடக்கப்பள்ளிகளும் நடுநிலைப்பள்ளிகளும் திணறுகிறார்கள். அதனால்தான் உதவி பெறும் பள்ளிகளுக்கு முன்னுரிமை. ஆனால் உதவி பெறும் பள்ளிகளாகக் கட்டாயம் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. 

நல்ல தலைமையாசிரியர் இருக்கும் பள்ளியாக இருப்பின் அரசுப் பள்ளிகளுக்கும் சந்தா கட்டிவிடலாம். சென்ற முறை புத்தகங்கள் வழங்கிய ஒரு அரசுப் பள்ளியில் தலைமையாசிரியர் மாறிவிட்டார். அதோடு சரி. இப்பொழுது சில புத்தகங்களைக் காணவில்லை. அதுதான் பிரச்சினை. பொறுப்பில்லாத தலைமையாசிரியர் இருக்கும் பள்ளிக்கு எவ்வளவுதான் செய்தாலும் விழலுக்கு இறைத்த நீர்தான். அதனால்தான் அரசுப்பள்ளியாக இருப்பின் சிறப்பான தலைமையாசிரியர் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஊக்கத்துடன் செயல்படும் தலைமையாசிரியர்களாக இருப்பின் அவர் ஆசிரியர்களை அறிவுறுத்துவார். நம்முடனும் உற்சாகத்துடன் தொடர்பில் இருப்பார். இது போன்ற காரியங்கள் பள்ளிக்கு பயனளிப்பவை என்று நம்புவார். அப்படியானவர்களுடன் சேர்ந்து செயலாற்ற முடியும். வேறு சில தலைமையாசிரியர்களுடனான கசப்பான அனுபவமும் இருக்கிறது. உள்ளே நுழைவதற்கு முன்பாகவே ‘எங்களுக்கு அதெல்லாம் தெரியும்...பார்த்துக்கிறோம் விடுங்கள்’ என்று பேச்சைத் துண்டிப்பார்கள். அவர்களிடம் நம்மால் எதுவும் செய்ய முடியாது. எனவே பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கும் போதே கவனமாக இருந்து கொள்ளலாம்.

சென்ற வருடம் நிசப்தம் அறக்கட்டளை வழியாக ஏழு பள்ளிகளில் நூலகம் அமைத்துக் கொடுத்தோம். இந்த வருடம் இதுவரையிலும் இரண்டு பள்ளிகளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். அடுத்த இரண்டு பள்ளிகளுக்குக் கொடுப்பதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதன் நீட்சியாகத்தான் இந்தப் பட்டியல் தயாரிப்பும், சந்தாவும். இந்த ஐம்பது பள்ளிகள் என்பது அடுத்த பெரிய அடியை வைப்பதற்கான baby step. இது உங்களின் உதவியோடுதான் சாத்தியம். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் பரவலாக பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மிகப் பெரிய வேலைதான். ஆனால் மிக எளிதாக செய்துவிட முடியும்.

எங்கள் ஊர் பள்ளி, நான் படித்த பள்ளி என்ற அளவுகோல்களை நகர்த்தி வைத்துவிடலாம். ‘இப்பொழுது’ சரியாக இயங்கிக் கொண்டிருக்கும் பள்ளியா என்பதை மட்டும் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். அப்படியான பள்ளிகளின் விவரங்களை அனுப்பி வையுங்கள். தலைமையாசிரியரின் தொடர்பு எண், முகவரி என்பவை அவசியம். பள்ளிகளின் எண்ணிக்கை பற்றிய கவலையில்லை. ஒரேயொரு பள்ளியைப் பற்றித் தெரிந்தாலும் கூட அனுப்பி வைக்கலாம். இன்னும் பத்து நாட்களில் பட்டியல் தயாரிக்கும் பணியை முடித்துவிட்டு அடுத்த காரியத்தை ஆரம்பிக்கலாம்.

vaamanikandan@gmail.com